கடந்த மூன்று நாட்களாக நடந்து வரும் வருமான வரித்துறை சோதனைகளில் பிடிபட்ட பணம், நகை மற்றும் ஆவணங்கள் என பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகள் மலைக்க வைக்கின்றன. எடப்பாடி பழனிச்சாமியின் கட்டுப்பாட்டில் இருக்கும் நெடுஞ்சாலைத் துறையின் சாலைக் கட்டுமான ஒப்பந்தங்களை எடுத்து செய்யும் நிறுவனம் எஸ்.பி.கே. இந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த செய்யாதுரை மற்றும் அவரது மகன் நாகராஜ். எஸ்.பி.கே நிறுவனத்திற்கு தொடர்புடைய 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது. அதில் 170 கோடி ரூபாய் ரொக்கப் பணமும், 105 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக பத்திரிகைச் செய்திகளின் மூலம் தெரியவருகிறது. இவையனைத்தும் கணக்கில் வராத கருப்புப் பணம்.
சோதனைகளில் பிடிபட்ட பணம் தவிர கொடுக்கல் வாங்கல் விவரங்கள் அடங்கிய டைரி, HARD DISK போன்ற ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. நிறுவனத்தின் உரிமையாளர் செய்யாதுரை வீட்டில் 24 லட்சம் ரூபாய் மட்டுமே பணம் இருந்ததாகவும், மற்றவை எல்லாம் அவரது நிறுவன ஊழியர்களின் வீடுகள் மற்றும் 2 சொகுசு கார்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருப்பு பணத்தை சேர்த்தது குறித்து வருமான வரித்துறையிடம் செய்யாதுரை விளக்கியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்படி, ஊழியர்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பதாக கணக்கு காண்பித்ததாகவும், தணிக்கையாளர் மற்றும் நகை கடைக்காரர்கள் மூலம் கருப்பு பணத்தை தங்கமாக மாற்றியதாகவும் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஓரிரு ஆண்டுகளில் நடந்த வருமான வரித்துறை சோதனைகளின் மூலம் திடீர் ‘புகழ்’ பெற்ற பெயர்களான சேகர் ரெட்டி, கிறிஸ்டி, வரிசையில் சேர்ந்துள்ள செய்யாதுரை – நாகராஜ் ஆகியோர் முந்தையவர்களைப் போலவே அதற்கு முன் பொதுவெளியில் அதிகம் அறியப்படாதவர்கள். யார் இந்த செய்யாதுரை?
மிகக் குறுகிய காலத்திலேயே பல கோடி ரூபாய் அளவுக்கு கருப்புப் பணத்தை சுருட்டியுள்ள செய்யாதுரை ஒரு கைநாட்டுப் பேர்வழி என்கிறது ஒரு செய்திக் குறிப்பு. சில ஆண்டுகளுக்கு முன் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆட்டுத் தோல் வியாபரம் செய்தவர். ஆட்டுத் தோல் வியாபாரத்துடன் அதிமுகவிலும் உறுப்பினராகி கமுதி ஒன்றிய செயலாளர் பொறுப்பை வாங்கியுள்ளார். அதன்பின் சிறிய அளவில் கிராம சாலைகள், பழுதடைந்த சாலைகள் என ஒப்பந்தம் எடுக்க ஆரம்பித்தார். பின்னர் தன்னுடைய நண்பர் ராமகிருஷ்ணன் என்பவரோடு சேர்ந்து ”எஸ்.ஆர். அன் கோ” என்ற பெயரில் சிறு சிறு வேலைகளை கான்ட்ராக்ட் எடுத்துச் செய்துவந்திருக்கிறார்.
எடப்பாடி பழனிச்சாமி நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற சமயத்தில் செய்யாதுரையின் மகன் நாகராஜ் கட்டுமானப் பொறியியலில் பட்டம் பெற்று முடித்துள்ளார். இதற்கிடையே சசிகலா குடும்பத் தொடர்புகளின் மூலம் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் செய்யாதுரைக்கு அறிமுகம் கிடைத்துள்ளது. இன்றைய நிலையில் தந்தையும் மகனுமாகச் சேர்ந்து ”எஸ்பிகே ஸ்பின்னர்ஸ்”, ”ஸ்ரீ பாலாஜி டோல்வே மதுரை லிமிட்டெட்” மற்றும் ”எஸ்பிகே அண்ட் கோ எக்ஸ்பிரஸ்வே” ஆகிய நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்.
இதில் ஸ்ரீ பாலாஜி டோல்வே எனும் நிறுவனத்தில் சேகர் ரெட்டியும் (ஓ.பி.எஸ் புகழ்) சுப்பிரமணியம் பழனிச்சாமி என்பவரும் பங்குதாரர்களாக உள்ளனர். இயக்குநர்களாக சுப்பிரமணியமும் நாகராஜன் மற்றும் செய்யாதுரையும் உள்ளனர். இந்த சுப்பிரமணியம் என்பவர் வேறு யாரும் அல்ல எடப்பாடி பழனிச்சாமியின் நேரடி சம்பந்தி; எடப்பாடியின் மகளுடைய மாமனார். மேற்படி ஸ்ரீ பாலாஜி டோல்வே நெடுஞ்சாலைத் துறையின் ஏராளமான காண்டிராக்டுகளை எடுத்துச் செய்து வருவதாக அம்பலப்படுத்தியுள்ளார் அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன்
”ஸ்ரீ பாலாஜி டோல்வேஸ் நிறுவனம்”, சேகர் ரெட்டி, சுப்ரமணியம் பழனிச்சாமி மற்றும் நாகராஜன் செய்யாதுரை ஆகியோரால் பத்து லட்சம் முதலீட்டில், பிப்ரவரி 26, 2016-ம் ஆண்டு துவங்கப்பட்டது. துவங்கிய பத்து மாதத்தில் சேகர் ரெட்டி இந்நிறுவனத்திலிருந்து வெளியேறுகிறார். ஜெயலலிதா மறைவிற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, அதாவது டிசம்பர் 2, 2016-ம் தேதி சேகர் ரெட்டி இயக்குனர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்கிறார். அவர் வசம் இருந்த 34% பங்குகள் கூடுதலாக நாகராஜன் வசம் வருகிறது. 2016-ம் ஆண்டு இந்நிறுவனத்திற்கு எந்த வருவாயும் இல்லை.
2017 – ஆம் ஆண்டு இந்நிறுவனம் ரூ. 60,353 லாபம் ஈட்டுகிறது. அதுவும் வங்கி டெபாசிட் மூலம் கிடைக்கப்பெறுகிறது. பிப்ரவரி 23, 2018 அன்று இந்நிறுவனத்தில் 52.25 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படுகிறது. இந்நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு 52.35 கோடி ஆனால் நாகராஜன் தொடர்புடைய இடங்களிருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்திருப்பதோ 170 கோடி ரொக்கம் மற்றும் 105 கிலோ தங்க கட்டிகள். எனில் மிக குறுகிய காலகட்டத்திலேயே இந்தளவுக்கான கருப்புப் பணத்தைக் குவித்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது.
எப்படி சுருட்டப்பட்டது இந்தளவுக்கான கருப்புப் பணம்? ”எஸ்பிகே நிறுவனம்” நேரடியாக சில ஒப்பந்தங்களை எடுத்துள்ளதோடு தனது துணை நிறுவனங்கள் எடுக்கும் ஒப்பந்தங்களை சப்காண்டிராக்டாக எடுத்து செய்துள்ளது; அதே போல் தான் எடுக்கும் காண்டிராக்டுகளை சப்காண்டிராக்டுகளாக தனது துணை நிறுவனங்களுக்கு அளித்துள்ளது. இந்த வகையில் 407 கோடி ரூபாய் மதிப்புள்ள செங்கோட்டை – கொல்லம் சாலை ஒப்பந்தப் பணி, 200 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுரை சுற்று வட்டாரச் சாலை ஒப்பந்தப் பணி, வண்டலூர் முதல் வாலாஜா ரோடு வரை 200 கோடி ரூபாய் மதிப்பில் நான்கு வழிச்சாலையை ஆறு வழிச்சாலையாக அமைக்கும் ஒப்பந்தப் பணி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, பொள்ளாச்சி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நெடுஞ்சாலைத் துறையின் 2,000 கோடி மதிப்புள்ள பராமரிப்பு ஒப்பந்தப் பணிகள் என அரசாங்க ஒப்பந்தங்கள் அனைத்தையும் இந்த கும்பல் வென்றுள்ளது.
ஒப்பந்தங்கள் வழங்க வழக்கமாக பின்பற்றப்படும் முறைகளையும் மீறி ‘சிங்கிள் டெண்டர்’ முறையில் கூட வேலைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சுமார் 2,800 கோடி ரூபாய்க்கும் அதிகமான ஒப்பந்தங்களை நெடுஞ்சாலைத் துறையில் மட்டும் தனக்கு வேண்டியவர்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது இந்த அரசு. எனவேதான் லோக் ஆயுக்தா சட்டத்தின் அடிப்படையில் ஒப்பந்ததாரர்களுக்கு விலக்கு அளிக்கும் சிறப்பு பிரிவு ஒன்றை இணைத்து சட்டமன்ற எதிர்கட்சியான திமுகவின் எதிர்ப்பையும் மீறி அந்தச் சட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ளது என்கிறார் முக ஸ்டாலின்.
0o0o0o0
கடந்த ஓரிரு ஆண்டுகளில் தமிழகத்தில் நடந்த சோதனைகளின் பட்டியல் மிக நீளமானது. கரூர் அன்புநாதன், சேகர் ரெட்டி, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன், டி.டி.வி தினகரன், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ், கொடநாடு மற்றும் போயஸ் இல்லம் என நடந்துள்ள சோதனைகளின் பட்டியலில் சமீபத்திய வரவாக இணைந்துள்ளது கிறிஸ்டி நிறுவனம் மற்றும் எஸ்பிகே நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் நடந்துள்ள வருமான வரித்துறை சோதனைகள்.
மேலே பட்டியலிடப்பட்டுள்ள சோதனைகள் தவிர கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது கண்டெய்னர்களில் கடத்தப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய்களையும் சேர்த்துக் கொள்ளலாம். அனைத்துக்கும் மேலாக வரலாற்றிலேயே இல்லாத வகையில் தமிழக தலைமைச் செயலாளரின் அலுவலகத்திலேயே சோதனை மேற்கொள்ளப்பட்டது. துணை ராணுவப் படையை தலைமைச் செயலகத்தைச் சுற்றிலும் பாதுகாப்புக்கு நிறுத்தி, தலைமைச் செயலாளர் ராமமோகன்ராவின் அறையில் நடத்தப்பட்ட சோதனையில் பணமும் தங்கமும் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால், நாளைய தேதி வரை இந்தச் சோதனைகளின் மேலோ அதன் மூலம் பிடிபட்ட கருப்புப் பணத்தை மீட்கவோ எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தோ எந்த தகவலும் இல்லை. இந்தச் சோதனைகள் அனைத்துமே ஆளும் எடப்பாடி – பன்னீர் கும்பலை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க, மோடியால் மேற்கொள்ளப்படுபவை என்கின்றன தமிழக எதிர்கட்சிகள்.
இவ்வாறான சோதனைகளைத் தொடர்ந்து அதுவரை தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்து வந்த மத்திய அரசின் நீட், உதய் உள்ளிட்ட திட்டங்களை தமிழக அரசு ஆதரிக்கத் துவங்கியது குறிப்பிடத் தக்கது. தற்போதும் தமிழக பாரதிய ஜனதா போராடும் மக்களில் எந்தப் பிரிவினரை நோக்கி விரல் நீட்டுகிறதோ அந்த திசை நோக்கி தமிழக போலீசாரின் துப்பாக்கிகள் நீளுகின்றன. ஆக மத்திய அரசைப் பொறுத்தவரை தனது கையில் உள்ள சிபிஐ வருமான வரித்துறை, வருவாய்ப் புலனாய்வுத் துறை உள்ளிட்ட அமைப்புகளைக் கொண்டு தமிழகத்தின் ஆளும்கட்சியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவே இந்த ‘சோதனை’ நாடகங்கள் நடத்தப்படுகின்றன என்று எதிர்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டில் பொருள் இல்லாமல் இல்லை.
தனக்கு எதிராக வருமான வரித்துறை மேற்கொண்ட நடவடிக்கையில் இருந்து தப்பிக்கவே அதிமுக என்கிற கட்சியை எம்.ஜி.ஆர் துவங்கியது வரலாறு. சோதனையால் பிறந்த கட்சியை அரை நூற்றாண்டுகள் கழித்து சோதனைகளின் மூலமே ஆட்டிப்படைத்து வருகிறது பாஜக. இதைத் தவிர தமிழகத்தில் தங்களது செல்வாக்கை நிலைநாட்ட அந்தக் கட்சிக்கும் வேறு வழியில்லை எனும் நிலையில் தமிழர்களின் தலையெழுத்தை நொந்து கொள்வதைத் தவிற இந்த ஆட்சியமைப்புக்குள் மக்களுக்கு வேறென்ன வழியிருக்கிறது?
- சாக்கியன்