ணிரத்னம் இயக்கி வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் தற்போது சமூக ஊடகங்கள் முதல் அனைத்து இடங்களிலும் பரபரப்பான பேசு பொருளாகியுள்ளது.

இது வலதுசாரி சிந்தனையாளரான கல்கி அவர்களால் 1950-ல் சோழர்களைப் பற்றி எழுதப்பட்ட ஒரு வரலாற்றுப் புனைவு நாவல். இந்த நாவலில் சோழ இளவரசன் ஆதித்த கரிகாலன் நான்கு பார்ப்பனர்களால் கொல்லப்பட்டதைத் திரித்து பாண்டிய ஆபத்துதவிகளால் தான் கொள்ளப்பட்டதாக அந்த நாவலின் ஆசிரியிர் கல்கி எழுதியுள்ளார்.

பார்ப்பனரான ரவிதாஸ் எப்படி பாண்டியர்களின் ஆபத்துதவிகளாக முடியும். ஆதித்த கரிகாலனை கொன்றது பார்பனர்கள் தான் என்பது கல்வெட்டு சான்றுகளிலேயே உள்ளது. மேலும் பார்ப்பனரான ஆழ்வார்க்கடியானுக்கும், அநிருத்த பிரம்மராயருக்கும் மிகை முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நாவலை திரைப்படமாக எடுக்க வலதுசாரி மணிரத்னம் இயக்கி, ஜெயமோகன் திரைக்கதை எழுதியிருக்கிறார்.

படிக்க : சோழர் பெருமை – பார்ப்பன பெருமை ரெண்டுமே ஒன்னுதான் | பொன்னியின் செல்வன் திரை விமர்சனம் | மருது வீடியோ

இந்தப் படம் தமிழர்களின் வரலாறு, தமிழர்களின் பண்பாடு இதை நாம் கொண்டாட வேண்டும் என கருத்து பரப்பப்படுகிறது. மக்களைச் சுரண்டிப் பிழைத்த மன்னர்களின் வரலாறு மக்களின் வரலாறாக முடியாது. இவர்களின் திரைப்படமும் மக்களுக்கானதாக இருக்க முடியாது. இந்த படத்தின் ட்ரைலரில் பொன்னியின் செல்வனாக நடித்த ஜெயம்ரவி “நான் சோழ நாட்டின் காவலன் சோழ மக்களின் சேவகன்” என்று கூறுகிறார். மன்னன் மக்களின் சேவகனாக இருக்க முடியுமா?

ஆதித்த கரிகாலன் எனும் ‘தமிழ்’ பெயரை ஆதித்திய கரிகாலன் என்ற ‘ஆரிய’ பெயராக திரித்துக் கூறியுள்ளனர். பொன்னியின் செல்வன் திரைப்படத்தை கலை – கலைக்காக என்று கூட பார்க்க முடியாது. இந்த படம் நாவல் படித்தவர்களை திருப்திப் படுத்தவில்லை. நாவலை படிக்காதவர்களுக்கு புரியும்படி இல்லை பொழுதுபோக்காக கூட மக்களை திருப்திப்படுத்தும் வகையிலும் இல்லை.

இந்துத்துவ காவி பாசிசம் தலைவிரித்தாடும் இந்த சூழலில் சனாதனத்தை வளர்த்த சோழ மன்னனின் திரைப்படத்துக்கான தேவை தான் என்ன? இந்து மன்னர்களைப் பற்றி படம் எடுக்க வேண்டும் என்று கூறுகிறார் பா.ஜ.க தலைவர் அமித்ஷா. வள்ளுவருக்கு காவி உடுத்தி இந்துக்களின் பெருமை பட்டியலில் சேர்த்தது போல தமிழ்நாட்டு மன்னர்களையும் அந்தப் பட்டியலில் சேர்ப்பதற்கான முன்னோட்டம்தான் இந்த பென்னியின் செல்வன்.

யார் இந்த பொன்னியின் செல்வன்? அருள்மொழிவர்மன் என்ற இயற்பெயர் கொண்ட ராஜராஜசோழன். சோழ நாட்டை 985 முதல் 1014 வரை ஆட்சி புரிந்தார். இவரின் ஆட்சிக் காலத்தில் ராணுவம், சமயம், கட்டிடக்கலை ஆகியவை சிறந்து விளங்கியதால் இவரின் காலம் பொற்காலம் என போற்றப்படுகிறது. இவர்கள் கூறும் பொற்காலம் உழைக்கும் மக்களுக்கான பொற்காலமா?

ராஜராஜசோழன் ஆட்சியில் உழைக்கும் மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு கோவிலுக்கு கொடுக்கப்பட்டது. நிலத்தை இழந்த மக்கள் வேறு இடத்திற்கு செல்லக் கூடாது என்று சட்டம் போட்டு, அவர்களை கோயிலின் அடிமைகளாக்கினர். மக்களின் உழைப்பைச் சுரண்டி, மக்களை அடிமையாக்கி கட்டப்பட்டதே தஞ்சை பெரியகோவில். தஞ்சை பெரிய கோவிலின் பிரம்மாண்டத்தைப் பற்றி கூறுபவர்கள், அந்த கோயிலை கட்டிய மக்களின் துயர வாழ்வைப் பற்றிப் பேசுவதில்லை.

சோழர்கள் ஆட்சியில் பார்ப்பனர்களின் நிலை மேலோங்கி இருந்தது. மன்னரின் உயிருக்குச் சமம் பார்ப்பனரின் மயிர் எனும் மனுநீதிக்கிணங்க, ஆதித்த கரிகாலனை கொன்ற பார்ப்பனருக்கு வெறும் முடி மட்டும் வெட்டப்பட்டு நாடுகடத்தப் பட்டதுதான் பார்ப்பன குற்றவாளிக்கான உச்சபட்ச தண்டனை.

கடல் கடந்து கிழக்காசிய நாடுகளை வென்றவர்கள் சோழர்கள் என்று பெருமையாக கூறுப்படுகிறது. போரில் மக்களை கொன்று குவித்ததை, பெருமையாக கருத முடியுமா? இராஜராஜசோழனை தமிழன் என்று ஆண்ட பரம்பரை பெருமை பேசுவதும், நாயகனாக கொண்டாடுவதும் நம் அடிமை புத்தியைத்தான் காட்டுகிறது.

படிக்க : திரை விமர்சனம்: பொன்னியின் செல்வனை குப்பையில் வீச வேண்டும் | மருது வீடியோ

இந்திய முதலாளி அதானி மோடியின் ஆட்சியில் உலகின் இரண்டாவது பணக்காரர் என்ற இடத்தைப் பிடித்திருக்கிறார். அவர் வேர்வை சிந்தி உழைத்தா இரண்டாவது பணக்காரரானர். அது மக்களின் உழைப்பைச் சுரண்டி கொள்ளையடித்துச் சேர்த்த பணம். அதானி இந்தியர் என்பதற்காக அவரை நாம் இந்திய நாயகனாக கொண்டாட முடியுமா என்ன? நிச்சயம் முடியாது. இதே பார்வையில்தான் சுரண்டலாளர்களான மன்னர்களையும் நாம் பார்க்க வேண்டும்.

கார்ப்பரேட் முதலாளி அம்பானியின் “குரு” படத்தை போல, நாளை அதானியின் கதையையும் படமாக எடுத்து ‘இவர்தான் நம் நாயகர்’ என்று காவி கும்பல் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நமது நாட்டு மக்களை அரை வயிற்று கஞ்சிக்கு வழியில்லாத அடிமைகளாக்கி ஆண்ட மக்கள் விரோத அரசர்களை நாயகர்களாகவும் நமது அடையாளமாகவும் பார்க்காமல், நமது வரலாற்றின் எதிரிகளாக பார்க்க வேண்டும்!


அலெக்சாண்டிரா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க