ம்மு – காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பிரஸ் கிளப்பை போலீசு மற்றும் இராணுவத்தினர் உதவியுடன் கடந்த ஜனவரி 15 அன்று சில பத்திரிகையாளர்களைக் கொண்ட கும்பல் கையகப்படுத்தியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அறிவித்த ஜனவரி 15 அன்று பத்திரிகையாளர்கள் குழு ஒன்று பிரஸ் கிளப் அலுவலகத்திற்குள் நுழைந்து அலுவலக நிர்வாகிகளை மிரட்டியுள்ளது. தங்களை இடைக்கால அலுவலகப் பொறுப்பாளர்களாக அறிவித்துக் கொண்டது. இந்த சட்ட விரோத நடவடிக்கை போலீசு மற்றும் துணை இராணுவம் ஆகியவற்றின் உதவியுடன் நடந்தேறியுள்ளது என்று வெளியேறிய அலுவலக பணியாளர்கள் கூறியுள்ளனர். இந்த நடவடிக்கையை நிர்வாகத்தின் ஆபத்தான முன்னுதாரணமாக அவர்கள் கூறியிருக்கின்றனர். ஒரு இடைக்கால அமைப்பாக தானே அறிவித்துக் கொண்ட நடவடிக்கை நாகரீகமற்றது சட்டவிரோதமானது அரசியலமைப்பிற்கு விரோதமானது எந்த முன்னுரிமையும் அற்றது என்கின்றனர், பத்திரிகையாளர்கள்.
கடந்த 2018-ல் உருவாக்கப்பட்ட காஷ்மீர் பிரஸ் கிளப் (KPC) இமயமலைப் பகுதியில் உள்ள மிகப்பெரிய சுதந்திரமான ஊடக அமைப்பாகும். குறைந்தது 300 பத்திரிகையாளர்கள் அதன் உறுப்பினர்களாக உள்ளனர்.
படிக்க :
♦ ஓ.டி.டி., சமூக ஊடகங்கள், மின்னணு செய்தி ஊடகங்களை முடக்கத் துடிக்கும் மோடி !
♦ டிஜிட்டல் ஊடகங்களின் மீதான மோடி அரசின் தாக்குதல்
காஷ்மீரில் பத்திரிகையாளர்கள் மீதான அரசின் அடக்குமுறைகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. காஷ்மீரில் தொடர்ந்து ஊடகங்கள் மீதும், பத்திரிகையாளர்கள் மீதும் கடும் ஒடுக்குமுறைகள் ஏவப்பட்டுள்ளன. பல பத்திரிகையாளர்களின் படைப்புகள் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 5 அன்று உள்ளூர் போர்ட்டலில் 26 வயதான பத்திரிகையாளர் சஜாத் அஹ்மத் தார், தனது சமூக ஊடக கணக்குகளில் போராட்டத்தின் வீடியோவை வெளியிட்டதற்காக வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார்.
“பல்வேறு பத்திரிகையாளர்களின் உழைப்பால் உருவாக்கப்பட்ட காஷ்மீர் பிரஸ் கிளப்பை ஒரு உள்ளூர் பத்திரிகையாளர்கள் குழு போலீசு மற்றும் துணை ராணுவப்படையினருடன் வந்து கைப்பற்றி, ஜனநாயகப் பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பை வெளியிற்றியுள்ளனர். இச்சம்பவம் அங்கு நிலவும் பதற்றமான சூழ்நிலைமையை உணர்த்துகிறது” என்று மூத்த பத்திரிகையாளர் பர்வாஸ் புகாரி கூறியுள்ளார்.
பத்திரிகை சுதந்திரத்தின் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதலில் வெளிபாடுதான் இந்த வலுக்கட்டாயமான கையகப்படுத்துதல் என்று கண்டனம் தெரிவித்துள்ளது எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா. மேலும், கிளப் வளாகத்திற்குள் ஆயுதப்படைகள் எப்படி நுழைந்தன என்பது குறித்த ஒரு வெளிப்படையான விசாரணையையும் கோரியுள்ளது. உள்ளூர் நிர்வாகம் கிளப்பின் பதிவு செயல்முறையை வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
சட்டவிரோதக் கும்பலால் பூட்டப்பட்ட பிரஸ் கிளப் கதவு
பிரஸ் கிளப், பிப்ரவரி 15, 2022 அன்று புதிய நிர்வாகிகளுக்கான தேர்தலை நடத்தத் திட்டமிட்டிருந்தது. அதன் பொதுச்செயலாளர் இஷ்ஃபாக் தந்த்ரே இந்த புதிய அமைப்பை உருவாக்கத்தை பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது. நாங்கள் மறுபதிவு செயல்முறையில் மும்முரமாக இருந்தோம். புதிய அமைப்பிற்கு தேர்தல் செயல்முறையைத் தொடங்கும் பணியில் ஈடுபட்டோம். இந்த அதிருப்தி குழு என்ன செய்திருந்தாலும் சட்டத்தில் எந்த அடிப்படையும் இல்லை” என்று கூறினார்.
இடைக்கால அமைப்பு என்று தங்களை தாங்களே அறிவித்து கொண்டவர்களின் அறிக்கை, “முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் – கடந்த ஆறு மாதங்களாக பிரஸ் கிளப் செயலிழந்த நிலையில் – புதிய இடைக்கால அமைப்பு ஜனவரி 15, 2022 தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டது. பிரஸ் கிளப்பில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறும் வரை மூத்த பத்திரிகையாளர் எம்.சலீம் பண்டிட் தான் தலைவர். காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் உள்ள பல்வேறு பத்திரிகையாளர்கள் ஒருமனதாக ஒரு இடைக்கால அமைப்பை உருவாக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறுகிறது.
சலீம் பண்டிட் “பிரஸ் கிளப்பில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. முந்தைய நிர்வாகியின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஜூலையில் முடிவடைந்ததால் ஒரு அமைப்பாக தொடர சட்டப்பூர்வ தகுதியை இழந்தார். அவை இனி அமைப்பாக இருக்காது. தற்போது நாங்கள் உருவாக்கிய அமைப்புதான் இடைக்கால அமைப்பாக செயல்படும். இது சட்ட விரோதமான கையகப்படுத்தல் அல்ல” என்று கூறுகிறார்.
படிக்க :
♦ மாரிதாசுக்கு முந்தைய ‘கருத்துரிமைக்’ கழிசடைகள் !
♦ உண்மையில் கருத்துச் சுதந்திரத்திற்கு ஆபத்து என்பது எப்படி இருக்கும் ?
மும்பை பிரஸ் கிளப் வெளியிட்டுள்ள அறிக்கை சட்டப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகத்திடம் இருந்து பிரஸ் கிளப்பை வலுக்காட்டாயமாக கையகப்படுத்தியதை கண்டித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் ஒன்றிய பாஜக அரசின் நேரடி ஆட்சி நடந்துவரும் சூழலில், பத்திரிகையாளர்கள் மன்றத்தை ஒரு கும்பல் அரசுப் படைகள் உதவியோடு கைப்பற்றி இருக்கிறது  என்றால், ஆளும் பாஜக – சங்க பரிவாரக் கும்பலின் ஆதிக்கம் இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. அந்த வகையில் காஷ்மீரில் ஆங்காங்கே ஒட்டிக் கொண்டிருக்கும் ஜனநாயகத்தை முற்றுமுழுதாக நெறித்துக் கொல்ல முயற்சிக்கும் சங்க பரிவாரத்தின் செயல்பாடாகவே இருக்க முடியும்.
நாடு முழுவதும் முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் சுரத்திரமான கருத்து செல்லும் உரிமை நசுக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது பத்திரிக்கையாளர்களுக்கான மன்றத்தையே கையகப்படுத்தியுள்ளது காவி பாசிச மோடி அரசின் அடியாள்படை கும்பல். பரவி வரும் காவி – கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிராக குரல் கொடுத்துவரும் பத்திரிகையாளர்கள் எழுத்தாளர்கள் சமூக செயல்பாட்டாளர்களுக்கு நாம் ஆதரவுக் கரம் நீட்டவேண்டிய தருணமிது.
சந்துரு
செய்தி ஆதாரம் : அல்ஜசீரா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க