காராஷ்டிர மாநிலம் பால்கர் (Palghar) மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ள வத்வான் (Vadhvan) துறைமுக திட்டத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 30 அன்று அடிக்கல் நாட்டினார். இந்த துறைமுக திட்டம் ரூ.76,000 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளது.

மோடி கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி குறித்து பிரதமர் அலுவலகம் ஆகஸ்ட் 29 அன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் “வத்வான் துறைமுகம் உலகத்தரம் வாய்ந்த கடல்வழி நுழைவுவாயிலை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த துறைமுகத்தில், பெரிய கொள்கலன் கப்பல்கள், அதி-பெரிய சரக்குக் கப்பல்களுக்கு இடமளிப்பதன் மூலம் நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி பெருகும்.

தஹானு (Dahanu) நகருக்கு அருகில் அமையவுள்ள வத்வான் துறைமுகம் இந்தியாவின் மிகப்பெரிய ஆழ்கடல் துறைமுகங்களில் ஒன்றாகவும், சர்வதேச கப்பல் வழித்தடங்களுக்கு நேரடி இணைப்பை வழங்குவதாகவும் இருக்கும். இதன் மூலம், போக்குவரத்துக்கான நேரம் மட்டுமின்றி, செலவுகளையும் கணிசமாகக் குறைக்கலாம்” என்று கூறப்பட்டிருந்தது.

பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை குறித்தும், அதற்கு அடுத்த நாள் இத்திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் மோடி பேசியது குறித்தும், இத்துறைமுகத் திட்டத்தின் ‘அருமை பெருமைகள்’ குறித்தும் மைய நீரோட்ட ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால், பெரும்பாலான ஊடகங்களில் ஒரு முக்கியமான விசயம் இடம்பெறவில்லை.

துறைமுகம் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ள வத்வான் பகுதியில் இந்த அடிக்கல் நாட்டு விழா நடைபெறவில்லை. மாறாக, வத்வானில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள பால்கர் நகரில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

இது ஏன் என்ற கேள்வி நமக்கு எழலாம்.

அதற்கான விடை மக்கள் போராட்டம் தான். பாசிஸ்டுகளுக்கு மக்கள் போராட்டம் என்றாலே அச்சம் தானே!


படிக்க: மோடி 3.0: பாசிச அபாயம் நீங்கிவிட்டதா?


அடிக்கல் நாட்டு விழா நடைபெற்ற நாளான ஆகஸ்ட் 30 அன்று, உள்ளூர் மீனவர்கள், பழங்குடியின சமூகங்கள் மற்றும் விவசாயிகள் இணைந்து முன்மொழியப்பட்டுள்ள இத்திட்டத்திற்கு எதிராக மிகப் பெரிய அளவிலான போராட்டங்களை வத்வானில் நடத்தினர். மீனவர்கள் கடலில் படகு சவாரி செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்திட்டம் தங்களின் வாழ்வாதாரத்தையும் அப்பகுதியின் சுற்றுச்சூழலையும் அழித்துவிடும் என்பதால் மக்கள் இத்திட்டத்தை போர்க்குணத்துடன் எதிர்க்கின்றனர்.

இந்தப் போராட்டத்தில் பெண்கள் முன்னணியிலிருந்தனர். கருப்புக் கொடிகளை ஏந்தியிருந்த அவர்கள் அடிக்கல் நாட்டு விழாவை ரத்து செய்யுமாறும், வத்வான் கடற்கரை பகுதியையும், உள்ளூர் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டும் என்ற தங்கள் கோரிக்கைகளைப் பரிசீலிக்குமாறும் கோரினர். “மோடி கோ பேக்!” என்ற முழக்கம் வத்வான் பகுதி முழுவதும் எதிரொலித்தது.

இப்பகுதியில் சுமார் 5,000 – 6,000 மீனவக் குடும்பங்கள் வசிக்கின்றன. மீன்பிடி தொடர்பான தொழில்களில் பெண்கள் ஈடுபட்டுள்ளனர். கடற்கரை பகுதியில் சுமார் 3,000 படகுகள் உள்ளன. துடிப்பான மீனவ சமூகங்கள் மற்றும் விவசாயிகளால் இந்த பகுதிகள் செழிப்பாக உள்ளன.

மகாராஷ்டிராவின் கடலோரப் பகுதியில் நடைபெறும் போராட்டங்களில் பல சக்திவாய்ந்த பெண் குரல்களை நீங்கள் கேட்கலாம். அதற்கான காரணம், இயற்கையை அடிப்படையாகக் கொண்ட வாழ்வாதாரம் பெண்களுக்குத் தன்னாட்சியை வழங்கியுள்ளது; தன்னிறைவு பெறுவதற்கான அதிகாரத்தை வழங்கியுள்ளது என்பது தான். இந்தப் பெண்கள்தான் இந்தப் போராட்டங்களின் அதிகார மையங்களாக விளங்குகின்றனர்.

வத்வான் முழுவதும் பிரம்மாண்டமான போராட்டம் நடைபெறும் என்பதை எதிர்பார்த்துத் தான், துறைமுகம் அமையவுள்ள பகுதிக்கு 30 கி.மீ தூரத்தில் உள்ள பால்கரில் அடிக்கல் நாட்டு விழாவை நடத்தியுள்ளனர்.

இந்தப் போராட்டம் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கு மட்டுமானதல்ல, இப்பகுதியின் பூர்வக்குடியான கோலி மற்றும் பழங்குடி சமூகங்களின் கடல் மீதான உரிமைகளை நிலைநாட்டுவதற்கானதாகும்.

பருவநிலை மாற்றம் மற்றும் அதனால் ஏற்படும் நிகழ்வுகளின் அபாயத்தை இம்மக்கள் உணர்ந்துள்ளனர். இந்தியாவின் மேற்கு கடற்கரை சமீபத்திய ஆண்டுகளில் அசாதாரண எண்ணிக்கையிலான புயல்களைக் கண்டுள்ளது. மழைப்பொழிவும் கணிக்க முடியாததாகிவிட்டது. கடலோர சமூகத்தினர் தான் இதன் முழு பாதிப்பையும் எதிர்கொள்கின்றனர்.


படிக்க: மோடிக்கு காவடி தூக்கும் கோதி (Godi) மீடியா


எதிர்க்கட்சியினர் மீது போராடும் மக்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையிலும் கூட பிரதான எதிர்க்கட்சிகள் எதுவும் போராட்டத்தின் போது வரவில்லை என்று அம்மக்கள் கூறினர்.

மேலும், மைய நீரோட்ட ஊடகங்களின் செயல்பாட்டை இங்கே கேள்விக்குள்ளாக்க வேண்டும். தொலைக்காட்சி செய்தி சேனல்களில் போராட்டம் குறித்த செய்தி எதுவும் வெளியிடப்படவில்லை. மராத்தியில் சில உள்ளூர் செய்தித்தாள்கள் மட்டும் போராட்டம் குறித்த செய்தியை வெளியிட்டன.

மால்வான் (Malvan) என்ற இடத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு 35 அடி உயர சத்ரபதி சிவாஜியின் சிலை உடைந்து விழுந்ததற்கு மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடியின் உரை குறித்து பிரதான ஊடகங்கள் நாள் முழுவதும் செய்தி வெளியிட்டன. ஆனால், சில கிலோமீட்டர் தொலைவில் நடந்த பிரம்மாண்ட போராட்டங்கள் குறித்து அவை வாய்திறக்கவில்லை.


பொம்மி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க