துரையில், கடந்த ஆகஸ்ட் 28 அன்று, – ஆம் தேதி, மதுரை மாட்டுத்தாவணி இராமசுப்பு அரங்கத்தில் “உயர்கல்வி ஆணைய மசோதாவை முறியடிப்போம்!” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில், மதுரை காமராசர் பல்கலைக்கழக பாதுகாப்புக் குழுவின் துணைத்தலைவர் பேரா.விஜயகுமார்; மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலாளர், பேராசிரியர் இரா. முரளி, மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், தொலைநிலைக் கல்வி இயக்ககத்தின், அரசியல் அறிவியல் துறைப் பேராசிரியர் இரா.பவணந்தி வேம்புலு ஆகியோர் ஆற்றிய உரை.

பேரா.விஜயகுமார், துணைத்தலைவர், மதுரை காமராசர் பல்கலைக்கழக பாதுகாப்புக் குழு.

கல்வியாளர்களை விரட்டும் உயர் கல்வி ஆணைய மசோதா!

பேரா.விஜயகுமார்

இன்று நாம் பேச வேண்டிய முக்கியமான பிரச்சினையை சரியாக ஆராய்ந்து இந்த மசோதாவை முறியடிக்க அறைகூவி உள்ளார்கள்.  ஏனெனில் கல்வி பறிபோய்விட்டால் அவ்வளவு தான்.  நாம் நம்மை அறியாமலேயே அடிமையாக அதுவே போதும்.  நான் மூன்று விசயங்களை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

முதலாவது, பல்கலை மானியக்குழு என்பது கல்வியாளர்களால் நிரம்பிய ஒரு அமைப்பு.  நிதி ஒதுக்கீட்டைத் தவிர அரசுக்கு அதில் வேலை இல்லை.  ஆனால் இந்த மசோதாவின் படி உயர்கல்வி ஆணையத்தில் கல்வியாளர்களுக்கு இடமே இல்லை.  சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் தொழில் அதிபர்களும் தான் ஆணையத்தில் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனில் இதன் யோக்கியதையை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.  ஏற்கனவே வாஜ்பாய் காலத்தில் அம்பானி-குமாரமங்கலம் பிர்லா தலைமையில் கல்வி வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டது.  அதே போல், இனி தொழிலதிபர்கள் எல்லாம் ஒன்று கூடி தங்களது நிறுவனங்களுக்கு திட்டமிடுவதைப் போல, நம்முடைய கல்வியின் மூலமாக எப்படி இலாபம் பார்க்கலாம் என திட்டமிடுவார்கள்.

இரண்டாவதாக, பொதுவாவே ஒரு சட்டம் உருவாக்கப்படும்போதே, அதிலிருந்து தப்பிக்க ஒரு ஓட்டையை விட்டுவைப்பது போல், இந்த மசோதாவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவை படித்துப் பார்த்தால் – அந்த ஆணையம் ஒரு ஆய்வு செய்யும் அமைப்பாக மட்டும் இருக்குமே ஒழிய, தற்போதைய மானியக் குழு போல நிர்வகிக்கும் அமைப்பாக இருக்க முடியாது.  உதாரணத்திற்கு தங்களுடைய தேவைக்கு ஒத்துவராத பாடம் ஒன்றை அதைத் தடுப்பதற்கு மட்டுமே இந்த ஆணையத்தை பயன்படுத்த முடியும்.  மற்றபடி, ஒரு தொழில் நிறுவனத்தின் நிர்வாகத்தில் எப்படி அரசு தலையிட முடியாதோ அதே போல் நம் கல்வி அமைப்பை கார்ப்பரேட் பல்கலைக்கழகங்கள் தம் விருப்பம் போல் இலாப நோக்கோடு நடத்திக் கொள்ளும்.மூன்றாவதாக, வர்க்கம் சார்ந்த ஒரு அரசு, தம்முடைய வர்க்கம் சார்ந்த கோட்பாடுகளை கொண்டு செல்ல பயன்படுத்துவது, முதலும் கடைசியுமாக கல்வி அமைப்பு தான்.

தற்போது உள்ள மனுதர்ம வாதிகள் தமது இந்துத்துவ காவி கொள்கைகளை கொண்டு செல்ல இந்த ஆணையத்தை பயன்படுத்துவார்கள். ஏற்கனவே ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மனுவுக்கு சிலை இருக்கிறது, ரோஹித் வெமுலா ஹைதராபாத்தில் கொல்லப்பட்டார், தமிழகத்தில் மூன்று கல்வி நிலையங்களில் ஆர்.எஸ்.எஸ். சார்பானவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

1998-இல் வாஜ்பாய் காலத்திலும் தங்களுடைய கோட்பாடுகளை கொண்டுவர முயற்சி செய்தார்கள்.  அதாவது, கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் இனி கல்வி நிலையங்களில் சரஸ்வதி வந்தனம் பாட வேண்டும் என கூறினார்கள்.  அப்போதைய கல்வி அமைச்சரும் தி.மு.க. வின் பொதுச்செயலருமான திரு.க.அன்பழகன் இதை எதிர்க்கவும், உடனே பின்வாங்கி விட்டார்கள்.  ஏனெனில், அப்போது அவர்களுக்கு பெரும்பான்மை பலம் கிடையாது.  இப்போது இருக்கிறது.  எனவே, செய்கிறார்கள்.  இன்னொரு புறம், ஆர்.எஸ்.எஸ்.- இல் கல்வியாளர்கள் என்று ஒருவரும் கிடையாது.  ‘கல்வியாளர்கள்’ என்று சொல்லி அவர்கள் அழைத்து வருபவர்கள் எல்லோரும் அடி முட்டாள்களாகவே இருப்பார்கள்.  தங்களுடைய கோட்பாடுகளை நம் மீது தினித்து நம்மை முட்டாளாக்க முயற்சிப்பதை நாம் முறியடிக்க வேண்டும்.

இறுதியாக,  மாநில பட்டியலில் இருந்து, மத்திய பட்டியலில் கல்வியை கொண்டு சென்று நம் கல்வி அமைப்பை சீர்குலைப்பது இந்திராகாந்தி அவசர நிலை காலத்தில் இருந்தே ஆரம்பித்து விட்டது.  எனவே இந்த மசோதாவை முறியடித்தே ஆக வேண்டும்.

***

பேராசிரியர் இரா. முரளி, மாநிலப் பொதுச்செயலாளர், மக்கள் சிவில் உரிமைக் கழகம்.

தனியார் கல்வியை வளர்த்து இலவச கல்வியை ஒழிக்க போகிறார்கள்!

பேராசிரியர் இரா. முரளி

யு.ஜி.சி. ஆரம்பிக்கப்பட்ட போது அனைவருக்கும் ஒரு கனவு இருந்தது. இந்த நாட்டை ஒரு நாகரீக சமுதாயமாக மாற்றப் போகிறோம் என்று. அது 1956- இல். மாலைநேரக் கல்லூரி எல்லாம் முழுமையாக சேவை மனப்பான்மையோடு ஆரம்பிக்கப்பட்டது. காலையில் வேலை பார்த்துவிட்டு படிக்க வருபவர்களுக்கு வாய்ப்புத் தர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் இருந்தது. அதையேதான் தற்போதும் கொண்டு வருகிறார்கள். ஆன்லைன் கோர்ஸ், பார்ட் டைம் கோர்ஸ்- வீக்லி, மந்த்லி கோர்ஸ் என்று – ஆனால் காசுக்காக.

இதை நீங்கள் பேராசிரியர்கள் ஊதிய – வேலை வித்தியாசத்திலேயே பார்க்கலாம். அரசு பேராசிரியர்கள் வாரத்திற்கு பதினைந்து மணிநேரம் வகுப்பெடுத்து அறுபதாயிரம் சம்பளம் வாங்குவார். ஆனால் ஒரு சுயநிதிக் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் 36 மணிநேரம் வகுப்பெடுத்து 12 ஆயிரம் சம்பளம் வாங்குவார். இதுதான் இந்த மசோதா இந்தியாவெங்கும் உண்மையாக்க முயற்சி செய்கிறது – செய்யப் போவது.

இந்த தனியார் கல்வி அமைப்புகளுக்கு தமிழகத்தில் பிள்ளையார் சுழி போட்டதே எம்.ஜி.ஆர். தான்.  தன்னை மகானாக காட்டிக்கொள்ள சாராய வியாபாரிகளுக்கு எல்லாம் கல்லூரி துவங்க அனுமதி கொடுத்தார்.  உதாரணம், சாராய உடையார், ஜே.பி.ஆர். சத்யபாமா கல்லூரி. பொதுவாக உலக பொருளாதார அமைப்பு இன்று கார்ப்பரேட் நிறுவனங்களிடம் உள்ளது. அவர்கள் எல்லாத் துறையையும் தொழில்துறையாக மாற்றி இலாபம் பார்க்க முயற்சித்து GATT ஒப்பந்தத்தை கொண்டு வந்தார்கள். அதில் கல்வியையும் சேர்த்து இலாபம் பார்க்கலாம்– இனி அதுவும் ஒரு தொழில்துறைதான் – அத்தியாவசிய தேவை கிடையாது என்று அந்த GATT இல் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தனை நாடுகளும் சத்தமே இல்லாமல் அந்த சட்டத்தை கடனுக்காக ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இந்திய அரசு உட்பட. எனவே தற்போது கார்ப்பரேட் நிறுவனங்களை பிசினஸ் பீஃல்டாக கல்வி அமைப்பு மாற்றியுள்ளது.

அமெரிக்காவின் முன்முயற்சியில் உருவாக்கப்பட்ட அந்த GATT ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டதிலிருந்து நாட்டின் மொத்த வருமானத்தில் 6% – இருந்த கல்விக்கான பங்கு தற்போது 3% க்கும் கீழ் வந்துவிட்டது. இந்த ஆணையத்தை உருவாக்க காங்கிரஸ்  ஆட்சியிலேயே முயற்சி செய்தார்கள். ஆனால் தோல்வி அடைந்தவுடன் GATT -இல் குறிப்பிட்டதைப் போல கம்பெனிச் சட்டத்தில் கல்வியைக் கொண்டு வந்தார்கள். விளைவு, இஷ்டம் போல் வெளிநாட்டு மாணவர்களை அதிக கட்டணத்தில் சேர்த்துக் கொள்ளலாம் என்று வந்துவிட்டது. இதை முதலில் செய்தது மெட்ராஸ் கிரிஸ்டியன் காலேஜ் மற்றும் மதுரைக் கல்லூரி( மெஜீரா) .

யு.ஜி.சி. -யை கலைத்து புதிய ஆணையத்தை அமைக்க என்ன செய்தார்கள் என்றால், முதலில் புதிய வேலை வாய்ப்பு அதிகம் உள்ள எந்த கோர்ஸையும் அரசுக் கல்லூரிகளில் கிடைக்கவிடாமல் செய்து அனைத்தையும் சுயநிதிக் கல்லூரிகளில் மட்டுமே கிடைக்கும்படி செய்தார்கள். இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எல்லாம் பணம்தான் –  என்ன சும்மாவா கொடுக்கிறார்கள் என்ற மனநிலை –  விரக்தி வந்துவிட்டது. இதை தற்போது அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். எனவே ஆர்.எஸ்.எஸ். –  பி.ஜே.பி.- யை பொருத்தவரை காவிமயம் என்பது வெறும் மேற்பூச்சு. கல்வியை வியாபாரமயமாக்குவதுதான் பிரதான நோக்கம்.

எனவே நம்முள் உள்ள தற்போதைய கேள்வி என்னவென்றால் வணிகமயம் மற்றும்  உலகமயத்தில் நம்முடைய அடையாளத்தை இழந்து நாம் கரையப் போகிறோமா? அல்லது இதை எதிர்த்து முறியடித்து நம்முடைய அடையாளத்தை மீட்கப் போகிறோமா? என்பதுதான்.

***

பேராசிரியர் இரா.பவணந்தி வேம்புலு, அரசியல் அறிவியல் துறை, தொலைநிலைக் கல்வி இயக்ககம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்.

யார் கல்வி கொடுப்பது? அரசா? பணக்காரர்களா?

பேராசிரியர் இரா.பவணந்தி வேம்புலு

1830 -இல் கிழக்கிந்தியக் கம்பெனியின் இந்திய வைசிராயாக இருந்த லார்டு என்பவர்தான் இந்தியாவில் நவீனக் கல்வி அமைப்பை உருவாக்குகிறார். அப்போது இரண்டு அதிகாரிகளிடம் இதற்கான வரைவு அறிக்கையை அவர்களுடைய கண்ணோட்டத்தில் உருவாக்கிக் கொடுக்க ஆணையிடுகிறார். இருவரின் வரைவு அறிக்கையும் ஒரு கமிட்டியில் வைத்து விவாதிக்கப்படுகிறது. அப்போது காரசாரமாக விவாதம் நடைபெறுகிறது. ஒருவர் வில்லியம் ஆடம், இந்தியாவில் உயர்கல்வி என்ற ஒன்று இருந்தது என்றால் அது மடங்கள்தான். எனவே நாம் அதை எதையும் மாற்றாமல் மடங்களுக்கு நிதி தந்து விடலாம் என்கிறார். கூடுதலாக வேண்டுமானால் நமக்கு எத்தகைய கல்வி கற்ற ஆட்கள் வேண்டும் என்பதை வேண்டுமானால் கேட்டுப் பெறலாம் என்கிறார். ஆனால் நாம் மெக்காலேயை இப்போது திட்டினாலும் அப்போது அவர் சொல்லியதுதான் இன்று நாம் பெயரளவிற்காவது பெற்றுள்ள இந்த நவீன கல்வி.

மெக்காலே அரசுதான் கல்வியைக் கொடுக்க வேண்டும். நமக்கு எப்படிப்பட்ட கல்வியைக் கற்றவர்கள் வேண்டும் என்பது நமக்குத் தான் தெரியும். மேலும் அது நம்முடைய நாட்டில் நாம் செய்வது போலவே நம்முடைய கடமை என்கிறார். பின் கவர்னர் தன் அமைச்சரவையில் பேசுகிறார். வருமானம் எப்படி இதற்கு? அதனால் முடியாது என்கிறார். பிறகு கல்வி வரி போடுவோம் என்கிறார். அன்று வரி யாருக்கு  போட முடியும்? ஜமீன்தாருக்கு தானே. எனவே அவர்கள் அதை எதிர்த்தார்கள். பிறகு ஜமீன்தார்கள், அந்தப் பணத்தை எங்களிடம் கொடுங்கள் நாங்கள் கல்வி கொடுக்கிறோம் என்றனர். அன்றிலிருந்து இன்றுவரை இதுதான் நடக்கிறது.

யார் கல்வி கொடுப்பது? அரசா? பணக்காரர்களா? அதிலிருந்துதான் தற்போதைய அரசு – தனியார் கூட்டு (public-private partnership) பற்றி பேசுகிறார்கள். இதிலிருந்து நீங்கள் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட இரயத்துவாரி வரி வசூல் முறையும் கல்கத்தா போன்ற மாநிலங்களில் இருந்த ஜமீன்தாரி வரி வசூல் முறையும் ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழ்நாட்டில் மாணவர்கள் எண்ணிக்கை அன்றிலிருந்தே அதிகம் என்பது புரியும்.

பின் ‘ மாடர்ன் யுனிவர்சிட்டி சிஸ்டம்’  வந்த போது ‘ ‘மாடர்ன் அக்ரிகல்ச்சர்’ சொல்லிக் கொடுங்கள். அவன் படித்து எங்கள் நிலத்தில் அதை அப்ளை செய்யட்டும் என்றனர். அன்று ஜமீன்தார் இன்று கேப்பிட்டலிஸ்ட்.

பொதுவாக உயர்கல்வியில் மூன்று அடுக்குகள் உள்ளன.

  1. Formulation university courses.
  2. Professional university courses.
  3. Research university courses.

இதில் புரஃபசனல் கோர்சஸ் மட்டும் குறிப்பாக தம்மிடம் கோருகிறார்கள். ஏனெனில் அதுதான் பணம் சம்பாதிக்கும் வழி.

ஆனால் நான் கேட்பது என்னவென்றால், ஒரு முதலாளி என்றாலும் நாராயணசாமி போன்ற கார்ப்பரேட் ஆளுமைகளை உருவாக்கியது கூட நம்முடைய அரசு சார்ந்த கல்வி அமைப்புதானே. அரசு செய்ய முடியாது என்று அதே நாராயணசாமியே கோருகிறாரே ஏன்? இதுதான் பிசினஸ்.

தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, தமிழ்நாடு.

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க