கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட வேலையிழப்பு, மூலப் பொருட்களின் விலை உயர்வால் முடங்கும் சிறுதொழில்கள், நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் அதிகரிக்கும் பெட்ரோல்-டீசல்-எரிவாயு விலை உயர்வு ஆகியவை ஏற்கெனவே மக்களின் கழுத்தை நெறித்துக் கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில் தமிழக அரசு அறிவித்திருக்கும் சொத்து வரி உயர்வு மேலும் மக்களது சுமையைக் கூட்டியுள்ளது.
கடந்த ஏப்ரல்-1 ஆம் தேதி இரவு அரசு வெளியிட்ட அறிவிப்பில், “பல ஆண்டுகளாக சொத்து வரியில் எந்த உயர்வும் இல்லாததால் உள்ளாட்சி அமைப்புகளின் செலவீனம் பல மடங்கு உயர்ந்துள்ளது” என்று நியாயப்படுத்தி சொத்து வரியை 25 சதவிகிதம் முதல் 150 சதவிகிதம் வரை உயர்த்தி அறிவித்தது.
இந்த அறிவிப்பின்படி, குறைந்தபட்சமாக சென்னையின் முதன்மைப் பகுதிகள் தவிர்த்த தமிழகத்தின் பிற பகுதிகளில் 600 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்புக் கட்டடங்களுக்கு 25 சதவீத உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையின் பிரதான பகுதிகளில் அமைந்துள்ள 1800 சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவுள்ள குடியிருப்புக் கட்டடங்களுக்கும், வணிகப் பயன்பாட்டுக் கட்டடங்களுக்கும் 150 சதவீதம் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது.
தி.மு.க. அரசின் சொத்து வரி உயர்வு அறிவிப்பிற்கு எதிராக அ.தி.மு.க, பா.ஜ.க, பாமக போன்ற எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. மேலும் அக்கட்சியினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
படிக்க :
♦ இந்தோ-பசுபிக் பொருளாதார கூட்டமைப்பு : சீனாவிற்கு எதிராக அமெரிக்காவின் அடுத்தகட்ட நகர்வு !
♦ ஈழத்தமிழரின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு தடை விதித்த தமிழ்நாடு அரசின் அராஜகத்தை கண்டிப்போம்! | மக்கள் அதிகாரம்
சொத்து வரி உயர்வு குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, “இந்த சொத்து வரி உயர்வு வெறும் டிரெய்லர்தான். இனி வரும் காலங்களில் மக்களுக்கு பல ‘பம்பர் பரிசுகள்’ காத்திருக்கின்றன” என்றார்.
“தமிழக அரசின் இம்மக்கள் விரோதப் போக்கால், சொந்தத் தொழில் செய்வோர், வீடு வாடகைக்கு விட்டிருப்பவர்கள், வாடகை வீட்டில் தொழில் செய்பவர்கள் மற்றும் குடியிருப்பவர்கள் என அனைத்துத் தரப்பினரும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்” என பா.ஜ.க கண்டனம் தெரிவித்தது.
தி.மு.க. எதிர்ப்பில் தன்னை ஆளாக்கிக் கொள்ள விழையும் அ.தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் இச்சொத்துவரி உயர்வு வாயில் விழுந்த அவலாக கிடைத்தது. குறிப்பாக தமிழகத்தில் நடைமுறையில் எதிர்க்கட்சியாகத் திகழ்கிற பாசிச பா.ஜ.க.விற்கு பொன்னான வாய்ப்பாகியது. இதனை ஒட்டி பா.ஜ.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளன.
000
சட்டமன்றத்தில் சொத்துவரி உயர்வு குறித்தான கவன ஈர்ப்பு தீர்மானத்திற்குப் பதிலளித்து பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “இந்த சொத்துவரி உயர்வை இந்த அரசு மனமுவந்து செய்யவில்லை. குறிப்பாக அடித்தட்டு மக்களை ஏழை, நடுத்தர வகுப்பு மக்களைப் பாதிக்காமல் உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சிப் பணிகளை மனதிலே வைத்துக் கொண்டு சொத்து வரி உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. 83 சதவீத மக்களை இவ்வரி உயர்வு பாதிக்காது” என்றார்.
ஆனால், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், “கொரோனா பாதிப்பு உள்ள சூழலில் சொத்துவரி அதிகரிக்கப்பட மாட்டாது” என வாக்குறுதி அளித்திருந்ததை வசதியாக மறந்துவிட்டார்.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, “சென்னை மாநகராட்சியில் வரி உயர்த்தப்பட்டு 24 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதற்கு பிறகு, தற்போதுதான் உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் 14 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. சந்தை மதிப்பு, பணவீக்கம், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ஆகிய காரணிகளைப் பரிசீலித்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
சொத்துவரி உயர்வு தவிர்க்க முடியாதது என்று சொல்வதோடு, பிற மாநிலங்களைவிட தமிழகத்தில் சொத்துவரி இன்னமும் குறைவாகத்தான் இருக்கிறது என்றும் வாதிடுகிறது தமிழக அரசு. இது தொடர்பாக வெளியிடப்பட்ட தமிழக அரசின் செய்திக்குறிப்பில், “சென்னை மாநகராட்சியில், 600 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்புக் கட்டடத்திற்கு தற்போது விதிக்கப்படும் குறைந்தபட்ச சொத்துவரி ரூ.810 ஆகும். சீராய்விற்குப் பிறகு, இது ரூ.1215 ஆக உயரும். ஆனால், இதே பரப்பளவு கொண்ட குடியிருப்புக் கட்டடத்திற்கு, மும்பையில் ரூ.2,157 ஆகவும், பெங்களூருவில் ரூ.3.464 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.3,510 ஆகவும் மற்றும் புனேவில் ரூ.3,924ஆகவும் உள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படித்தான், ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் திடீரென ஒரே இரவில் ஏற்றப்பட்ட பால்விலை, பேருந்து கட்டண உயர்வின்போது கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் குறைவுதான் என்றும், பல வருடங்களாக உயர்த்தாமல் தி.மு.க. அரசு நட்டத்தை உருவாக்கி விட்டதாகவும் அ.தி.மு.க.வினர் அப்போது நியாயப்படுத்தினர்.

புள்ளி விபரங்கள் தரும் பொழுது வரைபடங்கள்(GRAPHS )இருந்தால் சிறப்பாக இருக்கும் ,முயற்சிக்கவும்.