Friday, December 6, 2019
முகப்பு அரசியல் ஊடகம் நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா ?

நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா ?

-

வரும் சட்டமன்றத் தேர்தலில் கருணாஸ், சரத்குமார் உள்ளிட்டோர் போட்டியிடுவது மட்டுமல்ல, அ.தி.மு.கவின் முழுப் பிரச்சாரமே தமிழகத் திரையுலக நட்சத்திரங்களால் நடத்தப்படுகிறது. இதிலிருந்து அடுத்த ‘அம்மா’ ஒருவர் உருவாகலாம், அது விந்தியாவாகக் கூட இருக்கலாம். ஆளும்கட்சி என்பதால் அ.தி.மு.கவில் நடிகர்கள் அதிகம் இருப்பினும் தி.மு.க, பா.ஜ.க கூட முடிந்த வரை இழுத்துப் போடுகிறார்கள். விஜயகுமார், கங்கை அமரன் முதலானோர் பா.ஜ.கவில் சங்கமித்திருக்கின்றனர். காங்கிரசிலோ குஷ்பு, நக்மா முக்கியமான தலைவர்களாக முன்னிறுத்தப்படுகின்றனர். நடிகர் விஜய் உள்ளிட்டோர் தமது அரசியல் பிரவேசம் குறித்து ஒரு திட்டத்தை வைத்திருக்காமல் இல்லை. ரஜினி ஓய்ந்து போனாலும் பா.ஜ.க இன்னும் தீவிரமாக அவரை இழுத்துப் போட முயல்கிறது.

இப்படி சினிமா உலகம் பின்னே அரசியல் உலகம் ஓடுவது பொதுவில் சமூகத்தின் சீரழிவாக மட்டுமல்ல அரசியல் உலக ஆண்டைகளின் பாசிச நாயகர்களாகவும் இவர்களே உருவெடுக்கிறார்கள். மக்கள் முன்னே நடிப்பவர்களை வைத்து மக்களை ஏமாற்றி பிறகு அதே மக்களை ஒடுக்கவுமே இந்த நட்சத்திர உலகம் பெரும் மூலதனத்துடன் களமிறக்கப்படுகிறது. அதன் உலகைப் பற்றி பேசுகிறது 12 ஆண்டுகளுக்கு முன்பு வந்த இந்த புதிய கலாச்சாரம் கட்டுரை!

– வினவு

திரைஉலகம் : பொய் நாயகர்களின் நாற்காலிக் கனவுகள்

னவுத் தொழிற்சாலைகள்” என்று சினிமாத்துறையை அதன் இளைய பங்காளியான செய்தி ஊடகம் செல்லமாகச் சித்தரிப்பது உண்டு. கனவுகள் என்னும் சரக்குகளை உற்பத்தி செய்து விற்கிறது ”சினிமா உலகம்” என்ற பொருளில் அப்படிச் சொல்லப்படுகிறது.

ஆனால் வெறுமனே பொழுது போக்கிற்கான சரக்குகளை உற்பத்தி செய்து விற்பதோடு இந்தச் சினிமாவும் செய்தி ஊடகமும் நின்று விடுவதில்லை. ஒட்டு மொத்தச் சமூகத்தையும் ஒருவித மயக்கத்திலும் ஒரு பெரிய இளைஞர் கூட்டத்தை ஒருவித போதையிலும் தள்ளுவதன் மூலம் ஆதாயம் அடைவது தான் சினிமா, செய்தி ஊடகம் இரண்டினது குறியாக இருக்கிறது.

எந்தவிதப் பொது அறிவோ, அரசியல் அறிவோ, சமுதாய அறிவோ இல்லாத தார்மீக ஒழுக்கமற்ற, பண்பாடற்ற, சமூக மதிப்பீடற்ற வெத்துவேட்டு சினிமா நாயகர்களை (ஹீரோக்களை) சகலகலா வல்லவர்களாகச் சமூகத்தில் உலவ விடுவதே சினிமா, செய்தி ஊடகம் இரண்டினது வியாபார உத்தியாக உள்ளது.

சினிமா நாயகர்களைப் பொருத்த வரை அவர்கள் படங்களில் பேசும் வசனத்துக்கோ வாயசைக்கும் பாடல்களுக்கோ, காட்டும் முகபாவங்களுக்கோ, சில சமயம் அவர்களின் குரலுக்கும் முகங்களுக்கும் தோற்றங்களுக்குமோ கூட அவர்கள் சொந்தக்காரர்கள் அல்ல. இருந்தாலும் ஒட்டுமொத்தச் சமுதாயத்துக்கும் வழிகாட்டும் தலைவனாகத் தன்னை நினைத்துக் கொண்டு சினிமாவில் தான் பேசிய வீர வசனங்கள் எல்லாம் தனக்கே சொந்தமான, நிஜமானவை தாம் என்பதைப் போலப் பீற்றிக் கொள்கிறார்கள். தாங்கள் வெளியே காரில் பவனி வந்தால் இரு புறமும் மக்கள் திரண்டு நின்று மலர் தாவி வரவேற்க வேண்டுமென்று எதிர் பார்க்கிறார்கள் இந்தக் கனவுலக நாயகர்கள். சினிமாச் சந்தையில் இரண்டு மூன்று படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றவுடன் அவற்றின் நாயகர்கள் தங்களை வருங்கால முதலமைச்சர்கள் என்று பாவித்துக் கொள்கிறார்கள். தேர்தல் என்று வந்தால் தங்கள் படங்களை வெற்றி பெறச் செய்த ரசிகர்கள் மட்டுமல்ல, அவற்றைக் கண்டு களித்த மக்கள் கூடத் தங்களையோ, தாங்கள் கைகாட்டும் கட்சியையோ ஆதரித்து வெற்றிபெறச் செய்வார்கள் என்று கனவு காண்கிறார்கள்.

சினிமாத்துறையில் நுழையும் எல்லோரும் எப்படிப்பட்ட எண்ணங்களோடு அடியெடுத்து வைக்கிறார்கள்? ஆரம்பத்தில் எதற்காக ஏங்குகிறார்கள் என்பதற்கு மிகச் சமீபத்திய எடுத்துக் காட்டு, தொடர்ந்து மூன்று பெரிய வசூல் சாதனைப் படங்களில் நடித்த “இளம்புயல்” என்று செய்தி ஊடகம் கொஞ்சும் நடிகர் தனுஷ்.

dhanushஇவரைப் பேட்டி எடுக்கப்போன செய்தியாளர் அந்தச் சூழல் குறித்து எழுதுகிறார். ”வீட்டில் நடிகர் தனுஷின் அறையில் பேச்சிலரின் அறைக்கான சகல இலக்கணங்களையும் பார்க்க முடிகிறது. படுக்கையில் குட்டி ஸ்பீக்கர்கள், கட்டியணைத்துக் கொள்ள சற்றே பெரிய சைஸ் பொம்மை, வீடியோகேம் கேட்ரிட் ஜூகள் இறைந்து கிடக்க, குட்டித்திரை இணைந்த சோனி டிஸ்க்மேனில் ஒரு படம் ஃப்ரீஸ் செய்யப்பட்டிருந்தது. அறை தாறுமாறாக இருந்தது.”

இந்த நிருபர் ”பேச்சிலரின் அறைக்கான இலக்கணம்” என்று வரையறுத்திருப்பதைப் பாருங்கள். ஒரு பழைய தோள் பையில் தனது உடைகள், பாடப் புத்தகங்கள், சோப்பு சீப்பு கண்ணாடி பவுடர் எல்லாம் வைத்துப் பூட்டி அதற்கு மேல் ஒரு கிழிந்த தலையனை பாயைச் சுருட்டி வைத்து விட்டு காலையில் வகுப்புக்கும் மாலையில் பகுதிநேரக் கூலி வேலைக்கும்போகும் அரசு விடுதி மாணவர்களும் பேச்சிலர்கள் தாம் என்பது ஏனோ இவருக்குத் தெரியவில்லை.

இந்த விவகாரம் ஒருபுறம் இருக்க… தனுஷிடம் இருக்கும் ”ஹைடெக் அயிட்டங்கள்,” அவரது விருப்பங்களைப் பற்றி செய்தியாளர் கேட்கிறார். “ஜீன்ஸ் பிடிக்கும். அதில் ’லீவைஸ்’ அப்புறம் ’லீ’, ஷர்ட்டில் ’ப்ரோவோக்’ ‘ஸோட்’, இப்போ ஒட்டற கார் ’ஸ்கார்பியே’ பிளாக் கலர். ஆனா கனவுக் கார் மிட்ஷூபிஸி ’பஜேரோ’ கூலர்ஸ்னா ’ரேபான்’ ரால்ட் லாரேன். காலுக்கு ’நைகி’யின் ஷாக்ஸ் மாடல். வாட்ச்: ஜியோர் டானோ. செல்போன் இரண்டு: சோனி எரிக்ஸன் பி-800 மற்றும் டி-610.

தனுஷ் சொல்வது கோடிக்கணக்கான இளைஞர்களுக்குப் புரியவே புரியாது. தனுஷ் வகையறாக்கள் நமது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் வேறு உலகத்தினர். நுகர்வு வெறிபிடித்தவர்கள். இங்கே கிழிந்த பிளாஸ்டிக் பையைத் தைத்துக் கூரையாக வேய்ந்து சாக்கடையோரம் வாழும் மனிதர்கள், கஞ்சித்தொட்டி வரிசையில் நிற்கும் மனிதர்கள் உள்ள சமுதாயத்தில் இப்படி நுகர்வு வெறிபிடித்து அலைவது சமூகக் குற்றமெனக் கருதாதவர்கள். தனுஷ் வகையறாக்களின் தரிசனத்துக்குக் காத்துக் கிடக்கும் செய்தியாளர்களோ வேறுவகைக் குற்ற உணர்வுக்கு ஆளாகிக் கிடக்கிறார்கள். “தனுஷ் கசங்கிய துணிபோல சோர்ந்திருக்கிறார் (”இன்னிக்கு பாட்டு சீன்ஸ் எடுத்தாங்க அதான்”) தமிழகத்தின் மிகப் பிசியான 21 வயது இளைஞரின் இரவு ஓய்வைக் கலைத்த குற்ற உணர்வுடனே சந்தித்தார் செய்தியாளர்” என்கிறது அவரது பத்திரிக்கை.

சினிமாவில் நுழையும்போது தனுஷ் வகையறாக்கள் உழைப்பதெல்லாம் பணம் புகழ் பெறுவதற்குத்தான். ஒரளவு இலாபம் தரக் கூடிய ஒன்றிரண்டு படங்களில் நடித்ததும் நாயக நடிகர்கள் இவற்றைப் பெற்றுவிடுகிறார்கள். பிறகென்ன? எந்தத் தகுதியும், திறமையும் இல்லாத (இதை ஒரு போதும் அவர்கள் ஒப்புக் கொள்வதில்லை) நாயக நடிகர்கள் தீடிரென்று ஏராளமான பணமும், பிரபலமும் வந்து குவிந்ததும் அவர்களே பிரமித்துப் போகிறார்கள். ஒன்று கடவுள் கடாட்சத்தால் இவையெல்லாம் தனக்கு வந்து சேர்ந்ததாக மூட நம்பிக்கை கொள்கிறார்கள். அடுத்து, மேலும் மேலும் முன்னேறுவதற்கான அதிர்ஷ்டமும் திறமையும் ஏதோ அதீத சக்தியும் தனக்கு இருப்பதாக ஒரு பிரமையில் ஆழ்ந்து போகிறார்கள். எனவே, பணம், புகழுக்கு அடுத்து அரசியல் பதவி என்னும் அதிகாரத்தை எட்டிவிட எத்தனிக்கிறார்கள்.

சினிமாத்துறையில் முன்னணி நாயகர்களாக உள்ளவர்கள் சினிமாவில் ஒரு நீண்ட காலத்துக்குத் தன்னிலையைத் தக்கவைத்துக் கொள்ளவே சினிமாவுக்கு வெளியே ஒரு தோற்றத்தையும் ரசிகர்மன்ற அமைப்பையும் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். சினிமாவில் மட்டுமல்ல, நிஜத்திலும் தாம் நல்லவர்கள், வல்லவர்கள் என்று காட்டிக் கொள்வதற்காக தம்மிடம் குவிந்துள்ள கறுப்புப் பணத்தில் ஒரு சிறு அளவு செலவிடுகிறார்கள். ஒரு அரசியல் கட்சியைப் போலவே தமது ரசிகர் மன்றங்களை முறைப்படுத்தி இயக்குகிறார்கள்.

mgrஏற்கெனவே அரசியலைவிடச் செய்தி ஊடகத்துக்கும் சினிமாவுக்கும் இடையிலேதான் நெருக்கமான உறவு இருக்கிறது. குறிப்பாக விஜய், பிரசாந்த முதல் இளம் வரவுகளான சிம்பு, தனுஷ் வரையிலான வாரிசு நடிகர்களின் அப்பன்மார்கள் நேரடியான அவர்களின் மக்கள் தொடர்பு அதிகாரிகளாகவே செயல்படுகிறார்கள். இவர்கள் சினிமா பாத்திரங்களைத் தெரிவு செய்வது, பணவரவு செலவுகளைக் கவனிப்பதோடு நின்று விடுவதில்லை. தமது வாரிசுகளைப் பற்றிய துணுக்குச் செய்திகளைச் செய்தி ஊடகம் மூலமாகப் பரவ விடுவதிலிருந்து ரசிகர் மன்றங்களைக் கட்டி நிர்வகிப்பது வரை முக்கியப் பங்காற்றுகிறார்கள்.

சினிமாவுக்கு வெளியே நல்லவன், வல்லவன் என்கிற தோற்றத்தை முன்னணி நடிகர்கள் ஏற்படுத்தில் கொள்ளவும் அதைத் தக்க வைத்துக் கொள்ளவும் சினிமாவுக்கும் செய்தி ஊடகத்துக்கும் உள்ள நெருக்கமான உறவு பயன்படுத்தப்படுகிறது. ஏழைகளுக்கு மருத்துவ வசதி பள்ளி மானவர்கள், ஊனமுற்றவர்கள், கைம்பெண்களுக்கு உதவி, இலவசத் திருமணங்கள், அன்னதானங்கள் முதலமைச்சரின் திட்டங்களுக்கு உதவித் தொகை போன்ற சிறு அளவிலான ’சமூகத் தொண்டு’ செய்தி ஊடகத்தால் ஊதிப் பெருக்கித் தரப்படுகிறது.

எம்.ஜி.ஆர். காலத்திலேயே வெள்ள நிவாரணம், போர் நிதி போன்றவை பொய்யாக அறிவிக்கப்பட்டு, உண்மையில் ஈடேறாத பல செய்திகளை வெளியிட்டு அவருக்கு வள்ளல் தோற்றம் தருவதில் பத்திரிக்கைகள் முக்கியப் பங்காற்றின. இப்போது தனது ஆரம்ப காலச் சகபாடியாக இருந்து நலிந்து போன சினிமாக்காரனை நினைவு வைத்துக் கொண்டு நிதி உதவி செய்வது, எதிரே வரும் ஏழைகளுக்கு நூறோ இருநூறோ “தர்மம்’ வழங்குவது போன்று செய்திகளை வெளியிட்டு சினிமா நாயக நடிகர்களுக்கு வள்ளல் தோற்றம் உருவாக்கப்படுகிறது.

எம்.ஜி.ஆரைப் போல, சினிமாப் பிரபலத்தோடு வெளியே வள்ளல் தோற்றமும், வலுவான ரசிகர் மன்றமும் உருவாக்கி விட்டால் அரசியலில் குதித்து மாநில முதலமைச்சர் பதவியையே பிடித்துவிட முடியும் என்று முன்னணி நடிகர்கள் கனவு காண்கிறார்கள். இப்படிக் கனவு கண்டவர்கள் வரிசையில் சிவாஜி கணேசன், பாக்கியராஜ், டி.ராஜேந்திரன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் போன்றவர்கள் ஏற்கனவே மண்ணைக் கவ்விய அனுபவம் உண்டு. பாக்கியராஜும், சத்தியராஜும் எம்.ஜி.யாரைப் போல வேஷங்கட்டிக் கொண்டு ’டூப்ளிகேட் எம்.ஜி.ஆராக’த் திரை தோன்றினாலே போதும் அவரைப் போல வெற்றி பெற்றுவிடலாம் என்று நம்பினார்கள். கடைசியில் கோமாளிகளைப் போல முடிந்து போனார்கள்.

இருந்தபோதும், மிதமிஞ்சிய கறுப்புப் பணமும் புகழும் சேர்த்துவிட்ட மிதப்பில் திளைக்கும் முன்னணி நடிகர்களின் அடுத்த குறியாகப் பதவி ஆசை தொற்றிக் கொள்கிறது. வெறும் பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்ட மசாலாப் படங்களில் இருந்து சற்று விலகி ’சூப்பர் ஸ்டார்’ தகுதிக்கான எம்.ஜி.ஆர் பாணி படங்களைத் திரும்பத் திரும்ப  எடுக்கிறார்கள். ஆபாசக் கூத்துக்கள், பெண்களைக் கவரும் ”செண்டிமெண்டு”களோடு அநீதியை எதிர்த்துப் போராடும் ஹீரோ சூரத்தனங்களையும் சேர்த்துக் கொள்கிறார்கள். குறிப்பாக, எம்.ஜி.ஆரின் ரசிகர்களான முதிர்ப் பாட்டிகளைக் கவருவதற்காகப் பொறுக்கிகளின் தலைவனாக – போலீசு அதிகாரியாக இருந்தால் கூட கிரிமினல் பொறுக்கிக்குரிய பண்புகளுடன் – சினிமாவில் வேடங்கட்டிக் கொள்கிறார்கள்.

பிறகு சினிமாவுக்கு நெருக்கமான செய்தி ஊடகம் மூலமாக தனது அரசியல் ஆசையை வதந்தி போலப் பரவ விடுகிறார்கள் செய்தியாளர்களின் கேள்விக்கு மழுப்பலாகப் பதில் சொல்கிறார்கள். ஆனால், சினிமாவில் ஏழை எளிய மக்களுக்காக வீரவசனம் பேசும்போது அரசியல் நெடி வீசச் செய்கிறார்கள். அப்புறம் போட்டி நடிகர்களுக்கு எதிராக அனல் பறக்கும் சவால் விடுகிறார்கள். நடிகர் ரஜினிகாந்த், ஜெயலலிதாவை மறைமுகமாகத் தாக்குகிறார்; கேலி கிண்டல் செய்கிறார்; குத்திக் காட்டுகிறார். ஜெயலலிதாவைப் போன்ற அகம்பாவம் பிடித்த வில்லிப் பாத்திரத்தைப் படைக்கிறார். விஜயகாந்த் ரஜினிகாந்துக்கு சவால் விடுகிறார். ரஜினியைக் குறிவைத்து நக்கலான கருத்து தெரிவிக்கிறார்.

அரசியலுக்கு வருவார்களா இல்லையா என்ற ஊக நிலையிலேயே வைத்திருப்பதும் கூட சில காரணங்களுக்காகத் தான். நாயக நடிகனின் படத்தைப் பார்க்கும் ரசிகனுக்குக் கூட மனதில் இருத்தி நினைவில் வைத்துக் கொள்ளும் விஷயம் எதுவும் சினிமாவில் இல்லை. அரசியல்வாதியோ, சினிமாக்காரனோ தொடர்ந்து செய்தி ஊடகத்தில் ஏதாவது ஒரு வகையில் பெயர் அடிபட்டுக் கொண்டே இருக்கவேண்டும். அப்படித் தான் இவர்கள் மக்கள் மனதிலும் ரசிகர் மனதிலும் பதிக்கிறார்கள். தனது அரசியல் நுழைவை ஒரு நெகிழ்வான நிலையிலேயே நடிகர் வைத்திருப்பதும் அவனுக்கு ஆதாயம் தான்.

மேலும் ”துணிந்து” அரசியலில் குதித்து விட்டால் நாயக நடிகனது செல்வாக்கு இவ்வளவுதான் என்று தெரிந்துவிடும். அப்படி எதுவும் நடந்து விட்டால் உள்ளதும் போச்சு நிலையில் அரசியலில் இருந்து துரத்தப்படுவதோடு சினிமாவுக்கும் திரும்ப முடியாது. இதற்குத்தான் அரசியல் நுழைவைக் குறித்துத் திட்டவட்டமாகப் பேசமறுக்கின்றனர். நீரில் இறங்காமல் கானல் நீரிலேயே நீச்சல் கற்றுக் கொள்ளக் கனவு காண்கிறார்கள் இந்தச் சூரப்புலிகள்.

இன்னொன்று. தனது உண்மையான செல்வாக்கு இதுதான் என்று தெரிந்து விட்டால், அரசியல் நுழைவு என்ற பூச்சாண்டி காட்டியே அதிகாரத்திலுள்ளவர்களிடம் பேரங்கள் பேசி, ஆதாயம் அடையமுடியாது.

rAJNIKANTH“இதோ வருகிறேன் அதோ வருகிறேன் என்று ரஜினி காலங்கடத்திக் கொண்டிருக்கக் கூடாது. இரண்டு திராவிடக் கட்சிகளும் தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டன. ஏற்கெனவே உள்ள தேசியக் கட்சிகளின் மாநிலத் தலைமையும் மக்களை ஈர்க்கக் கூடியவையாக இல்லை. எனவே, முற்றிலும் ஒரு புதிய தலைமையாக மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியவர் ரஜினி அவர் உடனடியாக அரசியலில் குதிக்கவேண்டும்” என்று பசிதம்பரம், ஆர்.எம்.வீரப்பன் போன்ற அரசியல் அனாதைகளும், சினிமாக்காரர்களும் அழைக்கிறார்கள்.

ஜெயலலிதாவை தமிழக மக்கள் ஒதுக்கிவிடும் பட்சத்தில், மாற்று ஏற்பாடாக ரஜினியை வைத்துத் தமது சாதி நலன்களைக் காத்துக் கொள்ளலாம் என்று ”சோ” முதலிய பார்ப்பனச் சாணக்கியர்கள் அவரிடம் ஒதிக் கொண்டே இருக்கிறார்கள். ரஜினி ஒரு தேசியவாதி என்பதால் காங்கிரசும், அவர் ஒரு ஆன்மீகவாதி என்பதால் பா.ஜ.க.வும் தத்தம் பக்கம் இழுப்பதற்கு முயன்றுவருகிறார்கள். 1996 தேர்தலுக்குப் பிறகு தான் ”வாய்ஸ்” கொடுத்தால் மக்கள் அப்படியே கவிழ்ந்து விடுவார்கள் என்று நம்பினார். 2001 தேர்தலில் ரஜினி கொடுத்த வாய்ஸ்” செல்லாக் காசாகிப் போனபிறகு அரசியலில் குதிப்பது குறித்து ஊசலாட்டமாகவே இருக்கிறார்.

2000-ஆம் ஆண்டில் வெளிவந்த “சிம்மாசனம்” படத்தைத் தொடர்ந்து அரசியல் வாடை அதிகமாக வீகம் காட்சிகளையும், வசனங்களையும் அடுத்தடுத்த படங்களில் விஜயகாந்த் புகுத்தி வருகிறார் .”அரசியலுக்கு வர்றதுன்னா நேரடியா வருவேன். சிலபேர் மாதிரி இப்ப அப்பன்னு இழுத்துக்கிட்டு இருக்க மாட்டேன்.” என்று நரசிம்மா படத்தில் வசனம் பேசுகிறார்.

vijayakanthஅடுத்து வந்த ”ராஜ்ஜியம்” படத்தில், புதிதாக உருவாக்கப்பட்ட கறுப்பு, சிகப்பு, மஞ்சள் கொடியைத் துக்கிக் கொண்டு எல்லா ஊர்களிலும் பெரும் கும்பலோடு ஊர்வலங்கள் நடத்திக் காட்டுகிறார். அதற்கடுத்து, ”ரமணா”வில் ஊழலை எதிர்த்துத் தலைமறைவு இயக்கம் கட்டி, குற்றவாளிகளைத் தண்டிக்கிறார். கடைசியாக வந்த ”தென்னவ”னில் தேர்தல் தில்லுமுல்லுகளை ஒழிக்க முயன்று முதல்வர் பதவியைப் பிடிக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வருகிறார். இதெல்லாம் அரசியலில் குதிப்பதற்கான தயாரிப்புக்களாகவே உள்ளன.

இப்படி அரசியல் நுழைவு பற்றிய தனது நிலையை ஊகமாகவும், வதந்தியாகவும், கிசுகிசுவாகவும் வைத்திருப்பதே மக்களை மதியாது அவமானப் படுத்துவதாகும். அரசியலில் நுழைவது என்றால் தமது கொள்கை, இலட்சியத்தை பகிரங்கமாக அறிவித்துச் செயல்படுவதுதான் நேர்மையானதும் மக்களுக்குப் பொறுப்பானதும் ஆகும். ஆனால், இவர்களது வசனம், பாடல், நடிப்பிலிருந்து மக்களாகவே இவர்களின் கொள்கை –இலட்சியங்களை பொறுக்கி எடுத்துத் தெரிந்து கொள்ளும் படி விட்டுவிடுகிறார்கள். கொள்கை விளக்கமளிக்கும் பொறுப்பை ரசிகர் மன்றத் தலைவர்களிடம் விட்டுவிடுகிறார்கள்.

வழக்குரைஞர், மருத்துவர், பொறியியலாளர் என்று மற்றபிற தொழில் செய்பவர்கள் அரசியலுக்கு வருவதை ஏற்றுக்கொள்ளும்போது சினிமாக்காரர்கள் மட்டும் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது என்று எதிர்க் கேள்வி கேட்கிறார்கள். அவர்கள் ஏதாவது ஒரு அரசியல் இயக்கத்தோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு கணிசமானகாலம் அரசியல் அனுபவத்தோடு பதவிக்கு வருகிறார்கள். ஆனால், நாயக நடிகர்களோ சினிமாவில் இருந்து ஒய்வு பெறும்வரை அதன் சொகுசுகளை அனுபவித்துவிட்டு, சினிமாவில் இருந்து ஒய்வு பெறும்போது திடீரென்று அரசியலில் குதித்து அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ள மக்கள் மீதுள்ள கரிசனையென்று நடிக்கிறார்கள். தாங்கள் அரசியலில் குதிக்கும் நாள்வரை மக்களைப் பாதிக்கும் எந்த ஒரு பிரச்சினைக்காகவும் போராடுவதை விடுங்கள் – குரல்கொடுப்பதும் கிடையாது.

மக்கள் மிகவும் கரிசனப்படுவதாக நடிக்கும் இந்த ’அரசியல்’ நடிகர்கள் எல்லாம் பிற்போக்கு, சமூக விரோத, ஜனநாயக விரோத, பாசிஸ்டுகளாகவே இருக்கிறார்கள். பொதுவான மனிதாபிமான, தேசப்பற்று – தீவிரவாத எதிர்ப்பு – அதேசமயம் வன்முறை வெறியாட்டத்துக்கு ஆதரவு, அரசியலற்றவாதம் போலீசு அதிகார வர்க்கத்துக்கு வக்காலத்து வாங்குவது போன்றவைதான் அரசியல் நடிகர்களின் கண்ணோட்டமாக இருக்கிறது.

எந்தத் தொழில் செய்பவருக்கும் சொந்த அரசியல் கண்ணோட்டம் வைத்துக் கொள்ளவும், அரசியலில் ஈடுபடுவதற்கும் உரிமை உண்டு என்றாலும், ஏற்கெனவே எம்.ஜி.ஆர். ஜெயலலிதா போன்ற சேடிச (பிறர் துன்பத்தைப் பார்த்து இன்பங்காணும் குணம்) வக்கிர, பாசிச ஆட்சியாளர்களின் கொடுர ஆட்சியை அனுபவித்துள்ள போதும், மீண்டும் அவர்களின் மறுஅவதாரங்களையும் தமிழக மக்கள் அதிகாரத்துக்குக் கொண்டுவர வேண்டுமா?

– சாத்தன்.
புதிய கலாச்சாரம், டிசம்பர் 2003.

  1. அட்டைகத்தி மண்டையைப் போட்ட பிறகு..தமிழ்நாடு நல்ல் பாதைக்கு திரும்பும் என நினைத்தேன்…
    கொடுமை…..புரையோடிப் போன சமூகம்…யார் அறுவை சிகிச்சை செய்யமுடியும்? நோயாளி மண்டையை போடும் நிலையில் உள்ளான்….

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க