கேரளா : அதிகரிக்கும் வரதட்சணை மரணங்கள் !
பார்ப்பனிய ஆணாதிக்க சமூகமும் அதை கட்டிக் காக்கும் அரசுமே முதன்மைக் குற்றவாளிகள் !

டித்த, நாகரீகத்தில் முன்னேறிய மாநிலம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் கேரள மாநிலத்தில், வரதட்சணைக் கொடுமையால் பெண்கள் மரணமடைவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் சமீபத்தில் இரண்டே நாட்களில் அடுத்தடுத்து  நிகழ்ந்த மூன்று இளம் பெண்களின் மரணம் அம்மாநிலம் முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், இரு பெண்களின் மரணம் ராணுவ அதிகாரி வீட்டிலும், போலீசு அதிகாரி வீட்டிலும் நிகழ்துள்ளது.

சுசித்ரா

சுசித்ரா என்ற 19 வயதான இளம் பெண் ஆலப்புழாவில் உள்ள வல்லிக்குன்னத்தை சார்ந்த இராணுவ வீரரைக் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணமான ஒரு மாதத்தில் கணவர் விஷ்ணு உத்தரகாண்ட் சென்றுவிட்டார். திருமணம் முடிந்து மூன்றே மாதங்கள் ஆன நிலையில் வரதட்சணை கொடுமை காரணமாக ஜூன் 22 அன்று சுசித்ரா தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் நிகழ்வதற்கு முதல் நாள் அர்ச்சனா என்ற 24 வயது பெண்ணும் மர்மமான முறையில் இறந்துள்ளார். அர்ச்சனா ஒரு வருடத்திற்கு முன்பு சுரேஷ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். சுரேஷ் வீட்டில் வாழ்ந்து வந்த அர்ச்சனாவிடம் சுரேஷின் சகோதரனுக்காக மூன்று லட்சம் பணம் கேட்டு வாங்கியுள்ளனர் சுரேஷின் குடும்பத்தினர்.

அதன் பிறகு மீண்டும் சுரேஷின் குடும்பத்தினர் பணம் கேட்டபோது, அர்ச்சனாவின் தந்தை பணம் தர மறுத்துவிட்டார். இதனடிப்படையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சுரேஷும் அர்ச்சனாவும் தனியாக வாடகை வீட்டிற்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். தாய் வீட்டிலிருந்து வாடகை வீட்டிற்கு ஜூன் 21-ஆம் தேதி அர்ச்சனாவை அழைத்து சென்றுள்ளார் சுரேஷ். அன்றிரவே அர்ச்சனா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது.

அர்ச்சனா

தப்பிக்க முயற்சித்த சுரேஷை போலீஸார் கைது செய்துள்ள நிலையில், மகளின் இறப்பு குறித்து அர்ச்சனாவின் தந்தை கூறுகையில் “அர்ச்சனாவை சுரேஷ் குடித்துவிட்டு துன்புறுத்துவார், பலமுறை அர்ச்சனாவிடம் பணம் கேட்டு வாக்குவாதம் செய்வார்” என்றும் “அர்ச்சனாவை தற்கொலைக்கு தூண்டியதே சுரேஷ் தான்” என்றும் கூறியுள்ளார்.

அதே ஜூன் 21-ம் தேதி பெரிய பேசுபொருளாக மாறிய சம்பவம்தான் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட 24 வயது நிரம்பிய ஆயுர்வேத மருத்துவ மாணவி விஸ்மயா-வின் மரணம். மாநில போக்குவரத்து உதவி ஆய்வாளரான கிரணை கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டு கொல்லத்தில் கிரணின் வீட்டில் வசித்து வந்துள்ளார் விஸ்மயா. இவர்களின் திருமணத்தின் போது விஸ்மயாவின் தந்தை வரதட்சணையாக 11 லட்சம் மதிப்புள்ள ஒரு காரும், 1.25 ஏக்கர் நிலமும், 100 சவரன் தங்க நகையும் தந்துள்ளார்.

விஸ்மயா

ஆனால், இவற்றில் தன் பணவெறியை தனித்துக் கொள்ள முடியாத கிரண், வரதட்சணைக்காக விஸ்மயா-வை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பே கிரண் தன்னை அடித்து காயப்படுத்திய புகைப்படங்களை தன் நெருங்கிய உறவினருடன் வாட்ஸாப்பில் பகிர்ந்து கொண்டுள்ளார் விஸ்மயா. இதற்கிடையே IPC section(B) 306-கீழ் வரதட்சணை கொடுமைகாகவும் வரதட்சணை திருமணத்திற்காகவும் கிரண் கைது செய்யப்பட்டதோடு அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளது போலீசுத்துறை.

கேரளப் பெண்கள் பலர் “வரதட்சணை தர மாட்டோம்” என்றும் “பெண்கள் விற்பனைக்கு அல்ல” என்றும் தங்கள் வீட்டில் எழுதி ஒட்டிய புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து பிரச்சாரம் செய்ததற்கு எதிராக, “ரூ.50,000 சம்பளம் கேட்கக் கூடாது; சொந்த வீடு கேட்கக் கூடாது” என்று சில இளைஞர்களும் இதே பாணியில் பிரச்சாரம் செய்தது பலரின் ஆணாதிக்க அடக்குமுறை புத்தியை திரை விலக்கி காட்டுகிறது.

வயதானவர்கள் தான் வரதட்சணை கேட்கிறார்கள் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், ஜீன்ஸ் அணிந்த பழமைவாதிகளாக தான் இன்னும் பல இளைஞர்கள் இருக்கின்றனர்.

சமீபத்தில் வரதட்சணை கொடுமையால் நிகழ்ந்த மரணங்கள் அதிர்ச்சி அளிப்பதாகக் கூறுயுள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன். இனி பெண்கள் சம்மந்தமான புகாருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் குடும்ப தகராறுகளை ஒழிக்க மாவட்ட ரீதியாக போலீசுத்துறையினர் அறிவுறுத்தப் பட்டிக்கின்றனர் என்றும் கூறியதோடு, 24 மணி நேர ஹெல்ப்லைன் ஒன்றை அறிவித்துவிட்டு முதல்வர் தன் கடமையை முடித்துக் கொண்டுள்ளார்.

இவர் அதிர்ச்சிக்குள்ளாவது போல கேரளாவில் வரதட்சணை தொடர்பாகவும் குடும்ப வன்முறை தொடர்பாகவும் மரணங்கள் நிகழ்வது புதிய விடயமல்ல. கடந்த 2016-ஆம் ஆண்டிலிருந்து 2020 ஏப்ரல் வரை – இவரது ஆட்சிக் காலத்தில் – கேரளாவில் 15,140 வரதட்சணை கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன. அந்த வழக்குகளை அரசும் போலீசுத்துறையும் நீதித்துறையும் என்ன செய்தது? எத்தனை வழக்குகளுக்கு நீதி கிடைத்தது? சர்ச்சை பெரிய அளவில் வெடித்தால் மட்டும் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பது போல் மக்களிடம் பிம்பத்தை ஏற்படுத்துவதும், மற்றபடி வழக்குகளை கிடப்பில் போட்டு நீர்த்துப்போக செய்வதும் இந்த அரசுக்கும், போலீசுத்துறைக்கும், நீதித்துறைக்கும் வழக்கமான ஒன்றுதானே.

இச்சம்பவங்கள் குறித்து கேரள மகளிர் ஆணையம் கூறுகையில், “திருமணத்தில் பெண்ணுக்கு வரதட்சணையாக தரப்படும் தங்க நகை மற்றும் பரிசுப் பொருட்களின் மீது பெண்ணுக்கு உரிமை வழங்க வேண்டும். அதன் மீது கணவன் வீட்டார் உரிமை கொண்டாடக் கூடாது” என்று கூறியுள்ளது. பிறந்த குழந்தை சிசுக் கொலை செய்யப்படுவதற்கும், இருபது வயது இளம்பெண் தற்கொலை – கொலை செய்யப்படுவதற்கும் காரணமாக இருப்பது இந்த வரதட்சணை தான். ஆனால், வரதட்சணையை முற்றிலுமாக ஒழிப்பதைப் பற்றி வாய்கூடத் திறக்காமல், வரதட்சணையாக வாங்கும் நகை யாருடைய உரிமையின் கீழ் வரும் என்று பேரம் பேசிக் கொண்டிருக்கின்றது கேரள மகளிர் ஆணையம்.

கேரளாவில் மட்டும் 2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை வரதட்சணை தொடர்பான மரணங்கள் 66 நிகழ்ந்துள்ளன. இந்தியாவில் படிப்பறிவில் முதன்மையாக இருக்கும் கேரளாவிலேயே இந்த நிலை என்றால் மற்ற மாநிலங்களை பற்றி நாம் கற்பனை செய்து பார்த்து கொள்ளலாம்.

உத்திரப்பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வரதட்சணை தொடர்பான மரணங்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றன. பெண்களுக்கு வீட்டிற்குள்ளும் பாதுகாப்பில்லை. வீட்டிற்கு வெளியிலும் பாதுகாப்பில்லை. வெளியில் நடக்கும் பாலியல் கொடுமைகளாவது குற்றம் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டு வெளிச்சத்திற்கு வருகின்றது. ஆனால், குடும்ப வன்முறைகள் சட்டவிரோத செயல் என்றே தெரியாமல் பல பெண்கள் வாழ்ந்து மடிகின்றனர்.

2001 முதல் 2012 வரை 91,202 வரதட்சணை தொடர்பான மரணங்கள் நிகழ்ந்துள்ளன. தேசிய மகளிர் ஆணையத்தின் தரவுகளின்படி 2020 ஏப்ரல் மாதம் வரையில் 25,885 பெண்களுக்கு எதிரான புகார்கள் பதிவாகியள்ளது. அதில் குடும்ப வன்முறை புகாரின் எண்ணிக்கை மட்டும் 5,865.

இந்தியாவில் வரதட்சணை தடுப்பு சட்டம் வந்து 60 வருடம் ஆகிவிட்டது. வரதட்சணை பெறுவதையும் கொடுப்பதையும் தடுக்க பல்வேறு கடுமையான சட்டங்கள் வந்துவிட்டன. ஆனால், வருடாவருடம் வரதட்சணை-மரணம், வரதட்சணை-கொடுமை தொடர்பான புகார்கள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றன.

ஒரு மணி நேரத்திற்கு ஒரு பெண் வராதட்சணை கொடுமைக்கு மரணிக்கிறாள். பெண்களுக்கு நடக்கும் பாலியல் ஒடுக்குமுறையையும், குடும்ப ஒடுக்குமுறையையும், வரதட்சணை கொடுமையையும் தடுப்பதில் இந்த அரசமைப்பும், சட்டங்களும் எப்படி தோற்று போயிருக்கின்றது என்பதை இந்த மரணங்கள் தெளிவாக அம்பலப்படுத்துகின்றது.

இத்தனைக்கும் பெண்கள் மீது நடத்தப்படும் அனைத்து வன்முறைகளும் வழக்காவதில்லை. பல பெண்கள் குடும்ப மானம், குடும்ப மிரட்டல் காரணமாக தன் மீது தொடுக்கப்படும் வன்முறைகளை வெளியில் சொல்வதே இல்லை. அப்படியே சொன்னாலும் அது குடும்பதிற்குள்ளேயே பஞ்சாயத்து செய்யப்படுகின்றது. அதை மீறி சிலர்தான் வழக்கு தொடுக்க முன் வருகின்றனர். அப்படி முன்வரும் பல வழக்குகளிலும் போலீசுத் துறையினர் – அது மகளிர் போலீசாக இருந்தாலும் – தம்முள் ஊறிய ஆணாதிக்க புத்தியைக் கொண்டு அக்குடும்பத்திற்கு அறிவுரை கொடுத்து கட்டப்பஞ்சாயத்து நடத்தி அனுப்பி வைக்கின்றனர். இதில் எஞ்சிய ஒரு சில வழக்குகள் மட்டும்தான் இப்போது நாம் பார்ப்பவை.

இதிலும் எத்தனை வழக்குகள் நிலுவையில் போடப்படாமல், திரும்பி பெறப்படாமல், குற்றம் நடந்ததை நிரூபிக்கப்படுகின்றது என்பதை யோசித்தால், இந்தச் சமூக அமைப்பும் அரசமைப்பும் எந்தளவு பெண்களுக்கு எதிரானதாக உள்ளது என்பதை நாம் உணர முடியும்.

2001-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை வரதட்சணை தொடர்பான வழக்குகளில் வெறும் 48 சதவீத வழக்குகளே நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. இதே காலகட்டத்தில் மிரட்டல்களாலும், நீதி கிடைக்காது என்ற விரக்தியினாலும் 1,389 வழக்குகள் திரும்பப்பெறப்பட்டுள்ளன.

இது எங்கோ ஒரு பெண்ணுக்கு நிகழும் கொடுமை இல்லை.  பார்ப்பனிய – ஆணாதிக்க கருத்துக்களால் கட்டி எழுப்பப்பட்ட இந்த சமூகத்தினால் ஒட்டு மொத்த பெண் இனத்திற்கே நிகழும் கொடுமை.

ஆனால், இது போன்ற பிரச்சனைகள் திரும்பத் திரும்ப ஒரு தனிநபர் பிரச்சனையாகவே சுருக்கப்படுகிறது. வீதியில் நடக்கும் பாலியல் வன்முறைகளையும் அத்துமீறல்களையும் கண்டு கொதித்தெழுபவர்கள் கூட தன் குடும்பத்திற்குள் பெண்ணுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் குறித்தும், பெண் ஒடுக்கப்படுவது குறித்தும் பெரிதாக கவலைப்படுவதில்லை. ஏனெனில், இந்திய சமூகக் கட்டமைப்பின் அடிநாதமாக பார்ப்பனிய ஆணாதிக்க சிந்தனையும், சொத்துடைமை சமூக அமைப்பும் திகழ்கிறது. இது ஆண், பெண் என்ற பாரபட்சமின்றி அனைவரிடமும் வெவ்வேறு அளவுகளில் நீடிக்கிறது.

இந்திய சமூகத்தில் விரவிக் கிடக்கும் பார்ப்பனியக் கட்டமைப்பு ஆண்களைச் சார்ந்தே பெண்கள் இயங்கும் வகையில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதுவே நல்லதொரு குடும்பத்திற்கான அளவீடாகவும் சமூகத்தின் பொதுப்புத்தியில்  கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

பெண்கள் சுயமாக வேலைக்குச் சென்று பொருளாதார ரீதியாக தனித்து நின்றாலும், அவர்களும் இந்தச் சுரண்டலில் இருந்து தப்ப முடியாதபடிக்கு, யானையின் கால்களில் கட்டப்பட்ட சங்கிலியைப் போன்று இந்த பார்ப்பனிய ஆணாதிக்கச் சமூகம் செயல்படுகிறது. வரதட்சணை முதல் உழைப்புச் சுரண்டல் வரை அனைத்து விதத்திலும் பெண்களின் மீதான சுரண்டலை அனுமதிக்கிறது.

அனைவருக்கும் பொதுவானதாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் அரசோ, இந்த அவலத்தைக் களைவதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், ஆளும் வர்க்கங்களின் நலனுக்காக, மலிவான உழைப்புச் சக்திகளாக பெண்களை இன்னும் எப்படி அதிகமாகச் சுரண்ட முடியும்? என கணக்கிட்டுக் கொண்டிருக்கிறது.

கடுமையான சட்டங்கள் வந்தால் இவை எல்லாம் மாறிவிடும் என்று நம்மை நம்பச் சொல்கிறார்கள். சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போலீசுத் துறை, இராணுவத் துறையினர் வீட்டிலும் பெண்களின் நிலை இதுதான் என்பதையே மேற்குறிப்பிட்ட நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.

பெண்களுக்கெதிரான வரதட்சணைக் கொடுமைகள், குடும்ப வன்முறைகள் ஆகியவற்றின் அடிப்படையாக விளங்கும் பார்ப்பனிய – ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பும், இந்தச் சுரண்டலை அனுமதிப்பதோடு, ஆளும் வர்க்கங்களின் உழைப்புச் சுரண்டலையும் அங்கீகரித்து வளர்த்துவிடும் இந்த அரசுக் கட்டமைப்பும் தான் பிரதான குற்றவாளிகள்.


துலிபா
செய்தி ஆதரம் : Tamil Hindu, Indian Express

1 மறுமொழி

  1. இஸ்லாம் தான் எல்லா பிரச்சனைக்கும் தீர்வு, மணக்கொடை கொடுத்து பெண்ணை திருமணம் செய்யுங்கள் .

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க