02.03.2025
இலங்கை கடற்படையினருக்கு எதிரான
தமிழ்நாடு மீனவர்கள் போராட்டம் வெல்லட்டும்!
ஒன்றிய அரசுக்கு எதிரான நம்முடைய போராட்டங்களை
கோரிக்கையை வலுப்படுத்துவோம்!
பத்திரிகை செய்தி
இலங்கை கடற்படையினரின் அத்துமீறலை தடுக்கக் கோரியும், இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்களை விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசை வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் குடும்பத்துடன் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இப்போராட்டங்களை மக்கள் அதிகாரம் ஆதரிப்பதுடன் உடனடியாக ஒன்றிய அரசு இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.
மீன்பிடிக்கச் செல்லும் தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்து அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து நாட்டுடமையாக்கியும் வருகிறது.
சென்ற வாரத்தில் மட்டுமே 42 மீனவர்களையும், அவர்களுக்கு சொந்தமான 8 படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். யார் ஆட்சிக்கு வந்தாலும் நிற்காத தொடர்கதையாக இந்த சோக நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
உலகில் எந்த இரு நாட்டுக்கிடையேயும் எல்லை தாண்டியதாக கைது செய்யப்படும் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதில்லை, அவர்களின் மீது இராணுவம் கொடூரத்தாக்குதல் நடத்துவதில்லை.
ஆனால் பல ஆண்டுகளாக தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்துவதும் தொடர்ந்து தாக்குதல்கள் மேற்கொள்வதும் எல்லை தாண்டி விட்டார்கள் என்று கூறி கைது செய்து படகுகளை பறிமுதல் செய்வதும் நீடித்து வருகிறது.
56 இன்ச் மார்பு என்று தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளும் பாசிச மோடி தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலும் எதையும் கண்டு கொள்வதும் கிடையாது.
சென்ற வாரம் 42 மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து மீனவர்கள் நடத்தி வரும் போராட்டம் நான்காவது நாளை எட்டியுள்ளது. ஒவ்வொரு ஊராகச் சென்று தமிழ்நாட்டுக்கு எதிராக பேசுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கிற ஆளுநர், தற்பொழுது ஊர் சுற்றி பார்க்க ராமேஸ்வரம் வந்துள்ளார் என்ற போதும் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கொட்டடியில் சித்திரவதை செய்யப்படுவதைப் பற்றி வாய்மூடி அமைதியாக இருக்கிறார்.
தமிழ்நாட்டின் இயற்கை வளத்தையும் தமிழ்நாட்டையும் சுரண்டும் ஒன்றிய அரசுக்கு எதிரான தமிழ்நாட்டு மக்களின் போராட்டங்கள் வலுப்பெறுவதன் ஊடாகத்தான் இலங்கை கடற்படையினரின் அட்டூழியங்களுக்கு முடிவு கட்ட முடியும்.
இலங்கை கடற்படையினருக்கு எதிரான தமிழ்நாடு மீனவர்கள் போராட்டம் வெல்லட்டும்!
ஒன்றிய அரசுக்கு எதிரான நம்முடைய போராட்டங்களை கோரிக்கையை வலுப்படுத்துவோம்!
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram