பாராமுகம் பார்ப்போம் – மு.வி.நந்தினி
டந்த ஒரு வாரமாக இந்திய #metoo இயக்கம் பல பழைய குப்பைகளை கிளறிக்கொண்டிருக்கிறது. பல ‘பெரிய’ மனிதர்களின் நாற்றமடிக்கும் நடவடிக்கைகள் குமட்டலை வரவைத்துக்கொண்டிருக்கின்றன. கூடவே, மன உளைச்சலையும் ஏற்படுத்துகின்றன. பத்திரிகையாளராக நானும்கூட இத்தகைய ஒடுக்குமுறைக்கு ஆளாகியிருக்கிறேன். நேரிடையான பாலியல் அத்துமீறலாக அவை இல்லாவிட்டாலும் பெண் என்பதாலேயே என்மீது தொடுக்கப்பட்ட தாக்குதல், எனக்கு எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை வினவு தளத்தில் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். எனவே, #metoo இயக்கத்தின் ஊடாக ஒலிக்கும் குரல்களில் என்னைப் பார்க்கிறேன். அவர்களின் வலியை உணர்கிறேன்.

இன்று பிரபலமாக இருக்கும் ஒருவருக்கு எதிராக சொல்லப்படும் குற்றச்சாட்டு என்பதால் ஊடக முக்கியத்துவம் கிடைக்கிறது அல்லது குற்றம் சொல்பவர்களுக்கு ஏதோ ஒரு அரசியல் திட்டம் இருக்கிறது என்பதையும் கடந்து #metoo இயக்கம், பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கான சம உரிமை போராட்டத்தில் முக்கிய நகர்வினை ஏற்படுத்தும் என்பது என்னுடைய அவதானிப்பு.

பாலிவுட்டில் #metoo இயக்கம்

ஹாலிவுட்டில் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முப்பதுக்கும் அதிகமான பெண்கள் சொன்னபோது #metoo இயக்கம் உலக ஊடகங்களில் பேசுபொருளானது. இந்தியாவிலும் அதுகுறித்து பேச்சுக்கள் எழுந்தன. நடிகர் தனுஸ்ரீ தத்தா தனக்கு நடிகர் நானா பட்டேகரால் ஏற்பட்ட பாலியல் அச்சுறுத்தல் குறித்து  பேசிய பிறகே, மற்ற பெண்களும் தாங்கள் பாதிக்கப்பட்டதை பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்கள். ‘அரசியல்’செல்வாக்கு மிக்க நடிகரான நானா பட்டேகர், இந்தி பட ஷுட்டிங்கின்போது தன் விருப்பத்துக்கு மாறாக தொட்டதும் அதை விரும்பாத நிலையில் படக்குழுவினரை வைத்து பணிய வைக்கப்பார்த்தது குறித்தும் அடுத்தக்கட்டமாக ‘நவநிர்மாண் சேனா’ என்கிற குண்டர் படையை வைத்து தன் காரின் மீது தாக்குதல் நடத்தியது குறித்தும் தனுஸ்ரீ தத்தா பகிர்ந்திருந்தார். அதன்பிறகு, நானா பட்டேகருடன் நடித்துக்கொண்டிருந்த படத்திலிருந்து விலகியதையும் தனக்கு நேர்ந்த அத்துமீறல் குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தபோது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதையும் அவர் சொல்லியிருந்தார். பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தை #metoo இயக்கம் வழியாக இப்போது வெளிக்கொண்டுவந்தார் தனுஸ்ரீ. இது ஊடக விவாதமாகி, அப்போது நானா பட்டேகர் மீது பதியப்படாத வழக்கு, இப்போது பதியப்பட்டிருக்கிறது.

நானா பட்டேகர், தனுஸ்ரீ தத்தா.

இதன் பின், ஏராளமான பாலிவுட் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை, சில பாலியல் வன்கொடுமைகளை, ஒடுக்குமுறைகளை சொல்ல ஆரம்பித்தார்கள். பாலிவுட்டின் ‘மிக நல்ல அப்பா’ என புகழப்பட்ட நடிகர் அலோக் நாத், தன்னுடைய மகளாக படத்தில் நடித்த நடிகரை எப்படி பாலியல் பண்டமாக பார்த்தார் என்பது வெளியே வந்தது. ’குயின்’ என்ற பெண்ணிய புரட்சி படத்தை இயக்கிய விகாஸ் பால், நிதர்சனத்தில் ஒரு ரேப்பிஸ்ட் என்கிற விஷயம் வெளியே வந்தது. இயக்குநர்கள் சுபாஷ் கய், சுபாஷ் கபூர், சஜித் கான், டி-சீரிஸ் நிறுவனத்தின் தலைவர் பூஷன் குமார், இசையமைப்பாளர் அனு மாலிக், பாடகர் கைலாஷ் கர் என பட்டியல் நீண்டுகொண்டிருக்கிறது. இவர்களெல்லாம் அதிகாரத்தில் இருக்கிற ஆண்கள். தங்களுடைய அதிகாரத்தைக் கொண்டு பெண்களை வேட்டையாடுவதை பகுதி நேர வேலையாக பார்த்தவர்கள் என்பது பல பெண்களின் குற்றச்சாட்டுக்களின் மூலமாக அறிய முடிகிறது.

இந்திய ஊடகவியாளர்களின் ஆணாதிக்க முகம்

தங்களுடைய பணியிடத்தில் ஏற்பட்ட பாலியல் ஒடுக்குமுறைகளை இந்தி பட உலக பெண்கள் பட்டியலிட தொடங்கியபோது, ஊடக பெண்கள் மெதுவாக பேச ஆரம்பித்தார்கள். ஊடக உலகில் ஜாம்பவான்களாக இருந்தவர்களின் ஆணாதிக்க முகம் வெட்ட வெளிச்சத்துக்கு வந்தது. ஏசியன் ஏஜ் பத்திரிகையின் ஆசிரியரும் இப்போது மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சராக உள்ளவருமான எம்.ஜே. அக்பர் மீது 14 ஊடக பெண்கள் நேரிடையாக பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டை கூறினர். இத்தனை பெண்களின் கூற்றிலிருந்து எம். ஜே. அக்பர், பணிக்கும் வரும் பெண்களை ஒரு பாலியல் பண்டமாக மட்டுமே பார்த்திருக்கிறார் என்பது தெரிகிறது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக தனக்கு கீழ் பணியாற்றும் பெண்களை ஒடுக்கி வந்திருக்கிறார்.

எம்.ஜே.அக்பர்

பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு கொடுக்கப்படும் அதீத கவனம் ‘அவன் எப்படி அவளை வளைத்தான்’ என்கிற விதத்தில் இதை செய்தியாக நுகரும் பெரும்பான்மை ஆண்களின் விருப்பத்திலிருந்து வருகிறது. பாலியல் ஒடுக்குமுறையால் அல்லது அத்துமீறலால் எப்படி ஒரு பெண்ணின் வாழ்க்கை திசை திரும்புகிறது அல்லது வாழ்க்கையே இல்லாமல் போகிறது என்கிற கோணத்தில் ஆண் மனம் பொதுவாக சிந்திப்பதில்லை.

எம்.ஜே. அக்பர் என்னும் ஜென்டில்மேன் அமைச்சர், பத்திரிகையாளராக இருந்தபோது, கஜாலா வகாப் என்ற பத்திரிகையாளரை எப்படி ஒடுக்கினார் என்பதைக் கேளுங்கள்…

“டெல்லிக்கு அருகே ஒரு சிறிய நகரத்திலிருந்து ஊடகப்பணிக்கு வந்தவள் நான். எங்கள் குடும்பத்தில் பெண்களை பணிக்கு அனுப்புவது நடக்காத விஷயம். நான் தான் முதன் முதலில் ஊடகப்பணிக்கு வந்தேன். எம். ஜே. அக்பரின் எழுத்தில் ஈர்க்கப்பட்டு அவரைப் போல பத்திரிகையாளராக வேண்டும் என பத்திரிகை தொடர்பான படிப்பைப் படித்தேன். எதிர்பாராத விதமாக அவர் பணியாற்றிய ‘ஏசியன் ஏஜ்’ பத்திரிகையிலேயே எனக்கு பயிற்சியாளர் பணியும் கிடைத்தது.

படிக்க:
ஊடகங்களா ? பாலியல் வக்கிரக் கூடங்களா ?
ஒரு பெண் பத்திரிகையாளரின் குமுறல்!

பணிக்கு சேர்ந்த பிறகு, எம்.ஜே. அக்பர் எப்படிப்பட்ட நபர் என தெரிந்துகொண்டேன். தொடக்கத்தில் வேண்டாத குறுஞ்செய்திகளை அனுப்பிக்கொண்டிருந்தார். தேவையில்லாமல் தன்னுடைய அறைக்கு அழைப்பதை அடுத்த கட்டமாக செய்தார். அவர் பத்தி எழுதுவதற்காக என்னை டிக்‌ஷனரி பார்த்து வார்த்தைகளை சொல்லச் சொல்வார். அதாவது, அவர் முன்பாக என்னை மணிக்கணக்கில் உட்கார வைக்க வேண்டும் என்பதற்காக. இறுதியாக, வெளியேற முடியாத இடத்தில் பாலியல் ரீதியிலான அத்துமீறலில் ஈடுபட முயன்றார்.” என்கிறார் கஜாலா. ஒருகட்டத்தில் தன்னுடைய பாலியல் அத்துமீறலுக்கு ‘காதல்’ சாயம் அடிக்க முயற்சித்திருக்கிறார் அக்பர்.

‘ஏசியன் ஏஜ்’ பத்திரிகை அலுவலகம் ‘அக்பரின் அந்தப்புரம்’ என பத்திரிகை வட்டாரத்தில் அழைக்கப்பட்டதாகவும் பத்திரிகையின் கிளை அலுவலகங்கள் தோறும் அக்பருக்கு காதலிகள் இருந்ததாகவும் சொல்கிறார் கஜாலா. அக்பரின் காதலிகள் பட்டியலில் தன்னால் ஒருபோதும் இணைய முடியாது என முடிவெடுத்த கஜாலா, தனது பதவியை ராஜினாமா செய்கிறார். அதன்பிறகும் அக்பரின் பின் தொடர்தல் தொடர்ந்திருக்கிறது. வேறு வழியில்லாமல் வேறு பத்திரிகையில் பணி தேடுவதை விட்டுவிட்டு, சொந்த ஊருக்குக் கிளம்பியிருக்கிறார் கஜாலா.

பத்திரிகை துறையில் பணியாற்றும் கனவோடு நுழைந்தவருக்கு அக்பர் என்ற வேட்டையாடியால் ஏற்பட்ட பதட்டம் ஒருபுறம் ஆறுதலுக்காக தனது வீட்டாரிடம் நடந்ததை சொல்லக்கூட முடியாத நிலை இன்னொரு புறம். சொன்னால் இனி இந்த வேலையே வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள். மகளின் உணர்வுகளை புரிந்துகொண்ட அவருடைய குடும்பம், மீண்டும் அவரை டெல்லிக்கு அனுப்பி வைத்திருக்கிறது.

“எங்கள் குடும்பத்தில் படித்து முடித்தவுடன் பெண்களுக்கு திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். நான் அப்படியிருக்க விரும்பவில்லை. என் அப்பாவிடமிருந்து பணம் பெறுவதைக்கூட நான் விரும்பவில்லை. குடும்பத்துக்குள்ளேயே பாகுபாட்டுக்கு எதிராக போராடியிருக்கிறேன். நான் மதிப்பிற்குரிய பத்திரிகையாளராக பணியாற்ற விரும்பினேன்.” என்கிற கஜாலா,

“கடந்த 21 வருடங்களாக, இதை எனக்குள்ளே வைத்திருந்தேன். நான் பாதிக்கப்பட்டவளாக இருக்க விரும்பவில்லை. அதோடு, ஒரு அரக்கத்தனமான மிருகம், என்னுடைய பணிவாழ்க்கையை கெடுக்க விடக்கூடாது என்கிற எண்ணத்தில் நான் மீண்டு வந்தேன். அப்போதும்கூட அவ்வவ்போது அந்த கொடுங்கனவு நினைவில் வந்துபோகும். இனி அந்தக் கொடுங்கனவு வராது” என வெடித்திருக்கிறார் கஜாலா. தற்சமயம் ‘ஃபோர்ஸ்’ என்கிற இதழில் பணியாற்றுகிறார்.

படிக்க:
தமிழக தொலைக்காட்சிகளும் அடிமை பத்திரிகையாளர்களும் !
சன் டிவி: சிக்கிய ராஜாவை வைத்து சிக்காத ராஜாக்களைப் பிடிப்போம்!

பிரியா ரமணி, கஜாலா வகாப், சபா நக்வீ உள்ளிட்ட 14 பேர்கள் அக்பர் மீது குற்றச்சாட்டை சொல்கிறார்கள். அக்பரோ இவை அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை என்கிறார். அக்பரின் நடவடிக்கைகளை டெல்லி பத்திரிகை வட்டாரம் நன்றாக அறியும் என அவருடன் பணிபுரியாத பல பெண்களும் தெரிவிக்கிறார்கள். ஆனால், விரைவில் மக்களவை தேர்தல் வரவிருக்கும் நேரத்தில் மறைமுக திட்டத்தோடு தன்னைப் பற்றிய கதைகளை சில திட்டமிட்டு சொல்வதாகச் சொல்கிறார் அக்பர்.  பெயரோடு வெளியே வந்த 14 பேரின் குற்றச்சாட்டுகளை ஒரே அடியாக தேர்தலோடு முடிச்சு போடுகிறார். முதலமைச்சர் என்கிற அதிகாரத்தை பயன்படுத்தி ஒரு பெண்ணை நோட்டமிட்ட மோடி-அமித் ஷா கும்பலில் சேர்ந்தவரிடம் ராஜினாமாவையா எதிர்ப்பார்க்க முடியும்?  அமைச்சரவையின் காலம் விரைவில் முடிய இருக்கும் நிலையிலும்கூட இத்தனை பெண்களின் நேரடியான குற்றச்சாட்டுக்கு ஆளானோம் என்கிற உறுத்தலில் பதவி விலகியிருக்க வேண்டும். ஆனால், இறுதிவரை பதவியில் அமர்ந்துகொண்டு அதிகார திமிரை காட்ட விரும்புகிறார் எம். ஜே. அக்பர்.  வழக்கு ரீதியாக சந்திக்க தயாராக உள்ளதாக சொன்ன அக்பருக்கு, இறுதிவரை நின்று நாங்களும் போராடுவோம் என பதிலடி தந்திருக்கிறார்கள் பாதிக்கப்பட்ட பெண்கள்.

குற்றம்சாட்டப்பட்ட பத்திரிகையாளர்கள் பிரசாந்த் ஜா (வலது மேல்), மாயங்க் ஜெயின் (இடது மேல்), கே.ஆர்.ஸ்ரீனிவாஸ் (இடது கீழ்), அனுராக் வர்மா (வலது கீழ்), கவுதம் அதிகாரி (நடுவில்)

ஊடகத்துறையில் எம். ஜே. அக்பர் மட்டுமல்ல பல அதிகார ஆண் திமிர் பிடித்த நபர்களின் முகங்களும் வெளிவந்துள்ளன. டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஹைதாராபாத் பதிப்பின் ஆசிரியர் கே. ஆர். ஸ்ரீனிவாஸ், டி.என். ஏ. மும்பை பதிப்பின் ஆசிரியர் கவுதம் அதிகாரி, ஹிந்துஸ்தான் டைம்ஸின் மனோஜ் ராமச்சந்திரன், அதே நாளிதழின் ஆசிரியர் பிரசாந்த் ஜா, பிஸினஸ் ஸ்டாண்டர்ஸ் நாளிதழின் மயானக் ஜெயின், ஹஃபிங்டன் போஸ்டின் அனுராக் வர்மா என பல பத்திரிகையாளர்களின் நடத்தைகள் குறித்து குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்கள் பெண்கள். இதில் மூத்த பத்திரிகையாளர் வினோத் துவாவும் அடக்கம்.

ஆண்-அதிகார திமிரின் பொதுவான குணம்!

தனுஸ்ரீ, கஜாலா என பாதிக்கப்பட்ட பெண்கள் பலருடைய கூற்றுக்களிலிருந்து இந்த வேட்டையாடிகளுக்கு இடையே பொதுவான குணங்கள் உள்ளதைப் பார்க்க முடியும். முதலில் இவர்கள் அக்கறை உள்ளவர்களாக தங்களைக் காட்டிக்கொண்டு பெண்களை நெருங்குவார்கள். அது பலன்கொடுக்காத நிலையில், நேரடியான அணுகுமுறையில் இறங்குவார்கள். அதுவும் பலன்கொடுக்காத நிலையில், அந்தப் பெண்ணின் பணி வாழ்க்கையை சீர்குலைக்கும் வேலைகளில் இறங்குவார்கள். குற்றச்சாட்டுக்களை வெளிப்படையாக சொல்லும்போது அந்தப் பெண்ணின் மீது திறமையின்மையை சுட்டிக்காட்டுவார்கள். இல்லையெனில் முழுவதுமாக மறுப்பார்கள்.

ஆனந்த விகடன் அலுவலகத்தில் எனக்கும் இதுதான் நேர்ந்தது. அப்போதைய ஆசிரியர், ‘சரியாக வேலை செய்வதில்லை, தனி தீவாக இருக்கிறார்’ எனக் காரணம் கூறி ஒரே நாளில் பணிநீக்கம் செய்ய நிர்வாகத்திடம் பேசினார். என்னைப்பற்றிய விமர்சனமோ, ஆய்வோ எனது எழுத்துக்கள் – பணி குறித்து இருக்க வேண்டும். மாறாக இந்த ‘தனித்து’ இருந்தார் என்பது என்ன? அவர் பேசியதற்கு முந்தைய வாரம் வரை என்னுடைய கட்டுரை கவர் ஸ்டோரியாக வந்தது, பிற கட்டுரைகளும் வந்தன. அடுத்த வாரத்தில் என்னுடைய கட்டுரைகள் அச்சில் ஏறாமல் பார்த்துக்கொள்ளப்பட்டன. என்னை பணிநீக்கும் முடிவை கேள்விப்பட்டு, நானே ராஜினாமா செய்துவிட்டு வெளியேறினேன். அதன்பிறகு இரண்டு வாரங்கள் கழித்து பெயர் போடாமல் நான் எழுதிய சில கட்டுரைகள் வெளியாகின.

’குங்குமம்’ இதழில் நான் எழுதியதை பார்த்துவிட்டு, அழைத்த அதே ஆனந்த விகடன் ஆசிரியர்தான் நான் பணிசெய்யவில்லை என குற்றம்சாட்டி வெளியேற்ற முயற்சித்தார்.  கையை பிடித்து இழுத்தாரா, ஆபாச எஸ்.எம். எஸ். அனுப்பினாரா என சிலர் கேட்பார்கள். இவை மட்டும் பாலியல் ஒடுக்குமுறைகள் அல்ல.  பெண் என்பதாலேயே சில ‘எதிர்பார்ப்புகளை’ வைத்துக்கொண்டு அதன்படி நடக்க வேண்டும் என நினைப்பதும் அதன்படி இணங்காதவர்களை ஓரம்கட்டுவதும் பாலியல் ஒடுக்குமுறையே. சன் நியூஸ் தொலைக்காட்சியிலும் இதுதான் எனக்கு நடந்தது.

குற்றச்சாட்டும் விளைவுகளும்

 25 ஆண்டுகள் ஆன பின்னும் கூட தனக்கு நடந்த உடல்ரீதியிலான, மனதளவிலான ஒடுக்குமுறை ஏன் பெண்கள் சொல்கிறார்கள்? ஒவ்வொரு குற்றச்சாட்டு வெளியான பின்பும் சமூக ஊடகங்களில் இந்தக் கேள்வி தவறாமல் முன்வைக்கப்படுகிறது. முதலாவதாக, நீங்கள் பொழுதைப் போக்க நாங்கள் எங்களுடைய பாடுகளை எழுதவில்லை. பணியிடத்தில் ஒரு ஆணுக்கு இருக்கும் அதே சுதந்திரமும் இடமும் பெண்ணுக்கும் வேண்டும் என்கிற சமத்துவத்துவக்கான போராட்டம் இது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதைக் காட்டிலும் அடுத்து வருகிற பெண்கள் பாதிக்கப்படக்கூடாது என்கிற கடமையும் எங்களுக்கு உண்டு.

படிக்க:
இந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் ? மு.வி.நந்தினி
உங்களுக்குள் ஒரு பாலியல் குற்றவாளி ! – புதிய கலாச்சாரம் ஆகஸ்ட் 2016

#metoo இயக்கத்தால் குற்றச்சாட்டுக்கு ஆளான ஆண்கள் சமூகத்தின் அவமானத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். தங்கள் பணியிடங்களிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். நோபல் இலக்கிய தேர்வு குழுவில் இருந்தவர் இத்தகைய குற்றச்சாட்டுக்கு உள்ளானதால், இந்த ஆண்டு பரிசு அறிவிப்பது நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆஸ்கர் தேர்வு குழுவில் இருந்தவரை நீக்கியிருக்கிறார்கள். பாலிவுட்டிலும்கூட குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களுடன் இணைந்து பணியாற்ற மாட்டோம் என நந்திதா தாஸ், ஜோதா அக்தர் உள்ளிட்ட 11 பெண் படைப்பாளிகள் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அமீர் கானும் அனுராக் காஷ்யப்-உம் குற்றச்சாட்டுக்கு ஆளான இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றப்போவதில்லை என்கிறார்கள். குற்றச்சாட்டுக்கு உள்ளான பத்திரிகையாளர் வினோத் துவாவின் மகள், #metoo இயக்கத்துக்கு ஆதரவாக இருப்பேன் என்கிறார். தன் தம்பி சஜித் கான் மீது குற்றம்சொல்லப்பட்டுள்ள நிலையில், #metoo இயக்கத்தை ஆதரிக்கிறார் ஃபரா கான்.

உரிமைக்கான போராட்டத்தை ‘mistress’ பிரச்சினையாகப் பார்க்கும் தமிழக ஜீவிகள்!

உலகம் முழுமைக்கும் ஆதரிக்கப்படும் ஒரு இயக்கம், வடக்கில் இருப்பவர்களையும் சிந்திக்க வைத்திருக்கும் இயக்கம், தமிழகத்தைச் சேர்ந்த பலருக்கு ‘mistress’ பிரச்சினையாகப்படுகிறது. அதாவது வைப்பாட்டி பிரச்சினை. அதாவது, தனது சொந்த நலன்களுக்காக ஆண்களை பயன்படுத்திக்கொண்டு, இறுதியில் அவர்கள் மீதே 10, 15 ஆண்டுகள் கழித்த பிறகு குற்றம்சாட்டுகிறார்களாம். அதில் ஒரு அறிவுஜீவி எழுதுகிறார், ஆணுறுப்பை கடித்து துப்பும் வாய்ப்பிருந்து, நன்றாக….. விட்டு, இப்போது குற்றம்சாட்டுகிறார்களாம்! ஒன்றை இவர்கள் புரிந்துகொள்வதேயில்லை, ஆண்களை பயன்படுத்திக்கொள்ளும் எந்த பெண்ணும் வெளியே வந்து குற்றச்சாட்டை பெரும்பாலும் சொல்வதில்லை. ஆனால் நேர்மையாக வாழ முனைந்து, அப்படிக் கிடைத்த பணியின் மீதான கனவை சிதைக்கும் ஆண்கள் மீதுதான் குற்றச்சாட்டை சொல்கிறார்கள்.

எளிய பின்னணியில் பிறந்து, முதல் தலைமுறையாகப் படித்து பட்டம் பெற்று, பணியில் சேர்ந்து பொருளீட்டி சுயமுடன் வாழ நகரம் நோக்கி வருகிற ஆண்களுக்கு இருக்கும் அதே கனவு, பெண்களுக்கும் இருக்கும். பெண்கள் படிக்கக்கூடாது; அப்படி படித்தாலும் வேலைக்குப் போகக்கூடாது; அப்படியே வேலைக்குப் போனாலும் திருமணத்துக்குப் பிறகு போகக்கூடாது; மீறி போனாலும் குழந்தை பிறந்தவுடன் வீட்டில் முடங்கிவிட வேண்டும். அதன் பிறகு, பெண்களின் மூளை வேலை செய்யாது என்பது இவர்களின் மனதில் ஆழப்பதிந்துள்ள சிந்தினை. இந்த சிந்தனையின் வெளிப்பாடாகத்தான் உரிமைக்கான பிரச்சினையை ‘வைப்பாட்டி’ பிரச்சினையாக திரித்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த ஒரு வார காலமாக தமிழ் முகநூல் பக்கங்களில் சில எழுத்தாளர்கள் எழுதிவரும் பதிவுகளைப் பார்த்தால், இவர்களையா இத்தனை நாளும் முற்போக்காளர்கள் என நினைத்துக்கொண்டிருந்தோம் என குமட்டத்தோன்றுகிறது.  மூத்த அறிவுஜீவி சுப.வீ. ‘சார் ஒரு கம்ப்ளைண்ட்…ஆனா, அது நடந்தது 16 வருஷத்துக்கு முன்ன” என மூன்றாம் தர ஜோக் அடிக்கிறார். மூத்தவரே சொல்லிவிட்டார் அல்லவா, இளையவர்கள் சும்மா இருப்பார்களா? அடுத்து லிஸ்ட்ல யாரு என நாக்கை தொங்கவிட்டு கேட்கிறார்கள்.  இத்தனை வருசம் ஆகியும் நம்ம மேல யாரும் மீ டு குற்றச்சாட்டு சொல்லவில்லை என அங்கலாய்க்கிறார்கள். பாலியல் கதைகளை எழுதி தங்களுடைய மன வக்கிரங்களை சொரிந்து கொள்கிறார்கள். எனக்குள்ளதெல்லாம் ஒரு எளிமையான கேள்வி இவர்களுடைய மனைவி, குழந்தைகள், சகோதரிகளும்கூட இப்படி பாதிக்கப்படலாம். அப்படி பாதிக்கப்பட்டாலும் இவர்கள் இப்படித்தான் பாலியல் கதைகளாக எழுதுவார்களா?

தமிழ்ப்பெண்களின் பிரதிநிதியா சின்மயி?

இந்தியர்களுக்கு பார்ப்பனீயத்தின் மீது உள்ளுக்குள்ளே அதீத கவர்ச்சி உண்டு. பார்ப்பனர்கள் பிறப்பிலேயே அறிவுஜீவிகள், பார்ப்பனர்கள் வாழ்க்கை முறையே சிறந்தது என பட்டியல் நீளும். ஆண்களுக்கு பார்ப்பனப் பெண்கள் மீதான ஆர்வமும் அதிகம். எங்களைப் போன்ற பெண்கள் எழுப்பும் எந்தக் குரலும் இவர்களுக்கு ஆழமான கிணற்றில் கத்திக் கொண்டிருக்கும் தவளையின் சத்தமாகத்தான் கேட்கும். சின்மயி பார்ப்பனப் பெண் என்பதற்காக அவருடைய குற்றச்சாட்டெல்லாம் ஜோடிக்கப்பட்டதாக இருக்கும் எனவும் அது திராவிட-ஆரிய சிந்தாந்தங்களின் மோதலாக பார்க்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?, #metoo இயக்கம் என்பது சின்மயி Vs வைரமுத்து என திரிக்கப்படுவது பணியிடத்தில் சமத்துவம் கோரும் பெண்களின் போராட்டத்துக்கு செய்யும் அவமரியாதை.  அதை திராவிட அரசியல் பேசும் நபர்கள், ஆதரவாளர்கள் ஏன் செய்கிறார்கள்? இதை தெரிந்தேதான் இவர்கள் செய்கிறார்களா? மேலும் சின்மயி தமிழ்ப்பெண்களின் பிரதிநிதியும் அல்ல.

ஊடகங்களில் பார்ப்பனப் பெண்களுக்கு சர்வ சாதாரணமாக பணிவாய்ப்புகள் கிடைக்கும். நான் பணியாற்றிய ஒரு பெண்கள் இதழில் என்னுடன் பயிற்சி நிருபராக பணிக்குச் சேர்ந்து தனது திறமையின்மையால் தொடர்ந்து பயிற்சி நிருபராகவே இருத்தி வைக்கப்பட்ட அந்தப் பெண் அதைத் தாங்க முடியாமல் தடாலடியாக ராஜினாமா செய்தார். அவருடைய அந்த நேர உடல்மொழி, அந்த பத்திரிகைக்கே அவர்தான் முதலாளி என்பதாக இருந்தது.

உண்மைதான், நிர்வாகம் என்ன செய்தது தெரியுமா? பெண்கள் பத்திரிகையில் எழுத லாயக்கில்லாத அவரை, வெகுஜன இதழில் பணிக்கு சேர்த்துக்கொண்டது நிர்வாகம். அந்தப் பெண்ணை வாயில் வரை சென்று அழைத்துவந்தார் அந்தப் பத்திரிகையின் செயல் அதிகாரி. இதெல்லாம் பார்ப்பனப் பெண்களுக்குக் கிடைக்கும் வசதிவாய்ப்புகள் !  அவர் பார்ப்பனர் என்ற ஒன்றே சகல மரியாதைக்கும் போதுமானது.

பார்ப்பன ஊடகங்களில் மட்டுமல்ல, ‘திராவிட’ பின்னணியுள்ள ஊடகங்களில்கூட பார்ப்பனப் பெண்களுக்கு கூடுதலாகவே இடம் கிடைக்கும்! கூடுதலாக மரியாதை கிடைக்கும். குங்குமம் இதழில் எனக்குப் பணியாற்ற சிறப்பான வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் வாரம் ஒரு கட்டுரை மட்டுமே வெளியானது. ஒருமுறை ஆசிரியர் குழுவில் இருந்த ஒருவரிடம் இதுகுறித்து சண்டையிட்டபோது, அவர் சொன்ன காரணம், “அவருக்கு சம்பளம் கம்மி, அவர் நிறைய வேலை பார்க்கிறார் என நிர்வாகத்துக்கு காட்ட வேண்டும்” எனவே நான்கைந்து புனைபெயர்களில் வாரம் நான்கைந்து கட்டுரைகள் அந்தப் பெண்ணின் பெயரில் வரும். அவர் பார்ப்பனப் பெண் என்பதும் அவரால் நான்கைந்து கட்டுரைகள் எழுதும் திறமை இருந்ததும் திராவிட ஆசிரியர் குழுவினர் மனதில் ஆழமாக பதிந்துபோயிருந்தது. இவருடைய கட்டுரை ஏன் ஒன்றே ஒன்று மட்டும் வருகிறது? இவருக்கு ஏன் தண்டச் சம்பளம் தரவேண்டும் என நிர்வாகமும் என்னைப் பற்றி கேட்கவில்லை. நானும் எனக்கு ஏன் தண்டச் சம்பளம் தருகிறீர்கள் எனக் கேட்கவில்லை.

பின்புலம் இல்லாமல் ஊடகங்களில் பணியாற்ற வருகிற பெண்களுக்கு திறமையின் அடிப்படையில் பணிவாய்ப்பு கிடைப்பது மிகவும் அரிதாகத்தான் நிகழும். புரபஷனலாக இருக்க நினைக்கும் ஒருசில ஆண்கள் அதற்கு காரணமாக இருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் மனுஸ்மிருதியை கரைத்து குடித்தவர்கள் போல, பணியாற்ற வருகிற பெண்களை வாய்ப்புக்காக எதை வேண்டுமானாலும் செய்யக்கூடிய ’வைப்பாட்டியாக’ பார்க்கிறவர்கள்.

கடந்த ஒரு வார காலமாக சமூக ஊடகங்களை அவதானித்தபோது #MeToo இயக்கத்தை பற்றி ஆண்களுக்கு மூன்று விதமான கருத்து உள்ளதைக் காண முடிந்தது.

1 ) இந்த இயக்கம் ஒடுக்கப்பட்ட பெண்களின் குரலை பேசும்; இதனால் நன்மைகள் விளையும் என நம்புகிறவர்கள். ஆண்களில் இவர்கள் மிகக் குறைவு. அப்படிப்பேசுகிறவர்களில் ஒருசிலர் தாராளவாதம் பேசும் 30-களுக்குள் வயது கொண்ட இளைஞர்கள்.

2) இன்னொரு பிரிவினர் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள். இவர்களைப் பற்றி நிறைய எழுதிவிட்டோம். இதில் ஆரிய-திராவிட-வலது-இடது சித்தாந்த வேறுபாடுகள் இல்லை.

3) மூன்றாவது வகையினம் மிக மிக ஆபத்தானது. குற்றம் நடக்கும்போதும் சந்தர்ப்பவாதமாக வாயை மூடிக்கொண்டிருப்பார்கள். குற்றச்சாட்டுக்கு ஆளாகும் நபர்களை பாதுகாப்பார்கள். குற்றம்சாட்டும் நபர்களே குற்றச்சாட்டுக்கு பொறுப்பாக்குவார்கள். உரிமைப் போராட்டத்தை mistress பிரச்சினை எனக்கூசாமல் எழுதுவார்கள். இவர்களில் ஒரு பிரிவினர், ஆளுநர் பிரச்சினையை திசை திருப்ப இந்தக் குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது என்கிற சதிக் கோட்பாட்டை முன்வைப்பார்கள். இன்னும் சிலர் ‘உங்களுக்கு வேற வேலையே இல்லையா? தலித் பெண்களுக்கு, ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை பேச மாட்டீர்களா?’ என கேட்பார்கள். நாங்கள் இதுவரை எதை எழுதிக்கொண்டிருந்தோம் என்பது பற்றியெல்லாம் இவர்களுக்கு பொருட்டில்லை, நாங்களும் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர்கள்தான் என்கிற பிரக்ஞையும் இல்லை. MeToo ஹாஷ்டேக் போடுகிறவர் எல்லாரும் சின்மயி! பார்ப்பனப் பெண்களுக்கு மட்டுமே குரல் இருக்கும் என்கிற பார்ப்பனியம் புழுத்துப் போன ஆண்களின் மனம்.

படிக்க:
ட்ரம்போவும் நானும் – மு.வி. நந்தினி
ஜீன்ஸ் பேண்ட்டும், பாலியல் வன்முறையும் !

மு.வி.நந்தினி

MeToo இயக்கத்தை சின்மயி Vs வைரமுத்து பிரச்சினையாக்கி நீர்க்கச் செய்த ஊடகங்கள், மயிலாப்பூர் பார்ப்பன இசைக்கலைஞர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்தோ, ஊடகங்களில் நடக்கும் பாலியல் ஒடுக்குமுறை குறித்தோ தவறியும்கூட பேசமாட்டார்கள். எத்தனை பேருக்கு பதட்டம்? தமிழகத்தின் முற்போக்கு முகம்,  ஆணாதிக்கத்தின் உள்ளே போய் வசதியாகப் பதுங்கிக் கொள்கிறது. ஆனால், பதட்டம் கொள்கிறவர்கள் எச்சரிக்கையாக இருந்துகொள்ளுங்கள்.  கல்விக்காகவும் சொத்துரிமைக்காகவும் கோயில் நுழைவுக்காகவும்  குடும்பங்களில் சம உரிமைக்காகவும் போராடிய நாங்கள், எங்கள் பணியிட உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்கப்போவதில்லை. போராட்டத்தில் இணைகிறவர்கள் தாராளமாக இணைந்துகொள்ளலாம்.

செய்தி ஆதாரங்கள்:

மு.வி.நந்தினி கடந்த 14 ஆண்டுகளாக தமிழின் பல இதழ்களில் பத்திரிகையாளராக பணியாற்றியிருக்கிறார். தற்போது டைம்ஸ் தமிழ் டாட் காம் இணையதளத்தின் ஆசிரியராக இருக்கிறார். சுற்றுச்சூழல், சமூகம், இந்துத்துவ அரசியல், பெண்ணியம் சார்ந்து எழுதிவருகிறார். வினவு கருத்தாடல் பகுதியில் பாரமுகம் பார்ப்போம் எனும் தலைப்பில் எழுதுகிறார்.

21 மறுமொழிகள்

 1. சமத்துவம் என்கின்ற பெயரால் ஆண்களையும் பெண்களையும் ஒன்றாக பழகவிட்டு வேலையும் செய்யவிட்டு அதனால் பாலியல் தொந்தரவுகள் உட்பட இன்னும் பல அனைத்து மானக்கேடான சம்பவங்களும் நடைபெற‌ நாமே எல்லா வாய்ப்புகளையும் ஏற்படுத்தி கொடுத்துவிட்டு…புலம்புவதில் என்ன பொருள் இருக்கிறது…?

  வேலை நிமித்தமாகவோ அல்லது வேறு எதன் பொருட்டோ ஒரு ஆண் ஒரு பெண் கூட‌ தனிமையில் இருக்கும் சந்தர்பம் ஏற்படின் அவன் தவறு செய்யவே முற்படுவான். இந்த தனிமை… பலவிதங்களில் ஆண்களால் அதிகாரம் படைத்த ஆண்களால் ஏற்படுத்தப்படுகிறது. அதை தான் இந்த பதிவும் சொல்கிறது.

  இந்த தனிமையை… வேலை நிமித்தம் ஆண் பெண் தனித்து இருக்கும் சூழலை சமத்துவம் தடுத்து நிறுத்திவிடுமா…?

  ஆண் என்றும் அவன் ஆண் தான். ஒருவன் சமூகத்தில் எவ்வளவு தான் உயரிய நிலையை அடைந்தாலும் எவ்வளவு தான் மேலான நாகரீகமானவனாக அவன் தன்னை வெளிப்படித்திக் கொண்டாலும் அடிப்படையில் அவன் ஒரு ஆண். சந்தர்பம் தான் ஒருவனை அவன் எவ்வளவு வக்கிரம் பிடித்தவன் என்பதை வெளிக்கொணர்கிறது.

  அந்த வக்கிரம் பிடித்த ஆண்களிடமே சமத்துவத்தை தேடினால்… நெருப்பு என்று தெரிந்தே வீழும் விட்டிலை போல.

  மாறாக, அவர்களிடம் இருந்து விலகி இருக்கும் சூழல் தானே ஒரு பெண்ணுக்கு மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் நல்லது.

  ஒன்றாகவே இருப்பேன் சமத்துவமாக இருப்பேன் என்றால்…

  என்ன தான் ஆணுக்கு பெண் சரி நிகர் சமம் என்ற நிலையை எட்டினாலும் அதிகாரம் படைத்த வக்கிரம் பிடித்த ஒரு ஆணால் ஒரு சந்தர்பத்தை அவனால் ஏற்படுத்த முடியும் துன்புறத்த முடியும் என்பது தானே நிதர்சனம். அதை தானே #metoo சொல்கிறது.

  அந்த வாய்ப்பை அவனுக்கு நல்காதீர்கள் என்று தான் பெண்களை கேட்டுகொள்ள முடியும்.

 2. பெரும்பாலும் கட்டுரையாளிரின் கருத்துடன் ஒத்துபோகிறேன். ஆனாலும் கீழ்காணும் குறித்து மாற்று கருத்து இருக்கிறது.
  //தலித் பெண்களுக்கு, ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை பேச மாட்டீர்களா?’ என கேட்பார்கள்.//
  1.ஆமாம். சின்மயிடம் இப்படி கேட்பார்கள். சின்மயி தமிழ் பெண்களின் பிரதிநிதி அல்ல என்று ஒரு வரியில் கூறிவிட்டு சின்மயிடம் கேட்கும் கேள்வியை கட்டுரையாளரை நோக்கி கேட்கப்பட்டதாக புரிந்துகொள்வது ஏன்? சுஹாசினி, சரத்குமார் மகள் வரலட்சுமி, இப்போது சின்மயி என பெண்களின் எம்பவர்மண்ட் பேசுபவர்கள் வாச்சாத்தி குறித்தோ,அரியலூர் நந்தினி குறித்தோ பேசுவதில்லை. ஏன் ? என்கிற கேள்வியை எழுப்பத்தானே செய்வார்கள். முகநூலில் கவிதா சொர்ணவல்லி போன்று பெண்கள் பலர் இக்கேள்வியை எழுப்பியிருக்கிறார்கள்.
  2.ஆனால் சின்மயியோ இல்லை சுஹாசினிகளோ பேசாதா பெண்களின் பிரச்சணைகளை சுப.வீயோ இல்லை இன்று சின்மயிக்கு எதிராக பேசும் நபர்கள் இது குறித்து பேசியிருப்பார்கள் என்று நம்புகிறேன். எனில் இதை எப்படி புரிந்து கொள்வது. அவர்களை ஆணாதிக்கவாதிகள் என்று லேபிள் ஒட்டிவிட்டு கடந்து போக முடியுமா? சின்மயியை என்கிற பார்பண் பெண் தவிர வேறு ஒருவர் வைரமுத்துமீது குற்றச்சாட்டு வைத்திருந்தால் முற்போக்காளர்கள் திராவிட இயக்கத்தினர் அப்பெண்ணை கேள்வி கேட்டிருக்கமாட்டார்கள் என்பதை நான் 1000% நம்புகிறேன். சின்மயி என்கிற அரிச்சந்திர வாரிசு சொல்லியதும் எல்லோரும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டுமா? சின்மயி ஒரு பொய்யர் என எனக்கு சந்தேகம் இருக்கிறது எனில் நான் கேள்வியே கேட்ககூடாதா? அப்படி கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள்.சின்மயி என்கிற அவர்களின் பார்வைக்கு நம்பிக்கையற்ற/சந்தேகத்திற்கிடமான ஒரு நபரிடமிருந்து குற்றச்சாட்டு வந்ததால் தான் இந்த கேள்வி எல்லாம். அதனால் அவர்களின் மகளுக்கு/மனைவிகளுக்கு இப்படி நடந்தால் என்ன என்கிற பெரிய பாரத்தை நீங்கள் சுமக்க தேவையில்லை. சின்மயிக்கு எதிராக கேள்வி கேட்கும் உரிமையை இக்கட்டுரை அழுத்தமாக அங்கீகரிக்கவில்லை என்று நான் கருதுகிறேன். சின்மயி குறித்து பலரும் தெரிவித்த கருத்தை மொத்த meToo மீது அப்படியான கருத்து கொண்டிருக்கிறார்கள் கட்டுரையாளர் mislead செய்கிறார். meToo வையும் சின்மயியையும் பிரித்து பார்க்க வேண்டும் என்று கோரும் கட்டுரையாளர், அவரே அதற்கு பலியாகி சின்மயிக்கு எதிரான கருத்தை meToo-க்கு எதிரான கருத்தாக புரிந்துகொண்டிருக்கிறார் என நினைக்கிறேன்.

  3. அடுத்தததாக கேள்விக்கிடமற்ற வகையில் meToo இயக்கத்தை ஆதரிக்க வேண்டும் என்று கோருவது போல் இருக்கிறது.

  தமிழக meToo-வில் குறிப்பிடத்தக்க குற்றச்சாட்டுகள்(அனைத்தும் அல்ல) கழிப்பறை சுவரில் கிறுக்குவது போல இருக்கிறது. எந்த accountability-ம் இல்லை. ஒரு வேளை அப்படி கோருவதே குற்றம் என்று கூட புரிந்துகொள்ள கூடும். நாளைக்கு நான் வைத்திருக்கும் ஒரு fake ஐ.டியில் இன்னார் என்னை கைபிடித்து இழுத்தார் என்று குற்றச்சாட்டு வைத்தால் அதை எப்படி பார்ப்பீர்கள். பேக் ஐ.டிக்கு என்றே பேர் பெற்றவர்கள் இதை இதுவரை செய்யவில்லை என்று உங்களால் உத்திரவாதமாக சொல்ல முடியுமா?

  • சின்மயியிடம் ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை ஏன் பேசவில்லை என்று கேட்பது RSS / BJP யின் விவாத முறை போல உள்ளது.

   சின்மயி ஒரு பார்ப்பன பெண் என்பதால் முற்போக்காளர்களுக்கும் பெரியாரியவாதிகளுக்கும் நம்பிக்கை ஏற்படவில்லை என்பது ஆகச்சிறந்த ஆணாதிக்க பிற்போக்குவாதம். இது பெரியாருக்கு எதிரானதாகும்.

   இதுபற்றி மருத்துவர் ஷாலினி New 7 ல் அளித்த பேட்டி சிறப்பாக உள்ளது. கேளுங்கள்.

   • சென்னா ரெட்டி கையபிடிச்சி இழுத்தாரு, சட்டசபையில சேலைய கிழிச்சாங்க என்று முன்னர் ஒரு மாமி குற்றம் சாட்டியது. மாமிகளை அப்பாவித்தனமாக உடனே நம்ப முடியாது என்று ஒருவர் நினைத்தால் உடனே அவர் ஆணாதிக்கவாதியா?

    சின்மயியை நம்பாவிட்டால் ஆணாதிக்க பிற்போக்குவாதம்.அப்போ ஜெயாமாமிய நம்பலனா? சின்மயி சொல்வதை நம்பித்தான் ஆக வேண்டும் என்று யாரையும் கட்டாயபடுத்த முடியாது.

    • ஒரு கிரிமினல் பாசிஸ்டுடன் அப்பாவி பார்ப்பன பெண்ணை ஒப்பிடுவதா . . !

     நியாயமா . . !

     • அப்பாவிப் பெண்…. தனது மயிலாப்பூர் தொடர்புகளை பயன்படுத்தி சில ஆண்டுகளுக்கு முன்னர் டிவிட்டர் தகராறு ஒன்றிற்காக இருவரை கைது செய்ய வைத்தவர் சின்மயி. இன்றைய மயிலாப்பூர் ச.ம.உ அன்றைய போலீஸ் தலைவர் நட்ராஜின் தொடர்பை பயன்படுத்தி அதை சாதித்தார் என்று அப்போது பேசப்பட்டது. நீங்களோ நானோ கனவிலும் நினைக்க முடியாமா? ஒரு புகார் அளிக்க நாயா பேயா அலையனும்.
      2.அடுத்ததாக ஜெயா மாமியை நேரில் பார்த்து வந்து அதை குறித்து சிலாகித்து எழுதியிருந்தார். அப்போது அவர் எழுதியது இன்றும் அவரின் பிளாகில் இருக்கும் என நம்புகிறேன். தனது கட்சியின் மூத்த தலைவர்களே கூட பார்க்கமுடியாத ஜெயா சின்மயிக்கு நேரம் ஒதுக்கியிருந்தார்.
      3. மிக சமீபத்தில் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டிற்கு பிறகு அதைப்பற்றி discussion என்கிற பெயரில் விளக்கமளிக்கும் வகையில் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், ஸ்டெர்லைட் சி.இ.ஓ, சில போலீஸ் நபர்கள், சுற்றுசூழல் ஆர்வலர்கள் என்கிற பெயரில் சிலர் முதலியோர் கலந்து கொண்ட ஹைபுரொஃபைல் கூட்டம் ஒன்று சென்னையில் நடந்தது. அதில் கலந்து கொண்டவர்களில் சின்மயியும் ஒருவர். அதை தனது முகநூலில் நேரலையும் செய்திருந்தார்.

      கார்த்திகேயன்,
      நீங்கள் அப்பாவி பெண் என குறிப்பிட்டிருப்பது பகடி என்று எடுத்துக்கொள்கிறேன். நான் சின்மயி பொய் குற்றம் சாட்டுகிறார் என்று முடிவுக்கு வந்து வாதிடவில்லை. வைரமுத்துவிற்காகவும் வாதிடவில்லை. மாறாக வைரமுத்துவை சந்தேகிக்கும் உரிமையை போல சின்மயியை சந்தேகிக்கும் உரிமையும் அனைவருக்கும் இருக்கிறது. அப்படி சின்மயியை சந்தேகிப்பவர்களை ஆணாதிக்கவாதிகள் என்று முத்திரை குத்த முடியாது. அவர்கள் meeToo-க்கு எதிரானவர்களும் அல்ல என்பது தான் என் வாதம்.

      • நண்பரே !

       சின்மயியிடம் உயர் அதிகாரிகளிடம் செல்வாக்கு, கிரிமினல் ஜெயாவுடன் பார்ப்பன பாசம் மற்றும் RSS ஆதரவு இவையெல்லாம் இல்லாமல் இருந்தால்தான் ஆச்சரியம் !

       என்னுடைய எளிமையான கேள்வி ஒன்று !
       ஒரு உதாரணத்திற்கு, நிர்மலா சீதாராமன் மீது இப்படிப்பட்ட ஒடுக்குமுறை நடந்திருந்தால் நாம் யார் பக்கம் நிற்க வேண்டும் ? என்பது தான் கேள்வி. அவர் நமது எதிரி முகாமில் இருப்பதனால் விட்டு விட முடியுமா ?

       இப்போது சந்தேகம் என்னவென்றால் சின்மயி கூறுவது உண்மையா இல்லையா என்பதுதான் அல்லவா ? இதற்கான பதிலை வரிசையாக பார்ப்போம் !

       1) முதலாவதாக, சின்மயி வைரமுத்து ஒருவரை மட்டும் குற்றம் சாட்டவில்லை. அவர் பட்டியலில் பலர் இருக்கிறார்கள். (ஆனால், நண்பர் மயில்சாமி சொன்னதுபோல ஊடகங்கள் வைரமுத்துவை மட்டும் கட்டம் கட்டுகிறார்கள்)

       2) இப்போது சின்மயி தவிர பல பெண்களும் வைரமுத்துவை குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.

       3) இம்மாதிரி விசயங்களில் பெண்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என்று மருத்துவர் ஷாலினி மனநல அறிவியல் முறையில் விவரிக்கின்றார். மேலும் அவ்வாறு பொய்யான குற்றச்சாட்டை ஒரு பெண் ஒருவர் மீது கூறினாலும் அவருடன் பழகிய ஏனைய பெண்கள் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக வாதாடுவார்கள் என்கிறார். வைரமுத்து விசயத்தில் எத்தனை பெண்கள் அவருக்கு ஆதரவாக பேசியிருக்கிறார்கள் ?

       4) இதேபோல் BJP கட்சியில் சுஷ்மா ஸ்வராஜுக்கு, இந்து – முஸ்லிம் திருமணம் தவறு என்று பிரச்சினை செய்த ஒரு அதிகாரி மீது நடவடிக்கை எடுத்ததற்காக இந்து மதவெறி பொறுக்கிகள் அவரை கீழ்த்தரமாக வசைபாடினார்கள். அப்போது தோழர் அருள்மொழி போன்ற திராவிட பெண்கள் சுஸ்மாவிற்கு ஆதரவாக நின்றார்கள் . . . பேசினார்கள் !

       ஆனால் சின்மயி விசயத்தில் நமது திராவிட, முற்போக்கு ஆண்களோ ஆமை ஓட்டுக்குள் தலையை விட்டதுபோல காணப்படுவது வெட்கப்பட வேண்டிய ஒன்று.
       (பாரதிராஜாவின் பதட்டம் கூட வெளிப்படையாக தெரிகிறது)

       இதற்கு “ஆணாதிக்கம்” என்று பெயர் சூட்டாமல் வேறு என்னவென்பது ?

       சின்மயியை பாராட்டுவோம் . . !
       அவருக்குத் தோள் கொடுப்போம் . . . . !!

       • கார்த்திகேயன்,
        /நிர்மலா சீதாராமன் மீது இப்படிப்பட்ட ஒடுக்குமுறை நடந்திருந்தால் நாம் யார் பக்கம் நிற்க வேண்டும் ? /
        “நடந்திருக்கிறது” என்று முடிவுக்கு வந்தபிறகு நிச்சயம் சீத்தாரமன் பக்கம் தான் நிற்க வேண்டும்.

        //இப்போது சந்தேகம் என்னவென்றால் சின்மயி கூறுவது உண்மையா இல்லையா என்பதுதான் அல்லவா ? //

        பிரச்சணை அதுவல்ல. சின்மயி கூறுவது உண்மையா பொய்யா என்பது குறித்து நான் விவாதிக்கவில்லை. அப்படி உண்மையா பொய்யா என்று சந்தேகிக்கும் உரிமை இருக்கிறதா இல்லையா? அந்த உரிமையை அங்கீகரிக்க வேண்டாமா?
        நீங்கள் சின்மயி கூறுவது சரி என்பதற்கு 4 விவரங்களை கூறியிருக்கிறீர்கள் அல்லவா? அதுபோல சின்மயி பொய் சொல்கிறார் என்பதற்கு ஒருவர் 4 விவரங்களை சொன்னால் அவர் ஆணாதிக்கவாதியா?
        வாதமே கிடையாது. மாமியை எதிர்த்தா ஆணாதிக்கவாதி தீர்ப்புதானா?

        //இம்மாதிரி விசயங்களில் பெண்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என்று மருத்துவர் ஷாலினி மனநல அறிவியல் முறையில் விவரிக்கின்றார்//
        அப்படியானால் ஜெயலலிதா மனநல அறிவியலுக்கே மெடிக்கல் மிராக்கிள் என்று புரிந்துகொள்ள வேண்டுமா?.

        /சின்மயி வைரமுத்து ஒருவரை மட்டும் குற்றம் சாட்டவில்லை. அவர் பட்டியலில் பலர் இருக்கிறார்கள்/
        சின்மயி பொய்சொல்ல மட்டார். ஏனென்றால் அது தான் மனநல ‘அறிவியல்’ என்று முன்முடிவுடன் தீர்ப்பளித்த பிறகு சின்மயி பட்டியலில் பலர் இருந்தால் என்ன ஒருவர் இருந்தால் என்ன?. அந்த ‘அறிவியல்’ பூர்வமான முன்முடிவு தான் உங்களை சின்மயி குறித்து சந்தேகம் எழுப்புபவர்களை ஆணாதிக்கவாதிகள் என்று கருத வைக்கிறது. அந்த அறிவியலில் கூடவே செவப்பா இருக்கிறவர்கள் என வார்த்தையை சேர்த்துவிடுங்கள் புண்ணியமா போகும்.

        • மனோஜ்,

         //சின்மயி கூறுவது உண்மையா பொய்யா என்பது குறித்து நான் விவாதிக்கவில்லை. அப்படி உண்மையா பொய்யா என்று சந்தேகிக்கும் உரிமை இருக்கிறதா இல்லையா? //

         ‘உரிமை’ இருக்கிறது. ஆனால் அந்த உரிமையை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில் தான் பிரச்சினை.

         சின்மயி ஒரு பார்ப்பன பெண். RSS ஆதரவாளர் என்று கூட வைத்துக்கொள்வோம். அவர் தனக்கு பாலியல் வன்முறை நடந்ததாக குற்றம் சாட்டுகிறார். நாம் அவருக்கான நீதிக்காக துணை நிற்கப் போகிறோமா ? இல்லை அவரை சந்தேகப்படுவதற்கான உரிமைக்காக போராடப் போகிறோமா ? இது தான் கேள்வி.

         ஒடுக்கப்பட்டோருக்கு இரட்டை வாக்குரிமை கேட்ட அம்பேத்கர் பக்கம் நிற்கப் போகிறோமா ?அல்லது ஒருவருக்கு ஒரு வாக்கு அதுதான் ‘ஜனநாயகம்’ என்று பேசிய காந்தி பக்கம் நிற்கப் போகிறோமா ?

         எனக்குகூட ‘சின்மயி ஒரு பாப்பாத்தி’, ‘பாப்பாத்திகளை எக்காலத்திலும் நம்பக்கூடாது’ என்று கூறி நம் ‘கறுப்பனை’ காப்பாற்ற ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் அண்ணல் அம்பேத்கரும், தந்தை பெரியாரும் இருபுறமும் நின்று கொண்டு என்னைப் பார்த்து ஏளனமாக சிரிப்பது போல பிரம்மை ஏற்படுகிறதே . . . என்ன செய்ய . . .

         • /‘உரிமை’ இருக்கிறது. ஆனால் அந்த உரிமையை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில் தான் பிரச்சினை./

          நன்றி.
          /நாம் அவருக்கான நீதிக்காக துணை நிற்கப் போகிறோமா ? இல்லை அவரை சந்தேகப்படுவதற்கான உரிமைக்காக போராடப் போகிறோமா ? இது தான் கேள்வி./
          சின்மயியை சந்தேகப்படுவதையே ஆணாதிக்கம், அறிவியலுக்கு எதிரானது என்று ஜனநாயக உரிமையையே மறுக்கும் போது அந்த உரிமைக்காக பேசுவதும் தேவையானது.ஒரு புகாரில் இரு தரப்பினரையும் சந்தேகிக்க வேண்டியது அடிப்படை. அதை மறுப்பது இயற்கை நீதிக்கு எதிரானது. ஒரு வேளை வைரமுத்து யோக்கியர் என்று சொன்னாலும் அது தவறுதான்.

          /ஒடுக்கப்பட்டோருக்கு இரட்டை வாக்குரிமை கேட்ட அம்பேத்கர் பக்கம் நிற்கப் போகிறோமா ?அல்லது ஒருவருக்கு ஒரு வாக்கு அதுதான் ‘ஜனநாயகம்’ என்று பேசிய காந்தி பக்கம் நிற்கப் போகிறோமா ?/

          தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது.proven. மாமிக்கு அநீதி இழைக்கப்பட்டதா என்பது சந்தேகத்திற்குரியது. இழைக்கப்பட்டிருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். அப்படி சந்தேகிக்கும் உரிமையை கூட மறுத்துவிட்டு மாமிக்காக வாதாடுவது சரியா. சாதி வர்க்க பார்வையில்லாமல் பெண்கள் என்று பொதுவரையறுக்குள் வைத்து நீங்கள் பார்ப்பதால் சின்மயியை உழைக்கும் பெண்களுக்கு unconditional support தருவது போல இவருக்கும் தர வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அங்கு தான் நீங்கள் miss செய்கிறீர்கள் என நினைக்கிறேன். பார்ப்பன ஆளும்வர்க்க பெண்கள் பொய் குற்றச்சாட்டு கூட சொல்லாலாம். அப்படி சொல்கிறார் என்று சொல்லவில்லை.அதற்கும் வாய்ப்பு இருக்கிறது. சாதாரண உழைக்கும் பெண்களை போல சந்தேகத்திற்கிடமில்லாமல் சின்மயி உண்மையை சொல்கிறார் என்று நம்ப தேவையில்லை. we need to be more cautious.

          /நம் ‘கறுப்பனை’ காப்பாற்ற ஆசையாகத்தான் இருக்கிறது/
          இதுவும் தவறு. இந்த ஆசையும் தவறு. நீங்கள் இப்படி ஆசைப்படுவதும், சின்மயி சொல்வது தான் உண்மை அறிவியல் என்று அப்பாவித்தனமாக நம்புவதும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். இப்படி கருப்பு வெள்ளையாக நீங்கள் பார்ப்பதால் தான் தெளிவான விவரங்களே இல்லாத போதும் உங்களை நீதிபதி ஸ்தானத்தில் அம்ர்த்திகொள்கிறீர்கள். உங்களுக்கு கிடைத்திருக்கும் அற்ப விசயங்களை கொண்டு தீர்ப்பளிக்கிறீர்கள். உங்கள் தீர்ப்பை சந்தேகிப்பவர்களை ஆணாதிக்கவாதி என்கிறீர்கள். சின்மயி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர் அவரை சந்தேகிப்பது ஆணாதிக்கம் என்பதும், வைரமுத்துவை காப்பாற்ற நினைப்பதும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். கருப்பு வெள்ளையாக பார்க்க வேண்டாம் என்கிறேன் நான். நம் கண்களுக்கு உண்மை தெளிவாக தெரியவில்லை என்றால் அதை விளங்கிக்கொள்ள இருவரையும் கேள்வி கேளுங்கள். சின்மயியை கேள்வி கேட்பவர்களை ஆணாதிக்க வாதி என்று ஒதுக்கிவிட்டு trail நடத்துவது fair trail அல்ல.

          • i got your point after watching press conference and pandey interview. All these powerful mens feel unsecure and I think it’s needed. I still feel my argument is valid but it’s time for questioning those men not those womens. I was wrongly assumed nobody questioning chinmayi. Because that was trending few days back. But now i can feel a change in tide.. Men from all political spectrum joins hands against this…So as you said it’s our duty to stand behind the oppressed.
           Thanks for spending ur time to explaining

          • புரிந்து கொண்டதற்கு நன்றி நண்பரே !
           இதில் வருத்தம் என்னவென்றால் முற்போக்கு பேசும் ஆண்கள் கூட #மீ டூ வை ஆதரிக்காததுதான்.
           நான் பெரிதும் மதிக்கும் எழுத்தாளர் மதிமாறன் கூட இந்த பெண்களுக்கு ஆதரவாக பேசவில்லை.

 3. நான் மார்க்சீயம் கற்று வருகிறேன்.. பெரியாரிசமும் கற்று வருகிறேன்.. ஆனால் எனக்கு இந்தப் பதிவு ௐருதலை பட்சமாக தோன்றுகிறது.. கட்டுறையில் உள்ளவற்றை ஏற்கலாம்.. ஆனால் பெண்கள் ஆண்கள் மேல் வைக்கும் பொய் குற்றசாட்டையும் கட்டுறை ஏன் விவாதிக்கவில்லை..????

 4. சுப வீ மீது கவிஞர் தாமரை குற்றசாட்டு வைத்ததாக சமுக ஊடகங்களில் செய்தி வந்தது.அது உண்மையா எனத் தெரியவில்லை. //MeToo இயக்கத்தை சின்மயி Vs வைரமுத்து பிரச்சினையாக்கி நீர்க்கச் செய்த ஊடகங்கள், மயிலாப்பூர் பார்ப்பன இசைக்கலைஞர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்தோ, ஊடகங்களில் நடக்கும் பாலியல் ஒடுக்குமுறை குறித்தோ தவறியும்கூட பேசமாட்டார்கள். //100% உண்மை.பார்ப்பனியம் பெண்களையும் சூத்திரர்களாகத்தான் பார்க்கிறது என்ற புரிதல் திராவிடம் பேசும் பல அறிவுஜீவிகளுக்கு இல்லை.இந்த விஷயத்தில் மருத்துவர் ஷாலினியின் நிலைப்பாடுதான் தெளிவாக இருக்கிறது.அவருக்கு இனி திராவிட இயக்க மேடைகளில் இடம் கிடைக்காது என நினைக்கிறேன்.வைரமுத்து ஒரு ஆரம்பம்தான்.சினிமா உலகில் இன்னும் பல பெரிய மனிதர்கள் மாட்டமால் இருக்கிறார்கள்.

 5. சினிமாக்களில் அவிழ்த்து போட்டு ஆடுவார்கள், படம் நடிக்க என்ன வேண்டும் என்றாலும் செய்யும் இந்த நடிகைகள் மீ டூ என்று போடுவது வேடிக்கை

 6. பெண்கள் குரல் எழுப்பவேண்டும்; ஆணாதிக்கத்தை கேள்வி கேட்க வேண்டும்; எதிராகப் போராடவும் வேண்டும் – இதில் மாற்றுக்கருத்து இல்லை. நாம் இந்த #மீ டூ இயக்கத்தின் போதாமையை, இயலாமையை, பலவீனத்தையே கேள்விக்குள்ளாக்குகிறோம். ஒரு ஆணின் மீது சுமத்தப்படும் பாலியல் குற்றச்சாட்டு, அதை அந்த ஆண் மறுக்கிறார் எனும் போது, எதை வைத்து யாரை குற்றம் சாட்ட முடியும்? சமூக வெளியில் இவ்வாறு இரு நபர்கள் கத்திக்கொள்வது, கூச்சலிடுவது எங்கே போய் முடியும்? யார் பஞ்சாயத்து செய்வது? #மீ டூ என்ற ஹேஷ் டாக்கோடு வைக்கப்படும் பாலியல் குற்றச்சாட்டுகள் அந்த ஆணின் மீதான தீர்ப்பாகவே வெளி வருகின்ற தார்மீகத்தை யார் கொடுத்தார்கள்; அதற்கு அப்படிப்பட்ட சட்டத்திற்கு அப்பாற்பட்ட தார்மீக அதிகாரம் கொடுக்கப்படுவதை எப்படி ஏற்கமுடியும்? (ஆணாதிக்கத்தை கேள்விக்குள்ளாக்குவதைப் போலவே இந்த எதேச்சதிகாரத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறோம்). சின்மயி – வைரமுத்து #மீ டூ புகாரில், சின்மயி தொடுத்திருக்கும் குற்றச்சாட்டுகளிலேயே தமிழ்நாடு பார்ப்பனர் சங்க நாராயணின் மீதான புகார் தான் மிகவும் கொடூரமானது. ஆயினும் சின்மயி முதலி வைத்தது வைரமுத்து மீதான அதுவும் நேரடியான புகார் அல்ல. சின்மயிக்கு அதிக நெருக்கடி வரவும் உடனே வேறு சிலரின் பெயரைச் சொல்கிறார். அந்தப் புகார் வைரமுத்து மீதான புகாரை விட கொடுமையானது. ஆயினும் சின்மயி ஏன் வைரமுத்துவைத் தேர்ந்தெடுக்கிறார்? ஏற்கனவே வைரமுத்து மீதான பார்ப்பனர்களின் வஞ்சம் என்ற பின்னணியில், சின்மயியின் சுசிலீக்ஸ் கொடுமைகளின் பின்னணியில் இந்தப் புகார் பார்ப்பன அரசியல் கொண்டதாகவே சந்தேகப்பட வைக்கிறது. #மீ டூ வில் பார்ப்பனர்களுக்கு சலுகை காட்டப்படுகிறது. ஏன்? இது எந்த வகையான நீதி?

  பெண்கள் (எல்லாப் பெண்களும் ஆணாதிக்க சமூகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தான்), ஆணின் ஆதிக்கத்தை எதிர்ப்பது வரவேற்கத்தக்கது, தேவையானது. அந்த ஆணுக்கு அதிகாரத்தை/ஆதிக்கத்தைக் கொடுத்த மதத்தையும், ஜாதியையும் சமூகக் கட்டமைப்பையும் கேள்விக்கு உள்ளாக்க வேண்டாமா? அதை கேள்வி கேட்காமல், அதை எதிர்த்துப் போராடாமல், வெறும் ஆணை மட்டும் கேள்விக்கு உள்ளாக்கும் போது, அவன் தனக்கு இந்தச் சமூகம் கொடுத்திருக்கும் அதிகாரத்தோடு தன் மீது எழுப்பப்பட்ட கேள்வியை எதிர்ப்பான். அது பொது வெளியில் ஆண் – பெண் தனிநபர் போராட்டமாக கூச்சலாக, குழப்பத்தையே ஏற்படுத்தும்.

  இந்தச் சமூகத்தில் தொடர்ந்த கூச்சலையும் குழப்பத்தையுமே ஏற்படுத்தும் இந்த #மீ டூ திட்டம் ஒரு தீர்வை நோக்கிப் பயணிக்காது!
  #மீடூ வில் அரசியல் இல்லை! அது தமிழ்நாட்டில் சின்மயி-வைரமுத்து விவகாரத்தில் பார்ப்பன ஆதிக்க அரசியல் வடிவம் எடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

 7. எனக்கு இந்தப் பதிவில் வருத்தம் என்னவென்றால், தமிழ்நாடு பார்ப்பனர் சங்க நாராயணன் படத்தை ஏன் போடவில்லை? வினவிலும் இப்படி பார்ப்பனரை மறைக்கும் பணி ஏன்? ஒரு எதார்த்தமான கேள்வியைக் கேட்ட சுப.வீயை அநியாயமானவராகச் சித்தரிக்க அவர் படம் போட்டு இருக்கிறீர்கள்! ஏன்?

  • சுப.வீ. அவர்கள் கூறிய,
   ‘சார் ஒரு கம்ப்ளைண்ட்…ஆனா, அது நடந்தது 16 வருஷத்துக்கு முன்ன”
   என்பதை எப்படி இலகுவாக எடுத்துக் கொள்ள முடியும் ?
   இந்த பதிவின் விளைவுகளை கட்டுரையாளர் நந்தினியே குறிப்பிடுகிறாரே !
   //மூத்தவரே சொல்லிவிட்டார் அல்லவா, இளையவர்கள் சும்மா இருப்பார்களா? அடுத்து லிஸ்ட்ல யாரு என நாக்கை தொங்கவிட்டு கேட்கிறார்கள். இத்தனை வருசம் ஆகியும் நம்ம மேல யாரும் மீ டு குற்றச்சாட்டு சொல்லவில்லை என அங்கலாய்க்கிறார்கள். பாலியல் கதைகளை எழுதி தங்களுடைய மன வக்கிரங்களை சொரிந்து கொள்கிறார்கள். //

   இந்த பதிவை சுப.வீ. ஏன் நீக்கினார் என்று விளக்க வேண்டும். அதற்கான வருத்தமும் தெரிவிக்க வேண்டும்

   • //அதற்கான வருத்தமும் தெரிவிக்க வேண்டும்//
    இந்த பதிவை போட்டதற்காக வருத்தமும் தெரிவிக்க வேண்டும் என்று வாசிக்கவும்

 8. தோழர் ஞானசண்முகம்

  //பெண்கள் குரல் எழுப்பவேண்டும்; ஆணாதிக்கத்தை கேள்வி கேட்க வேண்டும்; எதிராகப் போராடவும் வேண்டும் //

  //இந்தச் சமூகத்தில் தொடர்ந்த கூச்சலையும் குழப்பத்தையுமே ஏற்படுத்தும் இந்த #மீ டூ திட்டம் ஒரு தீர்வை நோக்கிப் பயணிக்காது!//

  பாதிக்கப்பட்ட பெண்களை பின்னர் என்ன செய்யச் சொல்லலாம் ?
  காவல்துறையில் புகார் கொடுக்கச் சொல்லி சிபாரிசு செய்யலாமா ?

  //(ஆணாதிக்கத்தை கேள்விக்குள்ளாக்குவதைப் போலவே இந்த எதேச்சதிகாரத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறோம்). //

  #MeToo எதேச்சதிகாரமென்றால் இதே பார்வை கொண்டு வன்கொடுமை சட்டத்தையும் எதேச்சதிகாரம் என்று சொல்லலாமே !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க