உண்மை – கிலோ என்ன விலை? இதுவே தினகரன் நாளிதழ் நிலை !

“அரை உண்மை முழுப்பொய்யை விட ஆபத்தானது” என்பார்கள். அதற்கு உதாரணமாக இருக்கிறது தினகரன் நாளிதழ் வெளியிட்டிருக்கும் செய்தி ஒன்று. இந்தப் பெருந்தொற்று நெருக்கடி காலத்தில் அரசு – அதிகார வர்க்கத்தின் ஊதுகுழலாக, மக்கள் விரோதமாகப் பொய்யும் புனைசுருட்டுமாக செய்தி வெளியிட்டு, வாங்கும் காசுக்கு மேல் கூவுவதை  சிறப்பாகச் செய்து வருகிறது தினகரன்.

கடந்த ஆண்டு, கொரோனா ஊரடங்கு போடப்பட்டது முதலே, மக்கள் யாரும் சரியில்லை – வெளியே வந்தால் போலீஸ் அடிக்கத்தான் செய்யும் என்கிற அளவுக்கு ‘செய்தி’ வெளியிட்ட தினகரன் இப்போது அதையெல்லாம் மிஞ்சிவிட்டது. ஒரே செய்தியில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதோடு, மக்களையும், மாவோயிசப் போராளிகளையும் அவதூறு செய்து நஞ்சை விதைக்கும் வேலையைச் செய்திருக்கிறது. 15.05.2021 தேதியிட்ட தினகரன் நாளிதழின் கடைசிப் பக்கத்தில் வெளியாகியிருக்கும், “மருத்துவ வசதி, விழிப்புணர்வு இல்லாமல் கொத்து கொத்தாக மடியும் மக்கள் – கிராமங்களை சூறையாடும் கொரோனா” என்ற தலைப்பில் வெளியாகியுள்ள செய்தியில் தான் இந்த நஞ்சைக் கக்கியிருக்கிறது.

படிக்க :
♦ RSS-BJP ன் அறிவியல் புறக்கணிப்பும் இந்துராஷ்ட்ரா வெறியுமே கொரோனா பேரழிவிற்கு காரணம் || CCCE
♦ கொரோனா படுகொலைகள் : முதன்மைக் குற்றவாளி மோடியும் பா.ஜ.க. அரசுமே !

“பெருநகரங்கள், சிறுநகரங்களைத் தொடர்ந்து கிராமங்களையும் சூறையாடத் தொடங்கி விட்டது கொரோனா வைரஸ். முறையான மருத்துவ வசதி, விழிப்புணர்வு இல்லாததால் பாதிப்பையே அறியாமல் மக்கள் கொத்து கொத்தாக இறக்கின்றனர். அங்கு நிலைமையைச் சமாளிக்க முடியாமல் வடமாநில அரசுகள் திணறுகின்றன” என்று தொடங்குகிறது இந்த செய்திப்பதிவு.

மருத்துவ வசதிகளும், விழிப்புணர்வும் ஏன் இல்லாமல் போயின என்ற கேள்விக்குள் சென்று அதற்கான காரணங்களை அறிவதற்கான எந்த முயற்சியிலும் ஈடுபடாத செய்தியாளர், “குறிப்பாக, பீகார், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், அரியானா, ஆந்திரா, ஒடிசா போன்ற மாநிலங்களில் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று மாநிலங்களின் பெயர்களைப் பட்டியலிட்டு, அடுத்தடுத்த பத்திகளில் பல்வேறு மாநிலங்களில் நிலவும் அவலமான நிலையைச் சொல்லிச் செல்கிறார்.

பீகாரின் தலைநகர் பாட்னாவில் இருந்து 195 கி.மீ தொலைவில் உள்ள கைமர் மாவட்டத்தின் பம்ஹார் காஸ் கிராமத்தில், கடந்த 25 நாட்களில் 34 பேர் இறந்துள்ளதையும், அவர்கள் அனைவரும் கொரோனா அறிகுறிகள் இருந்தும் யாரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவில்லை என்பதையும் செய்திக் கட்டுரை பதிவு செய்கிறது. மேலும், “இந்த கிராமத்து மக்கள் கூறுகையில், “இங்கு சுமார் 70 சதவீதம் பேருக்கு கொரோனா அறிகுறி உள்ளது. பலரும் காய்ச்சலுடன் வீட்டு மருத்துவம் பார்த்துக் கொள்கின்றனர். மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்கின்றனர்” என்றும் கூறுகிறது.

அடுத்ததாக, “உத்தரப் பிரதேச மாநிலத்தின் மாய்மா கிராமத்தில் கடந்த ஒரு மாதத்தில் 25 பேர் இறந்துள்ளனர். அதில் 4 பேர் மட்டுமே கொரோனாவில் இறந்ததாக கூறப்பட்டுள்ளது. ஆனால், அந்தக் கிராமத்தினர் கூறுகையில், “அரசு கூறும் கொரோனா இறப்பைவிட 4 மடங்கு அதிக இறப்புகள் பதிவாகின்றன. இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா அறிகுறி உள்ளது. உள்ளூரில் முறையான பரிசோதனை மையங்கள் இல்லாததால் ஒன்றும் செய்ய முடியவில்லை” என்கின்றனர்” என உ.பி மாநில கிராமத்தின் மோசமான நிலைமை பதிவு செய்யப்படுகிறது.

இதேபோல ராஜஸ்தான் மாநிலத்திலும் பரிசோதனைக்காக 10 கிலோமீட்டர் தாண்டி பக்கத்து ஊருக்கு போக வேண்டும் என்பதால், கொரோனா அறிகுறிகள் இருந்தாலும் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடப்பதாகவும் கட்டுரை சொல்கிறது.

மேற்சொன்ன தகவல்கள் எல்லாம் உண்மையாக இருக்குமா என நாம் தனியே சோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லாத நிலையைத்தான் கடந்த சில நாட்களாக கங்கையில் மிதந்து கொண்டிருக்கும் 2000-க்கும் மேற்பட்ட சடலங்கள் காட்டுகின்றன.

உ.பி.யில் ஆக்சிஜன் பற்றாக்குறையும், மருத்துவ வசதிகள் இன்மையும் கடுமையாக இருப்பதை அம்மாநில ஆளுங்கட்சியான பா.ஜ.க.வின் எம்.பி, எம்.எல்.ஏக்களே சமூக ஊடகங்களில் பகிரங்கப்படுத்தி வருகின்றனர். பீகாரின் ‘வளர்ச்சி’ நாயகன் நிதீஷ்குமார் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது பற்றிய தகவலே செய்தித் தாள்களில் காணவில்லை. உ.பி.யை விட பீகார் முன்னேறிய மருத்துவக் கட்டமைப்பு கொண்ட மாநிலம் என்பதற்கும் எந்த உதாரணமும் நமக்கு கிடைக்கப் பெறவில்லை.

தினகரனின் இந்தச் செய்திக் கட்டுரையில் உள்ள ஒரு பெட்டிச் செய்தியானது, எந்த அடிப்படை வசதியும் இல்லாத நிலையில் கொரோனா தனிமை வார்டு இருப்பதையும், மருத்துவமனைக்கு சென்றால் செத்துவிடுவோம் என்ற அச்சத்தால் மக்கள் மருத்துவமனைகளுக்கு செல்ல மறுப்பதாக சொல்கிறது. இன்னொரு பெட்டிச் செய்தியோ, “மருத்துவக் கட்டமைப்புகள் பெரிய அளவில் இல்லாவிட்டாலும் உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம் பரிசோதனை, சிகிச்சைகள் வழங்க அரசுகள் முயன்ற அளவு முயற்சிக்கின்றன. ஆனால், கிராமங்களில் மக்களிடமிருந்து முறையான ஒத்துழைப்பு இல்லாமலேயே இருக்கிறது” என்கிறது.

இப்போது மட்டுமல்ல, எப்போதுமே இந்தக் கிராமங்களில் இருக்கும் மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இருப்பதில்லை. அங்கு சென்று தங்களைக் குணப்படுத்திக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை அரசுகள் ஒருபோதும் மக்களிடம் உருவாக்கியதில்லை என்பதால்தானே இந்த நெருக்கடியான நிலைமையிலும் மக்கள் போக அஞ்சுகிறார்கள். இதுதான் ‘வளர்ச்சி நாயகன்’ மோடி ஆளும் காலத்திலும் நிலவும் உண்மை நிலைமை.

மேற்சொன்ன தகவல்களில் இருந்து உ.பி., பீகார், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களின் கிராமங்களில் அடிப்படை வசதிகள் உள்ள மருத்துவமனைகளை அரசுகள் உருவாக்கவில்லை; இதன் காரணமாக, அரசு மருத்துவமனைகள், கொரோனா வார்டுகள் மீது மக்கள் நம்பிக்கை வைத்து செல்வதில்லை; கடந்த ஓராண்டுக்கும் மேலாக வாய்வீச்சில் ஈடுபட்டு வந்த மோடி, இந்த நிலைமைகளை மாற்ற எதையும் செய்யவில்லை என்பதை நம்மால் சந்தேகத்திற்கிடமின்றி உணர முடிகிறது.

ஆனால், தினகரனோ முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது மட்டுமல்ல, இந்த அச்சத்தை உருவாக்கியதில் அரசின் பங்கை அடியோடு மறைக்கிறது; பேச மறுக்கிறது. ஏதோ உ.பி, பீகார் போல் இல்லாமல், சட்டீஸ்கரில் மருத்துவ வசதிகள் கிடைக்காமல் இருப்பதற்கு மாவோயிஸ்டுகளே காரணம் என்றும் ஒரு கேடான பொய்ப் பிரச்சாரத்தையும் இந்த செய்திக் கட்டுரையில் எழுதியிருக்கிறது தினகரன்.

மேற்சொன்ன வடமாநிலங்களின் நிலைமைகளில் இருந்து பெரிதாக எந்த வகையிலும் வேறுபடாத நிலைதான் சட்டீஸ்கரிலும் நிலவுகிறது. இங்கு நிலவும் மோசமான மருத்துவக் கட்டமைப்பு குறித்து 24.04.2021 தேதியிட்ட – Beds, oxygen, medicines: How Chhattisgarh dropped Covid ball- என்னும் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளக் கட்டுரை விளக்குகிறது. ஒவ்வொரு நாளும் பல்லாயிரம் பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்படும் சூழலிலும் கூட சிலநூறு ஐ.சி.யூ படுக்கைகளே மாநிலம் முழுவதும் இருப்பதையும், வெண்டிலேட்டர்கள் சொற்பமாகவே உள்ளன என்பதையும், அரசு ஆவணத்தில் இருப்பதில் பாதியளவுக்குத்தான் ஐ.சி.யூ படுக்கைகள் உண்மையில் இருப்பதையும் இக்கட்டுரை அம்பலப்படுத்துகிறது.

உண்மை நிலவரம் இவ்வாறிருக்கும் போது, தினகரன் பின்வருமாறு தனது அவதூறு பிரச்சாரத்தை மாவோயிஸ்டுகள் மீது நிகழ்த்தியிருக்கிறது. “சட்டீஸ்கரில் பெரும்பாலும் மலைக் கிராமங்கள் அமைந்துள்ளன. இங்கு நக்சல் பாதிப்பும் அதிகளவில் உள்ளது. இதனால் மருத்துவக் கட்டமைப்புகள் பெரிய அளவில் இல்லை. அதோடு கொரோனா சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நக்சலைட்டுகள் மக்களை மிரட்டி வெளிநபர்கள் யாரும் கிராமத்திற்குள் வரக் கூடாது என பிரச்சனையும் செய்கின்றனர். இதன் காரணமாக மருத்துவக் குழு அங்கு செல்ல முடியாமல் மக்கள் பலர் இறக்கின்றனர்” என்கிறது தினகரன் செய்திக் கட்டுரை.

மிகவும் பச்சையான அயோக்கியத்தனம் இல்லையா இது? மாநிலத்தின் தலைநகரமே கோவிட் தொற்றுக்கு பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவமனைகள், மருத்துவர்கள், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் ஏதுமில்லாமல் திணறிக் கொண்டிருக்கிறது. மாநில சுகாதார அமைச்சரோ, கடந்த ஓராண்டுக்கு முன்பே ஐ.சி.யூ படுக்கைகளை அதிகரிக்க நிதி ஒதுக்க வேண்டுமென முதல்வருக்குக் கோரிக்கை வைத்து விட்டேன், ஆனால் பலனில்லை எனப் புலம்புகிறார். ஆனால், தினகரன் என்ன சொல்கிறது? மாவோயிஸ்டுகள் அதிகம் இருப்பதால், மலைக் கிராமங்கள் மருத்துவ வசதிகள் இல்லாமல் இருக்கின்றனவாம். ஒட்டுமொத்தமாக அரசுக் கட்டுப்பாட்டில் இருக்கும் தலைநகரில் மருத்துவ வசதிகளை செய்ய விடாமல் தடுப்பது யார்? உ.பி., பீகாரில், ராஜஸ்தானில் மருத்துவ வசதிகள் இல்லாமல் மக்கள் கொத்துக் கொத்தாக செத்துப்போக யார் காரணம் என்பதையும் இந்த பாணியில் விளக்கி இருக்கலாம் அல்லவா?

“கொரோனா தொற்று காரணமாக 7-8 மாவோயிஸ்டுகள் இறந்துவிட்டனர்; முக்கிய தலைவர்கள் உட்பட சுமார் 100 பேர் தொற்றால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்; போலீசுக் கட்டுப்பாடுகள் காரணமாக போதுமான மருத்துவ வசதிகள் இல்லாமல் காலாவதியான மருந்துகளை சாப்பிட்டு மேலும் சிக்கலுக்கு உள்ளாகின்றனர்; இவர்களால் மலைவாழ் மக்களுக்கு தொற்று பரவும் அபாயம் உள்ளது; வீடியோ கால் மூலம் மருத்துவர்களைத் தொடர்பு கொண்டு சிகிச்சை குறித்து கேட்கின்றனர்; நூற்றுக்கு மேற்பட்ட பி.பி.இ கிட்டுகள், இருநூறு தடுப்பூசி குப்பிகளை வாங்கியுள்ளனர்; இவர்கள் சரணடையத் தயார் என்றால் அரசு மருத்துவம் பார்க்க தயாராக உள்ளது” என்ற போலீசின் கதைகளை எல்லாம் தினகரன் மட்டுமல்ல பல ஆங்கில நாளிதழ்கள் கூட தினசரி வெளியிட்டு வருகின்றன.

கடந்த முப்பதாண்டுகளாக மத்திய – மாநில அரசுகள் பின்பற்றி வரும் தனியார்மய – தாராளமய – உலகமயக் கொள்கைகளால் நாடு வெகுவேகமாக முன்னேறிக் கொண்டிருப்பதாக எல்லா அரசுகளுமே பொய்ப் பிரச்சாரத்தை அவிழ்த்து விட்டன. அந்தப் பொய்களை எல்லாம் நொறுக்கி, உலகமயமும் தனியார்மயமும் மோசடியானவை, மக்களுக்கு எதிரானவை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது கொரோனா பெருந்தொற்று. நாடு முழுவதுமே மருத்துவக் கட்டமைப்புகள் மிக மோசமாக இருப்பதை இந்தப் பெருந்தொற்று முற்றாக அம்பலப்படுத்தி விட்டது.

மக்களுக்கு மருத்துவ வசதிகள் இல்லை, விழிப்புணர்வு இல்லை என்றால் அதற்குக் காரணம் இத்தனைக் காலமும் ஆட்சி செய்த அத்தனை பேரும் அயோக்கியர்கள், மக்கள் விரோதிகள் என்பதை மறைப்பதற்காக மிகவும் கேவலமான பொய்யை அரசும் ஆளும் வர்க்கமும் அவிழ்த்துவிட்டு வருகின்றனர். அவற்றில் ஒன்றுதான் மாவோயிசப் போராளிகள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள், மக்களுக்கு மருத்துவம் கிடைக்கத் தடையாக இருக்கிறார்கள் என்ற வடிகட்டிய பொய்.

படிக்க :
♦ கார்டியன் தலையங்கம் : மோடியின் தவறுகள் – கட்டுப்படுத்த முடியாத ஒரு பெருந்தொற்று
♦ லான்செட் அறிவியல் இதழ் தலையங்கம் : மோடி உருவாக்கிய தேசிய கொரோனா பேரழிவு

இத்தனை ஆண்டுகளாக இவர்கள் உருவாக்கிய வளர்ச்சி எதுவும் மக்களுக்கானதில்லை என்பதை இப்போதும் கூட, அப்பட்டமாக அம்பலமாகி நிற்கும் போதும் கூட முதலாளித்துவப் பத்திரிக்கைகள் சொல்லத் தயாராக இல்லை. மாறாக, அரசு அதிகாரிகள் வாந்தியெடுக்கும் பொய்களை, தமது சொந்தச் சரக்காகவே எழுதி வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கின் பெயரால் அரசு தனது தோல்வியை மறைக்க போலீசின் குண்டாந்தடியை வைத்து மக்களை அடக்குகிறது. தினகரன் போன்ற முதலாளித்துவப் பத்திரிக்கைகளோ, தமது பொய்ப் பிரச்சாரம் மூலம் மக்களின் சிந்தனையை முடக்கி கருத்து அடியாள் வேலையைச் செய்து கொண்டிருக்கின்றன.


வினவு செய்தியாளர்
திருச்சி.

1 மறுமொழி

  1. கொரோனா பெருந்தொற்றானது, முதலாளித்துவத்திற்கு லாபத்தை உற்பத்தி செய்துகொடுக்கும் நவீன கருவியாகத்தான் முதலாளிகள் பார்க்கிறார்கள். அதனால்தான் தொற்றினால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கையை எப்படி தடுப்பது என்று மெனக்கெடாமல், இதன் விளைவுகள் ஒவ்வொன்றையும் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள், அரசும் ஆளும் வர்க்கமும்.

    ரெம்டெசீவீர் மருந்தால் பெரிய பயனில்லை என்றபோதும், அதை கள்ள மார்கெட்டில் சந்தைப்படுத்தி காசுபார்க்கிறார்கள். தடுப்பு மருந்து உற்பத்தி செய்ய கார்ப்பரேட்டுகளுக்கு பணத்தை அள்ளிக்கொடுத்து, அரசு கையாளாகாத நிலையில் அவர்களிடமே கையேந்திக் கொண்டிருக்கிறது. அதேபோல், கொரோனாவினால் ஏற்படும் ஒவ்வொரு விளைவையும் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான் சட்டீஸ்கர் காட்டுப் பகுதிகளில், மாவோயிஸ்டுகளின் செயல்பாடுகளால் அங்கு மருத்துவ வசதிகளை மக்களுக்குக் கொடுக்க முடியவில்லை என்ற கருத்துத் திணிப்பும்.

    வட மாநிலங்களை விட்டுவிடுவோம்; தமிழ்நாட்டில் மட்டும் என்ன வாழுதாம். தமிழ்நாட்டின் பல்வேறு கிராமங்களில் வாழும் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பெரும் அவதிக்குள்ளான போதிலும், ஒரு பாலியல் நோயால் பாதிக்கப்பட்ட குற்றவாளியைப் போல, அவற்றை வெளியில் சொல்லாமல் மறைத்து வருகிறார்கள். வெளியில் சொன்னால், எங்கே பிடித்துக் கொண்டு போய்விடுவார்களோ என்ற அச்ச உணர்வினால் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் கூட சொல்லத் தயங்குகிறார்கள். ஆக, ஆளும்வர்க்கத்தால், நகர்ப்புறங்களைவிட எல்லா வகையிலும் கிராமப் புறங்கள் புறக்கணிக்கப்பட்டே வருகின்றன. இந்த அவலத்தைக்கூட தனது தேசியவெறிக்கு தூபம்போட பயன்டுத்திக்கொண்டுள்ளது ஆளும் வர்க்கம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க