தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை அரசானது சிறைக் கைதிகளின் கழிவறைகளைச் சுத்தம் செய்ய வைத்ததாகவும், ரூபாய் 50,000 அபராதத் தொகையைத் தாமதமாகச் செலுத்தியதற்காக மொட்டையடித்து அவமானப்படுத்தியதாகவும் செப்டம்பர் 14 அன்று ராமேஸ்வரம் வந்தடைந்த மீனவர்கள் தெரிவித்தனர்.
கடந்த மார்ச் 27 ஆம் தேதியன்று ராமேஸ்வரம் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 8 மீனவர்களை அவ்வழியாக வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்களின் படகுகள் மற்றும் மீன்களைப் பறிமுதல் செய்ததோடு 8 பேரையும் யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தது.
அதன்படி ஆறு மாத கால சிறைத் தண்டனைக்குப் பிறகு செப்டம்பர் 5 ஆம் தேதி மன்னார் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி 8 மீனவர்களில் 5 பேரை விடுதலை செய்து அவர்களுக்கு 50.000 அபராதமும் விதித்தார். மேலும் மூன்று பேருக்கு மீண்டும் எல்லை தாண்டி மீன் பிடித்தனர் என்பதற்காக ஆறு மாதம் கடுங்காவல் தண்டனையும் 50,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
விடுதலை செய்யப்பட்ட 5 மீனவர்களின் உறவினர்கள் கடன் வாங்கி அபராதத் தொகையை மன்னார் நீதிமன்றத்தில் செப்டம்பர் 7 ஆம் தேதி செலுத்தியுள்ளனர். ஆனால் 6 ஆம் தேதி அபராதத் தொகையைச் செலுத்தவில்லை என்பதற்காகச் சிறைத் துறையானது மீனவர்களுக்கு கை விலங்கிட்டும், மொட்டை அடித்தும், இலங்கை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை கழிவறைகளைச் சுத்தம் செய்ய வைத்தும், அங்குள்ள கழிவுநீர் கால்வாய்களைச் சுத்தம் செய்ய வைத்தும் கொடுமைப்படுத்தியதாக செப்டம்பர் 14 ஆம் தேதி ராமேஸ்வரம் திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர்.
படிக்க: இலங்கை அரசுடனும் தமிழ்நாடு போலீசுடனும் போராடும் மீனவர்கள்
இச்செயலுக்கு மீனவர்கள் சங்கம் கண்டனங்களைத் தெரிவித்ததோடு இலங்கை அரசின் தொடர் அத்துமீறல் மற்றும் மனிதநேயமற்ற செயலைக் கண்டித்தும், மீனவர்கள் பிரச்சினையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசைக் கண்டித்தும் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தங்கச்சிமடம் பேருந்து நிலையத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய மீனவர் சங்கத் தலைவர் எம்ரிட், “மத்திய அரசு இதையும் வேடிக்கை பார்ப்பது நல்லதல்ல. ஆகவே இதுவரை இலங்கை கடற்படை எங்களை அடித்துக் கொடுமைப்படுத்தியது. அதையெல்லாம் பொறுத்துக் கொண்டிருந்தோம். இனிமேலும் இவ்வாறான மனிதநேயமற்ற செயலை பொறுத்துக்கொள்ள மாட்டோம். ஆகவே மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் தழுவிய மாபெரும் போராட்டங்களை மத்திய அரசுக்கு எதிராகவும், இலங்கை அரசுக்கு எதிராகவும் தொடர்ந்து நடத்துவோம்” என்றார்.
அதேபோல், இலங்கை அரசின் மனிதநேயமற்ற செயலையும் மீனவர்கள் பிரச்சனையில் பராமுகமாக உள்ள மத்திய அரசை கண்டித்தும் வருகிற செப்டம்பர் 20 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகம் தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ச்சியாகத் தாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டபோதும், சில நேரங்களில் சுட்டுக் கொள்ளப்பட்டபோதும், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருந்து வருகிறது ஒன்றிய பி.ஜே.பி அரசு. தி.மு.க அரசும் தொடர்ந்து பிரதமருக்குக் கடிதம் எழுதுவதோடு தனது செயல்பாட்டை நிறுத்திக்கொள்கிறது.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram