“எனது குடும்பம் எனக்காக அதிகமான பணம் செலவழித்து வருகிற்து. நான் அவர்களுக்கு  பாரமாக இருக்கிறேன். எனது படிப்பு பாரமாக இருக்கிறது. ஆனால் நான் படிப்பு இல்லாமல் உயிர்வாழ முடியாது.  நான் பல நாட்களாக யோசித்துவருகிறேன். தற்கொலைதான் எனக்கான ஒரே போக்கிடம் என்று நான் நினைக்கிறேன்”

டெல்லியில் உள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரியில் கணிதத் துறையில் படித்து வந்த பெண் மாணவர் ஐஷ்வர்யாவின் இறுதி வார்த்தைகள் இவை.

கல்லூரி படிப்பைத் தொடர்வதற்குத் தனக்கு விருப்பம் இருந்தும் தனது குடும்பத்தின் பொருளாதார சூழல் மற்றும் அரசின் பாராமுகமும், கல்லூரியின் லாபவெறியும் ஏற்படுத்திய சூழலின் காரணமாக தனது உயிரை கடந்த நவம்பர் 3-ம் தேதியன்று மாய்த்துக் கொண்டார் ஐஷ்வர்யா.

படிக்க :
♦ ஐஐடி மாணவி ஃபாத்திமா படுகொலை : தமிழா உன் சொரணையின் விலை என்ன ?
♦ RGNIYD மாணவர் போராட்டம் : ஒரு தேசியக் கல்வி நிறுவனம் சங்கிகளால் சீரழிக்கப்பட்ட கதை !

தேசிய அளவிலான ஊரடங்கு காரணமாக தெலங்கானாவில் உள்ள தனது ஊரில் பெற்றோர்களுடன் இருந்த ஐஷ்வர்யாவின் குடும்பம், ஊரடங்கை ஒட்டி வாழ்வாதாரம் இழந்து கடும் நெருக்கடியில் சிக்கியிருந்தது.

கடுமையான பொருளாதார நெருக்கடியில் ஐஷ்வர்யா படித்துவந்த சூழலில் கல்லூரி நிர்வாகம் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும்தான் விடுதியில் தங்க அனுமதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

கல்லூரிக்கு அருகில் தங்க இடம் பார்த்தால் மாதம் 12,000 முதல் 18,000 வரை செலவாகும் என்ற நிலையில் தம்மை விடுதியில் தங்க அனுமதிக்குமாறு தனது விடுதிகாப்பாளரிடம் தொடர்ந்து கோரியுள்ளார். ஆனால் அவருக்கு எவ்வித பதிலும் நிர்வாகத்திடமிருந்து அளிக்கப்படவில்லை.

கல்வியை தொடர முடியாத துயரத்தில் வாழ்வை முடித்துக் கொண்ட ஐஷ்வர்யா

ஆன்லைன் வகுப்புகளுக்கு மடிக் கணிணி ஏதும் இல்லாததால், அலைபேசியைக் கொண்டுதான் வகுப்புகளில் பங்கேற்று வந்துள்ளார். இவர் குடியிருக்கும் பகுதியில் போதுமான இணைய வசதி இல்லாததும், தொடர்ச்சியாக இணையவழி வகுப்புகளில் பங்கேற்க போதுமான இணைய டேட்டாவுக்கு கூடுதலாக செலவு செய்ய வேண்டியிருப்பதும் ஒரு பெரும் பிரச்சினை என்று இக்கல்லூரியின் மாணவர் அமைப்பால் நடத்தப்பட்ட சர்வேயில் கருத்து தெரிவித்திருக்கிறார் ஐஷ்வர்யா.

கடந்த நவம்பர் 1-ம் தேதிக்கு முன்பு வரை ஆசிரியர்கள், ஆன்லைன் வகுப்புகளில் வருகைப் பதிவை கட்டாயமக்கியிருந்தனர். சரியான இணைய இணைப்பு இல்லாத நிலையில் வருகையை நிறைவாகப் பதிவு செய்ய முடியாத சூழலும் கூடுதலாக அவருக்கு மனச்சோர்வை ஏற்படுத்தியிருக்கும் என்கிறார் அவருடன் படிக்கும் சக மாணவர் ஒருவர்.

கடந்த ஆண்டு ஐஷ்வர்யாவின் கல்விக்காக அவர்கள் குடியிருந்த வீடு அடமானம் வைக்கப்பட்டது. குடும்பத்தின் மோசமான பொருளாதார நிலைமை காரணமாக அவரது தங்கையும் படிப்பை விட்டு நிறுத்தப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்நிலைமைதான் அவரை தனது குடும்பத்திற்குப் பாரமாக எண்ணச் செய்திருக்கிறது.

ஐஷ்வர்யா இயல்பிலேயே நன்றாகப் படிக்கும் மாணவி. பள்ளிக் கல்வியில் நல்ல மதிப்பெண் பெற்று சிறப்பாக படிக்கும் ஏழை மாணவர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் கல்வி உதவித் தொகையைப் பெற்றுவந்தார். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்திலிருந்து கிடைக்கப்பெறும் இந்த ஆண்டிற்கான கல்வி உதவித் தொகையும் கிடைக்கப்பெறவில்லை. இவை அனைத்தும் ஒன்றிணைந்துதான் ஐஷ்வர்யாவை தற்கொலையை நோக்கித் தள்ளியிருக்கின்றன.

கல்லூரி நிர்வாகமோ ஐஷ்வர்யா இறந்து ஒருவாரத்திற்குப் பிறகு வெளியிட்ட செய்தி அறிக்கையில், ஐஷ்வர்யா உதவிக்காக ஆசிரியரையோ, நிர்வாகியையோ கல்லூரி முதல்வரையோ அணுகவில்லை” என்று கூறி தனது கையைக் கழுவிக் கொண்டது. இதனை ஐஷ்வரியாவின் உடன் படிக்கும் மாணவர்கள் கடுமையாக மறுத்துள்ளனர். இது பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாக்கும் நிலைப்பாடு என்று கண்டித்துள்ளனர்

இணையவசதி ஏற்றத்தாழ்வு குறித்து பலமுறை முதல்வரிடமும் ஆசிரியர்களிடமும் பலமுறை முறையிட்டுவிட்டோம். ஆனால் யாரும் செவி சாய்க்கவில்லை என்கின்றனர், மாணவர்கள்.

நவம்பர் 8 அன்று வெளியான கல்லூரியின் அறிக்கையைத் தொடர்ந்து 9-ம் தேதி அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் சமுக வலைத்தளங்களில் தங்களது கண்டனத்தைப் பதிவு  செய்திருப்பதோடு, பல மாணவர் சங்கங்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் முன்நின்று அனைவருக்கும் உடனடியாக வழங்க கோரி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

பொருளாதார நெருக்கடி, நாடு தழுவிய ஊரடங்கு ஏற்படுத்தியுள்ள வாழ்வாதார இழப்பு, இவற்றுக்கும் மேலாக மக்களின் உரிமைகளைப் பறித்து அவர்களை வாழ்வாதாரம் இழக்கச் செய்து வருகிறது இந்த அரசு. ஐஷ்வர்யாவின் மரணம், கல்வி கிடைக்க முடியாத சூழலில் மனமுடைந்து நடந்த தற்கொலை அல்ல. மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளின் காரணமாக கல்வி மறுக்கப்பட்டு நடத்தப்பட்டப் படுகொலை !

கர்ணன்
செய்தி ஆதாரம் :
The Wire

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க