ருச்சிகா நரேன் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் இந்தியில் வந்த படம் கில்ட்டி. எப்போதும் கல்லூரி வாழ்க்கையை குதூகலமாக எடுக்கும் கரண் ஜோகர் இந்த படத்தை சற்றே வித்தியாசத்துடன் கொடுத்து இருக்கிறார் . டெல்லி ஸ்டைன் மார்ட்டின் கல்லூரியில் படிக்கும் மூன்று மாணவர்களுன் கதைக்களம் நகர்கிறது. டெல்லியில் இருக்கும் மிக பிரபலமான கல்லூரி அது. டெல்லியின் பெரிய கல்லுரி என்பதாலே எல்லா பிரிவை சேர்ந்த மாணவர்களும் அங்கே இருக்கின்றனர் .

கல்லூரிதான் உலகை பற்றி நாம் கற்கும் முதல் அனுபவமாக அமைகிறது. வளாகத்தில் பெரும் பணக்கார வீட்டு விஜய் பிரதாப் சிங் (வி.ஜே), இசை குழுவை ஒன்றை உருவாக்கி பாப் பாடல்கள் மூலம் பிரபலம் ஆகிறான். அவனின் காதலியாக நான்கி. நான்கி இசை குழுவில் பாடல் வரிகள் எழுதுபவளாகவும், பெண்ணியவாதியாகவும் தெரிகிறாள். அவளின் உடையும், பேச்சும், அதை ஒட்டி இருக்கிறது. தனபாத்தை சேர்ந்த இந்தி மொழி பேசும் தணு, இட ஒதுக்கீட்டின் மூலம் கிடைத்த வாய்ப்பில் கல்லூரியில் படிக்கிறாள். வழக்கமாக ஒரு ஏழை வீட்டு பெண் எப்படி இருப்பாளோ அப்படி இல்லாமல் தன்னை உயர் தட்டு மாணவர்களுக்கு இணையாக காட்டிக் கொள்ள முயல்கிறாள் தணு. இது கீழிருப்பவர்கள் மேலே இருப்போரை நோக்கி போகும் மேல்நிலையாக்கமாகவும் சொல்லலாம். கூடவே தணு, வி.ஜெ மீது ஈர்ப்பு இருப்பதாக வெளிக்காட்டி கொள்கிறாள்.

ஒரு பெண் ஆண் மீது காட்டும் அன்போ அல்லது ஈர்ப்போ எதுவாயினும் சமூகத்தின் பொது புத்தி பெண்களை மட்டுமே கேள்வி கேட்பதாகவே உள்ளது. தணு வி. ஜே உடனான நெருக்கம் காரணமாக நான்கி தணுவின் மீது கோபம் கொள்கிறாள். பின்பு ஒரு நாள் காதலர் தினத்தன்று இசை நிகழ்ச்சியின் இரவில் வி.ஜே மற்றும் அவனது நண்பர்களும் சேர்ந்து குடிக்கின்றனர். அப்போது தணுவும் வி.ஜே -யுடன் குடித்து விட்டு விடுதிக்கு செல்கிறாள்.

அன்றிரவே வி.ஜே தன்னை பாலியில் பலத்துகாரம் செய்தாக கல்லூரியின் தலைமை பேராசிரியரிடம் தணு சொல்கிறாள். இதை தொடந்து வி.ஜே வின் வீட்டிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசுக்கு வழக்கு போகிறது. போலீசின் மூலம் தணுவிடம் சமரசம் பேசப்படுகிறது. ஆனால் தணு மறுக்கிறாள். இதனை தொடர்ந்து வி.ஜே மீது வழக்கு பதியப்படுகிறது. இப்போது தவறு யார் மீது என்பதை பொதுப்புத்தியிலிருந்து பார்த்தால் தனுதான் குற்றவாளியாக பார்க்கப்படுவாள். ஆனால் கல்லூரியில் செயல்படும் ஒரு அமைப்பு தனுவிற்கு ஆதரவாக நிற்கிறது. ஏறக்குறைய #Metoo தொடங்கிய ஓரு வருடத்திற்கு பின் இந்த சம்பவம் நடப்பதாக காட்சிப் படுத்திருக்கிறார் இயக்குநர். இங்கு சமுகத்தின் கட்டமைப்பில் பெண்ணின் ஒழுக்கம் சார்ந்த பிரச்சனை அவளின் பின்புலம் சார்ந்தே பார்க்கப்படுகிறது. பெண்கள் ஆடை , குடிப்பழக்கம் போன்றவற்றை கேள்வி கேட்கும் சமூகம் ஆண்களை அதிலிருந்து விட்டு விடுகிறது. உண்மையை பாதிப்பு அடைந்தவர்களின் பார்வையில் பார்க்கவும் முற்படுவதுதில்லை.

வி.ஜே -வின் தந்தை அரசியல்வாதி என்பதால் ஒரு பெரிய வழக்கறிஞர் மூலம் விசாரணை நடத்தப்படுகிறது. வி.ஜே -வின் நண்பர்கள் எல்லோரிடமும் கேள்வி முன் வைக்கப்படுகிறது. அவனது நண்பர்களின் பதில்கள் தணுவின் நடத்தை அதாவது அவளது குடிப்பழக்கம், உடைப்பழக்கம் போன்றவற்றை வைத்து அவளது ஒழுக்கத்தை வரையறுக்கின்றனர். ஆடை என்பது ஒருவருடைய தேவை மற்றும் விருப்பம் சார்ந்த சுதந்திரத்தை வைத்து உருவாகிறது. அதை வைத்தும் குடிப்பழக்கத்தை வைத்தும் தணுவின் மீது குற்றம் சாட்டுவது ஆண் ஆதிகத்தின் மனோபாவம். அதுவும் இந்து பேசும் மாநிலங்களில் பார்ப்பனிய நிலவுடமை சமூகத்தில் இந்த ஆணாதிக்கம் கடுமையாகவே வெளிப்படுகிறது. பெங்களூருவில் பஃப்புகளுக்கு சென்று இந்துத்துவா அமைப்புகள் அங்கிருக்கும் பெண்களை தாக்குவது இதற்கு ஒரு சான்று.

படத்தின் துவக்கத்தில் பெண் சார்ந்த பிரச்சனைகளுக்காக வரிந்து கட்டிப் பேசும் நான்கி தற்போது குற்றம் தன் காதலன் மீது என்றவுடன் தணுவை கைநீட்டி கன்னத்தில் அறைவதோடு Bitch என்றும் திட்டுகிறாள். காதலின் சுயநலம் அவளது பெண்ணியப் பார்வையை மறைத்து விடுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக நிற்கவேண்டிய பொறுப்பை கைகழுவச் செய்து விடுகிறது. ஆனால் ஆரம்பத்தில் அப்படி இருக்கும் நான்கி பின்னர் மெல்ல மெல்ல குற்றவுணர்வுக்கு ஆளாகிறாள். தொடர் விசாரணையும் நீதிமன்ற விவாதங்களும் நான்கிக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. வழக்கறிஞர் கேட்கும் கேள்விக்கு பதிலை தேடுகிறாள் நான்கி. ஆனால் அவளால் பதில் சொல்ல இயலவில்லை. அதனாலேயே வி.ஜே மீது குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுவிக்கப் படுகிறான். பின்னர் பாதிப்புக்குள்ளான தணுவின் மீது மான நஷ்ட வழக்கு போடுகிறார்கள். தணுவோ கல்லூரியை விட்டு போகிறாள். அன்றிரவு நடக்கும் ஓரு பார்ட்டியில் விட்டுப்போன கேள்விக்கான விடையை கண்டுபிடிக்கிறாள் நான்கி. மறுநாள் நடக்கும் இசை நிகழ்ச்சியில் தணுவை மேடை ஏற்றுகிறாள் நான்கி. அங்கே உண்மை உடைகிறது. விஜே தான் குற்றவாளி என்பது பொதுவெளிக்கு வருகிறது.

படிக்க:
♦ விமான நிலையம் தனியார்மயம் : இலாபம் வந்தால் அதானிக்கு ! நட்டம் வந்தால் அரசுக்கு !
♦ தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சையை இலவசமாக்கு ! நீதிமன்றத்தில் PRPC மனு !

சிறு வயதில் தனது காப்பாளராக இருக்கும் பேராசிரியர் தன்னை பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்தியதை சொல்கிறாள் நான்கி. இங்கு தான் படத்தின் பெயர் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. “கில்ட்டி” யாருக்கானது? குற்றம் செய்தவர் மீதா அல்லது குற்றத்தில் பாதிக்கப்பட்டவர் மீதா என்பதை கில்ட்டி பேசுகிறது. சில போலி முற்போக்குவாதிகள் (Pseudo progressive) உடனே Consent sex என குரல் கொடுப்பதை பார்க்க முடிகிறது. Consent Sex என்பது இரு நபர்களுக்கு இடையான private space ஆக இருக்கும் வரை அதன் மீது யாருக்கும் எந்த பாதிப்பு இல்லை. இதில் தணுவிற்கு வி.ஜே மீது உள்ளது காதலோ அல்லாது காமமோ எதுவாயினும் இருவருக்கு மட்டும் உள்ளவரை அது தவறாக தெரிவதில்லை. இருவரும் அதை உடன்பட்டு செய்யும் வரை பிரச்சினையுமில்லை. அதை காணெளி எடுத்து பொதுவெளியில் பகிர்வது, நண்பர்கள் முன்னிலையில் பாலியில் வன்முறைக்கு உட்டப்படுத்துவது, பாலியில் ரீதியான குறுஞ்செய்திகளை பிறிரிடம் பகிர்ந்து கொள்வது இவையெல்லாம் தெரிவிப்பது என்ன? பெண்ணை தனக்கு பணிந்தே ஆக வேண்டிய பண்டமாக கருதும் ஆணாதிக்க வக்கிரமின்றி வெறென்ன?

Consent sex குறித்து குறிப்பான இலக்கணமென்ன? ஆணாதிக்கம் நிலவும் சமூகத்தில் இந்த வார்த்தை பெண்ணுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்குமா என்ன? ஒவ்வொருக்கும் மாறுப்படும் இந்த வார்த்தை இளைஞர்களுக்கிடைய தவறான புரிதலை ஏற்படுத்தியிருப்பது உண்மை. இதிலும் தணு வி.ஜேவுடன் இருக்க நினைத்தது உண்மை எனில் அதை பயன்படுத்தி நண்பர்கள் முன் கீழ்த்தரமாக வி.ஜே நடந்து கொள்வது பாலியில் வன்முறையின் உச்சம். சமீபத்தில் நடந்த பொள்ளாச்சி சம்பவம், கன்னியாகுமாரி காசி போன்ற பாலியில் வன்முறை எல்லாம் பெண்கள் மீதான ஆண்களின் பார்வை எவ்வளவு கீழ்த்தரமாக இருக்கிறது என்ப்தை தெரிவிக்கிறது. காசி ஒரு விசாரணையில் ‘பெண்கள் எல்லாம் என் அழகில் மயங்கி என்னுடன் இருந்தார்கள்…’ என்று எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் பேச காரணம் ஆண் அப்படி தான் இருப்பான் என்ற ஆண் ஆதிக்க சமூகத்தின் வெளிப்பாடு. அதாவது பெண்களுக்கு தான் அறிவு இல்லை என்று சொல்கிறான் காசி.

இதை போன்றே பொள்ளாச்சி சம்பவத்தின் காணெளியில் அந்த பெண் “உன்னை நம்பி தானே வந்தேன்…” என்று அழுவது தான் யதார்த்த பெண்களின் பிம்பம். அதை வைத்து பல்வேறு ‘அறவேக்காடுகள்’ எல்லாம் இங்கே கருத்துகளை சொல்லிக் கொண்டிருக்கின்றனார். இங்கே ஆண்கள் ஏன் இப்படி விலங்குகளாய் இருக்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்பாமல், பெண்களை மட்டும் பொறுப்பாய் இருக்க வேண்டும் என்று உபதேசிக்கின்றனர். சமீபத்தில் திரைத்துறையில் வைரமுத்து பெண்களை பாலியில் சீண்டலுக்கு அழைத்தது குறித்து பாடகி சின்மயி #Metoo இயக்கத்தின் மூலம் வெளிக்கொண்டுவந்தார். உடனே “ஏன் இவ்வளவு கால தாமத்திற்கு பிறகு அவர் மீது குற்றச்சாட்டு…” என்று தொடர் கேள்விகளை பலரும் அப்போது கேட்டனர்.

உடலின் தேவைக்கும் உள்ளத்தின் உணர்வுக்கும் உள்ள வேறுபட்டை பிரித்தரியாமல் காதல் என்ற வகையில் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியில் வன்முறை ஆபத்தில் முடிகிறது. இந்த படத்தில் நான்கி  தான் பாலியல் வன்முறை செய்யப்பட்டு இருக்கிறேன் என்பதை வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் உடைக்கிறார். இந்தியாவில் நான்கில் ஒரு குழந்தை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறது அதிலும் உலகிலேயே இந்தியாவில்தான் அதிகமான குழந்தைகள் மீது பாலியல் வன்முறை நடத்தப்படுவதாகவும் அதுவும் தெரிந்தவர்கள் மூலம் நடப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இயற்கை ஆண் பெண் தேவைகளை சார்ந்தே கட்டமைப்பு உள்ளது. அதுவே அவர்களை வீழ்த்தும் ஆயுதமாக இச்சமூகம் பயன்படுத்துமேயானால் இந்த சமுகத்தின் மீது  கேள்விகளை முன் வைக்கிறது கில்ட்டி  எனும் இத்திரைப்படம்.

கியாரா அத்வாணியின் நடிப்பும் கௌசிக் மௌனிர் வரிகளும், பின்னணி இசையும் இரண்டு மணி நேரம் நம்மை படத்தினுள் அழைத்து சொல்கிறது. படத்தில் சில தவறுகள் இருப்பினும் பெண்கள் சார்ந்த பிரச்சனைகளை இயக்குனார் நன்றாக கையாண்டு இருப்பது பாராட்டுக்குரியது. சமீப காலமாக இதுபோன்ற படமுயற்சியில் பாலிவுட் திரை இறங்கியுள்ளது, அதில் தப்பட், பிங்கு போன்ற படங்கள் பெரும் வரேவேற்பை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. படம் பார்த்து உங்கள் கருத்துகளையும் பதிவிட விழைகிறேன்.

சிந்துஜா சமூக ஆர்வலர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க