பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டது!
மார்ச் – 8 மகளிர் தினம்
என்ன செய்யப் போகிறோம்?
- நாட்டின் நிலை!
- பெண் விடுதலை பேசத்துவங்கி நூற்றாண்டுக்கு மேலாகி விட்டது. ஆனாலும், பெண்கள் மீதான வன்முறைகள் நின்றபாடில்லை.
- தினந்தோறும் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகள், சக மனிதர்களால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற சூழலை படம் பிடித்துக் காட்டுகிறது.
- அரசின் போக்சோ சட்டமும், வன்கொடுமை வழக்கும், கண்காணிப்பு கேமராவும், திருமண வயது உயர்வும் பெண்களை பாதுகாக்கவில்லை.
- எண்ணும் எழுத்தும் தான் கல்வி என்கிற பாடத்திட்டமானது முதலாளிகளிடம் கூலிவாங்கும் அடிமையாகத்தான் பெண்களையும் மாற்றுகிறது. இந்த கல்வியின் நோக்கம் சிந்திக்க வைப்பதல்ல. ஏன் படித்த பெண்கள் கூட சமூக புரிதலின்றி பெரும் சிக்கலில் மாட்டித் தவிக்கிறார்கள்.
- அரசின் பெண் கல்வி – பெண்கள் முன்னேற்றம் என்பதெல்லாம் குறைவான கூலிக்கு வேலையாட்களை உருவாக்கும் நோக்குடையதேயாகும்.
- புதிதாக முளைத்துள்ள இணையதளம் – ஆன்லைன் கல்விமுறை மாணவிகள் மீதான இன்னொரு தாக்குதலாகிவிட்டது!
- ஆண்களின் தின்பண்டமாக காட்டும் ஆபாச சினிமா / வீடியோக்கள், TV போதை, ஊடக வக்கிரங்கள் இணையதளம் – செல்போன்… இவையெல்லாம் பெண்கள் மீது அதிகரித்துள்ள பாலியல் வன்முறைக்கு களம் அமைக்கின்றன.
- பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு – நல்ல சிந்தனை, விழிப்புணர்வு, ஆண்களின் மனமாற்றம் என்று ஆளும் வர்க்க ஊடகங்கள் பேசி, எழுதி படம் காட்டி வருகிறார்கள். வன்முறைக்கான அடிப்படை அரசியல் – சமூக – அறிவியல் காரணிகளை பேசுவதில்லை. ஏன்?
- ஜனநாயகம் பேசும் முதலாளித்துவம்; கட்டற்ற சுரண்டலுக்கு எளிதான இலக்காகவும், பாலியல் வக்கிரத்துக்கு தகுந்த இரையாகவும் பெண்களை பாவிக்கிறது.
- முதலாளித்துவமானது இலாபம் என்பதை சமூக விதியாக்கிவிட்டது. இதனால், கிராமப்புற விவசாய சமூகத்தில் இருந்த பெண்களின் மீதான குறைந்தபட்ச மதிப்பீடு – அனுதாபம் கூட அழிந்து வருகிறது.
- இலாபத்திற்காகவும் இன்பத்திற்காகவும் சுயநலனுக்காகவும் எதையும் செய்யலாம் என மனித உணர்வுகளை படுமோசமாக, மிருக நிலைக்கு கீழாக கார்ப்பரேட் உலகம் தள்ளிக்கொண்டிருக்கிறது.
- கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆண்டுதோறும் இலாப விகிதத்தை உயர்த்துவதால், விலைவாசி உயர்கிறது. கூலியாக வழங்கப்படும் பணத்தின் மதிப்பும் குறைந்து விடுகிறது.
- பணத்தின் மதிப்பு குறைவதால் குடும்பச் செலவை ஈடுகட்ட பெண்கள், குழந்தைகளும் வேலைக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
- இயற்கை வளக் கொள்ளை, மானியங்கள் – கார்ப்பரேட் வரி குறைப்பு என அரசு கஜானாவையும் கொள்ளையடித்து விட்டு. அதன் பிறகு நேரடியாகவும் முன்பை விட அதிகமாகவும் பெண்களை உழைப்புச் சுரண்டலுக்கு கார்ப்பரேட் கும்பல் தயார்படுத்துகிறது.
- மிகக் குறைந்த கூலிக்கு வேலையாட்களாக பெண்கள், குழந்தைகளையும் திட்டமிட்டு தள்ளுகிறார்கள். இது முதலாளித்துவ இலாப சுரண்டல் விதியாகும்.
- பெண்களின் பாதிப்புக்கு காரணம் இயற்கை, விதி, தலையெழுத்து என அடக்கி, ஒடுக்கி வைப்பதை நியாயப்படுத்தும் சமூகமானது ஹார்மோன்களின் வளர்ச்சி – உடற்கூறியல் – அறிவியல் உண்மை குறித்து பேச மறுக்கிறது.
- உற்பத்தி முறை, பணத்திமிர், அதிகார வெறி ஆண்களை வேட்டையாடும் மனநிலைக்கு தள்ளிவிட்டது. பெண்களை வேட்டையாடும் கொடூர மனநிலைக்கும் உற்பத்தி முறைக்கும் உள்ள தொடர்பினை பற்றி சமூக இயக்கங்கள், சிந்தனையாளர்கள் பேசுவதில்லை.
- முதலாளித்துவ பொருளுற்பத்தி முறையில் உழைப்பிற்கேற்ற பங்கும் மரியாதையும் கிடைப்பதில்லை, அதன் காரணமாக சகமனிதர்களை ஏமாற்றுவதில் தொடங்கிய பழக்கம் சமூக பண்பாடாகவே மாறிவிட்டது, எனவே, ஆண்கள் எந்த குற்றவுணர்ச்சியும் இன்றி பெண்களை ஏமாற்றுகிறார்கள், சுரண்டுகிறர்கள்.
- சமூக காரணங்கள்!
- பழம்பெருமை பேசும் மதமும் ஜாதியும் பெண்களின் உரிமைகளை மறுத்து, பெண்களை அலங்கார – போகப்பொருளாக, குடும்பச் சொத்துக்களில் ஒன்றாக இருத்தி, இன்னொரு வீட்டு விலங்காகவும் 90% நீடிக்க செய்கிறது.
- பிறந்த வீடு – பள்ளி – கல்லூரி – புகுந்த வீடு என்று பெண்கள் வாழ்க்கை சுருக்கப்பட்டிருப்பதால் ஆணாதிக்க சமூகத்தின் ஆபத்தான, கேடான போக்கினை அறியாமல் இருக்கின்றனர்.
- பெண்கள் உயர்கல்வியும், மேன்மைமிக்க பதவிகளும் அடைந்திருந்தாலும் பாதிப்புகள் – அடக்குமுறைகள் பெருமளவு நீடித்தே வருகின்றது.
- தொடரும் கார்ப்பரேட் – பாசிச உற்பத்தியில் பெண்களின் குடும்ப உழைப்பிற்கு உரிய பங்கும் வழங்குவதில்லை. மேலும், குழந்தைகளை (உற்பத்தி சக்திகளை) வளர்த்தெடுக்கும் – ஆண்களின் துணையாகவே கருதப்படுகிறார்கள்.
- சுரண்டல் மிகுந்த எந்த சமூக அமைப்பும் மனிதர்களிடையே சமத்துவத்தை உருவாக்க முடியாது.
- தீவிர உழைப்புச் சுரண்டலுக்காக சட்ட உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. அதன் எதிர்விளைவாக மனிதர்கள் நாடோடிகளாக – ஒழுங்கற்ற – தான் தோன்றிகளாக மாற்றப்படுகிறார்கள்.
- தீவிர கார்ப்பரேட் சுரண்டலுக்கு வசதியாக சமூக அமைப்பே சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதற்காக சீரழிவுகளை தண்டிக்காமல், மோசமான தீர்ப்புகள் மூலம் வளர்த்தெடுக்கப்படுகின்றன.
- முன்பை விட அரசின் உறுப்புகள் நீதித்துறை – போலீசு என அனைத்தும் மக்களுக்கு எதிராகவும் ஒடுக்கும் கருவியாகவும் வளர்க்கப்படுகிறது.
- இதன் மொத்த எதிரொலியாக சமூகத்தில் பலவீனமான பிரிவினராக கருத்தப்படும் பெண்கள் மீது பாலியல் வன்முறையாக நிகழ்த்தப்படுகிறது.
- பெண்ணடிமைத்தனம் மிகுந்த சமூகத்தளமும், அதனை உள்ளடக்கிய அரசுக் கட்டமைப்பும் நீடிக்கும் வரை பெண்கள் மீதான அனைத்து வன்முறைகளும் தொடரும்…
- அரசியல் காரணங்கள்!
- அரசின் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற புதிய பொருளாதாரக் கொள்கை நடைமுறைப்படுத்திய பிறகு பெண்கள் சந்திக்கும் பாதிப்புகளும் தீவிரமாகிக் கொண்டிருக்கிறது.
- கார்ப்பரேட்மயமாக்கலை வளர்த்து, பாதுகாப்பதே அரசின் நோக்கம், பெண்களைப் பாதுகாப்பதல்ல என்பதை தினசரி பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகளே சாட்சியாகும்.
- கல்வி, மருத்துவம், விவசாயம் – இயற்கை வளம், தொழில்துறை – பொதுத்துறை என எல்லாத் துறைகளிலும் கார்ப்பரேட்டைப் புகுத்திய அரசு பெண்களுக்கு எப்படி நன்மை செய்யும்? சிந்தியுங்கள்!
- கார்ப்பரேட் சார்ந்த அரசுக் கட்டமைப்பு என்பதால் பெண்களுக்கு சிந்திக்கும்படியான கல்வி – பாடத்திட்டங்களை வழங்குவதில்லை, வழங்கப் போவதுமில்லை.
- பெண்கள் மீதான தாக்குதலுக்கு அரசுக் கட்டமைப்பு முழுமையாக தீர்வோ- தண்டனையோ வழங்காது. குற்றங்களின் ஆணிவேரை அடையாளப்படுத்தியும் காட்டாது, காட்ட முடியாது!பெருகி வரும் பாலியல் குற்றங்களை தடுக்க வழக்கு – சிறைத்தண்டணையுடன் சொத்துக்களைப் பறிமுதல் செய்து தண்டிக்காமல் வாய்தா வழங்கி வேடிக்கை பார்க்கிறது, அரசு!
- ஆகையால், டோட்டல் சிஸ்டத்தையும் (சமூகம்+மதம்+அரசு) புரிந்து கொண்டு வீதியில் இறங்கினால்தான் 75 கோடி பெண்களின் பாதுகாப்பை உத்திரவாதம் செய்ய முடியும்.
- தத்துவார்த்த காரணங்கள்!
- மனித குல வரலாற்றில் மாறிக் கொண்டே வரும் பொருளுற்பத்தி முறை தான் மனிதர்களின் உணர்வு, சிந்தனை, ரசனை, கலாச்சாரம், நடை, உடை, பாவனை, ஆயுள் என சகலத்தையும் தீர்மானிக்கிறது என்று மார்க்சியம் சொல்கிறது.
- மனிதனைத் தீர்மானிப்பதில் பொருளுற்பத்தி முறைதான் தீர்மானகரமான சக்தியாக உள்ளது. இதனைத் தொடர்புபடுத்தியதாக பாடத்திட்டங்கள் இல்லாததால் சுற்றியுள்ள ஆபத்தை உணர முடியாத நிலையில் பெண்கள் உள்ளனர்.
- காய் – பழம், கிழங்கு, இலைகளை உண்டு மரங்களில் வாழ்ந்த மனிதன் விலங்கினங்களை ஒத்த உறவுகளிலேயே காணப்பட்டான்.
- நதிக்கரை ஓரங்களில் நீர், நிலம் சார்ந்து – பயிரிட்டு வாழத் துவங்கிய மனிதனுக்கு உற்பத்தி – உழைப்பிற்கு சக மனிதர்களின் உதவிகள் தேவைப்பட்டது. அங்கு தான் உறவுகளின் தேவை ஏற்பட்டது. பொருளுற்பத்தியோடு தான் உறவுகள் தோன்றி வளர்ந்தது.
- உற்பத்தியோடு ஏற்பட்ட வேலைப் பிரிவினையில் பெண்கள் வீட்டு வேலைக்கு ஒதுக்கப்பட்டார்கள் என்பது ஆணாதிக்க வரலாற்றின் துவக்க காலகட்டமாகும். (மாதவிடாய், பேறு காலத்தை கேடாக காட்டி விட்டார்கள்)
- அங்கு உருவான தேவைக்கு மிஞ்சிய உபரி பொருட்களைப் பாதுகாக்க நியமிக்கப்பட்டவன் குழுத் தலைவன் என உருவெடுத்தான். அத்துடன் அதிகாரமும் (ஆணாதிக்கம்) உருவானது. பெண் அடிமைத்தனமும் தொடங்கியது
- தீர்வுகள்!
- பெண்கள் சந்திக்கும் எந்த ஒரு பிரச்சனை என்றாலும் அதனை நேற்று – இன்று – நாளை என முப்பரிணாமத்தில் பார்த்து தீர்வு காண முயல வேண்டும். பிரச்சனைகளின் பரிணாம வளர்ச்சியையும் அதன் இயக்க போக்கையும் கவனிக்க வேண்டும்!
- குறைந்தபட்சம் அறிவியல் பார்வை, நேர்மை, சுயகட்டுப்பாடு, சுரண்டல் – நுகர்வு வெறி – மூட நம்பிக்க – எதிர்ப்பு, திறமைக்கேற்ற 8 மணி நேர உழைப்பு, சமத்துவம், ஒழுக்கநெறி ஆகியவற்றைக் கொண்ட சோசலிச விழுமியங்களை பெண்கள் உயர்த்தி பிடிக்க வேண்டும்!
- சோசலிசக் கொள்கையில்தான் பெண்களின் சமஉரிமையும், சுதந்திரமும், சமூக பாதுகாப்பும், விடுதலையும் அடங்கியுள்ளது என்பது சோவியத் ரசியாவில் நிரூபணம் செய்யப்பட்டது!
- இன்றளவும் நிலம் அரசுடமையாக உள்ள வியட்நாமில் டைவர்ஸ் வழக்குகள் – சிவில் வழக்குகள் சொல்லிக் கொள்ளுமளவுக்கு இல்லை!
- சமத்துவ – சோசலிச சமூகத்தில் தான் பெண்களின் மீதான சமூக மற்றும் குடுமப வன்முறைகள் தடுக்கப்பட்டு, பாலின சமத்துவம் உறுதிசெய்யப்படும்!
பெண்கள் பாதுகாப்பு சிந்தனைகள்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram