ந்தியாவில் மீ டூ இயக்கம் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. நடிகர் தனுஸ்ரீ தத்தா, தன்னிடம் பணியிடத்தில் அத்துமீறலில் ஈடுபட்ட நடிகர் நானா பட்டேகர் மீது கொடுத்த வழக்கு, 14 ஆண்டுகளுக்குப் பின் இப்போது பதிவு செய்யப்பட்டுள்ளது.  பத்திரிகையாளராக இருந்தபோது பல ஊடகப் பெண்களிடம் அத்துமீறிய குற்றச்சாட்டில் தனது மத்திய இணை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் எம்.ஜே. அக்பர். மீ டூ இயக்கத்தின் மூலம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பலரின் பதவிகளும் அதிகாரங்களும் பறிபோய்க் கொண்டிருக்கின்றன.

பாலிவுட்டில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் அனு மாலிக், மீது தொடர்ச்சியாக வெளியான மீ டு புகார் காரணமாக, அவர் நடுவராக இருந்த சோனி டிவியின் ‘இந்தியன் ஐடல்’ நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப் பட்டிருக்கிறார். பாடகிகள் சோனா மல்ஹோத்ரா, ஸ்வேதா பண்டிட் ஆகியோர் அனு மாலிக் மீது அவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிவித்திருந்தனர். ஸ்வேதா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தனது டீன் ஏஜ் வயதில் அனு மாலிக் செய்த மோசமான செயலை சொல்லியிருந்தார். அதில், தன்னுடைய 15 வயதில், அனு மாலிக் தன்னை முத்தம் தர வற்புறுத்தியதாக தெரிவித்திருந்தார். இளம் பெண்கள் அனு மாலிக்கிடம் எச்சரிக்கையாக இருக்கும்படியும் அதில் வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும், இரண்டு இளம் பெண்களும் அனு மாலிக் மீது புகார் கூறினர். இந்த நிலையில், நாட்டின் பிரபலமான நிகழ்ச்சி ஒன்றிலிருந்து அனு மாலிக் நீக்கப்பட்டிருக்கிறார்.

வினோத் துவா

மூத்த பத்திரிகையாளர் வினோத் துவா மீது திரை இயக்குநர் நிஷ்தா ஜெயின் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் தெரிவித்திருந்தார். த வயர் இணைய ஊடகத்தின் நிறுவன ஆசிரியராக உள்ள வினோத் துவா மீது சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரிக்க, அந்நிறுவனம் ஐந்து நபர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளது. இக்குழுவில் இரண்டு ஓய்வுபெற்ற நீதிபதிகள், இரண்டு பேராசிரியர், ஒரு முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளரும் இடம் பெற்றுள்ளனர். வினோத் துவா வீடியோ நிகழ்ச்சியும் நிறுத்தப்பட்டுள்ளது.

கொச்சி முசிறி பினாலே – எனப்படும் நாட்டின் புகழ்பெற்ற கலை திருவிழா நடத்தும் மேலாண்மை குழுவில் இருந்த ஓவியர் ரியாஸ் குரானா பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். பெயர் சொல்லாத ஒரு பெண், ஓவியர் ரியாஸ் குரானா மீது பாலியல் அத்துமீறல் புகார் தெரிவித்திருந்தார். தனிமையில் இருந்த தன்னிடம் ரியாஸ் குரானா அத்துமீறி நடந்துகொண்டதாக ட்விட்டரில் அந்தப் பெண் தெரிவித்திருந்தார்.  தொடர்ச்சியாக இத்தகைய செயல்களில் அவர் ஈடுபட்டதாகவும் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் கொச்சி பினாலே ஃபவுண்டேஷன் சார்பில் விடப்பட்டுள்ள அறிக்கையில், ‘நாங்கள் ரியாஸ் குரானாவுக்கு எதிராக முறையான புகார் எதையும் பெறவில்லை. ஆனாலும் கமிட்டி எந்தவித ஒடுக்குமுறைக்கும் இடம்கொடுக்கக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளது. எனவே, குரானாவை அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்குகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.  குரானா தன்னுடைய செயலுக்காக மன்னிப்புக் கேட்டுள்ளார். கொச்சின் பினாலே ஃபவுண்டேஷன் மேற்கொண்டு இந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரிப்பதாகவும் தெரிவிக்கிறது.

படிக்க:
#MeToo : ஆண்களே ! இது பெண்கள் வளைக்கப்பட்ட கதையல்ல ! வதைக்கப்பட்ட கதை !
ஆணாதிக்க சமூகமே பெண்ணடிமைத்தனத்தின் ஆணிவேர்!

இதுபோல, பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பல பாலிவுட் இயக்குநர்கள் தங்களுடைய பட தயாரிப்புப் பணிகளிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். பாலிவுட்டில் பணிபுரியும் கொங்கனா சென் சர்மா, நந்திதா தாஸ், கிரண் ராவ், ஸோயா அக்தர் உள்ளிட்ட 11 பெண்கள், பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட ஆண்களுடன் இனி பணிபுரியப்போவதில்லை என அறிவித்திருக்கிறார்கள்.

பெண்களுக்கு பல்வேறு சமூக உரிமைகளைப் பெற்றுத்தந்த முன்னோடி மாநிலமாக உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் பேசும்போதும் கேலி பேசுவது, அச்சுறுத்துவது மட்டுமே பரிசாகக் கிடைக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்களின் பத்திரிகையாளர் சந்திப்பில் கிடுக்கிப்பிடி கேள்வி கேட்கும் பத்திரிகையாளர்கள், உதவி கேட்டு வந்த பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டு,  குழந்தையைக் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் ‘நீங்கள் எப்படி அந்தப் பெண்ணை ஏமாற்றினீர்கள்?’ என கேட்பார்களா?

#MeToo #MeTooIndia

செய்தி ஆதாரங்கள்:
MeToo: Anu Malik quits Indian Idol after sexual harassment accusations by 4 women
♦ #MeToo: Panel Headed by Former SC Justice Aftab Alam to Examine Allegation Against Vinod Dua
♦ #MeToo: Artist Riyas Komu Steps Down From Kochi Biennale Management Positions