ந்தியாவில் மோடி ஆட்சியை விமர்சித்தாலும் சரி, எதிர்த்து குரல் கொடுத்தாலும் சரி அவர்களை அச்சுறுத்தி முடக்கிப்போடும் விதமாக பொய்வழக்குகளும் சிறைவாசமும் பாய்ந்து குதறுகின்றன. இது ஆண்டுக்காண்டு அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதுதான் மோடியின் அமைதி தவழும் முகத்தின் – மோடி ஆட்சியின் – உண்மையான பக்கம்.
அதுமட்டுமல்ல, வெளியில் இருந்தாலே இவர்களது வார்த்தைகள் மக்களை தட்டி எழுப்பும் என்று மோடி, யாரையெல்லாம் நினைத்து கனவிலும் பயந்து கொண்டிருக்கிறாரோ, அவர்களும் பொய் குற்றச்சாட்டின் அடிப்படையில் விசாரணையின்றி சிறையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு பிணை மறுக்கப்படுகிறது. மருத்துவ வசதிகள் மறுக்கப்படுகின்றன. அப்படி மறுக்கப்பட்டதால் மலைவாழ் மக்களின் உரிமைப் போராளி ஸ்டான் சுவாமி சிறையிலேயே இறந்து போனார். உடல்ரீதியாக அசைவில்லாமல் சக்கர நாற்காலியில் வாழக்கையை ஓட்டும் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா, அவரும் சிறைக்குள் பிணையோ மருத்துவ வசதியோ கிடைக்காமல் இருக்கிறார்.
இதல்லாமல் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்கான குரலாய் வெடித்து கிளம்பிய, இடதுசாரிகள் அறிவுஜீவிகள் ஆகியோருடன் கூட்டணியாய் இலட்சக்கணக்கான மக்களை ஒன்றுதிரட்டிய பீமா கோரேகான் போன்ற ஒரு நிகழ்ச்சியை மீண்டும் அவர்கள் நினைத்துக் கூட பார்க்கக் கூடாது என்பதற்காக அந்த நிகழ்வில் பங்கேற்காதவர்கள் உட்பட  அறிஞர்கள், ஆர்வலர்கள், பாடகர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் என 16 பேர், இன்றைக்கு பொய் வழக்குகளில் சிறைபடுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளில் ஒன்று, மிக நகைப்புக்குரியது, ‘மோடியை கொலை செய்ய திட்டம் தீட்டினார்கள்’ என்பது. இன்றுவரை போலீசுத்துறையால் அதற்கான ஆதாரங்கள் எதையும் நீதிமன்றத்தில் சமர்பிக்க முடியவில்லை.
CAA (குடியுரிமை திருத்தச் சட்டம்)-வுக்கு எதிராக போராடி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஆர்வலர்கள், உழைக்கும் மக்கள் மற்றும் ஐந்து மாதங்களுக்கு முன் காஷ்மீரில் கைது செய்யப்பட்ட குர்ரம் பர்வேஸ் ஆகியோரை நினைவில் கொண்டுவர வேண்டும். அவரும் (குர்ரம் பர்வேஸ்) அவர் பணிபுரியும் அமைப்பான ஜம்மு – காஷ்மீர் சிவில் சொசைட்டி (ஜேகேசிசிஎஸ்) அமைப்பும் பல ஆண்டுகளாக காஷ்மீர் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட சித்திரவதைகள், மர்மமான முறையில் காணாமல் போனவர்கள் மற்றும் மரணங்கள் ஆகியவற்றின் உண்மை தன்மைகளை ஆராய்ந்து கண்டுபிடித்து வெளிக்கொண்டு வந்திருக்கின்றனர். இன்றைக்கு அவர்கள் அனைவரையும் நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.
படிக்க :
♦ சிசிடிவி-யை அகற்றகோரி சிறையில் பேராசிரியர் சாய்பாபா உண்ணாவிரதப் போராட்டம் !
♦ குற்றவியல் நடைமுறை (திருத்த) மசோதா 2022 : ஜனநாயகத்தின் கழுத்தை நெறிக்கும் டிஜிட்டல் பாசிசக் கொடுங்கரங்கள்!
பாஜக-வை, ஆர்.எஸ்.எஸ்-ஐ, மோடியை, ஆதித்யநாத்தை கருத்தியல் ரீதியாக வேறுபட்டு விமர்சிப்பவர்கள் அனைவரும் இந்தியாவில் ‘தேசவிரோத குற்றவாளி’ யாக்கப் படுகின்றனர். அதன் பரிணாம வளச்சியாக இப்போது ‘அறிவார்ந்த பயங்கரவாதிகள்’ என்று வெளிப்படையாக முத்திரை குத்தப்பட்டு அது எங்கெங்கும் ஒலிக்கும் படி பார்த்துக் கொள்ளப்படுகிறது.
பல ஆண்டுகளாக, சாதாரண மக்களை, அவர்களுக்கு ஆதரவாக குரல்கொடுப்பவர்களை, அடக்கி ஒடுக்கி எவ்வித விசாரணையுமில்லாமல் கொட்டடிகளில் அடைத்து வைக்க உதவிக் கொண்டிருந்த கொடூரமான ‘சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்’ (ஊபா) மோடியால் அறிவிக்கப்ட்ட ‘அறிவார்ந்த பயங்கரவாதிகள்’ மீதும் எளிதாக பாய்ச்சும் வகையில் இப்போது திருத்தப்பட்டுள்ளது.
அதோடு அவர்களெல்லோரும் ‘மாவோயிஸ்டுகள்’ என்று முத்திரை குத்தப்பட்டுள்ளார்கள். அதற்கு நாட்டுப்புற பாஷையில் ‘நகர்ப்புற – நக்சல்கள்’ அல்லது ‘ஜிஹாதிகள்’என பழக்கியுள்ளார்கள்; அவர்கள் அனைவரும் அவர்களுக்கு தெரியாமலே எப்போதும் குறிவைக்கப்பட்டுள்ளார்கள். எப்போது வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலையில்தான் இருக்கிறார்கள்.
இந்தியாவை விட்டு வெளியே செல்லும்போது, நாம் ஒருவித திடுக்கிடும் நடவடிக்கைகளை உடைய வாசலைத் தாண்டிவிட்டோம் என்பதாக உணருகிறோம். இந்த நாடு நமதுதான், நமது சொந்த பூமிதான் என்ற உணர்வு ஒவ்வொருவரிடமிருந்தும் கரைந்து கொண்டிருக்கிறது. அது எப்போது திரும்ப வரும் என்பதற்கான உத்திரவாதத்தை பெற என்ன செய்ய வேண்டும்?
மார்ச் 2022-ல், பாரதிய ஜனதா கட்சி (BJP) இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. UP தேர்தல்கள் எப்போதுமே நாட்டின் பாராளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதப்படும். அந்த வகையில் மே 2024-ல் எதிர்பார்க்கப்படும் பொதுத் தேர்தலுக்கான “அரை இறுதி” ஆட்ட வெற்றியாக உ.பி தேர்தல் வெற்றிகள் கருதப்படுகிறது.
ஆனால், ஒரு விசயத்தை நாம் மறந்துவிடக்கூடாது. தேர்தல் பிரச்சாரம் என்பது, காவி அங்கி அணிந்த சாமியார்களால் பகிரங்கமாக ‘முஸ்லீம் சமூகத்தை இனப் படுகொலை செய்யவும் மற்றும் அவர்களை சமூக மற்றும் பொருளாதார புறக்கணிப்பு செய்யவும்’  விடுத்த அச்சமூட்டும் அறைகூவல்களாலும் அதை செய்ய வேண்டும் என்ற தூண்டுதல்களாலும் நிரம்பி இருந்தது.
தேர்தலில் பாஜக-வின் வெற்றி வலுவானதாகத் தோன்றினாலும், களத்தில் அவர்கள் மிகுந்த நெருக்கடிகளையும் கடுமையான போட்டியையும் எதிர்கொண்டார்கள் என்பதுதான் உண்மை. இதன் விளைவாக பாஜக தொண்டர்கள் மற்றும் தலைவர்களிடையே ஒரு விசித்திரமான, ஏற்றுக்கொள்ள முடியாத கவலை மற்றும் வெற்றியின் மூலம் கிடைத்த அதீத நம்பிக்கை ஆகியவற்றின் கலவையை உருவாக்கியுள்ளது.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடனேயே, இந்த ஆண்டு ரம்ஜானுடன் இணைந்த ராம நவமி பண்டிகையை பாஜக – ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் இந்துக்களை கொண்டாட வைத்தனர். ராம நவமியைக் குறிக்க, வன்முறை முழக்கங்களுடன் பாஜக – ஆர்.எஸ்.எஸ் இந்துவெறி கும்பல் – கைகளில் ஆயுதங்கள், வாள்கள் மற்றும் தடிகளுடன் பதினொரு நகரங்களின் வீதிகளில் ஊர்வலம் என்ற பெயரில் வெறியாட்டம் நடத்தினார்கள்.
சாமியார்கள் மற்றும் பாஜக செயல்பாட்டாளர்கள் தலைமையில், அவர்கள் முஸ்லீம் குடியிருப்புகளுக்குள் நுழைந்தனர்; மசூதிகளுக்கு வெளியே கூச்சலடித்தும், விசிலடித்தும் இழிவுப்படுத்தினார்கள். ஆபாசமான வார்த்தைகளைக் கொண்டு கோஷமிட்டனர், பகிரங்கமாக மேடைகள் தோறும் “முஸ்லீம் பெண்களை பலாத்காரம் செய்து கருவூட்டவைப்பது மற்றும் இனப்படுகொலை செய்வதற்கு” பகிரங்கமாக பொதுவெளிகளில் வெளிப்படையாக தூண்டினார்கள்.
இம்மாதிரியான அச்சமூட்டும் பயங்கரவாத கொடுமைகளுக்கெதிராக முஸ்லீம்கள் எடுத்து வைக்கும் எந்த தற்காப்பான நடவடிக்கைகளும் அவர்களை சமூகத்தில் வாழ தகுதியில்லாத குற்றவாளிகளாக்கி, அவர்களது சொத்துக்கள் அரசாங்கத்தாலேயே புல்டோசர்கள்கள் மூலம் அழித்தொழிக்கப் படுவதற்கே வழிவகை செய்தது அல்லது இந்துமதவெறி கும்பல்கள் அவற்றை எரித்து நாசமாக்கினர்.
சதித்திட்டமிட்டு கலவரம் செய்தார்கள் என்ற பெயரில் கைது செய்யப்பட்டவர்கள், ஏறக்குறைய பெரும்பாலானவர்கள் முஸ்லீம்கள்தான். அவர்கள் எவ்வித விசாரணையும் இன்றி தங்கள் வாழ்நாளில் பெரும்பகுதியை சிறையில் கழிக்க வேண்டி வரும். இதில் கொடுமை என்னவென்றால் குற்றம் சாட்டப்பட்டவர்களில் பலர் ராம நவமிக்கு முன்னதாகவே வெவ்வேறு வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டவர்கள்.
மற்றொருவர், வாசிம் ஷேக், பாஜக – ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் நடத்திய இந்து மத ஊர்வலத்தின்மீது கற்களை வீசி கலவரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்; என்ன ஆச்சிரியம்! அவர் இரண்டு கைகளும் துண்டிக்கப்பட்டவர் மற்றும் முன்கைகள் இல்லாதவர். அவர்களின் வீடுகளும் கடைகளும் கூட அரசாங்கத்தால் புல்டோசர்களை கொண்டு அடித்து நொறுக்கப்பட்டன. சில நகரங்களில் வக்ரமனம் படைத்த தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் புல்டோசர்களுக்குள் சவாரி செய்து படம் பிடித்து வெறியூட்டி மகிழ்வித்தனர்.
1984 சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகளுக்கு அடுத்து ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிராக நடத்தப்பட்ட மிகப்பெரிய வன்முறை 2020-ல் முஸ்லீம்களுக்கெதிராக டெல்லியில் நடத்தப்பட்ட வன்முறை ஆகும். அந்த கலவரத்தில் ஏராளமான முஸ்லீம்கள் தாக்கப்பட்டனர்! படுகொலை செய்யப்பட்டனர்!! குறிவைத்து அவர்களது சொத்துகள் சூறையாடப்பட்டன!!!
உதாரணத்திற்கு டெல்லி சிவவிஹாரில் இருந்த 30 வீடுகளில் 27 வீடுகள் முஸ்லீம்கள் குடியிருந்தனர். மூன்று வீடுகள் மட்டுமே முஸ்லீம் அல்லாதவருடையது. கலவரத்தில் அந்த 27 வீடுகள் மட்டும் அடித்து நொறுக்கி தரைமட்டமாக்கப்பட்டன. அந்த முஸ்லீம் குடும்பங்கள் அங்கே வாழ முடியாத நிலை ஏற்பட்டது. மீதி மூன்று வீடுகள் எந்தவித சேதாரமுமின்றி பாதுகாப்பாக இருந்தன. வாக்காளர் பட்டியலுடன்தான் வன்முறையாளர்கள் களத்தில் கலவரத்தை செய்தனர்.
இந்த கலவரங்களுக்கு முன்னதாக, போராடிக் கொண்டிருந்த முஸ்லீம் மக்களை குறிவைத்து அவர்களை தாக்கி அந்த இடத்திலிருந்து காலி செய்யவைக்க, காவி குண்டர்களுக்கு வெறியூட்டும் விதமாக, தாக்குதலை நடத்த அனுமதியும் அங்கீகாரமும் கொடுக்கும் விதமாக கபில் மிஸ்ரா, அனுராக் தாகூர், பர்வேஷ் வர்மா போன்ற பாஜக தலைவர்கள் பகிரங்கமாக பொதுவெளியில் தொடர்ந்து பேசி வந்தனர். இவர்களின் பேச்சுக்கள்தான் அந்த கலவரத்துக்கான காரணமாக அமைந்திருந்ததை முன்னாள் போலீசுத்துறை தலைவர் ஜீலியோ ரெபைய்ரோ உட்பட பலரும் அம்பலபடுத்தியிருந்தனர்.
குறிப்பாக, அனுராக் தாகூரின் “கோலி மாரோ” முழக்கம். போராடிக் கொண்டிருந்தவர்களை அங்கிருந்து கலைந்து செல்லாவிட்டால் “துரோகிகளை சுட்டுத் தள்ளுங்கள்” கோஷம்!
இப்படியெல்லாம் ‘பொதுவெளியில் மற்றொரு சமூகத்தினருக்கு எதிராக வன்முறையை தூண்டும் விதமாக பேசி விஷத்தை கக்கியிருந்தாலும் அதை பேசும்போது அவர்கள் புன்னகையுடன் காணப்பட்டால் அது குற்றமாகாது’ என்று டெல்லி உயர்நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்து கலவரங்களை வெளிப்படையாகத் தூண்டிய பாஜக தலைவர்களை விடுவித்தது.
இப்போது விடுதலையான அவர்களில் சிலர் மற்ற நகரங்களின் தெருக்களுக்குத் சென்று, ‘புன்னகையோடு’ இதேபோன்ற வன்முறையைத் தூண்டியுள்ளனர்.
அதேவேளையில் இளம் முஸ்லீம் அறிஞர் முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித் இன்னும் சிறையில் இருக்கிறார். அவர் மீதான போலீசுத்துறையின் குற்றப் பத்திரிகையில்” 2020 டெல்லி படுகொலைக்கான சதித்திட்டத்தில் பங்கேற்று அதனை வழிநடத்தியதை மறைப்பதற்கான நடவடிக்கையே CAA எதிர்ப்புப் போராட்டங்களின்போது,’ இந்திய அரசியலமைப்பை நிலைநிறுத்தும் வகையில் சகோதரத்துவம், அன்பு மற்றும் அகிம்சை பற்றி உமர்காலித் பேசியிருந்தது” என குறிப்பிட்டிருந்தனர். ஒரு முஸ்லீம் இந்திய தேசிய கொடியை உயர்த்தி அரசியலமைப்பு சட்டத்தை காக்க வேண்டும் என்று பேசினாலும் அது சந்தேகத்துக்குரியதாக பார்க்கப்படும். பாஜகவினர் கொலைகள் செய்தாலும் புன்னகையுடன் செய்தார்கள் என்று சொல்லி விடுவிக்கப்படுவார்கள்!
இது மட்டுமா? டொனால்ட் டிரம்பின் அரசுமுறை பயணத்தின்போது இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காகவே, முஸ்லீம்கள் ‘தாங்களே கலவரத்தை ஏற்படுத்தி, தாங்களே தற்கொலை செய்து கொள்ளவும்’ சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இவை அனைத்தின் மூலமாகவும்தான்,– ‘2002-ம் ஆண்டு குஜராத்தில் முதலமைச்சராக இருந்தபோது முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகள் மூலம்தான் பிரதமர் நரேந்திர மோடியின், சொந்த அரசியல் பயணமும் பெரும் பாய்ச்சலுடன் தொடங்கியிருந்தது என்பதை மறந்துவிடக் கூடாது’, – நாடு முழுமைக்கும் மோடி ஒரு உதாரண புருஷராக முன்னிறுத்தப்பட்டுள்ளார்.
ஆனால், அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? இம்மாதிரியான நேரங்களில் பெரும்பாலும் மௌனமாக இருக்கிறார். அதைவிட பெரும்பாலும் உதிரி கும்பல்களின் முன்னணியில் நின்று அதை வழிநடத்தி செல்பவராக, அந்த கும்பல்களின் தேவ தூதுவராக மற்றும் அவர்களின் வழிகாட்டியாக இருந்து, வாட்ஸ்அஃப் போன்றவை பரப்பும் விஷமத்தனமான வதந்திகளான ‘முஸ்லீம்களால் நிகழ்த்தப்பட்டதாக புனையப்பட்ட மிகைப்படுத்தப்பட்ட வரலாற்று அடக்குமுறை மற்றும் இனப்படுகொலை போன்ற பொய்யான வரலாற்றுக்கு’ இப்போது இங்கே பழிவாங்குவதற்காக முனைப்புடன் செயல்படுகிறார்.
இப்போது நாம் உண்மைகளே அல்லாத அபாயமான ஒரு பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இங்கே நாம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவோ அல்லது குறைந்த பட்சம் அதைப்பற்றிய விவாதத்தை முன்னெடுக்கும் வகையிலான உண்மைகள் அல்லது வரலாறுகள் எதுவும் அனுமதிக்கப்படாத அல்லது இல்லாத ஒரு ஆபத்தான இடத்தில் நாம் தற்போது இருக்கிறோம்.
விவரிப்புகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளாமலும் அல்லது ஒன்றுடன் ஒன்று முரண்பட்டுக் கொள்ளாமலும் இருக்கின்றன.
இது என்ன என்றால் வரலாற்று உண்மைகளுக்கு எதிராக மேம்பட்ட வகையில் ஆரவாரத்துடன் கற்பனை கட்டுக்கதைகளை உண்மையைபோல திரித்து வைத்து ஏற்றுக்கொள்ள வைப்பதற்கான தகிடுதத்தம் ஆகும்.
புராண கட்டுக்கதைகளை மக்கள் மனதுக்குள் இவைதான் உண்மை என்று உட்காரவைக்க சகல அரசு இயந்திரங்களும் இரவு பகல் பாராமல் வேலை செய்கின்றன. கார்ப்பரேட்கள் கோடிக்கணக்கில் பணத்தை அள்ளித்தருகின்றன. இவை மட்டுமா? சாதாரண அப்பாவி மக்களின் வாழ்வோடு ஒன்றி போயிருக்கும் எண்ணற்ற 24/7 தொலைக்காட்சி செய்தி மற்றும் பொழுது போக்கு சேனல்கள் நாள் முழுதும் ஓய்வில்லாமல் இதைத்தான் செய்து கொண்டிருக்கின்றன. அவற்றின் எல்லையும் ஆற்றலும் ஈடு இணையற்றது. இதில் பலியாகாத மனித மனம் இருக்க முடியாது.
இந்த உலகம் இதற்கு முன்பும் இங்கேதான் இருந்தது. ஆனால், இப்போது விவாதங்கள் முடிவுக்கு வரும் அந்த நேரத்தில் ஒரு போர்க்களத்தில் நிற்கும் அனுபவத்தை நாம் உணருவோம்.
சமூக வாழ்க்கையில் அன்றாடம் கடமைகளை நிறைவேற்றும் நபராக நடமாடும் நாம் திடீரென மரண தண்டனை விதிக்கப்பட்டவராகவோ அல்லது சிறைகொட்டடியில் அடைக்கப்படுபவராகவோ மாறும்போது நமது நிலை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்! மனதில் ஏற்படும் அச்ச உணர்வு! உடம்பெங்கும் நகரும் நரம்புகளின் நடுக்கம்!! சமூக வெளிகளில் யாரைப் பார்த்தாலும் ஏற்படும் சந்தேகம்!! ஏற்கனவே ஒரு இனம் சமூகம் மதத்தால் அடையாளப்படுத்தி அப்படிப்பட்ட நிலையில்தான் வைக்கப்பட்டிருக்கிறது.
மோடி ஆட்சிக்கு வந்த பிறகு திட்டமிட்ட வகையில் ஒரு சமூகமாக, முஸ்லீம்கள் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டு, ஒதுக்கி வைக்கப்பட்டு, சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் புறக்கணிக்கப்பட்டு பெரும் அவமானத்திற்கிடையிலும் அச்சத்துடனும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
கூடுதலாக தொடர்ச்சியாக முஸ்லீம்களின் மனித உணர்வுகளுக்கு கூட கிரிமினல் சாயம் பூசி மனித இனத்திலிருந்து அகற்றும் பணியை மோடியின் பக்தர்கள் பாஜக – ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன வெறியர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு காதல் வந்தால் அது ‘லவ் ஜிஹாத்’ (முஸ்லீம் மக்கள் தொகையை அதிகரிப்பதற்காக இந்து பெண்களை காதலிக்க வைக்கும் சதி), நாட்டில் கொரோனா பரவிய நேரத்தில் முஸ்லீம்கள் சதிவேலைகள் செய்து பரவசெய்திருக்கிறார்கள், அதுதான் ‘கொரோனா ஜிஹாத்’ (கோவிட்-ஐ வேண்டுமென்றே பரப்ப சதி செய்தல், யூதர்கள் மீது நாஜிக்கள் குற்றம்சாட்டி இனஒழிப்பு செய்த்தை மறுஒலிபரப்பாக செய்கிறார்கள்) என்று இழிவான முறையில் அர்த்தம் கற்பித்து சமூக குற்றவாளிகளாக இனம் பிரித்து தொடர்ந்து அவர்கள் தன்மானத்தை சுயகவுரத்தை குத்தி கிளறி வருகிறார்கள்.
இது மட்டுமா, ‘வேலை ஜிஹாத்’ (சிவில் சர்வீசஸ்களில் வேலை வாங்கி இந்து மக்களை ஆள சதி செய்வது) – ‘உணவு ஜிஹாத்’, ‘ஆடை ஜிஹாத்’, ‘சிந்தனை ஜிஹாத்’, ‘சிரிப்பு ஜிஹாத்’ என்று எல்லாவற்றையும் ஜிஹாத் கண்ணாடி போட்டு பார்க்க வைக்கிறார்கள்.
முஸ்லீம்களிடம் இருந்துவரும் எந்த பதில் வாதமும், அவருடைய எந்த சிறிய தவறும் அவரை அடித்து நொறுக்கி, ஏன் கொலை செய்வதற்கு கூட போதுமானது! காட்டுமிராண்டித்தனமாக அதை நியாயப்படுத்தவும் செய்வார்கள்! இப்படிப்பட்ட கொலைகாரர்களைதான் பொதுவெளியில் ஹீரோ வாக்கி மாலை அணிவித்து, மரியாதைகள் செய்து வெகுமதிகள் பாராட்டுகள் அள்ளி கொடுத்து பாஜக-வும் – ஆர்.எஸ்.எஸ்-ம் மற்றவர்களுக்கு முன்னுதாராணமாக முன்னிறுத்துகிறார்கள். அவருக்கு பிரகாசமான அரசியல் எதிர்காலம் உறுதியளிக்கப்படும். இவர்களை அங்கமாக கொண்ட ஒரு சர்வ வல்லமை பெற்ற அரசாங்கத்திடம்தான் நாம் சிக்கியிருக்கிறோம்.
பல மதங்கள், மொழிகள், சாதிகள், இனங்கள் மற்றும் துணை தேசியங்களுக்கு இடையே நிலவும் அரசியல் சட்டப்படியான ஒரு சமூக ஒப்பந்தத்தினால்தான் இந்தியா ஒரு நாடாக, ஒரு நவீன தேசிய – அரசாக, அதனால் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு இந்திய குடிமகனும் ‘இந்த அல்லது அந்த’ என்று ஏதோ ஒரு வகையில் சிறுபான்மையினருடன் சம்பந்தபட்டவராக இருக்கிறார். பல்வேறு நடைமுறைகளால் கல்வி, உணவு, வியாபாரம், தொழில், தொழிற்சங்கம், மருத்துவம், கட்டுமானம், பேரிடர் காலங்களில் உதவி என அவர்களுடன் பின்னி பிணைந்துள்ளார்.
படிக்க :
♦ ம.பி : முஸ்லீம் என்று சந்தேகித்து மாற்றுத்திறனாளி முதியவரை அடித்தே கொன்ற பாஜக குண்டர்!
♦ கோகுல்ராஜ் ஆணவ படுகொலை வழக்கு : வழக்கறிஞர் ப.பா.மோகன் உரை | வீடியோ
இந்த சமூக நல்லிணக்கம்தான் மோடியின் பாஜக – ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன மேலாண்மையை நிலைநாட்டும் சித்தாந்தத்திற்கு எதிராக, பெரும் தடையாக இருக்கிறது. எனவே மக்களின் மனதில் விஷத்தை கலந்து, ஒருவருக்கொருவர் எதிரிகளாக்கி, நல்லிணக்கத்தை – ஒற்றுமையை – சீர்குலைப்பதற்காகவே நாட்டின் பெரும்பான்மையாக இருக்கும் இந்து மக்களுக்கு பெரும் ஆபத்து வந்துவிட்டதாக அதையே முதன்மை பிரச்சினையாக்கி ஆர்ப்பரித்து கூச்சலிட்டு இந்திய சமூகத்தை ஒரு பதட்டத்திலேயே இருக்குமாறு பார்ப்பன மதவெறியர்கள் பார்த்துக் கொள்கிறார்கள்.
அதன் விளைவாகவே அந்த சமூக ஒப்பந்தம் கட்டுப்பாடு, தவிடுபொடியாக்கப்பட்டு கொண்டிருக்கிறது, இந்த நாட்டில் ‘முதல் குடிமக்கள்’ மற்றும் ‘வாழ தகுதி பெற்றவர்கள்’ என தங்களை மட்டுமே கற்பிதம் செய்து கொண்டு மற்றெல்லோரையும் ‘தேசத்துரோகிகள்’ என பதியவைக்கிறார்கள்.
இந்த நாட்டை சிறுபான்மையினரையும் உள்ளடக்கிய மதச்சார்பற்ற ஒரு நாடாக உருவாக்க போராடியவர்கள்தான் நம்மைப் பற்றிய ஒரு நேர்த்தியான, களங்கமற்ற வரலாற்றை முன்வைக்க முடியும். உண்மையில் இதில் நாம் ஒடுக்குமுறைக்கு பலியானவர்களாக இருக்கிறோம். ஆனால் இன்று நடப்பதென்ன? நமது வரலாறுகள் அதன் பரப்பில் குறுக்கப்படுகிறது. வெட்டப்படுகிறது. புதிய புனைவுகள் சேர்க்கப்படுகின்றன. பல உண்மைகள் திரிக்கப்படுகின்றன. அப்படி உருவாக்கியிருக்கும் வரலாற்றின் மூலமே பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் கும்பல் நம்மை அடையாளப்படுத்துகிறார்கள்.
சாதி, வர்க்கம், மதம், பாலினம் மற்றும் இனம் ஆகியவை சமூகத்தின் மேல்மட்டத்தில் நிலவி வந்தாலும், நமது சமூகம் அதன் கருநிலையிலேயே ‘படிநிலை சாதிய ஒடுக்குமுறை’ அமைப்பாக இருக்கிறது. ‘நால்வர்ணங்களை நானே படைத்தேன்’ என்று அகம்பாவத்துடன் பேசிய கீதை, ’மனுதர்மத்தை மண்ணில் நிலைக்க செய்யவே பிறவி எடுத்ததாக செயல்பட்ட ராமன்’ இவர்களை ஆதார புருஷர்கள்ளாக அடையாளப்படுத்தி ஏற்கவைத்த பார்ப்பன கும்பலின் மேலாண்மை வெறிக்கு பலியாகி ஏற்றத்தாழ்வு இழிவுகளை ஏற்றுக்கொள்வதே நமது கர்மம் என்று ஆரம்பத்திலிருந்தே வாழ்ந்து வருகிறது.
இந்திய துணைக்கண்டம் வரையறுக்கப்பட்டு, பிரிவினைக்குள்ளான போது நூறாயிர, இலட்சக்கணக்கான மக்கள்- இந்து, முஸ்லீம் மற்றும் சீக்கியர்கள் – ஒருவருக்கெதிராக ஒருவர் என கோபத்துடன் ஆற்றாமையுடன் நின்றனர். பத்து இலட்சம் மக்கள் எல்லா தரப்பிலிருந்தும் கொல்லப்பட்டனர். பல இலட்சக்கணக்கானோர் தாங்கள் வழிவழியாக வாழ்ந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்தனர்.
தனிநபர் அல்லது ஒரு சமூகத்தின் பேரழிவு அல்லது துரதிர்ஷ்டம் பற்றிய எந்த ஒரு வரலாற்றிலும் அது எவ்வளவு உண்மையாக இருந்தாலும், மொத்த நிகழ்விலும் ஒரு பக்கத்தின் நிகழ்வுகளை மட்டும் குறிப்பாக மறைக்கும் அழிக்கும் வகையில் செயல்படும்போது அது எவ்வளவு பெரிய கொடூரமானதாக இருக்கும் என சொல்லத்தேவையில்லை. ஒரு ஆபத்தான பொய். இதன் மூலம் ஒரு வரலாற்றைத் தட்டி ஒட்டி வெட்டி தங்களுக்கேற்றவாறாக தகவமைத்துக் கொண்டு அதிலிருக்கும் சிறப்பான அம்சங்களை வெட்டி தூக்கியெறிந்துவிட்டு, அதையே தாக்குகின்ற ஆயுதமாகவும் மாற்றிக் கொள்வது, எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
துணைக் கண்டத்தில் உள்ள நம் அனைவருக்கும் இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. நமது கூட்டு மனசாட்சியை உறுத்தும் வலி மற்றும் வெறுப்பை வெளியேற்றி, நீதிநெறிகளை பற்றி நமக்குள் பகிரப்பட்டிருக்கும் கருத்துகளை நோக்கி செயல்படுவது, அல்லது அதை மேம்படுத்திக் கொள்வது. அப்படி மேம்படுத்துவதற்கு இந்தியப் பிரதமர், அவர் தலைமை வகிக்கும் அரசியல் கட்சியான பாஜக மற்றும் அதன் தாய் அமைப்பான, ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கம் (RSS) – அவர் அங்கம் வகிக்கும் ஒரு பாசிச அமைப்பு – ஆகியவற்றை தேர்ந்தெடுத்துள்ளனர்.
நமது இரத்தம் தோய்ந்த பூமியின் உட்பகுதியிலிருந்து புரியாத தீயசக்திகளை வெளிக் கொணர்ந்து உலவ விடுகிறார்கள். அவர்கள் பற்ற வைத்த நெருப்பு ஒரு வரையறுக்கப்பட்ட குறிப்பிட்ட பாதையோடு நின்று விடாது. அது நாட்டையே எரித்து சுடுகாடாக்க கூடும்.
இப்போது தீப்பிடிக்க ஆரம்பித்துவிட்டது. இந்தியா மற்றும் காஷ்மீர் முஸ்லீம்களுடன், கிறிஸ்தவர்களும், அவர்களின் தாக்குதல் இலக்கில் முன் வரிசையில் இருக்கின்றனர். கடந்த ஆண்டில் மட்டும், தேவாலயங்கள் மீது நூற்றுக்கணக்கான தாக்குதல்கள் நடந்துள்ளன. கிறிஸ்துவின் சிலைகள் அவமதிக்கப்பட்டன, பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாலியல்ரீதியாகவும் தாக்கப்படுகின்றனர்.
நாம் நமது சொந்த கைகளை கொண்டுதான் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலைமையில் இருக்கிறோம். வெளியிலிருந்து எந்த உதவியும் வராது. ஏமனில் படுகொலைகள் நடந்தபோது உதவிக்கு யாரும் வரவில்லை. இலங்கைக்கும், ருவாண்டாவுக்கும் வரவில்லை. இந்தியராகிய நாம் மட்டும் ஏன் எதிர்பார்க்க வேண்டும்?
சர்வதேச அரசியலில், இலாபம், அதிகாரம், இனம், வர்க்கம் மற்றும் புவிசார் அரசியல் மட்டுமே ஒழுக்கத்தை தீர்மானிக்கிறது. மற்ற அனைத்தும் வெறும் தோரணை, நிழல் நடனம்.
பட்ட பகலில் நாடு முழுமையும் உள்ள மக்கள் கண்முன்னே கற்பனையான படுகொலை சதிகளால் தயாரிக்கப்பட்ட வெறித்தனத்தோடு ஆயிரக்கணக்கான முஸ்லீம்களை படுகொலை செய்து அதன் மூலமாக ஓட்டு வங்கியை கைப்பற்றி அதிகாரத்திற்கு வந்த மனிதர்களால் இந்தியா ஆளப்படுகிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
ஆனாலும், ஒவ்வொரு சாதி மற்றும் மதத்தைச் சேர்ந்த சாதாரண மக்களிடமிருந்தும், முஸ்லீம்களுக்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து போராடியவர்களிடமிருந்தும், கடந்த ஆண்டு நடைபெற்ற வரலாற்று சிறப்பு மிக்க விவசாயிகள் இயக்கத்திலிருந்தும், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலுள்ள பிராந்திய அரசியல் கட்சிகளிடமிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது மட்டுமல்ல இந்த மாநில அரசியல் கட்சிகள் தோளோடு தோள் சேர்ந்து பாஜக-வை சில மாநிலங்களில் மட்டும் தோற்கடிக்கவும் செய்தன.
இப்போது நாட்டில் நடக்கும் சகிக்கவொண்ணாத செயல்களை பெரும்பான்மை இந்தியர்கள் ஏற்கவில்லை என்று சொல்வதுதான் சரியானதாகவும் நியாயமானதாகவும் இருக்கும். ஆனால், அவர்களின் மறுப்பு பெரும்பாலும் அப்போதைய வெறுப்பினடிப்படையில்தான் வெளிப்படுகிறது, விதியை நொந்து கொண்டு நம்மால் செய்ய முடிந்தது இதுதான் என மெளனமாக இருப்பது நியாயமானதல்ல.
ஏனெனில் பாசிசத்தின் கொடுமைகளை திட்டமிட்டு அரங்கேற்றிக் கொண்டிருப்பது நன்கு பயிற்சியளிக்கப்பட்ட, அதற்கேற்ற முறையில் சகல வசதிகளும் செய்துதரப்பட்டுள்ள, வன்முறைகளுக்கு அஞ்சாத, எந்த சட்டஒழுங்கிற்கும் நீதிமன்ற தீர்ப்புகளுக்கும் கட்டுப்படாத ஒரு ஆயுதம் தாங்கிய சமூக விரோத பாசிச கும்பலின் ஆர்ப்பரிக்கும் செயல்களின் முன் நம்முடைய மௌனமும் அல்லது ஓட்டுப்போடுவதன் மூலமே மாற்றத்தை கொண்டுவந்துவிடலாம்; அதுதான் நமக்கு விதிக்கப்பட்டிருக்கும் விதி என்று முடங்கிக் கொள்வதும் முற்றிலும் பயனற்றது. பாசிசத்தை எதிர்கொண்டு வீழ்த்திய வரலாறுகள் நம்முன்னே காணக்கிடக்கின்றன.
ஒரே தேசிய எதிர்க்கட்சியான இந்திய தேசிய காங்கிரசு, பாஜக-வை எதிர்ப்பதற்கான சித்தாந்த பலமோ தொண்டர்கள் வலிமையோ இல்லாமல் திணறிக்கொண்டிருப்பதையே கண்கூடாக பார்க்கிறோம். மதவெறி பாசிசத்தை எதிர்கொள்வதற்கான ஒரு உறுதியான நிலைப்பாட்டினை எடுக்க மன தைரியத்தையும் அந்தக் கட்சி கொண்டிருக்கவில்லை. இதுவரை நாடு முழுதும் எதிரொலிக்கும் வகையிலான போராட்டங்களை முன்னெடுக்கவில்லை.
நாட்டிலுள்ள மாநிலத்திலுள்ள பெரிய கட்சிகளும் பாஜக-வை எதிர்த்து – அதன் ஆட்சி அவலங்களை எதிர்த்து – நாட்டை உலுக்கும் போராட்டங்களை முன்னெடுக்க வக்கற்று கிடக்கின்றன. பாசிச கொடுமைகளை அனுபவிக்கும் உழைக்கும் மக்களுக்கு மீண்டும் மீண்டும் தேர்தல் பாதையே தீர்வாக வைக்கப்படுகிறது. அந்த தேர்தலையே தனது இஷ்டத்திற்கு நடத்தும் பாஜக-வின் முன் இது எப்படி தீர்வாகும்.
“காங்கிரஸ் முக்த் பாரத்” -காங்கிரஸ் கட்சி இல்லாத இந்தியாவுக்கான மோடியின் அழைப்பு உண்மையில் எதிர்க்கட்சிகளே இல்லாத அரசாங்கத்திற்கான அழைப்பு ஆகும். இதை நாம் வேறு என்ன பெயர் சொல்லி அழைக்க விரும்பினாலும், இருக்கும் கொஞ்சநஞ்ச ஜனநாயகத்தையும் ஒழித்துக்கட்டும் வேலைதான் இது என்பதுதான் உண்மை.
ஒரு தேர்தல் ஜனநாயகத்தின் அனைத்து அலங்கார வேலைகளையும் திரைகிழித்து உள்ளிருக்கும் அலங்கோலங்களையும் கசடுகளையும இந்தியா இப்போது வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. என்றாலும், நம்மை மதச்சார்பற்ற, சோசலிசக் குடியரசு, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட; ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியால் நடத்தப்படும் ஒரு பாராளுமன்றம், ஒரு சுதந்திரமான நீதித்துறை மற்றும் சுதந்திர ஊடகம் – என்று அழைத்துக் கொள்ள வகை செய்யும் ஒரு அரசியல் சட்டத்தை காட்டிக் கொண்டிருக்கிறார்கள்!
உண்மையில், இந்த அரசு இயந்திரம் (அதிக அளவில், நீதித்துறை, சிவில் சேவைகள், பாதுகாப்புப் படைகள், புலனாய்வுப் பிரிவுகள், போலீசுத்துறை மற்றும் தேர்தல் கமிஷன்உட்பட) நேரடியாகக் கையகப்படுத்தப்படாவிட்டாலும், இந்தியாவின் சக்திவாய்ந்த அமைப்பான, வெளிப்படையான பாசிச, பார்ப்பன தேசியவாத ஆர்.எஸ்.எஸ்.-ல் உள்ளிருந்து ஆழமாகச் செல்வாக்கு செலுத்தப்படுவதை நேரடியாக கண்கூடாக நாம் உணர்கிறோம் என்பதே உண்மை. இது பல நேரங்களில் அரசு நிறுவனங்களுக்கும் மேலாக நின்று ஆணைகள் போட்டு செயல்படுத்துவதையும் நாம் பார்க்கிறோம்.
1925-ல் நிறுவப்பட்ட ஆர்.எஸ்.எஸ், இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டங்களை தூக்கியெறிந்துவிட்டு அதற்கு நேர் எதிராக நின்று ‘இந்தியாவை இந்து ராஷ்டிரா – இந்து தேசமாக’ அறிவிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக பிரச்சாரம் செய்து வருகிறது. ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதிகள் ஹிட்லரை வெளிப்படையாகப் போற்றி புகழ்கின்றனர். இந்திய முஸ்லீம்களை, ஜெர்மனியின் நாஜிகள் எப்படி யூதர்களை நடத்தினார்களோ, அதே பாணியில் அதே நடைமுறைகளை பயன்படுத்தி கையாள்கின்றனர்.
ஆரிய மேன்மைவாதம், சில மனிதர்கள் மட்டும் தெய்வீகமானவர்கள் மற்றும் கடவுளைப் போன்றவர்கள், மற்றவர்கள் ஆரியர்களுக்கு பணிபுரிய பிறந்தவர்கள், அழுக்கானவர்கள் மற்றும் தீண்டத்தகாதவர்கள் என்ற சித்தாந்தம்தான் பார்ப்பனியத்தின் அஸ்திவாரம், இந்து சாதிய சமூகத்தின் அடிப்படைக் கொள்கை, ஏன், இன்றைக்கும் இந்துக்களை ஒன்றிணைக்க, அமைப்பாக்க, பாஜக – ஆர்.எஸ்.எஸ் பயன்படுத்தும் கொள்கையாகவும் இதுதான் இருக்கிறது.
துரதிர்ஷ்டவசமாக, மிகவும் ஒடுக்கப்பட்டவர்களிடையே கூட பலர் ஆர்.எஸ்.எஸ்-ன் திட்டத்தினை நிறைவேற்றுவதற்காக அவர்கள் பின்னே அணிதிரண்டு நிற்கின்றனர். ஆர்.எஸ்.எஸ்-ன் ஆர்ப்பாட்டமான வலிமையான பிரச்சார சுனாமிக்கு பலியாகி, தங்களை எப்போதும் அடிமைகளாகவே, தீண்டத்தகாதவர்களாகவே, இழிபிறப்பாளர்களாகவே நிரந்தரமாக ஆக்கவல்ல ஒரு சித்தாந்தம் அதிகாரம்பெற்று ஆட்சிக்கு வர வாக்களிக்கின்றனர்.
2025-ல் ஆர்.எஸ்.எஸ் தனது நூற்றாண்டைக் கொண்டாட இருக்கிறது. ஒரு நூறு ஆண்டு கால தொடர் பிரச்சார இயக்கம் அதை ஒரு தேசத்திற்குள்ளேயே, அதற்கு எதிரான இன்னொரு தேசத்தை உருவாக்கியுள்ளது. வரலாற்று ரீதியாக ஆர்.எஸ்.எஸ் மேற்கு கடற்கரை சித்பவன் பார்ப்பனர்களின் கூட்டத்தால் இறுக்கமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இன்று அது கோடிக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்டுள்ளது, அவர்களில் மோடி, அவரது அமைச்சரவை அமைச்சர்கள், முதலமைச்சர்கள் மற்றும் ஆளுநர்கள் என்று எல்லோரும் அடக்கம்.
தங்களுக்கு சொந்தமாக பல்லாயிரக்கணக்கான தொடக்கப் பள்ளிகள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் மாணவர் அமைப்புகள், சொந்த பதிப்பகப் பிரிவு, காடுகளில் வசிக்கும் பழங்குடியினரை “சுத்திகரித்து” அவர்களை “திருப்பி இந்துத்துவாவிற்கு” கொண்டு வர வேலை செய்யும் ஒரு வலிமையான பிரச்சார பிரிவு, ஒரே தன்மை கொண்ட பல்வேறு பெண்கள் அமைப்புகள், முசோலினியின் கருப்பு சட்டை படைகளை போன்றதொரு பல இலட்சக்கணக்கான பேரைக் கொண்ட மிருக பலம் வாய்ந்த ஆயுதமேந்திய படைப்பிரிவுகள் மற்றும் போலியாக தோற்றுவிக்கப்பட்டிருக்கும் நிறுவனங்களின் பணியைச் செய்யும் மற்றும் நம்பத்தகுந்த மறுப்பு என்று அழைக்கப்படுபவற்றை கொண்டுள்ள நினைத்தே பார்க்க முடியாத அளவு நாடெங்கும் மிதமிஞ்சி இயங்குகின்ற இந்து பயங்கரவாத அமைப்புகள் என இன்னொரு உலகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
வேலையில்லா திண்டாட்டம் என்றுமில்லாத அளவு அதிகரித்துள்ள நிலையில் நாடே பொருளாதாரக் குழப்பத்தில் மூழ்கி சிக்கித்திணறிக் கொண்டிருக்கும்போது, பா.ஜ.க கட்சியோ தொடர்ந்து செல்வச் செழிப்புடன் வளர்ந்து, இப்போது உலகின் பணக்கார அரசியல் கட்சியாக உள்ளது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘கணக்கு காட்ட தேவையில்லாத அநாமதேய தேர்தல் பத்திரங்கள் மூலம் பெயரை வெளிபடுத்த தேவையில்லாத மறைமுக நிறுவன நிதியளிப்பு’ முறையை செயல்படுத்துகிறது.
கிட்டத்தட்ட ஒவ்வொரு இந்திய மொழியிலும் உள்ள, கார்ப்பரேட் நிதியுதவி பெறும் பல நூறு டிவி செய்தி மற்றும் பொழுதுபோக்கு சேனல்களால் ஆதரிக்கப்படுகிறது, அவை மக்களுக்கு செய்திகளை கொண்டு சேர்க்கும் நிபுணத்துவம் பெற்ற சமூக ஊடக ட்ரோல்களின் படைப்பிரிவுகளால் ஏராளமான தவறான செய்திகள் சந்தைப்படுத்தப்படுகின்றன.
இத்தனைக்கும், பாஜக இன்னும் ஆர்.எஸ்.எஸ்-ன் முகப்பு அலுவலகமாக மட்டுமே உள்ளது. இப்போது நமது நாட்டிற்குள்ளேயே அதன் நிழலில் இருந்த ‘அ(வாள்)வர்களின்’ நாடு அதிலிருந்து  வெளியேறி, உலக அரங்கில் தனது இடத்தைப் பிடிக்க தயாராகி வருகிறது. ஏற்கனவே வெளிநாட்டு தூதர்கள் ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்திற்கு தங்களின் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்து மரியாதை செலுத்துவதற்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.
அமெரிக்காவில் இருக்கும் பல்கலைக்கழகங்களில் இத்தகைய நியாயமானது எனக் கருதிக் கொண்டுள்ளவற்றின் ஆபத்தை உணராத தேடுதலின் போர்க்களம் மையம் கொண்டுள்ளது. இதிலிருக்கும் அபாயம் என்னவென்றால் நேரடியாக வெற்றிபெற முடியாது போனாலும் முதலாளித்துவத்தின் பொருளாதார வல்லமையை கொண்டு வாங்கிவிட முடியும் என குற்றச்சாட்டுகளை எழுப்பும் பேர்வழிகள் நம்புகிறார்கள்.
2025 ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழா இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய அடையாளமாக இருக்கும். அதற்கு முந்தைய ஆண்டு 2024-ல் பொதுத் தேர்தல் வரவுள்ளது. இதுதான் வன்முறைச் செயல்கள் திடீர் திடீரென பெருகுவதற்கான காரணத்தை விளக்குகிறது.
இதற்கிடையில் ‘மோடி என்ற காவலன் மீட்பர்’ நாடெங்கும் எங்கு திரும்பினாலும் நிறைந்திருக்கும் வண்ணம் ஏற்பாடுகள் நடக்கின்றன. நமது ஒவ்வொருவரின் கோவிட் தடுப்பூசி சான்றிதழ்களில் அவரது முகம் உள்ளது. புதிதாக சமூகத்தில் இணைந்துள்ள வேலையில்லாத பல இலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைகளுக்குப் பதிலாக மோடியின் படத்துடன் கூடிய மாவு மற்றும் உப்பு பைகள் வழங்கப்படுகின்றன. மக்கள் எப்படி நன்றி இல்லாமல் இருக்க முடியும்?
மற்றும் இரண்டாவது கோவிட் அலையின்போது, பெரும் எண்ணிக்கையில் பிணங்கள் தகனம் செய்யப்படுவதையும், புனித கங்கை நதியில் மிதக்கும் பிணங்களின் எண்ணிக்கையால் அதன் தோற்றம் மாறி இருப்பதையும் கண்டவர்கள் கரையில் தோண்டப்பட்ட கல்லறை குழிகளின் வரிசைகளை கண்டவர்கள் எவரும் அவர்களிடம் நம்ப வேண்டும் என போதித்ததை எப்படி நம்புவார்கள்?  நம்பமாட்டர்கள்.
இந்தப் போரில் ஆர்.எஸ்.எஸ் வெற்றி பெற்றால், அதன் வெற்றியோடு இப்போதிருக்கும் இந்தியா என்ற நாடு இல்லாமல் போய்விடும். தேர்தல்கள் எதுவும் இந்த நிகழ்ச்சிகளின் போக்கை மாற்றிவிடாது. ஏனெனில் தேர்தல்களும் மறைந்து விடும்!
இந்த நாட்டை தங்களது அயராத உழைப்பால் உருவாக்கி வளப்படுத்தி பாதுகாத்து வரும் உழைக்கும் மக்களுக்கு, ஒரு கொடூரமான உலகத்தை பரிசளிக்க காத்திருக்கிறது பாசிச பாஜக – ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன மதவெறி கும்பல். அதை எதிர்கொண்டு மக்களை பாதுகாப்பதற்கான தெம்பும் திராணியும் இந்தியாவிலிருக்கும் எந்த வோட்டு பொறுக்கி அரசியல் கட்சிகளுக்கும் இல்லை!
படிக்க :
♦ பொய்களை பரப்பும் முகநூல் மார்க்கை தொடர்ந்து ட்விட்டர் மஸ்க் | ஆர்.எம்.பாபு
♦ சொத்துவரி உயர்வு : தி.மு.க. பேசும் மாநில உரிமையும் வெங்காயமும்!
அப்படியென்றால் பாசிச சக்திகளை வேரறுக்க என்னதான் வழி? ஜெர்மனியின் நாஜி படைகள் உலகமெங்கும் வெற்றி வாகைசூடி நாடுகளை அடிமைப்படுத்தி சூறையாடிய வேளையில் ஹிட்லருக்கான முதல் மரண அடி ரஷ்யாவின் சின்னஞ்சிறு கிராமத்தில் தொடங்கியது. அங்கிருந்து பின்வாங்கி ஓடத்துவங்கிய ஹிட்லர் சொந்த நாட்டில் அவனது இரகசிய அறையில் தற்கொலை செய்துகொள்ளும் வரை நிற்கவில்லை. பாசிசத்தால் ஆட்படுத்தப்பட்ட நாடுகளை விடுதலை செய்தது ஸ்டாலினின் செஞ்சேனை!
அந்த மகத்தான சாதனையை படைத்தது மார்க்சிய – லெனினிய – மாவோ சிந்தனைகளால் வார்க்கப்பட்டு பாட்டாளி வர்க்கத் தலைமையிலான உழைக்கும் மக்களின் ஆட்சியை நடத்திவந்த மாபெரும் ஸ்டாலினின் சாதனை ஆகும். உலகம் முழுதும் மார்க்சிய சிந்தனைகளின் தாக்கம் உழைக்கும் மக்களின் துன்ப துயரங்களுக்கு தீர்வு காணும் வழிகளை காட்டுகிறது.
பாசிச பாஜக, ஆர்.எஸ்.எஸ், பார்ப்பன மதவெறி கும்பலின் சித்தாந்தத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் தூர்த்தி எடுத்து தூர எறியும் ஆற்றல் மார்க்சிய – லெனினிய –மாசேதுங் சிந்தனைகளுக்கு மட்டுமே உண்டு. அந்த சித்தாந்தத்தால் உருவாக்கப்படும் பாட்டாளி வர்க்க தலைமையிலான உழைக்கும் மக்களின் படைதான் பாசிச கும்பலுக்கு சரியான பதிலடி கொடுக்கும்!. அதற்காக சாதி, மதம், இனம், மொழி கடந்து ஒரு வர்க்கமாக, உழைக்கும் மக்கள் பாட்டாளி வர்க்கத் தலைமையில் அணிவகுக்க வேண்டிய அவசியம் இப்போது எழுந்துள்ளது. ஏற்கனவே நக்சல்பாரி எழுச்சியும், தெலுங்கானா புரட்சியும் நமக்கு அளப்பரிய பாடத்தையும் அனுபவத்தையும் தந்துள்ளது.
ஏற்கனவே, மிகவும் தாமதமாகிவிட்டது. நாம் ஒவ்வொருவரும் ஒரே வர்க்கமாக வேறுபாடுகளை களைந்து கொண்டு வீதியலிறங்கி பாசிச சக்திகளுக்கெதிரான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய தருணம் இது. இருட்டை களையும், பாசிசத்தை எரித்து சாம்பலாக்கும் நெருப்பு நம் ஒவ்வொருவர் வீட்டு வாசலில் உள்ளது. கையில் ஏந்தி நமது எதிர்காலத்தை, நமது எதிர்கால சந்ததியினருக்கான இந்தியாவை படைக்கபோகிறோமா? இல்லையா? அது நம் கையில்தான் உள்ளது.
மூலக்கட்டுரை : The Battle to Save India – Arundhati Roy
மணிவேல்
நன்றி : த வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க