உலக பெண்கள் தினத்தை ஊடகங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. பெண்களின் நிலைமை முன்னேறியிருக்கிறதா இல்லையா என்று பட்டிமன்றங்களை நடத்தி, டி.ஆர்.பி-யை உயர்த்திக் கொள்வதற்கேற்ப தீர்ப்புகளை வழங்குகின்றன. இந்தியாவில் பெண்களின் நிலையைவிட, தமிழ்நாட்டில் ‘திராவிட மாடல்’ ஆட்சியில் பெண்களின் நிலை உயர்ந்திருப்பதாகக் காட்டப்படுகிறது. சினிமா சீரழிவின் உச்சமான நடிகர் விஜய் பெண்கள் தினத்தில் பேசிய விசயங்கள் பெரும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
இந்த அக்கப்போர் ஒருபுறம் இருக்க, பெண்களின் உண்மை நிலைமை என்ன?
சமூகத்தின் சரிபாதியாக இருக்கும் பெண்கள், சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் அதே அளவிற்கு அல்லது, அதற்கு நெருக்கமான ஒரு விகிதத்தில் பங்கேற்கிறார்களா? இந்த அடிப்படையான கேள்வி ஒன்றே, பெண்களின் நிலைமை என்னவென்று தெரிவித்துவிடுகிறது.
பெண்களுக்கு சம உரிமையைப் பற்றிப் பேசுவதாகின், அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சரி விகிதத்தில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் எந்த அளவிற்கு சரி விகிதத்திற்கு நெருக்கமாக இருக்கிறது என்பதைப் பற்றிப் பேச வேண்டும்.
முக்கியமாக, அரசியலில் பெண்கள் சரி விகிதத்தில் பங்கேற்பது முக்கியமான விசயமாகும். அவ்வாறு பங்கேற்கிறார்கள் என்றால், சமூகம் உரிமைக்கான போராட்டத்தில் முன்னேறி வந்திருக்கிறது என்று சொல்லலாம்.
சில சூழ்நிலைமைகளில் சிறிது காலம், பெண்கள் சிலர் ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருப்பதைக் காட்டி, பெண்கள் முன்னேறி வந்திருப்பதாகக் கூறுகின்றனர். இந்த நிலைமை எந்த வகையிலும் பெண்களுக்கோ சம உரிமைக்கான போராட்டத்திற்கோ நம்பிக்கைக்குரியது அல்ல. ஒவ்வொரு நாட்டின் குறிப்பான சூழ்நிலைமைகளின் தன்மையைப் பொறுத்துத்தான் அது தீர்மானிக்கப்படுகிறதே அன்றி, பாலின சமத்துவம் என்ற அடிப்படையில் அதிகாரத்திலோ அல்லது ஆட்சியிலோ அந்த பங்கேற்பு இருப்பதில்லை; நாம் அறிந்தவரை, நிலவுகின்ற முதலாளித்துவ அரசுக் கட்டமைப்பில் மிக விதிவிலக்காகவே, பாலின சமத்துவம் என்ற அடிப்படையில் அதிகாரத்திலும் ஆட்சியிலும் பங்கேற்க வைக்கப்பட்டுள்ளனரே அன்றி, பொதுவில் ராஜா குட்டி போட்டால் ராஜா குட்டி என்ற வகையில்தான், அதிகாரத்திலும் ஆட்சியிலும் பங்கேற்பதற்குப் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இந்தியா போன்ற நாடுகளில் இந்திரா காந்தி, ஜெயலலிதா, மம்தா பானர்ஜி போன்ற சில பெண்கள் ஆட்சியில் பங்கேற்றதைப் பெரிதாகப் பேசுகின்றனர். தங்களது கட்சியில் எத்தனை பெண்கள் இருக்கின்றனர் என்று சொல்லி சில நேரங்களில் சங்கிகளும் சீமான்களும் உளறுகின்றனர். ஆனால், அவர்கள் பெண்களின் உரிமைக்காகக் கொடுத்த குரல் என்ன; பெண்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக நடத்திய போராட்டங்கள் என்ன என்பதிலிருந்துதான் அவர்கள் கட்சியில் குறிப்பிட்ட அளவு பங்கேற்றிருப்பதைப் பரிசீலிக்க முடியும். மாறாக, சீமானும், விஜய்யும் பெண்கள் குறித்து இழிவாகவும் ஆபாசமாகவும் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருக்கும் அப்பெண்களைப் பெண்களின் பிரதிநிதிகளாகக் கருத முடியுமா?
சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சம விகிதத்தில் பங்கேற்கவில்லை என்றாலும், ஒரு நாட்டின் பொருளாதாரம் அதற்கான வாய்ப்புகளையும் போராட்டத்தையும் முதன்மையானதாகக் கொண்டிருக்க வேண்டும்.
தி.மு.க. மற்றும் திராவிட இயக்க ஆதரவாளர்கள் பலரும் தமிழ்நாடு பெண் கல்வியில், பெண்களுக்கான ஆரோக்கியம், சுகாதாரம், வாழ்விடம் ஆகியவற்றில் முன்னேறி இருப்பதாகவும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்திருப்பதாகவும் குறிப்பிட்டுக் காட்டுகின்றனர். பல துறைகளில் பெண் ஆளுமைகள் வளர்ந்திருப்பதாக எடுத்துக்காட்டுகின்றனர். தமிழ்நாடு மற்ற மாநிலங்களிலிருந்தும் இந்தியாவின் தேசிய சராசரி அளவிலிருந்தும் முன்னேறி இருப்பதாகக் கூறுகின்றனர்.
மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாடு முன்னேறியிருக்கிறது என்பதை நாம் மறுப்பதற்கில்லை; பெண்களின் சமூக நிலைமை, சமூக விழிப்புணர்வு கீழ்மட்டங்களில் வளர்ந்திருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இவர்கள் பெண்கள் உற்பத்தியில் ஈடுபடுத்தப்படுவதைப் பற்றிப் பேசுகிறனரே தவிர, ஆட்சியிலும் அரசியல் அதிகாரத்திலும் பெண்களின் நிலைமை என்ன என்பது குறித்துப் பேசுவதில்லை.
ஏனெனில், உற்பத்தியில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்து வருவதானது முதலாளித்துவ சுரண்டலுக்கு அவசியமான தேவைகளில் ஒன்றாகும். குறைந்த கூலிக்கு பணியமர்த்தப் படுவதாலும் அதீத ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு உரிமைக்கான குரல் கொடுப்பதற்கு வாய்ப்பின்றி இருப்பதாலும், அவர்களை உற்பத்தியிலும் சமூகத்திலும் கீழ் நிலையில் அமர்த்துவது, முதலாளித்துவ சுரண்டலின் கைதேர்ந்த, நுட்பமான அணுகுமுறையாகும். ஃபாக்ஸ்கான் மாதிரியான தொழிற்சாலையில் கழிவறை பயன்படுத்துவதற்குக் கூட இடைவேளையின்றி வலி நிவாரணி கொடுக்கப்பட்டு அற்ப கூலிக்கு பெண்கள் கசக்கிப் பிழியப்படுவதை இதனுடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.
மறுபுறம், பாசிச பா.ஜ.க. கும்பலோ பெண்கள் மீதான இந்த உழைப்பு சுரண்டலை உச்சத்திற்குக் கொண்டு சென்று கொண்டிருக்கிறது. பா.ஜ.க-வால் நிறைவேற்றப்பட்ட நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பு பெண்களை சுரங்கம் உள்ளிட்ட ஆபத்து நிறைந்த துறைகளில் இரவு நேரங்களில் (இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை) வேலைகளில் ஈடுபடுவதற்கு வழி செய்துள்ளது. இவையெல்லாம் பெண்கள் மீதான ஈவிரக்கமற்ற, மிருகத்தனமான உழைப்புச் சுரண்டலையும் பாலியல் வன்கொடுமைகளையும் மேலும் தீவிரப்படுத்துவதுடன் 12 மணி நேரத்திற்கும் அதிகமாக அவர்கள் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவதற்கே இட்டுச் செல்லும்.
அதேபோல், சனாதனவாதிகள் பெண்களுக்கு எந்தவித உரிமைகளும் வழங்கப்படக் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றனர்; அவர்களை மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு செல்வதற்காக அனைத்து சதி வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பக்தியை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக இல்லாத கதைகளையெல்லாம் அவிழ்த்து விடுகிறனர். உத்தரப்பிரதேசத்தில் போலே பாபா எனும் சாமியாரின் சொற்பொழிவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு குறைந்தது 121 பெண்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதுதான் இவர்களது வரலாறாகும். இவர்கள் ஆளும் மாநிலங்களில் பெண்களின் நிலைமை நாளுக்கு நாள் பின்னடைவு அடைந்தது வருவது, இதற்குச் சான்றாகும்.
தமிழ்நாட்டில், அடிமை அ.தி.மு.க. – பாசிச பா.ஜ.க. கும்பலின் ஆட்சியில் பெண்களுக்கு எதிராக சமூகத்தில் பரப்பப்பட்ட முக்கியமான பரப்புரைகளைப் பார்ப்போம். அத்திவரதர் என்ற ஒரு கதையைக் கட்டிவிட்டு நடந்த புதுப் பிரச்சாரம்; ஆறுகளை எல்லாம் ஆக்கிரமித்து புஷ்பரகரணம் என்று கதைவிட்டு அரசே அதற்குப் பரப்புரை செய்த விவகாரம் போன்றவை எல்லாம், அறிவு பெற்று முன்னேறிவரும் சமூகத்தைப் பின்னுக்கு இழுப்பது மட்டுமல்ல, பெண்கள் மீதான சுரண்டலைத் தீவிரப்படுத்துவது, பெண்கள் தங்களது உரிமைகள் குறித்துச் சிந்திப்பதிலிருந்து திசைதிருப்பி, அவர்களை பக்தியில் ஆழ்த்துவது என்ற கேடான நடவடிக்கைகளாகும். இதுபோல, இன்னும் பல விசயங்களை நாம் குறிப்பிட முடியும்.
இத்தகைய சூழலில், எந்த கட்சியும் பெண்கள் ஆட்சியிலும் அதிகாரத்திலும் சரி விகிதத்தில் ஈடுபடுத்தப்படுவது குறித்து வாய்திறப்பதில்லை. இது குறித்து நாம் கேள்வி எழுப்புகையில், ஆட்சியிலும் அதிகாரத்திலும் பெண்கள் சரிவிகிதத்தில் பங்கேற்பது என்ற எண்ணிக்கை வந்துவிட்டால் பெண்களுக்கு சம உரிமை கிடைத்துவிடுமா என்று சிலர் கேட்கலாம். இது, ஏதோ எண்ணிக்கை தொடர்பான பிரச்சினை என்று சுருக்குவதாகச் சிலர் சொல்லலாம். ஆனால், அவ்வாறு சொல்பவர்கள், அந்த எண்ணிக்கையை ஏன் எந்த கட்சியும் கொள்கையாக ஏற்கவில்லை என்ற கேள்விக்குப் பதிலளிக்க வேண்டும்.
எனவே, இந்த பார்ப்பனிய – ஆணாதிக்க கட்டமைப்பானது அதன் இயல்பிலேயே பெண்களுக்கு விரோதமானதாக உள்ளது என்பதைப் பரிசீலிக்க வேண்டும். பெண்கள் இந்நாட்டில் அடிப்படை உரிமைகளைக் கூட போராடிப் பெறும் நிலையே உள்ளது. அவ்வாறு பெறப்படும் உரிமைகளை நடைமுறைப்படுத்த வைப்பதற்கும் அடுத்தகட்ட போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
இத்தகைய சூழலில், கடந்த 11 ஆண்டுக்கால பா.ஜ.க. ஆட்சியில் பெண்கள் போராடிப் பெற்ற சிறு உரிமைகளும் நடைமுறையில் பறிக்கப்பட்டு வருகின்றன. பெண்களை வீட்டிலேயே இருத்துவதற்கான கருவியாக பெண்கள் மீதான வன்முறை, பாலியல் வன்கொடுமை, போதை கலாச்சாரம் போன்றவை பாசிச கும்பலால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே, இக்கட்டமைப்பிற்குள் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பெண்களுக்குச் சம உரிமை கோரிக்கையை வென்றெடுப்பது சாத்தியமற்றது என்பதைத் தனியாக விளக்க வேண்டியதில்லை. பெண்களுக்கு உண்மையான அதிகாரம் கிடைப்பதற்கான பாதையானது பாசிச கும்பலுக்கு எதிரான போராட்டத்திலேயே அடங்கியுள்ளது.
அந்த வகையில், இப்போராட்டத்தின் முதல் படியாக பெண்கள் அமைப்பாக்கப்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான சமூகக் குற்றங்கள் அதிகரிப்பதற்குக் காரணமான விளம்பரங்கள், திரைப்படங்கள், காணொளிகள், புராணக் கதைகள், சமூக ஊடகப் பக்கங்கள், இதழ்கள் அனைத்தும் தடை செய்யப்பட வேண்டும். இவை இருக்கும் வரை பெண்களுக்கு எதிரான ஆணாதிக்க மனநிலையை உடைக்க முடியாது. இத்துடன், பெண்கள் மீதான பாலியல் அடக்குமுறைகள் அதிகரிப்பதற்குக் காரணமான, போதைக் கலாச்சாரமும் ஒழிக்கப்பட வேண்டும்.
இதற்கான போராட்டத்தை பெண்களுக்கு உண்மையான அதிகாரம், உரிமை அளிக்கின்ற பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுக்கான போராட்டத்துடன் இணைக்க வேண்டியுள்ளது.
![]()
தங்கம், சோபியா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











