Monday, January 20, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கல்விகல்வியில் தனியார்மயம் - ஒரு இந்திய வரலாறு! - பேரா அ. கருணானந்தம்

கல்வியில் தனியார்மயம் – ஒரு இந்திய வரலாறு! – பேரா அ. கருணானந்தம்

-

கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாட்டு உரை-1

கடந்த ஜூலை 17ம் தேதி சென்னை மதுரவாயலில் புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணியால் நடத்தப்பட்ட கல்வி தனியார் மய ஒழிப்புமாநாட்டில் ஓய்வு பெற்ற பேராசிரியர் அ. கருணானந்தம் ஆற்றிய உரையின் சுருக்கம். பேரா கருணானந்தம் விவேகானந்தா கல்லூரி வரலாற்றுத் துறை தலைவராகவும், சமச்சீர் கல்வி பாடத்திட்டக் குழு உறுப்பினராகவும் பணி புரிந்தவர்.

றிவாளிகள், மேதாவிகள் என்று ஊடகங்களால் முன் வைக்கப்படுபவர்களிடம்  உண்மையில் அறிவு நேர்மை இருப்பதில்லை.  ‘கனவு காணுங்கள்’ என்ற வாசகம் அப்துல் கலாம் சொன்னதாக பெரிதுபடுத்தப்பட்டது. ஆனால், அதை முதலில் சொன்னவர் மார்ட்டின் லூதர் கிங். ‘I have a dream  நான் கனவு காண்கிறேன்’ என்று கருப்பு இன மக்களுக்கு சம வாழ்வு கிடைப்பது பற்றிய ஏக்கத்தை அவர் குறிப்பிட்டார்.

கனவு காண்பது என்பது ஏக்கத்தை குறிப்பிடுவது. ஏ சி சண்முகம் போன்ற கல்வி வியாபாரிகள் கோடிக் கணக்கில் பணம் குவிக்க ஆசைப் படுகிறார்கள். அவர்கள் கனவு காணலாம்.  கல்வி அனைவருக்கும் வேண்டும் என்பது தேவை. ஆசைக்கு கனவு காணலாம், ஆனால் தேவைக்கு போராட வேண்டும். மாணவர்கள் கனவு காண்பது சமூகத்தை பாழாக்கி விடும். ‘கனவு காணுங்கள்’ என்று சொல்லும் அப்துல் கலாம் தேவைகளுக்காக ஏன் போராட சொல்லவில்லை!

கல்வி அனைவருக்கும் வேண்டும் எனும் போது ‘கல்வி என்பது என்ன?’ என்ற ஒரு கேள்வியும், ‘யாருக்கு கல்வி?’ என்ற ஒரு கேள்வியும் எழுகின்றன.

கல்வி ஆதிக்க வர்க்கத்தின் கருவியாக இருந்தது என்று மார்க்ஸ் சொன்னார். பல ஆயிரம் ஆண்டுகளாக மனு தர்மத்தின் படி தாழ்த்தப்பட்ட சூத்திர, வைசிய, மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. ஆதிக்க சாதியினர் குரு குலத்தில் குதிரை ஏற்றம், வாள் பயிற்சி என்று மக்களை ஒடுக்குவதற்கான பயிற்சி பெற்றார்கள். கல்வி யார் பெற வேண்டும் என்று ஆதிக்க சாதியினர் தீர்மானித்தார்கள். உழைக்கும் மக்களுக்கு, ஆதிக்க வர்க்கத்திற்கு தொண்டூழியம் செய்வதற்காக விதிக்கப்பட்டவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. ‘கல்வி யார் பெற வேண்டும்’ என்பதை தரும சாஸ்திரங்கள் வரையறுக்கின்றன. ‘ஒடுக்கப்பட்ட பிரிவினர் தவறிப் போய் அறிவு தரும் விஷயங்களை கேட்டு விட்டால் அவன் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்று’ என்று சொல்கின்றன தரும சாஸ்திரங்கள்.

நாம் விரும்பும் கல்வி என்பது உழைக்கும் மக்களுக்கான கல்வி. இன்று தனியார் கல்வி நிறுவனங்கள் ஆதிக்க வர்க்க மாணவர்களை எடுத்து தேச விரோதிகளை உருவாக்குகிறார்கள். அவர்கள் அமெரிக்காவில் போய் கிரீன் கார்டு வாங்கிக் கொள்கிறார்கள், ‘குழந்தையை அமெரிக்க மண்ணிலேயே பெற்றுக் கொள்ள வேண்டும், அப்போதுதான் குடியுரிமை கிடைக்கும்’ என்று திட்டமிடுகிறார்கள். இது தேச விரோத கிரிமினல்களை உருவாக்கும் கல்வி.

நாம் விரும்பும் கல்வி மக்களிடமிருந்து மாணவர்களை அன்னியப்படுத்தாத கல்வி. நாட்டில் கல்வி பற்றிய திட்டமிடும் குழுக்களில் சாம் பிட்ரோடா போன்ற மக்களோடு தொடர்பில்லாத நபர்கள் இடம் பெறுகிறார்கள். வேலை வாய்ப்புக்கான கல்வி, அறிவை பெறுவதற்கான கல்வி என்று பேசுகிறார்கள். சமூக நலனுக்கான கல்வி, நாட்டு நலனுக்கான கல்வி என்பது பேசப்படுவதில்லை.

நாம் விரும்புவது மக்கள் பற்றை அடிப்படையாகக் கொண்ட கல்வி.  ஆனால், ஆட்சியாளர்களின் கொள்கை எந்தத் திசையில் செயல்படுகிறது?

இந்தியாவிற்கு அடுத்த சீர்திருத்த அலை தேவை என்று ஒபாமா சொல்லியிருக்கிறார்.  அவர் சொல்லும் சீர்திருத்தம் வேறு, இந்திய மக்களுக்குத் தேவையான சீர்திருத்தம் வேறு. சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு பற்றியும் மோசமாகி வரும் முதலீடு சூழலைப் பற்றியும் அமெரிக்க நிறுவனங்களின் கவலையை அவர் வெளிப்படுத்தினார். அவர் சொல்லாமல் விட்டது கல்வித் துறையில் அன்னிய நிறுவனங்கள் அனுமதிக்கப்படுவதை பற்றிதான். கல்வி நடத்த வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இடம் வேண்டும் என்பது அவர்களது முக்கிய குறிக்கோள்.

ஒபாமாவின் கருத்துக்கு இந்திய தரப்பிலிருந்து எதிர்ப்பு வந்தாலும், அவை வந்த விதத்தைப் பார்க்க வேண்டும். ‘அன்னிய சக்திகள் இந்தியாவைப் பற்றி தவறான தகவல்களை பரப்புகின்றன, சில தனி நபர்களின் கருத்துக்களின் அடிப்படையில் ஒபாமா இப்படி பேசுகிறார். அடிப்படை பொருளாதார காரணிகள் அவர் கவனிக்கவில்லை.  ஏற்கனவே நிறைய சாதித்திருக்கிறோம். இன்னும் தொடர்ந்து அமெரிக்க தேவைகளை நிறைவேற்றுவோம்’ என்று அவர்கள் நீளமான விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கிறது.

அதனால்தான் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களை அனுமதிப்பதற்கான மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று கபில் சிபல் அக்கறையுடன் பேசுகிறார்.

கல்வியை அதன் சமூக பொருளாதார சூழலிலிருந்து பிரித்து பார்க்க முடியாது. மற்ற துறைகளிலெல்லாம் தனியார் மயமாக இருக்கும் போது கல்வித் துறையில் தனியார் தாராள உலக மயத்தை எப்படி தடுத்து நிறுத்த முடியும்!

1946-ம் ஆண்டு சுதந்திரம் எத்தகையது? பாகிஸ்தானை பிரிக்க வேண்டுமா வேண்டாமா என்று கலவரங்கள் நடந்தன. காங்கிரசுக் கட்சி 1946-ம் ஆண்டு தேர்தலுக்கான தனது அறிக்கையில் ஒன்று பட்ட இந்தியாவை விரும்புவதாக குறிப்பிட்டிருந்தது. ஆனால் பிரிட்டிஷ் அமைச்சரவை குழுவிடம் சமர்ப்பிக்கும் போது அதை நீக்கி விட்டு எந்த ஒரு தேசிய இனத்துக்கும் சுய நிர்ணய உரிமையை மறுக்கப் போவதில்லை என்றார்கள். அதாவது முஸ்லீம்களுக்கு தனி நாடு பிரித்துக் கொடுப்பதை அவர்களும் ஏற்றுக் கொண்டார்கள். எதை செய்தாவது தாம் உடனடியாக அதிகாரத்தைக் கைப்பற்றி  விட வேண்டும் என்ற குறிக்கோள் கொண்டிருந்தார்கள்.

அப்படி அதிகாரத்தைப் பிடித்தவர்கள்தான் இப்போது அமெரிக்காவை தமது எஜமானர்களாக ஏற்றுக் கொண்டு கொஞ்சம் பொறுத்திருக்குமாறு மன்றாடுகிறார்கள்.

2002-ல் அரசியல் சட்டத்தின் 86வது பிரிவுக்கு திருத்தம் கொண்டு வந்தது பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணி அரசு. காங்கிரசும் அதை ஏற்றுக் கொண்டது. அந்த திருத்தத்தை பலர் வெற்றியாக கொண்டாடினார்கள்.  மக்களுக்கு கல்வி அளிக்க அரசு எடுக்கும் நடவடிக்கை என்று சித்தரித்தார்கள்.

உண்மையில் மாற்றியது என்ன?

1. அடிப்படை உரிமைகளில் ஒன்றை புதிதாக சேர்ப்பது

2. வழிகாட்டும் நெறிகளில் ஒன்றை மாற்றுவது

3. அடிப்படை கடமைகளின் ஒன்றை புதிதாக சேர்ப்பது.

21A ஷரத்தில் 6 முதல் 14 வயது வரையிலான எல்லா குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி வழங்க வேண்டும் என்பது சேர்க்கப்பட்டது. ஆனால் அதற்கான பொறுப்பை அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. மத்திய அரசு மாநில அரசை காட்டுகிறது, மாநில அரசு உள்ளாட்சி அரசை காட்டுகிறது. பொறுப்பை தள்ளி விடுகின்றன.

அரசியலமைப்புச் சட்டத்தின் 45வது ஷரத்தில் 10 ஆண்டுகளுக்குள் (அதாவது 1960க்குள்) 14 வயதிலான அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி கொடுக்க அரசு முயற்சிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருப்பதை, 6 வயது வரை மழலையர் பராமரிப்பு கல்வியை தர முயற்சிக்க வேண்டும் என்று மாற்றியிருக்கிறார்கள்.

மூன்றாவதாக, கடமைகளில் ஒன்றாக பெற்றோர் 6 முதல் 14 வயது வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்பதை சேர்த்திருக்கிறார்கள்.

மழலையர் பராமரிப்பு உரிமையாகவோ கட்டாயமாகவோ சொல்லப்படவில்லை, இலவசமாக கொடுக்கப்பட வேண்டும் என்றும் சொல்லப்படவில்லை. 6 வயது முதல் 14 வயது வரை அரசு கல்வி தரும்.  ஆனால் கல்வி என்பது இதற்கு முன்பே ஆரம்பமாகிறது. 6 ஆண்டு வரையில் பணக்கார குழந்தைகளுக்கும் ஏழை குழந்தைகளுக்கும் ஏற்படப் போகும் இடைவெளியை நிரப்ப எந்த உதவியும் பேசப்படவில்லை.

2009-ம் ஆண்டில் இயற்றப்பட்ட கல்வி பெறும் உரிமை சட்டத்தின்படி  நான்கு வகையான பள்ளிகள் இயங்குவதை அனுமதித்தார்கள் – சிறப்பு பள்ளிகள், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள். இப்படி இருந்தால் சமத்துவம் எப்படி தர முடியும்?

அருகாமைப் பள்ளி என்பதன் வரையறையில் தனியார் சிறப்புப் பள்ளிகளைச் சேர்க்கவில்லை. உதாரணமாக சென்னை தரமணியில் இருக்கும் அமெரிக்க பன்னாட்டு பள்ளியில் போய் கல்வி பெறும் உரிமை சட்டத்தின்படியான ஒதுக்கீடு கோர முடியாது. அந்த விதி குட்டி முதலாளிகள் நடத்தும் பள்ளிகளுக்குத்தான் பொருந்தும். கார்பொரேட் பள்ளிக் கூடங்களுக்கு பொருந்தப் போவதில்லை.

தனியார் பள்ளியில் 25% இடம் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு நியாயமான கட்டணத்தை அரசே செலுத்தி விடும் என்கிறார்கள். இலவசம் என்று சொல்லி விட்டு நியாயமான கட்டணம் என்றால் எப்படி? அவர்கள் சொல்லும் நியாயமான கட்டணம் என்பது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் கட்டுப்படியாவது என்பதில்லை, பள்ளிகளுக்கு கட்டுப்படியாகுமா என்பதைத்தான் குறிக்கிறது.

‘ஆசிரியர் சம்பளம், மற்ற தினசரி செலவுகளோடு எதிர்காலத்தில் விரிவாக்கத்துக்கான நிதியையும் கட்டணமாக வாங்கலாம்’ என்கிறார்கள். விரிவாக்கம் தனியார் முதலாளிக்கு எதிர்காலத்தில் லாபத்தை தரப் போகிறது, அதற்கு மாணவர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்?

கல்வியாளர்களாக மாறிய தனியார் முதலாளிகள் அதில் குவிக்கும் பணத்தை எடுத்து தொலைக்காட்சி சேனல் ஆரம்பிக்கிறார்கள், அரசியல் கட்சி ஆரம்பிக்கிறார்கள். இந்த மாநாடு நடக்கும் இடத்துக்கு எதிரில் இருக்கும் கல்லூரியின் அதிபர் ஏ சி சண்முகம் புதிய நீதிக் கட்சி ஆரம்பித்திருக்கிறார்.

இந்த அடிப்படையிலான தனியார் கட்டண வசூலுக்கு நீதிமன்றமும் அங்கீகாரம் கொடுத்திருக்கிறது. அடிப்படை வசதிகள் இல்லாமல் முறையான கட்டிடங்கள் இல்லாமல் பள்ளிகள் நடத்துகிறார்கள். கும்பகோணம் தனியார் பள்ளியில் தீ விபத்து நடந்து 8 ஆண்டுகள் ஆகி விட்டன. ஆண்டு தோறும் கண்ணீர் விடுவதைத் தவிர எதுவும் செய்ய முடியவில்லை. நீதிமன்றம் இன்று வரை எந்த கட்டளையும் தரவில்லை. பள்ளியில் கட்டமைப்புகள் எப்படி இருக்க வேண்டும் என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.

அனைவருக்கும்  தரமான கல்வி பெற வேண்டுமானால் தனியார், தாராள, உலக மய திட்டங்களை  எதிர்க்க வேண்டும். அரசாங்கம் சட்டங்களை மட்டும் போட்டு விட்டு அவற்றை நிறைவேற்றத் தேவையான திட்டங்களை போடுவதில்லை. கல்வி பெறும் உரிமைச் சட்டம் ஒரு பகுதியில் தேவையான அரசு பள்ளிகளை உருவாக்கும் பொறுப்பை  அரசுக்கு தரவில்லை. இத்தகைய புதிய சமூக அநீதிக் கொள்கையின் விளைவுகளுடன் நாம் மோதிக்  கொண்டிருக்க முடியாது. நாம் போய் தனியார் முதலாளிகளுடன் கல்வி பெறும் உரிமைக்காக சண்டை போட்டுக் கொண்டிருக்க முடியாது.

காமராசர் காலத்தில் பெரும்பாலும் அரசுப் பள்ளி, அருகாமைப் பள்ளி இருந்தன, மற்றவை அரசு உதவி பெறும் பள்ளிகளாக இருந்தன. 1970களுக்குப் பிறகுதான் மெட்ரிக் பள்ளிகள் வர ஆரம்பித்தன. பள்ளிக் கூடங்கள் ஆரம்பிக்க அரசிடம் பணம் இல்லை என்கிறார்கள். 1300 கோடி ரூபாய் செலவில் தலைமைச் செயலக கட்டிடம் கட்டி அதை மருத்துவமனையாக மாற்றுவதாக சொல்கிறார்கள். அண்ணா நூல் நிலையத்தை மாற்றுகிறேன் என்கிறார்கள் அதற்கெல்லாம் பணம் இருக்கிறது. பள்ளிக் கூடம் கட்ட வேண்டுமென்றால் பணம் இல்லை என்கிறார்கள்.

அடிப்படையில் மக்கள் கல்விக்கு கல்விக் கூடங்கள் அரசால் நடத்தப்பட வேண்டும். அதற்கு கல்வியில் தனியார் மயம் ஒழிக்கப்பட வேண்டும். அதை சாதிக்க தனியார், தாராள, உலக மய கொள்கைகளை அவை எந்த உருவத்தில் வந்தாலும் மக்கள் எதிர்த்து போராட வேண்டும்.

கல்வி என்பது வறுமையிலிருந்து தப்பிப்பதற்காக அல்ல, வறுமையுடன் போராடுவதற்காக!

__________________________________

– வினவு செய்தியாளர்.

__________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_____________________________

_____________________________

_____________________________

_____________________________

  1. அருமையான பதிவு. கல்வி என்பது வியாபாரச் சர்க்காக மாறி வருகின்றது. பொன் வித்யாஸ்ரம், டிஆவி போன்ற மிகப்பெரிய பள்ளிகளும், பவன், ஜவகர் போன்ற பள்ளிகளும் அவர் அவருக்கேற்ற தகுதியின் அடிப்படையில் கட்டணக் கொள்ளை நடத்துகின்றனர். ஆதம்பாக்கம் டிஏவி பள்ளியில் ஏ முதல் H வரை 8 வகுப்புகள் பிரிகேஜில் இருக்கின்றன. போன வருட நிலவரப்படி, ஒரு குழந்தைக்கு அல்ல ஒரு மழலைக்கு டொனெஷன் 25 ஆயிரம் வாங்குகின்றனர். ஒரு வகுப்பிற்கு குறைந்தது 40 வீதம், ஒரு வகுப்பிற்கு 1000000 கல்லா கட்டுகின்றனர். ஆயம்மாக்கு 5000 ஆயிரம் (2000 கொடுத்தால் அதிகம்), டீச்சருக்கு 15000 (7 ஆயிரம்தான் தருவார்கள்) வைத்துக் கொண்டாலும், 980000 ரூபாய் ஒரு வகுப்பில் டொனேசஷனாக மட்டும் லாபம். 40 வகுப்பிற்கு 7840000 ரூபாய் டொனேஷனில் மட்டும் லாபம். இது தவிர, ஆண்டுகட்டணம் (டியுசன் கட்ட்டணம்) தனியாக ஒரு மழலைக்கு 15000 வாங்குகின்றனர். இது மூலமாக அப்படியே 4800000 ருபாய் கொள்ளை அடிக்கின்றனர். இந்த பள்ளை அக்மார்க் ஆர் எஸ் எஸ் பள்ளி. கட்டிடங்களுக்கு பாரதியார் பிளாக், சந்திரசேகர் பிளாக் என ஒரே ஸ்வாமி மயம்தான். குழந்தைகள் சமஸ்கிருத மந்திரம் கற்று வருகின்றனர். இதுவெ Pஸ்PB மற்றும் பொன் விதயாஸ்ரமில் அப்படியே இரட்டிப்பு தொகை. இப்போது தெரிகின்றதா அரசு ஏன் சம்ச்சீர் கல்விக்கு எதிராக இருக்கின்றது என்று ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க