ட்ரிங் ட்ரிங்
“ஹலோ! மாடு உதவி மையம்”
“மா!”
“மா. என்ன உதவி வேண்டும்?”
“மா”
“உங்களுக்கு இரும்பல் உள்ளதா?”
“மா”
“காய்ச்சலா”
“மா”
“ஆக்சிஜன் அளவு குறைவாக உள்ளதா?”

இரண்டு மாடுகள் பேசிக் கொள்வது போன்ற இந்த உரையாடல், உத்திரப் பிரதேச ஆதித்யநாத் அரசாங்கம் மாடுகளுக்கான கொரோனா உதவி மையத்தை தொடங்க  பிறப்பிக்கப்பட்ட உத்தரவை பகடி செய்து சமூக வலைத்தளங்களில் வந்த குறுஞ்செய்தியாகும். உ.பி-யில் கொரோனாவினால் இறந்தவர்களின் உடலை எரிக்க வழியில்லாமல் கங்கை ஆற்றில் வீசப்பட்டும் ஆற்றின் கரைகளில் புதைக்கப்பட்டும் இருப்பதாக பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

படிக்க :
♦ வல்லரசுக் கனவும் மாட்டுச்சாணி ஆய்வும் !! || CCCE
♦ தமிழகப் பல்கலைக் கழகங்களில் பறிபோகும் 69 சதவிகித இடஒதுக்கீடு || CCCE

கொரோனா இரண்டாவது அலையினால் மிகவும் மோசமாக பாதித்துள்ள அம்மாநிலத்தில் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை குறைத்துக் காட்டப்படுவதாகவே விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால், அம்மாநில பி.ஜே.பி அரசோ (ஆதித்யநாத்), நோயைக் கட்டுப்படுத்துவதிலும் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தாமல் ஆக்சிஜன் பற்றாகுறை என்று யாராவது செய்தி பகிர்ந்தால் அவர்களுடைய சொத்துக்கள் பறிக்கப்படும் என மிரட்டுவதிலும் பசு மாடுகளுக்கு கொரோனா பரிசோதனை செய்வதிலுமே அதிக அக்கறைக் காட்டி வருகிறது.

உ.பி-க்கு ஆதித்தியநாத் என்றால் இந்தியாவிற்கு நரேந்திர மோடி-அமித்ஷா கூட்டணி.  ஆக்சிஜன் பற்றாக்குறையினால் உயிரழப்புகள் அதிகரித்த போது சமூக வலைதளங்களில் வந்த விமர்சனங்களை கட்டுப்படுத்த மோடியை விமர்சிக்கின்ற செய்திகளை நீக்க வேண்டும் என சமூக வலைதள நிறுவனங்களிடம் முறையிட்டுள்ளது மத்திய அரசாங்கம்.

நிலைமை கைமீறி போகவே RSS-ன் தேசிய செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே ‘அழிவு சக்திகள் அல்லது பாரத விரோத சக்திகள் மக்களிடையே எதிர்மறைக் கருத்துக்களை பரப்புவதாகவும் செய்தி ஊடகங்கள் மக்களிடையே நம்பிக்கையை உருவாக்க வேண்டும்’ என்றும் பேசியிருந்தார்.

கொரோனா இரண்டாவது அலையினால் இந்தியா மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதிற்கு மோடி அரசே காரணம் என பல வெளிநாட்டு செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. சமீபத்தில் கூட பிரபல மருத்துவ ஆய்வு இதழான லேன்செட் ஆகஸ்ட் மாதத்திற்குள் கொரோனாவால் ஏறத்தாழ 10 லட்சம் பேர் உயிரிழக்க வாய்ப்புள்ளதாகவும் அதற்கு மோடி அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.

இந்த விமர்சனங்கள் எதுவும் அவர்களின் காதிற்குள் செல்லவில்லை. வழக்கம் போல வெளிநாட்டுச்சதி, பாரதத்தை வீழ்த்த திட்டமிடுகிறார்கள், மாநில அரசுகள் தான் இதற்கு பொறுப்பு என்று தங்களது ட்ரோல் ஆர்மி மூலமும் ஜால்ரா ஊடகங்கள் மூலமும் பிஜேபி/RSS தலைகள் தங்களுடைய ‘ஹிந்து ஹிருதய சாம்ராட்’க்கு முட்டுக்கொடுத்து வருகின்றன. தற்போது மோடி அரசாங்கத்தை பற்றிய நேர்மறை கருத்துக்களை மக்களிடையே பரப்புவதற்காக ரவிசங்கர், ஜக்கிவாசுதேவ், அசீம் பிரேம்ஜி-யைக் கொண்டு தேசிய அளவிலான பிரச்சார (Positivity Unilimited) இயக்கத்தை பிஜேபி/RSS நடத்தியுள்ளது.

வெளிநாட்டு ஊடகங்களை விட்டுவிடுவோம் இந்திய ஆய்வாளர்களும் மருத்துவர்களுமே மோடி அரசின் பொறுப்பற்றத் தன்மையை ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியுள்ளனர். கொரோனா வைரஸ் மரபணு மாற்றத்தைப் பற்றி ஆய்வு செய்வதற்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்ட INSACOG[1] என்ற அமைப்பின் ஆய்வாளர்கள் மே மாதம் முதல் வாரத்தில் ராய்ட்டர்ஸ் பத்திரிக்கைக்குப் பேட்டியளித்திருந்தனர். அதில் ‘தற்போது மரபணு மாறிய கொரோனா வைரஸ் (Double mutant corona virus-B.1.167-) இந்தியாவில் பரவி வருவதாகவும் இது அதிகம் பரவும் தன்மை கொண்டதாக இருப்பதாகவும்’ மார்ச் முதல் வாரத்திலே மத்திய சுகாதரத்துறை செயலரிடம் தெரிவித்தாக கூறியுள்ளனர்.

மேலும் மத்திய சுகாதரத்துறைக்கான பத்திரிக்கை செய்தியை தயாரித்து அனுப்பிய INSACOG உருமாறிய கொரோனா வைரஸ் (B.1.167) ‘அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது (High concern)’ என்று அச்செய்தி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கூடவே கொரோனா பரவை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் இல்லையேல் அதிக பாதிப்புகள் ஏற்படும் என்றும் INSACOG  மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் மார்ச் 24 அன்று வெளியிட்ட பத்திரிக்கை செய்தியில் high corcern என்ற வார்த்தையை சுகாதாரத்துறை அமைச்சகம் நீக்கியிருந்தது.

INSACOG ஆய்வானது மார்ச் மாதத்தில் மகராஷ்ட்ரா மாநிலத்தில் பதிவாயிருந்த கொரோனா தொற்றில் 15-20 சதவீத பாதிப்புகள் B.1.167 கொரோனா வைரஸினால் ஏற்பட்டதாக கூறியுள்ளது. தற்போது அதன் அளவு 60 சதவீதத்திற்க்கும் மேலாக அதிகரித்தோடு மட்டுமில்லாமல் மற்ற மாநிலங்களுக்கும் பரவியுள்ளதாகவும் கண்டறிந்துள்ளனர். இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு B.1.167 வைரஸ் முக்கிய காரணம் என மற்ற ஆய்வுகளும் கூறுகின்றன.

மரபணு ஆய்வு முடிகளின் அடிப்படையில் கொரோனா இரண்டாம் அலை குறித்து மார்ச் முதல் வாரத்திலேயே INSACOG ஆய்வாளர்கள் எச்சரித்தும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமோ அல்லது பிரதமர் அலுவலகமோ அதனைக் கண்டுகொள்ள இல்லை. நோய் தடுப்பிற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளும் செய்யவில்லை. ஆனால் தேர்தல் பிரச்சாரத்திற்கும் கும்பமேளாவிற்கும் அனுமதி அளித்திருந்தனர். கொரோனா தொற்று உச்சத்திலிருந்த நேரத்தில் (ஏப்ரல் 13, 2021) சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பசுமாடு பற்றிய ஆய்வில் அக்கறைக் கொண்டிருந்தார். 98 கோடி மதிப்பிலான SUTRA-PIC என்ற இந்த திட்டம் இந்திய பசுக்கள் பற்றியும் அதன் பஞ்சகவ்யத்தைப் பற்றியும் ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டதாகும். இந்துத்துவ அரசியலின் முக்கிய குறியீடாக உள்ள பசு அரசியலுக்காக  அறிவியல் பூர்வமான ஆதாரங்களை தேடுவதே இத்திட்டத்தின் நோக்கம். ஆனால் கடந்த 14 மாதங்களாக பெருந்தொற்றில் நாம் பாதிப்படைந்திருக்கின்ற போதும் கொரோனா வைரஸைப் பற்றி ஆய்வு செய்யவதற்கான ஒரு ஒருங்கிணைந்த திட்டத்தை மோடி அரசு இன்னும் அறிவிக்கவில்லை. மரபணு ஆய்விற்காக டிசம்பரில் ஆரம்பிக்கபட்ட INSCOG-க்கு தேவையான நிதியைக் கூட ஏப்ரல் முதல் வாரத்தில் தான் கொடுத்தனர்.

கொரோனா பரவ ஆரம்பித்த கடந்த மூன்று மாத காலத்தில் பி.ஜே.பி தலைவர்கள் (பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள் உட்பட) பேசியவை அறிவியலுக்கு புறம்பானதாகவும் அரசியல் ஆதாயத்திற்கானதாகவும் இந்துத்துவ பரப்புரைகளுக்கானதாகவுமே இருந்தது. இதற்கான சில உதாரணங்களை மட்டும் கீழே தருகிறோம்.

  1. பிப்ரவரி மாத இரண்டாம் வாரத்தில் ஒரு இணையவழி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி ‘கொரோனாவிற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகள் உலக நாடுகளுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது’ என்றார். ஆனால், மோடி பேசிய இரண்டு மாதத்திலே உலகளவிலான தொற்று இந்தியாவில் தான் அதிகம்.
  2. பிப்ரவரி மாத இறுதியில் மத்திய அமைச்சர்கள் ஹர்ச வர்தனும் நிதின் கட்காரியும் பாபா ராம்தேவினுடைய பதஞ்சலி நிறுவனத்தின் ‘கொரோனாநில்’ மருந்து கொரோனாவைக் குணப்படுத்துகிறது என்று அறிவித்து அதற்கான ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டனர். ஆனால் இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டிருந்த ஆதாரங்கள்  அறிவியல் முறைபடி இல்லை என்று ஆய்வாளர்கள் விமர்சித்திருந்தனர்.
  3. மார்ச் 7, 2021 டெல்லி மருத்துவக் கழகத்தில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ‘கொரோனா பெருந்தொற்று அபாயத்தின் இறுதி ஆட்டத்தில் இந்தியா உள்ளது’ என்று மருத்துவர்கள் மத்தியில் அறித்தார். ஆனால், மற்ற நாடுகளின் அனுபவத்திலிருந்து பார்க்கும் போது இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையை தவிர்க்க முடியாதது என்று பல ஆய்வாளர்களும் மத்திய அரசை எச்சரித்திருந்தனர்.
  1. ஏப்ரல் முதல் வாரத்தில் அஸ்ஸாம் மாநிலத்தினுடைய சுகாதாரத் துறை அமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, ‘அஸ்ஸாமில் கொரோனா இல்லை ஆகையால் முகக்கவசம் அணியத் தேவையில்லை, தேவையென்றால் மக்களுக்கு தெரியப் படுத்துகிறோம்’ என்றார். இச்சமயத்தில் அஸ்ஸாமின் சட்டசபைக்கான மூன்று கட்டத் தேர்தல் நிறைவடைந்திருந்தது. ஆனால், அரசு தரவுகளின் படி ஜனவரி 1-ல் இருந்து ஏப்ரல் 6 வரை 2,624 பேர் கொரோனா தொற்றினால் பாதிப்படைந்திருந்தனர். 66 இறந்திருந்தனர்.
  2. ஏப்ரல் 14, 2021, உத்திராகண்ட் முதல்வர் திரத் சிங் ராவத், ‘கும்ப் கங்கை நதியின் கரையில் அமைந்துள்ளது. நதி ஓட்டத்தில் கங்கா மாதாவின் அருள் உள்ளது. ஆகையால் கொரோனா இருக்க வாய்ப்பில்லை’ என்றார். கும்பமேளாவில் ‘புனித நீராடிய’ ஏப்ரல் 13 மற்றும் 14 இருதினங்களில் மட்டும் 1000 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக உத்திராகண்ட் அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக கொரோனா அதிதீவிர பரவலுக்கான (Super spreader event) முக்கிய காரணிகளில் ஒன்றாக கும்பமேளா-புனித நீராடல் நிகழ்வை மத்திய அரசின் நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.
  3. ஏப்ரல் 17, 2021 அன்று மேற்கு வங்கத் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி ‘பேரணியில் இவ்வளவு மக்கள் கூட்டத்தினைப் பார்த்ததில்லை. எங்கு பார்த்தாலும் மக்களாகத் தான் தெரிகிறார்கள்’ என்றார். மோடி உட்பட அக்கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பானமையோர் கெரோனா வழிக்காட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றவில்லை. குறிப்பாக அன்றைய தேதியில் 2.35 லட்சம் கொரோனா பதிப்புகளும் 1,341 இறப்பும் இந்தியாவில் பதிவாகியிருந்தது.
  4. ஏப்ரல் 18, 2021 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்குப் போட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ‘கொரோனா தொற்று அதிகரிப்பிற்கும் தேர்தல் பிரச்சாரத்திற்கும் தொடர்பில்லை’ என்று கூறினார். ஆனால் ஏப்ரல் 1 லிருந்து (738 கொரோனா தொற்று) ஏப்ரல் 18 (8417 கொரோனா தொற்று) தேதிக்குள் மேற்குவங்கத்தில் கொரோனா தொற்றின் விகிதம் 1,040 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அரசாங்கப் புள்ளிவிவரம் கூறுகிறது.
  5. மே 12 2021, மத்தியப் பிரதேச கலாச்சாரத்துறை அமைச்சர் உஷா தக்கூர் ‘கொரோனா மூன்றாவது அலையிலிருந்து தப்பிக்க சிகிட்த யாகத்தை நடத்த வேண்டும். இது சுற்றுச்சூழலை தூய்மையாக்கும். இந்த யாகத்தின் மூலமே நமது முன்னோர்கள் பெரும் தொற்றை தடுத்திருக்கின்றனர்’ என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
  6. கோரோனாவிற்கு மருந்தாக மாட்டு சிறுநீரைக் குடிப்பது, மாட்டுச் சானத்தை உடலில் பூசிக் கொள்வதுப் போன்றவற்றையும் பி.ஜே.பி எம்.எல்.எ.க்களும் கட்சி ஆதரவாளர்களும் செய்து வருகின்றனர்.

அறிவியலை புறக்கணிப்பது, உண்மைத் தரவுகளை மறைப்பது/திரித்துக் கூறுவது, மக்களை நம்பவைக்க மத நம்பிக்கைகளையும் பழங்காலக் கதைகளையும் கட்டவிழ்த்து விடுவது. இவைகள் தான் BJP/RSS கும்பலின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முதன்மையாக இருந்ததாகக் கூறலாம். கொரோனா நெருக்கடி காலத்திலும் கூட தங்களிடைய இந்து ராஷ்ட்ரா கனவிற்காக அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டுமென்பதே BJP/RSS கும்பல் முதன்மையான பணியாக கொண்டிருந்தனர்.

படிக்க :
♦ பள்ளி மாணவர்களை நட்டாற்றில் விட்டுவிட்டு கல்வியை கடைச் சரக்காக்கும் மோடி அரசு || CCCE
♦ அண்ணா பல்கலை : M. Tech படிப்பிற்கான 69 % இட ஒதுக்கீட்டை அமல்படுத்து || CCCE

மக்களைத் தொற்றிலிருந்து காப்பாற்றுவது என்பதெல்லாம் அவர்களுக்கு இரண்டாம் பட்சம்தான். இதனை மோடி-அமித்ஷா பிரச்சனையாகவே பொது ஊடகங்கள் கட்டமைக்கின்றன. ஆனால், BJP/RSS யின் பிற்போக்கு சித்தாந்தமுமே இதற்கு முதன்மைக் காரணம் எனலாம்.

தங்களுடைய பிற்போக்கு சித்தாந்தத்தை மக்களிடம் பரப்புவதன் வாயிலாக அதற்கு மக்களுடைய ஆதரவையும் பெற்றுள்ளனர். இது ஏறத்தாழ பாசிஸ்ட்களின் உத்தியாகும். இந்துத்துவ சித்தாந்தம் அறிவியலுக்கு எதிரானது. அறிவியல் அணுகுமுறையும் அறிவியல் கன்ணோட்டமுமே மக்களை பெருந்துயரிலிருந்தும் பெருந்தொற்றுகளிலிருந்தும் காப்பாற்றும்.

ராஜன்
CCCE-TN

செய்தி ஆதாரம்:
1.   https://www.reuters.com/world/asia-pacific/exclusive-scientists-say-india-government-ignored-warnings-amid-coronavirus-2021-05-01/
2.   https://www.thequint.com/news/india/oximeters-and-thermal-scanners-for-cows-in-uttar-pradesh-fake-news#read-more
3.   https://www.youtube.com/watch?v=DnTXVLIranY
4.   https://thewire.in/politics/bjp-leaders-covid-19-pandemic-remarks
5.   https://theprint.in/india/harsh-vardhan-wants-significant-progress-on-cow-science-front-before-pm-speech-on-75th-i-day/639274/
6.   https://theprint.in/india/rss-launches-campaign-to-counter-covid-doomsdayers-shifts-strategy-to-relief-efforts/655629/

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க