புதுச்சேரி காரைக்காலில் கடற்படையினரின் மிருகத்தனமான தாக்குதலைக் கண்டித்து பிப்ரவரி 11 ஆம் தேதி முதல் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு ஆதரவாக வியாபாரிகள் நேற்று (பிப்ரவரி 18) கடை அடைப்பு போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி காரைக்கால் மாவட்டத்தின் கிளிஞ்சல்மேடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் ஜனவரி 27 அன்று கடலுக்குச் சென்றுள்ளனர். ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கையில் அங்கே வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்தாக மீனவர்கள் மீது கொடூரமான முறையில் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். அதில் படுகாயமடைந்த மூன்று மீனவர்களையும் கைது செய்து யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இலங்கை கடற்படை மீனவர்கள் மீது மிருகத்தனமான தாக்குதல் நடத்தி வருவது தொடர்ந்து வந்தபோதிலும் மத்திய அரசும் மாநில அரசும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இதனால் நம்பிக்கை இழந்த மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 11 ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கியமாக இலங்கை அரசைக் கண்டித்தும், காயமடைந்த மீனவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டியும், இலங்கை சிறையில் உள்ள பிற மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் கடந்த 14 ஆம் தேதி அன்று மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். அதனைத் தொடர்ந்து 15 ஆம் தேதி அன்று படகுகளில் கருப்பு கொடி கட்டும் போராட்டமும், 16 ஆம் தேதி அன்று இருசக்கர வாகனங்களில் கண்டன ஊர்வலங்களையும் நடத்தினர்.
படிக்க: மீனவர்களை விடுதலை செய்யக் கோரி இராமேசுவர மீனவர்கள் போராட்டம்!
போராட்டத்தின் தொடர்ச்சியாக 17 ஆம் தேதி அன்று காரைக்கால் ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் தங்கள் குடும்பத்தோடு தஞ்சாவூர் செல்லும் ரயிலை மறித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் 11 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் பங்கேற்றுள்ளனர். நூற்றுக்கணக்கான பெண்கள் தண்டவாளங்களில் அமர்ந்தும், படுத்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். மீனவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிராக நடவடிக்கை எடுக்காத மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அங்கே வந்த ரயில்வே போலீசார் மற்றும் காரைக்கால் போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மீனவர்கள் மறுத்த நிலையில் அனைவரையும் குண்டுக்கட்டாக தூக்கி தண்டவாளத்திலிருந்து அப்புறப்படுத்துகின்ற காட்சிகளும், சமூக வலைத்தளங்களில் வெளியாகின. ஆனால் மீனவர்கள் எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும் தங்களின் போராட்டம் தொடரும் மீனவர்கள் அறிவித்தனர்.
அதன் தொடர்ச்சியாக 18 ஆம் தேதி மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டத்திற்கு மீனவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர். அறிவித்தபடி நேற்று காலை முதல் காரைக்கால் மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகளையும் அடைத்து வியாபாரிகளும் போராட்டத்திற்கு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

பாசிச மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தன்னுடைய கார்ப்பரேட் நலனுக்காக இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுப்பதற்கு மறுத்து வருகிறது. மாநில அரசும் மீனவர்களின் போராட்டங்களைக் கண்டு கொள்ளாமல் வஞ்சித்து வருகிறது.
தங்களின் கோரிக்கைகளுக்காக வாழ்வாதாரத்தை இழந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் மீனவர்கள் போலீசை கொண்டு ஒடுக்கப்படுகிறார்கள். ஆனால் மீனவர்கள் அனைத்து தாக்குதல்களையும், ஒடுக்குமுறைகளையும் கடந்து தங்களின் கோரிக்கைகளுக்காக தற்போது வரை உறுதியாகப் போராடி வருகின்றனர்.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram