தொடரும் பாலியல் குற்றங்கள்: மனிதனுள் வளரும் மிருகம்

சிறுவன் முதல் வயதான ஆண் வரை எவரொருவரும் பாலியல் குற்றத்தில் ஈடுபடுவதற்கான சூழலை நோக்கி தள்ளப்படலாம் என்கிற மிக அபாயகரமான சூழல்தான் இன்று சமூகத்தில் நிலவுகிறது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த சில தினங்களுக்கு முன்னால், குழந்தையின் கண்முன்னேயே தாய் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பெண்ணின் கணவர் வெளியூருக்கு வேலைக்கு சென்றதை அறிந்து இரவில் வீட்டிற்குள் புகுந்த இரண்டு காமவெறிப்பிடித்த மிருகங்கள், பத்து மாத குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி குழந்தையின் தாயான இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் மிகப்பெரிய அதிர்ச்சியையும், அச்சத்தையும் விதைத்துள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பமும் குற்றமிழைத்த மிருகங்ககளும் ஆதிக்கச் சாதியான தேவர் சாதியை சேர்ந்தவர்கள்‌. ஆனால், பாதிக்கப்பட்ட உழைக்கும் வர்க்கத்தை சார்ந்தவர்களுக்கு ஆதரவாக எந்தவொரு தேவர் சாதி சங்கமும் இதுவரை குரல் கொடுக்கவில்லை.‌ மாறாக, குற்றமிழைத்தவர்களுக்கு ஆதரவாக அவர்கள் பக்கமே நிற்பதாக தெரிகிறது.

குழந்தையின் உயிரை பணயமாக வைத்து ஒரு தாயை வல்லுறவு செய்யும், தன் இச்சையை தீர்த்துக் கொள்ளும் அளவிற்கு மனித சமுதாயம் மிருகத்தை விட கேவலமாக மாறியுள்ளது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கஞ்சா, மது போதையின் பின்னணியில் இக்குற்றம் நடைபெற்றுள்ளது.

மற்றொரு சம்பவத்தில் மயிலாட்துறை மாவட்டம் சீர்காழி அருகே 16 வயது சிறுவன் நான்கு வயது குழந்தையை வன்புணர்வு செய்ய முயற்சிக்க, அக்குழந்தை கத்தி அழுததால் குழந்தையின் தலையில் சிறுவன் கல்லால் தாக்கியுள்ளான். இக்கொடூரமான தாக்குதலில் அக்குழந்தை பலத்த காயமடைந்ததுடன் குழந்தையின் ஒரு கண் சிதைந்துள்ளது.

மகாராஷ்டிராவில் பேருந்துக்கு காத்திருந்த பெண்ணை ஒருவன் ஏமாற்றி ஆளில்லா பேருந்தில் வைத்து வன்புணர்வு செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. இக்குற்றத்தில் ஈடுபட்டவன் மீது ஏற்கெனவே பல வழக்குகள் உள்ளதாக போலீசு தெரிவித்திருக்கும் நிலையில், அம்மிருகம் இச்சமூகத்தில் சுந்ததிரமாக சுற்றித் திரிந்துள்ளது.

இதுமட்டுமின்றீ, மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்கள் கைது, 70 வயது முதியவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது என அன்றாடம் வெளியாகும் பாலியல் குற்றங்கள் குறித்தான செய்திகள் நெஞ்சை பதைபதைக்கச் செய்கின்றன. நாமும் இச்செய்திகளை இயல்பாக கடந்து செல்ல பழகிக்கொண்டோம். பச்சிளம் குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்படலாம், சிறுவன் முதல் வயதான ஆண் வரை எவரொருவரும் பாலியல் குற்றத்தில் ஈடுபடுவதற்கான சூழலை நோக்கி தள்ளப்படலாம் என்கிற மிக அபாயகரமான சூழல்தான் இன்று சமூகத்தில் நிலவுகிறது.


படிக்க: மகளிர் தினம்: பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டது! என்ன செய்யப் போகிறோம்?


ஒரு குளிர்பானத்தை குடித்துவிட்டு அதன் போத்தலை தூக்கி எறிவது போல, ஒரு பெண்ணையும் பார்க்கும் நுகர்வு கலாச்சாரத்தை ஏகாதிபத்தியம் நமக்குள் விதைக்கிறது. எது அத்தியாவசியம், எது அனாவசியம் என அறியாமல் நாமும் தொடர்ந்து நுகர்ந்து, இறுதியில் இந்த நுகர்வுவெறிக்கு நாமே பலியாகி பிறரையும் பலியாக்குகிறோம்‌‌.

நுகர்வுவெறி உள்ளிட்ட பண்பாட்டு, பொருளாதார காரணங்களால் நாடு மீண்டும் மறுகாலனியாக்கப்படுகிறது. இதற்கு ஏற்ப ஆளும் வர்க்கம் தனது பாசிச சட்டங்களை அமல்படுத்துகிறது. சமீபத்தில் இயற்கைக்கு மாறான உடலுறவால் கணவனால், மனைவி கொல்லப்பட்ட சம்பவத்தை விசாரித்த சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம், ‘கணவன் செய்யும் பாலியல் வன்கொலை குற்றமாகாது’ என்கிற வகையில் தீர்ப்பளித்துள்ளது‌. ஆணுக்கு பெண் அடிமை, ஆணின் சொத்து பெண் என்கிற பார்ப்பன மனுநீதியின் அடிப்படையில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பில்கிஸ் பானு பலாத்கார வழக்கில் குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்தது, பாலியல் குற்றவாளிகளுக்கு தேசியக் கொடி வரவேற்பு கொடுப்பது வரை இவையெல்லாம் பா.ஜ.க-வின் இந்துத்துவ பாசிச ஆட்சியில் சாதாரணமாக நடைபெறுகிறது. இவை பாசிசக் கும்பல் கனவு கானும் இந்துராஷ்டிரமானது பெண்களுக்கு எதிரானது என்பதற்கான சான்றுகளாகும். பாசிசக் கும்பலை வீழ்த்தாமல் பெண் விடுதலை சாத்தியமில்லை என்பதை மேற்கூறிய சம்பவங்களும் நமக்கு உணர்த்துகின்றன.

பிக்பாஸ்கள் நமது வீட்டின் தாழ்வாரத்திலேயே கடை விரிக்கின்றன. ஆபாச இணையதளங்கள் இளம் சிறார்களின் பார்வைக்கு எளிதாக கிடைக்கின்றன. கஞ்சா, போதைப்பொருட்கள் பள்ளி மாணவர்களிடையே இயல்பாக புழங்கும் பண்டமாகிவிட்டது‌. மது, அத்தியாவசியப் பொருள் போல் 24 மணி நேரமும் கிடைக்கிறது. இவையனைத்தும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு தூண்டுகோலாக இருக்கின்றன.

ஆபாச இணையதளங்கள், டேட்டிங் செயலிகள், கஞ்சா, மதுபோதைகளை தடை செய்யாமல் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுத்து நிறுத்த முடியாது. இவற்றை தடை செய்வதற்கும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுத்து நிறுத்தவும் பெண்கள், ஜனநாயக சக்திகள் உள்ளிட்ட அனைவரும் களப்போராட்டத்தை கட்டியமைக்க வேண்டியது அவசியம். இவற்றின் மூலமாகவே மக்களுக்கான ஜனநாயகத்தை நாம் வென்றெடுக்க முடியும்.


மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



1 மறுமொழி

  1. ஆபாச இணைய தளங்கள் தான் பெண்களை மனுசியாக பார்க்காமல் ஒரு உயிராகப் பார்க்காமல் இச்சையைத் தீர்த்துக் கொள்ளக் கிடைத்த கருவியைப் போல எண்ண வைக்கின்றன. ஆபாசத் தளங்களை உடனடியாக தடை செய்ய வேண்டும். அடுத்து வீதிக்கு வீதி அரசு விற்கும் சாராயம் அசட்டுத் துணிச்சல் தருகிறது. இவை இரண்டும் உடனடியாக நிறுத்தப் பட்டால் தான் பெண்கள் பாதுகாப்பாக வாழ முடியும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க