Monday, May 10, 2021
முகப்பு அரசியல் ஊடகம் ஒரு பெண் பத்திரிகையாளரின் குமுறல்!

ஒரு பெண் பத்திரிகையாளரின் குமுறல்!

-

ன் டிவி: சிக்கிய ராஜாவை வைத்து சிக்காத ராஜாக்களைப் பிடிப்போம்! கட்டுரைக்கு வந்த பின்னூட்டத்தை அவசியம் கருதி இங்கே தனிப்பதிவாக வெளியிடுகிறோம். இவர் ஒரு பெண் பத்திரிகையாளர். பொறுக்கி ராஜாக்களால் ஊடகத்துறையில் வளர முடியாமல் மட்டுமல்ல, தொடர்ந்து செயல்பட முடியாமலேயே துரத்தப்பட்டவர்களில் ஒருவர். இன்றைக்கு அகிலா துணிந்து போராடி வருவதிற்கு பின்னே நியாயம் கிடைக்காத பல பெண் பத்திரிகையாளர்களின் கதை மறைந்திருக்கிறது.

வினவின் கட்டுரையை சில ஆயிரம் பேர் படித்திருக்கின்றனர். ஆனால் ஒரு சில விதிவிலக்குகளைத்  தவிர பத்திரிகையாளர்களிடமிருந்து திட்டமிட்ட மௌனத்தையே காண்கிறோம். பலர் முகநூலில் அமெரிக்கா முதல் ஈழம் வரை அனைத்தையும் விமரிசிக்கும் போராளிகளாக வலம் வருகின்றனர். வெள்ளியன்று ரிலீசாகும் படங்களுக்கு வியாழனன்றே விமரிசனங்கள் எழுதுகின்றனர். கட்சி சார்பாகவோ இல்லை கருத்து சார்ந்தோ பகிரங்கமாக விவாதிப்பவர்களாகவும் காட்டிக் கொள்கின்றனர். பத்திரிகையாளர்களே அகிலாவின் பிரச்சினைக்காக அமைதி காக்கிறார்கள்  என்றால் இவர்கள் வேலை செய்யும் தமிழ் ஊடகங்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.

ஆனால் இந்த பத்திரிகை போராளிகள் சக பத்திரிகையாளரான அகிலாவுக்கு வெளிப்படையான ஆதரவை வழங்குவதற்கோ, சன் டிவியை கண்டித்தோ பேசுவதற்கோ மறுப்பதேன்? ஈழத்திற்காக மாணவர்கள் போராடும் இந்தக் காலத்தில்அகிலாவிற்காக ஒரு ஆர்ப்பாட்டதை நடத்தாதது ஏன்? தமது பத்திரிகைகளில் செய்தி வருமாறு குரல்கொடுக்காதது ஏன்?

நேற்று சன் டிவியிலிருந்து அகிலா தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். காரணங்கள் எதுவும் சொல்லப்படவில்லை.விசாரணை இனிமேல்தான் நடக்குமாம். ஒரு பொறுக்கியை எதிர்த்துப் போராடிய பெண்ணுக்கு சன் டிவி அளித்திருக்கும் பரிசு இது.

பத்திரிகையாளர்களே, பதிவர்களே இன்னும் அமைதி காக்கதீர்கள்.

பேருந்தில் வைத்து ஒரு பெண்ணை  பலரும் வல்லுறவுக்கு ஆளாக்குவது மட்டும்தான் பாலியல் வன்முறையா?

இதோ பெயர் வெளியிட விரும்பாத இந்த பெண் பத்திரிகையாளர் கேட்கிறார். பதில் சொல்லுங்கள்!

ஊடக உலகில் நிலவும் இத்தகைய வன்முறைகளை எதிர்ப்பதில் எங்களுக்கு எவ்வித தயக்கமும் இல்லை. அகிலாவுக்கு தேவையான ஆதரவை வழங்குவோம். அவரது போராட்டத்திற்கு துணை நிற்போம்!

வினவு

________________________________

யா ரொம்ப வருஷத்துக்கு முன்னமே நீங்க செஞ்சிருக்க வேண்டிய விஷயம்… ரொம்ப லேட்டா வந்திருந்தாலும் உங்ககிட்டேயிருந்து ஆதரவு வர்றது என்னைய மாதிரி ஒடுக்கப்பட்ட, ஆதரவற்ற ஊடகப் பெண்களுக்கு அவசியம்தாங்க.

நான் இப்போ ஊடகத்துல இல்லீங்க. ஆனா நீங்க கட்டுரையில சொல்ற ‘சாரு’ங்களால பாதிக்கப்பட்டு மீடியாவை விட்டே ஓடிப்போன பல பெண்கள்ல நானும் ஒருத்தி. ‘பராசக்தி’ல கலைஞர் ஐயா எழுதின ஒரு ஃபேமஸான வசனம்தான் ஞாபகத்துக்கு வருது. ‘ஓடினாள், ஓடினாள்… வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்’னு வருமே… அந்த வசனம் எங்களைப் போல நேர்மையா, உண்மையா இருக்கணும்னு நினைக்கிற ஊடகப் பெண்களுக்கு ரொம்பவே பொருந்தும்.

சிறுபத்திரிகை, பெரும் பத்திரிகை, டிவி.ன்னு எல்லா விதமான மீடியாக்கள்லேயும் எங்களைத் தொறத்தறதுக்கு இவிங்க காத்திருக்காய்ங்க. எஸ்எம்எஸ் அனுப்பணும், நேரங்காலம் தெரியாம போன்ல கூப்ட நேரத்துக்கு பேசணும், பாத்ரூம் போறதுக்குக்கூட சாருங்ககிட்ட பர்மிஷன் வாங்கிட்டு போகணும், இந்த ஸ்டெப்ஸ்ல எல்லாம் தாண்டி வந்தா வேலை ரீதியாகவும் அடுத்த கட்டத்துக்கு போகலாம். வேற ரீதியாகவும் அடுத்த கட்டத்துக்கு போகலாம்.

எழுதத் தெரியுமா? பத்திரிகை அறம் தெரியுமா? சரிப்பா…உனக்கு ஒரு பேட்டி எடுக்கத் தெரியுமான்னு சாருங்களுக்கு எந்தக் கவலையும் கிடையாது. சாருங்க வெச்ச டெஸ்ட் எல்லாம் பாஸ் பண்ணா நீங்க அடுத்தடுத்து போய் கிட்டே இருக்கலாம்.

ஐயா எங்க குடும்பத்துல நான்தான் முதல்ல காலேஜ் வரைக்கும் படிச்ச பொண்ணு. பெரிய சாதியோ, அதிகாரம் உள்ள சாதியோ கிடையாது. பணமா? வாழ்க்கை ஃபுல்லா  கடனாளிங்கதான். கடன் வாங்கித்தான் படிச்சேன். நல்ல எழுதறேன்னு தான் பத்திரிகைல வேலை கிடைச்சது. பத்திரிகைகாரி ஆகணும்னு எனக்கு எந்த லட்சியமும் கிடையாது. 15 வயசு வரைக்கும் பத்திரிகையே படிக்காத குடும்பத்திலிருந்த வர்றங்களுக்கு அந்த லட்சியம் எல்லாம் வராதுங்க.

ஆனா நான் செய்ற வேலை எப்படிப்பட்டதுங்கற தெளிவு எனக்கு இருந்துச்சு. நேர்மையா இருந்தேன், எனக்கு வாய்ப்பு கிடைச்ச வரைக்கும் ஒரு பொண்ணு எதையெல்லாம் எழுத முடியாதுன்னு சொல்வாங்களோ அதையெல்லாம் எழுதினேன். ஆனா சாருங்களுக்கு அதெல்லாம் தேவையில்லாத விஷயம். சாருங்களுக்கு இணங்கி நடக்கலைன்னு பல சோதனைகள், பல வேதனைகள். எல்லாமே மறைமுகமான தாக்குதல்கள்தான். மனரீதியாக ஒடுக்கி, அடக்க நினைக்கிறது சாருங்களுக்கு கைவந்த கலை.

சன் டிவி

இதுல புள்ளி ராஜா சாரு பண்ணதுதாங்க என்னைய மீடியாவைவிட்டே தொரத்தி விட்டது. என்னை ஆறு மாசம் சும்மாவே ஒக்காத்தி வெச்சு சம்பளம் கொடுத்த மவராசன் அவரு. ஏதோ போகட்டும்னு கொடுத்த வேலையிலேயும் எழுத்துப் பிழை, ஒற்றுப் பிழையெல்லாம் கண்டுபிடிச்சு கேப்பாரு பாருங்க அடுக்கடுக்கான கேள்வி… ஆத்தாடி! சாருக்கு ஒரு தப்புகூட வந்துடக்கூடாது அவ்வளவு தமிழ் பற்று. அதனாலதான் திராவிடப்பற்று உள்ள மற்ற பத்திரிகைகாரங்க அவரை காப்பாத்தி விடறாங்க போலிருக்கு. (ஈழப்பிரச்னைக்கு ஆதரவு கொடுத்த சாருங்க பத்து பொண்ணுங்க வாழ்க்கையை நாசம் பண்ணியிருந்தாலும் நாங்க தோள்கொடுத்து காப்போம்னு பல பத்திரிகை தோழர்கள் காப்பாத்துவாங்க. ஐயா தோழர் மாரே நாங்களும் தமிழச்சிங்கதான். அங்க சிங்களவன் எங்களைத் தொறத்தரான்னா, இங்க சாரு மாறு தொரத்தராங்க. அங்கேயும் நாங்க நாசமாப் போறோம், இங்கேயும் போறோம். எங்களுக்காகவும் கொஞ்சம் கருணைக் காட்டுங்க. உங்க கண்ணு, மனசு எல்லாத்தையும் கொஞ்சம் தொறந்து வையுங்க.)

ஐயா எனக்கு அடிமேல் அடிபட்டு ஒரு கட்டத்துல சாதி, பணம், அதிகாரம் எந்த பின்னணியும் இல்லாத நாம பத்திரிக்காரியா இருக்கவே முடியாதுன்னு முடிவு பண்ணிட்டு, சும்மா வேலைக்குன்னு போயிட்டு வந்துக்கிட்டிருந்தேன். சாருங்க நீ போய் மாடு மேய்ன்னு திட்டினாக்கூட சிரிச்சிக்கினேதான் நிப்பேன். சாருங்களைப் பார்த்து பல்லை இளிக்கறதுன்னு இதுக்கு அர்த்தம் எடுத்துக்காதீங்க. நீ எதுக்காக என்னை திட்டறேன்னு தெரியும்டாங்கிற திமிருதான். இந்த திமிருதாங்க என்னை பலப் பல ஊடக சாருங்கக்கிட்டேயிருந்து காப்பாத்துச்சு.

ஆனா அப்பாவி பொண்ணுங்க என்ன பாடுபட்டாங்க தெரியுமா? எல்லார் முன்னாடியும் கதறி கதறி அழுவாங்க. அவமானத்தால கூனிக்குறுகி போவாங்க. சில மாதத்துல பெரிசா கூம்பிடு போட்டுட்டு போயிடுவாங்க. அந்த வெறுப்புலதான் நானும் விலகிட்டேன்.

ஆனா இப்போ எனக்கிருக்கிற கேள்வியெல்லாம்… சுதந்திரமா ஒரு பொண்ணு மீடியாவுல வேலைப் பார்க்கவே முடியாதா? தன் சொந்த திறமையில முன்னுக்கு வரவே முடியாதா? மீடியாவுக்கு பெண்கள் வர்றது வேலைப் பார்க்கறதுக்கா, இல்லை விபச்சாரம் பண்றதுக்கா? சாருங்களுக்கு என்னதான் வேணும்? ஐயா வினவுக்காரங்களே கேட்டு சொல்றீங்களா?

ஐயா என் எழுத்தை சாருங்கள்லாம் சேர்ந்து தற்கொலை பண்ணவெச்சுட்டாங்க. அதனால கொஞ்சம் கோபமா எழுதிட்டேன். மத்தபடி ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட, துரத்தப்பட்ட என்னைய மாதிரி பொண்ணுங்களால வேற எதையும் செய்ய முடியாதுங்க.

– ஒரு பெண் பத்திரிகையாளர்.

 1. என்னுடைய தம்பியும் ஊடகத்துறையில் பணியாற்றுபவன் தான். அவன் சொன்னது – இந்த பிரச்சனை எழுந்தபோதே அனைத்து சப் எடிட்டர்களையும் கூப்பிட்டு, இந்த பிரச்சனையை செய்தியில் போட வேண்டாம் என்று கம்பெனி முதலாளி சொல்லி விட்டார். ஏனென்றால், அந்த டிவியிலும் இதே தவறைதான் செய்து வருகின்றனர்.

  நான்காவது தூணின் யோக்கியதை இதுதான். எதோ ஒரு பெண் கொல்லப்பட்டதிற்காக விழுந்து விழுந்து எழுதியர்வர்கள், பத்திரிக்கை உள்ளேயே இப்படி நடப்பதைப் பற்றி கண்டுகொள்ள வில்லை. மேலும் ஒரு பத்திரிக்கை பற்றி வரும் எந்த செய்தியையும் இன்னொரு பத்திரிக்கை வெளியிடாது. ஏனென்றால் அது தொழில் தர்மமாம்.

 2. இது உண்மையிலேயே ஒரு பெண் பத்திரிக்கையாளரின் குமுறலா? அல்லது உங்களின் வீக்கெண்ட் ஸ்பெசலா?

  ஏன் இந்த சந்தேகம் என்றால் இந்த எழுத்துப்/வார்த்தைப் பிரயோகம் அனைத்தும் வினவிற்க்கே உரிய ட்ரண்டு….அது மட்டும்ல்ல…பாராவுக்கு பாரா சாதி வருகிறது எனவெ

  கதை
  திரைக்கதைட்
  வசனம்
  டைரக்சன்

  பய் வினவு

  • பையா, இந்த பதிவு பொறுக்கி ராஜா கட்டுரையின் பின்னூட்டத்திலேயே உள்ளது. உங்களைப் போன்றவர்கள் புள்ளி ராஜாக்களை காப்பற்ற விரும்புகிறீர்கள் என்பதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டியதுதானே? எதற்கு இப்படி மலிவாக பொய் சொல்லி பிழைக்க வேண்டும்?

   • யப்பாபா….முதன்முறையாக வினவைடமிருந்து எனக்கு ஒரு ரிப்ளே வந்துள்ளது…எந்த புள்ளி ராஜாக்களையோ, பொறுக்கி ராஜாக்களையோ காப்பாற்றவேண்டுமென்பது என் எண்ணமள்ள….அவன் செய்த தவறுக்கு அவனுக்கு தண்டனை கிடைக்கும் ஆனால்….உங்களின் குறி முழுவதும் சன் டீவியின் மேலல்லவா இறுக்கிறது….சன் டீவியில் மட்டும் தான் பொறுக்கி ராஜாக்கள் உள்ளனரா??

    • சன் டி.வி. யில மட்டும்தான்னு எங்க சொல்லியிருக்காங்க?

     உங்க ‘காலி’பிளவருக்கு புரியாமல் போனது ஆச்சரியமாக இல்லை.. முந்தைய கட்டுரையில் இருந்து…

     //ஏனெனில் இவர்கள் கூட்டுக்களவாணிகள். “இன்று ராஜாவை பற்றி நாம் செய்தி வெளியிட்டால், நாளை நம் மீது ஒரு குற்றச்சாட்டு வரும்போது அவர்கள் செய்தி வெளியிடுவார்கள்” என இவர்களின் ‘கூட்டு மனசாட்சி’ நினைக்கிறது. இதை, ‘ஒரு மீடியா பத்தி இன்னொரு மீடியாவுல நியூஸ் போடக்கூடாது. இது ஒரு எத்திக்ஸ்’ என்று அறம் பேசுகிறார்கள்.

     “ஒரு திருடன் சக திருடனை காட்டிக் கொடுக்கக்கூடாது’ என்ற கட்டுப்பாடுதான் இவர்கள் கூறும் அறம். இன்று ராஜா சிக்கிக்கொண்டார். ஆனால் ஒவ்வொரு ஊடகத்திலும் சிக்காத ராஜாக்கள் பலபேர் இருக்கிறார்கள். அவர்களிடம் சிக்கி, பணியிடத்தில் கடும் தொந்தரவுகளுக்கு உள்ளாகி, அடுப்பங்கரைக்கே துரத்தப்பட்ட பெண்கள் எத்தனையோ பேர்.//

 3. இதில் சன் டீவியை மட்டும் ஏன் பொது எதிரியாக வைக்க முயச்சிக்கிறது வினவு….சிக்காத ராஜாக்கள் சன் டீவியில் மட்டும் தான் இருக்கிறனரா???????????

  எல்லா எடத்திலும் தான் இருக்கிறார்கள்???இவ்வளவு ஏன் நான் உட்பட சிக்காத ராஜாக்கள் உள்ளனர் என யாருக்குத்தெரியும்….

 4. முதலாளி சினிமா நடிகைகளிடம் காட்டிய/நடத்திய பாலியல் தொந்தரவுகளை, தங்கள் தகுதிக்கு தகுந்த மாதிரி தொழிலாளி வர்க்கத்திடம் காட்டி உள்ளான், பொறுக்கி ராஜா.

 5. அந்தப் பெண் பத்திரிகையாளர் யாராக இருந்தாலும் அவருக்கு வாழ்த்துக்கள். ஹாட்ஸ் ஆப் அகிலா, ஆணையர் ஜார்ஜ், துணை ஆணையர் லட்சுமி. என்னால் செய்ய முடியாததை அந்த ஆளை கையை, காலை உடைக்க வேண்டும் என்று குமுறி திட்டமிட்டிருந்த நேரத்தில், பல பேரை புழலுக்கு அனுப்பக் காரணமாக இருந்தவரை – ஒரு வாரமாகிலும் புழலைச் சென்று பார்க்க வைத்து விட்டதற்கு மனமார்ந்த பாராட்டுகள். இனிமேல் பிரதமர் உள்பட யார் கூட வேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் போகட்டும். புழல் தந்த அனுபவம் வேறு எங்கும் கிடைக்காது. அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும் என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, என்று தெய்வ்த்தின் மீதான நம்பிக்கு அதிகரித்து விட்டது. நன்றி.

 6. இது போன்ற என்னற்ற பேர் பாதிக்கப்பட்டுல்லன்ர். போரடுஒம்

 7. பாலியல் குற்றங்களும் அதிகாரமும்

  தனி நபர் பாலியல் குற்றங்கள் எப்போதுமே பாதிக்கப்படுபவர் மேல் அதிகாரம் செலுத்தக்கூடியவர்களாலேயே இழைக்கப்படுகிறது. குற்றம் இழைக்கும் மனம் கொண்டவர் அவரால் அதிகாரம் செலுத்தக் கூடியவருக்கு அருகில் வரும்போதெல்லாம் இது நடக்கவே செய்கிறது. சமூக மற்றும் நிறுவன கலாசாரங்களே இத்தகைய அதிகாரத்திற்கு உரமிடுகின்றன. தமிழ்நாட்டுக் கலாசாரம் பெண்களின் உரிமைக்காக எழுச்சி பெறுவதில் பின்தங்கியே இருக்கிறது. உலகமயமாக்கல் பொருளாதாரக் கலாசாரத்தில் முன்னோக்கி எடுக்கப்பட்ட அடிகளும் பின்னோக்கித் தள்ளப்பட்டு விட்டன. அகிலாவின் விடயத்தில் அவர் பணியாற்றிய நிறுவனத்தின் உச்சத்திலேயே அழுகல் தொடங்கி விட்டது போல் தெரிகிறது.

  காத்திரமான மாற்றம் பாதிக்கப்பட்டவர்கள் போராடும் போதுதான் உண்டாகிறது என்று நான் நம்புகிறேன். அகிலாவின் துணிச்சலான செயல் பாதிக்கப்பட்ட ஏனையோருக்கும் ஊக்கமளித்து அவர்கள் கைகோத்துப் போராடுவதற்கு வினையூக்கியாக அமைய வேண்டும். அவ்வாறான பாதிக்கப்பட்ட பெண்களின் துணிச்சலான செயல் மிகப்பெரிய சமூக மாற்றங்களுக்கான விதையாகவும் அமையலாம்.

 8. ஆண்களால், ஆண்களையே முன்னிருத்தி வளர்ந்துவிட்ட, இந்திய ஆணாதிக்க சமுதாயம் முற்றிலும் மாறும் வரை, பெண்களின் போராட்டம் ஓயாது! இன்னும் நிறைய பெண்கள் ஆண்களால் ஏற்படும் தொல்லைகளை வெளியில் சொல்ல முடியாமல், ஒதுஙகி போகின்றனர்! உழைக்கும் பெண்கள் இன்னும் தைரியமாக தஙகள் பகுதி பெண்கள் அமைப்புகளை பயன்படுத்தி கொள்ளவேண்டும்!

 9. ஊடகத் துறையைப் போல ஒரு உருப்படாத துறை வேறு எதுவும் இல்லை என்று சொல்லலாம்.ஊர் உலகத்தில் நடக்கிற எல்லா செய்திகளையும் அவரவர் முதலாளியின் கொள்கைக்கேற்ப வெளியிடும் செய்தியாளார்கள் தங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அதை அடிபணிந்து தான் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.யாரும் யாருக்காகவும் போராட மாட்டர்கள்.இது பொது விதியாக காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.ஊடகங்களுக்கு இரண்டு வகையான தர்மம் இருந்துவருகிறது.தங்களுக்கு ஒன்று, மக்களுக்கு ஒன்று.ஆபாசங்களைப் பரப்பி காசு பார்த்துவந்த ஊடகங்களில் இப்போது நிரைய பெண்கள் பணீக்கு வந்திருக்கிறார்கள்.காவல் துறையில் பெண்கள் வந்திருப்பதைப் போல-இரண்டு துறையின் நிலைமையும் ஒரே மாதிரி தான்.ஊடகத் துறையில் தற்போது நிலவும் போட்டி செய்தியாளர்களைத் தரை மட்டத்துக்குக் கொண்டுபோய் இருக்கிறது.ஜன நாயகத்தின் நான்காவது தூண் என்று பீற்றிக் கொள்ளும் இதில் ஜனநாயகத்துக்கு துளிகூட இடமேகிடையாது.யாராக இருந்தாலும் பத்திரிகைகளை மட்டும் பகைத்துக் கொள்வதில்லை. நல்லிணக்கம் வைத்துக்கொள்ளவே விரும்புவார்கள்.எனவே பத்திரிகையாளர்கள் பல்லுப் பிடுங்கப் பட்ட பாம்பாகத்தான் இருக்கிறார்கள்.இது ஒரு எதிர்மறை விளைவு.எழுபதுகளின் இறுதியில் பார்ப்பன விகடனில் என் தன்மானத்துக்கான போராட்டத்தைத் தொடங்கினேன்.வெளியேற்றப் பட்டேன்.தன்மானம் உள்ள எவரும் பத்திரிகைத் துறையில் வேலை செய்ய மாட்டார்கள்.உங்களுடைய எழுத்து விலைபோகிறவரை வெளியேயிருந்து எழுதலாம்.முதலாளிக்கு உடன்பாடிருந்தால்.” காவல் நாயின்” லட்சணம் இது தான்.அகிலாவின் போராட்டம் ஒரு நல்ல தொடக்கம்.துணை நிற்போம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க