நடப்பதோ தேசிய பேரழிவு !
மனித சமூகத்திற்கு எதிரான குற்றம் ! சாட்சிகளாக நாம் நிற்கிறோம் !!
தீர்ப்பை வரலாறு எழுதும் !!!

2017-ல் உ.பி. மாநில தேர்தலில், குறிப்பிட்டவர்களை ஒருங்கிணைத்த ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், இந்திய பிரதமர் நரேந்திரமோடி பொது மேடையிலிருந்து அன்றைய மாநில அரசை – அப்போது அங்கு எதிர்கட்சி ஆட்சி நடந்து கொண்டிருந்தது -“முஸ்லீம்களை தாஜா செய்வதற்காக அவர்களின் கல்லறை இடங்களுக்கு, இந்துக்களின் தகனம் செய்யும் இடங்களுக்கு அளிப்பதைவிட அதிகமாக நிதிஒதுக்கீடு செய்வதாக” குற்றம்சாட்டினார்.

வழக்கமான ஆவேச கூச்சல் ஏளனபடுத்துவது ஆகியவற்றோடு அதில் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு உணர்ச்சியாக கோபம் மற்றும் கூரிய ஈட்டி முனையாக, பாதி வாக்கியத்தை உச்சஸ்தாயிக்கு கொண்டு போய் நிறுத்தி; குரலை இறக்கும்போது, அச்சுறுத்தும் எதிரொலியோடு, கூட்டத்திலுள்ளவர்களின் மனதில் பீதியோடு கூடிய வெறுப்பு உணர்வுகளை கிளறிவிட்டார்.

படிக்க :
♦ அருந்ததிராய் நூல் நீக்கம் : கருத்துக்களைக் கண்டு அஞ்சும் சங்க பரிவாரம் !

♦ கொரோனா பெருந்தொற்று ஒரு நுழைவாயில் | அருந்ததி ராய்

“சம்ஸான்! சம்ஸான்!” மோடியின் பேச்சால் மயங்கி கிடந்த அவரை வழிபடும் கூட்டம் அவர் சொன்னதை எதிரொலித்தது.

அநேகமாக இப்போது அவர் மகிழ்ச்சியாக இருப்பார். இந்தியாவின் தகன மையங்களில் பிணங்கள் குவியலாக எரியூட்டப்படுவதிலிருந்து எழும் ஜுவாலைகளின் படங்கள் சர்வதேச செய்திதாள்களில் முதல்பக்க செய்தியாக வந்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் அனைத்து “கப்ரிஸ்தான்கள்” (முஸ்லீம்களுக்கான கல்லறை) “சம்ஸான்கள்” (இந்துக்களின் தகன இடங்கள்) இதில் மக்கள்தொகையின் நேர்விகிதத்தில் அவை எதற்காக இருக்கின்றனவோ மற்றும் அங்கிருப்பவர்களின் பணிசுமையை காட்டிலும் பன்மடங்கு அதிகமாக ஒழுங்காக வேலை செய்து கொண்டிருக்கின்றன.

“1.3 பில்லியன் அதாவது 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவை தனிமைபடுத்தமுடியுமா?” வாஷிங்டன் போஸ்ட் தனது அண்மை தலையங்கத்தில், ‘இந்தியாவின் வெளிப்படுத்தப்படாத பேரழிவு மற்றும் இந்திய எல்லைக்குள் உருவாகியிருக்கும் புதிய எளிதில் வேகமாக பரவக் கூடிய கோவிட் மாற்றுருக்களை கொண்டிருப்பது குறித்து’ தனக்கேயுரிய பாணியில் கேட்டிருந்தது. “அவ்வளவு எளிதானதல்ல” என பதிலளித்தது. சில மாதங்களுக்கு முன்னதாக ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் பெரிய அளவில் தாக்கியபோது சாத்தியமில்லாத இந்த கேள்வி அதே வழியில் முன்வைக்கப்பட்டது. ஆனால் நம்மை பொறுத்தவரை இந்த ஜனவரியில் நடைபெற்ற World Economic Forum கூட்டத்தில் நமது பிரதமர் வெளியிட்ட வார்த்தைகள் நம்மை எல்லோருக்கும் மேலானவர்களாக நிறுத்திக்கொள்ள உரிமை படைத்தவர்களாக்கியது.

உலகத்தொற்று இரண்டாம் அலை பரவலின் உச்சத்தில் ஐரோப்பாவும் அமெரிக்காவும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் மோடி பேசினார். அவரது பேச்சில் நடைபெற்றுக்கொண்டிருந்த துயரத்தை பற்றியதான ஒரு வார்த்தை கூட இல்லை. அதற்கு பதில் ‘இந்தியாவின் உள்கட்டமைப்பு பற்றி மற்றும் கோவிட்டை எதிர்கொண்டதற்கான முன்தயாரிப்புகள் பற்றி’ பெருமிதமான வார்த்தைகளில் நீளமான உரையாக இருந்தது. நான் அந்த உரையை பதிவிறக்கம் செய்துள்ளேன். மோடியின் ஆதரவாளர்களால் வரலாறு திரும்ப எழுதப்படும்போது – சீக்கிரம் நடக்கும் – என்று எதிர்பார்க்கிறேன். இவையெல்லாம் மறைந்துவிடும் அல்லது கண்டுபிடிக்க முடியாமல் போய்விடும்.

அவரது பேச்சிலிருந்து சில துளிகள்.

“நண்பர்களே இந்த கவலையான பயங்கலந்த காலக்கட்டத்தில் 130 கோடி இந்தியர்களிடமிருந்து நம்பிக்கை, தன்னம்பிக்கை, உறுதி ஆகிய செய்திகளை கொண்டுவந்துள்ளேன். இந்த கொரோனாவால் மோசமாக பாதிக்கப்படக் கூடிய நாடாக இந்தியாதான் இருக்கும் என்று உலகம் முழுதும் எதிர்பார்க்கப்பட்டது. கொரோனா ஒரு சுனாமியாக இந்தியாவை தாக்கும் என்றும் இந்தியாவில் 70 முதல் 80 கோடி வரை பாதிக்கப்படுவார்கள் என்றும் 20 லட்சம் பேர் வரை இறக்கக்கூடும் என்றும் கூறினார்கள்.

நண்பர்களே இந்தியாவின் வெற்றியை மற்ற நாடுகளின் தன்மையோடு ஒப்பிட்டு தீர்ப்பு சொல்வது அறிவார்ந்த செயல் அல்ல. உலக மக்கள்தொகையில் 18 சதவீதத்தை கொண்டிருக்கக்கூடிய எங்கள் நாடு கொரோனாவை வலிமையோடு ஒடுக்கி ஒரு பேரழிவிலிருந்து மனித குலத்தை காப்பாற்றியிருக்கிறது”.

மோடி என்ற மந்திரவாதி கொரோனாவை மிக வலிமையுடன் ஒடுக்கி மனித குலத்தை காப்பாற்றியதற்காக பெருமையை தலைவணங்கி எடுத்துக்கொண்டார். இப்போது அது (கொரோனா இரண்டாவது அலை) திரும்பிவிட்டது. அதை நம்மால் ஒடுக்கமுடியவில்லை. நாம் ஏதோ கதிர்வீச்சுக்குள் இருப்பதை போல உணர்வதைப் பற்றி நம்மால் புகார் அளிக்கமுடியுமா? மற்ற நாடுகள் தங்கள் எல்லையை நமக்கு மூடத்தொடங்கிவிட்டதே மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்படுகின்றனவே? நாம் நம்முடைய தொற்றோடும் மற்றும் நமது பிரதமரோடும் கூடுதலாக எல்லா நோய்களோடும் அறிவியலுக்கு எதிரான அவர் அவரது கட்சி அது பிரதிநிதித்துவபடுத்தும் அரசியல் ஆகியவற்றோடு சேர்த்து மூடி தாளிடப்பட்டுவிட்டோமே?

கோவிட்-19ன் முதல் அலை கடந்த ஆண்டு இந்தியாவுக்குள் வந்த போதும் பிறகு அது குறைந்த போதும் மத்திய அரசும் அதற்கு ஆதரவாக குரல் கொடுத்துக் கொண்டிருப்பவர்களும் வெற்றி பெற்றுவிட்டதாக தலையில் கிரீடத்துடன் பெருமிதத்தில் இருந்தனர். “இந்தியாவுக்குள் யாரும் சுற்றுலாவை பெற்றிருக்கவில்லை” என்று தி பிரிண்ட் என்ற இணைய பத்திரிகையின் தலைமை ஆசிரியர் சேகர்குப்தா ட்விட் செய்திருந்தார். “ஆனால் நமது சாக்கடைகள் சடலங்களால் அடைத்துக்கொள்ளப்படவில்லை, மருத்தவமனைகள் படுக்கைவசதிகளை இழந்துவிடவில்லை, தகன மையங்கள் மற்றும் கல்லறைத்தோட்டங்கள் மரத்துண்டுகளையோ இடங்களையோ இழந்துவிடவில்லை.

இது உண்மையாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? நீங்கள் ஒத்துக்கொள்ளவில்லையென்றால் அதற்கான தரவுகளை கொடுங்கள். நீங்கள் உங்களை கடவுளாக நினைத்துக் கொண்டிருக்கவில்லையென்றால். “உணர்ச்சிகளற்ற அவமரியாதையான தோற்றங்களை அந்த பக்கம் தூக்கிப்போடுங்கள். இம்மாதிரியான பெரும்பாலான உலக தொற்று அபாயத்திற்கு இரண்டாவது அலை ஒன்றுண்டு என்று சொல்வதற்கு நமக்கு கடவுள் தேவைப்படுகிறாரா?

இது முன்னமே கணிக்கப்பட்டது ஆனாலும் விஞ்ஞானிகளையும் வைராலாஜிஸ்டுகளையும் அதன் தீவிரம் ஆச்சிரியபடவைத்தது. அதனால் பிரதமர் பெருமிதமாக கூறிய கோவிட்-19க்காகவே உருவாக்கப்பட்ட அந்த உள்கட்டமைப்பு எங்கே? மோடி தனது பேச்சில் பெருமிதத்தோடு மிகவும் உயர்த்தி பேசிய அந்த நோய்தொற்றை எதிர்த்த “மக்கள் இயக்கம்” எங்கே?

மருத்துவமனைகளில் படுக்கைகள் காலி இல்லை. மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் மிகவும் சோர்ந்துவிட்டனர். நண்பர்கள் வார்டுகளில் கவனிக்க மருத்துவ உதவியாளர்கள் இல்லாததையும் அங்கே உயிருடன் மருத்துவம் பார்த்துக் கொள்கிறவர்களை விட சடலங்கள் அதிகமாக இருப்பதையும் கதையாக கவலையோடு பேசிக்கொள்கிறார்கள். மருத்துவமனை வளாகங்களில் சாலைகளில் வீடுகளில் மக்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள். டெல்லியில் தகன மையங்களில் சடலங்களை எரிக்க விறகில்லை. வனப் பாதுகாப்புதுறை நகர சாலையோர மரங்களை வெட்டுவதற்கு பிரத்யேகமான அனுமதி தர வேண்டியிருக்கிறது.

கிடைக்கும் என்ற நம்பிக்கையில்லாத மக்கள் என்ன கண்ணில் படுகிறதோ அவற்றை உபயோகப்படுத்துகிறார்கள். பூங்காக்களும் கார் நிறுத்தமிடங்களும் தகன மையங்களாக மாறிவருகின்றன. நம் வானத்தில் கண்ணுக்கு தெரியாத யுஎஃப்ஓ (Unidentified flying object) கண்டுபிடிக்கபடமுடியாத பறக்கும் பொருள் நிறுத்தப்பட்டுள்ளதைப் போலவும் அது நம் நுரையீரலிலிருந்து காற்றை உறிஞ்சி எடுப்பது போல உணர்கிறோம். இம்மாதிரியான ஒரு வான்வழிதாக்குதலை நாம் எப்போதும் அறிந்திருக்கமாட்டோம்.

ஆக்சிஜன் தான் தற்போதைய இந்தியாவின் ‘புதிய மோசமான பங்குசந்தையின் புதிய கரன்சிகள்’. இந்தியாவின் உயரடுக்கு மூத்த அரசியல்வாதிகள் பத்திரிகையாளர்கள் வழக்கறிஞர்கள் ஆகியோர் மருத்துவமனைகளில் படுக்கைகளுக்காகவும் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்காகவும் ட்விட்டர்களில் குறுஞ்செய்தி மூலம் கெஞ்சிக்கொண்டிருக்கிறார்கள். ஆக்சிஜனுக்கான கள்ளச்சந்தை உப்பிக்கொண்டிருக்கிறது. ஆக்சிஜன் செறிவு எந்திரங்கள் மற்றும் மருந்துகள் வருவது மிக கடினமாக உள்ளது.

மற்றப்பொருள்களுக்கும் கூட சந்தைகள் இருக்கின்றன. ஒரு இலவச சந்தையின் அடிப்பாக முடிவில் சவக்கிடங்கில் துணிகளால் மூடப்பட்டு கிடத்தப்பட்டிருக்கும் உங்களது அன்பானவரை கடைசியாக பார்க்க ஒரு லஞ்சம் தேவைப்படுகிறது. இறுதி பிரார்த்தனைக்கு பாதிரியாருக்கு அவர் ஒத்துக்கொண்டதற்காக அதிகப்படியான பணம் தரவேண்டியிருக்கிறது. ஆன்லைன் மருத்தவ ஆலோசனை மையங்களில் இருக்கும்   இரக்கமற்ற மருத்தவர்கள் நம்பிக்கையிழந்து தவிக்கும் குடும்பங்களிடம் இருப்பதையும் பறித்துக்கொள்கிறார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக தனியார் மருத்துவமனைகளில் சிகிச்கை எடுத்து கொள்ளவேண்டி இருந்தால் இருக்கும் நிலம் வீடு அத்தனையும் விற்று கடைசி காசு வரை செலவு செய்யவேண்டியிருக்கும். உங்களை மருத்துவனைக்குள் அனுமதித்து சிகிச்சைக்கு சேர்த்துக்கொள்வதற்கு முன்பே வைப்புதொகைக்கு மட்டும் உங்கள் குடும்பம் இரண்டு தலைமுறைகளுக்கு பின்னால் போய்விடும். இவை எதுவும் அதிர்ச்சியின் முழு ஆழத்தையும் வரம்பையும் குழப்பத்தையும் எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் இழிவுக்குள்ளாவதையும் வெளிப்படுத்துவதில்லை.

தலைநகர் டெல்லியில் ஒரு குடும்பத்திலிருந்த மூன்று பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். நகரில் அப்போதுதான் நோய்தொற்றின் ஆரம்பகாலகட்டம் என்பதால் அந்த தாயிக்கு மருத்தவமனையில் படுக்கை கிடைத்துவிட்டது. தந்தையார் நோய்தொற்றுடன் மனஅழுத்தத்திற்கு ஆளாகியிருப்பதை கண்டறிந்தனர். அவர் செயல்கள் வன்முறைகளாக மாறின. தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்ள ஆரம்பித்தார். அவருக்கு ஆன்லைனில் சிகிச்சை அளித்தவந்த மனநலமருத்துவரோ தனது நோயாளியின் நிலைக்காக வருந்தி அழுதார். ஏனெனில் அவரது கணவரும் இதே நோய்தொற்றிற்கு பலியாகியிருந்தார். கடைசியில் மருத்துவமனையில் சேர்ப்பதே நல்லது என ஆலோசனை தெரிவித்தார்.

ஆனால் அவர் ஒரு கோவிட் நோயாளி என்பதால் அவரை நேர்த்துக்கொள்ள மறுத்து விட்டனர். அதனால் அந்த மகனே தந்தையை வீட்டில் வைத்து சிகிச்கை இல்லாமல் மற்ற அத்தனை தேவைகளையும் நிறைவேற்றி பார்த்துக்கொண்டார். கடைசியில் அந்த தந்தை இறந்துவிட்டார். அவர் கொரோனாவால் இறக்கவில்லை. எவ்வித மருத்துவ உதவி இல்லாத காரணத்தால் மனஅழுத்தம் அதிகமாகி இரத்தஅழுத்தம் மிகுந்தநிலையில் இறந்துவிட்டார்.

சடலத்தை என்ன செய்வது? தகனமையங்களில் வரிசையாக சடலங்கள் காத்திருப்பில் இருந்தன. உதவி செய்ய யாரும் இல்லை. ஏனெனில் ஏற்கனவே அவர்களும் தங்களது முறைக்காக காத்துக்கொண்டிருந்தனர்.

தனிப்பட்ட சிலர் தங்களது முற்போக்கான கருத்துகளால் அநியாயங்கள் இழைக்கப்படும்போது குறிப்பாக குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்த போராட்டத்தில் இருந்தவர்கள், ராஜதுரோக சட்டத்திற்கெதிரான மாணவர்கள் போராட்டத்தில் இருந்தவர்கள், அதனால் பல்வேறு வழக்குகள் மோடி அரசால் போடப்பட்டு எதிர்கொண்டிருப்பவரகள் தான் உதவிகள் செய்து தகனம் செய்தனர்.

இது ஒரு குடும்பத்தில் அல்ல. டெல்லியின் பெரும்பாலான குடும்பங்கள் அனுபவிக்கும் கொடுமைகள்! சமூகத்தை சுற்றி வளைத்து எங்கெங்கும் ஆக்ரமித்திருக்கும் மோடி அரசின் ஆக்டோபஸ் நிறுவனங்கள் எதுவும் களத்தில் இல்லை. அமைச்சர்கள் அதிகாரிகள் எதையும் காணவில்லை. இந்தியாவின் பொது சுகாதார அமைச்சகம் உட்பட செயலிழந்து விட்டதாக டைம்ஸ் பத்திரிகை விமர்சனம் செய்திருக்கிறது. மோடியை காணவில்லை என அவுட்லுக் அட்டைப்படத்தில் விளம்பரம் கொடுத்திருக்கிறது.

முற்போக்கான தனிநபர்கள் குறிப்பாக முஸ்லீம்கள் களத்தில் தன்னலம் பாராமல் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். நோயாளிகளுக்கு மசூதிகள் திறந்துவிடப்படுகின்றன. தகன மையங்கள் ஏற்பாடு செய்து தருகிறார்கள். மோடியின் சங்கிகள் காத்திருக்கிறார்கள் மீண்டும் ஒரு கலவரத்தின் மூலம் முஸ்லீம்களின் சேவையை மறைத்து தேசதுரோகிகளாக காட்ட.

எல்லா பிரச்னைகளும் ஒரு நாளில் தீரும். ஆனால் அதை பார்க்க யார் நம்மில் உயிரோடு இருக்கப்போகிறார்கள் தெரியவில்லை. பணம் படைத்தவர்களால் நிம்மதியாக மூச்சு விட முடிகிறது. ஏழைகளால் முடியாது. இப்போதைக்கு நோயுற்றவர்கள் மற்றும் இறந்தவர்கள் ஆகியோர் மத்தியில் ஜனநாயகத்தின் மிச்சங்கள் உள்ளன. பணக்காரர்களும் வீழ்த்தப்பட்டுள்ளனர். மருத்தவனைகள் ஆக்சிஜனுக்காக பிச்சை எடுக்கின்றன. சிலர் தன்னுடன் கூடவே சொந்த ஆக்சிஜனை கொண்டுவரும் திட்டத்தை ஆரம்பித்துள்ளனர். ஆக்சிஜன் பற்றாகுறை பிரச்சினை மாநிலங்களுக்கிடையே தீவிரமான சகிக்கமுடியாத சண்டைகளை ஏற்படுத்துகிறது. அரசியல் கட்சிகள் ஒருவரையொருவர் குறை சொல்லிக்கொண்டு தங்களுக்குள் சண்டையில் உள்ளனர்.

டெல்லியின் மிகப்பெரிய தனியார் மருத்துவமனையான சர்.கங்கா ராம் மருத்துவமனையில் ஏப்ரல் 22 அன்று இரவு அதிக அளவு ஆக்சிஜன் வெளிப்பட்டதால் தீவிர சிகிச்சையிலிருந்த 25 கொரோனா நோயாளிகள் அநியாயமாக இறந்து போனார்கள். அந்த மருத்துவமனை ஆக்சிஜன் வழங்கும் கருவியை மாற்றித்தருமாறு பலமுறை SOS செய்திகளை அனுப்பியுள்ளது. ஒரு நாளைக்கு பிறகு அதன் தலைவர் செய்திகளை தெளிவுபடுத்த விரைந்தார்கள். “அவர்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால்தான் இறந்தார்கள் என்று நாம் சொல்லமுடியாது” என்றார்.

ஏப்ரல் 24-ல் டெல்லியின் இன்னொரு பெரிய மருத்துவமனையான ஜெய்ப்பூர் கார்டனில் ஆக்சிஜன் சப்ளை குறைந்ததால் 20 நோயாளிகள் இறந்து போனார்கள்.

அதே நாளில் இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா டெல்லி உயர்நீதிமன்றத்தில் “சிறு குழந்தையை போல அழுது கொண்டிருக்காமல் நம்மாலானதை முயற்சிப்போம். இந்த நாட்டிலிருக்கும் எல்லோருக்கும் ஒருவர் விடாமல் ஆக்சிஜன் கிடைப்பதை இதுவரை நாங்கள் உறுதி செய்திருக்கிறோம்” என்று சிறிது கூட கூச்சமேயில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தார்..

காவி உடை போர்த்தியிருக்கும் யோகி ஆதித்யநாத் என்கிற அஜய் மோகன் பிஷ்த் உ.பியின் முதலமைச்சர் தனது மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாகுறை கிடையவே கிடையாது என பிரகடனபடுத்தியிருக்கிறார். அதை மீறி மருத்தவமனைகளோ தனிநபர்களோ ஆக்சிஜன் இல்லை என்று வதந்திகளை பரப்பினால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

யோகி ஆதித்யநாத் சுற்றி விளையாடுவதில்லை. கேரளாவைச் சேர்ந்த முஸ்லீம் பத்திரிகையாளர் சித்திக் காப்பான் உ.பி சிறையில் மாதக்கணக்காக பெயில் மறுக்கப்பட்டு அடைக்கப்பட்டுள்ளார். ஹத்ராஸ் பகுதியை சேர்ந்த ஒரு தலித் பெண் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை ஒட்டி செய்தி சேகரிக்க சென்றதுதான் அவர் செய்த தவறு. அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு கூடுதலாக கொரோனா தொற்றாலும் பாதிக்கப்பட்டுள்ளார்.

“தனது கணவர் மதுரா மருத்தவமனையில் ஒரு விலங்கைப் போல தனது படுக்கையோடு கைவிலங்கினால் பிணைக்கப்பட்டுள்ளதாக” அவரது மனைவி உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதியிடம் முறையிட்டுள்ளார். இப்போது உச்சநீதிமன்றம் சித்திக்கை டெல்லியில் இருக்கும் ஒரு மருத்தவமனைக்கு மாற்றி சிகிச்சை அளிக்க உ.பி. அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த செய்தி நமக்கு உணர்த்துவது உபி யில் வாழ்பவராக இருந்தால் எவ்வித புகாரும் சொல்லாமல் செத்துபோங்கள் என்பதுதான்.

புகார் சொல்பவர்களுக்கு மிரட்டல் வருவது உ.பி.யில் தடை செய்யப்படவில்லை. இந்துமதவெறி பாசிச அமைப்பான ஆர்எஸ்எஸ் – மோடி முதற்கொண்டு அவரது அமைச்சர்கள் சகாக்கள் எல்லோரும் இதன் உறுப்பினர்கள்தான். அதோடு தனக்கென ஆயுதந்தாங்கிய ராணுவ பிரிவும் வைத்துள்ளது – அதன் செய்தி தொடர்பாளர் சமீபத்தில், “நாட்டில் இப்போது நிலவும் கொரோனா பிரச்சினையைத் தூண்டிவிட்டு எதிர்மறை எண்ணங்களையும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்த தேசவிரோத சக்திகள் முயற்சிசெய்வார்கள்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதே போல ஊடகங்கள் ஒரு நேர்மறையான சூழ்நிலையை உருவாக்கி நம்பிக்கையை வளர்க்க உதவவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அரசை விமர்சனம் செய்பவர்களின் கணக்கை முடக்கி ட்விட்டரும் தனது பங்குக்கு உதவியை செய்கிறது.

ஆறுதலுக்கு நாம் எங்கே போக வேண்டும்? அறிவியலுக்கா? எண்களை சேர்த்துக்கொள்ளலாமா? எத்தனை பேர் இறந்தனர்? எத்தனை பேர் குணமடைந்தனர்? எத்தனை பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்? நோய் தொற்றின் உச்சம் எப்போது வரும்? ஏப்ரல் 27-ல் வந்துள்ள தகவல்படி 3,23,144 நோய்தொற்று பதிவுகள் 2,771 பேர் இறந்துள்ளனர். பரவாயில்லை துல்லியமான தகவல்கள் ஓரளவு உறுதியளிக்கிறது.

அதை எப்படி தெரிந்து கொள்வது? டெல்லியில் கூட பரிசோதனைகள் வருவது கடினம்தான். சின்ன நகரங்கள் பெரிய நகரங்கள் ஆகியவற்றின் கல்லறைகளில் புதைக்கப்பட்ட  தகனமையங்களில் எரியூட்டப்பட்டவை ஆகியவற்றை பார்க்கும்போது மொத்த கோவிட் நெறிமுறை எண்ணிக்கை என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதை விட 30 மடங்கு அதிகம் இருக்கும் என தெரிகிறது. மாநகரங்களுக்கு வெளியே பணியிலிருக்கும் மருத்தவர்களை கேட்டால் அவர்கள் சொல்வார்கள் இது எப்படி என்று.

தலைநகர் டெல்லிக்கே இந்த நிலைமை என்றால் நினைத்துப்பாருங்கள் பீகார், உ.பி. மத்தியபிரதேச கிராமங்களில் என்ன நடக்கும் என்பதை. 2020-ல் மோடியால் திடீரென அறிவிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு கொடுத்திருந்த அதிர்ச்சிகரமான நினைவுகளால் உந்தப்பட்டு நகரத்திலிருந்து பல பத்து மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தோடு ஒரு சேர பறந்து போனார்கள் கூடவே தொற்றுகளை சுமந்துகொண்டு. அது நான்கு மணி நேரம் மட்டுமே அவகாசம் கொடுத்த அறிவிக்கப்பட்ட உலகிலேயே மிக கெடுபிடியான ஊரடங்கு.

புலம்பெயர் தொழிலாளர்களை நகரங்களில் வேலை இல்லாமல் கையில் பைசா காசு இல்லாமல் குடியிருக்கும் இடங்களுக்கு வாடகை கொடுக்கமுடியாமல், உணவு இல்லாமல் பட்டினியோடு மற்றும் சொந்த ஊருக்கு செல்ல போக்குவரத்து வசதி இல்லாமல் அனாதைகளாக விடப்பட்டனர். சொந்த ஊருக்கு போக கிளம்பியவர்கள் நூற்றுக்கணக்கான மைல்களை நடந்தே கடக்க வேண்டியதாயிற்று. வழியில் பல்வேறு காரணங்களால் நூற்றுக்கணக்கானவர்கள் அநியாயமாக இறந்தே போயினர்.

இந்த முறை தேசிய ஊரடங்கு இல்லையென்றாலும் போக்குவரத்து ரயில் பஸ் ஆகியவை எவ்வித இடையூறுமின்றி செயல்பட்டாலும் தொழிலாளர்கள் நகரத்தை விட்டு கிளம்ப தொடங்கிவிட்டனர். இந்த பெரிய நாட்டின் பொருளாதாரத்தை இழுத்து செல்லும் இயந்திரமாக செயல்பட்டபோதும் ஏதாவது பிரச்னைகள் ஏற்படும்போது நிர்வாகத்தின் கண்களுக்கு அவர்கள் தெரியமாட்டார்கள்.

இந்த ஆண்டு தொழிலாளர்கள் வெளியேறியது மாறுபட்ட வகையான பயத்தினால். தங்களது சொந்த கிராமத்துக்கு செல்வதற்கு முன்பாக தங்கி போக தனிமைபடுத்தும் மையங்கள் இப்போது இல்லை. கிராமபுறங்களை நகர்புற தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான சாதாரண முயற்சிகூட இல்லை.

சாதாரணமான வயிற்றுப்போக்கு, காசநோய் ஆகிய நோய்களுக்கே கொத்து கொத்தாக இறந்து போகக் கூடிய மக்களைக் கொண்ட கிராமங்கள் அவை. கொரோனாவுடன் அவர்கள் எப்படி ஒத்துழைப்பார்கள்? கொரோனாவுக்கான பரிசோதனைகள் அவர்களுக்கு கிடைத்திருக்கிறதா? அங்கே மருத்துவமனைகள் இருக்கிறதா? ஆக்சிஜன் கிடைக்கிறதா? இதற்கெல்லாம் மேலாக அன்பு இருக்கிறதா? அன்பை மறந்து விடுங்கள் அவர்களைப் பற்றிய கவலை யாருக்காவது இருக்கிறதா? இல்லை எதுவுமே இல்லை. ஏனெனில் அங்கே இருப்பது இதய வடிவில் ஒரு துளை – இந்தியாவின் பொது இதயம் இருக்க வேண்டிய இடத்தில் முழுதும் நிரம்பிய வெறுப்புணர்ச்சி நிரம்பியுள்ளது.

ஏப்ரல் 28 அதிகாலையில் எங்களது நண்பர் பரபுபாய் இறந்த செய்தி வந்தது. அவர் இறப்பதற்கு முன்பாக அவருக்கு கொரோனா அறிகுறிகள் தெரிந்தன. ஆனால் அவரது மரணம் ‘அதிகாரபுர்வ கொரோனா காரணமாக இறந்தவர்கள்’ பட்டியலில் சேர்க்கப்படவில்லை. ஏனெனில் அவர் வீட்டிலேயே எந்த வித பரிசோதனையோ மருத்துவமோ இல்லாமல் இறந்து போனார்.

படிக்க :
♦ சட்டீஸ்கர் : அரசுக் கட்டமைப்பின் தோல்விக்கு மாவோயிஸ்டுகள் மீது பழிபோடும் தினகரன்

♦ கொரோனா அவலத்தின் உச்சத்தில் மக்கள் ! அதிகாரத்தைப் பிடிக்கும் வெறியில் மோடி !

அவர் நர்மதா சமவெளியில் அணை எதிர்ப்பு இயக்கத்தில் முன்கள போராளியாக இருந்தவர். பல சமயங்களில் கீவடியாவில் அவரது இல்லத்தில் தங்கி இருந்திருக்கிறேன்.

பத்தாண்டுகளுக்கு முன்பாக, அணைகட்டும் வேலையிலிருந்தவர்கள் மற்றும் அதிகாரிகளின் குடியிருப்புகளுக்காக, அவர்களது சொந்த நிலத்திலிருந்து பிடுங்கியெறியப்பட்ட, முதல் அணி உள்ளூர் பழங்குடிமக்கள் இவர்கள். விரட்டியடிக்கப்பட்ட அவர்கள், இன்றைக்கும் அந்த குடியிருப்புகளுக்கு அருகிலேயே, அன்னியர்களைப்போல, ஏழைகளாக்கப்பட்டு, நிச்சயமற்ற, ஒருகாலத்தில் சொந்தமாக இருந்த நிலத்தில், இன்றைக்கு ஒரு ஆக்ரமிப்பாளானாக குற்றம் சாட்டப்பட்டு ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

கிவடியாவில் மருத்துவமனைகள் இல்லை. அதற்கு பதில் ‘சமாதானத்தின்’ சிலையாக சர்தார் வல்லப்பாய் படேலின் சிலை மட்டுமே உள்ளது. அணைக்கும் அவர் பெயர்தான் வைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிக உயரமான சுமார் 182 மீட்டர் மற்றும் 422 மில்லியன் அமெரிக்க டாலர் (கிட்டத்தட்ட 4000 கோடி) செலவில் கட்டப்பட்டது. அதிவேக மின்தூக்கிகள் சிலையின் மார்பு வரை சுற்றுலா பயணிகளை கொண்டு செல்லும். அங்கிருந்து நர்மதா அணையை பார்க்கமுடியுயம் உண்மைதான். அழிந்து போன மூழ்கிபோயிருக்கும் அந்த நதி பள்ளத்தாக்கின் நாகரிகத்தை எவரும் பார்க்க முடியாது. அந்த சிலை மோடியின் கனவு திட்டம். அக்.2018ல் அதை திறந்து வைத்தார்.

பரபுபாய் பற்றிய செய்தியை எனக்கு அனுப்பிய நண்பர் இன்னொன்றையும் அனுப்பினார். “இதை எழுதும்போது எனது கைகள் நடுங்குகின்றன. கெவடியா குடியிருப்பு உள்ளும் அதைச் சுற்றியும் கொரோனா நிலைமை மோசமானதாக இருக்கிறது” என்கிறார்.

நோயாளிகளின் எண்ணிக்கையை காட்டும் இந்தியாவின் கோவிட் வரைபடம் 2020 பிப்ரவரியில் மோடியால் ஏற்பாடு செய்யப்பட்ட “நமஸ்தே இந்தியா” நிகழ்ச்சிக்காக டொனால்ட் ட்ரம்ப் வருகை தந்த ‘அவரதுபாதையில் இருக்கும் குடிசைபகுதிகளை அவரது பார்வையிலிருந்து மறைப்பதற்காக கட்டப்பட்ட உயரமான சுவரை’ போன்றது.

அந்த எண்களைப் போலவே மோசமானது. அவை இந்தியா பற்றிய ஒரு வரைபடத்தை கொடுக்கின்றன. ஆனால் நிச்சயமாக அது அந்த இந்தியா அல்ல. இந்த இந்தியாவில் ஓட்டுப்போடும்போது இந்துக்களாக எதிர்பார்க்கப்படுகிறார்கள். ஆனால் ‘உபயோகித்தபின் தூக்கியெறியப்படும் பொருட்களாக’ சாகிறார்கள்.

“நாம் அழுகின்ற குழந்தையை போல அல்லாமல் முயற்சிப்போம்”

ஏப்ரல் 2020 ஆண்டிலேயே ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் சாத்தியக் கூறுகளை கோடிட்டு காட்டிய, திரும்பவும் நவம்பரில் இதே அரசாங்கத்தால் போடப்பட்ட ஒரு குழு உறுதிசெய்த அந்த உண்மைகளுக்கு நாம் கவனம் கொடுக்காதிருக்க முயற்சிக்கலாம். டெல்லியின் பெரிய மருத்துவனைகளில் கூட அவற்றுக்கு சொந்தமாக ஒரு ஆக்சிஜன் உருவாக்கும் கருவிகூட இல்லாதிருப்பதை கண்டும் வியக்காதிருக்க முயற்சிக்கலாம்.

பிரதம மந்திரியின் பொது நிவாரண நிதியை இடமாற்றம் செய்த மற்றும் பொது நிதியை மற்றும் அரசின் உள்கட்டமைப்பை உபயோகபடுத்திக்கொண்டு பொதுமக்களுக்கு பதில் சொல்லவேண்டிய கட்டாயத்தில் இல்லாதயாராலும் ஊடுருவி பார்க்கமுடியாத நிறுவனமாக இருக்கும் பிஎம் கேர்ஸ் நிதி (PM Cares Fund) – திடீரென ஆக்சிஜன் பற்றாகுறை பிரச்னைக்குள் தன்னை இணைத்துகொள்வதற்குள் நாம் வியக்காதிருக்க முயற்சிக்கலாம். நமக்கு கிடைக்கும் மூச்சுகாற்றில் மோடி தனக்கான பங்கினை கொண்டிருப்பாரா?

“நாம் அழுகின்ற குழந்தையை போல அல்லாமல் முயற்சிப்போம்”    

மோடி அரசுக்கு கவனம் தரவேண்டிய மேலும் அதிகமான அழுத்தம் கொடுத்துக்கொண்டிருக்கும் பிரச்னைகள் ஏராளமாக இருப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஜனநாயகத்தில் மிச்சம் மீதி இருப்பதை அழிக்கவேண்டியிருக்கிறது. இந்து அல்லாத சிறுபான்மையினருக்கு தொல்லைகளை தொடர்ந்து கொடுத்துக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது, இந்து தேசத்திற்கான அடிப்படைகளை அமைப்பதற்கான பணிகளில் கவனத்தை செலுத்துவது ஆகியவைதான் இவர்களது இடைவிடாத அட்டவணையில் இடம்பெற்றிருக்கும் முக்கியமான பணிகள்.

மிகப்பெரிய சிறைக்கொட்டடிகள் உதாரணமாக அஸாமில் பல தலைமுறைகளாக வசித்துக்கொண்டு இருக்கும் 2 மில்லியன்(20 லட்சம்) மக்களை திடீரென அவர்களது குடியுரிமையை பறித்து அடைப்பதற்கு அவசரமாக கட்டப்படவேண்டியிருக்கிறது. (இதில் நமது தன்னாட்சி கொண்ட உச்சநீதிமன்றமும் மிக அழுத்தமாக மத்திய அரசாங்கத்தின் பாதுகாவலனாக நிற்கிறது.)

கடந்த மார்ச் மாதம் வடக்கிழக்கு டெல்லியில் தங்களது இனத்தினருக்கு எதிராக நடந்த படுகொலையில் முதன்மை குற்றம்  சாட்டப்பட்டிருக்கும்  நூற்றுக்கணக்கான முஸ்லீம் மாணவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் இளம் முஸ்லீம் குடிமக்கள் விசாரணைக்குட்படுத்தப்ட்டு சிறையிலடைக்கப்படுவார்கள். இந்த நாட்டில் முஸ்லீமாக இருந்தால் படுகொலை செய்யப்படுவது கூட ஒரு குற்றம்தான். உங்கள் மக்கள் அதற்காக பணம் கொடுக்கப்படுவார்கள்.

அயோத்தியில் ராமர்கோவில் கட்டுவதற்கான துவக்க விழா இருக்கிறது. அந்த இடத்தில்தான் ஏற்கனவே மசூதி இருந்தது. அதை இந்துவெறி நாசகாரர்கள் இடித்து தரைமட்டமாக்கி விட்டார்கள் பாஜகவின் மூத்த தலைவர்கள் அங்கே இருந்து நேரில் பார்த்துக்கொண்டிருந்தனர். இப்போது அந்த இடத்தில்தான் ராமர்கோவில் கட்டப்படுகிறது. (இந்த விசயத்திலும் தன்னாட்சி பெற்றிருப்பதாக சொல்லிக் கொள்ளும் உச்சநீதிமன்றம் மிக அழுத்தமாக அரசின் பக்கம் நின்றது அதாவது நாசகாரர்களுக்கு கருணை காட்டியது).

இப்போது மிக அவசரமான அவசியமான கவனம் கொடுக்க வேண்டிய வேலை பல ஆயிரம் மில்லியன் டாலரில் திட்டமிடப்பட்டிருக்கும் களையிழந்து காணப்படும் ஆடம்பர கட்டிடங்களுக்கு பதிலாக புது டெல்லியின் ஏகாதிபத்திய மையத்திற்கான சொகுசுகட்டிடஙகள் கட்டுமான வேலைகள்தான்.

புதிய இந்து இந்தியாவின் அரசாங்கம் பழைய கட்டிடங்களில் இயங்குவது அவமானகரமானது இல்லையா? உலகத்தொற்று அபாயத்தின் காரணமாக டெல்லியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள இந்த நேரத்திலும் “சென்ட்ரல் விஸ்டா”-வின் கட்டுமான பணிகள் “அத்தியாவசிய சேவை” எனஅறிவிக்கப்பட்டு தொடர்கிறது. பல்வேறு இடங்களில் இருந்து தினமும் தொழிலாளர்கள் அழைத்து வரப்படுகிறார்கள். கட்டுமான பணிகளுக்கான திட்டத்தில் ஒரு தகன மையத்திற்கான கட்டுமானமும் சேர்க்கப்படலாம்.

மிக முக்கியமாக உத்ரகாண்ட் மாநிலத்தின் கும்பமேளாவிற்கான ஏற்பாடுகளை கவனிக்க வேண்டியுள்ளது. அப்போதுதான் மில்லியன் கணக்கான (பத்து லட்சம்) மக்கள் கங்கை நதியில் குளிப்பதற்காக ஒரு சிறிய ஊரில் ஒன்று கூடவேண்டும். ஒரே நாளில் 35 லட்சம் பேர் எவ்வித சமூக இடைவெளியுமின்றி கங்கையில் குளித்தார்கள். மொத்தம் 70 லட்சம் பேர் அங்கே ஒன்றாக கூடியிருக்கிறார்கள்.

ஆசீர்வதிக்கப்பட்ட புனிதமாக்கப்பட்ட அவர்கள் நாட்டின் பல பாகங்களிலிருக்கும் தங்கள் ஊர்களுக்கு திரும்ப செல்லும்போது கையோடு நோய் தொற்றுகளை சுமந்து சென்று பரப்புவார்கள். கும்பமேளா நிகழ்ச்சியை பற்றி மோடி ‘இது புனித நீராடலை அடையாளபடுத்துவதாக’ மிக பெருமிதமாக கூறினார். (கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற தப்லிக் ஜமாத் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த சில நூறு முஸ்லீம்கள் என்ன பாடுபடுத்தப்பட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்).

ஆனால் கும்பமேளா விசயத்தில் அவர்களுக்கு எதிராக இந்திய ஊடகங்கள் கொரோனா ஜிகாதிகள் என்று தாக்கவில்லை அல்லது மனிதகுலத்துக்கே எதிராக போர் தொடுக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டப்படவில்லை). உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வந்திருக்கும் சில ஆயிரம் ரோஹிங்யா முஸ்லீம் மக்களை கொலைவெறியோடு காத்திருக்கும் மியான்மரின் பலிபீடங்களுக்கு திரும்ப அனுப்ப வேண்டும். (இங்கேயும் தன்னாட்சி பெற்றுள்ளதாக சொல்லும் உச்சநீதிமன்ற, அரசாங்கத்தின் செயலுக்கே துணை நின்றது)

அதனால் நீங்கள் சொல்லமுடியும். இடைவிடாதவேலைகள்… வேலைகள்

நாட்டிலேயே எவ்வளவு அவசர வேலைகள் இருந்தாலும் அவற்றை ஓரம்கட்டி வைத்துவிட்டு செய்ய வேண்டிய மிக முக்கியமான வேலை இதற்கெல்லாம் மேலான மேற்குவங்க தேர்தலை வென்றாக வேண்டும். அதற்காக நாட்டின் உள்துறை அமைச்சர் மோடியின் நம்பிக்கைக்குரிய அமித்ஷா தனது இலாக்கா பணிகளை மூட்டைக்கட்டி வைத்து விட்டு மேற்குவங்கத்தின் தேர்தல் வேலைகளில் பல மாதங்களாக முழு கவனத்தையும் செலுத்த வேண்டியிருந்தது.

தனது கட்சியின் கொலைவெறி கொள்கைகளை பரப்ப வேண்டியிருந்தது. மேற்குவங்கத்தின் மூலை முடுக்குகளிலெங்கும் நகரங்கள் முதல் பழங்குடி கிராமங்கள் வரை மனிதர்களுக்கு எதிராக மனிதர்களை பகையுணர்வோடு பார்க்க தூண்டுகின்ற வகையில் நிற்க வைக்க வேண்டியிருக்கிறது.

இந்த தேர்தலை கடந்த காலங்களை போல ஒரே கட்டமாக நடத்தி முடித்திருக்க முடியும். ஆனால் பாஜக-வுக்கு இது கைப்பற்ற வேண்டிய புதிய இடம் அதோடு வெளியிலிருந்து கொண்டு வரப்பட்டிருக்கும் மோடியின் ஆட்களை வோட்டிங்கை கண்காணிக்கிற பேரில் தங்களது திட்டங்களை செயல்படுத்த தொகுதி தொகுதியாக மாற்றி கொண்டு செல்ல நேரம் தேவைப்பட்டது.

ஒரு மாதம் முழுதும் எட்டு கட்டங்களாக தேர்தலை தேர்தல்கமிசன் (நம்புங்கள் இதுவும் சுயமாக செயல்படக்கூடியதுதான்) ஏப்ரல் 29 வரை நடத்தியது. மற்ற கட்சிகள் கொரோனா தொற்று அபாயத்தை சுட்டிக்காட்டி தேர்தல் அட்டவணையை பரிசீலித்து மாற்றியமைக்க கேட்டுக்கொண்டன. இதை தேர்தல் கமிசன் ஏற்க மறுத்து பாஜக-வின் திட்டத்திற்கேற்பவே செயல்பட்டுக்கொண்டிருந்தது. பிரச்சார வீடியோக்களை பார்த்திருக்க வேண்டும். பாஜக-வின் நட்சத்திர பிரச்சாரகர் பேச்சாளர் மோடி வெற்றிகளிப்பில் மாஸ்க் போடாமல் மாஸ் காட்டினார்.

அந்த கூட்டத்தில் நெரிசலாக கூடியிருந்த மாஸ்க் போடாத மக்களிடம் தனது வழக்கமான பாணியில் பிரச்சாரம் செய்தார். பெரும் எண்ணிக்கையில் கூடி தன்னை கவுரபடுத்தியதற்காக நன்றி கூறினார். அது ஏப்ரல் 17. ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் இரண்டு லட்சத்தை தாண்டி மிக வேகமாக ராக்கெட்டை போல எகிறி கொண்டிருந்தது.

இப்போது மேற்குவங்கத்தின் தேர்தல்கள் முடிந்துவிட்டன. மேற்குவங்கம் கொரோனாவின் புதிய குடியிருப்பாக மாறியிருந்தது. புதிய மாற்றுரு மூன்றாவது ஸ்ட்ரெயின் எப்படி அழைக்கப்படுகிறது – என்னவென்று யூகியுங்கள் – ஆமாம் “பெங்கால் ஸ்ட்ரயின்” என்று. வங்காள தலைநகரம் கொல்கொத்தாவில் பரிசோதிக்கப்பட்ட ஒவ்வொரு இரண்டாவது நபரும் கோவிட் பாசிட்டிவ் ஆக இருக்கிறார். அதற்கேற்ப பாஜக-வும் தாங்கள் வெற்றி பெற்றால் வங்காளத்தின் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தது. சரி இவர்கள் வெற்றிபெறாவிட்டால்?

“நாம் அழுகின்ற குழந்தையை போல அல்லாமல் முயற்சிப்போம்”

எப்படியோ இருக்கட்டும். தடுப்பூசிகள் பற்றிய செய்திகள் என்ன? அவைதான் நம்மை காப்பாற்றும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தியா தடுப்பூசிகளின் மைய தலைமையகமாக இருந்தது உண்மைதானே? உண்மையில் இந்திய அரசு இரண்டு உற்பத்தியாளர்களை மட்டுமே முழுமையாக நம்பி இருக்கிறது. அவை சீரம் இன்ஸ்டிடியுட் ஆப் இந்தியா (SII) மற்றும் பாரத் பயோடெக். இந்த இரண்டு நிறுவனங்கள்தான் உலகிலேயே மிகவும் செலவுமிக்க தடுப்பூசிகளை தயாரித்து உலகிலேயே மிகவும் ஏழ்மை நிலையிலிருக்கும் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் தனியார் மருத்துவமனைகளுக்கு சற்றே உயர்த்தப்பட்ட விலைகளுக்கு விற்கப்படும் என்றும் மாநில அரசுகளுக்கு சற்றே குறைக்கப்பட்ட விலையில் விற்கப்படும் என்றும் அறிவித்துள்ளன. இந்த நிலையிலும் கணக்கீடுகள் வெளிபடுத்துவது அந்த நிறுவனங்கள் மக்களின் உயிர்காக்கும் தடுப்பூசிகள் மூலம் அநியாய லாபம் ஈட்டுகின்றன என்பது உண்மை.

மோடியின் ஆட்சியில் இந்திய பொருளாதாரம் காலியான டப்பாவாக காட்சியளிக்கிறது. நூற்றுக்கணக்கான மில்லியன் (10 லட்சம்) மக்கள் ஏற்கனவே நிச்சயமற்ற எந்த உத்தரவாதமுமில்லாத வாழ்க்கையை வாழ தள்ளப்பட்டுள்ளனர். இந்த கொரோனா காலத்தில் எந்த வருமானத்திற்கும் வழியில்லாமல் உயிர் வாழ்வதற்கே தவிக்கின்றனர். பெரும்பாலான மக்கள் தேசிய ஊரக வேலை உத்திரவாத சட்டத்தின்(NREGA) கீழ் கிடைக்கும் அற்ப சம்பளத்தை நம்பியே வாழ்க்கையை நடத்துகின்றனர்.

2005-ல் காங்கிரசு ஆட்சியில் இருந்தபோது கொண்டுவரப்பட்டது. பசியின் விளிம்பில் வாழ்ந்து வரும் மக்களிடம் மாத வருமானத்தில் பெரும்பகுதியை தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள செலவழிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இங்கிலாந்தில் தடுப்பூசிகள் மக்களுக்கு இலவசம் மட்டுமல்ல அடிப்படை உரிமையாகும். தடுப்பூசிகளை முறைகளை மீறி போட்டுக்கொண்டால் வழக்கு பாயும். இந்தியாவில் தடுப்பூசிகள் அவசியம் பற்றிய பிரச்சாரம் கார்ப்ரேட் நிறுவனங்களின் லாபத்தை மையமாக கொண்டுள்ளது.

இந்த காவிய பேரழிவு பற்றி நமது மோடி கூட்டணியிலுள்ள இந்திய தொலைக்காட்சி சேனல்களில் எல்லோரும் பயிற்சி பெற்ற ஒரே குரலில் பேசுவதை நீங்கள் கவனிக்கலாம். இந்த “அமைப்பு” செயலிழந்துவிட்டது இதை திரும்ப திரும்ப சொல்கிறார்கள். நோய் தொற்று இந்தியாவின் சுகாதார பராமரிப்பு “அமைப்பை” வென்றுவிட்டது.

இந்த அமைப்பு செயலிழந்து விட்டதாக சொல்வது ஏற்றுக்கொள்ளதக்கதல்ல. இந்த அமைப்பு இருக்கத்தான் செய்கிறது. இருந்த கொஞ்ச நஞ்ச மருத்துவ உட்கட்டமைப்பை இந்த மோடி அரசும் இதற்கு முன்னிருந்த காங்கிரசு அரசும் கொஞ்ச கொஞ்சமாக வேண்டுமென்றே அகற்றிவிட்டது. பொது மருத்துவ சுகாதார அமைப்பு இல்லாமலிருக்கும் நாட்டில் தி்டீரென இம்மாதிரியான உலகதொற்று அபாயம் வந்தால் இப்படித்தான் நடக்கும். இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.25 சதவீதத்தை மட்டுமே சுகாதாரத்திற்காக செலவிடுகிறது.

இது உலகின் பெரும்பாலான நாடுகள் மிகவும் பின்தங்கிய ஏழைநாடுகள்கூட செலவிடுவதை விட மிகவும் குறைவு. இதுகூட உயர்த்தப்பட்ட அளவாகத்தான் இருக்கும் ஏனெனில் முக்கியமான விசயங்கள் ஆனால் சுகாதார துறையால் கட்டாயமாக தகுதிபெறாத விசயங்கள் அதில் நழுவப்பட்டுள்ளது. அதனால் உண்மையான புள்ளிவிவரம் 0.34 சதவீதத்தை விட சிறிது அதிகமாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதில் துயரம் என்னவென்றால் இத்தகைய பாழ்படுத்தப்பட்ட ஏழை நாட்டில் 2016-ல் Lancet அறிவியல் பத்திரிகை நடத்திய ஆய்வில் நகர்புறத்தில் 78 சதவீதமும் கிராமப்புறங்களில் 71 சதவீதமும் சுகாதார அமைப்பு தனியார் கைகளில் விடப்பட்டுள்ளது. பொதுத்துறைகள் வசமிருந்த உள்கட்டுமானங்கள் முறையாக தனியார்களுக்கு கைமாற்றப்பட்டுள்ளது. ஊழல் நிர்வாகிகளால் மற்றும் மருத்துவ பயிற்சியாளர்கள் காப்பீட்டு திட்ட ஏமாற்றுகள் மூலம்.

சுகாதாரம் பேணுதல் ஒரு அடிப்படை உரிமை. எந்த ஒரு தனியார் நிறுவனமும் கட்டணமில்லாமல் பட்டினியால் வாடும் மக்களுக்கு உணவும் நோயுற்றவர்களுக்கு மருத்துவமும் இறக்கும் தருவாயில் இருப்போருக்கு சுகமளித்தலும் நிச்சயமாக செய்யாது. இப்படிப்பட்ட நிலையில் வறுமையில் வாடும் மக்களை பெரும்பான்மையாக கொண்ட இந்தியாவில் மருத்துவசேவையை அரசே ஏற்று நடத்தாமல் தனியார் நிறுவனங்களின் லாபம் குவிக்கும் நோக்கத்துக்கு கையளித்த்து ஒரு தண்டனைக்குரிய குற்றமாகும்.

இந்த அமைப்பு செயலிழக்கவில்லை. அரசாங்கம் மக்களை தங்களின் நலனுக்காக செயல்படும் உணர்ச்சிகளற்ற பொம்மைகளாக கருதுவதால் அவர்களுக்கு எதிரான செயல்பாடுகளை விதியே என்று எளிதாக கடந்துவிடுவார்கள் என்ற மிதப்பில் அதிகாரம் நீடித்து நிலைக்கும் என்று செயல்படுகிறார்கள். அரசாங்கம் தோற்றுவிட்டது. தோற்றுவிட்டது என்பது கூட சரியான வார்த்தை இல்லை நாம் இங்கே சாட்சிகளாக பார்த்தக்கொண்டிருப்பது தங்களது கடமையை தெரிந்தே அலட்சியம் செய்யும் குற்றச்செயலை மட்டும் அல்ல! ஆனால் மனித சமூகத்திற்கு எதிரான ஒரு பூரணமான குற்றத்தை!

வைராலாஜிஸ்டுகள் இந்தியாவில் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வெகு சீக்கிரம் ஒரு நாளைக்கு ஐந்து லட்சத்தை தொட்டுவிடும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கிறார்கள். அநியாயமாக பலியாகும் அப்பாவி மக்களின் எண்ணிக்கை நினைத்து பார்க்க முடியாத அளவு அதிகமாகும் என்று எச்சரிக்கிறார்கள். நமக்கு காத்திருக்கும் பயங்கரமோ அல்லது இழிவுபடுத்தலோ எதையும் அறியாமல் வாழ்கிறோம். எல்லாவற்றுக்கும்மேலாக மனித கவுரவம் இழிவுபடுத்தப்படுகிறது. மௌனமாக இருக்க வேண்டிய காலமா இது?

“மோடி ராஜினமா செய்ய வேண்டும்” என்ற ஹாஷ்டேக் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவுகிறது. மோடி என்ற தீர்க்கதரிசி சடலங்களின் பேரணியில் உரை நிகழ்த்துகிறார் என்பதாக மீம்ஸ்கள் சமூக ஊடகங்களில் பரவுகின்றன.

வரலாறெங்கும் கொடுங்கோலர்களின் வரையறைகளை தீர்மானிக்கப்போவது வேறுயாருமல்ல! அவர்கள் யாரை அடக்கி ஒடுக்கி வைத்திருக்கிறார்களோ அவர்கள்தான் அந்த “அப்பாவி மக்கள்தான்”.

படிக்க :
♦ கொரோனா : ஏகாதிபத்திய உலகக் கட்டமைப்புக்குள் மூச்சுத் திணறும் மனித சமூகம் !
♦ இந்தியாவில் கோவிட்-19 : பதிலளிக்கப்படாத கேள்விகள் || கரண் தாபர்

இந்தியாவில் இருக்கும் நாம் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு வாழும் நமது தன்மைக்காக எப்படி பெருமைப்பட்டுக் கொள்கிறோம்? மத்திஸ்துவம் செய்து கொள்வதற்கு எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கி இருப்பதற்கு நமது கோபத்தை அடக்கி கொள்வதற்கு எவ்வளவு அழகாக நமக்கு நாமே பயிற்சி பெற்றிருக்கிறோம்? நம்மால் ஒரு சமத்துவத்தை பெற இயலாத தன்மையை எப்படி நியாயபடுத்திக்கொள்கிறோம்? நமது அவமானங்களை சகித்துக் கொள்ளுமளவு எவ்வளவு பலகீனமாக இருக்கிறோம்?.

அதனால் அவர்களால் ஒன்றிணைக்கப்பட்ட நரகத்தில் இங்கே நாம் இப்போது இருக்கிறோம்.  ஜனநாயகத்தை உயிர்ப்போடு இயங்கவைக்க அவசியமான அத்தனை சுயாட்சி பெற்ற நிறுவனங்களும் சமரசம் செய்துகொண்டு அடங்கி போய்விட்டன. ஒரே ஒரு நோய்தொற்று மட்டும் கட்டுக்கடங்காமல் இருக்கிறது.


மூலக்கட்டுரை : அருந்ததிராய்
மொழியாக்கம் : மணிவேல்
நன்றி : The Guardian

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க