முதல் பாகம் : ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ : காவிகளின் வெறியாட்டத்தை மறைக்கும் அக்னிகோத்ரி !
இரண்டாம் பாகம் :
பார்வையாளர்களைப் பற்றி இவர் என்ன கருதி, எந்த ஆதாரமுமின்றி படம் எடுத்துள்ளார் என ஆச்சரியமாக உள்ளது. விடுபட்ட புள்ளிகளை இணைத்து புரிந்து கொள்ள இயலாத அளவுக்கு முட்டாள்களா படம் பார்க்கும் அனைவரும்? ‘ஜேஎன்யூ பேராசிரியர்’, ‘ராதிகா மேனன்’, போன்றோர் தலைமறைவு பயங்கரவாதிகளுடன் ஆழ்ந்த தொடர்பு வைத்துக் கொண்டுள்ளவர்கள் என சித்தரிக்கிறார். படத்தில் தேசபக்தனாக காட்டப்படும் நபர் தீவிரவாதிகளின் இடத்திற்குச் சென்றபோது அந்தப் பேராசிரியரும் ஒரு பயங்கரவாதியும் ஒன்றாக, நெருக்கமாக உள்ள புகைப்படத்தைப் பார்ப்பதாக காட்டப்படுகிறது, அதாவது, அவர்கள் காதலர்கள் !
இப்படத்தின் மூலம் பார்வையாளர்கள், படம் என்ன சொல்ல வருகிறதோ அதையே அதே அர்த்தத்தில் தான் புரிந்து கொள்ள வேண்டும்! இதே போலத்தான், காஷ்மீரிலான அரசின் நடவடிக்கைகளை விமர்சிப்பதும் புறந்தள்ளப்படுகிறது! தேர்தலைப் பற்றி பேராசிரியர் பேசும்போது அரசியலை பாதிக்கின்ற சிக்கல்களை தேர்தல் பூதாகரமாக்கிக் காட்டுகிறது என்கிறார். ”நீங்கள் அரசாங்கத்தை வில்லனாக்கினால் தான் அதனுடனான பேச்சு வார்த்தைகளில் நீங்கள் கூடுதல் அதிகாரத்தைப் பெற முடியும்” என பேராசிரியர் சொல்கிறார். இதற்கு நமது தேசபக்தனாக காட்டப்படும் நாயகன், “அது பேச்சு வார்த்தையல்ல, மிரட்டிப் பணிய வைப்பதாகுமே” என பௌயமாகக் கேட்கிறார். அதற்கு, “அதுதான் அரசியல்” என பேராசிரியர் பதில் கூறுகிறார்.
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்களோ அதை ஆழமாக சொல்ல வேண்டும் என்ற பாணியில் இப்பட வசனங்கள் உள்ளன. ஆனால், அதற்கு எந்த அர்த்தமும் இல்லை. அரசு தான் செய்கிற அரச பயங்கரவாதத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதையே ‘அரசாங்கத்தை வில்லனாக்க வேண்டும்’ என கேவலப்படுத்தும் வகையில் வசனம் அமைக்கப்படுகிறது. இது சொல்லவருவது என்ன வென்றால், அரசாங்கத்தை வில்லனாகப் பார்க்க வைக்கக் கூடாது என்றால், அரசு பயங்கரவாத செயலைச் செய்யும்போது எந்தத் தடயமும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதே!

படிக்க :

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ : இசுலாமிய எதிர்ப்புணர்வை தூண்டும் பிரச்சார வாகனம் !

காஷ்மீர் : கருத்துரிமையை கல்லறைக்கு அனுப்பும் காவி பாசிசம் !

எந்த ஒரு ஜனநாயகத்திலும் மாற்றுக் கருத்துக்கு இடம் கொடுத்தால்தான் அது ஜனநாயகமாக இருக்க முடியும். ஆனால் கதாநாயகன், “அது பேச்சு வார்த்தையல்ல, மிரட்டிப் பணிய வைப்பதே” எனக் கூறும்போது மாற்றுக் கருத்துக் கூறுவதையே மிரட்டிப் பணிய வைப்பது என மக்கள் மனதில் பதிய வைக்கிறார் இயக்குனர். இதற்கு பதில் கூறும் அக்னிகோத்ரியின் புனைவுப் பேராசிரியர், “அது தான் அரசியல்” என்பதன் மூலம் மாற்றுக் கருத்துக் கூறுவதோ அல்லது அரசாங்கத்தை அதனது செயலுக்கு பொறுப்பேற்கச் சொல்வதோ சொந்த ஆதாயத்துக்குதானே தவிர அது குடிமகனின் உரிமையல்ல என்பதையே இங்கு இயக்குனர் சொல்கிறார்.
அரசாங்கம் தனது செயல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் எனச் சொல்வது அருவமான கருத்தல்ல. காஷ்மீர பண்டிட்டுகளின் போராட்டத்தை அங்கீகரித்து அதற்கு அரசாங்கம் நீதி வழங்க வேண்டும் என்பதே மையமானது. இந்த 30 ஆண்டுகளில் பாஜக ஆட்சி 9 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்கிறது. ஆனால் பண்டிட்டுகள் அகதிகளாக வெளியேற்றப்பட்டதை நிறுவும் வகையில் நீதித் துறை கமிசன் எதுவும் நிறுவப்படவில்லை. அகதிகள் மறுவாழ்வுத் திட்டம் காகிதத்தில் மட்டும் உள்ளதே தவிர நிஜ வாழ்க்கையில் இல்லை. 2020-ம் ஆண்டில், ஜம்மு காஷ்மீர் மாநில தொழில் துறைக்கு 3000 ஏக்கர் நிலம் வழங்கிய அரசு, தங்களது மறு குடியமர்வுக்கு 300 ஏக்கர் நிலம் கூட வழங்கவில்லை என எதிர்ப்புத் தெரிவித்து பண்டிட்டுகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்! ஏற்கனவே தங்களிடம் காஷ்மீர் மாநில நிரந்தரக் குடியுரிமைச் சான்று உள்ளதை யாரும் மறுக்க முடியாது என்ற நிலையில், ஜம்மு காஷ்மீருக்கு தனிச் சிறப்புத் தகுதி வழங்கும் சட்டப் பிரிவு 370ஐ நீக்கியது தங்களுக்கு எந்த வகையிலும் உதவவில்லை என பண்டிட்டுகள் கூறுகின்றனர்.
பத்ரி ரெய்னா என்ற காஷ்மீர பண்டிட், இந்துத்துவ வலதுசாரியினருக்கு காஷ்மீர் பள்ளத்தாக்கில் பண்டிட்டுகளை மறுகுடியமர்த்தும் நோக்கம் அறவே இல்லை என்று கூறுகையில், செய்தியின் உயிராதாரத்தைப் பிளந்து காட்டுகிறார். பண்டிட்டுகளின் சிக்கல் தொடர்ந்து நீடிக்க வேண்டுமே தவிர, அவர்களை மறுகுடியமர்த்தி சிக்கலைத் தீர்த்து விட்டால் காஷ்மீர இசுலாமியர்களை வலதுசாரி இந்துத்துவ கும்பல் குற்றம் சாட்ட முடியாதல்லவா என மேலும் கூறுகிறார்.
எந்தக் கூச்சமுமின்றி மிக வெளிப்படையாக போராளிகள் நடத்திய கொடூரமான வன்முறைகளை மகிழ்வோடு காட்டிய இந்தப் படத்தில் அரசு நடத்திய வன்முறை வெறியாட்டங்கள் முற்றிலுமாக மறைக்கப்பட்டது பற்றிப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. சில தவிர்க்கவியலாத சூழலில் நடந்துவிட்ட துயர சம்பவம் என போகிற போக்கில் சொல்கிறது.
காட்சியாக்கப்படவில்லை! நடிமார்க் (Nadimarg) படுகொலைச் சம்பவம் படத்தின் இறுதிக் காட்சி! போராளிகளால் 24 அப்பாவிப் பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்! இயல்பாகவே இங்கு புரிந்து கொள்ள முடியாத புதிர் என்னவென்றால், தி காஷ்மீர் ஃபைல்ஸ் என சொல்லப்படும் இப்படத்தில் சோபோர் படுகொலை ஏன் காட்டப்படவில்லை என்பதே! இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரால் இந்த சோபோர் படுகொலை சம்பவத்தில் 43 அப்பாவி பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
வெறுமனே சுடப்பட்டு மட்டும் சாகவில்லை! மக்கள் ஆட்டு மந்தைகளைப் போல கடைகளுக்குள் விரட்டப்பட்டு, சுடப்பட்டு, அந்த உடல்களில் பாரஃபின் எண்ணெய் ஊற்றி கொளுத்தப்பட்டதோடு, அந்தக் கடைகளுமே தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. (இப்படுகொலையாளிகள் அனைவரையும் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது தனியே எழுதப்பட வேண்டியது)
அரைகுறை உண்மையோடு ஒரு பக்க சார்பான கதையாடலை மட்டும் காட்சிப் படுத்திய இந்த திரைப்படக் கதையாடலை இதுவே முழுக் கதையாடல் என்கிறது படம். இதில் முரண் நகை என்னவென்றால், ஒரு கட்டத்தில் அனுபம் கேர் (படத்தில் முக்கிய பாத்திரம்) “பொய்ச் செய்திகளைக் காட்டுவது உண்மையை மறைப்பது போல் மோசமானதல்ல” என உளரிக் கொட்டியதுதான்! (இதுவே படத்தின் யோக்கியதையைத் தோலுரிக்கவில்லையா?).
இதையெல்லாம் சொன்னாலும் நமக்கு விருப்பமில்லாத, இன்னும் அபாயகரமான ஒரு உண்மையை நாம் எதிர் கொள்ள வேண்டியுள்ளது. நடக்கும் உண்மை என்னவென்று தெரிந்தவர்களுக்கு இப்படம் மிக மோசமாக, வெளிப்படையாகவே ஒரு சார்பானது எனப் புரியும்தான். வன்முறையை மற்றும் எளிமையான பிரச்சாரத்தை இந்திய ரசிகர்கள் ஏற்றுக் கொள்வது பற்றி அக்னிகோத்ரி மிகத் துள்ளியமாக கணித்துள்ளார். பிரச்சாரம் என்பது ஒரு ஒருமித்த கருத்தை உருவாக்கும் ஒரு கலை. இதில் அக்னிகோத்ரி ஆற்றல் மிக்க கலைஞன்.
அக்னிகோத்ரியின் ஒளிப்பதிவு, காட்சிக் குறியீடுகளை ஒரு தார்மீக சாதனமாகப் பயன்படுத்துகிறது – வீட்டின் தரைகள், சாலைகள், மண் தரையில் இரத்தம் கசியும் நீண்ட, நீடித்த காட்சிகள் உள்ளன. ஒரு போராளியின் முகத்தில் அவரது செயல்களைப் போல கேமரா தங்கவில்லை. முகத்தில் துப்பாக்கியால் சுடப்படுவது மீண்டும் மீண்டும் வந்தாலும், ஒரு கட்டத்தில், அது சொல்ல வரும் செய்தியின் ஆற்றலை இழந்து விடுகின்றன. இது எதிர்பார்த்ததே! இதற்கு முரண்பாடாக பய பீதியூட்டப்பட்ட மக்களின் முகங்களில் கேமரா மிக நீண்ட நேரம் தங்குவது, எதிர்பார்த்த உணர்வைத் தூண்டுகிறது.
அனுபம் கேரின் பாத்திரம் கனமானதாக வடிவமைக்கப்பட்டாலும் பெரும்பாலும் கேலிக்குறியதான உணர்வே தோன்றுகிறது. பேராசிரியராக திறமையாக நடித்துள்ள பல்லவி ஜோஷியை ஒரு கனவுக் காட்சியில் சிவப்பு நிறத்தில் படம் பிடிக்கும் கேமரா அவரை மயக்கும் மோகினியாகவும் பேயாகவும் காட்டுகிறது.
24 பொதுமக்கள் கொல்லப்படும் கடைசிக் காட்சியை, ஒவ்வொரு தனி நபராக சுடப்பட்டு சாக்கடையில் விழுவதை ஒவ்வொன்றாகப் பார்க்க வைக்கும் அக்னிகோத்ரி, இறந்த உடல்களின் உச்சியில் சிவா என்ற குழந்தை இறந்து கிடப்பதைக் காட்டுகிறார். கேமரா குழந்தையின் முகத்தில் அப்படியே நிற்கிறது. ஒரு அசாத்தியமான காட்சிக் கதையை உருவாக்குகிறது – அது கேட்கிறது, ஒரு குழந்தை மிகவும் சர்வ சாதாரணமாக கொல்லப்பட்டது பற்றி யார் எதையும் கேள்வி கேட்கத் துணிவார்கள்?

படிக்க :

பொய்வழக்கில் காஷ்மீர் பத்திரிகையாளர் மீண்டும் மீண்டும் கைது !

‘மக்கள் கடுமையாக உழைத்து வரிக்கட்ட வேண்டும்’ – பாபா ராம்தேவ்

நாஜி காலகட்டத்தின்போது, அவர்களின் பிரச்சார அடிப்படையான ஒஸ்ஜெமைன்ஸ்சாஃப்ட் – அதாவது தேசிய அளவில் எல்லோரையும் ஒன்றாக்குவது – என்பதன் மீதான விமர்சனமே, அது சமூக ஏற்றத் தாழ்வுகளைக் களைந்து அனைவரையும் ஒன்றாக்குகிறது என்பதே! இந்த திரைப்படத்தில் காஷ்மீர பண்டிட்டை ஒவ்வொரு இந்தியனுக்குமான குறியீடாக பயன்படுத்துகிறார் அக்னிகோத்ரி. இசுலாமியர்களை மற்றவர்கள் என்பதாக ஒன்றாக்கி, அவர்களால் இந்துவுக்கு ஆபத்து எனக் காட்டி, இந்துத்துவ மேலாதிக்கத்தை நிறுவும் திட்டத்தை கையிலெடுத்துள்ளார்.
ஹரித்துவார் வெறுப்புக் கூட்டத்தில் உள்ள தீவிரவாதிகள் கும்பல், அக்கிரமிப்பும் வன்கொடுமையும் மிக்க இசுலாமியர்களிடமிருந்து இந்துக்களைப் பாதுகாக்க இந்து சமூகம் எப்படி ஆயுதம் ஏந்த வேண்டும் என்று நஞ்சைக் கக்கியது. இந்த நச்சுத் தன்மை கொண்ட கற்பனைக் கருத்துக்களை அக்னிகோத்ரி வெள்ளித்திரையில் உயிர்ப்பிக்கிறார்.
அடிப்படையே இல்லாத ‘லவ் ஜிகாத்’ என்பது பற்றி பய பீதியூட்டி அதற்கு எதிரான சட்டத்தை இயற்றியது போல, பாதுகாப்பற்ற, பலவீனமான இந்துப் பெண் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று என அக்னிகோத்ரி எடுத்துக் காட்டுகிறார். வலது சாரி ஊடகங்களால் தவறான கருத்துக்கள் மலிந்து கிடக்கையில், மிக சிக்கலான உண்மைகளை அக்னிகோத்ரி மிக கவனமாக சிதைத்து அழிக்கிறார்.
இரண்டாம் உலகப் போருக்கு முன் எழுதும்போது, அடௌஸ் ஹக்ஸ்லி சொல்கிறர், “மிக பிரபலமான, வெற்றிகரமான மக்கள் திரள் இயக்கங்களின் உணர்வுகளுக்கும் விருப்பத்திற்கும் பிரச்சாரமானது ஆற்றலையும் திசைவழியையும் தரலாம். ஆனால் அப்படிப்பட்ட இயக்கங்களை பிரச்சாரத்தால் மட்டும் உருவாக்கிவிட முடியாது. ஏற்கனவே உள்ள நீர்நிலையிலிருந்து கால்வாய் மூலம் நீரைக் கொண்டு செல்பவன் தான் பிரச்சாரகன். நீர் இல்லாத வறண்ட நிலத்தில் அவன் தோண்டுவது வீண் வேலை”.
வட இந்தியப் பகுதியிலுள்ள திரையரங்குகளில் படத்தினை உணர்ச்சிபூர்வமாக எதிர்கொள்ளும் இந்து ஆண்கள் முஸ்லீம் பெண்களை திருமணம் செய்வோம் என கூச்சலிடும், “முல்லெ காட்டெ ஜாயங்கே, ராம் ராம் சில்லயெங்கே” (“Mulle kaate jayenge, Ram Ram chillayenge,”) என கத்துகிறார்கள். அக்னிகோத்ரி வெறுப்பு என்னும் மிகப் பெரும் கால்வாய் வெட்டியுள்ளார் எனப் பார்க்கிறோம். இப்போது நமக்குத் தொந்தரவான கேள்வி என்னவென்றால், இந்த வெறுப்பு எவ்வளவு ஆழமாக ஊடுறுவப் போகிறது என்பதே!
(முற்றும்…)

கட்டுரையாளர் : நவோமி பார்டன்
தமிழாக்கம் : நாகராசு
நன்றி : தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க