திரை விமர்சனம்: அனல் மேலே பனித்துளி

நாம் போராட வேண்டும் என்று பெண்களுக்கு சொல்வது, அதை மீறி வர வேண்டும் என்று நாம் சொல்வது உபதேசமாக இருக்குமே ஒழிய.. அதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதே, சமூகத்தை மாற்றுவதே தீர்வாக இருக்கும்.

சென்னையில் விளையாட்டு உபகரணங்கள் விற்கும் கடை ஒன்றில் மேலாளராக இருக்கும் கதாநாயகி மதி. தன்னுடன்  வேலைப் பார்க்கும் பெண் ஒருவரின் திருமணத்திற்காக கொடைக்கானல் செல்கிறார். அங்கே மூன்று நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிறார். ஏற்கெனவே மதியைப் பழிவாங்கக் காத்திருக்கும் சில ஆண்கள்தான் குற்றவாளிகள் என்ற கோணத்தில் விசாரணையைத் தொடங்குகிறது போலீசுத்துறை. ஆனால், அந்த போலீசுதுதுறையை சேர்ந்த மூன்று பேரால்தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறாள் என்பது அவளுக்கு தெரிய வருகிறது. குற்றவாளிகளுக்குச் சட்டப்படி தண்டனை வாங்கிக் கொடுத்தாரா என்பதே படத்தின் கதை.

பெண்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுவதும், கொடூரமான தாக்குதலுக்குள்ளாக்கப்படுவதும் தற்போது அதிகரித்து வருகின்றன. இச்சூழ்நிலையில் டெல்லியில் “living together” உறவு முறையில் வாழ்ந்த ஷ்ரதா என்ற 27 வயது பெண்ணை, அவனுடைய காதலன் கொலை செய்து 30 துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. ஆணவ கொலைகள், காதலிக்க மறுத்ததால் கொலை, குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை பாலியல் இலக்காகியிருக்கும் இந்த சம கால சூழலில், பெண்ணை தன்னுடைய உடைமையாக பார்க்கும் கேடுக்கெட்ட கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இத்தருணத்தில் பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து இத்திரைப்படம் வெளியாகியுள்ளது.

படிக்க : திரை விமர்சனம்: பொன்னியின் செல்வனை குப்பையில் வீச வேண்டும் | மருது வீடியோ

பாலியல் ரீதியில் பாதிக்கப்படும் பெண்கள் சந்திக்கும் மன உளைச்சல்கள், உளச்சிக்கல்கள் போன்ற விசயங்களை இந்த படம் பேசுகிறது. மேலும் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளியாக மாற்றும் இந்த சமூக உளவியலை இந்த படம் கேள்வி கேட்கிறது. தவறு செய்தவன் தான் குற்றவாளி, எந்த வகையில் பாதிக்கப்பட்டவள் தவறானவள் என்ற கேள்வியை மீண்டும் மீண்டும் இந்த படம் கேட்கிறது. மிகவும் சரியான பார்வை.

அவளின் உடலே எப்படி அவளுக்கு எதிரான ஆயுதமாக மாற்றப்படுகிறது. ‘‘உசுரு பெருசா, மானம் பெருசான்னா, மானம்தான் பெருசு. ஆனா, அந்த மானம் எதுல இருக்கு, என் உடம்புலயா? நான் வாழற வாழ்க்கையிலதானே?’’ என கதாநாயகி ஆண்ட்ரியா பேசும் வசனங்களும், தன் உறவினர்களிடம் கால மாற்றம் குறித்து கதாநாயகன் ஆதவ் கண்ணதாசன் பேசும் வசனங்களும் சமூகத்தின் பார்வை மாற வேண்டும் என்கின்ற முற்போக்கான வசனங்களும் வரவேற்கத்தக்கது.

பாதிக்கப்பட்ட ஆண்ட்ரியாவை, குற்றவாளிகள் இருக்கும் போலீஸ் ஸ்டேசனிலேயே அந்த நள்ளிரவில் பெண் காவல் ஆய்வாளர் அனுபமா குமார் விட்டுச் செல்வது, பின்னர் தேடாமலே இருப்பது, அவர் பேசிய வசனத்திற்கும் காட்சிக்கும் துளியும் பொருந்தவில்லை. பெண் காவலர்கள் நல்லவர்கள் என்பது போலும், பெண் நீதிபதிகள் நல்லவர்கள் என்பது போலும் காட்சிகள் படத்தில் வருகிறது. இந்த அரசு கட்டமைப்பில் ஆண், பெண் என்று பார்க்க முடியாது. அதிகாரத்தில் இருக்க கூடிய பெண்கள் அந்த சட்ட வரம்பிற்குள் நின்று தான் வேலை செய்ய முடியும். ஒட்டுமொத்த சமூகமே பெண்களுக்கு எதிரானதாக, பெண்கள் வாழ தகுதியிழந்த சமூகமாக மாறிவரும் சூழலில் மேல் அதிகாரி பெண்ணாக இருந்தால் எல்லாவற்றையும் மாற்றி விட முடியும் என்பது ஒரு ஹம்பக்.

தமிழகத்தில் வாச்சாத்தி சம்பவம், சிதம்பரம் பத்மினி, அந்தியூர் விஜயா, ரீட்டா மேரி என நிறைய வழக்குகளே இதற்கு சாட்சி. போலீசு நிலையத்திலும், அரசு அதிகாரிகளாலும் நடந்த குற்றங்களுக்கு சாட்சி. மக்கள் போராட்டங்களே அரிதிலும் அரிதான வழக்குகளில் குறைந்த பட்ச தண்டனையை வாங்கி தந்திருக்கிறது என்பதே நிதர்சனம்.

இன்று பெண்களை சக மனிதராக கருதாமல், வெறும் நுகர்வு பண்டமாக கருதும் மறுகாலனியாக்க சூழலில், பெண்ணின் உடல் குறித்தும், பாலியல் பலாத்காரம் செய்யும் ஆண்கள் தான் குற்றவாளிகள் பெண்கள் அல்ல என்று ஆணித்தரமாக பேசுவதும். அதிகாரத்தில் இருக்கும் ஆண்கள்(போலீசு) மேலும் ஆபத்தானவர்கள் என்று விளக்குவதும் மிகவும் சரியான பார்வை.

ஆனால் அது மட்டுமே போதுமானது இல்லை. சட்ட ரீதியாக போராட வேண்டும் என்பதை இந்த படம் வலியுறுத்துகிறது. பெண்கள் மீதான வன்கொடுமைகளை போலீசு நிலையங்களில் பதிவு செய்ய முடியவில்லை என்பதே இந்தியா முழுவதும் இருக்கும் ஒரு யதார்த்த நிலைமை. பெண்கள் அமைப்புகள் சென்று போராடிதான் வழக்குகளை பதிவு செய்ய முடிகிறது. வழக்கு பதிந்தற்காக குடும்பத்தையே வெட்டி சாய்க்கும் சம்பவங்கள் உ.பி போன்ற மாநிலங்களில் நடக்கிறது. இதையும் இயக்குநர் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும்.

படிக்க : விக்ரம்  திரைப்பட வசூல் : மக்கள் அளித்த பணம் கவர்ச்சிக்கா? கருத்துக்கா?

நாம் போராட வேண்டும் என்று பெண்களுக்கு சொல்வது, அதை மீறி வர வேண்டும் என்று நாம் சொல்வது உபதேசமாக இருக்குமே ஒழிய.. அதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதே, சமூகத்தை மாற்றுவதே தீர்வாக இருக்கும். கதாநாயகன் இந்த படத்தில் சரியான நபராக வருகிறார். ”உன்னுடைய போராட்டத்திற்கு துணை நிற்பேன்” என்று சொல்கிறார். வரவேற்கத்தக்கது. இப்படி சமூகமே சொல்ல வேண்டும். ”நீ போராடு நாங்கள் உன்னுடன் இருக்கிறோம்” என்று அத்தகைய மாற்றங்களை நோக்கி பயணிப்போம்.

பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் பலாத்காரத்திற்கான சமூக காரணிகளை ஆழமாக நாம் பேச வேண்டும். இன்று தனியார்மய, தாராளமய, உலகமய சூழலில் பெண் ஒரு விற்பனை சரக்காக விளம்பரங்களில், திரைப்படங்களில், ஆபாச படங்களில், விளையாட்டுகளில், காட்டப்படுகிறாள். இளம் தலைமுறையினரை சீரழிக்கும், நுகர்வு வெறியை ஊட்டி வளர்க்கும் முதலாளித்துவ சீர்கேட்டை, பண்பாட்டை நாம் எதிர்த்து போராட வேண்டியிருக்கிறது. கார்ப்பரேட் முதலாளித்துவ கலாச்சாரம் என்பது லாப வெறிக்காக எதையும் பண்டமாக மாற்றுகிறது. பெண்ணின் உடலும் பண்டமாக மாற்றப்படும் சூழலை எதிர்த்து போராடி முறியடிக்காமல், இந்த குற்றங்களை தடுக்க முடியாது என்பதை நாம் பேச வேண்டும்.

அமிர்தா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க