அமிர்தசரஸ் மாணவியர்
பெண் சிசுக்கொலைகளும் கருக்கொலைகளும் பஞ்சாபில் அதிகரித்த அளவில் நடப்பதைக் கண்டித்து அமிர்தசரஸ் நகரில் பள்ளி மாணவிகள் நடத்திய ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)
காப் பஞ்சாயத்தில் பெண்கள்
உ.பி. மாநிலத்தின் பக்பத் மாவட்டத்திலுள்ள ஆசாரா கிராமத்தில் நடக்கும் “காப்” பஞ்சாயத்துக் கூட்டத்தை மறைந்திருந்து பார்க்கும் பெண்கள்.

பெண்களைப் பொருத்தவரை, தெருக்களும் வெளியிடங்களும் அவர்களுக்குப் பாதுகாப்பற்றவை என்றும்; வீடுதான், குடும்பங்கள்தான் அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பைத் தரும் ஒரே இடமென்றும்” சராசரியான இந்திய மக்களால், குறிப்பாகப் பெண்களாலும் நம்பப்படுகிறது.

இந்தியாவின் தெருக்கள் பெண்களுக்குப் பாதுகாப்பற்றவை என்பது விவாதத்திற்கு இடமற்ற விடயம். ஆனால், இந்தியக் குடும்பங்கள். . . .?

தெருக்களில் போகும் பெண்களுக்கு முன்பின் அறிமுகமில்லாத போக்கிரிகளிடமிருந்து மட்டும் ஆபத்து வருவதில்லை. படித்த, கண்ணியமாகத் தெரியும் ஆண் பிள்ளைகளிடமிருந்தும் ஆபத்துகள் – வக்கிரமாகப் பார்ப்பது தொடங்கி பாலியல் சீண்டல்கள் உள்ளிட்டுப் பல்வேறுவிதமான ஆபத்துகள் – வருகின்றன. போக்கிரிகளை, வளர்ப்பு சரியில்லை, குடும்பம் சரியில்லை என்று குற்றஞ்சுமத்தி ஒதுக்கித் தள்ளிவிட முடியும். ஆனால், பார்வைக்குக் கண்ணியமாகத் தெரியும் இந்த ஆபத்தான ஆண்களும்கூட வானத்திலிருந்து குதிப்பதில்லை. நல்ல, பண்பாடு மிக்கதாகச் சொல்லப்படும் குடும்பங்களிலிருந்துதான் இந்தக் கண்ணியவான்கள் வருகிறார்கள்.

தலைநகர் டெல்லியில் துணை மருத்துவ மாணவி கும்பல் பாலியல் வன்புணர்ச்சி தாக்குதலுக்குப் பலியானதைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டங்களின்பொழுது, குற்றவாளிகளைத் தூக்கில் போடுங்கள் என்று மட்டும் பெண்கள் கோரவில்லை. நாங்கள் எவ்வாறு ஆடை உடுத்த வேண்டும் என்று பாடம் எடுக்காதே; உங்கள் பையன்களிடம் பெண்களைப் பாலியல் வன்புணர்ச்சி செய்யாதே எனச் சொல்!” என்றும் முழங்கினார்கள். இந்த முழக்கத்தின் இரண்டாவது வரி அசாதாரணமான ஒன்றாகும். இந்தியக் குடும்பங்களின் யோக்கியதையைத் தோலுரிக்கும் கண்டனமாகும்.

இந்தியப் பெற்றோர்கள், குறிப்பாகத் தந்தைமார்கள், பெண்களை வன்புணர்ச்சி செய்யுங்கள் எனக் கூறித் தமது ஆண் பிள்ளைகளை வளர்ப்பதில்லை என்ற போதும், இந்தியக் குடும்பங்கள், அவை எந்தச் சாதியை, மதத்தைச் சேர்ந்தவையாக இருந்தாலும், பெண்களை, பெண் குழந்தைகளைப் பற்றித் தாழ்வான கருத்தைத்தான் வழிவழியாக விதைத்து வருகின்றன. “பெண், ஆணுக்கு இணையானவள் கிடையாது; ஆண்களுக்குச் சேவை செய்வதற்காகவே படைக்கப்பட்டவள்; அவள் ஆணுக்கு அடங்கி நடக்க வேண்டும்” என வழிவழியாகப் போதிக்கப்படும் பிற்போக்குத்தனமும் ஆணாதிக்கமும் நிறைந்த கருத்துகள்தான், பெண்கள் மீது ஏவிவிடப்படும் சகலவிதமான வன்முறைத் தாக்குதல்களையும் இந்த நவீன காலத்திலும் கூட நியாயப்படுத்தி வருகின்றன.

மரபுவழிப்பட்ட இந்தியக் குடும்பங்கள் பெண்களின் நியாயமான விருப்பங்களுக்கும் உரிமைகளுக்கும் எதிரானவையாக இருப்பதோடு, பெண்கள் மீது நடத்தப்படும் பல்வேறு வன்முறைகளின் இருப்பிடமாகவும் பிறப்பிடமாகவும் உள்ளன. கிரிமினல்களால், உதிரிக் கும்பலால் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்கள் சட்டப்படியான குற்றங்களாகக் கருதப்படும் அதேசமயம், வீட்டிற்குள் அவளுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் – அடி, உதை சித்திரவதைகள், பாலியல் தொந்தரவுகள்-தாக்குதல்கள் உள்ளிட்டவை கலாச்சாரம், மரபு என்ற பெயரில் வெளிப்படையாக நியாயப்படுத்தப்படுகின்றன; அங்கீகரிக்கப்படுகின்றன.

கிரிமினல்களால், உதிரிக் கும்பலால் பெண்கள் பாலியல்ரீதியாகத் தாக்கப்படுவதைக் கண்டிக்கும் அனைவருமே தங்கள் வீட்டிற்குள் பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளைத் தட்டிக் கேட்பார்கள் என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது. “வீட்டிற்குள் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளை உடனடியாக ஒழித்துக் கட்டிவிட முடியாது; காலப்போக்கில்தான் அவற்றைக் களையெடுக்க முடியும். அதுவரை பெண்கள் பொறுத்துதான் போக வேண்டும்” எனப் பெண்கள் மீதான குடும்ப வன்முறை ஒருபுறம் வெளிப்படையான முறையில் நியாயப்படுத்தப்படுகிறது. இன்னொருபுறமோ, “பெண்களை அடித்துத் துன்புறுத்தக்கூடாதென்றாலும், அவள் ஆணுக்குக் கட்டுப்பட்டவள்தாள்” எனப் பெண்ணடிமைத்தனம் நைச்சியமான முறையில் முன்னிறுத்தப்படுகிறது.

பெண் உயிர்வாழ்வது ஆணின் தயவில்

பெண்களுக்குப் பாதுகாப்பான இடமாக முன்னிறுத்தப்படும் ஆணாதிக்க குடும்ப அமைப்பு முறைதான், பல நேரங்களில் பெண்ணுக்குச் சமாதி கட்டும் இடமாகவும் மாறிவிடுகிறது. வீட்டிற்குள் நடக்கும் பெண் கருக்கொலை, பெண் சிசுக்கொலை, வரதட்சணைக் கொலைகளை வேறெப்படிச் சொல்லமுடியும்? கடந்த இருபது ஆண்டுகளில், அதாவது தனியார்மயம்-தாராளமயம் புகுத்தப்பட்ட பின்பு, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்ச்சி போன்ற குற்றச்செயல்கள் மட்டும் அதிகரிக்கவில்லை. பெண் கருக்கொலையும் அதிகரித்திருப்பதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு அம்பலப்படுத்தியிருக்கிறது.

அமிர்தசரஸ் மாணவியர்
பெண் சிசுக்கொலைகளும் கருக்கொலைகளும் பஞ்சாபில் அதிகரித்த அளவில் நடப்பதைக் கண்டித்து அமிர்தசரஸ் நகரில் பள்ளி மாணவிகள் நடத்திய ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)

ஒவ்வொரு ஏழு பெண் கருக்களிலும் ஒரு பெண் கரு, அக்கரு பெண் என்ற காரணத்தாலேயே அழிக்கப்படுவதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 1991-இல், 0 முதல் 6 வயதுள்ள பெண் குழந்தைகளின் எண்ணிக்கை, அதே வயதுடைய 1,000 ஆண் குழந்தைகளுக்கு 945 என இருந்தது; இது, அடுத்த பத்தாண்டுகளில், 2001-இல் 927 எனச் சரிந்து விழுந்துவிட்டதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் தெரிவிக்கின்றன.

முதல் குழந்தை பெண்ணாகப் பிறப்பதைக்கூடப் ‘பெருந்தன்மையோடு’ ஏற்றுக் கொள்ளும் ஆணாதிக்கக் குடும்பங்கள், அடுத்தடுத்து பெண் குழந்தைகள் பிறப்பதைப் பெரும்பாலும் சகித்துக் கொள்வதில்லை. இரண்டாவது ஆண் மற்றும் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் 1,000-க்கு 731-ஆகவும்; மூன்றாவது ஆண் மற்றும் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் 1,000-க்கு 407-ஆகவும் இருப்பதே, எவ்வளவு தூரத்திற்கு பெண் கருக்கொலைகள் இரக்கமற்ற முறையிலும் குற்ற உணர்வின்றியும் நடந்து வருகின்றன என்பதை எடுத்துக் காட்டுகின்றன.

கருவில் மலர்வது ஆணா, பெண்ணா எனத் தீர்மானிப்பது ஆணின் விந்தணுதான் என அறிவியல் மெப்பித்த பிறகும், இந்த உண்மையை ஆணாதிக்க சமூகம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. பெண் குழந்தையைப் பெற்றெடுத்த பழியைப் பெண்ணின் மீதே போட்டு, அவளைத் துன்புறுத்துகிறது. இப்பெண் கருக்கொலைகளும், சிசுக் கொலைகளும் வரதட்சணையைக் காட்டி நியாயப்படுத்தப்படுகின்றன. வரதட்சணை என்பதும்கூட பெண்களுக்கு எதிரான ஆணாதிக்கத்தின் கருவி எனும்பொழுது, அந்த அநீதி பெண்களைக் கருவிலேயே அழித்துவிடத் துடிக்கிறது; அப்பொழுது தப்பித்து வளர்ந்துவிட்டாலோ, திருமணத்தின்பொழுது தண்டிக்கிறது; வரதட்சணை, திருமணமான பெண்களின் உயிரைப் பறிக்கும் கொலைவாளாகவும் உருவெடுக்கிறது.

பெண்களுக்கு எதிரான இந்த வன்மத்தையும் பிற்போக்கு ஆணாதிக்கத்தனத்தையும் இந்து மதம் மோட்சம், இறவாத்தன்மை போன்ற தர்க்கங்களை முன்னிறுத்தி நியாயப்படுத்துகிறது. ஒருவனுக்குப் பிறக்கும் ஆண் மகவுதான் அவனுக்கு மோட்சத்தை உத்தரவாதப்படுத்துகிறது. ஒருவன், தனது ஆண் மகவின் மூலம் இரண்டு உலகங்களையும், தனது பேரன் மூலம் இறவாத்தன்மையையும் அடைய முடியும்; அடுத்தடுத்து பெண் குழந்தைகளைப் பெறும் மனைவியைக் கணவன் தனது திருமணத்தின் 11-ஆவது ஆண்டில் கைகழுவி விடலாம்” என்று போதிக்கிறது, மனு தர்மம். முசுலீம், கிறித்தவ மதங்களிலும் பெண்களின் நிலை ஏறத்தாழ இதுதான். அம்மதங்களிலும் ஆண்டவனுக்கு அருகில் ஆண்கள்தான் நிறுத்தப்படுகின்றனரே தவிர, பெண்களுக்கு இடம் ஒதுக்கப்படவில்லை.

சமூக உரிமைகளைப் பெறுவதில் சமமற்ற நிலை

பெண்களைப் பாகுபடுத்தி வளர்ப்பதும், ஒரு ஆணுக்கு ஈடாக அவளை மதிக்க மறுப்பதும் பெண்களின் குழந்தைப் பருவத்திலேயே தொடங்கி விடுகிறது. பெண் குழந்தை, ஆண் குழந்தைகளுக்கு இடையே உணவு வழங்குவதில்கூட வேறுபாடு காட்டப்படுகிறது. ஆண்கள் சாப்பிட்ட பிறகுதான், மிச்சமிருப்பதைப் பெண்கள் சாப்பிட வேண்டும்; கணவன் சாப்பிட்ட எச்சில் தட்டில்தான் மனைவி சாப்பிட வேண்டும் என்ற சம்பிரதாயங்களெல்லாம் இந்த வேறுபாட்டை வலியுறுத்துபவைதான்.குழந்தை திருமணம்

பெண் கல்வி நிலையில் கடந்த முப்பது ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருப்பினும், இது நாடெங்கும் ஒரே சீராக இல்லை. குறிப்பாக, பள்ளிக் கல்வியைக்கூட முடிக்காமல் இடை நிற்கும் சதவீதம் ஆண் குழந்தைகளைவிட, பெண் குழந்தைகள் மத்தியில்தான் அதிகமுள்ளது. இந்த இடைநிற்றலுக்கு, பொருளாதாரக் காரணங்கள் ஒருபுறமிருக்க, வீட்டு வேலைகள் பெண் குழந்தைகள் மீது சுமத்தப்படுவதும்; பெண் குழந்தைகளுக்குக் கல்வி தேவையில்லை, வயதுக்கு வந்துவிட்ட பெண்களைப் பள்ளிக்கு அனுப்பிவைத்தால் கெட்டுப் போவிடுவார்கள் என்பது போன்ற பிற்போக்கு சிந்தனைப் போக்கும்; 18 வயதுக்கு முன்பே பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைக்கப்படுவதும், அதிகமாகப் படிக்க வைத்தால், அதற்குத் தகுந்தாற் போல படித்த மாப்பிள்ளையாகப் பார்க்க வேண்டும்; அதிகமாக வரதட்சணை கொடுக்க வேண்டும் என்பவையெல்லாம் காரணங்களாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஆசிரியர்கள் மாணவிகள் மீது நடத்தும் பாலியல் தாக்குதல்களும் பெண் கல்வியைக் காவு வாங்கி வருகின்றன. செய்முறைத் தேர்வு, உள்மதிப்பீட்டுத் தேர்வுகளுக்கு மதிப்பெண்களைப் போடும் அதிகாரம் தமக்கு இருப்பதைக் காட்டி மிரட்டியே, வக்கிரம் பிடித்த ஆசிரியர்கள் மாணவிகளைச் சீரழிக்கின்றனர். இவர்களின் வக்கிரத்துக்கு சிறுமிகள்கூடத் தப்புவதில்லை என்ற அளவுக்கு நிலைமை மோசமடைந்து வருகிறது.

இப்பாலியல் அத்துமீறல்கள் ஒருபுறமிருக்க, பெண்களுக்கு ஏற்ற வகையில் கல்விக்கூடங்களில் கழிப்பறைகள் இல்லாததால், பல பெண்கள் படிப்பைப் பாதியிலேயே விட்டுச் சென்றுவிடுவதாகச் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டியிருக்கிறது. ஆரம்ப வகுப்புகளில் இன்றும்கூட ஆண் என்றால் அலுவலகம் செல்பவன்; பெண் என்றால் சமையல் உள்ளிட்டு வீட்டு வேலை செய்பவள் என்ற பிற்போக்கு சிந்தனைதான் பாடமாகப் போதிக்கப்படுகிறது.

பெண்களுக்கு அளிக்கப்படும் ஊட்டச்சத்து, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார நிலை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட குறியீடுகளைக் கொண்டு கணக்கிடப்படும் சர்வதேச பாலியல் சமத்துவப் பட்டியலில் இந்தியா 134-வது இடத்தில் (மொத்தம் 187 நாடுகள்) இருக்கிறது. இந்தியாவில் பெண்களின் நிலை எந்த அளவிற்குப் பின்தங்கிய நிலையில் இருத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதற்கு இதுவொரு சான்றாகும்.

சமவேலைக்கு சம ஊதியம் என்பது இன்றும்கூட அமைப்புசாரா தொழில்களில் ஈடுபடும் பெண்களுக்கு மறுக்கப்படுகிறது. கற்பு நெறி மட்டுமல்ல, கருத்தடை செய்து கொள்வதென்பதுகூடப் பெண்களுக்கு விதிக்கப்பட்டதாகவே நிலவி வருகிறது. பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்களைக் கற்பு என்ற ஆணாதிக்கக் கண்ணோட்டத்திலிருந்துதான் சமூகம் கண்டிக்க முன் வருகிறது. அதனால்தான், குடும்பத்திற்குள் கணவனால் மனைவி மீது தொடுக்கப்படும் பாலியல் தாக்குதல்கள் சமூகத்தால் கண்டிக்கப்படுவதுமில்லை; கண்டுகொள்ளப்படுவதுமில்லை.

வரதட்சணைக் கொலைகளும் கௌரவக் கொலைகளும்:

ஒரு ஆண் மகனுக்குத் தனது துணையைத் தேர்ந்தெடுப்பதில் இருக்கும் அற்பத்தனமான சுதந்திரம் கூடப் பெண்களுக்கு வழங்கப்படுவதில்லை. படித்த, நவநாகரிகப் பெண்கள்கூடத் தாலி, மெட்டி போன்ற அடிமைச் சின்னங்களைச் சுமந்துதான் தீர வேண்டும்; வரதட்சணை, குழந்தைத் திருமணம் போன்றவை சட்டத்தால் தடை செய்யப்பட்டிருந்தாலும், பெண்களுக்கு எதிரான இந்த அநீதிகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதோடு, அவற்றை நியாயமானதாக ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் இன்றளவும் சமூகத்தில் நிலவுகிறது. ஏதோ பெண்ணின் நலனுக்காகத்தான் வரதட்சணை வாங்கப்படுவது போலவும்; குழந்தைத் திருமணங்கள் பாலியல் வக்கிரங்களைத் தடுக்கும் என்பது போலவும் வெளிப்படையாக நியாயப்படுத்தப்படுகின்றன.

இந்தியாவில் 20 வயதிலிருந்து 24 வயதுக்கு உட்பட்ட திருமணமான பெண்களில் சுமார் 47 சதவீதப் பெண்கள் 18 வயதிற்கு முன்னே திருமணம் செய்து வைக்கப்பட்டிருப்பதாகவும், குழந்தை மணமகள் விவகாரத்தில் தென் மத்திய ஆசிய நாடுகளிலேயே இந்தியாதான் முதன்மையாக இருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் ஒவ்வொரு 90 நிமிடத்திற்கும் ஒரு பெண் வரதட்சணை காரணமாகக் கொல்லப்படுவதாகத் தேசியக் குற்றவியல் ஆவணங்கள் கூறுகின்றன.

1961-இல் உருவாக்கப்பட்ட வரதட்சணை தடைச் சட்டம், 1984 மற்றும் 1986-களில் இரண்டு முறை திருத்தப்பட்டு, குற்றவாளிகள் உடனடியாகப் பிணையில் வெளிவரமுடியாதபடி கடுமையாக்கப்பட்ட பின்னர்கூட, இக்கொலைகளின் எண்ணிக்கை குறையவில்லை. மாறாக, இந்த வரதட்சணைக் கொலைகள் கடந்த பத்தாண்டுகளில் அதற்கு முந்தைய பத்தாண்டுகளைவிட 14 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளன. 1998-இல் 7,146 ஆக இருந்த வரதட்சணைக் கொலைகள், 2007-இல் 8,093, 2008-இல் 8,172, 2010-இல் 8,391 என அதிகரித்திருக்கின்றன. மேலும், பாலியல் வன்புணர்ச்சி வழக்குகளைப் போலவே இக்கொலை வழக்குகளிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படும் விகிதம் மிகவும் குறைவாகவே இருக்கிறது. இது சட்டம் மற்றும் நீதி பரிபாலன முறையின் தோல்வியை மட்டுமல்ல, சமூகம் எந்தளவிற்கு பெண்களுக்கு எதிரான பிற்போக்குத்தனத்திலும் வன்கொடுமையிலும் ஊறிப் போயிருக்கிறது என்பதையும் ஒருசேர எடுத்துக் காட்டுகின்றன.

society-04-captionசிசுக்கொலை, வரதட்சணைக் கொலைகளுக்கு அடுத்து, பெண்களின் உயிரை அநியாயமாகப் பறிக்கும் பட்டியலில் தற்பொழுது கௌரவக் கொலை இடம் பிடித்து வருகிறது. இந்தியச் சாதியக் குடும்ப அமைப்புமுறை மட்டுமல்ல, இந்திய அதிகார வர்க்கமும் கௌரவக் கொலைகள் என்றழைக்கப்படும் இந்த ஆதிக்க சாதிவெறிக் கொலைளை வெளிப்படையாக நியாயப்படுத்தி வருவதற்குப் பல்வேறு ஆதாரங்கள் உள்ளன. குறிப்பாக, தனது சகோதரி கீழ்சாதிப் பையனைத் திருமணம் செய்துகொண்டதைச் சகித்துக் கொள்ளாத சகோதரன், சகோதரியின் கணவனையும் குடும்பத்தாரையும் கொலை செய்த வழக்கில், அவனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து” உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதோடு, அவனின் மனோநிலையைப் புரிந்து கொள்ள வேண்டும்” எனக் கூறி, ஆதிக்க சாதிவெறிக் கொலைகளுக்கு வக்காலத்து வாங்கியது.

வீடா, பாலியல் சித்திரவதைக் கூடமா?

கிரிமினல்களால், தெருக்களில் அலைந்து திரியும் உதிரிக் கும்பலால் பெண்கள் பாலியில்ரீதியாகத் தாக்கப்படும் எண்ணிக்கையைக் காட்டிலும், வீட்டிற்குள், அந்த நான்கு சுவருக்குள் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகமாகும். 2011-ஆம் ஆண்டில் இந்தியாவெங்கும் பதிவான பாலியல் வன்புணர்ச்சி வழக்குகளில் 94.2 சதவீத வழக்குகள், அதாவது 22,549 வன்புணர்ச்சி தாக்குதல்கள் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தெரிந்தவர்களால்தான் நடந்திருப்பதாகத் தேசியக் குற்ற ஆவணத் துறை அறிவித்திருக்கிறது. இந்த 22,549 வழக்குகளில், 269 வன்புணர்ச்சி தாக்குதல்கள் அப்பெண்ணின் தந்தை அல்லது நெருங்கிய உறவினர்களால் நடத்தப்பட்டுள்ளன; 7,835 வன்புணர்ச்சி தாக்குதல்கள் அக்கம்பக்கத்து வீடுகளைச் சேர்ந்த ஆண்களால் நடத்தப்பட்டுள்ளன; 1,560 தாக்குதல்கள் தூரத்து உறவினர்களால் நடத்தப்பட்டுள்ளன. பெண்களுக்கு வீடும், குடும்ப அமைப்பு முறையும் தெருவைவிட அபாயகரமானதாக இருப்பதை இப்புள்ளிவிவரங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

இந்த வழக்குகளில் கணவனால் மனைவி மீது நடத்தப்படும் வன்புணர்ச்சித் தாக்குதல்கள் சேர்க்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இந்திய சமூகம் தீண்டாமையை இயல்பானதாகப் பார்ப்பது போலவே, பெண்கள் கணவன்மார்களால் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுவதையும், வக்கிரமான முறையில் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்படுவதையும் இயல்பானதாக, கணவனின் உரிமையாக, அவனது ஆதிக்கத்திற்கான அடையாளமாகப் பார்க்கிறது. நவீன முதலாளித்துவ சமூக அமைப்புதான் கணவனின் வன்புணர்ச்சியைக் குற்றமாக வரையறுக்கிறது. ஆனால், இந்தியச் சமூகம் இன்றளவும் நிலப்பிரபுத்துவ பிற்போக்குக் கருத்துக்களால் கட்டுண்டு கிடப்பதால், இந்தியச் சட்டங்கள் இன்றுவரையும் கணவனின் வன்புணர்ச்சியைக் குற்றமாகக் கருதவில்லை. தற்பொழுதுள்ள சட்டத்தின்படி மனைவியின் வயது 16-க்குள் இருந்தால் மட்டுமே, மனைவியின் சம்மதமின்றிக் கணவன் உடலுறவு கொள்வது குற்றமாகும். இது எதார்த்தத்துக்குப் பொருந்தாத உலுத்துப் போன ஒன்று என்பது மட்டுமல்ல, கணவனுக்கு மனைவியைப் பாலியல் சித்திரவதை செய்வதற்குத் தரப்பட்ட உரிமமும் ஆகும்.

பணியிடங்களில் பாலியல் தொந்தரவுகள்

வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டிய பெண்களுக்கோ, அது முன்பின் தெரியாத அபாயங்கள் நிறைந்த, இருட்டான காட்டுக்குள் பயணம் செய்வது போன்றதாகும். பார்வை மூலம்; வார்த்தைகள் மூலம்; உரசுவது, இடிப்பதன் மூலம்; கண்ட இடங்களில் கைகளை மேயவிடுவதன் மூலம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் இலட்சக்கணக்கான பெண்கள் பாலியல் தொந்தரவுகளை அனுபவித்து வருகின்றனர். இதற்கெல்லாம் வழக்கு போட ஆரம்பித்தால், கணிசமான ஆண்கள் சிறைச்சாலைக்குள்தான் இருக்க வேண்டியிருக்கும்.

அழகை ரசிக்கத்தான் இயற்கை கண்களைக் கொடுத்திருக்கிறது என்பது தொடங்கி கூட்ட நெரிசல்மிக்க பேருந்தில் கொஞ்சம் முன்னபின்ன இருக்கத்தான் செய்யும் என்பது வரை பலவாறு இப்பாலியல் சித்திரவதைகள் ஆண்களால் நியாயப்படுத்தப்படுகின்றன. பெண்களுக்கு பேருந்துகளில் தனி இருக்கைகள் ஒதுக்கப்படுவதை ஏதோ தனது உரிமையைப் பறித்துக்கொண்ட அநியாயம் போலப் பார்ப்பது; படித்த, வேலைக்குப் போகும் பெண்களைத் திமிர்பிடித்தவளாகவும்; குடும்பத்திற்கு இலாயக்கில்லாதவளாகவும்; ஆயிரம்தான் படித்து இருந்தாலும் பெண்கள் புத்திசாலிகள் கிடையாது; அவர்களிடம் பெரிய பொறுப்புகளைக் கொடுக்கக் கூடாது என்றவாறு பல்வேறு விதங்களில் பெண்களுக்கு எதிரான பிற்போக்குத்தனமும் ஆணாதிக்கமும் நிறைந்த கருத்துகள் பெரும்பாலான ஆண்களிடம் நிலவி வருகின்றன.

‘‘சீறிவரும் பாம்பை நம்பு; ஆனால் சிரித்துப் பேசும் பெண்ணை நம்பாதே” என்பது போன்ற ஆட்டோ வாசகங்கள் படிக்காத, அடித்தட்டு ஆண்களிடம் மட்டும்தான் காணப்படுவதாக எண்ணிக் கொள்வது தவறானது. பார்ப்பனக் கும்பலால் அரசியல் சாணக்கியனாகக் கருதப்படும் சோ நடத்தும் துக்ளக் இதழைப் படித்துப் பாருங்கள்; படித்த, மேல்சாதியைச் சேர்ந்த ஆண்களிடம் பெண்களைப் பற்றி எவ்வளவு கீழ்த்தரமான பிற்போக்கு எண்ணங்களும் கருத்துக்களும் மண்டிக் கிடக்கின்றன என்பது புலப்படும்.

ஒரு பெண் படித்து முடித்து சுயமாகச் சம்பாதிக்கத் தொடங்கினால்கூட, அவளால் சுதந்திரமாகச் செயல்பட்டுவிட முடியாது. குறிப்பாக, அவள் தனது சம்பளத்தைச் செலவு செய்யும் உரிமையை அவளது கணவனே தட்டிப்பறித்து, அவளை முடக்கி விடுகிறான். வேலைக்குப் போகாத பெண்கள் கணவனுக்குப் பணிவிடை செய்யும் சம்பளம் வாங்காத வேலைக்காரி என்றால், வேலைக்குச் செல்லும் பெண்களோ கணவனுக்குப் பணிவிடையும் செய்து, அவனிடம் தனது ஊதியத்தையும் வழங்கும் பணங்காய்ச்சி மரமாக இருக்கிறாள்.

சதி மாதா கோயில்
இந்தியாவிலேயே அதிக ‘வளர்ச்சி’யடைந்த மாநிலமெனக் கூறப்படும் மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள சதி அனுசுயா மாதா கோவில்.

வேலைக்குச் செல்லும் பெண்களில் ஏறத்தாழ் 17 சதவீதப் பெண்கள் மிகவும் வெளிப்படையான, நேரடியான பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதிலும், கூலித் தொழிலாளியாக, வீட்டுப் பணிப்பெண்ணாக, சிறுதொழில் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களின் நிலைமைதான் மிகவும் அபாயகரமானதாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படி பணியிடங்களில் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் பெண்களில் ஏறத்தாழ 20 சதவீதப் பெண்கள் ஆண் துணையின்றித் தனியாளாக நின்று குடும்பத்தை நடத்திச் செல்லும் பொறுப்பில் இருப்பவர்கள் என்றும், அப்பெண்களின் இக்கட்டான நிலையை மேலதிகாரிகள்/சக ஊழியர்கள் தமது பாலியல் வக்கிரங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதும் அம்பலமாகியிருக்கிறது.

இக்குற்றத்தைத் தடுக்க உருவாக்கப்பட்டிருக்கும் சட்டமென்பது சோளக்காட்டு பொம்மையைவிடக் கேவலமானது. தொழிற்சாலைகளிலும், அலுவலகங்களிலும், பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் இப்பிரச்சினையை விசாரித்துத் தண்டிப்பதற்கான அமைப்புகளே கிடையாது. எந்தப் பெண் தொழிலாளியாவது புகார் கொடுக்க முன்வந்தால், வேலை பறிக்கப்படும் அபாயம் மட்டுமல்ல, அவளது கணவனும் இதைச் சரியாகப் புரிந்து கொண்டு, அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக நிற்பானா என்பதே சந்தேகத்திற்குரியதுதான். பணியிடங்களில் நடக்கும் பாலியல் சித்திரவதைகள் தொடர்பான புகார்களில், புகார் கொடுக்கும் பெண்ணின் பெயர் தரப்படுவதில்லை என்பது வேலைக்குச் செல்லும் பெண்களின் கையறு நிலையைத்தான் எடுத்துக் காட்டுகிறது.

சாதி-மதம்-அரசு

காதல்-கலப்புத் திருமணங்களைத் தடுப்பது என்ற பெயரில் ஆதிக்க சாதி சங்கங்கள் தமது சாதிப் பெண்களின் மீதான கட்டுப்பாடுகளை மேலும் மேலும் இறுக்கும் நிலைமை தற்பொழுது இந்தியாவெங்கும் எழுந்துள்ளது. “பெண்கள் கைபேசிகளைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது; பெண்களின் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்களின் சம்மதத்தைக் கட்டாயமாக்க வேண்டும்” என்றவாறெல்லாம் ராமதாசு உள்ளிட்ட ஆதிக்க சாதிவெறியர்களும், வட இந்தியாவைச் சேர்ந்த காப்” பஞ்சாயத்துகளும் அறிவுக்குப் பொருந்தாத புதுப்புது கட்டுப்பாடுகளைப் பெண்கள் மீது திணித்து வருகிறார்கள்.

அரசின் புள்ளிவிவரங்களின்படியே ஒவ்வொரு நாளும் மூன்று தாழ்த்தப்பட்ட பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு இரையாகிறார்கள். இப்புள்ளிவிவரமும் பதிவான வழக்கு விவரங்களின் அடிப்படையை வைத்துக் கூறப்படுவதால், இது உண்மைக்கு அருகில்கூட வரவில்லை. தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு எதிராக ஆதிக்க சாதிவெறியர்கள் நடத்திவரும் அட்டூழியங்களை, ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த பெண்கள்கூட ஆதரிப்பதும் கண்டும் காணாமல் நடந்துகொள்வதும்தான் இதில் வெட்கக்கேடானது.

இந்து மதவெறிக் கும்பல் குஜராத் படுகொலைகளின்பொழுது நடத்திய பாலியல் வன்புணர்ச்சி வக்கிரங்களும் படுகொலைகளும்; ஒரிசாவின் டாங்ஸ் மாவட்டத்தில் கிறித்தவ மதத்துக்கு மாறிய பழங்குடியினப் பெண்களுக்கு எதிராக நடத்திய அட்டூழியங்களும்; சதி போன்ற பிற்போக்குத்தனங்களை அக்கும்பல் இன்றும்கூட வெளிப்படையாக ஆதரித்து நிற்பதும், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்து மதவெறி அமைப்புகள் அனைத்து மதங்களையும் சேர்ந்த பெண்களுக்கும் எதிரானது என்பது நிரூபணமாகியிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு எதிராக முசுலீம் மதவெறி அமைப்புகளும், மத அடிப்படைவாதமும் வளர்ந்து வருவது முசுலீம் பெண்களை இருதலைக் கொள்ளி எறும்பு நிலைக்குத்தான் தள்ளியுள்ளன.

குடும்ப வன்முறைபெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை, மதவெறி மற்றும் ஆதிக்க சாதிவெறி அமைப்புகளின் வன்முறை- பிற்போக்குத்தனமான கட்டுப்பாடுகள் ஆகியவற்றிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் உறுப்பாகத் தன்னை முன்னிறுத்தும் இந்திய அரசு அமைப்போ, சொல்லிலும் செயலிலும் இந்தக் கும்பலுக்கு ஆதரவாகவே நடந்து வருகிறது. உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால், தனது கணவனிடமிருந்து ஜீவானாம்ச உரிமை கோரி ஷா பானு என்ற முசுலீம் தா தொடுத்த வழக்கில் முசுலீம் அடிப்படைவாதிகளுக்கு ஆதரவாகவும், இராசஸ்தானில் பன்வாரி தேவி என்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சமூக ஊழியர் கும்பல் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் ஆதிக்க சாதிவெறியர்களுக்கு ஆதரவாகவும்; ஒவ்வொரு இந்து மதவெறிக் கலவரத்தின்பொழுதும் ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு அனுசரணையாகவும் இந்திய அரசு அமைப்புகள் நடந்து வந்திருப்பதைக் குறிப்பிடலாம்.

இப்படி பிற்போக்கு சக்திகளுக்கு ஆதரவாக அரசு நடந்து கொள்வது ஒருபுறமிருக்க, அதனின் கொள்கைகள், திட்டங்கள் என அரசின் நடைமுறையும் பார்வையும் பெண்களை இரண்டாம் தர குடிமகளாகத்தான் கருதுகின்றன. பெண்களுக்கு எதிராக நடந்து வரும் பாலியல் வன்புணர்ச்சி உள்ளிட்ட தாக்குதல்களை அரசு உறுப்புகள் அணுகும் முறையிலேயே, அவற்றை விசாரிக்கும் முறையிலேயே, அரசின் ஆணாதிக்கப் பார்வை அப்பட்டமாக வெளிப்பட்டு வருகிறது. இவை அனைத்திற்கும் மேலாக போலீசும் இராணுவமும்தான் பெண்களின் உரிமைக்கும், சுதந்திரத்திற்கும், கண்ணியத்திற்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன.

************

இன்றைய இந்திய சமூகம் என்பது மேற்கத்திய சமூகம் போன்று ஜனநாயகப் புரட்சி, ஜனநாயகத்திற்கான அரசியல் போராட்டங்களின் வழியாகக் கட்டமைக்கப்பட்டதல்ல. மாறாக, சாதி, மத, ஆணாதிக்கக் கருத்துக்கள் நிறைந்த மத்தியகால நிலப்பிரபுத்துவ அமைப்பிற்கு அக்கம்பக்கமாக முதலாளித்துவப் பொருளாதார உற்பத்தி முறையும் அதற்குரிய அரசியல்-பண்பாட்டு நிறுவனங்களும் இறக்குமதி செய்து திணிக்கப்பட்டன. இந்தக் கலப்பானது பெண்களுக்கு எந்தவிதமான விடுதலையையும், பாதுகாப்பையும் பெற்றுத் தந்துவிடவில்லை.

இரட்டை சுமைகள்

மாறாக, தனியார்மயம்-தாராளமயம் பெண்களைச் சந்தைப் பொருளாக மாற்றியிருக்கும் பாலியல் வக்கிரம் ஒருபுறம்; ஏற்கெனவே நிலவிவரும் சாதி-மத ஆதிக்கம் நிறைந்த பிற்போக்கு சமூகத்தின் அடக்குமுறை மறுபுறம் என்ற இரட்டை நுகத்தடியைப் பெண்ணினத்தின் மீது சுமத்தியிருக்கிறது. ஒரு புறம் பாலியல் சுதந்திரம் என்ற வரம்பற்ற பாலியல் உறவு; இன்னொருபுறம் கற்பு நெறி தவறாமை, குடும்ப விளக்காகப் பெண்கள் திகழ வேண்டிய மத்தியகால ஆணாதிக்கப் பண்பாடு என்ற இரட்டைக் குழல் துப்பாக்கி பெண்களை நோக்கி நிறுத்தப்படுகிறது. மத்தியகால பிற்போக்குத்தனம் பெண்களின் மீதான ஒடுக்குமுறையின், பாலியல் தாக்குதலின் ஆணி வேராக இருக்கிறதென்றால், அதன் மீது திணிக்கப்பட்டுள்ள உலகமயம் இத்தாக்குதல்களை முன்னெப்போதும் காணாத அளவில் தீவிரப்படுத்தியிருக்கிறது.

மேல்சாதி, மேல்தட்டில் உள்ள பெண்கள் மீது இந்த இரண்டு நுகத்தடிகளும் சம அளவிலோ அல்லது ஒன்றைவிட மற்றொன்று கூடுதல் குறைவாகவோ சுமத்தப்படுகிறது. அதேசமயம் சமூகத்தின் கீழ்த்தட்டில், உழைக்கும் வர்க்க குடும்பங்களைச் சேர்ந்த, பார்ப்பனமயமாகாத குடும்பப் பின்னணி கொண்ட பெண்கள், ஆதிக்க சாதி மற்றும் பணக்கார வர்க்கத்தைச் சேர்ந்த பெண்களைவிட, ஒப்பீட்டளவில் சுதந்திரமாக வாழ்க்கையை நடத்தி வருவது கண்கூடு. இந்த உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண்கள் தங்கள் கழுத்தில் கற்பு நெறியைப் பெரும் சுமையாக மாட்டிக் கொள்வதில்லை. கணவனே கண்கண்ட தெவம் என இவர்கள் வாழ்வதில்லை; அறுத்துக் கட்டிக் கொள்வதோ, மறுமணமோ அல்லது தனியாகவே நின்று குடும்பத்தை நடத்திச் செல்வதோ – இவை எதுவுமே இவர்கள் முன் மலைக்க வைக்கும் கேள்வியாக நிற்பதில்லை. அதேசமயம், தங்களைக் கவர்ச்சிப் பாவையாகக் காட்டிக் கொள்ள வேண்டிய அவசியமும் இவர்களுக்குக் கிடையாது.

நடுத்தர, மேல் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெண்கள் படித்திருந்தபோதும், வேலைக்குச் சென்றாலும், அவர்களது முதலாளித்துவ, பார்ப்பனமயமான வாழ்க்கை முறையும்; அதன் காரணமாக அவர்களது சிந்தனையில் ஊறிப்போயுள்ள பெண்ணடிமைத்தனம், கற்பு நெறி போன்றவையும் – என்னதான் பெண் படித்திருந்தாலும் வேலைக்குச் சென்றாலும் ஒரு ஆணின் பாதுகாப்பில்தான் பெண் வாழ முடியும் என்ற அடிமைத்தனம் அவர்களைச் சுதந்திரமாக இயங்க விடுவதில்லை. ஆணாதிக்கம் மற்றும் அதன் வக்கிரத்தின் முன் மேல்சாதி, மேல்தட்டைச் சேர்ந்த பெண்கள் மண்டியிட்டுக் கிடப்பதன் பின்னணி இதுதான்.

எனவே, பெண் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவை பெண் விடுதலையை முழுமையாகப் பெற்றுத் தந்துவிடாது. மாறாக, மேலே நாம் குறிப்பிட்டுள்ள இந்த இரண்டு நுகத்தடிகளும் அடித்து நொறுக்கப்படுவதுதான் இப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வாகும். இந்த இரண்டு நுகத்தடிகளையும் அடித்து நொறுக்குவது சாதாரணமானதல்ல. அதற்கு இச்சமூகத்தையே புரட்டிப் போடக் கூடிய போராட்டங்களை, குடும்பம் உள்ளிட்டு சமூகத்தின் சகல அரங்குகளிலும் ஜனநாயகத்தைக் கொண்டுவரக்கூடிய போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும். அப்போராட்டம் இந்த இரண்டு நுகத்தடிகளையும் காத்து வருகின்ற இன்றைய சமூக-பொருளாதார-அரசியல் அமைப்பை அடியோடு மாற்றி அமைப்பதாக இருக்க வேண்டும்.

இப்புரட்சிகரமான மாற்றத்திற்குப் பதிலாக, இச்சமூக அமைப்பிற்குள்ளேயே பெண்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் சீர்திருத்தங்களைக் கோருவது – பெண்களுக்கு நாடாளுமன்றத்தில் 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது, பெண்களுக்குப் பாதுகாப்புத் தரக்கூடிய சட்டங்களை வலுப்படுத்துவது, பாலியல் குற்றங்களை விசாரிக்கும் போலீசு, நீதிமன்றம் போன்ற அமைப்புகளைச் சீர்திருத்துவது போன்றவை உடனடித் தீர்வுகளாக முதலாளித்துவ அறிவுஜீவிகளாலும், அரசியல் கட்சிகளாலும், பெண்ணியவாதிகளாலும் முன்வைக்கப்படுகின்றன.

வரதட்சணைத் தடைச் சட்டம் எப்படி வரதட்சணைக் கொலைகளைத் தடுக்கவில்லையோ, வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் எப்படி தீண்டாமையை ஒழிக்கவில்லையோ, அதுபோலவே இச்சீர்திருத்தங்களும் பெண்ணடிமைத்தனத்தை, பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளை அறவே ஒழித்துக் கட்டிவிடாது; மாறாக, புண்ணுக்குப் புனுகு தடவிவிடுவதாகவே அமையக்கூடும்.

– திப்பு
________________________________________________________________________________
– புதிய ஜனநாயகம், பிப்ரவரி – 2013
________________________________________________________________________________

1 மறுமொழி

  1. //சமூகத்தின் கீழ்த்தட்டில், உழைக்கும் வர்க்க குடும்பங்களைச் சேர்ந்த, பார்ப்பனமயமாகாத குடும்பப் பின்னணி கொண்ட பெண்கள், ஆதிக்க சாதி மற்றும் பணக்கார வர்க்கத்தைச் சேர்ந்த பெண்களைவிட, ஒப்பீட்டளவில் சுதந்திரமாக வாழ்க்கையை நடத்தி வருவது கண்கூடு. இந்த உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண்கள் தங்கள் கழுத்தில் கற்பு நெறியைப் பெரும் சுமையாக மாட்டிக் கொள்வதில்லை. கணவனே கண்கண்ட தெவம் என இவர்கள் வாழ்வதில்லை; அறுத்துக் கட்டிக் கொள்வதோ, மறுமணமோ அல்லது தனியாகவே நின்று குடும்பத்தை நடத்திச் செல்வதோ – இவை எதுவுமே இவர்கள் முன் மலைக்க வைக்கும் கேள்வியாக நிற்பதில்லை. அதேசமயம், தங்களைக் கவர்ச்சிப் பாவையாகக் காட்டிக் கொள்ள வேண்டிய அவசியமும் இவர்களுக்குக் கிடையாது// – இதைத்தாங பெரியார் சொன்னார்!நல்ல பதிவு! அடுத்து , நடுத்தர வர்க்கத்து பெண்களைப்பற்றி எழுதியிருப்பதும் உண்மை! ஆனால் மேல்தட்டு பெண்களிடம், ஆண்கள் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்! அவர்கள் எதற்கும் துணிந்தவர்கள்! அவர்கள் தனித்தே போராடிக்கொள்ள முடியும்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க