கொரோனா நோய் தொற்றின் இரண்டாம் அலை பரவத் தொடங்கி, இன்று நாளொன்றுக்கு பல லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். பல்லாயிரக்கணக்கான பேர் அன்றாடம் செத்துக் கொண்டிருக்கின்றனர். புதிய கட்டமைப்புகள் எதுவும் உருவாக்கப்படாததால், கடந்த 30 ஆண்டுகளாக மருத்துவமும், சுகாதாரமும் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் கொரோனாவை எதிர்கொள்ள முடியாமல் செத்து மடிகின்றனர்.

உலக நாடுகள் எல்லாம் இந்தியா கொரோனா நோய் தொற்றில் முதலிடத்தில் இருப்பதைப் பார்த்தும், ‘வளர்ச்சி நாயகன்’ மோடியின் தேசத்தில் மக்கள் கொத்துக் கொத்தாக மரணிப்பதைப் பார்த்தும் உதவிகளைச் செய்தும் பலவிதமான ஆலோசனைகளை வழங்கியும் வருகின்றன.

படிக்க :
♦ லான்செட் அறிவியல் இதழ் தலையங்கம் : மோடி உருவாக்கிய தேசிய கொரோனா பேரழிவு
♦ கொரோனா கால இந்தியா : மோடியின் எரியும் பிணக்காடு || ராணா அய்யூப் || கை.அறிவழகன்

இன்னொருபுறம், இந்தப் பிரச்சனைக்கு மக்கள்தான் காரணம் என ஆளும் வர்க்கங்களும், அதன் ஊதுகுழல் பத்திரிகைகளும் தொடர்ந்து பிரச்சாரம் செய்கின்றன. மோடி அரசோ கொரோனாவை எதிர்கொள்ளும் பொறுப்பை மாநில அரசுகள் தலைமீது சுமத்திவிட்டு, மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருக்கிறது.

லான்செண்ட் என்ற அறிவியல் ஆய்வுப் பத்திரிகையோ, மோடிதான் குற்றவாளி என்று சில விமர்சனங்களை முன்வைத்துள்ளது. அது வெளிநாட்டில் இருந்து ஒரு பத்திரிகை முன்வைத்துள்ள விமர்சனங்கள் மட்டுமே. ஆனால், மோடியின் தவறுகளோ அந்தப் பத்திரிகை தெரிவித்திருக்கும் விமர்சனங்களைவிடக் கொடிய குற்றங்கள்.

அவற்றில் முக்கியமான குற்றங்கள் மட்டும் இங்கே குறிப்பிடுகிறோம்.

• கொரோனா இரண்டாவது அலை தொடங்கும்போதே, உலக சுகாதார மையம், மருத்துவ அறிஞர்கள் விடுத்த எச்சரிக்கையை மோடி அரசு புறக்கணித்தது.

• கொரோனா தொற்றுப் பரவுவதைத் தெரிந்தும் உத்தரப் பிரதேசத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தியது, மக்கள் கொரோனாவால் கொல்லப்படுவதற்கான காரணங்களில் ஒன்று. இந்த தேர்தலை நடத்திய யோகி ஆதித்யநாத் அரசும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் நடத்த அனுமதித்த மோடி அரசும் குற்றவாளிகளே!

• கொரோனா நோய் பரவல் இருப்பதை நன்கு அறிந்தும், பல்வேறு அறிஞர்கள் சமூக செயல்பாட்டாளர்களின் எதிர்ப்பை மீறியும் வாரானாசியில் கும்பமேளா நடத்துவதற்கு தடைவிதிக்க மறுத்தது மோடி அரசு. கும்பமேளா நடத்தியதால், வடமாநிலங்கள் முழுவதும் கொரோனா பரவியது. மக்களின் மதநம்பிக்கையைப் பயன்படுத்தி மூடநம்பிக்கையை வளர்ப்பதற்கும் அரசியல் ஆதாயம் தேடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைக் கொடியக் குற்றமாகும்.

• மேற்குவங்கம், அஸ்ஸாம் மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் வெற்றியை மட்டுமே மனதில் நிறுத்திக் கொண்டு கொரோனா எச்சரிக்கையையும் மீறி மோடி, அமித்ஷா, பா.ஜ.க-வின் முக்கிய தலைவர்கள் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தியது.

• கொரோனா நோய் வேகமாகப் பரவி வரும் நிலையில், அதனைப் பரப்புவதற்கானக் காரணங்களில் ஒன்றாகவும் மக்களை கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்புகள் குறித்து சிந்திக்கவிடாமல் திசைத் திருப்பும் வகையிலும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை நடத்தியது.

• கொரோனா முதல் அலையின்போதே ஆக்சிஜனின் அவசியத்தை அனைவரும் நன்கு உணர்ந்துவிட்டனர். ஆக்சிஜன் தட்டுப்பாடு வரும் என்று தெரிந்திருந்தும், அவசரகாலத் தேவைக்குப் போதுமான அளவுக்கு ஆக்சிஜன் இருப்பு வைத்துக் கொள்ளாமல் இருந்தது; புதிய ஆக்சிஜன் உற்பத்தியைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளாமல் இருந்தது.

• தடுப்பூசி உற்பத்தியிலும் ஆக்சிஜன் உற்பத்தியிலும் பொதுத்துறை நிறுவனங்களை ஈடுபடுத்தாமல் தனியார் கார்ப்பரேட் கொள்ளைக்கு வழிவகுத்தது.

• கார்ப்பரேட் முதலாளிகள் மக்களின் உயிரை விலைபேசிக் கொள்ளையடிப்பதற்கு வசதியாக தடுப்பூசி வினியோகத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதித்தது மட்டுமின்றி, தனியார் மருத்துவமனைகளைக் கையகப்படுத்தி, இலவசமாக வினியோகிக்காமல் தடுப்பூசிக்கு விலை நிர்ணயம் செய்து கொடுத்தது மோடி அரசு.

• கொரோனா முதல் அலை தாக்கத்தின்போது கிடைத்த அனுபவத்தில் இருந்து உ.பி., குஜராத், தமிழகம் போன்ற மாநிலங்களில் முன்னெச்சரிக்கையாக மருத்துவக் கட்டமைப்பை விரிவுபடுத்தத் தவறியதற்கு மாநிலங்களின் ஜி.எஸ்.டி.யைக் கொள்ளையடித்து வைத்திருக்கும் முதன்மைக் குற்றவாளிகள் மோடி அரசு. மோடி அரசுக்குப் போதுமான நிர்பந்தம் கொடுத்து மாநில அளவில் மருத்துவக் கட்டமைப்பை விரிவுப்படுத்தத் தவறிய மாநில அரசுகள் இரண்டாம் நிலைக் குற்றவாளிகள்.

• அமெரிக்க மேல்நிலை வல்லரசின் தலைமையிலான மறுகாலனியாக்கக் கொள்கைகளின் அடிப்படையில், தடுப்பூசி உற்பத்தி செய்து ஏகாதிபத்திய நாடுகளுக்கு அனுப்பி வருகிறது மோடி அரசு.

• மத்திய பட்ஜெட்டில் ரூ.35,000 கோடி கொரோனா நோய் பரவலைத் தடுப்பதற்கு ஒதுக்கீடு செய்துவிட்டு, மாநில அரசுகளுக்கு தடுப்பூசிப் போடுவதற்கான செலவுகளை செய்யச் சொல்லி நிர்பந்திக்கும் வகையில், தடுப்பூசிப் போடுவதற்கானக் கொள்கையில் திடீர் மாற்றம் செய்து, தனதுப் பொறுப்பை முற்றிலுமாகக் கைகழுவி விட்டது மோடி அரசு.

• பேரிடர் மேலாண்மை நிதியைக் குறைந்த அளவிற்கு, அதுவும் அடுத்த ஆண்டுக்கான தொகையை முன்பணம் என்ற வகையில் மட்டுமே ஒதுக்கிக் கொடுத்து மாநில அரசுகளை நிர்கதிக்குத் தள்ளியிருக்கிறது மோடி அரசு.

• ஜி.எஸ்.டி. வரிவசூலில் இருந்து மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டியத் தொகையை வழங்காமல் நிறுத்தி வைத்திருத்ததன் மூலம் மாநில அரசுகளை நெருக்கடிக்கு தள்ளியிருப்பது மட்டுமின்றி, கடன் வாங்கி மாநில அரசுகளின் பொருளாதாரம் திவால் ஆவதற்கு காரணமாகியிருக்கிறது மோடி அரசு.

• ஆக்சிஜன் உற்பத்திக்காக தனியார் ஆலைகளைக் கையகப்படுத்தி உற்பத்தி செய்ய முயற்சிக்காமல் கார்ப்பரேட் நலன் காக்கும் வகையில் செயல்படுவது.

• கொரோனா தொற்றுப் பரவலில் இறந்தவர்களின் எண்ணிக்கையைத் திட்டமிட்டே குறைத்துக் காட்டுவது, மோடி அரசின் வழிகாட்டுதலின் கீழ் மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

• ஆக்சிஜன் இல்லை, மருத்துவ வசதி இல்லை என்ற அரசின் அலட்சியப்போக்கை அம்பலப்படுத்துவதை குற்றம் என வரையறுத்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வரும் யோகி ஆதித்யநாத் கண்டிக்காமல் அவரது செயலை ஊக்குவிப்பது கொடிய குற்றம்.

• கொரோனா இரண்டாவது அலை உயர்ந்து வீசிக் கொண்டிருக்கிறது; மாநில அரசுகள் செயலிழந்துப் போய் ஊரடங்கை அறிவித்துள்ளன. ஆனால், மத்தியில் இருந்து இன்றுவரை எந்த நிவாரணத்தையும் அறிவிக்காமல், கல்லூளிமங்கன் போல, பாசிச மனநிலையில் அமைதி காப்பது.

• கொரோனா முதல் அலை ஓய்ந்து விட்டது என சென்ற ஆண்டின் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் பொய்ப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டு மக்களை ஏமாற்றியது.

• போதுமான தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்யவோ, மக்களுக்கு வழங்கவோ செய்யாமல் கோ.மூத்திரம், கோ.சாணம் ஆகியவற்றை உண்ணச் சொல்லி வடமாநிலங்களில் விற்பனை செய்து வரும் பா.ஜ.க. ஆதரவு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் பசுப் பிரச்சாரம் செய்து வரும் ஆர்.எஸ்.எஸ். இந்து மதவெறி பாசிச குண்டர்களைத் தடை செய்யாமல் அவர்களைப் பிரச்சாரம் செய்ய அனுமதித்து மக்களைக் கொள்ளையடிப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது;

இவற்றின் மூலம் கொரானாவைத் தடுப்பதற்கான அறிவியல் பூர்வமான வழிமுறைகளில் இருந்து மக்களைத் திசைத்திருப்பி, தனக்கு வரும் எதிர்ப்புகளை முடக்குவது; மக்களை மூடநம்பிக்கையில் ஆழ்த்துவது ஆகியவை மோடி-பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். கும்பலின் திட்டமிட்ட செயல்பாடுகளாகும்.

ஆகையால், நமது நாட்டில் நிகழ்ந்து வரும் இந்த கொரோனா மரணங்கள், இயற்கையின் விளைவல்ல, மோடி அரசின் திட்டமிட்ட புறக்கணிப்பால் நிகழ்ந்த கொலைகள்; பச்சை படுகொலைகள்!

குஜராத்தில் ஆர்.எஸ்.எஸ். குண்டர்களால் நிகழ்த்தப்பட்ட இசுலாமியர்களுக்கு எதிரானப் படுகொலைகள் ஒரு வகை எனில், அரசு நடத்தி வரும் இந்த கொரோனா கொலைகள் இன்னொரு வகை.

படிக்க :
♦ கொரோனா அவலத்தின் உச்சத்தில் மக்கள் ! அதிகாரத்தைப் பிடிக்கும் வெறியில் மோடி !
♦ கொரோனாவில் அம்பலமாகும் மோடியின் குஜராத் மாடல்  !!

மோடி அரசின் குற்ற நடவடிக்கைகளுக்கெல்லாம், தற்போது நடக்கும் கொரோனாப் படுகொலைகளுக்கு இந்த நாட்டின் பிரதமர் என்ற வகையிலும் அதிகாரங்கள் அனைத்தையும் தனது அலுவலகத்தில் குவித்து வைத்திருப்பவருமான மோடி முதன்மை காரணம். மோடி அரசுதான் முதன்மைக் குற்றவாளி. அதாவது கொத்துக் கொத்தாக மரணம் நிகழும் என்று நன்கு தெரிந்து விளைவிக்கப்பட்ட மரணத்தை விளைவிக்கும் படுகொலைக் (culpable genocide) குற்றமுமாகும். மோடி அரசுக்கு ஆலோசனைகளை வழங்கி வரும் சாணக்கியரும் பா.ஜ.க.வின் தேசிய தலைவருமான அமித்ஷா இரண்டாவது குற்றவாளி. யோகி ஆத்யநாத், குஜ்ராத் முதல்வர், மேற்குவங்க பா.ஜக. தலைவர்கள், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் குஜராத், உ.பி., டெல்லி மாநில அதிகாரிகள் அடுத்த நிலையில் உள்ள குற்றவாளிகள்.

“விதி வந்தால் சாகவேண்டும், அதிருஷ்டம் இருந்தால் வாழ்ந்து கொள்ள வேண்டும்” என்ற தனது பார்ப்பன சனாதான நம்பிக்கையை மக்களின் மனதில் விதைப்பதுதான் உண்மையில் இந்த ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. மோடி கும்பலின் அடிப்படை சித்தாந்தம் ஆகும். இந்தச் சித்தாந்தத்தின் அடிப்படையில்தான் மோடி அரசு ஆட்சி செய்து வருகிறது. இதுதான் தற்போது நடந்து வரும் கொரோனாப் படுகொலைகளுக்கு அடிப்படையாகும்.


வைரவேல்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க