தேசிய பணமாக்கல் திட்டம் : மறுகாலனியாக்கத்தின் உச்சகட்டச் சூறையாடலுக்கான ஏற்பாடு

நாட்டை மறுகாலனியாக்கும் தனியார்மயம் − தாராளமயம் − உலகமயம் என்ற கொள்கையைத் திட்டமிட்டு அமல்படுத்துவதற்காகவே அமைக்கப்பட்ட ‘‘நிதி ஆயோக்’’கின் பரிந்துரைப்படி ஆகஸ்ட் 23−ம் தேதியன்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனால் தேசிய பணமாக்கல் (National Monetisation Pipeline − நேசனல் மானிடைசேஷன் பைப்லைன்) என்ற திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது.

இத்திட்டத்தின் நோக்கம் பற்றிக் கூறுகையில் நாட்டு மக்களின் பொதுச்சொத்துக்களில் உயிராதாரமானவற்றை விற்பதன் மூலம் ஆறு இலட்சம் கோடி ரூபாய் நிதியைத் திரட்டுவதும், அந்தப் பணத்தை ‘தேசத்தின்’ உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்காகச் செலவிடுதன் மூலம் இந்தியாவை வளர்ச்சிப் பாதையை நோக்கி நெட்டித் தள்ளப்போவதாகவும் பா.ஜ.க. அரசு குறிப்பிடுகிறது.

இதன்படி, 26,700 கி.மீ. நீளமுள்ள நெடுஞ்சாலைகள், 90 பயணிகள் தொடர்வண்டிகள், 400 தொடர்வண்டி நிலையங்கள், 741 கி.மீ. நீளமுள்ள தொடர்வண்டி இருப்புப் பாதைகள், 28,608 கி.மீ. நீளமுள்ள மின்பகிர்மான வழித்தடங்கள், 6 ஜிகாவாட்ஸ் மின் உற்பத்தி நிலையங்கள், 25 விமான நிலையங்கள், 40 துறைமுகங்கள், 160 நிலக்கரிச் சுரங்கங்கள், 3,930 கி.மீ. நீளமுள்ள பொதுத்துறை நிறுவனங்களின் பைப் லைன்கள், தில்லி, பெங்களூருவில் உள்ள விளையாட்டரங்கங்கள், 14,197 பொதுத்துறை தொலைபேசி நிறுவன தொலைத்தொடர்புத் கோபுரங்கள், உணவு தானிய சேமிப்புக் கிடங்குகள் ஆகியவற்றை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நான்காண்டுகளில் நான்கு கட்டமாக மொத்தம் 25 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு விடுவதன் மூலம் தேவைப்படும் ஆறு லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டப்படும் என்கிறது, பா.ஜ.க. அரசு.

படிக்க :

நடப்பதோ தேசிய பேரழிவு ; தீர்ப்பை வரலாறு எழுதும் || அருந்ததி ராய்

LIC தனியார்மயம் : சூறையாடப்படவிருக்கும் மக்களின் காப்பீட்டு நிதி!

ஆறு இலட்சம் கோடி ரூபாய் என மோடி அரசு மதிப்பிட்டிருக்கும் இந்த பொதுச் சொத்துக்களின் உண்மை மதிப்பு அதைவிட பல மடங்காகும். இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் பொதுத்துறையின் ‘‘நவரத்தின’’ நிறுவனங்களின் மூலம் மட்டுமே ஆண்டுக்கு ஒன்றரை இலட்சம் கோடி ரூபாய் என 4 ஆண்டுகளில் 6 இலட்சம் கோடி ரூபாயை ஈட்ட முடியும் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார். இதன் மூலம் மோடி அரசின் வாதத்தில் உள்ள பித்தலாட்டத்தையும், திட்டமிட்டே இலாபகரமான பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ள முடியும்.

அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட்டுகளுக்குத்தான் இந்தச் சொத்துக்கள் அடிமாட்டு விலைக்கு விற்கப்படும் என்பதைத்தான், ‘‘70 ஆண்டுகாலமாக உருவாக்கப்பட்ட பொதுச் சொத்துக்களை ஏழே ஆண்டுகளில் விற்கிறார் மோடி; மோடியின் இந்தத் திட்டம் அவரின் நண்பர்களுக்குத்தான் பயன்படப்போகிறது” என ராகுல் காந்தி குறிப்பிடுகிறார்.

மேலும், ‘‘காங்கிரஸ் ஆட்சிக் காலத்தின்போதே இது போன்ற தனியாமயமாக்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், மோடி செய்யும் தனியார்மயமாக்கம் கோடிக்கணக்கான பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் துறைகளையும் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைசெய்யும் துறைகளையும் தூக்கிக் கொடுக்கிறது” என்கிறார் அவர்.

‘‘தனியார்மயமாக்கத்திற்கு காங்கிரஸ் எதிரானதல்ல” என்ற உண்மையை ஒப்புக்கொள்ளும் ராகுல், நாங்கள் செய்தது ‘சின்ன தனியார்மயம்’; மோடி செய்திருப்பது ‘பெரிய தனியார்மயம்’ என்ற ‘‘அளவு” வேறுபாட்டில் தேசிய பணமாக்கல் திட்டத்தை கொண்டுவந்து நிறுத்துகிறார். ராகுல் மட்டுமல்ல, எதிர்க்கட்சிகளும் எல்லா முதலாளித்துவ ஊடகங்களும் அரசியல் விமர்சகர்களும் தேசிய பணமாக்கல் திட்டத்தை இந்த அளவில்தான் விமர்சிக்கிறார்கள்.

ஆனால், தேசிய பணமாக்கல் என்பது மறுகாலனியாக்கத்தின் உச்சகட்டச் சூறையாடலுக்கான ஏற்பாடு. ஒட்டுமொத்த நாட்டையே கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கேற்ற வகையில் மறுகட்டமைப்பு செய்துவரும் நடவடிக்கையில் இதுவொரு பாய்ச்சலாகும்.

விவசாயிகளை ஒழித்துவிட்டு விவசாயத் துறையை கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கும் புதிய வேளாண் சட்டங்கள், நாட்டின் கடற்கரைகள் அனைத்திலும் துறைமுகங்கள், பூங்காக்கள், சொகுசு விடுதிகள் கட்டிக் கொள்ளவும், மீனவர்களை விரட்டிவிட்டு கடல் வளங்களைக் கொள்ளையடிப்பதற்காகவும் கொண்டுவரப்பட்டுள்ள கடல் மீன்வள மசோதா உள்ளிட்ட சாகர்மாலா திட்டங்கள் ஆகியவற்றை கொண்டு வந்திருக்கிறது ஒன்றிய அரசு.

இந்தச் சட்டங்களோடு கூடுதலாக, கெயில், மீத்தேன் (ஹைட்ரோகார்பன்) உள்ளிட்ட இயற்கை வளங்களைச் சூறையாடும் கனிம வளக் கொள்ளை திட்டங்கள், சூறையாடப்படும் வளங்களை (சரக்குகளை) நாடு முழுவதும் தடையின்றி எடுத்துச் செல்வதற்காக அமைக்கப்படும் எட்டுவழிச்சாலை உள்ளிட்ட பாரத்மாலா திட்டங்கள், காண்டிராக்ட்மயத்தை சட்டப்பூர்வமாக்கி தொழிலாளர்களின் பெயரளவிலான உரிமைகளையும் பறித்து அவர்களை நவீன கொத்தடிமைகளாக்கும் புதிய தொழிலாளர் சட்டங்கள் முதலானவற்றோடு ஒட்டுமொத்த நாட்டையே கார்ப்பரேட் கொள்ளைக்காக மாற்றியமைக்கும் மறுகாலனியாக்க திட்டங்களில் முக்கியமானதொரு மைல்கல்தான் தேசிய பணமாக்கல் திட்டம்.

தேசிய பணமாக்கல் திட்டம் என்றால் என்ன?

தேசிய பணமாக்கல் திட்டம் (National Monetisation Pipeline) என்பது தேசிய உள்கட்டமைப்பு திட்டம் (National Infrastructure Pipeline) என்ற திட்டத்துடன் இணைந்த ஒரு திட்டமாகும். இதைப் பற்றி நிர்மலா சீத்தாராமன் 2021−22 நிதிநிலை அறிக்கையிலேயே குறிப்பிட்டிருந்தார். இவையிரண்டும் இருவேறு வகையான வேலையை மேற்கொள்கின்ற, ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய ‘‘பைப்லைன்” நடவடிக்கைகள்.

‘‘பைப்லைன்” நடவடிக்கையைப் புரிந்துகொள்வதற்கு நாம் இதயத்தின் செயல்முறையை சான்றாக எடுத்துக் கொள்ளலாம். இதயம் வலது, இடது என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இவ்விரண்டு பகுதிகளும் இருவேறு நடவடிக்கைகளைச் செய்கின்றன. இதயத்தின் வலப்பகுதி நம் உடலில் உள்ள ஆக்ஸிஜன் குறைந்துபோன பழைய இரத்தத்தை உள்வாங்கிக் கொண்டு நுரையீரலுக்கு அனுப்புகிறது. நுரையீரலில் இரத்தத்திற்கு ஆக்ஸிஜனேற்றப்படுகிறது. ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்தத்தை இடப்பகுதி உள்வாங்கிக்கொண்டு மீண்டும் உடலுக்குச் செலுத்துகிறது.

இந்த செயல்முறையில் இரண்டும் இரண்டு வேலைகளைச் செய்கின்றன. ஆனால், உடலில் உள்ள இரத்தத்தை ஆக்ஸிஜனேற்றி மீண்டும் உடலுக்கு செலுத்தும் ஒரு முழுமையான செயலின் இரு பகுதிகளைத்தான் தமக்குள் இவை பிரித்துக் கொள்கின்றன. இதேபோலத்தான் கார்ப்பரேட் சூறையாடலுக்காக இந்த நாட்டை மறுகட்டமைப்பு செய்யும் முழுமையான திட்டத்தில் தேசிய பணமாக்கல் திட்டமும் தேசிய உள்கட்டமைப்பு திட்டமும் இணைந்து செயல்படுகின்றன.

தேசிய பணமாக்கல் திட்டத்தின் மூலம் பொதுச் சொத்துக்களை விற்றுத் திரட்டப்படும் பணம் தேசிய உள்கட்டமைப்புத் திட்டத்திற்காக செலவிடப்படவுள்ளது. தேசிய உள்கட்டமைப்புத் திட்டத்தின் மூலம் ஐந்தாண்டுகளில் மூலதனமிடப்பட இருக்கும் தொகை 111 இலட்சம் கோடி ரூபாய் (1,11,00,000 கோடி) ஆகும். இதன்படி பார்த்தால், தற்போது தொடங்கும் இந்த ஆறு இலட்சம் கோடி நிதித் திரட்டல் என்பது தொடக்கம்தான். அடுத்தடுத்த பணமாக்கல் திட்டங்களின் மூலம் முழுமையாக இந்த 111 இலட்சம் கோடியும் திரட்டுவதுதான் மோடி அரசின் திட்டம்.

படிக்க :

உலகமயமாக்கம் : மனிதச் சரக்கின் துயரக் கதை

புதிய ஜனநாயகம் அக்டோபர் 2021 மின்னிதழ் !

மறுகாலனியாக்க சூறையாடலில் புதியதொரு மைல் கல் :

இவ்வளவு பெரிய தொகையை எங்கிருந்து, எப்படித் திரட்டப் போகிறார்கள்? இதற்காக மூன்று அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக நிதிநிலை அறிக்கை 2021−22−ல் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இதில் முதலாவது அவசிய நடவடிக்கை, பணத்தை திரட்டுவதற்கான கட்டமைப்பை உருவாக்குவதுதான். இதற்காக, தேசிய உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கான நிதி அளிப்பை விரைவுப்படுத்தும் வினையூக்கியாக செயல்படும் வகையில் ‘‘மேம்பாட்டு நிதி நிறுவனம்” (Development Finance Institution) ஒன்றை உருவாக்க வேண்டும் எனச் சொல்கிறார்கள்.

அந்தவகையில்தான், கடந்த மார்ச் மாதத்திலேயே ஒரு புதிய வங்கியை உருவாக்குவதற்கான சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த வங்கியின் பெயர், ”உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு நிதியளிப்புக்கான தேசிய வங்கி” (NBFID) ஆகும். இந்த வங்கி ஒரு லட்சம் கோடி ரூபாய் மூலதனத்தில் தொடங்கப்பட இருக்கிறது என்று அறிவித்துள்ளது, மோடி அரசு.

இரண்டாவது அவசிய நடவடிக்கை, சொத்துக்களைப் பணமாக்குதலில் ஒரு உந்துதலை ஏற்படுத்துவது ஆகும். இதன் பொருள், முதலாவது பணமாக்கலின் தொடர்ச்சியாக அடுத்தடுத்த பணமாக்கல் திட்டங்களை அறிவிப்பதுதான். இதை ‘‘நிதி ஆயோக்’’ தனது அறிக்கையில் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறது. மேலே சொன்ன ‘‘உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு நிதியளிப்புகான தேசிய வங்கி” (NBFID) தொடங்கத் தேவைப்படும் தொடக்க மூலதனமான ஒரு லட்சம் கோடி ரூபாய் இதன் மூலம்தான் திரட்டப்பட இருக்கிறது.

இவ்வாறு மிக பிரம்மாண்டமான திட்டத்தோடு திரட்டப்படும் பணத்தை வைத்து ‘தேச வளர்ச்சிக்காக’ உள்கட்டமைப்புகளை உருவாக்கப் போவதாகச் சொல்கிறார்கள். 70 ஆண்டுகாலமாக ஏற்கெனவே உருவாக்கி வைத்திருக்கும் உள்கட்டமைப்புகளை அழித்துவிட்டு, வேறெந்த உள்கட்டமைப்புகளுக்கு செலவு செய்யப் போகிறார்கள் என்ற கேள்வி எழலாம்.

சாகர்மாலா, பாரத்மாலா, ஸ்மார்ட் சிட்டி, கெயில், மீத்தேன் எடுப்பு, புதிய ஆலைகளைத் தொடங்குவதற்கு கார்ப்பரேட்டுகளுக்கு தரப்படும் தொழில் கடன் போன்றவைதான் அதற்கான பதில். அதாவது, கார்ப்பரேட் சூறையாடலுக்கான வசதிகளைச் செய்துதரும் வகையிலான உள்கட்டமைப்புகள்தான் ‘தேச வளர்ச்சிக்கான’ உள்கட்டமைப்புகள். இதுதான் மோடி சொல்லும் ‘‘புதிய இந்தியா”.

இறுதியாக சொல்லப்படும் மூன்றாவது அவசிய நடவடிக்கை என்னவெனில், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் வரவு−செலவுத் திட்டங்களில் மூலதனச் செலவின் பங்கை அதிகரித்தல். அதாவது, வரவு−செலவு திட்டத்தின் பெரும் பகுதி நிதியை ராட்சத கார்ப்பரேட் கம்பெனிகள் ‘தொழில்’ தொடங்க ஒதுக்கப்பட வேண்டும் என்பதாகும். அந்தவகையில், இனி நிதிநிலை அறிக்கைகளின் பரிமாணம் முற்றிலுமாக மாற்றப்பட்டுவிடும்.

இனி, நிதிநிலை அறிக்கைகளில் மக்கள் நலத் திட்டங்களுக்கு அரசு செய்யவேண்டிய பணிகள் குறித்து எதுவும் இருக்காது. கார்ப்பரேட்டுகளுக்கான வரவு−செலவுத் திட்டங்களைப் பற்றிப் பேசுவதும், அவர்களுக்கு நாட்டின் சொத்தையும் மக்கள் பணத்தையும் வாரிக் கொடுப்பது மட்டுமே நிதிநிலை அறிக்கைகளின் சாரம்சமாகப் போகிறது. இதுதான் மோடியின் புதிய இந்தியாவிற்கான ‘‘ஆத்ம நிர்பார்” நிதிநிலை அறிக்கை.

இதுவொரு மறுகாலனியாக்கத்திற்கேற்ற மறுகட்டமைப்புக்கான தொடர் நடவடிக்கை. இந்தப் போக்கு நிறைவடையும்போது சாலைகள், பொதுப் போக்குவரத்து, மின்சாரம், விவசாயம், காடுகள், மலைகள், கடல் உள்ளிட்ட இயற்கை ஆதாரங்கள் அனைத்தும் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தில் சென்றிருக்கும். அரசின் கைகளில் போலீசையும் இராணுவத்தையும் தவிர வேறெதுவும் இருக்காது. இதைத்தான் மறுகாலனியாக்க சூறையாடலின் ஒரு மைல்கல் என்கிறோம்.

இச்சூறையாடலை எதிர்த்து எழும் உழைக்கும் மக்களின் போராட்டங்களை தொடக்கத்திலேயே ஒடுக்கவும், அடக்குமுறையை நிரந்தரமாக்கவும்தான் என்.ஐ.ஏ, ஊபா, தேசிய பாதுகாப்புச் சட்டம், குற்றவியல் திருத்தச் சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம், புதிய தொழிலாளர் சட்டங்கள் போன்ற சட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன.

வளர்ச்சியின் பின்னே மறைந்திருக்கும் கார்ப்பரேட் கொள்ளை:

இருப்பினும், இவற்றையெல்லாம் மூடிமறைத்து இதுவரை புதிய தாராளவாத ஆட்சியாளர்கள் அனைவரும் சொல்லி வந்த, ‘‘தேச வளர்ச்சி”, ‘‘வேலைவாய்ப்பு” போன்ற அதே புளித்துப்போன விசயங்களைத்தான் தேசிய பணமாக்கல் திட்டத்தை அறிமுகப்படுத்தும் போதும் மோடி கும்பல் சொல்லிவருகிறது. இப்படி ‘தேசத்தின் நலன்’ என்று சொல்லி கொண்டுவரப்பட்ட பணமதிப்பழிப்பு நடவடிக்கை முதல், ஜி.எஸ்.டி. உள்ளிட்ட மோடி அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் நாட்டை திவாலாக்கும் நிலைக்குத்தான் தள்ளியுள்ளது. வேலையின்மை பலமடங்கு அதிகரித்துள்ளது. இருப்பினும், இந்த மோசடிப் பிரச்சாரத்தை கோயபல்ஸ் பாணியில் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது, மோடி அரசு.

முதலில், இங்கே அரசின் பொதுச்சொத்துக்களை குத்தகைக்கு எடுப்பவர்களின் யோக்கியதை என்ன?, அவர்களை மோடி அரசு எப்படிக் கையாண்டது என்பதைப் பரிசீலிக்க வேண்டும். மல்லையா, நீரவ் மோடி முதல் வீடியோகான், கெய்ர்ன் உள்ளிட்ட பல வழக்குகளில் கார்ப்பரேட் முதலாளிகள் கடனைத் திருப்பிக் கட்டாமல் ஓடியது, வட்டியைக் கட்டாமல் ஏமாற்றியது, பொய்யான விவரங்களைக் கூறி மொத்த அரசுச் சொத்தையே சூறையாடியது, வங்கி அதிகாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து அரசை ஏமாற்றியது போன்றவைதான் கடந்தகால வரலாறு.

இது ஒருபுறமிருக்க, கார்ப்பரேட் முதலாளிகள் பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிக் கட்டாமல் இருக்கும் இரண்டு இலட்சம் கோடி ரூபாயைத் தள்ளுபடி செய்ய இருப்பதாக மோடி அரசு செப்டம்பர் மாத மத்தியில் அறிவித்துள்ளது. இதற்காகவே ஒரு வங்கியைத் தொடங்க இருப்பதாகவும் அறிவித்துள்ளது. அந்த வங்கியின் பெயர் தேசிய சொத்து மறுசீரமைப்பு கம்பெனி லிமிடெட் (National Asset Reconstruction Company Limited − NARCL). கார்ப்பரேட் முதலாளிகள் வாங்கிவிட்டு திருப்பிக் கட்டாத வாராக்கடனை அரசாங்கம் கட்டுவதற்கான ஏற்பாடாக இந்த வங்கியின் செயல்பாடுகள் திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளன.

மோடி அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து இவ்வாறு கார்ப்பரேட் முதலாளிகள் திருப்பிச் செலுத்தாத வாராக்கடன் 18.28 இலட்சம் கோடி ரூபாயாகும். இதில் திருப்பிச் செலுத்தப்படாத சுமார் ஆறு இலட்சம் கோடி கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளது, மோடி அரசு. தற்போது உருவாக்கியிருக்கும் இந்த வங்கியின் மூலம் அனைத்து முதலாளிகளும் இனி தப்பித்துக் கொள்வார்கள். இதைத்தான் மோடி வகையறா ‘‘தேச வளர்ச்சி” என்று சித்தரிக்கிறது.

என்ரான் கொள்ளை – வகைமாதிரிக்கு ஒரு உதாரணம் :

1992−இல் தபோல் பவர் கார்ப்பரேஷன் என்ற பெயரில், 300 கோடி டாலர் முதலீட்டில் மகாராஷ்டிராவில் மின்னுற்பத்தித் திட்டத்தைத் தொடங்கிய அமெரிக்க மின் உற்பத்தி நிறுவனமான என்ரான் ஊழல் நாடறிந்த ஒன்றாகும். தனியார்மயம் − தாராளமயம் − உலகமயத்தின் தொடக்கக் காலத்தில் நடந்த இந்த ஊழல் மிகவும் முக்கியமானது. ஒரு யூனிட் மின்சாரத்தைக்கூட உற்பத்தி செய்யாமல் திட்டச் செலவை வேண்டுமென்றே கூட்டிக் காட்டியது, நிலத்தை சட்டவிரோதமாகக் கையகப்படுத்தியது, நீர் வளத்தைக் கடுமையாக சுரண்டியது, போலீசுடன் சேர்ந்து கொண்டு உள்ளூர் மக்களை தாக்கியது − என என்ரான் ஒரு பாசிச காட்டாட்சியை அரங்கேற்றியது.

மேலும், பலமடங்கு அதிக விலை கொடுத்து இந்த நிறுவனத்திடமிருந்து மின்சாரத்தை மகாராஷ்டிரா மாநில அரசு வாங்கியதால், இலாபத்தில் இயங்கிய மகாராஷ்டிர மின்சார வாரியம் 1999, 2000 ஆகிய இரண்டே ஆண்டுகளில் ரூ.1,681 கோடி நட்டத்தைச் சந்தித்தது. இந்நிலையில், சில ஆண்டுகளில் என்ரான் திவாலானதாக அறிவிக்கப்பட்டபோது, அந்த நிறுவனம் தொடங்குவதற்கு மக்கள் பணம் கடனாக கொடுக்கப்பட்டிருப்பதும், அது உற்பத்தி செய்யாத மின்சாரத்திற்கும் மாநில அரசு தொகை செலுத்திய மோசடிகளும் அம்பலமானது.

என்ரான் விவகாரம் என்பது, தனியார்மயச் சூறையாடலின் ஒரு வகைமாதிரி ஆகும். இதே திசையில்தான் இதுவரையில் அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றின் விளைவு, சுற்றுச்சூழல் பேரழிவு, மக்களின் வாழ்வாதாரம் பறிப்பு, விலையேற்றம், அடக்குமுறை அதிகரிப்பு முதலானவைதான்.

வேலைவாய்ப்பு பெருகுமா?

தேசிய பணமாக்கல் திட்டத்தால், வேலைவாய்ப்பு பெருகும் என்ற மோடி கும்பலின் வாதம் மோசடித்தனமானது. மோடி அரசின் இப்போதைய நடவடிக்கையானாலும், முந்தைய நடவடிக்கையானாலும் அவற்றின் முக்கிய இலக்கு வேலையின்மையை அதிகரித்து நவீன கொத்தடிமைத்தனத்தை உருவாக்குவதாகும்.

நாட்டில் 225 பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. 1960−61 ஆண்டில் மட்டும் 70 லட்சம் பேர் பொதுத்துறைகளில் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் மட்டுமின்றி, மறைமுகமாகவும் ஒப்பந்த மற்றும் தற்காலிகப் பணிகளாகவும் பல இலட்சம் தொழிலாளர்கள் வாழ்வைப் பெற்று வந்தனர். இவர்களின் எண்ணிக்கை 1997−இல் இரண்டு கோடி பேராக உயர்ந்திருந்தது. ஆனால், 31.03.2017 மத்திய அரசின் அறிவிப்பின்படி, இது 11.3 இலட்சம் பேராகக் குறைந்துள்ளது. இதேபோல, தனியார் துறையில் 1983−இல் 75.5 இலட்சமாக இருந்த வேலைவாய்ப்பு 1994−2000 ஆண்டுகளில் 16.4 இலட்சமாகச் சுருங்கிவிட்டது.

குறிப்பாக, தனியார்மயம் − தாராளமயம் − உலகமயம் என்ற நாசகரக் கொள்கை நடைமுறைக்கு வந்த பின்னர், அரசுத்துறைகளில் புதிய ஆளெடுக்கும் பணி முற்றிலும் முடக்கப்பட்டுவிட்டது. மேலும், பொதுத்துறை நட்டம், லே−ஆஃப் போன்ற காரணங்களாலும், தனியார்மயமாக்கத்தினாலும் பெருமளவு பொதுத்துறை வேலைவாய்ப்பு சரிந்துள்ளது. மறுபுறம், எந்தப் பாதுகாப்பும் வேலை உத்திரவாதமும் அற்ற ஒப்பந்தம் பணி முறை எனும் நவீன கொத்தடிமை முறையானது, ஒட்டுமொத்த வேலைவாய்ப்பையும் முற்றிலுமாக நரகமயமானதாக்கிவிட்டது.

தினக்கூலி முறை, காண்டராக்ட் வேலை, சுவிக்கி − ஜொமோட்டோ போன்றவற்றால் உருவாக்கப்பட்டுள்ள சிதறிய, சிறிய வேலைகளையும் வேலைவாய்ப்பு எனக் கணக்கிட்டு பித்தலாட்டம் செய்துள்ள போதிலும், செப்டம்பர் 21−ம் தேதி வரையிலான நிலவரப்படி, இந்தியாவில் வேலையின்மை விகிதம் 7.46 சதவிகிதமாக (2.658 கோடி பேர்) உயர்ந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேசிய உள்கட்டமைப்பு பைப்லைன் என்ற இந்தத் திட்டம் முற்றிலுமாக நடைமுறைக்கு வரும்போது, தொழிலாளிகள் நவீனக் கொத்தடிமையாக மாற்றப்பட்டு மீளமுடியாத நரகத்தில் தள்ளப்பட்டிருப்பார்கள். மற்றொருபுறம், கோடிக்கணக்கான மக்கள் வேலையின்மை, பட்டினி, அடிப்படை வசதிகள் அற்ற நவீன சேரிகளுக்குத் தள்ளப்பட்டிருப்பார்கள்.

வேலையற்றவர்களை, ஏழை−எளிய மக்களை நவீன சேரிகளுக்கும், உயர் வருவாய் உள்ளவர்களை ஸ்மார்ட் சிட்டிகளுக்கும் அழைத்துச் செல்வதன் மூலம் தேசத்தை இரண்டு முகாம்களாக பிரித்து ஒடுக்குவதுதான் காவி − கார்ப்பரேட் பாசிசத்தின் நவீன இந்துராஷ்டிரம்.

தேசிய பணமாக்கல் திட்டம், தேசிய உள்கட்டமைப்பு திட்டம் ஆகியன நடைமுறைக்கு வரும்போது மக்களின் வாழ்வாதாரம் மேலும் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும். நாட்டின் 70 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட மக்கள் தேவையற்றவர்களாகக் கருதப்படுவர். இவர்கள் வளர்ச்சியின் எதிரிகளாகவும், தேச முன்னேற்றத்தின் தடைகளாகவும் சித்தரிக்கப்படுவர்.

கொரானா பெருந்தொற்றின்போது இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் நடைபயணமாக சொந்த ஊருக்கு விரட்டப்பட்ட தேசியத் துயரமும், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக இலட்சக்கணக்கான விவசாயிகள் வீதியில் இறங்கி 9 மாதங்களுக்கும் மேலாக போராடி வருகின்ற நிலைமையும், விவசாயிகளும் தொழிலாளர்களும் நாட்டின் இரண்டாந்தரக் குடிமக்கள்தான் என்பதை ஏற்கெனவே காட்டிவிட்டது.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் உயர்ந்திருந்தாலும், அதனை எதிர்த்துக் கேட்கமுடியாத நிர்கதியான நிலைக்கு மக்களின் வாழ்க்கை நிலைமை சென்றுவிட்டது. அன்றாடம் உழைத்தால் கூட வாழ்க்கையை நடத்துவது பெரும்பாடாகிவிட்டது. இந்த தரித்திர நிலைமையை மேலும் தீவிரமாக்குவதுதான் காவி − கார்ப்பரேட் பாசிச மோடி கும்பலின் நோக்கமாகும்.

படிக்க :

கார்ப்பரேட் நலத் திட்டங்கள் : மக்கள் மீதான மோடி அரசின் பொருளாதார யுத்தம் !

“பணமாக்கல் திட்டம்” : கார்ப்பரேட்டுகளுக்கு இந்தியாவை தாரைவார்க்கும் திட்டம் !

கார்ப்பரேட் சேவையில் காங்கிரசும் பா.ஜ.க.வும் :

‘‘அரசு என்பது மக்களின் சொத்துக்களுக்குப் பாதுகாவலனாக இருக்க வேண்டும். ஆனால், மோடி அரசோ பொதுச்சொத்துக்களை விற்று வருகிறது” என்கிறார், காங்கிரசு தலைவர் சச்சின் பைலட். ‘‘நாங்கள் நட்டமடைந்த பொதுத்துறை நிறுவனங்களைத்தான் விற்று வந்தோம். ஆனால், மோடி அரசோ இலாபத்தில் இயங்குகின்ற பொதுத்துறை நிறுவனங்களை விற்று வருவதாக…” குற்றம் சாட்டுவதன் மூலம் காங்கிரசும் பா.ஜ.க.வும் ஒன்றுதான் என்பதை நிரூபிக்கிறார்.

நட்டத்தில் இயங்கிய பொதுத்துறை நிறுவனம் என்பதன் பின்னால், அந்தப் பொதுத்துறை நிறுவனங்களை நட்டமாக்கி முடக்கிய சதி வேலையில் ஈடுபட்டவர்கள்தான் காங்கிரசும் பா.ஜ.க.வும். கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சலுகைகள் கொடுக்கும் முறை அவசியமானது − என தனியார்மய − தாராளமய −உலகமயக் கொள்கைகள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட முப்பதாவது ஆண்டை ஒட்டி ப.சிதம்பரம் வாதிடுகிறார். அதேசமயம், காங்கிரசு கட்சியோ தேசிய பணமாக்கல் திட்டத்தை எதிர்ப்பதாக கூறி நாடகமாடுகிறது. இதற்காக காங்கிரசு மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் இணைந்து கருப்புக் கொடி போராட்டத்தை அறிவித்திருப்பதுதான், இந்த கேலிக்கூத்தின் உச்சமாகும்.

எப்போதும் நாட்டுப்பற்று குறித்து வகுப்பெடுத்துவரும் தமிழ் இந்து, தினமணி உள்ளிட்ட பார்ப்பன பத்திரிகைகள் மோடி அரசின் இந்த தேசத்துரோகச் செயலை ஒரு சிறு பெட்டிச் செய்தியைப் போல வெளியிட்டு, மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கையை இருட்டடிப்புச் செய்தன. மற்ற ஊடகங்களோ தேசிய பணமாக்கல் திட்டத்தின் நோக்கத்தை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தாமல், அடக்கி வாசிக்கின்றன.

நம் கண்முன்னே ஒரு பெரும் சூறையாடல் நடந்து வருகிறது. பொருளாதாரத் திட்டமாக மட்டுமின்றி, எதிர்த்துப் போராடுபவர்களை கடுமையாக ஒடுக்கும் நவீன ஒடுக்குமுறைகளையும் கண்காணிப்பு முறைகளையும் கொண்டுள்ள காவி − கார்ப்பரேட் பாசிசத்தின் அரசியல் தாக்குதலாகவும் இது இருக்கிறது. இந்த உண்மைகளை மக்களிடம் எடுத்துச் செல்வதும், மக்கள் நலன் சார்ந்த பொருளாதாரத்திற்காகவும் மக்களின் அதிகாரத்திற்காகவும் உழைக்கும் மக்களைத் தட்டியெழுப்புவதும் இன்று நம் முன்னுள்ள உடனடி கடமையாகும்.


வேல்முருகன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க