மல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா என பல நட்சத்திர பட்டாளங்களின் தேர்ந்த நடிப்பு, சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு ஆகியவை தன்பால் மக்களை கவர்ந்திழுத்ததில் கொஞ்சமும் ஆச்சரியமில்லைதான்.

இங்கிலீஷ் படம் மாதிரி இருக்கு! அனியோட மியூசிக் சூப்பரா இருக்கு! சூர்யா வேற லெவல்! இப்படி வகை வகையான விமர்சனங்கள், ரசிகர்களின் குதூகலிப்புகள், இவையெல்லாம் தயாரிப்பாளர் கமலஹாசனின் கல்லாவை நிரப்பி இருக்கிறது.

தன்னுடைய கடன்களை எல்லாம் அடைத்து விடுவேன் என்று கூறியிருக்கிறார் தயாரிப்பாளர் கமல். நாளே நாட்களில் தனக்கு இதன்மூலம் 75 கோடி ரூபாய் ஷேர் வந்திருப்பதாக விநியோகஸ்தர் உதயநிதி கூறுகிறார். பாகுபலி வசூலை தாண்டி  400 கோடி வரை வசூலிக்கும் என்றும் கூறுகிறார்கள். இது அனைத்தும் மக்களின் பணம் என்று சிலாகிக்கிறார் கமல்ஹாசன்.

இவ்வளவு தேர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள், திரைக்கதை, வசனம் இருந்தாலும் கூட இத்திரைப்படம் தான் சொல்ல வரும் கருத்தை பார்வையாளர்களுக்கு கடத்திச் செல்ல முடியவில்லை. ஏன் அப்படி சொல்கிறோம் என்றால் படம் பார்த்த ஒருவர் கூட வெளியில் வந்து போதை பொருள் பற்றியோ அதை ஒழிப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியோ பேசவில்லை. ஒரு சினிமாவாக நடிப்பு இசை இயக்கம் இன்னபிறவற்றில் விக்ரம் வெற்றி பெற்று இருக்கலாம். ஆனால் கருத்தளவில் என்ன செய்தது என்றால், பூஜ்ஜியம்தான்.


படிக்க : முஸ்லீம் வெறுப்பு விஷத்தை கக்கும் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் !


இது என்ன ஒரு பைத்தியக்காரத்தனம். ஒரு சினிமாவை அனைத்தும் கலந்த கலவையாகத் தான் பார்க்க முடியுமே ஒழிய, கருத்து என்கிற ஒற்றை தளத்தில் மட்டும் அணுகக்கூடாது என்று சிலர் சொல்லக்கூடும். ஒரு கலை பிரச்சாரமாகாது என்பதே இவர்களின் வாதம்.

ஒரு பிரச்சாரமே கலையாக மாறும் அற்புதத்தை எமது தோழர்கள் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள். அண்மையில், மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் காவி –  கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்! என்கிற தலைப்பில் நாங்கள் பேருந்துகளில் நோட்டீஸ் விநியோகித்து நிதி வசூல் செய்தோம். அரசு பள்ளியை மீட்பது நம் கடமை என்கிற இந்த பிரச்சாரம் சொகுசுப் பேருந்துகளை விட சாதாரண உழைக்கும் மக்கள் பயணிக்கும் டவுண் பஸ்களில் மக்களை வெகுவாக சென்றடைந்தது. பேருந்து கட்டணம் போக டீ குடிக்கவோ, பிள்ளைகளுக்கு பண்டம் வாங்க வைத்திருந்த பணத்தையோ நமது உண்டியலில் போட்டார்கள் மக்கள்.

உழைக்கும் மக்கள் தமது கூலியில் இது தனக்கு, இது விக்ரமுக்கு என ஒதுக்கியதாக கமல் கூறினார். அது வெறும் ஒரு நாள் கூத்துதான். ரசிகனின் நாடி பார்த்து, அவன் இதயத்து நரம்பின் ரசனை அறிந்து 50 சீன்களில் 50 முறை அட! போட வைத்தால் போதும். அவன் சட்டைப்பை பணம் தயாரிப்பாளரின் கல்லாவுக்கு வந்துவிடும் மாயம் நடந்து விடும். ஆனால், நம்முடைய பிரச்சாரம் மக்களின் வாழ்க்கை முழுவதும் உடன் வரக்கூடியது. அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு சொல்ல முயல்வது. அவர்களது பிள்ளைகளின் இருண்ட எதிர்காலத்தின் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சக் கூடியது.

இது ஒன்றும் மிகையானது அல்ல. நோட்டீஸ் பெற்றுக் கொண்ட ஒரு அம்மா கண்டிப்பாக உங்க நம்பருக்கு போன் பண்ணுவேன் எடுக்கணும், ஆமா! என உரிமையோடு கேட்டதில் அவரின் பிரச்சினைகளை நமது பிரச்சாரம் தொட்டு விட்டதை உணர்ந்தோம். பிரச்சாரத்தில் பேருந்துக்கு கீழே நின்று நோட்டீஸ் வாங்கிய பெரியவர், தன் மகளின் பி.எஸ்.சி நர்சிங் படிப்புக்கு 2 இலட்சத்து 90 ஆயிரம் கல்விக் கடன் வாங்கியது இன்று வட்டியோடு 9 இலட்சம் ஆகிவிட்டது என்றும், தன்னால் அவ்வளவு பணம் கட்ட முடியாது. தற்போதுதான் நீதிமன்றம் போய்விட்டு வருகிறேன் உங்களது பிரச்சாரம் கேட்டு இங்கே நிற்கிறேன் என்று கூறிவிட்டு கண்ணீர் வடித்தார். நமது தொடர்பு எண்ணை வாங்கிக் கொண்டு சென்றவர், சில நாள் கழித்து மீண்டும் நம்மை தொடர்பு கொண்டார். நான் அன்று பேருந்து நிலையத்தில் சிந்திய கண்ணீர் எனது வேதனைக்கு சிந்தியதல்ல. இப்படிப்பட்ட பிரச்சினையை பேசவும் இங்கே உங்களை போன்ற ஆட்கள் இருக்கிறார்களே என்று நினைத்ததால் வந்த கண்ணீர் அது என்று விளக்கம் கூறினார்.

மாணவர்கள் கைகொடுத்து வாழ்த்தினார்கள். பள்ளி மாணவர்கள் காசு இல்லை என்றாலும் நோட்டீசைக் கேட்டு வாங்கிக் கொண்டார்கள்.


படிக்க : திரை விமர்சனம் : வசூலுக்காக அரசியல் நியாயம் பேசும் சர்கார் !


தன் கிராமத்தில் இருக்கும் பணக்கார வீட்டு பையன் மேல்படிப்புக்காக கனிமொழி வரை சிபாரிசுக்குப் போய் அமைச்சர் கீதாஜீவனிடம் ஒரு இலட்சம் வரை பணம் கொடுத்து குறிப்பிட்ட கல்லூரியில் சேர்ந்து இருக்கிறார். நாமெல்லாம் அப்படி போய் படிக்க முடியுமா என்று ஒரு பெரியவர் ஆதங்கத்தோடு நம்மிடம் கேட்டார். இப்படியாக மக்கள் தமது எண்ணங்களை, உணர்வுகளை நம்மோடு பகிர்ந்து கொண்டார்கள். நம்முடைய பிரச்சாரம் அவ்வாறிருக்க அவர்களைத் தூண்டியது.

நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மக்களை சென்றடைகிறது. மக்களின் எதிரி யார் என்பதை சுட்டிக்காட்டுகிறது. கயவர்களை ஒன்றுமே செய்யமுடியாது என்கிற அவர்களின் கற்பிதங்களை புரட்டிப் போடுகிறது. வாழ்வின் மீது புதிய நம்பிக்கையை பாய்ச்சுகிறது. நட்பு, நம்பிக்கை, அழுகை, உரிமை என ஏதோ ஒரு வகையில் நம்மிடம் அவர்கள் நெருக்கமாகிறார்கள். நம்முடைய பிரச்சாரம், கலையாக மாறும் தருணம் இதுவே.

பல கோடிகள் செலவில் எடுக்கப்பட்ட விக்ரம் திரைப்படம் மேலும் பல கோடிகள் மக்களிடமிருந்து வசூலிக்கிறது. ஒரு மயிரளவு மாற்றத்தைக் கூட மக்கள் வாழ்வில் ஏற்படுத்தவில்லை. ஆனால் நம்முடைய மலிவான காகிதத்தாள் பிரச்சாரமும், அதன் கருத்தும் மக்களின் வாழ்க்கைப் பாதையையே திசைதிருப்பும் வல்லமையோடு இருப்பதை, மக்களுடனான நமது அனுபவத்தில் நம்மால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்.

1 மறுமொழி

  1. “..நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மக்களை சென்றடைகிறது. மக்களின் எதிரி யார் என்பதை சுட்டிக்காட்டுகிறது. கயவர்களை ஒன்றுமே செய்யமுடியாது என்கிற அவர்களின் கற்பிதங்களை புரட்டிப் போடுகிறது. வாழ்வின் மீது புதிய நம்பிக்கையை பாய்ச்சுகிறது. நட்பு, நம்பிக்கை, அழுகை, உரிமை என ஏதோ ஒரு வகையில் நம்மிடம் அவர்கள் நெருக்கமாகிறார்கள். நம்முடைய பிரச்சாரம், கலையாக மாறும் தருணம் இதுவே.”
    புதிய பார்வை!முகத்தல்அறையும் விமர்சனம்.
    மக்களுக்கான கலையில்தான் அதன்பயன் ,சமூகத்தின் வேரைத்தொடும்.
    அங்கு மாயங்கள் நிகழும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க