இந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் ? மு.வி.நந்தினி

7-ம் வகுப்பு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அத்தகைய 17 இயல்பான முகங்கள்தான் ஸ்ரீரெட்டியின் முகநூலிலும் வெறுக்கத்தக்க பின்னூட்டங்கள் இடுகின்றன.

ஸ்ரீரெட்டி என்ற நடிகர் (நடிப்பை தொழிலாகக் கொண்ட ஒரு ஆணை மதிப்பிற்குரிய வகையில் நடிகர் என குறிப்பிடும் சமூகம், அதே தொழிலை செய்யும் ஒரு பெண்ணை ‘நடிகை’ என ஒருமையில் அழைக்கிறது. நடிப்பை தொழிலாகச் செய்யும் அனைவரையும் நடிகர் என்றே குறிப்பிட விரும்புகிறேன்) தான் சார்ந்த திரைப்படத்துறையில் பெண்கள் பாலியல் பண்டங்களாக சுரண்டப்படுவதை எதிர்த்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

தெலுங்கு திரைப்படத்துறையில் பிரபலமான தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள் ‘வாய்ப்பு’ தருவதாகக் கூறி தன்னை பாலியல் சுரண்டல் செய்ததை அவ்வவ்போது தன்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டுவருகிறார். ஸ்ரீரெட்டியின் ‘ஸ்ரீலீக்ஸ்’ இந்திய ஊடகங்களுக்கு நல்ல தீனி என்றாலும், தான் சார்ந்த திரைத்துறையிலிருந்து அவருக்கு எவ்வித ஆதரவும் கிடைக்கவில்லை. மாறாக, தெலுங்கு படங்களில் நடிக்க அவருக்கு தடை விதித்தது, டோலிவுட் நடிகர் சங்கம். பெண்கள் அமைப்பினரின் தலையீட்டால் அந்தத் தடை நீக்கப்பட்டிருக்கிறது. இரண்டு, மூன்று படங்களில் நடித்திருக்கும் ஸ்ரீரெட்டிக்கு, இந்த பிரச்சினையின் காரணமாக நடிக்க வாய்ப்பு எதுவும் கிடைத்ததாகத் தெரியவில்லை.

ஸ்ரீரெட்டி

இங்கே ஒரு இடையீட்டுச் செய்தியாக ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.  பணம் புரளும் சினிமா தொழிலில் பெண்கள் பாலியல் பண்டங்களாக பயன்படுத்தப்படுவது கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை ‘இயல்பாக’ உள்ள ஒரு விஷயமாக, மூடிமறைக்கப்படும் விஷயமாகத்தான் இருந்து வருகிறது. சுரண்டப்படும் ஒரு சமூகம் அல்லது பாலினம் தொடர்ந்து சுரண்டலுக்கு ஆளாகிக் கொண்டுதான் இருக்கும் என்பது இயற்கை நியதி அல்ல. மாற்றங்கள், எதிர்குரல்கள் எழத்தான் செய்யும். சமூகத்தின் முதிர்ச்சியைப் பொறுத்து எதிர்வினைகளின் வேகம் இருக்கும். அந்தவகையில் ஹாலிவுட்டில் எதிர்க்குரல் ஒலிக்கத்தொடங்கியுள்ளது.

‘#metoo’ என்ற பெயரில் திரைப்பட வாய்ப்புக்காக தாங்கள் எப்படி சுரண்டலுக்கு உள்ளானோம் என ஹாலிவுட் நடிகர்கள் பலர் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது குற்றம் சுமத்தினார்கள். பிரபல நடிகர் ஏஞ்சலினா ஜோலி, குவெந்த் பால்ட்ரோ, ஜெனிஃபர் லாரன்ஸ், உமா த்ரூமன் ஆகியோரும் இதில் அடக்கும். சினிமா நடிக்க வந்த புதிதில் (இதில் பலர் சினிமா குடும்பத்தைச் சார்ந்தவர்களாக இருந்தபோதும்) பாலியல் சுரண்டலுக்கு ஆளானோம் என ஊடகங்களிடம் பேசினார்கள்.

சிறுமியை பாலியல் வன்கொடுமை
தமக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை பொதுவில் அம்பலப்படுத்திய ஹாலிவுட் நடிகர்கள்

அதன் பின் 70க்கும் மேற்பட்ட நடிகர்கள் தங்களுடைய மோசமான சுரண்டல் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். பிறகு, நடந்ததுதான் கவனிக்கத்தக்கது. குற்றச்சாட்டுக்கு ஆளான ஆண்கள் மீது வழக்குகள் பதியப்பட்டன; அவர்களுடைய கௌரவமிக்க திரைத்துறை-சமூகம் சார்ந்த பதவிகள், பொறுப்புகள் பறிக்கப்பட்டன; பலருடைய சினிமா ஒப்பந்தங்கள், டிவி தொடர் ஒப்பந்தங்கள் பறிக்கப்பட்டன. குற்றச்சாட்டுக்கு ஆளான ஹார்வி வெயின்ஸ்டீன் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனத்திலிருந்தே நீக்கப்பட்டார். ஆஸ்கார் விருது தேர்வு குழுவின் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டார்.  கைதும் செய்யப்பட்டார்.

இப்போது ஸ்ரீரெட்டி விவகாரத்துக்கு வருவோம். தெலுங்கு திரைத்துறையில் தனக்கு நேர்ந்த சுரண்டலை சொன்ன ஸ்ரீரெட்டி, தமிழ்லீக்ஸ் என்ற பெயரில் கோலிவுட் இயக்குநர்கள், நடிகர்கள் குறித்து எழுத ஆரம்பித்தார். தமிழ் ஊடகங்களில் நாள்தோறும் இது செய்தியானது.  செய்தி எழுதும் பொருட்டு அவருடைய முகநூல் பக்கத்துக்கு சென்று பார்த்தேன். வெறிபிடித்த ஆண்களிடையே சிக்கிக்கொண்டதைப் போன்ற உணர்வு.

நான் மிகைப்படுத்தி சொல்லவில்லை, நான் உணர்ந்ததை எழுதுகிறேன்.  நாகரிகத்தில், தனிமனித உரிமைகளை காப்பதில் முன்னேறிய ஒரு சமூகம், பாதிக்கப்பட்ட பெண்களின் பக்கம் நிற்கிறது.  இங்கே என்ன நடக்கிறது? குற்றச்சாட்டுகளை சொன்ன பாதிக்கப்பட்ட பெண் தான் சார்ந்த தொழிலில் இயங்க தடை விதிக்கப்படுகிறது. வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. அனைத்துக்கும் மேலாக, ஒட்டுமொத்த சமூகமும் பரிசாக என்ன தருகிறது தெரியுமா?

  •  உன்னோட _____ அவ்வளவு பெரிசா?
  •  ஒருத்தரையும் விட்டு வைக்கலையா?!
  •  உனக்கு எய்ட்ஸ்தான் வரும்
  •  சீக்கிரம் வீடியோ ரிலீஸ் பண்ணு, அப்பதான் நீ பாதிக்கப்பட்டதை நம்புவோம்
  •  உன் ரேட் என்ன?
  •  அதே ஹோட்டல்ல நான் காத்திக்கிட்டு இருக்கேன். நீ வா

இதெல்லாம் சும்மா…ஸ்ரீரெட்டியின் முகநூல் பக்கத்தில் சென்று பாருங்கள். இத்தகைய கழிசடை ஆண்களுடன்தான் சமூகத்தில் வாழ்கிறோம் என பயம் பீடிக்கும். நடுக்கம் வரும். எவ்வித கூச்சமும் இன்றி, எப்படி இந்த ஆண்களால் இப்படியெல்லாம் எழுத முடிகிறது? பெண்ணை போகப்பொருளாக மட்டுமே, புணர்வதற்குரிய பொருளாக மட்டுமே பார்க்கும் இந்த மனோபாவம் எப்போது மாறும்?

ஸ்ரீரெட்டி, ‘கவர்ச்சி நடனம் ஆடும் பெண்; அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால்தான் அவர் இப்படியெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார் எனவும் பல மேதைகள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். குற்றம் சாட்டியவரின் இயல்பை ஆராய்வது, குற்றத்தின் வீரியத்தை குறைக்கும், மடைமாற்றும் அயோக்கியத்தனம். ஸ்ரீரெட்டி ‘நல்லவர்’ இல்லை என முதன்மைப்படுத்தி, அவரை சுரண்டியவர்களை தப்பிக்க விடும் அயோக்கியத்தனம்.

சிறுமியை பாலியல் வன்கொடுமை
7-ம் வகுப்பு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இத்தகைய இயல்பான முகங்கள்தான் ஸ்ரீரெட்டியின் முகநூலிலும் வெறுக்கத்தக்க பின்னூட்டங்கள் இடுகின்றன.

ஸ்ரீரெட்டியின் முகநூலில் பின்னூட்டமிட்டவர்களில் இயக்குநரின் ரசிகன், இயக்குநரின் ஜாதி, நடிகரின் ரசிகர், பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள், ஸ்ரீராமரை முகப்புப் படமாகக் கொண்டவர்கள், நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை என்று சொல்லக் கூடியவர்கள், இயற்கை ஆர்வலர்கள், முகநூல் போராளிகள் என பலருடைய முகங்களை அன்றாடம் நாம் பார்க்கிறோம்.

அதுபோன்றதொரு இயல்பான சாயலில் 60, 50, 40, 30, 20 வயதுகளில் இருந்த, ஒரு குழந்தையை தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய நபர்களின் படங்கள் சமூக வலைத்தளத்தில் பார்க்க முடிந்தது. இந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம்?

என்னைப் பொறுத்தவரை, சாதிய – வர்க்கச் சுரண்டலைக் காட்டிலும் மிக மிக ஆபத்தானது பாலின சுரண்டல். வீட்டிலிருந்தே சுரண்டலுக்கு எதிரான மனோபாவம், சமத்துவம் பிறக்க வேண்டும். தான் அழைத்த நேரத்திற்கெல்லாம் படுக்க வருபவள்தான் தன் வீட்டு பத்தினி மனைவி என்கிற மனோபாவம் இங்கே மாறவேண்டும்.

இந்திய படுக்கையறைகள் வன்கொடுமை கூடாரங்களாக இருப்பதாகத்தான் பல ஆய்வுகள் சொல்லிக் கொண்டிருக்கின்றன. வன்கொடுமை மனநிலையை ‘இயல்பான’தாக கருதிக்கொள்ளும் சூழலிலிருந்துதான் ஸ்ரீரெட்டியின் முகநூலில் எழுதுகிறவர்களும், 12 வயது சிறுமியை வன்கொடுமை செய்தவர்களும் உருவாகிறார்கள். அதிகபட்ச தண்டனைகள் ஒருவித பயத்தை உடனடியாக விதைக்கலாம். ஆனால், சமூகத்தின் உள்ளிருக்கும் இந்த விஷ மனநிலை மாறினால் மட்டுமே கொடூரங்களின், வெறித்தனங்களின் எண்ணிக்கை குறையும்.

ஆண்களை மட்டுமே குற்றம் சொல்வதா என பல ‘முற்போக்காளர்கள்’, பல ‘பெண்ணியவாதிகள்’ வருத்தம் கொள்கிறார்கள். “இந்த உலகத்தை பிரதிநிதிப்படுத்துகிற, ஏன் இந்த உலகமே ஆணின் சிந்தனையில் உருவானதுதான். அதை அவர்கள் பார்வையிலிருந்தே வர்ணிக்கவும் செய்வார்கள். ஆனால், உண்மை முற்றிலும் வேறானது” என்கிற சிமோன் திபொவாரின் மேற்கோளை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். தன்னுடைய ஆதிக்கத்தனத்தை உணராத முற்போக்காளர்களாலும் ஆண்டைகளுக்கு சலாம் போடும் அடிமையின் மனநிலையை ஒத்த ஆணாதிக்கத்துக்கு குரல் கொடுக்கும்  லிபரல் பெண்ணியவாதிகளாலும் நிரம்பியது தமிழ் சமூகம்.   பல்லாயிரம் வருடங்களாக சுரண்டலுக்கு ஆளாகியிருக்கும்  பெண் சமூகம் கடுமையான  உரையாடல்களை நிகழ்த்தினால் மட்டுமே, ஆணாதிக்க சூழலை தகர்க்க முடியும்.

– மு. வி. நந்தினி

மு.வி.நந்தினி கடந்த 14 ஆண்டுகளாக தமிழின் பல இதழ்களில் பத்திரிகையாளராக பணியாற்றியிருக்கிறார். தற்போது டைம்ஸ் தமிழ் டாட் காம் இணையதளத்தின் ஆசிரியராக இருக்கிறார். சுற்றுச்சூழல், சமூகம், இந்துத்துவ அரசியல், பெண்ணியம் சார்ந்து எழுதிவருகிறார். வினவு கருத்தாடல் பகுதியில் பாரமுகம் பார்ப்போம் எனும் தலைப்பில் எழுதுகிறார்.