ஐ.டி. ரெய்டு : கல்கி பகவானின் குடுமி பாஜகவின் கையில் !

ஜெயா போன்ற ஒரு பக்திமானே, சங்கராச்சாரியை களிதின்ன வைத்த கலியுகத்தில் கல்கி பகவானெல்லாம் மோடிஜிக்கு ஜுஜுபி தானே!

0

ல்கி பகவான் – அம்மா பகவான் குறித்துக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா?  கேள்விப்படாதவர்கள் குறைவுதான்! தமிழகத்தில் பகவான்களுக்கா பஞ்சம்? நேற்றும் (16-10-2019), இன்றும் (17-10-2019) அந்தப் பகவான்களின் ஆசிரமங்களில் வருமானவரிச் சோதனைகள் நடைபெற்றிருகின்றன. என்ன இது பகவான்களுக்கே வந்த சோதனை என்கிறீர்களா? என்ன செய்வது? கலியுகத்தில் கல்கியாவது? பகவானாவது?

முதலில் இந்த கல்கி பகவானின் வரலாற்றைக் கொஞ்சம் பார்த்துவிட்டு, பின்னர் இந்த ‘ரைடு’ வரலாற்றைப் பார்க்கலாம். சென்னையில் வசித்து வந்த விஜயகுமார் எனும் சாதாரண எல்.ஐ.சி. ஏஜெண்ட், கடந்த 1989-ம் ஆண்டில் திடீரென ஒருநாள், “நான்தான் பகவான் விஷ்ணுவின் கல்கி அவதாரம்” என்று தன்னைத்தானே அவதார புருஷனாக அறிவித்துக் கொண்டார். சென்னை பூந்தமல்லி அருகே நேமத்தில் சிறிய அளவில் ஒரு ஆசிரமத்தைத் தொடங்கிய விஜயகுமார் என்ற ”கல்கி பகவானின்” புகழ் நாளடைவில் தமிழகம் முழுவதும் பரவியது. அது மட்டுமல்லாமல், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் அவரது புகழ் பரவியது.

பிராடு கல்கி பகவான் குடும்பம்.

விளைவாக குறுகிய காலத்திலேயே இம்மூன்று மாநிலங்களிலும் ஆசிரமங்களையும், ஆசிரமங்களின் பெயரில் சொத்துக்களையும் வாங்கிக் குவித்தார். தியான பிசினஸை டெவலப் செய்ய தனது மனைவியையும் அம்மா பகவானாக அறிவித்து கல்லா கட்டினார்.

ஆந்திராவில் உள்ள வரதய்ய பாளையத்தில் தனது ஆசிரமத்தின் தலைமை நிலையத்தை பலநூறு ஏக்கர் பரப்பளவில் கட்டியுள்ளார். தற்போது அந்த ஆசிரமம் முழுக்க அவரது புத்திரனான, கிருஷ்ணாஜி மற்றும் மருமகள் பித்ராஜியின் கைகளில் இருக்கிறது.

ஆசிரமங்கள் என்றாலே சர்ச்சையில்லாமல் இருக்குமா? பிரேமானந்தா தொடங்கி லேட்டஸ்ட் நித்தியானந்தா வரை சர்ச்சை இல்லாத ஆசிரமங்கள் ஏது? கல்கி பகவானின் ஆசிரமமும் அதற்கு விதிவிலக்கல்ல.

பணம் பெருத்த பக்தர்களுக்கு ஆசிரம உணவில் தொடர்ச்சியாக போதை வஸ்துகள் கலந்து கொடுக்கப்பட்டு அவர்கள் மனநிலை பிறழ்ந்த சூழலில் அங்கு ஆடுவது போன்ற பல்வேறு வீடியோக்கள் ஏற்கெனவே வெளிவந்துள்ளன. அங்கு பல பேர் அடிமைகளாக சிக்கியுள்ளனர் என்றும் பல ஆதாரங்கள் வெளிவந்தன. ஆனால், அவை அனைத்தும் சிறிதுகாலம் பேசப்பட்டு அப்படியே மாயமாக மறைந்துவிட்டன. அந்த அளவிற்கு செல்வாக்கு கொண்டவர் நமது கல்கி பகவான்.

ஊரான் நிலத்தை வளைத்து வளர்த்த ஆசிரம சொத்தில் அரண்மனை போன்ற ஆஸ்ரமம்.

அதுமட்டுமல்ல, ஆந்திராவில் ஏழை மக்களுக்கு ஒதுக்கப்பட்ட பல நூறு ஏக்கர் நிலத்தையும், வனத்துறை நிலத்தையும் ‘ஆட்டையைப்’ போட்டு ஆசிரமத்தின் பெயரில் முழுங்கியது தொடர்பான பல்வேறு வழக்குகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன.

ஆசிரமத்தின் மூலம் கிடைக்கும் வெளிநாட்டு ‘பக்தாள்களின்’ தொடர்புகள் மூலம் கல்கி பகவானின் மகன் கிருஷ்ணாஜி கர்நாடகாவில் ரியல் எஸ்டேட்  நிறுவனங்கள், சென்னையில் பல தனியார் நிறுவனங்களில் பங்கு முதலீடு என பல்வேறு தொழில்களைத் தொடங்கியுள்ளார்.

இந்த நிறுவனங்களின் மூலம் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றத்தில் பல கோடி முறைகேடு நடந்திருப்பதாகவும், பலநூறு கோடி சொத்துக்கள் வருமான வரித்துறையை ஏமாற்றி சேர்த்திருப்பதாகவும் கூறி, நேற்றும் இன்றும் கல்கி பகவானின் ஆசிரமங்களிலும், அவரது மகனின் நிறுவனங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளது.

தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருக்கும் 40 ஆசிரமக் கிளைகளில் ஒரே நேரத்தில் வருமானவரித்துறை சோதனையை மேற்கொண்டுள்ளது. கணக்கில் காட்டாத சில நூறு கோடி ரூபாய் சொத்துக்களுக்கான ஆவணங்களும், சில கோடி ரூபாய்கள் கணக்கில் காட்டாத பணமாக சிக்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மீத விவரங்கள் முழுமையாக சோதனை முடிந்த பின்னர்தான் தெரியவருமாம்.

சேகர் ரெட்டியுடன், பா.ஜ.க.வால் முட்டுக் கொடுக்கப்படும் உத்தமர் ஓ.பி.எஸ். (கோப்புப் படம்)

இதற்கு முன்னர் தமிழகத்தில் சேகர் ரெட்டி, ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., விஜய பாஸ்கர் என பல பெரும்புள்ளிகள் வீட்டிலும் நடத்தப்பட்ட வருமான வரி சோதனைகள் குறித்து இதைவிட சுவாரசியமான பல விவரங்கள் நமக்கு ஏற்கெனவே தெரிய வந்திருக்கின்றன.

ஆனால், சேகர் ரெட்டி புதிய 2000 ரூபாய் நோட்டை வெள்ளைப் பணமாகத்தான் வைத்திருந்தார் என்று ‘நிறுவி’ வருமான வரித்துறை அந்த பிரச்சினையை முடித்துக் கொண்டது ஊருக்கே தெரியும். விஜயபாஸ்கர், ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் வீட்டு ரெய்டு கதைகள் எதுவும் இதற்கு விதிவிலக்கல்ல. அனைத்தும் ஊத்தி மூடப்பட்டன அல்லது மறக்கடிக்கப்பட்டன.

ஸ்ரீஸ்ரீ முதல் ஜக்கி வரை கார்ப்பரேட் சாமியார்கள் அனைவரும் ஆளும் பாஜக-வின் புகழைப் பாடி, பாஜகவின் ஆதரவோடு தங்களது சாம்ராஜ்ஜியங்களை விரிவடையச் செய்துவரும் சூழலில், கல்கி பகவானின் ஆசிரமங்களில் நடத்தப்பட்டிருக்கும் வருமானவரிச் சோதனைகள் கவனிக்கத்தக்கவை.

படிக்க:
ஆன்மீகக் கிரிமினல்கள் ! அச்சுநூல்
கார்ப்பரேட் சாமியார்கள் : இந்துத்துவத்தின் புரோக்கர்கள் !

மோடி 1.0 ஆட்சியிலிருந்தே வருமானவரித்துறை சோதனைகளில் உள்ள பொதுவான அம்சம் ஒன்றே ஒன்றுதான். பாஜகவின் கைகளில் சம்பந்தப்பட்டவர்களின் குடுமியைப் பிடித்துக் கொடுப்பது மட்டுமே அவற்றின் நோக்கம் ஆகும். அந்த வகையில், இந்த சோதனைகளும் கல்கி பகவானின் குடுமியை பாஜகவின் கைகளில் கொடுப்பதற்காகத்தான் என்பதை இனி நடக்கவிருக்கும் சம்பவங்கள் எடுத்துக் கூறலாம்.

இந்துத்துவ கருத்தாக்கம் கொண்ட மோடி அரசு, ஒரு சாமியாருக்குக் குடைச்சல் கொடுக்குமா என வாசகர்கள் யோசிக்கலாம். ஜெயா போன்ற ஒரு பக்திமானே, சங்கராச்சாரியை களி தின்ன வைத்த கலியுகத்தில் கல்கி பகவானெல்லாம் மோடிஜிக்கு ஜுஜுபி தானே!


நந்தன்
நன்றி : (தினகரன் – அக்டோபர் 17, 2019)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க