privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்ஊடகங்களா ? பாலியல் வக்கிரக் கூடங்களா ?

ஊடகங்களா ? பாலியல் வக்கிரக் கூடங்களா ?

-

லக நிகழ்வுகளை வீட்டின் வரவேற்பறைக்குக் கொண்டுவரும் காட்சி ஊடகங்கள், அதிலும் குறிப்பாக செய்தித் தொலைக்காட்சிகள், எந்தவொரு விசயம் குறித்தும் மக்களிடையே ஒரு பொதுக் கருத்தை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. மக்களின் பிரச்சனைகளைப் பற்றியும் அவற்றிற்கான தீர்வுகள் குறித்தும் பேசுகின்ற, சமூக அக்கறை கொண்டவர்களாக, பெண்ணுரிமைப் போராளிகளாக இந்தத் தொலைக்காட்சிகள் தங்களை எப்போதும் விளம்பரப்படுத்திக் கொள்கின்றன.

ஆனால், மேற்பார்வைக்கு முற்போக்கானது போலத் தோன்றும் இந்தச் செய்தித் தொலைக்காட்சிகளின் உண்மை முகமோ வேறு மாதிரி உள்ளது. குறிப்பாக, பெண் ஊழியர்களுக்கு இத்தொலைக்காட்சி நிறுவனங்கள் இழைத்துவரும் வக்கிரமான பல பாலியல் தொல்லைகள் அண்மையில் அம்பலமாகியுள்ளன.

செய்தி வாசிப்பாளர் தனு சர்மா
இந்தியா – டி.வி நிர்வாகத்தின் விபச்சார தரகு வேலைக்கு இணங்க மறுத்து, அத்தொலைக்காட்சி அலுவலக வாயிலிலேயே விசம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்த செய்தி வாசிப்பாளர் தனு சர்மா.

வட இந்தியாவில் பிரபலமான செய்தித் தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒன்றான “ஜி-நியூஸ்” தொலைக்காட்சி நிறுவனம், தனது பெண் ஊழியர் ஒருவர் கருவுற்ற காரணத்திற்காக அவரை வேலையை விட்டு நீக்கியுள்ளது. இதுபற்றிக் கூறும் அந்த ஊழியர், தான் திருமணம் செய்து கொள்ளப்போவதை நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்தும் முன்பு வரை தனது வேலையிலும் செயல்திறனிலும் குறையேதும் காணாத நிர்வாகம், திருமணம் செய்து கொள்ள விடுமுறைக்கு விண்ணப்பித்தது முதல் தன்னைக் குறிவைத்துத் தாக்கத் தொடங்கியதையும், தனது திருமணத்திற்கான விடுமுறையைக்கூட மிகப்பெரிய போராட்டத்திற்குப் பிறகுதான் வாங்க முடிந்ததையும் வேதனையுடன் கூறுகிறார்.

பின்னர், அவர் கருவுற்றிருப்பதை நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்தியதும், அடுத்த இரு நாட்களில் அவரை வேலையை விட்டு நீக்கிவிட்டு, அதற்குக் காரணமாக, அவரது செயல்திறன் தாங்கள் எதிர்பார்த்தபடி இல்லை எனக் கூறி ஒரு கடிதத்தை முப்பது நாட்களுக்கு முன்னரே கொடுத்தது போல் முன்தேதியிட்டுக் கொடுத்துள்ளது, ஜி நியூஸ் தொலைக்காட்சி நிறுவனம். கர்ப்பிணிப் பெண்ணை வேலையை விட்டு நீக்கும் சட்டவிரோதச் செயலை மறைக்கவே இப்படியொரு மோசடிக் கடிதத்தை ஜி-நியூஸ் நிர்வாகம் தயாரித்துள்ளது. “சொல்வதெல்லாம் உண்மை” புகழ் ஜி-நியூஸ் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையானது, தொழிலாளர் நலச் சட்டத்திற்கு எதிரானது எனத் தொழிலாளர் தீர்ப்பாயமும், மும்பை தொழில்துறை நீதிமன்றமும் உத்தரவிட்ட பின்னரும், அதனை ஏற்றுக் கொள்ளாத ஜி-நியூஸ் நிறுவனம் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.

இதைவிட வக்கிரமான சம்பவம் டெல்லியிலுள்ள “இந்தியா-டி.வி.”யில் செய்தி வாசிப்பாளரான தனு சர்மா என்ற பெண் ஊழியருக்கு நேர்ந்துள்ளது. அது குறித்துத் தனது முகநூலில் எழுதியுள்ள தனுசர்மா, இந்தியா-டிவியில் தான் வேலைக்குச் சேர்ந்த நாளிலிருந்தே தன் மீதான பாலியல் சுரண்டலை உணர முடிந்ததாகக் கூறுகிறார். வேலைக்குச் சேர்ந்த முதலிரண்டு வாரங்களில் கனிவாக நடந்து கொண்டு நெருக்கமாகப் பழகிய தனது மேலாளரான அனிதா சர்மா, பின்னர் கட்டுப்பெட்டியாக இருக்காமல் வெளி உலகத்தைப் புரிந்துகொண்டு, கார்ப்பரேட் அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் தனிமையில் சந்திக்கும்படியும், தான் கூறியதை ஏற்றுக் கொண்டால் கை நிறைய சம்பளமும், பெயரும், புகழும் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகளைக் கூறி இணங்கவைக்க முயற்சித்ததையும் அம்பலப்படுத்தியுள்ளார்.

இது குறித்து துறைத்தலைவரான எம்.என்.பிரசாத்திடம் தனு சர்மா முறையிட்ட போது, இதில் தவறேதும் இல்லை எனக் கூறிய அவர், மேலாளரான அனிதா சர்மா கூறுவதைக் கேட்டு நடக்குமாறு தனு சர்மாவை வற்புறுத்தியுள்ளார். ஆனால், தனு சர்மா அதற்கும் இணங்கவில்லை. அதன் பின்னர், துறைத் தலைவரான எம்.என்.பிரசாத்தைச் சந்தித்த போதெல்லாம், அவர் தனு சர்மாவை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியுள்ளார். அவர் அணிந்துவரும் உடை, சிகை அலங்காரம், பேச்சு வழக்கு – என அனைத்திலும் குற்றம் கண்டுபிடித்து, அவரைச் சாடியதுடன் இந்நிறுவனத்தினர் தொடர்ச்சியாக இரண்டு மாதங்களுக்கு அதிகாலை 4 மணி ஷிப்டில் அவரைப் போட்டுள்ளனர். அத்துடன் அவரது சிறுசிறு தவறுகளுக்கும் கூட மிகக் கேவலமான வார்த்தைகளைக் கொண்டு அனைவரது முன்னிலையிலும் அவரைத் திட்டி அவமானப்படுத்தியிருக்கிறது.

சன் நியூஸ் ராஜா
சன் நியூஸ் தொலைக்காட்சியில் வேலை பார்த்த பெண்களைப் பாலியல் தொந்தரவு செய்த அந்நிறுவனத்தின் தலைமைச் செய்தி ஆசிரியரான ராஜாவைக் கைது செய்து பணிநீக்கம் செய்யக் கோரி மனித உரிமை பாதுகாப்பு மையம் ஏப்ரல் 17, 2013-ல் நடத்திய ஆர்ப்பாட்டம்.

இந்தியா-டி.வி.யில் வேலைக்குச் சேர்ந்தபோது போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, நிர்வாகம் நினைத்தால் தனு சர்மாவை எப்போது வேண்டுமானாலும் வேலையை விட்டு நீக்கிவிட முடியும். ஆனால், அவராகவே விலகினால், அவர் நிர்வாகத்துக்கு 6 மாத சம்பளத்தைத் தந்துவிட்டுத்தான் வெளியேற முடியும். இதனால் தனு சர்மாவால் வேலையை விட்டு வெளியேறவும் முடியவில்லை. நிர்வாகத்தின் தொடர் தாக்குதலால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து, கடந்த ஆண்டு ஜூலையில் இந்தியா-டி.வி.யின் அலுவலக வாயிலிலேயே விசம் குடித்துள்ளார். தொலைக்காட்சி நிர்வாகம் தன்னைத் தற்கொலைக்குத் தூண்டியதாக தனு சர்மா கொடுத்த புகார் குப்பையில் போடப்பட்டு, அவர் மீது இந்தியா-டி.வி தொடுத்துள்ள மான நஷ்ட வழக்கு தற்போது நீதிமன்றத்தால் விசாரிக்கப்படுகிறது.

முதலாளிகள், அதிகார வர்க்கம் – நீதித்துறையுடன் ஊடகத்துறையினருக்கு இணக்கமான உறவு இழையோடி நிற்பதால், பணத்துக்குச் செய்திகளை வெளியிட்டுக் கருத்தை உருவாக்கும் தரகு வேலையைச் சில பத்திரிகையாளர்கள் செய்வதைப் போல, இன்று சில தொலைக்காட்சி நிறுவனங்கள் இன்னும் ஒருபடி மேலே போய் விபச்சாரத் தரகர்களாக மாறி தங்களுக்குத் தேவையானதைச் சாதித்துக் கொள்கின்றனர். “வீக் என்ட் பார்ட்டி”கள், ‘சோஷியலைசிங்’ முதலான கழிசடைக் கலாச்சாரத்தைத் தங்களது ஊழியர்கள் மத்தியில் பரப்பி விபச்சாரத்தை நிறுவனமயமாக்கி வருகின்றனர். இது பிடிக்காதவர்கள் அங்கிருந்து அவ்வளவு எளிதில் வெளியேற முடியாதபடிக்கு கடுமையான நிபந்தனைகளுடன் கூடிய ஒப்பந்தங்கள் அவர்கள் வேலைக்குச் சேரும் போதே போடப்படுகின்றன. “உங்களை ஒரு பிராண்டாக ஆக்க பல லட்சங்களைச் செலவு செய்துள்ளோம்; எனவே, நீங்கள் இந்த நிறுவனத்தை விட்டு வெளியேறினால் அதற்கு ஈடான பணத்தைக் கொடுக்க வேண்டும்” என தொலைக்காட்சி நிறுவனங்கள் இதனை நியாயப்படுத்துகின்றன.

இத்தகைய சூழலில் தனது மேலாளர் பாலியல் வக்கிரப் பேர்வழியாக இருந்தாலும், அங்கு பணியாற்றும் பெண் ஊழியர்களால் அதை எதிர்த்துப் போராட இயலாத நிலைமைதான் உள்ளது. இதையும் தாண்டி ஒரு பெண் ஊழியர் தனக்குப் பாலியல் தொல்லை கொடுப்பதாக ஒருவர் மீது புகார் கூறினால், “நீங்கள் அவரைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள். அவர் ரொம்ப நல்லவர்” என்று நைச்சியமாகவும், “நீ எந்த வகையிலும் பாலியல் தாக்குதலுக்கு ஆளாகாத போது, பிரச்சினையை ஏன் பெரிது படுத்துகிறா? இது உனக்குத்தான் அவமானத்தைத் தேடித்தரும்” என்று அச்சுறுத்தியும் இந்த விவகாரம் நிர்வாகத்தால் அமுக்கப்படுகிறது.

செய்தித் தொலைக்காட்சி நிறுவனங்களில் உள்ள நியூஸ் ரூம் எனப்படும் செய்தி அறைகள் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைக் கூடங்களாக உள்ளன என்று பத்திரிகையாளர் அமிர்த தத்தா கூறுகிறார். தொலைக்காட்சி நிறுவனங்கள், பெண்களை வெறும் அழகுப் பொருட்களாக மட்டுமே பார்ப்பதாகக் கூறும் அவர், பாலியல் தொந்தரவு குறித்த அவர்களது புகார்கள் எப்போதும் நிர்வாகத்தால் ஒதுக்கித் தள்ளப்படுவதாகக் கூறுகிறார்.

தமிழகத்தில் சன் நியூஸ் தொலைக்காட்சியில் வேலை பார்த்த பெண்களைப் பாலியல் தொந்தரவு செய்த அந்நிறுவனத்தின் தலைமை செய்தி ஆசிரியரான ராஜா, மற்றுமொரு அதிகாரி வெற்றிவேந்தன் ஆகிய இருவர் குறித்தும் அந்நிறுவனத்தில் வேலை பார்த்த அகிலா என்ற பெண் ஊழியர் அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து ராஜா கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அண்மையில் மற்றொரு பெண் ஊழியர் கொடுத்த புகாரின்படி சன் டி.வியின் தலைமை அதிகாரி பிரவீன் கைது செய்யப்பட்டார். 2012 டிசம்பரில் டெல்லியில் நடந்த துணை மருத்துவ மாணவி மீது நடந்த கொடூரமான கும்பல் பாலியல் வன்முறையும், அந்த இளம்பெண்ணின் மரணமும் இந்தியாவை உலுக்கியபோது, பெண்ணுரிமைப் போராளிகளாகத் தங்களைக் காட்டிக்கொண்ட தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்தும் இத்தகைய சம்பவங்கள் அம்பலமாகும்போது கள்ள மவுனம் சாதிக்கின்றன. ஒரு திருடன் சக திருடனைக் காட்டிக் கொடுக்கக் கூடாது என்பதுதான் இவர்கள் கடைப்பிடிக்கும் அறம்.

இந்தச் செய்தித் தொலைக்காட்சி நிறுவனங்களில் வேலைக்குச் சேர்வதற்கு ஒரு பெண்ணிற்கு இருக்க வேண்டிய முக்கிய தகுதியே அழகும் இளமையும் கவர்ச்சியும்தான். செய்தி வாசிப்பதற்குக்கூட தோற்றப்பொலிவான பெண்களைத்தான் இவர்கள் தேர்வு செய்கிறார்கள். இங்கே வேலை பார்க்கும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களும் இதற்குத் தகுந்தாற்போலத் தயாரிக்கப்படுகிறார்கள். கதைக்குத் தேவைப்படுவதால் கவர்ச்சியாக நடிப்பதாகக் கூறும் நடிகைகளைப் போல, தான் ஒரு பண்டமாக விற்கப்படுவதை ஒப்புக்கொள்ளும் வகையில் அவர்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். இந்தச் சீரழிவுக் கலாச்சாரத்தின் நீட்சிதான், இங்கே பணிபுரியும் பெண்கள் மீதான பாலியல் வன்முறையாக வெளிப்படுகிறது.

– அழகு
____________________________
புதிய ஜனநாயகம், ஜூன் 2015
____________________________