ட்டீஸ்கர், ராஜஸ்தான் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் உள்ள அரசு பள்ளிகளில் சுமார் 1137 பள்ளிகளில் 2 முதல் 6-ம் வகுப்பு வரை படிக்கின்ற 16067 மாணவர்களிடம் கொரானா ஊரடங்கின் விளைவாக மாணவர்களின் கற்றல் திறனில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கண்டறிவதற்கான கணக்கெடுப்பை அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் கடந்த ஜனவரி மாதம் நடத்தியுள்ளது. இதன் முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்டன.

அதில்

1. 92% மாணவர்கள் முந்தைய வகுப்புகளில் படித்த மொழிப் பாடங்களில் உள்ள வார்த்தைகளை படிக்க இயலவில்லை. அம்மாணவர்களால் வாசிக்கவும் இயலவில்லை. முந்தைய வகுப்புகளில் படித்த மொழிப் பாடங்களை மறந்துவிட்டனர்.

2. 82% மணவர்கள் கூட்டல், கழித்தல் போன்ற எளிய கணித அடிப்படைகளையும் மறந்துள்ளனர். அம்மாணவர்களால் எளிய கூட்டல், கழித்தல் கணக்குகளைக் கூட செய்ய முடியவில்லை.

என்று அவ்வறிக்கை கூறுகிறது.

இது கடந்த 10 மாதகாலமாக அரசு பள்ளிகள் மூடியிருப்பதும் கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதற்கான மாற்று வழிகளை அமல்படுத்தாததும் தான் இதற்குக் காரணம் என்கிறது அந்த அறிக்கை. கொரோனா ஊரடங்கு காலத்தில் இணையவழி கற்பிக்கும் முறையை மோடி அரசு மாற்றாக முன்வைத்தது. ஆளும்வர்க்க பிரதிநிதிகளோ இணையவழிக் கற்பித்தல் முறை கற்றல் திறனை அதிகரிக்கும் என பிரச்சாரம் செய்தனர்.

படிக்க :
♦ திஷா ரவி கைதும் “டூல் கிட்”டுகளின் வரலாறும் !
♦ பட்ஜெட் 2021 : சுகாதாரத்திற்கான நிதியை 137% அளவிற்கு அதிகரித்ததா மோடி அரசு ?

கல்வி அதிகாரிகளும் ஆசிரியர்களும் பேராசிரியர்களும் அரசு சொல்வதையே கிளிப் பிள்ளைப் போல நடைமுறையும் படுத்தினர். ஆனால் சமீபகாலமாக வரக்கூடிய செய்திகள் மற்றும் ஆய்வு அறிக்கைகளோ, மோடி அரசின் கூற்றுக்கு மாறாக, ஊரடங்கு மற்றும் இணையவழிக் கற்பித்தல் முறையினால் படிப்பிலிருந்தே மாணவர்கள் வெளியேறியுள்ளனர் என்ற கள உண்மையை ஆதாரத்துடன் முன்வைக்கின்றன. குறிப்பாக அரசு கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களே இதனால் மிக அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் என்கின்றன இவ்வறிக்கைகள்.

கடந்த வாரம் கூகுள் நிறுவனமும் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையும் ஏற்பாடு செய்திருந்த இந்திய கல்வி மாநாட்டில் (Indian Education Summit-2021) பல கல்வி தொழிட்நுட்ப நிறுவனங்கள் கலந்து கொண்டன. அம்மாநாட்டில் பேசிய மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் “ஆறாம் வகுப்பிலிருந்து தொழிற்கல்வியும் தொழிற்பயிற்ச்சியும் வழங்குவதன் மூலம் மாணவர்களிடத்தில் தன்னம்பிக்கையை விதைக்க முடியும். உலக நாடுகளிலே இந்தியாவில் தான் செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence – AI) பற்றிய பாடம் பள்ளிகளில் கற்றுத்தரப்படுகிறது” என்றார்.

கோடிக்கணக்கான மாணவர்கள் பல மாதங்களாக கல்விகற்க முடியாமலிருப்பதை பற்றியோ கல்வி இடைநிற்றல் பற்றியோ இதுவரை பேசாமல் அமைதி காக்கும் கல்வி அமைச்சர் அம்மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவுப் பற்றி பாடம் நடத்துகிறோம் எனப் பெருமை கொள்கிறார்.

#####

கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி இணையவழி கற்பித்தலை அனைத்து மட்டங்களிலும் மோடி அரசு முன்தள்ளிய இதே காலகட்டத்தில் தான் கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களின் வருவாய் பலமடங்கு அதிகரித்துள்ளது. கூடவே இத்துறையில் ஏராளமான அந்நிய முதலீடுகள் குவிவதும் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாவதும் நடந்துள்ளது.

உதாரணமாக பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட பைஜுஸ் என்ற கல்வி தொழில்நுட்ப நிறுவனம் (Byju’s edutech), ஆகாஷ் கல்வி சேவை நிறுவனத்தை ஒரு பில்லியன் டாலருக்கு (7260 கோடி ரூபாய்) வாங்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. ஆகாஷ் நிறுவனமானது நீட் உள்ளிட்ட மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வுகள் மற்றும் ஐஐடி நுழைவுத் தேர்வு போன்ற தேசிய அளவிலான தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கும் நிறுவனமாகும். இதில் Blackstone என்ற அமெரிக்க தனியார் நிறுவனம் 39% பங்குகளை வைத்துள்ளது.

பைஜுஸ் (Byju’s) நிறுவனத்திலோ பேஸ்புக்கினுடைய முதலீடு, டைகர் குளோபல், பாண்ட் கேப்பிடல் என்ற அமெரிக்க தனியார் நிறுவனங்களுடைய முதலீடுகள் அதிக அளவில் உள்ளன. இது ஒரு உதாரணம் மட்டுமே.

இந்தியாவிலுள்ள கல்வி தொழில்நுட்ப நிறுவனங்கள் பலவற்றில் ஏராளமான வெளிநாட்டு முதலீடுகளே உள்ளன. புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு கல்வியின் தரத்தினை மேம்படுத்துகிறோம் என்று கூறி இந்நிறுவனங்களுக்கு ஆதரவாக பல அறிவிப்புகளை மத்திய கல்வி அமைச்சகம் செய்துவருகிறது.

அனைத்து உயர்படிப்புகளுக்கும் தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு, உயர்/பள்ளிக் கல்வியில் இணையவழி கற்றல்-கற்பித்தலுக்கு முன்னுரிமை, அரசுப் பள்ளிகளை தனியார் கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களின் உதவியோடு (PPP model) மேம்படுத்துதல் போன்ற திட்டங்கள் இந்திய கல்வி சந்தையை தனியார் கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களின் கைகளில் ஒப்படைப்பது என்ற கொள்கை முடிவின் வெளிப்பாடேயாகும். இதற்கு ஒத்திசைவாகவே நடப்பு பட்ஜெட்டில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவாகவே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

கொரானா ஊரடங்கை ஒட்டி தடைப்பட்டிருந்த கல்விச் செயல்பாடுகளை பழைய நிலைக்கு கொண்டுவர கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யவேண்டுமென கல்வியாளர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால் மோடி அரசோ கடந்த ஆண்டைவிட 6.13% குறைவாகவே ஒதுக்கியுள்ளது. மேலும் கல்வியில் தனியாரின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான பல அறிவிப்புகளும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. ரமேஷ் பெக்கிரியாலின் பேச்சோ தாங்கள் எந்த வர்க்கத்திற்கானவர்கள்? என்பதை நேரடியாகவே வெளிப்படுத்துகிறது !

ராஜன்
CCCE-TN

செய்தி ஆதாரம் :
1. The Indian Express, February 11, 2021
2. The Economic Times
3. Loss of Learning during the Pandemic, Field Studies in Education, February 2021.
4. The News Minute

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க