எம் மாணவிகளிடம் இனி என்ன சொல்ல? | கல்விச் செயற்பாட்டாளர் உமா

உங்களுக்கு ஏதாவது பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டால் நிச்சயமாக இந்த எண்ணுக்கு (14417) புகார் அளியுங்கள் என்று ஒரு ஆசிரியராக என்னிடம் படிக்கும் பெண் குழந்தைகளிடம் இனிமேல் எப்படி, நான் சொல்ல முடியும்?

சென்னையின் அடையாளமாக மட்டுமல்ல தமிழ்நாட்டின் மிகப்பெரிய அடையாளங்களில் ஒன்றாக விளங்குவதும் அண்ணா பல்கலைக் கழகம். எங்கேயாவது ஒரு சின்ன கிராமத்துப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளிடம் கூட, அண்ணா பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி பெற வேண்டும் என்ற கனவுகளை விதைத்து வரும் பொக்கிஷம் அண்ணா பல்கலைக் கழகம்.அப்படிப்பட்ட மிகப் பெரிய சாம்ராஜ்யமாக விளங்கும் அந்தக் கல்வி நிறுவனத்தின் உள்ளே, அங்கு படிக்கும் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்ற அதிர்ச்சியிலிருந்தே மீண்டு வர முடியாத நிலையில் இருக்கிறோம். அதற்குள்ளாக இந்த மாணவியின் பாலியல் வன்கொடுமையை, அவர் புகார் செய்ததால், மொத்த பெண் குழந்தைகளுக்கும் விடுக்கும் எச்சரிக்கை போல, அச்சுறுத்துவது போல அந்த மாணவியின் தகவல்கள் ஊடகம் முழுவதும் வெளிவந்திருப்பது அறமற்ற செயல்.

உங்களுக்கு ஏதாவது பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டால் நிச்சயமாக இந்த எண்ணுக்கு (14417) புகார் அளியுங்கள் என்று ஒரு ஆசிரியராக என்னிடம் படிக்கும் பெண் குழந்தைகளிடம் இனிமேல் எப்படி, நான் சொல்ல முடியும்?

குற்றவாளிகளைக் காப்பாற்றி எங்கள் குழந்தைகளையே வஞ்சிக்கும் சமூகமாக மாறி வருகிறது, இங்கே குற்றச்செயல் புரியும் மனித உருவ விலங்குகள் சுதந்திரமாகத் திரிவதும் மீண்டும் மீண்டும் பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றவாளிகளாக மாற்றும் ஆதிக்க மனப்போக்கும் எப்போது மாறும்?

சுமார் 30 வருடங்களுக்கு முன்பு தமிழில் “விதி” என்று ஒரு திரைப்படம் வந்தது. அதில் ஒரு ஆண் பெண்ணைக் காதலித்து உடலுறவில் ஈடுபடுத்திய பிறகு ஏமாற்றி விடுவான். அந்தப் பெண் தைரியமாக நீதிமன்றம் செல்வார். அங்கு அந்த ஆணுக்காக வாதாடும் வழக்கறிஞர், அந்தப் பெண்ணை, உன்னைக் காதலித்தவர் உன்னை எங்கே தொட்டார்? எப்படி தொட்டார் என, கேட்கக் கூசும் கேள்விகளை முன் வைப்பார். அங்கு பெண்ணை மட்டுமே குற்றவாளியாக சித்தரிக்கும் காட்சிகள் இந்த சமூகத்தின் பார்வையாகவே நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

இதோ சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த திரைப்படம் “நேர் கொண்ட பார்வை”. அதிலும் பாதிக்கப்பட்ட பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்த ஆண்களின் வழக்கறிஞர் கேட்கக் கூடாத கேள்விகளைக் கேட்டு பெண்களையே குற்றவாளியாக்கும் காட்சிகள் சித்தரிக்கும் நிலையும் இந்த சமூகத்தின் பார்வை தான் என்பதை உறுதியாக நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

இதோ இப்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. அவ்வளவு பெரிய பல்கலைக்கழகத்தில் குழந்தைகளுக்கு ஏன் பாதுகாப்பு இல்லை? பல வழக்குகளில் குற்றவாளியாக காவல் துறையால் பதிவு செய்யப்பட்ட ஒருவன் எப்படி பல்கலைக்கழக வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டான் என்று கேட்பதற்கு பதிலாக, பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளியாக மாற்றும் குரல்கள், ஏன் இருட்டில் தன் காதலனுடன் இந்தப் பொண்ணு பேசிட்டு இருக்கு? ஏன் வெளியே வந்தது இந்தப் பொண்ணு? அந்த நடமாடும் குற்றவாளியை சுதந்திரமாக உலவ விட்ட சமூகம் படிக்கிற பொண்ணு ஏன் அந்த நேரத்தில் வெளியே வருதுன்னு கேட்பது அவமானம். அதைவிட அவமானம், அந்த மாணவியின் முகவரி உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டு கூனிக் குறுக வைக்க முயற்சி செய்யும் செயல். பெண்கள் பாதுகாப்பு குறித்து வெறும் உறுதிமொழிகளை நம் பள்ளிகளும் கல்லூரிகளும் எடுப்பது முக்கியமல்ல. உண்மையிலேயே பெண்களுக்கான பாதுகாப்பைத் தர வேண்டும். கல்வி நிறுவனங்கள் மட்டுமல்ல, அனைத்து துறைகளுக்கும் அந்தப் பொறுப்புணர்வு வேண்டும்.

அறத்தொடு நிற்றல் என்ற பார்வையில் இந்த சமூகம் பாதிக்கப்பட்ட பெண்ணின் பக்கம் நிற்க வேண்டும்.பெண்குழந்தைகள் தைரியமாக இருக்க வேண்டும். நீங்கள் பாதிக்கப்பட்டால் பயப்படாமல் வெளிப்படுத்துங்கள்.அயோக்கியர்களையே விரட்டி அடிக்கவேண்டும் அதைவிடுத்து நீங்கள் அழுது கொண்டு முடங்கி விடக்கூடாது.

மாணவர்கள் தான் நமது பலம் என்று ஆசிரியர்கள் இந்த மாணவிக்காகக் குரல் கொடுக்க வேண்டும். என்னிடம் பள்ளியில் பயின்ற ஆயிரக்கணக்கான பெண்குழந்தைகள் கல்லூரிக்கனவுடன் கல்லூரிக்குள் நுழைந்து பயின்று வருகின்றனர். எதிர்காலத்தில் என்னிடம் பயில இருக்கும் மாணவிகளுக்காகவும் இன்று நிகழ்காலத்தில் கல்வி கற்கும் மாணவிகளுக்காகவும் பாதுகாப்பு வேண்டி குரல் கொடுக்கும் கடமை எனக்குண்டு.

எதிர்காலத்தில் எந்த மாணவியும் பாதிக்கப்படக்கூடாது. குற்றவாளிகள் கடுமையான தண்டனைகளைப் பெறவும் படிக்கும் குழந்தைகள் சுதந்திரமாக நடமாடவும் தேவையான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும், கல்வித்துறையும் அரசும் கூட்டுப் பொறுப்பு வகிக்க வேண்டும் என்பதே ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பு.

குறிப்பு: நீ ஆசிரியர் தானே? சமூக செயற்பாட்டாளரா யார் உன்னை சிந்திக்கச் சொன்னார்கள்? என்ற கேள்விகளை முன்வைக்கும் முன் உங்கள் வீடுகளில் பெண் குழந்தைகள்/பெண்கள் இருக்கிறார்கள் என்பதை மனதில் கொள்ளவும். உங்களுக்காகவும் தான் இந்தப் பதிவு.


உமா
கல்விச் செயற்பாட்டாளர்.
TNHHSSGTA

disclaimer
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram


விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க