privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்சத்தீஸ்கர் : பெண்களின் மார்பில் மின்சாரம் பாய்ச்சும் அரசு பயங்கரவாதம் !

சத்தீஸ்கர் : பெண்களின் மார்பில் மின்சாரம் பாய்ச்சும் அரசு பயங்கரவாதம் !

-

சத்தீஸ்கரில் நடக்கும் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்திய முகநூல் பதிவு (அருகில் – வர்ஷா டோங்ரே)

த்தீஷ்கர் மாநிலம், பஸ்தார் பகுதியில் அரசுப் படைகளால் அன்றாடம் அரங்கேற்றப்படும் பல்வேறு மனித உரிமை மீறல்கள் குறித்து வாரம் ஒரு செய்தியாவது வெளியாகிக் கொண்டிருக்கிறது. பல்வேறு மனித உரிமை செயற்பாட்டாளர்கள், வக்கீல்கள், தகவல் அறியும் உரிமைச் சட்ட செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் அங்கு இது குறித்து அம்பலப்படுத்தி வந்தனர். இவ்வாறு அம்பலப்படுத்தியவர்கள் தங்கியிருக்கும் வீடுகளின் உரிமையாளர்களை மிரட்டி அவர்களை அப்பகுதியிலிருந்து வெளியேறச் செய்தது அரசு.

அதோடு அவர்களை மாவோயிஸ்ட் ஆதரவாளர்களாகக் காட்டி அவர்கள் மீது பொய்வழக்குகளைப் போட்டு சிறையில் அடைத்தது சத்தீஸ்கர் அரசு. ஆனால் தற்போது அரசுத் துறையைச் சேர்ந்த ஒரு அதிகாரியே அதுவும் சிறைத்துறையைச் சேர்ந்த ஒரு அதிகாரியே, அரசின் அத்துமீறல்கள் குறித்து சமீபத்தில் அம்பலப்படுத்தியுள்ளார்.

ராய்ப்பூர், மத்திய சிறையில் இணை எஸ்.பி.யாக பணிபுரிந்து வருகிறார், வர்ஷா டோங்ரே. கடந்த ஏப்ரல்-24 அன்று மாவோயிஸ்ட்டுகளால் தொடுக்கப்பட்ட சுக்மா தாக்குதல் முடிந்து சில நாட்களுக்குப் பின்னர் தனது முகநூலில் பஸ்தார் பகுதியில் நீடித்து வரும் நிலைமைகளைப் பற்றி நீண்டதொரு பதிவை எழுதி வெளியிட்டுள்ளார். அப்பதிவை வெளியிட்டு சில நாட்களிலேயே அது சமூக வலைத்தளங்கள் முழுவதும் மிக அதிகமாகப் பகிரப்பட்டது. அடுத்த சில நாட்களிலேயே தனது முகநூல் பக்கத்திலிருந்து அந்தப் பதிவை நீக்கி விட்டார். ஒரு வேளை அரசால் மிரட்டப்பட்டிருக்கலாம். அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது,

“எந்த ஒரு சம்பவத்திலும் இருபக்கத்தில் யார் கொல்லப்பட்டாலும் அவர்கள் நமது நாட்டு மக்களே. அவர்கள் அனைவரும் இந்தியர்கள், அதனால் தான் யார் கொல்லப்பட்டாலும் அது நம் அனைவரையும் பாதிக்கிறது. இது குறித்து நாம் அனைவரும் இணைந்து விசாரிக்க வேண்டும் அப்படி செய்தால் உண்மை வெளிவரும் என நம்புகிறேன்.

ஆதிவாசிகள் குடியிருக்கும் பகுதிகளில் முதலாளித்துவ அமைப்பு திணிக்கப்படுகிறது. ஒட்டு மொத்த கிராமமும் எரிக்கப்பட்டு, பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். ஆதிவாசிகளை அந்த நிலத்திலிருந்து வெளியேற்றி மொத்த வனப்பகுதியையும் தமது கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வரவேண்டும் என்பதற்காகவே அவ்வாறு செய்கிறார்கள். ஆதிவாசிப் பெண்கள் மீது நக்சல்கள் என்ற சந்தேகம் வந்தால் அதனை தீர்த்துக் கொள்ள, அப்பெண்களின் மார்பகங்களை அழுத்தி பால் வருகிறதா எனப் (போலீசும், துணை இராணுவப் படைகளும்) பார்க்கிறார்கள்.

இந்திய அரசியல் சாசன சட்டத்தின் ஐந்தாம் பிரிவு ஆதிவாசிகளின் நிலத்தை அரசாங்கம் எடுத்துக் கொள்வதற்கான அனுமதியை மறுக்கிறது. இருப்பினும் புலிப் பாதுகாப்பு என்ற பெயரில் ஆதிவாசிகளை அவர்களது நிலத்திலிருந்தும், வனத்திலிருந்தும் வெளியேற நிர்பந்திக்கிறார்கள். நக்சலிசத்தை முடிவுக்குக் கொண்டு வரவா இவை அரங்கேற்றப்படுகின்றன? உண்மை அதுவல்ல.

உண்மைக்காரணம் என்னவென்றால், இவ்வனங்களில் அபரிதமாக உள்ள இயற்கைத் தாதுவளங்களை முதலாளிகளுக்கு அள்ளிக்கொடுக்க, இந்த காடுகளில் வசிப்பவர்களை விரட்ட வேண்டும். ஆனால் அங்கு வசித்து வரும் பழங்குடியினர் வெளியேறமாட்டார்கள், ஏனெனில் அந்த வனம் அவர்களது வீடு.

அவர்களும் நக்சலிசம் முடிவுக்கு வர வேண்டும் என்றே விரும்புகிறார்கள். ஆனால் இந்த நாட்டைக் காப்பவர்களே ஆதிவாசிகளின் வீட்டுப் பெண்களை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி, அவர்களது வீடுகளை எரித்து, அவர்கள் மீது பொய்வழக்குகள் போட்டால் அவர்கள் யாரிடம் நீதி கேட்டு செல்வார்கள் ?.

சி.பி.., மற்றும் உச்சநீதிமன்றமும் இதையே கூறுகின்றன. அது தான் யதார்த்தமாகவும் இருக்கிறது. யாரேனும் மனித உரிமை ஆர்வலர்கள் அல்லது பத்திரிக்கையாளர்கள் இதற்குத் தீர்வு காண எத்தனித்தால், அவர்கள் மீதும் பொய்வழக்குகள் போட்டு சிறையில் தள்ளுகிறார்கள்.

ஆதிவாசிகள் பகுதிகளில் எவ்விதப் பிரச்சினையும் இல்லாமல் இருந்தால் அரசாங்கம் ஏன் பயப்பட வேண்டும்?. அங்கு சென்று உண்மை அறிய அவர்கள் ஏன் யாரையும் அனுமதிப்பதில்லை ?

பதினான்கிலிருந்து பதினாறு வயதுக்குட்பட்ட பழங்குடி இனப் பெண் குழந்தைகள், ஒட்டுத்துணி இல்லாமல் நிர்வானமாக்கப்பட்டு போலீசு நிலையங்களில் சித்திரவதை செய்யப்படுவதை என் கண்களால் கண்டிருக்கிறேன். அவர்களது மணிக்கட்டிலும், மார்பகங்களிலும் மின்சாரம் பாய்ச்சப்படுகிறது. நான் அந்தத் தழும்புகளைப் பார்த்திருக்கிறேன். அது என் அடி வயிற்றைக் கலங்கச் செய்திருக்கிறது. அந்தச் சிறுமிகளிடம் கூட அவர்கள் ஏன் மூன்றாம் தர சித்திரவதையை மேற்கொள்ளுகிறார்கள்? அச்சிறுமிகளுக்கு மருத்துவ சிகிச்சைகள் தரவும், அவசியமான நடவடிக்கைகள் எடுக்கவும் நான் உத்தரவிட்டிருக்கிறேன்.

நமது அரசியல் சாசனம், யாரும் யாரையும் சித்திரவதை செய்யவோ, துன்புறுத்தவோ அனுமதிக்கவில்லை. அதன் ஐந்தாம் பிரிவு இம்மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். குறிப்பிட்ட வகையான வளர்ச்சி, ஆதிவாசி மக்களின் மீது திணிக்கப்படக் கூடாது.

ஆதிவாசிகள் , இயற்கையைக் காப்பவர்கள். நாமும் இயற்கையை அழிப்பவர்களாக இல்லாமல், அதனைக் காப்பவர்களாக இருக்க வேண்டும். அனைவரும் முதலாளித்துவ தரகர்களின் இரு முகம் கொண்ட கொள்கைகளைப் பற்றி புரிந்து கொள்ளுங்கள். விவசாயிகளும், படைவீரர்களும் சகோதரர்களே.. ஒருவர் மற்றொருவரைக் கொல்வது என்பது அமைதியையோ வளர்ச்சியையோ தராது. அரசியல் சாசனம் அனைவருக்குமானது. அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும்.

இந்த அமைப்பு முறையால் நானும் பாதிக்கப்பட்டவள் தான். ஆனால் அநீதிக்கு எதிராக நான் போராடியிருக்கிறேன். அவர்கள் தங்களது சதிகளால் என்னை தகர்க்க முயற்சித்தனர். எனக்கு பணம் கொடுப்பதாகக் கூறினர். கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 அன்று சத்தீஷ்கர், பிலாஸ்பூர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் முடிவின் 69வது பத்தியை எவரொருவரும் பார்க்கலாம். ஆனால் அவர்களது திட்டங்கள் அனைத்தும் வீணாகின. உண்மை வென்றது. அது எப்போதும் வெல்லும்.

நமக்கு இன்னமும் நேரம் இருக்கிறது. ஆனால் நாம் உண்மைக்காக நிற்கத் தவறினால் முதலாளித்துவவாதிகள் நம்மை சிப்பாய்களாக உபயோகித்து இந்த நாட்டில் இருந்து அனைத்து மனிதத் தன்மையையும் துடைத்தெறிந்து விடுவார்கள். அநீதிக்குத் துணை செல்ல மாட்டோம் என்றும் அதனை ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டோம் என்றும் உறுதி ஏற்போம். அரசியல் சாசனம் வாழ்க, இந்தியா வாழ்க!! “

வர்ஷா டோங்ரே, கடந்த 2003-ம் ஆண்டு நடத்தப்பட்ட பொது சேவைக் கமிசனுக்கான போட்டித் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு எதிராக கடந்த 2006-ம் ஆண்டு சத்தீஸ்கர் உயர்நீதி மன்றத்தில் வழக்காடி வெற்றி பெற்று அதனடிப்படையிலேயே சிறைத்துறை துணை எஸ்.பி.யாக பதவி ஏற்றிருக்கிறார்.

வர்ஷா டோங்ரேயின் முகநூல் பதிவு, பகிர்வுகளின் மூலமாகவும் பல்வேறு சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் பரவுவதை அறிந்த்தும், சத்தீஸ்கர் அரசு உடனடியாக வர்ஷா டோங்ரே மீது நடவடிக்கை எடுக்க சிறை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. சிறை நிர்வாகம், ஆரம்ப கட்ட விசாரணையை ஆரம்பித்து அதனடிப்படையில் 32 பக்கக் கடிதத்தைக் கொடுத்து 2 நாட்களுக்குள் பதிலளிக்கக் கூறியது. அதற்கு சுமார் 376 பக்கத்திற்கு தனது முகநூல் பதிவிற்கான நியாயங்களை, ஆதாரங்களோடு சேர்த்து பதிலாக அளித்தார் வர்ஷா டோங்ரே.

பணி இடைநீக்க உத்தரவை எதிர்த்துப் போராடுவேன் – வர்ஷா டோங்ரே

அவரது பதில் குறித்து எவ்வித விசாரணையும் இல்லாமல் கடந்த மே, 5-ம் தேதி அன்று அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அரசு ஊழியர்களுக்கு சத்தீஸ்கர் அரசு விதித்துள்ள சேவை விதிகளையும் மற்ற விதிகளையும் மீறியதற்காகவும், பணியில் முன்னறிவிப்பின்றி விடுமுறை எடுத்ததற்காகவும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.

அரசின் இந்த நடவடிக்கைகளைக் கண்டு அஞ்சாமல் தாம் கூறியது சரி தான் என உறுதியாக நிற்கிறார் வர்ஷா டோங்ரே. தமது முகநூல் பதிவில் தாம் கூறிய அனைத்தும் புதியதாகக் கூறப்பட்ட விசயங்கள் இல்லை எனவும், அவை அனைத்தும் ஏற்கனவே உச்சநீதிமன்றத் தீர்ப்புகளிலும், மத்திய புலனாய்வுத்துறை அறிக்கைகளிலும், தேசிய மனித உரிமைக் கமிஷனின் அறிக்கைகளிலும், மத்திய அரசின் அலுவலக கெசட்டுகளிலும், திட்டக்கமிஷனின் வல்லுனர்கள் குழுவின் அறிக்கையிலும் இருப்பவை தாம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் மீதான இந்த பணி இடைநீக்கத்தை எதிர்த்து அரசியல் சாசன வழியில் நின்று எதிர்த்துப் போராடப் போவதாகவும், அரசியல் சாசன சட்டத்தின் ஐந்தாவது பிரிவை ஆதிவாசிகள் வாழும் பகுதிகளில் நடைமுறைப்படுத்த மத்திய அரசைக் கேட்டுக் கொள்வதாகவும் கூறியிருக்கிறார்.

வர்ஷா டோங்ரேயின் மீதான துறைரீதியான நடவடிக்கைக்கு அரசு கூறியிருக்கும் காரணங்கள் சட்டரீதியாக வேண்டுமானால் சரியானதாக இருந்திருக்கலாம். ஆனால் தனக்கு வேண்டப்பட்ட அரசு ஊழியர்களின் விதிமீறல்களுக்கும் சத்தீஸ்கர் அரசு இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

இதற்கு முன்னர், சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியின் ஐ,ஜி. –யாக இருந்த கல்லுரி என்னும் போலீசு அதிகாரி, அப்பகுதியைச் சேர்ந்த கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றின் விருந்துகளில் கலந்து கொண்டு அந்த புகைப்படத்தைத் தனது முகநூலில் பகிர்ந்து கொண்டார். இதுவும் சத்தீஸ்கர் அரசின், அரசு ஊழியர்களுக்கான விதிமுறைகளுக்கு முரணானது. ஆனால் கல்லுரியை பணி இடைநீக்கமோ, விசாரணையோ செய்யவில்லை. மாறாக கல்லுரிக்கு மருத்துவ விடுப்பு கொடுத்து அனுப்பியது, அரசு.

சுக்மா எஸ்பி இந்திர கல்யாண் எலிசலா (இடது) ஜக்தல்பூர் எஸ்.பி ஆர்.என்.தாஸ் (நடு) ஐ.ஜி. கல்லுரி(வலது)

அதே போல சுக்மா பகுதியின் எஸ்.பி. இந்திர கல்யான் எலெசெலா, ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் கூட்டத்தில் பேசும் போது, இஷா கந்தெல்வால், ஷாலினி கெரா போன்ற மனித உரிமை செயற்பாட்டாளர்களை, வாகனங்களைக் கொண்டு சாலையில் நசுக்கிக் கொல்ல வேண்டும் என்று கூறினார். ஆனால் இதற்காக இன்றுவரை அவரிடம் ஒரு விசாரணையோ, அல்லது பணி இடைநீக்கமோ செய்யப்படவில்லை.

இவ்விவகாரத்தில் இவர்கள் இருவருக்கும் சட்டம் ஒரு மாதிரியாகவும், வர்ஷா டோங்ரேக்கு சட்டம் வேறு மாதிரியாகவும் செயல்பட்டிருக்கிறது. காரணம் அவர்கள் இருவரும் கார்ப்பரேட்டின் நலனைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள், வர்ஷா டோங்ரே மக்களின் நலனைப் பற்றிப் பேசியுள்ளார்.

அநீதிக்கு எதிரான வர்ஷா டோங்ரேயின் உறுதியைப் பாராட்டும் அதே வேலையில் அவர் இந்தக் கட்டமைப்பிற்குள்ளேயே இதற்கான தீர்வைத் தேடுகிறார், தீர்வு கிடைக்கும் என நம்புகிறார் என்பதை வருத்தத்தோடும் பார்க்க வேண்டியது இருக்கிறது. இந்தக் கட்டமைப்பின் ஒவ்வொரு செல்லும் இற்றுப் போய் நீடிக்கத் தகுதியில்லாத்தாகி விட்டது என்பதை விரைவில் வர்ஷா டோங்ரேவிற்கு அவர் நம்பும் இந்தக் கட்டமைப்பே உணர்த்தும்.

– நந்தன்

மேலும் படிக்க :

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க