சர்வதேச அளவில் வெள்ளைத் தங்கம் என அழைக்கும் அளவிற்கு உப்பு ஓர் முக்கியமான வர்த்தகப்பொருள். உலக அளவில் அதிக உப்பு ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. குறிப்பாக, உள்நாட்டில் குஜராத்திற்கு அடுத்து தமிழகம் தான் உப்பு உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் இருக்கின்றது.
உப்பு இல்லாத பண்டம் குப்பையிலே என்ற சொல்லாடல் நமது வாழ்வில் உப்பின் முக்கியத்துவத்தை எடுத்தியம்புகிறது. அவ்வளவு முக்கியமான உப்பு கடலில் இருந்து பூத்துக் குவிவதில்லை. கடல்நீரை பக்குவமாக பாத்திகளில் அமைத்து உப்பு பூக்கச் செய்யும் கடினமான பணியில், பல நூறு தொழிலாளர்களின் உயிரை உருக்கியே உருவாக்கப்படுகிறது.
இந்த உப்பளத் தொழிலாளர்கள் இன்னும் கூலி உயர்வுக்காகவும், பணி நிரந்தர கோரிக்கைக்காகவும் போராடி வருகின்றனர். அவர்களின் உடல்நலம் பற்றி கவலைக் கொள்ளாத அரசு, உப்பளத் தொழிலை தரகு முதலாளிகள் மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்து கொடுத்து கொள்கை லாபம் ஈட்டச் செய்கிறது.
தூத்துக்குடி மாவட்ட உப்பளத் தொழிலாளர்களின் மீதான உழைப்புச் சுரண்டல், அவர்களது உடல்நல பாதிப்புகள், வாழ்நிலைமை, கொடும் வறுமை உள்ளிட்ட நம் உப்பிற்காக உறிந்தெடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை படம்பிடித்துக் காட்டுகிறது “உப்பிட்டவரை…” – ம.க.இ.க-வின் ஆவணப்படம்.