Wednesday, December 11, 2024
முகப்புகட்சிகள்அ.தி.மு.கஜெயா எப்படிச் செத்தால் நமக்கென்ன ?

ஜெயா எப்படிச் செத்தால் நமக்கென்ன ?

-

ஜெயலலிதா எப்படிச் செத்திருந்தால் நமக்கென்ன? “ஜெயலலிதா இயல்பாகவே நோய்வாய்ப்பட்டு இறக்கவில்லை, சசிகலா கும்பல் சதி செய்து கொன்று விட்டது” என்று நிரூபிப்பதன் மூலம் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாகத் தன்னை காட்டிக் கொள்வதும், கட்சிக்கும் இரட்டை இலை சின்னத்துக்கும் வாரிசுரிமை கொண்டாடுவதுமே பன்னீர்செல்வம் கும்பலின் நோக்கம்.

இதனுடன் இசைந்து போகின்ற வேறொரு நோக்கம் ஆளும் வர்க்கத்துக்கு, குறிப்பாக சங்க பரிவாரத்துக்கு இருக்கிறது. ஜல்லிக்கட்டு போராட்டம் முதல் தற்போதைய நெடுவாசல் மற்றும் மீனவர் போராட்டம் வரையிலான அனைத்திலும், தமிழகத்தின் பல்வேறு தரப்பு மக்களும் காட்டும் ஈடுபாடும் போர்க்குணமும் இவர்களைக் கவலைகொள்ள வைத்திருக்கின்றன.  எச்.ராசா, பொன்னார், இல.கணேசன் போன்றோரின் சமீபத்திய குமுறல்களைக் கவனிப்பவர்கள் இதனைப் புரிந்து கொள்ள இயலும். மக்களிடம் அரும்பியிருக்கும் சுயமரியாதையையும் போர்க்குணத்தையும் கருக்கி, “கருணையே வடிவான அம்மாவுக்கு நேர்ந்து விட்ட பரிதாபத்துக்குரிய மரணம் பற்றிப் பிலாக்கணம் வைக்கும் அடிமைகளாக” எப்பாடுபட்டேனும் தமிழ் மக்களை மாற்றிவிட வேண்டுமென எல்லா ஆளும் வர்க்கக் கும்பல்களும் தவிக்கின்றன.

காவிரி மறுக்கப்பட்டதால் மரணத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் தஞ்சை விவசாயிகள். விவசாயிகளின் தற்கொலை அன்றாட நிகழ்வாகி வருகிறது. “கடலுக்குப் போகும் தண்ணீரை கோக், பெப்சிக்குக் கொடுத்தால் என்ன?” என்று வாதாடும் தமிழக அரசு, நெடுவாசல் போராட்டத்தில் மக்களை ஆதரிப்பது போல நாடகமாடுகிறது. ரேசன் கடைகள் மெல்ல மூடுவிழாவை நோக்கித் தள்ளப்படுகின்றன. நூறுநாள் வேலைத் திட்டக் கூலி பல மாதங்களாக வரவில்லை, முதியோர் ஓய்வூதியம் வரவில்லை. மக்களின் கழுத்தில் கத்தி வைத்துக் கொள்ளையிடுவது போல பெட்ரோலுக்கு அடாவடியாக வாட் வரி விதிக்கிறது அ.தி.மு.க. அரசு. தமிழ்ச் சமூகத்தின் காயத்தில் உப்பைத் தேய்ப்பது போல, மீனவ இளைஞனைச் சுட்டுக் கொல்கிறது சிங்கள இராணுவம்.

ஜெயாவின் சாவுக்கு விளக்கம் கேட்கும் பன்னீர் கும்பல், மேற்கூறிய பிரச்சினைகளுக்கு அளிக்கும் விளக்கம் சசிகலா கும்பல் அளிக்கின்ற அதே விளக்கமாகத்தான் இருக்கும். அ.தி.மு.க. என்பது ஜனநாயகத்தின் வாசனைகூட அண்டாத ஒரு கொள்ளைக் கூட்டம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் வாழ்க்கை மர்மமாகத்தான் இருந்தது. அவர்களுடைய மரணமும் மர்மமாவதில் வியப்பில்லை. எம்.ஜி.யாரை ஜானகி விசம் வைத்துக் கொன்றதாக ஜெயலலிதா குற்றம் சாட்டினார். சசிகலா மீது குற்றம் சாட்டுகிறார் பன்னீர். அப்போலோ மருத்துவமனையில் நடந்த மர்ம நாடகத்தின் பங்காளிகள் இப்போது நியாயம் பேசுகிறார்கள்.

“காவிரிப் பிரச்சினையைக் கையாள்வது குறித்து அதிகாரிகளுக்கு ஜெயலலிதா வழிகாட்டினார்” என்ற செய்தி வெளியானபோது, அந்தச் சந்திப்பின் புகைப்படத்தை வெளியிட்டு மக்களிடையே பரவும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு கருணாநிதி கோரினார். “நாகரிகமற்றவர்” என்று அவரை வசை பாடினர் அ.தி.மு.க. அமைச்சர்கள். “அமைச்சரவையும் முதல்வரும் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள்” என்ற கோணத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போதெல்லாம், அதனைத் திமிர்த்தனமாக அலட்சியம் செய்தவர்கள், இப்போது தங்களது பதவிச் சண்டைக்காக ஜெயலலிதாவின் பிணத்தைத் தோண்டுகிறார்கள்.

அடிமைத்தனத்தின் முடை நாற்றத்தில் தமிழகம் மூச்சுத்திணறியது போதும். ஜெயலலிதா என்பவர் தமிழகத்தின் பொதுச்சொத்தைக் கொள்ளையிட்ட ஒரு கிரிமினல். மரணத்தின் காரணமாக தண்டனையிலிருந்து தப்பிய ஒரு குற்றவாளி. செத்துப்போன குற்றவாளியின் படத்திற்கு முன்னால் கும்பிட்டு விழுகின்ற திருடர்கள் ஒருபுறமும், உயிரோடு சிறையிலிருக்கும் குற்றவாளியின் காலில் விழுகின்ற திருடர்கள் ஒருபுறமும் நின்று லாவணி பாடுகிறார்கள். “தமிழகத்தையே சாவின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தியிருப்பதற்குப் பொறுப்பான ஜெயலலிதா, எப்படிச் செத்திருந்தால் எங்களுக்கென்ன?” என்று நாம் கேள்வி எழுப்பினால்தான் இந்த லாவணி நிற்கும். தமிழகம் சுயமரியாதையுடன் நிமிரும்.

புதிய ஜனநாயகம், மார்ச் 2017

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க