ந்திய அரசு மேற்கொண்டுவரும் அடக்குமுறைக்கெதிரான செய்திகளை தணிக்கை செய்வது; இணையத்தை மாதக்கணக்கில் முடக்கிவைப்பது; முற்போக்கு பத்திரிகையாளர்கள் மீது கடுமையான பிரிவில் வழக்குப் பதிவுசெய்வது; கைது செய்து சிறை – சித்திரவதைக்குட்படுத்துவது – என காஷ்மீரில் பத்திரிகை சுதந்திரத்தின் கழுத்தை இறுக நெறித்துக் கொண்டிருந்த மோடி அரசு, தனது அடியாட்படையை வைத்துக் கொண்டு தற்போது அடுத்தகட்ட தாக்குதலுக்குச் சென்றிருக்கிறது.
காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் செயல்பட்டுவரும், சுமார் 300 உறுப்பினர்களைக் கொண்ட மிகப் பெரிய பத்திரிகையாளர்கள் அமைப்பான காஷ்மீர் பத்திரிகையாளர் மன்றத்தை (Kashmir Press Club) ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க அடிவருடி பத்திரிகையாளர் குழுவொன்று நரித்தனத்தோடு “ஆட்சிக் கவிழ்ப்பு” பாணியில் கைப்பற்றிக் கொண்டுள்ளது.
000
ஜம்மு காஷ்மீரின் 370-வது பிரிவு சிறப்பு அந்தஸ்தை நீக்கியதையடுத்து, அம்மாநிலத்திலுள்ள அனைத்து சங்கங்களின் பதிவையும் இரத்து செய்த காஷ்மீர் நிர்வாகம், சொசைட்டி பதிவு சட்டம் 1860-ன் கீழ் மீண்டும் பதிவை புதுப்பிக்குமாறு கடந்த ஆண்டு ஏப்ரலில் அறிவித்தது. அதைத் தொடர்ந்து அந்த ஆண்டின் மே முதல் வாரமே மறுபதிவிற்காக விண்ணப்பித்தது காஷ்மீர் பத்திரிகையாளர் மன்றம். இதற்கிடையில், ஜூலை 14-ம் தேதியோடு தனது நிர்வாகக் குழுவிற்கான பொறுப்புக் காலம் முடிவடைந்துவிட்டதால், தேர்தலின் மூலம் புதிய நிர்வாகக் குழுவைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது.
படிக்க :
‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ : காவிகளின் வெறியாட்டத்தை மறைக்கும் அக்னிகோத்ரி !
‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ : இசுலாமிய எதிர்ப்புணர்வை தூண்டும் பிரச்சார வாகனம் !
ஆனால், பதிவுரிமை வழங்கப்பட்டாத நிலையில், தேர்தல் நடத்துவது தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. அதன்பிறகு நீண்ட நாட்கள் கழிந்த பின்னர்தான் டிசம்பர் 29-ம் தேதியன்று (2021) சங்கப் பதிவாளரிடமிருந்து தனது பதிவுரிமையைப் பெற்றது காஷ்மீர் பத்திரிகையாளர் மன்றம். அத்தோடு சென்ற ஜனவரி 14-ம் தேதியன்று (2022) நிர்வாகக் குழுவிற்கான தேர்தல் தேதியையும் (பிப்ரவரி 15) அறிவித்தது.
தேர்தல் தேதி அறிவித்த சில மணி நேரத்திலேயே, மன்றத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பற்றி குற்றவியல் புலனாய்வுத் துறை (CID) அளிக்க வேண்டிய சான்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, இறுதி அறிக்கை வரும்வரை மன்றத்தின் பதிவுரிமையை முடக்குவதாக தெரிவித்தது பதிவாளர் அலுவலகம்.
பதிவுரிமை கொடுத்துவிட்டு தற்போது இப்படி திடீரென முடக்குவது குறித்து, அவுட்லுக் பத்திரிகையிடம் பேசிய சங்கப் பதிவாளர் மெஹ்மூத் அஹ்மத் ஷா “காஷ்மீர் பத்திரிகையாளர் சங்கத்தின் மறுபதிவை நிறுத்துமாறு துணை ஆணையரிடமிருந்து தகவல் கிடைத்தது. அதன்படிதான் நான் செயல்பட்டேன்” என கூறினார்.
காஷ்மீர் பத்திரிகையாளர் மன்றம் மட்டுமல்லாமல், 2019-ம் ஆண்டு சிறப்புரிமை இரத்து செய்யப்பட்ட பின்னர் காஷ்மீர் பார் கவுன்சில், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைப்புகள் என பல்வேறு சிவில் அமைப்புகளுக்கு பதிவுரிமை வழங்காமல் இழுத்தடித்து வருவதும் அதற்கெல்லாம் ஒரு காரணம் சொல்லுவதும் தொடர்ந்து வருகிறது. பெயரளவிற்கான ஜனநாயக நிறுவனங்களும் ஒழித்துக் கட்டப்பட்டு முற்றுமுழுதாக இராணுவ சர்வாதிகாரத்தின்கீழ் காஷ்மீர் உள்ளது.
000
இந்நிலையில்தான், ஜனவரி 15-ம் நாள் காலை ஆயுதந்தாங்கிய போலீஸ்காரர்கள், துணை இராணுவப் படையினரின் உதவியுடன் ஸ்ரீநகரிலுள்ள காஷ்மீர் பத்திரிகையாளர் மன்ற அலுவலகத்துக்குள் நுழைந்த ஒரு பத்திரிகையாளர் குழு அலுவலக நிர்வாகிகளை மிரட்டியது. அங்கிருந்த பத்திரிகையாளர்கள், அவர்களை யார் என கேட்டதற்கு மன்றத்தின் தேர்தலை நடத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ‘இடைக்கால கமிட்டி’ என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டது.
‘இடைக்கால கமிட்டி’ என இவர்கள் தங்களுக்குத் தாங்களே நாமகரணம் சூட்டிக் கொண்டார்களே ஒழிய, உண்மையில் காஷ்மீர் பத்திரிகையாளர் மன்றம் இப்படியொரு அமைப்பைத் தேர்ந்தெடுக்கவேயில்லை. இவ்வாறு சொல்லிக் கொண்டு, போலீசு – துணை இராணுவப் படையின் உதவியோடு மன்றத்தின் அலுவலகத்தைக் கைப்பற்றிக் கொண்டது சலீம் பண்டிட் என்பவரின் தலைமையில் வந்த ஒரு சிறுகும்பல்.
பின்னர் மன்ற அலுவலகத்தில் சலீம் பண்டிட் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்துக்குப் பிறகு தன்னை தானே சங்கத்தின் “இடைக்காலத் தலைவர்” என அறிவித்துக் கொண்ட சலீம், பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் “சங்க அலுவலகத்தை பலவந்தமாக நாங்கள் கைப்பற்றியதாக கருத வேண்டாம். நாங்கள் சங்கத்தின் நிறுவன உறுப்பினர்கள். இடைக்காலத் தலைவராக நானும், பொதுச் செயலாளராக டெக்கான் ஹெரால்டின் (Deccan Herald) பணியக தலைவர் சுல்பிகர் மஜித்-உம், பொருளாளராக உள்ளூர் தினசரி நாளிதழ் கத்யாலின் (Gadyal) ஆசிரியர் அர்ஷித் ரசூல்-உம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். எங்கள் தலைமையில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடத்தப்படும்” என அறிவித்தார்.
மேலும், “காஷ்மீர் பத்திரிகையாளர் மன்றத்தில் உறுப்பினர்களாக யார் இருக்க முடியும், அவர்கள் மன்றத்தின் உறுப்பினர்களாக இருக்க தகுதியானவர்களா, சங்கத்தில் உறுப்பினராக இருக்க என்ன தகுதிகள் இருக்க வேண்டும் போன்ற பிரச்சினைகளை கண்டறிந்து தீர்க்க பல்வேறு குழுக்களை அமைப்போம்” என்றும் சொல்லி பல புதிய விதிகளையும் அறிவித்தது அக்கும்பல்.
யார் இந்த சலீம் பண்டிட்? ஜம்மு காஷ்மீர் சிறப்புச் சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்டபோது, காஷ்மீரின் தன்னுரிமைக்காக குரல் கொடுத்த பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் மீது மோடி அரசின் அடக்குமுறை மூர்க்கத்தனமாக அரங்கேறிக் கொண்டிருந்த காலத்தில், செல்லப் பிள்ளையாக அரவணைக்கப்பட்ட பத்திரிகையாளர்களுள் ஒருவர்தான் இந்த சலீம் பண்டிட்.
பிரபல ஆங்கில நாளிதழின் ஆசிரியர் ஒருவரை பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தாய்பாவுடன் (Lashkar-e-Taiba) தொடர்புப்படுத்தி, அவரது பத்திரிகையில் ஜிஹாதி பத்திரிகையாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக அவதூறு செய்த சங்கிதான் இந்த சலீம் பண்டிட். ஊடக சகோதரத்துவத்துக்கு இழுக்கை ஏற்படுத்தியதாக இந்த சலீம் பண்டிட்டை 2019-ம் ஆண்டே சங்க உறுப்பினர் தகுதியில் இருந்து நீக்கிவிட்டது காஷ்மீர் பத்திரிகையாளர் மன்றம்.
000
சிறப்புச் சட்ட ரத்துக்கு பின்பு, பத்திரிகை சுதந்திரத்தின் மீதும் பத்திரிகையாளர்கள் மீதும் மோடி அரசு தொடுத்துவரும் அடக்குமுறையை எதிர்த்துக் குரல் எழுப்பியது காஷ்மீர் பத்திரிகையாளர் மன்றம்.
மேலும், இம்மன்றம் நிறுவனம் சாராத பத்திரிகையாளர்கள் (Freelance Journalists) மற்றும் புகைப்பட கலைஞர்களுக்கான புகலிடமாக இருப்பதோடு, இளம் பத்திரிகையாளர்களும் மூத்த பத்திரிகையாளர்களும் சந்தித்து அரசியல் விவாதத்தில் ஈடுபடும் இடமாகவும் விளங்கியது. அரசியல் கட்சிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர் குழுக்களின் கூட்டங்களுக்கு இந்த மன்றத்தின் அரங்கம் பயன்பட்டது. எனவேதான், இம்மன்றத்தை தனது அல்லக்கை சலீம் பண்டிட் போன்றவர்களை வைத்து கைப்பற்றிக் கொண்டுவிட்டது சங்க பரிவாரக் கும்பல்.
ஆட்சிக் கவிழ்ப்பை ஒத்த இந்த சதியானது “ஊடக ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கும் செயல். இதுபோன்ற சம்பவங்களை தடுக்காமல் அனுமதித்தால், அது எதிர்காலத்தில் ஊடக ஜனநாயகத்துக்கே பெரும் ஆபத்து” என எடிட்டர்ஸ் கில்டு ஆஃப் இந்தியா (Editors Guild Of India) என்ற பிரபல பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. மேலும் மும்பை பத்திரிகையாளர் மன்றம்  (Mumbai Press Club), டெல்லி பத்திரிக்கையாளர் சங்கம் (Delhi Union Of Journalist) உள்ளிட்ட பல்வேறு பத்திரிகையாளர் அமைப்புகளும் இதற்கெதிராக குரல் கொடுத்துள்ளன.
000
ஜம்மு – காஷ்மீர் நிர்வாகத்தின் ஆதரவுடன் காஷ்மீர் பத்திரிகையாளர் மன்றத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்தியதற்கு காஷ்மீர் பத்திரிகையாளர் மன்றத்தின் முன்னாள் நிர்வாகக் குழு உட்பட காஷ்மீரைச் சேர்ந்த பல பத்திரிகையாளர் சங்கங்களும் கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.
“கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அறிவித்திருந்த நாளில், சில பத்திரிகையாளர்கள் மன்றத்துக்குள் நுழைந்து மன்ற உறுப்பினர்களை பிணைக் கைதிகளாக வைத்து மன்றத்தை வலுக் கட்டாயமாகக் கைப்பற்றினர். இந்த செயல் நடைபெறுவதற்கு முன்பே அங்கு ஏராளமான போலீசும், துணை இராணுவத்தினரும் ஆயுதங்களுடன் தயாராக இருந்தனர்” என பத்திரிகையாளர்களின் கூட்டறிக்கை தெரிவித்துள்ளது.
000
பாசிஸ்டுகள் ஒருபோதும் விமர்சனத்தையோ மாற்றுக் கருத்துக்களையோ சகித்துக் கொள்வதில்லை. காஷ்மீரில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் முற்போக்கு பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என மோடி அரசை விமர்சிப்பவர்கள் அனைவரும் பல்வேறு வழிமுறைகளில் ஒடுக்கப்படுகிறார்கள்.
படிக்க :
பொய்வழக்கில் காஷ்மீர் பத்திரிகையாளர் மீண்டும் மீண்டும் கைது !
ஜம்மு – காஷ்மீர் பிரஸ் கிளப்பைக் கைப்பற்றிய சங்கிப் பத்திரிகையாளர் கும்பல் !
அரசை விமர்சித்ததாக, கடந்த பத்தாண்டுகளில் மட்டும் (2021 விவரத்தின்படி) தேசப் பாதுகாப்புச் சட்டம், ஊஃபா போன்ற ஆள்தூக்கி கொடுஞ்சட்டங்களின் கீழ் 150-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதில் 20 சதவிகிதம் வழக்குகள் 2020-ம் ஆண்டில் மட்டும் போடப்பட்டிருக்கிறது. இவற்றில் பெரும்பாலானவை பா.ஜ.க. ஆட்சி செய்யக்கூடிய மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் என்பது ஏதோ மக்களின் தனித்த ஒரு பகுதியினர் மேல் செலுத்தப்படுகின்ற அடக்குமுறை அல்ல. அது ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதல்.
காவி – கார்ப்பரேட் பாசிச இருள் சூழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில், பெரும்பாலான மைய ஊடகங்கள் பாசிஸ்டுகளின் ஊதுகுழலாக மாறிவிட்டன. அப்படியிருக்கையில், பாசிஸ்டுகளுக்கு விலைபோகாத, அவர்களது மிரட்டலுக்கு அஞ்சாத ஜனநாயக உணர்வுள்ள பத்திரிகையாளர்கள்தான் இவ்வாறு ஒடுக்கப்படுகின்றனர். அவர்களுக்காக குரலெழுப்ப வேண்டியது ஜனநாயக சிந்தனை கொண்ட நம் அனைவரின் கடமையாகும்.

ஆதிரை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க