கொடநாடு கொலை−கொள்ளை வழக்கு தற்போது மீண்டும் பேசுபொருளாகி இருக்கிறது. ஊழல் ராணி ஜெயாவின் உல்லாச புரியாக இருந்த கொடநாடு எஸ்டேட்டில், அவர் மறைவுக்குப்பின் 2017−ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடந்த கொலை−கொள்ளை சம்பவங்கள் அப்போது பெரிய அளவில் பேசப்பட்டது. கொடநாடு எஸ்டேட் பங்களாவுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் அங்கிருந்த காவலாளியைக் கொன்றுவிட்டு, சில முக்கிய பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாக ஊடகங்களில் அப்போது செய்திகள் வெளியாகின. கொள்ளைபோனது கரடி பொம்மையும், சில கைக்கடிகாரங்களும்தான் என இந்த வழக்கை முடிக்கப் பார்த்தது போலீசு.

அதே நேரத்தில், தேடப்பட்ட குற்றவாளிகளில் முக்கியமானவரான ஜெயலலிதாவின் முன்னாள் டிரைவர் கனகராஜ் கார் மோதி கொல்லப்படுகிறார். இன்னொரு குற்றவாளியான சயான் கேரளாவில் காரில் சென்று கொண்டிருக்கும்போது, அதேபோல கார் மோதி விபத்துக்குள்ளாகி சுயநினைவை இழக்கிறார். உடன்வந்த மனைவியும் இரு குழந்தைகளும் இறந்து விடுகின்றனர். மேலும், கொடநாடு பங்களாவின் கேமரா ஆப்பரேட்டராக இருந்தவரும் தற்கொலை செய்து கொள்கிறார். இப்படி சினிமா பாணியில் அடுத்தடுத்து திகிலூட்டும் மர்மமான சம்பவங்கள் நடந்து கொண்டிருந்தன. ‘‘இதெல்லாம் செய்வது ஜெயலலிதா ஆவியாக இருக்குமோ’’ என்ற பீதி கிளப்பிவிடப்பட்டு, சில சில்லறை பத்திரிக்கைகளுக்கும் யூ−டியூப் சானல்களுக்கும் அது கதைக்களமாக அமைந்தது.

ஆனால் சயானின் நினைவு மீண்ட பிறகு, அவரும் வாளையார் மனோஜும் தெஹல்கா பத்திரிக்கையின் ஆசிரியர் மேத்யூ சாமுவேலின் உதவியுடன் இந்த ‘மர்மங்களை’ ஊடகங்கள் முன் அம்பலப்படுத்தினர். ‘‘முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியும் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட சில அ.தி.மு.க. அமைச்சர்களும் போட்டுக்கொடுத்த திட்டத்தின்படிதான் கனகராஜும் நாங்களும் கொள்ளையடிக்கச் சென்றோம். போலீசார் சொல்வதைப்போல வெறுமனே கரடி பொம்மையும் வாட்சும் மட்டும் திருடு போனாதாகச் சொன்னது பொய். ஜெயலலிதாவின் அறையில் வைத்திருந்த இரண்டாயிரம் கோடி ரூபாய் பணத்தையும், அங்கிருந்த பல்வேறு சொத்து ஆவணங்களையும் திருடி வருவதற்கான இலக்கோடுதான் கொள்ளை சம்பவம் நடந்தது’’ − என அனைத்தையும் புட்டுபுட்டு வைத்துவிட்டார்கள்.

படிக்க :

♦ செத்தும் கெடுத்த ஜெயா ! – அழுகி நாறும் அதிமுக !

♦ ஜெயா எப்படிச் செத்தால் நமக்கென்ன ?

பதறிப்போன எடப்பாடியோ, தனது பணபலத்தை வைத்து உச்ச நீதிமன்றம் வரை சென்று ‘‘எனக்கெதிராக போதிய ஆதாரமில்லாமல் அவதூறு சொல்கிறார்கள்’’ என்று சயானும் வாளையார் மனோஜும் ஊடகங்களில் பேசுவதற்குத் தடை உத்தரவு வாங்கினார். அதைத் தொடர்ந்து ஊற்றி மூடப்பட்ட வழக்கு தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின்னர், ‘‘எங்களை மீண்டும் விசாரிக்க வேண்டும்’’ என சயானும் வாளையார் மனோஜும் கேட்டுக் கொண்டதையடுத்து தற்போது விசாரணைக்கு வந்திருக்கிறது. நீண்டகால இடைவேளைக்குப் பிறகு தமிழக மக்களிடையே கொடநாடு கொலை−கொள்ளைகள் மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது.

தமிழகத்தையே மொட்டையடித்த ஜெயாவின் கருவூலம்தான் கொடநாடு பங்களா!

1991−ம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றியது முதலாக ஜெயா−சசி கும்பல் தமிழகத்தையே சூறையாடிக் கொழுத்தது. தன்னுடைய முதல் ஆட்சிக் காலத்திலேயே (1991−96) தமிழகம் முழுக்க ஏகப்பட்ட பண்ணை நிலங்களையும், பங்களாக்களையும், தொழிற்சாலைகளையும் வாங்கிக் குவித்தது. இந்த ஆண்டுகளில் மட்டும் இக்கும்பலின் வருவாயைவிட செலவுக் கணக்கு பலமடங்கு கூடுதலாக இருந்த விவகாரம், விசாரணையின் மூலம் தெரிய வந்தது.

1996−இல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, வண்ணத் தொலைக்காட்சி வழக்கில் போயஸ் கார்டனை சோதனையிட்ட இலஞ்ச ஒழிப்புத்துறையினர், அசையும் சொத்துக்களாக மட்டும் 800 கிலோ வெள்ளி, 28 கிலோ தங்கம், 750 ஜோடி காலணிகள், 10,500 புடவைகள், 91 கைக்கடிகாரங்கள் போன்றவற்றைக் கைப்பற்றிய விவகாரம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இந்த கொள்ளைகளையெல்லாம் ஊருக்கே வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் அமைந்தது 1995−ல் நடைபெற்ற ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமண நிகழ்ச்சி. 70,000 சதுர அடி பரப்பளவில் பந்தல், ஒரே சமயத்தில் 25,000 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் உணவருந்தும் இடம், வெளியூர் விருந்தினர்கள் தங்குவதற்காக சென்னையில் மட்டும் ஹோட்டல்களில் 1,000 அறைகள், ஏ.ஆர்.ரகுமானின் இசைக் கச்சேரி − என தடபுடலான ஏற்பாடுகள். ஊர்வல வண்டியில் ஜெயாவும் சசியும் உடல் முழுக்க தங்க நகைகள் தொங்க நின்றுகொண்டிருக்க, தேவாரம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு கொடுத்தபடியே முன்னே சென்றனர். ஒட்டுமொத்த அரசு நிர்வாகமே இந்த திருமணத்திற்காக இறக்கிவிடப்பட்டது.

இவற்றுக்கு பிறகு, 2016 சட்டமன்றத் தேர்தலின்போது 570 கோடியுடன் பிடிபட்ட மூன்று கண்டெய்னர்கள் விவகாரமானது, கொள்ளைக்காரி ஜெயாவின் ஆட்சிக் காலத்தில் நடந்த சூறையாடலுக்கு மேலும் ஒரு சான்றாக அமைந்தது.
ஒவ்வொரு எம்.எல்.ஏ., எம்.பி.யும், அமைச்சர்களும் தங்கள் தொகுதிக்கும் துறைக்கும் உட்பட்டு அடிக்கும் கொள்ளையில் குறிப்பிட்ட சதவிகிதம் கமிஷனை தனக்கு கப்பமாக கட்ட வேண்டும் என்ற விதியை ஏற்படுத்தி, ஊழலையே தொழில்முறையாக செய்தார் ஜெயா. அவர் கொள்ளையடித்த ஊழல் சொத்துக்களையெல்லாம் நிர்வகிக்கும் தலைமைச் செயலகமாக வைத்திருந்த இடம்தான் கொடநாடு எஸ்டேட் பங்களா.

ஜெயலலிதா மறைவுக்குப்பின், 2017−ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் குன்ஹா தீர்ப்பின் அடிப்படையில் ஜெயா முதன்மை குற்றவாளியாகவும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியார் குற்றத்திற்கு உடந்தையாக இருந்தவர்களாகவும் உறுதி செய்யப்பட்டு நான்காண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஜெயாவைத் தவிர மற்றவர்கள் அனைவரும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டியதாயிற்று.
இந்த சூழலில், இனி நம்மைக் கட்டுப்படுத்த யாரும் இல்லை என்று தெரிந்த அ.தி.மு.க. கொள்ளையர்கள், தங்களிடமிருந்து ஜெயா பிடுங்கிவைத்துக் கொண்ட சொத்துப் பத்திரங்களை மீட்கவும், ஜெயாவின் கருவூலத்தைக் கொள்ளையடிக்கவும் நிகழ்த்திய சம்பவம்தான் கொடநாடு கொள்ளை.

தற்போது ஊடகங்கள் பேசுபொருளாக்கும் கொடநாடு விஷயம், எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. அமைச்சர்கள் நடத்திய கொள்ளை என்ற கிளைக்கதையைப் பற்றித்தான். மாறாக, மக்களின் சொத்துக்களை கொள்ளையடித்து சேர்த்த ஜெயாவின் கொடநாடு எஸ்டேட் சொத்துக்களை அரசே பறிமுதல் செய்ய வேண்டும் என்ற மையப்பொருள் குறித்து அவை பேசுவதில்லை. அவர்களது வணிக நோக்கத்திற்கு தி.மு.க.விற்கும் அ.தி.மு.க.விற்குமிடையே நடக்கும் முட்டல் – மோதல்களைக் காட்சிப்படுத்தி பரபரப்பூட்டினாலே போதும் என்ற அடிப்படையில்தான் செய்திகளை வெளியிடுகின்றன.

கொடநாடு வழக்கை விசாரிக்கும் தி.மு.க.வின் நோக்கம் என்ன?

கொடநாடு வழக்கில் மறுவிசாரணை மேற்கொள்ளப்படும் என்று தி.மு.க. அரசு அறிவித்ததிலிருந்து எடப்பாடிக்கு உதறல் தாங்கவில்லை. காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப் பெருந்தகை சட்டமன்றத்தில் கொடநாடு விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவருகிறார். கூட்டத்தில் இருந்த எடப்பாடி, ‘‘நீதிமன்றத்திலிருக்கும் வழக்கைப் பற்றி சட்டமன்றத்தில் பேசுவது சட்ட விரோதம்’’ என்று அலறியவாறு தன் சகாக்களுடன் அவையை விட்டு வெளியே சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார். ‘‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதை என்பதை நிரூபித்துவிட்டு அவையை விட்டு வெளியேறியிருக்கிறார் எடப்பாடி’’ என்று ஏளனம் செய்தார், முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இவற்றை கவனிக்கும் நமக்கு, தி.மு.க. உண்மையிலேயே கொடநாடு குற்றவாளிகளை பிடிப்பதில் ஆர்வம் காட்டுகிறது என்று தோன்றலாம். ஆனால், தி.மு.க.வின் நோக்கம் அதுவல்ல. தி.மு.க.அணுகும் முறை என்பது இத்தகைய மிரட்டல்களின் மூலம் அரசியல் ஆதாயம் தேடுவதுதான்.

அரசுத் துறைகளில் டெண்டர் முறைகேடு, ஊழல், நிர்வாக சீர்கேடு − என கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் மீது குற்றச்சாட்டுகளை அடுக்குவதை தி.மு.க. ஆட்சி அமைந்ததிலிருந்து அன்றாடம் நாம் செய்திகளில் பார்க்கிறோம். இந்த முறைகேடுகளால் அரசுக்கு இத்தனை கோடி நட்டம் ஏற்பட்டிருக்கிறது என்று புள்ளிவிவரங்களை அடுக்குவதையும் பார்த்து வருகிறோம். முன்னாள் அமைச்சர்கள் விஜய பாஸ்கர், வேலுமணி, கே.சி.வீரமணி − என பல்வேறு பிரமுகர்களின் வீடுகளில் சோதனைகள் நடத்தப்படுவதையும் பார்க்கிறோம். ஆனால், எந்த அ.தி.மு.க. அமைச்சர் மீதாவது வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்களா என்றால், ஒருவரும் கிடையாது.

எதிர்க்கட்சியாக இருந்தபோது அ.தி.மு.க. அமைச்சர்கள் எந்தெந்தத் துறைகளிலெல்லாம் ஊழல் செய்தார்கள் என பட்டியல் தயாரித்து, அதன் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி தமிழக ஆளுநரிடம் தி.மு.க. மனு கொடுத்தது. இப்போது தி.மு.க.தானே ஆட்சியதிகாரத்தில் இருக்கிறது. எத்தனை அமைச்சர்கள் மீது அந்த ஊழல் பட்டியலிலுள்ள ஆதாரத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தார்கள்?

தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்கும்போது அ.தி.மு.க.வில் இருந்த செந்தில் பாலாஜியை இலஞ்சம் வாங்கிய வழக்கில் சிக்க வைத்ததே தி.மு.க.வினர்தான். அதே செந்தில் பாலாஜி தி.மு.க.வில் சேர்ந்த பின்னர், அவர் உத்தமராகிவிட்டார். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அவர் மீது இலஞ்சம் வாங்கியதாக இருந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்படுகிறார். இதுதான் தி.மு.க.வின் யோக்கியதை.

சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. பெரும்பான்மையாக வென்றாலும், மேற்கு மண்டலங்களில் ஆதிக்க சாதியினரின் ஓட்டுக்களைப் பெற்று அ.தி.மு.க.தான் வெற்றியைக் குவித்தது. அப்பகுதியிலிருக்கும் அ.தி.மு.க. பிரமுகர்கள் தி.மு.க.விற்கு வந்தால் தி.மு.க.வின் செல்வாக்கு மண்டலம் விரிவடையும், கட்சி வலுப்படும் என தி.மு.க. கணக்கு போடுகிறது. அ.தி.மு.க.வில் அமைச்சராக இருந்த தோப்பு வெங்கடாச்சலம் தி.மு.க.வில் இணைந்ததும் ‘‘ஈரோடு மாவட்டத்தை தி.மு.க.வின் கோட்டையாக்குவேன்’’ என சூளுரைத்ததை நாம் மறந்துவிட முடியாது. இதுதான் தி.மு.க.வின் நோக்கமே ஒழிய, உண்மையிலேயே கொடநாடு விவகாரம் உள்ளிட்ட எந்தவொரு ஊழல்−கொள்ளையிலும் அ.தி.மு.க.வினரை சட்டத்தின்முன் நிறுத்தித் தண்டிக்க வேண்டும் என்பது தி.மு.க.வின் நோக்கம் அல்ல.

கொடநாடு உள்ளிட்டு ஜெயா−சசி கும்பலின் சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்வோம்!

ஜெயா−சசி சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா கொடுத்த தீர்ப்பில் முக்கியமான அம்சம் என்னவெனில், ஜெயா − சசியின் ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்து அரசுடைமை ஆக்க வேண்டும் என்பதாகும். இத்தீர்ப்பு வழங்கப்பட்டு நான்காண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை இந்த கொள்ளை கும்பலின் எந்தவொரு சொத்தும் பறிமுதல் செய்யப்படவில்லை. இப்போது தி.மு.க. தானே ஆட்சியில் இருக்கிறது? ஏன் இச்சொத்துக்களைப் பறிமுதல் செய்யவில்லை?

படிக்க :

♦ ஆவணப்படம் : “உப்பிட்டவரை…” | ம.க.இ.க.

♦ டாஸ்மாக்கை மூடிடு !! || மக்கள் அதிகாரம் பாடல் || வீடியோ

போலீசார் அளவில் விசாரித்து முடிக்க வேண்டிய கொடநாடு கொலை−கொள்ளை வழக்கைப் பற்றி சட்டமன்றத்தில் விவாதப் பொருளாக்கும் தி.மு.க., தமிழக அரசு கொள்ளையடிக்கப்பட்ட அச்சொத்துக்களை பறிமுதல் செய்வது பற்றி பேச மறுப்பது ஏன்? தமிழ்நாடே திவால் என்று வெள்ளையறிக்கை வெளியிட்டு மக்கள் மீது வரிகளையும் கட்டணங்களையும் உயர்த்த எத்தனிக்கும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பலநூறு கோடி மதிப்புள்ள ஜெயா−சசி கும்பலின் சொத்துக்களை பறிமுதல் செய்து நெருக்கடியை தணிக்கலாமே !

ஓட்டு அரசியலில் எதிரெதிராக இருப்பதாக காட்டிக் கொண்டாலும் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இவ்விரு பிழைப்புவாதக் கட்சிகளும் ஊழலில் ஒருவருக்கொருவர் அனுசரித்துப் போகிறார்கள் என்பதே உண்மை. அரசியலில் நிரந்தர எதிரியுமில்லை, நண்பர்களும் இல்லை என்று தமது பிழைப்புவாத – பொறுக்கி அரசியலுக்கு நியாயம் கற்பித்தவர்கள்தான் இவர்கள். ஏனெனில், நாளை புதிய செந்தில் பாலாஜிகளும் தோப்பு வெங்கடாச்சலங்களும் உருவாகலாமல்லவா?

தமிழக மக்களின் சொத்தைக் கொள்ளையடித்த ஜெயா−சசி கும்பலின் ஊழல் சொத்துக்களை தி.மு.க. அரசு பறிமுதல் செய்யாது; அது நம் சொத்து. உழைக்கும் மக்களாகிய நாம்தான் அதைப் பறிமுதல் செய்ய வேண்டும்.

தமிழகத்தையே சூறையாடி ஜெயா−சசி கும்பல் சொத்து சேர்த்த தொடக்க காலத்திலேயே, 1996−இல் ம.க.இ.க. மற்றும் அதன் தோழமை அமைப்புகள் ‘‘ஜெயா−சசி கும்பல் கொள்ளையடித்த சொத்துக்களை பறிமுதல் செய்!’’ என்ற முழக்கத்தை முன்வைத்து, சசிகலாவிற்குச் சொந்தமான வினோதகன் மருத்துவமனையைக் கைப்பற்றி மக்களுடைமையாக்கும் போராட்டத்தை மேற்கொண்டன.

தமிழமெங்கும் அப்போராட்டம், மக்களிடம் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியது. மக்களை அணிதிரட்டி அத்தகைய போராட்டங்களைக் கட்டியெழுப்புவதுதான் நாம் இப்போது செய்யவேண்டிய பணி!

புதிய ஜனநாயகம்

வெண்பா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க