சென்னை ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ளது, இராஜீவ்காந்தி இளைஞர் முன்னேற்றத்திற்கான தேசிய கல்வி நிறுவனம். இங்கு இந்தியாவின் பல்வேறு பகுதியிலிருந்தும் மாணவர்கள் வந்து பயில்கின்றனர். சமூகவியல் சார்ந்த படிப்புப் பிரிவுகளைக் கொண்டதே இந்த பயிலகத்தின் சிறப்பாகும். இங்கு படிக்கும் மாணவர்கள் அடிப்படை வசதிகள் இல்லாமை, போதுமான ஆசிரியர்கள் இல்லாமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை நிர்வாகத்திடம் முன் வைத்தனர். மாணவர்களின் கோரிக்கைகளுக்கு நிர்வாகம் செவி சாய்க்கவில்லை. அதனைத் தொடர்ந்து மாணவர்கள் கடந்த அக்டோபர் 8-ம் தேதி முதல் 17-ம் தேதிவரையில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இரண்டு நாட்களில் மாணவர்கள் போராட்டம் பிசுபிசுத்துப் போய்விடும் என்றெண்ணிய நிர்வாகம், மாணவர்களின் தொடர்ச்சியான உறுதியான போராட்டத்தைக் கண்டு அம்மாணவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு வந்தது.

மாணவர்கள் பின்வரும் கோரிக்கைகளை முக்கியமாக முன்வைத்தனர்.

 • மத்திய அரசின் சிறப்புக் கல்வி நிறுவனமாகிய இங்கு NAAC / UGC / NIRF போன்ற அங்கீகாரங்கள் ஏதும் இல்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக இங்கு மாணவர் சேர்க்கையும் குறைவாக உள்ளது. கல்வி நிறுவனத்திற்கு அங்கீகாரம் பெற வேண்டும்.
 • மாணவர்களின் ஸ்காலர்சிப் தொகை முறையாக வழங்கப்படுவதில்லை.
 • இக்கல்வி நிறுவனத்திற்கான முத்திரையிலிருந்து இராஜீவ் காந்தி படம் நீக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்படும் சான்றிதழ்களிலும் இராஜீவ் காந்தி பட முத்திரை இன்றி கொடுக்கப்படுகிறது. இராஜீவ் காந்தி பட முத்திரை மீண்டும் அனைத்து சான்றிதழ்களிலும் கொண்டுவர வேண்டும்.
 • நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். பல துறைகள், பேராசிரியர்கள் இல்லாமலேயே இயங்குகின்றன. அங்கு பேராசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
 • அடிக்கடி துறைகளின் பெயரை மாற்றுவது, துறைகளை இழுத்துய் மூடுவது போன்ற நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
 • மாணவ, மாணவியர் விடுதிகளில் எவ்வித அடிப்படை வசதிகளும் செயல்பாட்டில் இல்லை. மேலும் ஏற்கனவே இருக்கும் வசதிகளும் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இதனை சரிசெய்ய வேண்டும்.
 • கல்லூரியில் உள்ள பல்வேறு வசதிகள் பராமரிப்பின்றியே இருக்கின்றன. முறையாக அனைத்தையும் பராமரிக்க வேண்டும்.
 • மாணவர்களுக்கான விளையாட்டுப் பயிற்சிகள், பயிற்சியாளர்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட வேண்டும்.
 • பிற நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு, உயர்கல்வி வாய்ப்பு, ஆராய்ச்சி ஆகியவற்றிற்கு வசதி செய்து தரவேண்டும்.
 • தற்போது இருக்கும் மாணவர் கவுன்சில் அதிகாரம் இல்லாத அமைப்பாக இருப்பதால், மாணவர்களுக்கு சங்கம் தேவை. அதில் உடனடியாக தேர்தலும் நடத்தப்படவேண்டும்.
 • துணைப்பதிவாளர் மாணவர்களை மோசமாக நடத்துகிறார். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 • உடனடியாக பயிலகத்திற்கு இயக்குனரை நியமிக்க வேண்டும்,

நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தைக்கு வந்த பதிவாளரிடம் இந்தக் கோரிக்கைகள் உள்ளிட்டு பல்வேறு கோரிக்கைகளை மாணவர்கள் முன்வைத்தனர்.

இந்தக் கோரிக்கைகளில் மாணவர்களின் ஸ்காலர்சிப் தொகை உள்ளிட்ட பொருளாதாரக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றியிருக்கிறது நிர்வாகம். ஆசிரியர் நியமனம் மற்றும் இயக்குனர் நியமனம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார் பதிவாளர். அதே போல பிற அடிப்படை வசதிகளையும் செய்து தருவதாகத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தைக் கைவிட்டனர். தங்களது அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை எனில் மீண்டும் போராட்டம் தொடங்கும் என்றும் மாணவர்கள் கூறியுள்ளனர்.

தனிச்சிறப்பு பயிலகமாக 25 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட இந்த பயிலகத்தில் இவ்வளவு பிரச்சினைகள் எங்கிருந்து வந்தன, என்பதை சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்களிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.

இந்த பயிலகத்தில் தற்போது உடனடியாக இயக்குனரை போட வேண்டும் என மாணவ்ர்கள் போராடி வருகின்றனர். இதற்கு முன் இருந்த இயக்குனர் என்ன ஆனார் என்ற கேள்வி வருகிறதல்லவா ?

மதன் மோகன் கோயல்.

இங்கு பயிலகத்தின் முன்னாள் இயக்குனரின் பெயர் மதன் மோகன் கோயல். இவர் பதவியில் அமர்ந்தது, இந்தப் பயிலகத்தை படிப்படியாக திட்டமிட்டு சிதைத்துள்ளார். எவ்வித முன்னறிவிப்பும் கலந்தாலோசிப்பும் இன்றி கல்விநிறுவனத்தின் முத்திரையை மாற்றியுள்ளார். இதனால் மாணவர்களின் சான்றிதழ்களில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன.

திடீரென ஒரு நாள் கல்வி நிறுவன வளாகத்தில் சாமி சிலை பூமியிலிருந்து கண்டெடுக்கப்பட்டிருப்பதாக அறிவித்து, ஒரே வாரத்திற்குள் ஒரு கோவிலையும் கட்டியுள்ளார். பாபர் மசூதியில் ராமர் கோவில் முளைத்த கதை போல உள்ளது அல்லவா ?

இதற்கு எதிராக மாணவர்கள் பயிலகத்திற்குள் மதம் சார்ந்து ஆலயங்கள் கொண்டு வரக் கூடாது எனக் கூறியுள்ளனர். ஆனால், நிர்வாகமோ இது ஆசிரியர்களுக்கானது. இதில் மாணவர்கள் தலையிடவேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளது. இது குறித்து பத்திரிகை ஒன்றுக்கு கட்டுரை எழுதிய மாணவரை  அனைவருக்கும் முன்னிலையில் சாடி அவமானப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

படிக்க:
நாடெங்கும் மீ டூ குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் பதவிகள் பறிப்பு – தமிழகத்தில் ?
இனி அம்பானிகள்தான் கல்வியின் அதிபதிகள் – எச்சரிக்கும் பேராசிரியர்கள் !

ஏற்கனவே நடைமுறையில் இருந்த மாணவர் சங்கத்தை கலைத்து மாணவர் கவுன்சிலாக மாற்றியிருகிறார். மாணவர் கவுன்சிலின் தலைவராக ஒரு ஆசிரியரை நியமித்திருக்கிறார். இயக்குனர் என்ற இந்த சங்கியின் கொண்டை இப்போது வெளியே தெளிவாகத் தெரிந்து விட்டது அல்லவா..

அதோடு முடியவில்லை. இன்னும் இருக்கிறது. உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட விமானம் ஒன்று ஏற்கெனவே பயிலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அதற்கு காவி நிறத்தில் வண்ணம் பூசி அழகு பார்த்திருக்கிறார் இந்த சங்கி.

இப்படி கோவில், காவி நிறம் என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல்,  ஹிந்துத்துவ சங்கிகளை பங்கேற்கும் கருத்தரங்கங்கள் மற்றும் வேதங்கள், மகாபாரதம், இராமாயணம் குறித்த சொற்பொழிவுகளையும் ஏற்பாடு செய்துள்ளார்.

ஆசிரியர்களுக்கும் சில மாணவர்களுக்கும் கட்டாய இந்தி வகுப்புகளை ஏற்பாடு செய்து இந்து மதம் தொடர்பான போதனைகள் அங்கு சொல்லித் தரப்பட்டன

ஒரு சங்கியின் குணாம்சங்களில் ஏதோ ஒன்று மட்டும் விடுபட்டது போலத் தோன்றலாம். ஆம், பெண்களின் மீதான பாலியல் ஒடுக்குமுறை. மதன் மோகன் கோயல் என்ற இந்த சங்கி இயக்குனர், உடன் பணிபுரியும் பெண் ஆசிரியை ஒருவரிடத்தில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது குறித்து அந்த பெண் புகாரளித்துள்ளார். அதனைத் தொடந்து விசாரணை ந்டந்து வந்துள்ளது.

விசாரணை நடந்த காலகட்டத்தில் அந்த ஆசிரியையை, இயக்குனருக்கு எதிரான புகாரை வாபஸ் பெறக் கூறி சக ஆசிரியர்களும், மூத்த பேராசிரியர்களும் மிரட்டியுள்ளனர். விசாரணையின் போதும் மாணவர்களை மறைமுகமாக கண்காணித்து வந்துள்ளார் கோயல். இதுவரை பாலியல் குற்றத்திற்கு அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கபப்ட்டதாகத் தெரியவில்லை. அவரை வேறு ஒரு பெரிய பதவிக்கு மாற்றி விட்டதாக கேள்விப்பட்டதாக மாணவர்கள் கூறுகின்றனர்.

அந்த சங்கி இயக்குனர் வெளியேற்றப்பட்ட பிறகு, தற்காலிக இயக்குனர் ஒருவர் நியமிக்கப்பட்டார். அவரும் அவ்வப்போது அலுவலகத்துக்கு வந்து சென்று அதிகாரத்தை முழுக்க முழுக்க துணைப் பதிவாளர் ஒருவரின் கையில் கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறார். இந்த துணைப்பதிவாளர் முன்னாள் இயக்குனரின் கையாள் என்கின்றனர் மாணவர்கள். புதிய இயக்குனர் வந்தது முதல் மாணவர்களை பால்வாடிக் குழந்தைகளைப் போல நடத்துவது, அவர்கள் மீது கடுமையான ஒடுக்குமுறை விதிகளைப் போடுவது என துணைப் பதிவாளர் தனது இஷ்டத்திற்கு செயல்பட்டு வருகிறார்.

சமீபத்தில், கல்வி நிறுவன வளாகத்துக்கு வெளியே மாணவி ஒருவருக்கு கொடுக்கப்பட்ட பாலியல் தொந்தரவைத் தொடர்ந்து, பெண் மாணவர்கள் மீது கடுமையான விதிமுறைகளை விதித்திருக்கிறார் துணை பதிவாளர். அதனைத் தொடர்ந்து அதை மாணவிகள் கடுமையாக எதிர்த்துள்ளனர். ஒருமுறை விடுதி வளாகத்தில் மாணவிகள் வெளியே நின்று கொண்டிருந்த சமயத்தில் அங்கு வந்த துணை பதிவாளர், மாணவிகளை ஆபாசமான வார்த்தைகளால் சாடியுள்ளார். இதனைக் கண்டித்து மாணவிகள் புகாரளித்தனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையும் கண் துடைப்புக்காகவே நடந்தது என்கின்றனர் மாணவர்கள்.

அது மட்டுமல்ல, அதிகாரம் கைக்கு வந்ததும், நூலகத்தின் நேரத்தை தடாலடியாக இரவு 8 மணி வரை மட்டுமே என சுருக்கியுள்ளார் இந்த துணை பதிவாளர். இதற்கு எதிராக மாணவர்கள் போராடினர். போராடும் மாணவர்களைப் பயமுறுத்த, முன்னணி போராட்ட மாணவர்களில் 5 பேரை இடைநீக்கம் செய்துள்ளார் துணைப் பதிவாளர்.

இயக்குனர் என்ற பெயரில் ஒரு சங்கியால் சீரழிக்கப்பட்ட இந்தக் கல்வி நிறுவனத்தில், இன்று வரை மாணவர்களை காவிமயமாக்கவும், அடிமைகளாக்கவும் சங்க பரிவார கும்பல் முயற்சித்து வருகிறது. மாணவர்களின் இந்த உறுதியான போராட்டம் சங்கிகளுக்கு விழுந்த செருப்படிதான். எனினும், மாணவர்களின் கோரிக்கையை ஒட்டி அடுத்ததாக நியமிக்கப்படும் இயக்குனரும் இன்னொரு சங்கியாக இருந்தால் பாவம் அந்த மாணவர்களின் நிலை என்னவாக இருக்கும்?

வினவு செய்திப் பிரிவு

மத்தியில் பாஜகவின் ஆட்சி இருக்கையில் சங்கியைத் தவிர வேறு யாரையாவது கல்விநிலைய இயக்குனராக நியமிப்பார்கள் என்ற நம்பிக்கை இங்கு யாருக்காவது உண்டா ?

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க