றந்த காலத்தில் கதைத் திருட்டிற்காக பேசப்பட்டு விளம்பரமடைந்த சர்கார், நிகழ்காலத்தில் வசூல் சாதனைக்காக வியந்தோதப்படுகிறது. கூடவே கதையில் வரும் ‘அரசியல்’ காட்சிகளுக்காகவும், அ.தி.மு.க.வினர் எதிர்ப்பதை ஒட்டியும் செய்திகளையும் ஆக்கிமித்திருக்கிறது. படம் வெளியான அன்றே தரமான பிரிண்டை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ் குறித்தும் விவாதிக்கப்படுவது ஒரு கொசுறு நியூஸ். மொத்தத்தில் ஜாக்பாட் விளம்பரத்தில் சுருட்டப்பட்ட வசூல் மழை!

கார்ப்பரேட் நிறுவன மூளையின் வலிமை குறித்து கத்தி படத்தில் வில்லன் பேசுவார்! சர்காரில் நாயகனே பேசுகிறார். சாதாரண விவசாய கிராமத்தில் இருந்து வந்த விஜய் கார்ப்பரேட் கிரிமினல் மூளையில் புகுந்து துவம்சம் செய்தால் அது கத்தி. அதே  கார்ப்பரேட் மூளையோடு எடப்பாடி ஓபிஎஸ்-ஐ துவம்சம் செய்தால் இது சர்கார்.

இப்படியாக கார்ப்பரேட் உலகைச் சார்ந்தோரே இப்படங்களின் படைப்பிலும், படைத்ததிலும் இருக்கும்போது தங்களைப் பற்றிய மேற்கண்ட கதைகள் குறித்து அவர்கள் வெறுப்படையா விட்டாலும் கொஞ்சம் வெட்கமடைந்திருப்பார்கள். காசு வருகிறது என்றால் கரடியாக கத்தவேண்டுமென்றாலும் கத்துவதற்கு மானம் பார்ப்பவர்கள் அல்ல முதலாளிகள். வாங்கிய சில ஆயிரம் கடனுக்காக தற்கொலை செய்பவன் விவசாயி. சுருட்டிய சில ஆயிரம் கோடி கடனுக்காக மரியாதையுடன் நாட்டை விட்டு வெளியேறுபவர்கள் முதலாளிகள்.

படிக்க :
♦ சர்கார் படம் : கள்ள ஓட்டுக் கதை கள்ளக் கதையானது | வீடியோ | கருத்துக் கணிப்பு
♦ சுந்தர ராமசாமி – ஜெயமோகன் : 12,600 வார்த்தைகள் !

உலகின் நம்பர் 1 நாடு; அங்கே நம்பர் 1 கம்பெனி; அக்கம்பெனியில் நம்பர் 1 நிர்வாகி சுந்தர் ராமசாமியாக நடிக்கிறார் விஜய். அவரது மகிமை குறித்து பிசினஸ் மேலாண்மை படிக்கும் வெண்ணிறக் கொழுந்துகள் பலப்பல படத்தின் ஆரம்பத்தில் பேசுகிறார்கள். அண்ணாத்தே ஒரு இடத்தில் வந்தால் போட்டி கம்பெனி காலி, போட்டி பிராண்ட் காலி, நினைத்ததை சாதிப்பார், பயங்கரமான மூளைக்காரர், பிசினஸ் மாணவர்களின் கார்ப்பரேட் குரு இன்னபிற.

எங்க ஏரியா உள்ள வராதே என்று தாதாக்களின் மதுக்குப்பி சண்டைகளோடும் ஐயிட்டம் பாடல்களோடும் கதை இறைத்துப் பழகிய கோடம்பாக்கம், கார்ப்பரேட் சண்டைகளையும் அத்தகைய குழாயடிச் சண்டைகளாகவே கருதுவதில் வியப்பில்லை. இவற்றையெல்லாம் தாண்டி கார்ப்பரேட் உலகம் என்பது கண்ணுக்கு தெரியாத முறையில் இயங்கி வருகிறது.

விமான நிறுவனங்கள் ஒன்றாகச் சேர்வது, விளையாட்டு சேனல்கள் ஒன்றாக சேர்வது, பெரிய நிறுவனத்திடம் பெரும் விலைக்கு விற்றுக் கொண்டு சிறிய நிறுவனங்கள் சேர்வது என அத்தகைய கூட்டு, சேர்க்கைகளே இன்றைய முதலாளித்துவத்தின் தந்திரம். தற்போது இந்தக் கூட்டுகளுக்கிடையே முரண்பாடு வருவதும், அது நாடு – ஏகாதிபத்திய முரண்பாடாக விரிவதும் அடுத்த நிலை.

கொக்கோ கோலாவை கிண்டலடித்து பெப்சி விளம்பரம் வெளியிட்டாலும் கொக்கோ கோலாவில் பல்லி கிடந்தது என்றோ, அதன் வேதிக் கரைசலில் பிரச்சினை என்றோ செய்தி வந்தால் பெப்சி நிறுவனம் வெளிப்படையாக கொக்கோ கோலாவிற்கு உதவும் – உதவியிருக்கிறது. காரணம் குளிர்பானத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தில் அவர்கள் ஒன்றாகச் சேர்ந்தாக வேண்டும்.

சுந்தர ராமசாமி
சுந்தர ராமசாமி

ரஜினி, விஜயின் மெகா பட்ஜெட் படங்களைத் தயாரிக்கும் லைக்கா மொபைல் போன்ற நிறுவனங்கள் கூட ஆரம்பத்தில் இத்தகைய கோல்மால் வேலைகளை செய்தே கார்ப்பரேட் நிறுவனங்களாக மாறின. மாறிய பிறகு அவர்கள் வெள்ளையும் சொள்ளையுமாக தொழில் செய்வார்கள். நாட்டின் அதிபர்களுக்கு நன்கொடை கொடுப்பார்கள். அவர்களோடு பார்ட்டிகளில் சியர்ஸ் அடிப்பார்கள். அப்படிப் பார்த்தால் அம்பானி, அதானி என க்யூ வரிசையில் பலர் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள். அந்த கோல்மால் வேலை செய்தும் தொழிலை தொடர முடியாதவர்களே மல்லையா, நீரவ் போன்றோர்களாக மோடி அரசால் மரியாதையுடன் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில் போட்டி நிறுவனத்தை காலி செய்வது என்பது சட்ட விரோதமாகத்தான் நடந்தாக வேண்டும். அந்த வகையில் பார்த்தால் சுந்தர் ராமசாமி இன்றோ என்றோ நிச்சயம் கம்பி எண்ணியிருக்க வேண்டும். இதுதான் சர்கார் நாயகனின் பாத்திர வார்ப்பு! இன்னொரு புறம் அவர்களது கிரிமினல்தனத்தை படு லோக்கலாக காட்டி சரியாகச் சொல்வதாக இருந்தால் ஒரு தமிழ்ப்படத்தில் ஒரு தமிழ் கதாநாயகர் அண்டர் டிராயரில் அணு குண்டை கடத்துகிறார் என்று நம்மை நம்பச் சொல்கிறார்கள். நம்பித் தொலைப்போம்.

எப்படிப் பார்த்தாலும் ஒரு முதலாளித்துவ உலகின் மூளை என்பது எவ்வளவு கிரிமினல்தனமானது என்பதை தமிழ் சினிமாவின் மசாலா கண்ணாடி மூலம் பார்ப்பது என்பது உண்மையான கார்ப்பரேட் கொள்ளையை மறைப்பதற்கே உதவும்.

எல்லாவற்றுக்கும் மேலாக எழுத்தாளர் ஜெயமோகன் இதில் மறைந்து போன எழுத்தாளர் சுந்தர ராமசாமியை வெச்சு செஞ்சுட்டார். மற்ற எழுத்தாளர்கள் தனது எழுத்தாற்றலுக்கு இணையில்லை என்பதை உறுதி செய்து கொண்டேதான் சுந்தர ராமசாமி அவர் காலத்திய தமிழ் எழுத்தாளர்களை பாராட்டுவதோ இல்லை விமர்சிப்பதோ செய்வாராம். இதை அவர் மறைந்த நாட்களில் ஜெயமோகன் எழுதிய நினைவின் நதியில் காவியம் உறுதி செய்திருக்கிறது. இதனால்தான் ஆரம்ப காலத்தில் குரு ஸ்தானத்தில் இருந்த சுந்தர ராமசாமி பின்னர் சீடனிடம் தோற்றுப் போன ஆடுகளம் வில்லனாக மாறிப் போனார். அந்த வகையில் போட்டி நிறுவனங்களை காலிசெய்யும் சுந்தர் ராமசாமியின் பில்டப், ஜெயமோகனது இலக்கிய ஆன்மாவில் பொதிந்திருக்கும் கொலை வெறி.

கவிஞர் விக்ரமாதித்யன்

இதை நம்மைப் போன்ற பாமரர்கள் கண்டு பிடித்திருந்தாலும், ஒரு ஆக்சன் ஹீரோவின் பெயராக நம்மவர் பெயர் இருக்கிறதே என தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கிற்காக தனது – பிறரது சொத்துக்களை எழுதிக் கொடுத்துப் பயணம் செய்யும் கவிஞர் அண்ணாச்சி விக்ரமாதித்யன் போன்றோர்  மனமுருகும் வாய்ப்பு இருப்பதால் காலச்சுவடு கண்ணன் கூட கவலைப்பட வாய்பில்லை.

இயக்குநர் முருகதாஸுக்கு இலக்கிய அக்கப்போர் ‘அறிவு’ கிடையாது. எழுத்தாளர் ஜெயமோகனுக்கு பொருளாதார அறிவு கிடையாது. இருவருக்கும் இலக்கியம் – பொருளாதாரத்தை ஆளும் அரசியலின் அரிச்சுவடி தெரியாது. ஆகவே பூலோக சொர்க்கத்தின் நம்பர் ஒன் கார்ப்பரேட் மூளை இப்படியாக கோடம்பாக்கத்தின் கதை இலாகாவில் சதை கிழிந்து சாயம் போன ஒன்றாக இளிக்கிறது. ஒருவேளை கூகிள் சுந்தர் பிச்சை, மைக்ரோ சாப்ட் பில்கேட்ஸ், பெப்சியின் முன்னாள் தலைவர் இந்திராநூயி போன்ற நம்பர் ஒன் மூளைகள் இதைக் கேள்விப்பட்டால் ஜாலியாக ஒரு பெக் கூடுதலாக அடித்து விட்டு அடுத்த வேலையைப் பார்ப்பார்கள்.

படிக்க:
கருப்புப் பணம் = ரஜினி – ஷங்கர் – ஜெயமோகன் – லைக்கா

ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் பகாசுர சுரண்டலை, மக்கள் விரோதத்தை இப்படியாக ஒரு திறமை வாய்ந்த – அதுவும் அண்ணாச்சி கடையில் ஐம்பது காசு கடலைமிட்டாயில் ஊழலை கண்டுபிடிக்கும் அற்பத்தனமான – மூளையாக, ஆக்சன் ஹீரோவாக காட்டுகிறார்கள்.

திருவல்லிக்கேணி பெரிய தெருவில் இருக்கும் இந்து மேல்நிலைப்பள்ளியில் பல பிரபலங்கள் படித்திருக்கிறார்கள். அந்தப் பள்ளிக்குத்தான் ஓட்டுப் போட அமெரிக்காவில் இருந்து வருகிறார் விஜய். அந்த வாக்கை ஒரு குவார்ட்டருக்கு கள்ள ஓட்டாக போட்டுவிடுகிறார் யோகி பாபு. அவரது வேலையால் விஜய் தனது கார்ப்பரேட் மூளையைப் பயன்படுத்தி மறுதேர்தலை நடத்தவும் வைக்கிறார். அதன் மூலம் முதலமைச்சராகவும் ஆகும் நிலையில், இப்போதைக்கு அடுத்து சில படங்களில் நடிக்க இருப்பதால் போனால் போகிறது என சகாயம் ஐ.ஏ.எஸ்-ஐ முதலமைச்சராக மாற்றுகிறார்.

ஒருவேளை கூகிள் சுந்தர் பிச்சை, மைக்ரோ சாப்ட் பில்கேட்ஸ், பெப்சியின் முன்னாள் தலைவர் இந்திராநூயி போன்ற நம்பர் ஒன் மூளைகள் இதைக் கேள்விப்பட்டால் ஜாலியாக ஒரு பெக் கூடுதலாக அடித்து விட்டு அடுத்த வேலையைப் பார்ப்பார்கள்.

அரசு வட்டாரத்தில் பேசிப் பார்த்தீர்கள் என்றால் இந்த சகாயம் எப்பேற்பட்ட விளம்பர மோகி என்பதறியலாம். அந்த வகையில் அவரும் இந்த போனால் போகிறது முதலமைச்சர் போஸ்ட்டை தேவன் பங்கு போடாமல் தந்த சூப்பர் அப்பமாக கருதுவார். அதை சட்டைப் பையில் இருந்து தானமாக வீசிய விஜய் ஒரு மாபெரும் வள்ளலாக சகாயம் அவர்கள் எதிர் வரும் கூட்டங்களில் பேசப்படுவது உறுதி.

கள்ள ஓட்டு குறித்து மவுனம் சாதிக்கும் தமிழகம் கள்ள உறவிற்கு மனைவியை கொடுக்கும் மானங்கெட்ட கணவனாக இருக்கிறது என்று விஜய் பேசுகிறார். அப்படிப் பார்த்தால் கள்ள ஓட்டால் தனது ஓட்டை பறிகொடுத்த பெண்களுக்கு என்ன உவமை என்று சர்கார் படைப்பாளிகளைத்தான் கேட்க வேண்டும். ஆண்கள் ஊர் மேய்வது சகஜம்தானே, பெண்தானே பிரச்சினை என்று அப்பட்டமான ஆணாதிக்கத்தை வைத்து யோசித்திருக்கிறார்கள் சர்கார் குழுவினர். ஒரு படத்தின் திருப்பு முனை எனும் அக்கப் போருக்காக தமிழக மக்களை இப்படி இழிவுபடுத்தியிருக்கிறார்கள். இந்தக் கதையை பிளாக்கில் விற்றுத்தான் வசூலில் சாதனை என்று விளம்பரம் வேறு! மூணு சீட்டுக் காரன் கூட இப்படி பச்சையாக மோசடி செய்யமாட்டான்.

நம்ம ஆட்டோக்காரர்கள் இன்டிகேட்டரை இடது புறம் போட்டு வலது புறத்தில் கையைக் காண்பித்து நேராக போவார்கள் என விவேக் சொன்னதை கொஞ்சம் மாற்றிப் போட்டு லெப்டில் ஏர்போர்ட்டு, ரைட்டில் வீடு, நேரே போனால் என நீதிமன்றத்திற்கு போகிறார்கள். அங்கே நீதிபதியின் அருகில் அமர்ந்து நேற்று சாப்பிட்ட பிரியாணி ஜீரணமாக என்ன கசாயம் குடிப்பது என்று ஹீலர் பாஸ்கர் பேசுவது போல விஜய் லா பாயிண்ட் பேசுகிறார். அவர் அமர்த்திய பல இலட்ச ரூபாய் ஊதியம் வாங்கும் ஜேட்மலானி சார் பிச்சுட்டீங்க என்று கை தட்டுகிறார். நீதிபதியும் இத்தனை நாள் குப்பை கொட்டியும்  கிடைக்காத ஒரு புதிய லா பாயிண்டை பார்த்து வாய் பிளக்கிறார்.

நமது ஓட்டை ஒருவர் கள்ள ஓட்டாக போட்டு விட்டால் நமது உரிமைக்கு தேர்தல் கமிசன் வைத்திருக்கும் பரிகாரம் என்ன? அதுதான் 49 பி-யாம். அதன்படி தனது வாக்கைப் போட விஜய் முடிவு செய்து அதையே வாட்ஸ்ப்பில் பற்ற வைக்கிறார். திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்கள் தமிழகம் எங்கும் இந்த லா பாயிண்டை வைத்து வரும் மக்களுக்காக வாதாடுகிறார்களாம். அவர்கள் பின்னே தான் இருப்பதை காட்டிக் கொள்ள வேண்டாம் என்று அடக்கமாக வேறு விஜய் கூறுகிறார்.

இன்றைக்கு கைப்பிள்ளையின் மீம்களில் இடம்பெறும் அளவுக்கு பீஸ் பீசாகிப் போன சி.பி.ஐ எனும் போலீசுப் பிரிவு ஒரு காலத்தில் மலையாளப் படங்களில் மாபெரும் சாகசக்காரத் துறையாக சித்தரிக்கப்பட்டது. லோக்கல் போலீசின் மீசைகளை அலட்சியமாக ஒதுக்கிவிட்டு உருவிவிட்ட பூணூலால் கொலைகாரனை கண்டுபிடிப்பார் மம்முட்டி. அதே மம்முட்டி தற்போது கொலைகாரனை பிடிக்க காஃபி குடித்தவாறு விக்கி பீடியாவின் பாய்சன் தலைப்பில் ஆராய்ச்சி செய்வார். ஏனப்பா ஒரு அதி உயர் போலீசு விசம் குறித்த நவீன விசயங்களை விக்கிப்பீடியாவின் துணை கொண்டுதான் கண்டுபிடிக்கிறார் என்றால் அந்த விசமே தனது நிலை குறித்து வருந்தி தற்கொலை செய்து கொள்ளாதா?

அண்டர் டிராயரில் அணு குண்டை கடத்தும் நம் தமிழ் நாயகர்கள்.

கிட்டத்தட்ட அந்த நிலையில்தான் இந்த 49-பி வருகிறது. ஏதோ சில ஆமை வடை வக்கீல்களோடு டிஸ்கசன் செய்து இந்த பயங்கரமான பாயிண்டை கண்டு பிடித்திருக்கிறார்கள் போலும். அல்லது இந்த பாவத்தை சர்காரின் ஒரிஜினல் படைப்பாளியான வருண் ராஜேந்திரன் கூட செய்திருக்க கூடும். கதைதான் திருட்டே ஒழிய மசாலா மாசாலாதான், அது தேனாக இருக்குமா என்ன?

ஒருவர் ஓட்டை இன்னொருவர் கள்ள ஓட்டாக போட்டால் அந்த ஒருவர் என்ன செய்ய முடியும்? நெஞ்சு வெடித்து மாரடைப்பு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்த பிரிவை வைத்திருக்கிறார்கள். அதன்படி சிவாஜி கணேசன், பூத்தில் இருக்கும் தேர்தல் அதிகாரியைச் சந்தித்து 49-பி படிவத்தை வாங்கி வாக்களித்து அதை தனியாக கொடுக்கலாம். மற்றபடி மொத்த வாக்கு எண்ணிக்கையில் அது சேர்க்கப்படாது. கள்ள ஓட்டையும் மொத்த எண்ணிக்கையில் பிரிக்க முடியாது. ஆகவே இந்த 49-பியால் எந்த விளைவும், நல்லதும் நடந்து விடாது. சரி இலட்சக்கணக்கானோர் இப்படி புகார் கொடுத்தாலும் இருக்கின்ற சட்ட நடைமுறைப்படியும் ஒன்றும் ஆகிவிடாது.

படிக்க :
♦ சகாயம் : சட்டவாதப் போலி போர்வீரன் !
♦ திரை விமர்சனம் : அறம் ஒரு வரம்தான் ஆனாலும்….

மேலும் பீகார் பாணி பூத் கேப்சரிங் என்பது தற்போது மின்னணு எந்திரத்தால் வழக்கொழிந்து போய்விட்டது. ஆகவே ஒரு தொகுதியில் ஒரு சிலவற்றுக்கு மேல் கள்ள ஓட்டு விழுந்து விடாது. தற்போது ஆதார் அடையாள அட்டையை வாக்காளர் அடையாள அட்டையோடு இணைத்து விட்டால் அந்த ஒரு சில கள்ள ஓட்டுக்களுக்கும் வழியில்லை என்று தேர்தல் கமிசன் கூறுகிறது. அந்தபடிக்கு ஓட்டுப் போட ஆதார் அவசியம் என்ற ஆள் காட்டி வேலையைத்தான் சர்கார் வலியுறுத்துகிறது.

விக்கிபீடியாவில் கிரியேட்டிவிட்டியை கண்டடைய ஆட்டையைப் போடும் ஒரு கும்பலால் நமது உரிமைகள் எப்படி பறிபோகிறது பாருங்கள்! இந்த அக்கப்போருக்காக மற்ற எல்லாவற்றையும் காமெடி பீசாக்கிவிட்டார்கள் படக்குழுவினர். திருவல்லிக்கேணி தேர்தல் பூத்திலேயே நானும் காரில் ஓரமா ஒக்காந்து வரவா என்று கீர்த்தி சுரேஷா, ரமேஷா கேட்கும் போதே சர்கார் கதாநாயகியின் இடம் தெரிந்து விடுகிறது.

இதற்கு மேல் வம்படியாக பார்வையாளர்களின் கண்ணில் இருந்து கண்ணீரை கையை விட்டு எடுப்பதற்காக கந்து வட்டிக் தீக்குளிப்பை சேர்த்திருக்கிறார்கள். எடுத்த கையோடு அடுத்த காட்சிகளில் விஜய் ஐயிட்டம் சாங்கிற்கு குத்தாட்டம் போடுகிறார். இதுதான் 200 கோடி ரூபாய் வசூலின் சாமர்த்தியமாம். மதுரை அன்புவின் கந்து வட்டி கொடுமைக்காக ஒரு தயாரிப்பாளரே தற்கொலை செய்திருக்கிறார். இதை தட்டிக் கேட்கத் துப்பற்ற விஜய் இங்கே இசக்கிமுத்து கொலைக்காக கோபங்களை ஃபார்வர்டு செய்யும் வாட்ஸ் அப் இளைஞர்களை நக்கல் செய்கிறாராம்.

இப்போதைக்கு அடுத்து சில படங்கள் நடிக்க இருப்பதால் போனால் போகிறது என சகாயம் ஐ.ஏ.எஸ்-ஐ முதலமைச்சராக மாற்றுகிறார். தளபதி விஜய்.

ஆனால் வறுமை, ஏழ்மை, துயரம், மரணம் போன்றவற்றை ஒரு நாயகனது ரொமாண்டிக்கான ஆக்சன் படத்திற்காக ஆங்காங்கே முந்திரிப் பருப்பு போல தூவும் அயோக்கியத்தனத்தைத்தான் நம்மால் சகிக்க முடியவில்லை. அப்படித்தான் இந்தப் படத்தில் பல செய்திகள் வந்து போகின்றன. ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை அரசு வெளிப்படையாக கொல்லும்போது மோடி அரசு அதை வெளிப்படையாக கண்டிக்காத போது அந்த மீனவர்கள் நாங்கள் இந்தியாவில் இல்லை என்று அறிவியுங்கள் என்கிறார்கள். இதைக்கூட வெளிப்படையாக கூறி மோடி அரசையோ, சிங்கள அரசையோ கண்டிக்கத் துப்பற்ற சர்கார் கூட்டம் என்னவெல்லாம் பேசுகிறது?

அதாவது விஜய் மீனவர் குடும்பமாம். வாக்களிப்பதற்காக அவரது தந்தை நடுக்கடலில் இருந்து வர இருந்தாராம். மற்றவர்கள் அஸ்தியை கடலில் கரைப்பார்களாம். விஜய் மட்டும் அப்பாவை கடலில் கரைத்து விட்டாராம். இதை மீனவர்கள் வாழும் அயோத்தியா குப்பத்தில் கூறுவாராம். ஒக்கி புயல் முதல், பாக் நீரிணை வரை மீனவர்கள் இந்த அரசால் சாகடிக்கப்படுகிறார்கள். நடிகர் விஜயோ அந்த அவலத்தை காசாக்குவது எப்படி என்று கதை செய்வாராம். அதற்கு முருகதாஸும், ஜெயமோகனும் மூளையை கொடுப்பார்களாம். பிறகு சன் டி.வி மாறன்கள் அதை வசூலாக்குவார்களாம்.

இந்த இலட்சணத்தில் மருத்துவமனைப் படுக்கைகளில் இருக்கும் நோயாளிகளை வைத்து சர்கார் விஜய் நமக்கு விஜயகாந்த் பாணியில் அ.தி.மு.க அரசின் ஊழலை அம்பலப்படுத்துகிறாராம். விஜயகாந்தே இப்போது அஸ்மித்துவிட்ட நிலையில் தளபதி விஜயின் அம்பலம் என்ன செய்து விடும்?

படிக்க :
♦ மெர்சல் : ஒரு மசாலா மெசேஜ் உண்மை பேசுமா ?
♦ நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா ?

பொதுப்பணித்துறைதான் டெங்கு கொசுவிற்கு காரணம் என்ற மகத்தான் உண்மையை கண்டுபிடித்த சர்காரின் அல்பங்களை விட அ.தி.மு.க அரசு பரவாயில்லையோ என்று ஒரு கணம் தோன்றத்தான் செய்கிறது. ஏனெனில் விக்கு வைக்காத ஜெயக்குமாரோ, காசு பணத்தை விட்டு வைக்காத விஜய் பாஸ்கரோ கொசு, டெங்கு போன்ற வஸ்துக்கள் சுகாதரத்துறையில்தான் வரும், பொதுப்பணித்துறையில் வராது என்ற அளவுக்கு அறிவுள்ளவர்கள்.

இனி விஜய் அமைக்கப் போகும் சர்காரில் முருகதாஸ், ஜெயமோகன் போன்றோரெல்லாம் அமைச்சாரானால் என்ன நடக்கும்? சுள்ளி பொறுக்கும் மலைவாழ் மக்கள் ஜெயமோகனின் காடு படிக்க வேண்டும், இராணுவத்தில் பணி பெறுவதற்கு துப்பாக்கி படத்தில் இருந்து விடையளிக்க வேண்டும் என்று வராதா என்ன?

இதில் ஒளிப்பதிவு சூப்பர், பின்னணி இசை அட்டகாசம், உடை ஆடை அருமை என்று டெம்பிளேட் வார்த்தைகளைப் போட்டு கார்ப்பரேட் ஊடகங்கள் விமர்சனம் என்ற பெயரில் சோப்பு போடுகின்றன. இது கூடப் பரவாயில்லை சில அப்பாவிகள், கேள்வி கேட்டால்தான் பதில் வரும்,  காலை மடக்கினால்தான் உட்கார முடியும், கண் இருந்தால் தான் கண்ணடிக்க முடியும், நீ பாதி முட்டாள் என்றால் கோபப்படுவாய், நீ  பாதி புத்திசாலி என்றால் பெருமைப்படுவாய் போன்ற மண்டபத்தில் சிங்கிள் டீ வாங்கிக் கொடுத்தால் எழுதிக் கொடுக்கப்படும் கிளி ஜோசிய வசனங்களுக்காக ஜெயமோகனை பாராட்டுகிறார்கள். என்ன இருந்தாலும் நான்கு வெண்முரசின் உழைப்பல்லவா!

தீபாவளியை குறி வைத்து இறங்கியிருக்கிறது சர்கார். தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பது இரண்டு மணிநேரம்தான் என உத்தரவு போட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். வட மாநிலங்களில் மக்களின் பண்டிகையான தீபாவளி அன்று கூடக்குறைய பட்டாசு வெடித்தால் கண்டுகொள்ளாமல் இருப்போமென பா.ஜ.க அரசுகளோ பிற அரசுகளோ இருக்கும் போது தமிழக அரசு மட்டும் எல்லா மாவட்டங்களிலும் தடை மீறி வெடித்தவர்கள் மேல் வழக்கு போட்டிருக்கிறது. அந்த அளவுக்கு  சட்டத்திற்கும், அந்த சட்டத்தை கையில் எடுத்திருக்கும் காவி கோஷ்டியினருக்கும் பம்மி பணிந்து ஆள்கிறது எடப்பாடி அரசு! இப்பேற்பட்ட அரசை பயங்கரமாக பேசி எதிர்க்கிறாராம் விஜய். அதில் கோமளவல்லி என்ற பெயரோடு முதலைமைச்சரின் மகளாக பாப்பா வருகிறாம்.

கோமளவல்லி உயிரோடு இருந்த போது கொடநாடு சென்று ஒன் பாத்ரூம் போவதை கூட தள்ளி வைத்து விட்டு மணிக்கணக்கில் காத்திருந்தார் சர்கார் விஜய். அந்த சூரர் இன்று கருணாஸ் போன்ற காமடியன்களே வம்பிழுத்து சண்டை போடும் எடப்பாடி கும்பலை பயங்கரமாக எதிர்க்கிறாராம். இதனால் காண்டான எடப்பாடி கும்பல் உடனே தியேட்டர்கள் மூலம் ஆர்ப்பாட்டம் செய்யுமாம். இவர்கள் இருவரையும் நாம் எதிர்க்க வேண்டுமென்றால் எந்த இடத்திற்கு செல்வது?

தமிழகத்தில் ஊழல் என்று ரஜினி, கமல், குருமூர்த்தி, அமித்ஷா பேசுவது போல சர்கார் விஜயும் பேசுகிறார். இதனால் தமிழகத்தில் ஊழல் இல்லை என்று நாம் சொல்லவில்லை. ஆனால் ஊழலின் தலைநகரம் புதுதில்லியில் இருக்கும் போது விஜய் போன்ற சூரப்புலிகள் பாஜகவை பேசாமல், மல்லையா, நீரவ் மோடி, பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி கொள்ளைகளை பேசாமல் கமிஷன் பிரதர்சை மட்டும் கண்டிப்பது ஏன்? தில்லியில் கை வைத்தால் என்ன நடக்கும் என்பதற்கு கவுரி லங்கேஷ், கல்புர்கி முதல் சமீபத்தில்  கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர்கள் வரை பல செய்திகள் இருக்கின்றன. ஆகவே மறந்தும் காவிக் கறையை பேசக்கூடாது என்பதை ஜெயமோகன் மட்டும் சொல்ல வேண்டியதில்லை. விஜய் வகையறாக்களுக்கும் அது நன்றாகவே தெரியும்.

ஒன்று மட்டும் நிச்சயம். விஜய் தலைமையில் ஒரு சர்கார் அமையுமானால் நாம் ஐம்பது ஜெயலலிதா, நூறு எம்.ஜி.ஆர்கள் ஒன்றாக சேர்ந்து செய்யும் வன்முறையை அனுபவிப்பது உறுதி. ஒரு பாசிஸ்டின் ஆட்சியை விட ஒரு கோமாளி பாசிஸ்டு ஆட்சியில்தான் கொடுமைகள் அதிகம்!

ஒரு காட்சியில் இலவச பொருட்களை ஆவேசமான முகத்துடன் வீசுகிறார் இயக்குநர் முருகதாஸ். இது குறித்து மக்கள் பலர் பொங்கி எழுந்திருக்கிறார்கள். அதனால் அதைத் தவிர்ப்போம். ஆனால் அதே மக்கள் பிளாக்கிலும், ஒயிட்டிலும் போடும் பிச்சையால்தான் இந்த சினிமாக் கூட்டம் நத்திப் பிழைத்திருக்கிறது! இந்த ஒட்டுண்ணிகளை அடித்து விரட்டாமல் இங்கே ஊழலையோ, அதிகார முறைகேடுகளையோ ஒழிக்க முடியுமா என்ன?

– இளநம்பி

9 மறுமொழிகள்

 1. ஒரு பாசிஸ்டின் ஆட்சியை விட ஒரு கோமாளி பாசிஸ்டு ஆட்சியில்தான் கொடுமைகள் அதிகம்!//👌.
  யதார்த்தமான எதிர்காலத்திற்கான கருத்து…
  சர்கார் நாயகன் விஜய் இந்த அ.தி.மு.க காலிகள் செய்யும் விளம்பரங்களைப் பார்த்து முதலமைச்சர் கனவில் தூக்கமில்லாமல் தவிப்பார்….

  • முரளி சார், இவனங்களுக்கு வசூல் வந்துருச்சு அதுக்கு மேல கட்சி, கோட்டையெல்லாம் போனசுதான். முருகதாஸ் முன்ஜாமீன், சர்கார் காட்சிங்க கட்டுன்னு எல்லாம் சமூகமாக போறதப் பாத்தா, அடுத்த எலக்சன்ல தளபதி விஜய் இவுங்களுக்கு பிரச்சாரம் செஞ்சாலும் செய்வாரோ?

 2. உங்களுக்கு ஓட்டுப்போட்ட கை இதுதான் அடி….ங்கடா… இலவசத்த வாங்க நின்ன காலு இதுதான் அடிங்கடா….. உங்க அரசாங்கத்த கேள்விக்கேட்காத வாய் இதுதான் அடிங்கடா…..என்று சர்கார் பட நாயகன், அயோத்திக்குப்பம் மக்கள் போரட்டத்தை காட்டும் காட்சி.

  ஏற்கனவே டாஸ்மார்க், தூத்துக்குடி, எட்டு வழிச்சாலை என ஓராயிரம் போராட்டத்தில் உயிரிழந்த மக்களைத்தான் இலவசங்களுக்கு சோரம்போன, கூட்டிக்கொடுக்கும் கூட்டமாக காட்டுகிறது சர்க்கார். வெறும் ஓட்டை கொடுத்து நாட்டை விழுங்கும் கும்பலை காட்ட வக்கற்றதுகள் கள்ள ஓட்டு நல்ல ஓட்டு என்று பிலிம் காண்பிக்கிறது. வாயில் சுட்டவர்களை எதுவும் புடுங்காத நீதிமன்றங்கள் 49 பி-க்கு குதிப்பதாக காட்டுவது நல்லக் கூத்து.

  பன்ஞ் டயலாக், பண்ணை வீடு, பைவ் ஸ்டார் வாழ்க்கை, வெள்ளைத் தோல் நாயகி என்று ஒரு படத்தை எடுத்து அதை கள்ள டிக்கட்டுகள் மூலம் 300 கோடி ரூபாய்க்கு விற்று பங்கு போட்டுக்கொள்ள அலையும் கொள்ளைக் கூட்டம் இது. அ.தி.மு.க ரௌடிகளுக்கும் இந்த சினிமா கும்பலுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. இதை மக்களுக்கு எப்படி தெரிவிக்கப் போகிறோம்?

  • //இதை மக்களுக்கு எப்படி தெரிவிக்கப் போகிறோம்?//
   எதாச்சும் ஒரு புதுப்படத்திற்கு “2.0” மாறி…..ஒரு பெரிய கேம்பெய்ன் எடுத்தால் என்ன?

 3. தீபாவளி முடிச்சி வேலைக்குப்போன நாங்க …டிரெயின்ல பலகாரங்களை பகிர்ந்துட்டோமோ, இல்லையோ, சர்க்கார்.. தமிழ் ராக்கர்ஸ் எச் டி பிரிண்ட ஷேர் இட்ல டிரெயின் பூரா பகிர்ந்துட்டோம். இவனுங்களோட படத்தை இப்படிப் பாக்கும்போதே 300 கோடி வசூல்ன்னா, நாங்களும் தியேட்டருக்கு போனா எவ்வளவுக் கோடி? எம்மாடி….?

  ஜனங்கள கேள்விக்கேட்க சொன்ன ஹீரோ…… எல்லாத் தியேட்டர்லயும், எல்லா முக்குலயும் போஸ்டர்ல கோவமாக முறைச்சிட்டிருந்தார். மதியம் திரும்பும்போது, ஒரு போஸ்டரையும் காணோம். அண்ணன் ஆளுங்களையும் அங்க காணோம். தியேட்டரெல்லாம் மயான அமைதி. இது, அதிமுக அடிமைகளின் வேலையின்னு தெரிஞ்சிது.

  ஜனங்க பிரச்சனைக்கு வேணாம், அவரோட படத்தோட பிரச்சனைக்கு உடனே குரல் கொடுத்து ரோட்டுக்கு வந்திருக்கலாம்….. ரோட்டுல வாஸ்து சரியில்லயோ என்னவோ… அதால நீதிமன்றம் படிக்கட்டுல நெடுஞ்கிடையா வீழ்ந்துட்டாங்க…போல….சர்கார் படத்துக்கு நல்ல கிளைமாக்ஸ்.

 4. விமர்சனம் சரியான சரவெடி! ஆனா ரெண்டு தபா படிச்சாத்தான் சப்தம் கலக்கலாக கேக்குது. சர்கார் நாடகம் பார்ட் 2 எதிர்பார்த்தோம். பரவாயில்லை விமர்சனம் வந்துருச்சு. இதுனாலா நாடகத்தை கைவிட்ராதீங்க சார்! படத்துல இரண்டு சுட்ட வடையை சொல்றேன். கட்சி ஆபீசுல விஜய் சண்டை போடுற காட்சி, இருபக்கம் மாடிப்படி வரிசையில்… இது மாட்ரிக்ஸ் பார்ட் 2. அதே மாதி ஒரு சீன்ல கருப்பு காருங்க சுத்தி வரும்.. இது இன்டர்நேஷன் படத்துல வர்ர காட்சி. இவங்களுக்கு சொந்த புத்தியும் இல்லை, வந்த புத்தியும் இல்லை.

 5. இவ்வளவு எழுதனிங்க …விஜய்க்காக மல்லுக் கட்டற நம்ம பழம் பெருச்சாளி , பல கட்சிகள் மாறிய பச்சாேந்தி ” பழ .கருப்பைய்யா ” பற்றி ஒரு வார்த்தை கூறாமல் விட்டது ஏன் ..?

  ஆமாண்ணே …முதல் ரெண்டு நாள் வசூல் இருநூறு காேடி …முன்னூறு காேடி என்று பல படங்களுக்கு பப்ளிக்கா செய்திகள் வருதே … இதுக்கெல்லாம் வருமான வரித்துறை ஏதாவது நடவடிக்கையும் எடுத்து வரி வசூல் பண்ணவாங்களாண்ணா ..?

 6. சில ஆயிரம் கடனுக்காக தற்கொலை செய்பவன் விவசாயி. சுருட்டிய பல ஆயிரம் கோடி கடனுக்காக அரச உதவியுடன் நாட்டை விட்டு கள்ளமாக வெளியேறுபவர்கள் என்றல்லவோ இருக்கவேண்டும்.

 7. மிஸ்டர் திமுக ஆட்சில மீனவர்கள் சாகலயா..காங்கினஸ் கூட தானே திமுக கூட்டணில இருந்திசாசு..ஏதோ மோடி வந்ததுக்கு பிறகு தான் மீனவர்களை இலங்கை கடற்படை சுடுறதாக முழுப் பூசனிக்காய சோத்துல மறைக்கிறீங்களே திராவிட சொம்பே

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க