கடன் சுமைக் கடலில் தத்தளிக்கும் இலங்கை :
நெருக்கடியைத் தீவிரமாக்கி ஆதிக்கம் செலுத்தத் துடிக்கும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் !
ண்டை நாடான இலங்கையில் அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை, வெங்காயம் − என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனைத்தும் விண்ணை முட்டும் அளவுக்கு விலை உயர்ந்துவிட்டது. இலங்கை அரசு பொருளாதார அவசரநிலையைப் பிரகடனம் செய்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் வினியோகத்தை ஒழுங்குபடுத்துவதற்காக இராணுவம் ஈடுபடுத்தப்படுகிறது. ரேஷனில் உணவுப் பொருட்களை வாங்க காய்கறி − மளிகைக் கடைகளில் மக்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள். சிங்களவர், தமிழர், முஸ்லீம், கிறித்தவர் − என அனைத்து உழைக்கும் மக்களும் வரலாறு காணாத விலையேற்றத்தால் உணவுப் பொருட்களை வாங்க வழியின்றி, அரை வயிற்றுக் கஞ்சியோடு அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஏற்றுமதி வீழ்ச்சி, அந்நிய செலாவணி பற்றாக்குறை, நாணய மதிப்பு சரிவு, கடன் நெருக்கடிகள் தீவிரமாதல் − என மாபெரும் பொருளாதார நெருக்கடியை நோக்கி நாலுகால் பாய்ச்சலில் இலங்கைத் தீவு முன்னேறிக் கொண்டிருக்கிறது. இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட மந்த நிலைதான் காரணம் எனச் சித்தரிக்கின்றன, முதலாளித்துவ பத்திரிக்கைகள். ஆனால் இந்நெருக்கடிக்குப் பின்னே அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் ஒளிந்திருக்கின்றன.
படிக்க :
கொடநாடு : விவாதப் பொருளாக வேண்டியது எது?
தேசிய பணமாக்கல் திட்டம் : நோக்கமும் பின்னணியும் !
ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி, தேயிலை ஏற்றுமதி, சுற்றுலாவின் மூலம் கிடைக்கும் வருவாய் ஆகியவற்றைச் சார்ந்துதான் இலங்கைப் பொருளாதாரம் இயங்கிக் கொண்டிருக்கிறது. மொத்த ஏற்றுமதியில் ஆயத்த ஆடைகளின் பங்கு 52 சதவிகிதமாகவும், தேயிலை ஏற்றுமதி 17 சதவிகிதமாகவும் உள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்தம் காரணமாக, இலங்கையின் ஏற்றுமதி மிகப்பெரிய அளவில் குறைந்து பொருளாதாரம் படுத்துவிட்டது. 2019−ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு (ஜிடிபி) 1.1 சதவிதமாக இருந்த நிலையில் 2020−ல் இது மேலும் சரிந்து −16.3 சதவிதம் (மைனஸ் 16.3 சதவிதம்) என வரலாறு காணாத கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. சுற்றுலாத்துறை முடக்கம் மற்றும் ஏற்றுமதி சரிவால் அந்நிய செலாவணி கையிருப்பு வற்றி விட்டது. பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் மூலதனத்தை சுருட்டிக் கொண்டு வெளியேறி வருகின்றன.
இன்று, உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை பெருமளவில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் நாடாக இலங்கை உள்ளது. அந்நிய செலாவணி பற்றாக்குறையின் விளைவாக, இந்த ஆண்டு தொடக்கத்திலேயே மஞ்சள் இறக்குமதியை அரசு நிறுத்திவிட்டது. ஜூன் மாதம் முதல் உளுந்து இறக்குமதிக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதிகளும் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன.
இவை மட்டுமின்றி, வாகன தாயாரிப்புகளுக்கான உதிரி பாகங்கள், ஆயத்த ஆடைகளுக்கான மூலப்பொருட்கள் போன்றவற்றை இறக்குமதி செய்யவதற்குப் போதிய நிதி இல்லாத காரணத்தால், உற்பத்தித் துறையே முடங்கும் அபாயத்தில் உள்ளது. மறுபுறம், இலங்கையின் நாணய மதிப்பும் கீழ் நோக்கிச் சரிந்துகொண்டே செல்கிறது. இதன் விளைவாக பணவீக்கம் அதிகரித்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் இதுவரை கண்டிராத உச்சத்திற்கு உயர்ந்து விட்டன.
செப்டம்பர் 19−க்கு முந்தைய நிலவரப்படி, ஒரு கிலோ சிவப்புப் பருப்பின் விலை கிலோ ரூ.250, சர்க்கரை கிலோ ரூ.215, உருளைக் கிழங்கு கிலோ ரூ.300, பெரிய வெங்காயம் கிலோ ரூ.400 − என விற்கப்படுகிறது. அதிகபட்சமாக உளுந்து கிலோ ரூ.2,000 ஆகவும், மஞ்சளின் விலை ரூ.4,000−லிருந்து ரூ.5,000 வரையிலும் விற்கப்படுகிறது. ஆனால், உணவுப் பொருட்கள் பதுக்கல்கள் உள்ளிட்ட காரணங்களால் களநிலவரம் இதைவிட மோசமாக இருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் வருகின்றன.
‘‘அனைவருக்குமான உணவுப் பொருட்களை அரசே ஏற்பாடு செய்ய இயலாது; ஆகையால், வீட்டுத் தோட்ட முறைக்கு மக்கள் மாற வேண்டும்; முடிந்த அளவிற்கு வெளியிலிருந்து பொருட்கள் வாங்குவதை கைவிட்டு, உணவுத் தேவையை தாமாகவே நிறைவு செய்துகொள்ள வேண்டும்’’ என்று அரசு மக்களுக்கு அறிவுரை வழங்கி வருகிறது.
இலங்கையின் மற்றொரு முக்கிய நெருக்கடி கடன். இது, நீண்டகாலமாகவே இருக்கும் பிரச்சினை. 2014−ம் ஆண்டிலிருந்தே இலங்கையின் வெளிநாட்டுக் கடன் பெரும் பாய்ச்சலுடன் உயரத் தொடங்கிவிட்டது. 2019−இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 42.9 சதவிகிதமாக இருந்த கடன் தொகை, இந்த ஆண்டு ஜூலையில் 101 சதவிகித்தைத் தொட்டுள்ளது.
இதே மாதத்தில் இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு 270 கோடி அமெரிக்க டாலராக இருந்த நிலையில், வெளிநாடுகளுக்கு இலங்கை செலுத்த வேண்டிய கடன் தொகையோ 3,500 கோடி அமெரிக்க டாலருக்கு மேலாக இருந்தது. எந்த அளவுக்கு இந்த கடன் நெருக்கடி இருக்கிறதென்றால், இலங்கை அரசின் வருவாயில் சுமார் 80 சதவிகிதம் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவதற்காகவே செலவிடப்படுகிறது. இதுவொருபுறமிருக்க, அந்நிய செலாவணி பற்றாக்குறையை சமாளிப்பதற்காக மேலும் கடன் வாங்க வேண்டிய நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது.
அதிகாரத்தில் இருக்கும் கோத்தபய அரசு பெருமளவு கடன்களை சீனாவிடமிருந்து வாங்கி வருகிறது. கடந்த மார்ச் மாதத்தில் சீனாவிடம் 150 கோடி டாலர்களை கடனாகப் பெற்றதைத் தொடர்ந்து, சென்ற ஆகஸ்ட் மாதம் 17−ஆம் தேதி மேலும், 6,150 கோடி இலங்கை ரூபாய் மதிப்பிலான கடனுதவியைப் பெற்றுள்ளது. சீனாவிடமிருந்து கடன் பெறும் இந்த நடவடிக்கை, ‘‘இலங்கையை சீனாவினுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடும்’’ என்று அந்நாட்டின் எதிர்க்கட்சிகளும் பொருளாதாரவாதிகளும் கோத்தபய அரசைக் கடுமையாகச் சாடுகிறார்கள். சீனா கொடுக்கும் கடன்கள் ‘‘குறுகிய காலக் கடன்கள்’’ என்பதால், இக்கால இடைவெளிக்குள் அதைக் கொடுக்க முடியாவிட்டால், பின்னர் அதன் நிர்பந்தத்திற்கு அடிபணிய நேரிடும் என்று எச்சரிக்கிறார்கள்.
ஏற்கெனவே, அம்பாந்தோட்டை துறைமுக மேம்பாட்டுக்காக சீனாவிடம் வாங்கிய கடன் தொகைக்கு ஈடாக, 99 ஆண்டுகளுக்கு அத்துறைமுகத்தை சீனாவிற்கு குத்தகைக்கு விட்டுள்ளது இலங்கை அரசு. இது மட்டுமின்றி, அம்பாந்தோட்டை விமான நிலையம், தெற்கு விரைவுச் சாலை, நிலக்கரியால் இயங்கும் அனல்மின் நிலையம், கொழும்பு துறைமுக நகரம் உள்ளிட்ட பல திட்டங்களின் மூலமும் இலங்கையில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்நிலையில், ‘‘பொருளாதார நெருக்கடியை சீர்செய்ய சர்வதேச நாணய நிதியத்தை அணுகுமாறு’’ ஆளுங்கட்சிக்கு யோசனை கூறுகிறார், முன்னாள் பிரதமரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரம சிங்கே.
‘‘சர்வதேச நாணய நிதியத்தை நாடினால் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு கிடைக்க முடியும் ஆனால், சமூக மட்டத்தில் பல பிரச்சினைகள் தோற்றம் பெறும். நாணய நிதியத்தின் நிபந்தனைகள் தற்போது அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன. ஆகையால் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது’’ என்று இதற்கு பதிலளித்திருக்கிறார் நிதி அமைச்சர் கப்ரால். ‘‘சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது’’ என்று அமைச்சர் குறிப்பிடுவது, அமெரிக்காவின் அரசியல் மேலாதிக்கத்தைத்தான் என்பதை நம்மால் விளங்கிக் கொள்ள முடியும்.
ஆக, இலங்கையின் இன்றைய அந்நியச் செலாவணி நெருக்கடியை சமாளிக்க இருவேறு ஆளும் வர்க்க கட்சிகளும் இருவேறு தீர்வுகளை முன்வைக்கின்றன. சீனாவுக்கா, அமெரிக்காவுக்கா? யாருக்கு இலங்கையை அடகு வைப்பது என்பதுதான் இவர்களது ‘முட்டல்−மோதல்’−இன் சாராம்சமே ஒழிய, இவர்களொன்றும் நாட்டின் இறையாண்மைக்காக நிற்கக்கூடிய நாட்டுப் பற்றாளர்கள் அல்ல.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கும்பலின் தலைமையிலான இலங்கை பொதுஜன பெரமுன கட்சியானது, சீன விசுவாசப் பிரிவாகும். அதிகாரத்துக்கு வந்ததிலிருந்து இலங்கையை சீனாவின் மேலாதிக்க பசிக்கு படையல் வைக்கக் கூடிய பல்வேறு நடவடிக்கைகளை அக்கட்சியும் ஆட்சியும் செய்து வருகிறது. அம்பாந்தோட்டை துறைமுகக் குத்தகை விவகாரம் ஒன்றே இதற்குச் சான்று கூறப் போதுமானது.
அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் மற்றும் இந்திய மேலாதிக்கவாதிகளின் விசுவாசிகளான மைத்ரிபால சிறிசேனா − ரணில் விக்கிரமசிங்க அரசு கடந்த 2019−ம் ஆண்டு மே மாதம் இலங்கை − இந்தியா − ஜப்பான் ஆகிய முத்தரப்பு நாடுகள் இணைந்து கொழும்பு துறைமுகத்தில் ‘‘கிழக்கு சரக்குப் பெட்டக முனையம்’’ கட்டுவதற்காக திட்டத்தைப் போட்டுக் கொண்டது. ஆனால், ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில் அத்திட்டத்தை கோத்தபய அரசு ரத்து செய்தது. 2020 ஜூலை மாதம், கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சமாளிப்பதற்காக இந்திய அரசிடமிருந்து வாங்கிய 40 கோடி டாலர்களை (சுமார் ரூ.3,000 கோடி) அவகாச காலம் முடியும் முன்னரே திருப்பிக் கொடுத்துள்ளது, கோத்தபய அரசு.
இவை சில சான்றுகள்தாம். தமது உலக மேலாதிக்க போர்த்தந்திர திட்டத்துக்கு ஒத்துழைக்காத கோத்தபய அரசின் சீன ஆதரவு நடவடிக்கைகள், அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகளுக்கு எரிச்சலூட்டுகிறது. இதனால், கோத்தபய அரசை எச்சரித்து, மிரட்டிப் பணிய வைக்கும் நோக்கத்துடன், இலங்கைக்கு வழங்கி வந்த ஜி.எஸ்.பி. (பொது விருப்பத் தேர்வு ஒழுங்கமைப்பு − generalized system of preference) என்ற வரிச் சலுகையை நீக்கப்போவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவது என்ற அடிப்படையில் 27 நிபந்தனைகளுடன் (மனித உரிமைகள், தொழிலாளர் வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சிறந்த மேலாண்மை உள்ளிட்டவற்றைக் காப்பாற்றுவது என்ற அடிப்படையில்) இலங்கையிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் 66 சதவிகிதம் வரிச்சலுகை அளித்து வருகிறது. இதைத்தான் தற்போது நீக்கப்போவதாக அறிவித்துள்ளது.
இலங்கை அரசு கொண்டுவந்துள்ள அடக்குமுறைச் சட்டமான ‘‘பயங்கரவாத தடைச் சட்ட’’த்தைக் காரணம் காட்டி, இலங்கையில் ‘‘மனித உரிமைகள் நசுக்கப்படுகிறது’’ என்று ஐரோப்பிய ஒன்றியம் தனது அடாவடித்தனத்துக்கு நியாயம் கற்பிக்கிறது. பிற நாடுகளில் மனித உரிமைகள் நசுக்கப்படுவது குறித்து ஏகாதிபத்தியங்களுக்கு ‘அக்கறை’ வருகின்றதென்று சொன்னால், அது அந்த நாட்டிற்கு நெருக்கடி கொடுப்பதற்கு கையாளப்படும் உத்தி என்பதுதான் வரலாறு.
இலங்கையின் இன்றைய நெருக்கடிக்கும் அந்நிய செலாவணி பற்றாக்குறைக்கும் முக்கிய காரணம் இலங்கை அரசு தீவிரமாகச் செயல்படுத்திவரும் தனியார்மயம் − தாராளமயம் − உலகமயம் எனும் மறுகாலனியாக்க கொள்கையும், இலங்கையின் பொருளாதாரக் கட்டமைப்பை அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களின் ஆதிக்கத்துக்கும் கொள்ளைக்கும் ஏற்றவாறு மாற்றியமைத்திருப்பதுதான் காரணம்.
படிக்க :
உத்திரப் பிரதேசம் : தாழ்த்தப்பட்ட மக்களின் வதைக்கூடம்
இலங்கை : மலையேறிச் சென்று பெண்கள் மேற்கொள்ளும் மருத்துவம் !!
உள்நாட்டு தற்சார்பு பொருளாதாரத்தை விடுத்து உலகச் சந்தைக்கான உற்பத்திப் பின்நிலமாக, ஏற்றுமதி அடிப்படையிலான உற்பத்தியாக இலங்கையின் பொருளாதாரம் மாற்றியமைக்கப்பட்டிருப்பதே இத்தகைய தீராத நெருக்கடிகளுக்கு அடிப்படை. கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்தியுள்ள பொருளாதார தேக்கநிலையானது, இலங்கையின் உலகச் சந்தையை மேலும் சுருக்கி நிரந்தரமான நெருக்கடிக்குள் தள்ளிவிட்டுள்ளது.
இந்த நிலைமையைச் சாதகமாக்கிக் கொண்டு, சீனாவின் பக்கம் இலங்கை சாய்ந்து விடாமல் தடுக்கும் நோக்கத்துடன், இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள், பொருளாதார நெருக்கடியைத் தீவிரமாக்கி கோடிக்கணக்கான உழைக்கும் மக்களை பட்டினியில் தள்ளி வருகின்றன.
அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்தியங்கள், சீனா − ஆகியவற்றின் இரும்புப் பிடியிலிருந்து இலங்கைத் தீவை விடுவிக்க புரட்சிகர − ஜனநாயக சக்திகளின் தலைமையில் இலங்கை உழைக்கும் மக்களை அணிதிரட்டுவதும், தற்சார்பு பொருளாதாரத்தைக் கொண்ட, இறையாண்மையுள்ள அரசுக் கட்டமைப்புக்காக போராடுவதும்தான் இந்நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கான ஒரே வழி.
இலங்கையின் அரசியல் − பொருளாதார விடுதலையானது, இந்தியா உள்ளிட்ட பிற தெற்காசிய பிராந்திய நாடுகளின் உழைக்கும் மக்களின் விடுதலையோடு பின்னிப் பிணைந்திருப்பதால், இலங்கை உழைக்கும் மக்களின் போராட்டங்களை ஆதரித்துக் குரல் கொடுப்பது நமது கடமையுமாகும். இந்நாடுகளிலுள்ள உழைக்கும் மக்களின் ஒன்றிணைந்த போராட்டங்கள்தான் தெற்காசியப் பிராந்தியத்தில் ஏகாதிபத்தியங்களை சவக்குழிக்கு அனுப்பும்!

டேவிட்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க