Saturday, December 7, 2024
முகப்புமறுகாலனியாக்கம்கல்விகல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு! ரிப்போர்ட்!!

கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு! ரிப்போர்ட்!!

-

தனியார் கல்வி நிறுவனங்களை ஒழித்துக்கட்டவும்
பொதுப்பள்ளி அருகமைப்பள்ளி முறைமையை நிலை நாட்டவும்
சென்னையில் புமாஇமு நடத்திய கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு! 

 

“தனியார்மய கல்விக்கொள்ளைக்கு முடிவு கட்டுவோம் ! மறுகாலனியாக்க கொள்கையை மோதி வீழ்த்துவோம்!” என்கிற முழக்கத்துடன் கடந்த  ஜூன்28 அன்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகத்தை முற்றுகையிட்டு  போலீசின்  தாக்குதலையும், பொய்வழக்கையும் தீரத்துடன் எதிர்கொண்டு, பத்து  நாட்களுக்கும் மேலாக சிறை வைக்கப்பட்ட தோழர்கள், பிணையில் வெளியே  வந்த குறுகிய கால இடைவெளிக்குள்ளாகவே, முற்றுகைப் போராட்டத்தின்  தொடர்ச்சியாக, கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு ஒன்றை நடத்தி காட்டியிருக்கின்றனர்.

சென்னைமதுரவாயல், பூவிருந்தவல்லி சாலையின் இரு மருங்கிலும் பட்டொளிவீசிப் பறந்த செங்கொடிகள் மாநாட்டுத் திடலுக்கு நம்மை வழிநடத்திச் சென்றன. காலை நேர பரபரப்பில் ஒருக்கணம் நிமிர்ந்து பார்க்க அவகாசமின்றி சாலையை வெறித்து பார்த்தபடி பறந்து கொண்டிருந்தனர் வாகன ஓட்டிகள். அவர்களை உரிமையோடு  வழிமறித்து, மாநாட்டு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த வண்ணமிருந்தனர், ஒருகையில் சமச்சீர்ப் பாடப்புத்தகத்தையும் மறு கையில் மாநாட்டுத்  துண்டுப் பிரசுரங்களையும் சுமந்திருந்த அரசுப்பள்ளி மாணவர்கள். வாகனத்தின் வேகத்தையும், அவசரக் குறுக்கீட்டால் எழும் கோபத்தையும் ஒரு சேர தணித்தது, இளந்தளிர்களின் சமூகப்பார்வை நிறைந்த பொறுப்புணர்ச்சி.

ஊர் சொத்தை உலையில் போட்டு, கூவம் ஆற்றங்கரையை  ஆக்கிரமித்து, தனியார் கல்விக் கொள்ளையின் அடையாளமாய், தமிழகத்தின்  அவமானச் சின்னங்களுள் ஒன்றாய் அமைந்திருக்கும் எம்.ஜி.ஆர். நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் நுழைவாயிலுக்கு நேர் எதிரே, விடுதலைப் போரின் வீரப்புதல்வர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய விடிவெள்ளிகளின் உருவங்களைத் தாங்கி கம்பீரமாய் எழும்பி நின்றது, கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாட்டின் நுழைவாயில்.

மாநாட்டு திடலுக்குள் நுழையும் முன்பே நம்மை வழிமறித்தது, “காசு இருந்தா கான்வெண்ட்… இல்லேன்னா கட்டாந்தரை… கல்வி  வியாபாரம் ஒழிய… வாங்க நக்சல்பாரி வழிக்கு!” என்ற “வழிகாட்டும்” வாசகம்!. மாநாட்டு நிகழ்வுகள் தொடங்க சில நிமிடங்கள் இருந்த நிலையில், பேரார்வ மிகுதியோடு கீழைக்காற்று புத்தக அரங்கை மொய்த்திருந்தது இளைஞர்களின் கூட்டம்.

பள்ளி மாணவர்களும் கல்லூரி மாணவர்களும் பெற்றோர்களுமாக நிரம்பி வழிந்த மாநாட்டு அரங்கில், எனக்கான இருக்கையை தேடித்தான் பிடிக்க வேண்டியிருந்தது. கீழ்தளத்தில் உள்ள உணவுக்கூடமும்  மாநாட்டு அரங்கமாக உருமாறியிருந்தது. புரஜக்டர் கருவி கொண்டு வெண் திரை அமைத்து மாநாட்டு நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பட்டன. இவ்விரு தளங்களும் நிறைந்ததினால் மட்டுமல்ல; குறிப்பாக கணிசமான அளவில் பள்ளி கல்லூரி மாணவிகளால் இந்த மாநாட்டு அரங்கம் நிரம்பி வழிந்தது என்பதில்தான், அடங்கியிருக்கிறது மாநாட்டின் வெற்றி.

“கல்வியில் தனியார்மயத்தை ஒழித்தாலே உயர்க் கல்வி வரை  அனைவரும் இலவசமாக கல்வி பெற முடியும்! நக்சல்பாரி பாதையில் புதிய ஜனநாயகப் புரட்சியே இதற்கு ஒரே வழி!” என்ற முழக்கத்தினை முன் வைத்து நடத்தப்பட்ட இந்த கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாட்டு நிகழ்வுகள், தியாகளுக்கு வீரவணக்கப் பாடலுடன் தொடங்கின். பங்கேற்பாளர்களையும் சிறப்பு அழைப்பாளர்களையும் வரவேற்றுப் பேசினார், பு.மா. இ.மு.வின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் சரவணன்.

இம்மாநாட்டினை தலைமையேற்று நடத்திய, பு.மா.இ.மு. வின் மாநில அமைப்பாளர் தோழர் த.கணேசன், “தனியார்மயக் கொள்கையை ஒழித்துக்கட்டாமல், அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வியைப் பெறுவது சாத்தியமில்லை; இந்த மாற்றம் சில்லரை சீர்த்திருத்தங்களால் வந்துவிடாது; ஒரு சமூகமாற்றத்தின் மூலம், புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலம் மட்டுமே இவை சாத்தியம்; அதற்கு நக்சல்பாரி  பாதை ஒன்றே மாற்று! இவ்வழியில் மக்களை அணிதிரட்டுவதொன்றே இம்மாநாட்டின் நோக்கம்” என்றார் அவர்.

85 வயதை கடந்து உடளளவில் தளர்ந்துவிட்ட போதிலும், தனியார்மயக் கல்விக்கொள்ளைக்கு எதிரான போராட்டத்தில் என்றுமே உற்சாகமும் உத்வேகமுமிக்க இளைஞனாக தன்னை இணைத்துக் கொள்ளும் இயல்பைகொண்ட மூத்த கல்வியாளர் ச.சீ.இராஜகோபாலன் அவர்கள் மாநாட்டை துவக்கிவைத்து உரையாற்றுவதாக இருந்தது. எனினும், எதிர்பாராத வகையில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக இம்மாநாட்டு நிகழ்வில் அவர் பங்கேற்கவில்லை. இருந்த போதிலும், மாநாட்டின் நோக்கத்தை வாழ்த்தி மடல் ஒன்றை அனுப்பி வைத்திருந்தார் அவர். இதனை பங்கேற்பாளர்களிடம் பகிர்ந்துகொண்ட  மாநாட்டின் தலைவர் தோழர் கணேசன், “மக்கள் குடிநீர், ரேஷன் உள்ளிட்ட தமது அடிப்படைத் தேவைகளுக்காகத் தெருவில் இறங்கிப் போராடுவதைப் போல, தரமானக் கல்வி கேட்டு தெருவில் இறங்கிப் போராட முன்வரவேண்டும்” என்பதையே தனது ஆவலாக, கோரிக்கையாக நம் முன் வைத்திருக்கிறார், என்றார் அவர்.

மேலும், ஹைதராபாத் மத்தியப் பல்கலை கழகத்தின் பேராசிரியர் திரு.ஹரகோபால் அவர்களும் தவிர்க்கவியலாத காரணங்களால் மாநாட்டு நிகழ்வில் பங்கேற்க முடியாத சூழலையும் தெரிவித்த அவர், மாற்று ஏற்பாடாக குறுகிய அவகாசத்திற்குள் இம்மாநாட்டில் பங்கேற்க இசைவு தெரிவித்த முனைவர் ஓ.லக்ஷிமி நாராயணா அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்தார்.

“கட்டண நிர்ணயம், 25% இட ஒதுக்கீடு என்பதெல்லாம் தனியார்மய த்தை ஊக்குவிக்கவே!” என்ற தலைப்பில் பேசிய பேராசிரியர். திரு. அ. கருணானந்தன்  (சமச்சீர் பாடபுத்தகத் தயாரிப்புக்குழு உறுப்பினர்; வரலாற்றுத்துறை முன்னாள் தலைவர்  விவேகனந்தா கல்லூரி, சென்னை.) அவர்கள், “இளைஞர்களைப் பார்த்து கனவு  காணுங்கள் என வலியுறுத்தும் கலாம், என்றாவது உனது தேவைக்காக நீ  போராடு என்று கூறியிருக்கிறாரா?” எனக் கேள்வியெழுப்பிய அவர்,  “நாம் காண வேண்டியது கனவல்ல; நமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கான பாதையை” என்றார்.

2002இல் பா.ஜ.க. ஆட்சிகாலத்தில் காங்கிரசின் ஆதர வோடு கொண்டுவரப்பட்ட 86ஆவது சட்டத்திருத்தமும்; 2009 இல்  கொண்டு வரப்பட்ட கட்டாய கல்வி உரிமைச்சட்டமும் அடிப்படையிலேயே எவ்வாறு ஏழை மாணவர்களின் கல்வி பெறும் உரிமை மறுப்பை நோக்கமாகக் கொண்டது என்பதை ஆதாரங்களுடன் நிறுவினார் அவர்.

இங்கு படித்துவிட்டு மேலைநாடுகளில் செட்டில் ஆவதையே  தனது இலட்சியமாகக் கொண்ட தேசவிரோதிகளைத்தான் உருவாக்கியிருக்கிறது இன்றைய கல்வி முறை எனச்சாடிய அவர், இன்று பணம் பண்ணுவதற்கான கல்வி, அறிவை மேம்படுத்திக்கொள்வதற்கான கல்வி என்றுதான் பேசப்படுகிறதே ஒழிய, சமூகத்திற்கான கல்வி  சமூக மாற்றத்திற்கான கல்வி என்ற பொருளில் பேசப்படுவதே  இல்லை என்பதை கோடிட்டுக்காட்டி, இந்த மண்ணோடும் மக்களோடும் பிணைக்கப்பட்ட வெகுஜனங்களின் கல்வியாக மாற வேண்டும் என்றார் அவர்.

மேலும், “கல்வித்துறையில் மட்டும் தனியார்மயத்தை  ஒழிக்க முற்படுவது அறியாமையே; ஒட்டுமொத்த சமூகத்தின் அரசியல் பொருளாதாரம் சார்ந்த பிரச்சினையாகப் பார்க்கப்பட வேண்டும்;  நோய்நாடி நோய்முதல் நாடி என்பதற்கிணங்க இதன் அடிப்படையைத்  தகர்க்கும் வகையில், இன்று அனைத்துப்பிரிவு உழைக்கும் மக்களையும் பாதிக்கக்கூடிய தனியார்மய-தாராளமய-உலகமயக் கொள்கைகளுக்கு எதிராக போராடுவதொன்றே நம்முன் உள்ள கடைமை” என்றார் அவர்.

ஒவ்வொரு பேச்சாளர்களும் பேசி முடித்த பிறகு பங்கேற்பாளர்களை உற்சாகப்படுத்த புரட்சிகர பாடல்களை பாடினர். குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தேநீரையும் பொறுப்பாக வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து, “தனியார்மயக் கல்வியை  ஒழித்துக்கட்டு!” என்ற தலைப்பில் பேசிய தோழர் சி.ராஜீ, (வழக்குரைஞர்; மாநில  ஒருங்கிணைப்பாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம். தமிழ்நாடு.) அவர்கள்  தனது உரையில், ஏழை மாணவர்களின் கல்வி கற்கும் உரிமையை மட்டு மல்ல, அவர்களின் உயிரையும் சேர்த்துப் பறித்தெடுக்கும்; சமூகத்தையே அச்சுறுத்தும் மாஃபியா கூட்டமாக தனியார் கல்விக் கொள்ளையர்கள் செயல்பட்டு வருவதை அம்பலப்படுத்தினார்.  அரசின் சட்டங்களும்  கட்டண நிர்ணயிப்பு கமிட்டிகளும் இத்தகைய தனியார் கல்விக்கொள்ளையை  ஒரு போதும் தடுத்து நிறுத்தி விடாது என்பதை, தனியார்பள்ளி முதலாளிகளுக்கு எதிராக விருத்தாசலம் பகுதியில் தமது அமைப்பின் சார்பாக  நடத்தப்பட்ட போராட்ட அனுபவங்களிலிருந்து ஒப்பிட்டு விளக்கினார்.

ஜூன்28 அன்று பள்ளிக்கல்வி இயக்குனநகரத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய பு.மா.இ.மு.வின் வழியில் இந்த அரசை  அதன் நிர்வாகத்தை முடக்கும் அளவிற்கு தெருப்போராட்டங்களை கட்டியமைப்பதொன்றே இத்தனியார் கல்விக்கொள்ளையை முடிவுக்கு கொண்டு வரும் என்றார் அவர்.

தோழர் ராஜூ பேசி முடித்த பொழுது, மதிய 1.00 ஐ நெருங்கியிருந்தது. ஆனாலும், பார்வையாளர்கள் எவரையும் பசி நெருங்கவில்லை போலும்; அவர் உற்சாகம் பொங்க தொகுத்து வழங்கிய போராட்ட அனுபவத்தை செவிவழியே செரித்திருந்தது ஒட்டுமொத்த கூட்டமும். எனவே, உணவு இடைவேளையின்றி தொடர்ந்தது, மாநாட்டு நிகழ்ச்சி.

“பொதுப்பள்ளி அருகமைப்பள்ளி முறை ஏன் தேவை? என்ற      தலைப்பில் பேசிய முனைவர் ஓ.லக்ஷிமி நாராயணா, (பொருளாதாரத் துறை,ஹைதராபாத்  பல்கலைக் கழகம்; செயலாளர், கல்வி பாதுகாப்புக் குழு, ஆந்திரப்பிரதேசம்.) அவர்கள்   “கட்டாய இலவசக் கல்வி உரிமைக்காக நீங்கள் நடத்திய போராட்டமும்; அதனைத் தொடர்ந்து நடத்துகின்ற இந்த மாநாட்டிலும் பங்கு பெறுவதை  நான் பெருமையாகக கருதுகிறேன்.” எனக்குறிப்பிட்டவர், 1950இல் ஆறாயிரம் அரசுப்பள்ளிகளை இழுத்து மூடிவிட்டு, குலத் தொழில் திட்டத்தை அமல்படுத்திய ராஜாஜிக்கு எதிராக பெரியாரே முன்னின்று நடத்திய போராட்டத்தை தமக்கு நினைவூட்டுவதாக அமைந்துள்ளது, இந்நிகழ்ச்சி என்றார் அவர்.

கல்வி, சுகாதாரம், தண்ணீர் உள்ளிட்ட மக்களின் அடிப்படைத்  தேவைகளுக்கு ஒதுக்க அரசிடம் போதிய நிதியில்லை என்று தொடர்ந்து  எல்லா அரசுகளுமே கைவிரிப்பதையும்; அதே நேரத்தில் 2ஜி ஊழல்,  காமன்வெல்த் ஊழல், என மக்கள் பணம் கொள்ளையடிக்கப்படுவதையும்;  ஆந்திராவின் ராஜசேகர ரெட்டியும்; கர்நாடகாவின் ரெட்டி பிரதர்ஸ்களும் கோடிகளில் மக்கள் பணத்தை சுருட்டிக்கொள்வதையும் ஒப்பிட்டுப் பேசிய அவர்,  இவர்களிடம் குவியும் பணம் ஏழைகளின் அடிப்படைத் தேவைகளுக்கு மறுக்கப்பட்ட பணம்தான் என்பதை அம்பலப்படுத்தினார்.

அரசுப்பள்ளிகளின் அடிக்கட்டுமானத்தை மேம்படுத்தவும்  போதிய ஆசிரியர்களை நியமிக்கவும் போதிய நிதியை ஒதுக்கவும் முன்வராத அரசுகள், கட்டாய கல்வி உரிமைச்சட்டம் என்ற பெயரில் தனியாரின் பையை நிரப்பிக்கொள்ள நிதியை ஒதுக்கீடு செய்கிறது என்பதை சுட்டிக்காட்டிய அவர், ஆந்திராவில் இத்தகைய தனியார் கல்வி நிறுவனங்கள்  கல்வியில் அடிக்கும் கொள்ளை ஆந்திர அரசின் மாநில பட்ஜெட்டிற்கு இணையானது என்றார் அவர்.

பன்னாட்டு நிறுவனங்களுக்கு மலிவான விலையில் நிலத்தையும்,  அடிக்கட்டுமான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்து; வரிவிலக்குகள், வரிச்சலுகைகளை வாரி வழங்கி அமைக்கப்படும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் போல, பல்வேறு சலுகைகளையும் வரிவிலக்குகளையும் பெற்ற சிறப்பு கல்வி மண்டலங்களாக தனியார் கல்வி நிறுவனங்கள்  பரிணமித்து வருவதையும் அம்பலப்படுத்திப் பேசினார் அவர்.

நாட்டில் நான்கு கோடி பேர் குழந்தை தொழிலாளர்களாக  உழல்கின்றனர். இந்த குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்காமல் எப்படி  அனைவருக்கும் கல்வியை வழங்க முடியும் எனக் கேள்வி எழுப்பிய அவர், பல  பள்ளிகளில் ஐந்து வகுப்புகளுக்கும் ஒரே ஆசிரியர் பாடம் நடத்த வேண்டிய  அவலமும்; 90 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் பாடம் நடத்துவதும்; இன்றளவும் ஓராசிரியர் பள்ளிகளும், ஈராசிரியர் பள்ளிகளும் இயங்கத்தான்  செய்கின்றன என்பதையும் வருத்தத்துடன் பதிவு செய்த அவர், இந்த அவலங்களை ஒழித்து கட்ட வேண்டுமானால் அருகமைப்பள்ளிகளும் பொதுப் பள்ளிகளும் அவசியம் தேவை என்றார் அவர்.

நடைமுறையில் இவற்றை சாத்தியப்படுத்த வேண்டுமெனில்,  முதலில் தற்போதுள்ள தனியார் பள்ளிகளை முறைப்படுத்த வேண்டும். இதன்படி, தரமான ஆசிரியர்க்கையும் அடிப்படை வசதிகளையும் கொண்டதாக,  அரசு நிர்ணயிக்கும் விதிமுறைகளின் படி இயங்குவதை உத்திரவாதம் செய்ய வேண்டும்; இரண்டாவதாக, தனியார் பள்ளிகளை தனியார் கல்விக் கொள்கையை முற்றிலுமாக ஒழித்து கட்ட வேண்டும்; மூன்றாவதாக, அரசுப்பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்கும் அருகமைப்பள்ளி, பொதுப்பள்ளி முறைகளையும் விரிவுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி அமர்ந்தார், அவர்.

அவர் பேசி முடித்த பொழுது மணி 3.00. மதிய உணவிற்கான  இடைவேளை. மதிய உணவிற்கான நேரம் கடந்தது குறித்தோ பசியையோ பொருட்படுத்தாமல் மாநாட்டு நிகழ்வில் ஒன்றிப் போயிருந்தது ஒட்டு மொத்த கூட்டமும். இவர்களுக்கு ஒத்திசைவாய் மழையும் பேய்ந்து  ஓய்ந்திருந்தது.

தாமதமாக உணவருந்தியிருந்த போதிலும், உணவருந்தியவுடன் நிகழ்ச்சியில் அமர்ந்த போதிலும், பார்வையாளர்களுக்கு சோர்வையோ களைப்பையோ ஏற்படுத்தாத வண்ணம், உற்சாகத்துடனும் தனது  வழமையான எள்ளிநகையாடும் தொனியோடும் தொடங்கினர் தமது  உரையை, தோழர் துரை.சண்முகம் (மக்கள் கலை இலக்கியக் கழகம்).

“உழைக்கும் மக்களின் கல்வி கற்கும் அடிப்படை உரிமையை நிலை  நாட்டுவோம்!” என்ற தலைப்பில் உரையாற்றிய அவர், “போலீசை  எதிர்த்து போரிடுவதை விட, தனியார் என்றால் தரமானது என்று அப்பாவித்தனமாக நம்பிகொண்டிருக்கும் பெருந்திரளான உழைக்கும் மக்களை நம் பக்கம் அணிதிரட்டுவதுதான், மிக சவாலான பணி. மிக மிக அவசியமான பணி.” என்று வலியுறுத்தினார். கல்வியை மறுப்பதென்பது மனிதனின் பிறப்பையே மறுப்பதற்கு சமமானது என்றும், இலவசக்கல்வி எனக்  கேட்பதென்பது அரசிடம் சலுகை கோருவதல்ல; இது நமது அடிப்படை உரிமை என்பதை உழைக்கும் மக்கள் மத்தியில் நிலைநாட்ட வேண்டியிருக்கிறது, என்றார் அவர்.

நிலத்திலிருந்து விவசாயிகளையும்; தொழிற்சாலைகளிலிருந்து தொழிலாளர்களையும் விரட்டியடித்துவிட்டு அவர்களது உரிமையைப் பறித் தெடுக்கும் அதே மறுகாலனியாக்கக் கொள்கைகள்தான்,  ஏழை மாணவர்களின் கல்வி கற்கும் உரிமையையும் பறிக்கிறது. இவற்றுக்கு எதிராக பெருந்திரளான உழைக்கும் மக்களை அணிதிரட்டுவதென்பதே நம் முன் உள்ள உடனடிக்கடமை என்ற வேண்டுகோளோடு தனது உரையை  நிறைவு செய்தார் அவர்.

இறுதியாக,  பு.மா.இ.மு. சென்னைக் கிளையின் புரட்சிகர கலை  நிகழ்ச்சி. வழமைபோல, “வெட்டறிவாளை எடடா… ரத்தம் கொதிக் குதடா…” என புரட்சிக்கனலாய் தகிக்கும் என எதிர்பார்த்திருக்க, எவரும் எதிர்பார்த்திராத தாளகதியில்  “வந்தனமுங்க.. வந்தனம்… வந்த  சனமெல்லாம் குந்தனும்” என கிராமிய மணம் கமழ தொடங்கியது,  கலை நிகழ்ச்சி. இந்தப் பாடலுக்கு அவ்வளவு கச்சிதமாய் பொருந்தியது கிருஷ்ணகுமாரின் குரல். இந்தக்குரலை இவ்வளவு நாளாய் அவர் எங்கு ஒளித்து  வைத்திருந்தாரோ தெரியவில்லை. இன்றைய கால சூழலுக்குப் பொருத்தமான பாடல்களை தேர்வு செய்ததோடு மட்டுமின்றி, அவற்றுக்குப்  பொருத்தமான இணைப்புரையோடு தொகுத்து வழங்கினர், தோழர் சரவணனும், தோழர் கிருஷ்ணகுமாரும். இவர்களைத் தவிர கலைக்குழுவின்  எஞ்சிய தோழர்களும் போட்டி போட்டுக்கொண்டு உற்சாகத்தோடு, நிகழ்ச்சியை நடத்திக் காட்டினர். குறிப்பாக, அப்துல்கலாமை அம்பலப்படுத்திய “சொன்னாரு… கலாம் சொன்னாரு…”  என்ற காட்சி  விளக்கப்பாடல் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இம்மாநாட்டில், ஜூன்28 அன்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகத்தை முற்றுகையிட்டு நடத்திய போராட்டக்காட்சிப் பதிவு ஒளிக்குறுந்தகடு வெளியிடப்பட்டது. அப்போராட்டத்தில் தீரத்துடன் போலீசை எதிர்கொண்டு சிறைசென்றவர்களுள் ஒருவரான தோழர் வெளியிட,  பு.மா.இ.மு.வின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் சரவணன்  பெற்றுக்கொண்டார்.

பு.மா.இ.மு.வின் செயற்குழு உறுப்பினர் தோழர் மருது  தனது நன்றியுரையில், போலீசின் அடக்குமுறையை எதிர்கொண்டு சிறைப் பட்டு மீண்டு வந்த போதிலும், மிக குறுகிய கால அவகாசத்திற்குள்ளாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இம்மாநாட்டு வேலைகளில் தோழர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு பங்கெடுத்துக்கொண்டதை நெகிழ்ச்சியோடு  குறிப்பிட்டார். பாட்டாளிவர்க்க சர்வதேசிய கீததுடன் நிறைவடைந்தது, மாநாட்டு நிகழ்ச்சி.

மழைகுறுக்கிட்டது; ஆயிரம் பேருக்கும் அவசரம் அவசரமாக மதிய உணவை ஏற்பாடு செய்தாக வேண்டிய நிர்ப்பந்தம்  ஏற்பட்ட போதிலும், பு.மா.இ.மு. தோழர்கள் இயல்பாய் இப்பணிகளை  திறம்பட செய்து முடித்தனர். மொத்த மாநாட்டு நிகழ்வுகளையும் தொய்வின்றி ஒருங்கிணைத்து சென்றனர். யாரையும் அதட்டவோ, மிரட்டவோ  செய்யாத தொண்டர்கள். காவல் காப்பதே தன் பணி என காத்துக் கிடக்காமல், புதிதாய் வருவோருக்கான இருக்கையை இடம் காட்டுவது தொடங்கி, பார்வையாளர்களின் தேவைக்கேற்ப தண்ணீரையும், தேநீரையும்  வழங்கியது மட்டுமின்றி, குடித்து முடித்த கோப்பைகளை திரும்பப் பெறுவது  வரையிலான பணிகளை பொறுப்புடன் அவர்கள் மேற்கொண்ட மனப்பாங்கு  மெய்சிலிர்க்க வைத்தது.

தனியார் கல்விக்கொள்ளையின் அடையாளமாய், அமைந்திருக்கும் எம்.ஜி.ஆர். நிகர்நிலைப்பல்கலைக் கழகத்தின் நுழைவாயிலுக்கும்  இவற்றுக்கு நேர் எதிரே, பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய விடிவெள்ளிகளின் உருவங்களைத் தாங்கி நிறுத்தப்பட்டிருந்த கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாட்டின் நுழைவாயில்களுக்கிடையிலான தூரம் மட்டுமல்ல; தனியார்  கல்விக்கொள்ளைக்கு முடிவு கட்டுவதற்கான காலமும் நெருங்கிவிட்டதை  குறிப்பால் உணர்த்தின மாநாட்டு நிகழ்வுகள்.

_______________________________________________

இளங்கதிர்.

________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_____________________________

_____________________________

_____________________________

_____________________________

  1. I am waiting for your report on attrocities that was done to HR department of Maruti plant at Manesar. You have an idea of reporting that or..?
    Very much eager how you make-up this report. I am sure you will show your full talent to defend yourself. We must change in dictionary UNBIASED=VINAVU.

    • Here is the report for you in a single line.

      குட்டக் குட்ட குனிந்தவன் லைட்டா தலைய தூக்குனதுக்கே குத்துது குடையுதுன்னு கத்தும் மஹேஸ் தொடங்கி ப.சிதம்பரம் வரையிலான முதலாளித்த்துவ அல்லக்கைகள், குனிந்தவன் நிமிர்ந்து திருப்பியடித்தால் தன் உடலில் எது மிஞ்சும் என்ற கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

      The above is a simple one line report. விரிவா எழுதலாம். ஆனா அந்த அளவுக்கு நீ ஒர்த் கிடையாதுப்பா .. போய் புள்ள குட்டிய கான்வெண்ட்டுல கழட்ட வையி..

      • அடேகண்பா ஒருத்தர இஈவு இரக்கமே இல்லல்லாமல் கொன்றதை யவ்வள்ளவு வெட்கமே இல்லாமல் நியாயபடுதுறீங்க ???

      • கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம நான் வொர்த் இல்ல, முதலாளித்துவ அல்லக்கை அப்புறம் என் பிள்ள கான்வெண்ட்டுல கழட்ட வையின்னுல்லாம் ரொம்ப அழகா பதில் சொன்னீங்க. உங்க சமூக நீதி மயிர் கூச்சரிகறது.. நீங்க ஏன் இந்த நாட்டின் தலைமை நீதிபதி ஆக முயற்சிக்க கூடாது . மேல சொன்ன உங்க பதில் ஒன்னே போதுமே, வேறென்ன தகுதி வேணும். எங்கள மாதிரி முதலாளித்துவ கூஜாக்களை ஐஸ் வாட்டர் கொடுத்து தெளிய வைக்க இந்த மாதிரியான சமூக நீதியை நிலை நாட்டி காத்து அருளுமாறு வேண்டிகொள்கிறேன்.

  2. in colleges the NAAC,NBA committee report they three WWW ,s for the college to be accrited.i.e WEALTH,WOMEN,WINE, very very shameful.such a shame ful sitauation.People have to think and act.

  3. அப்துல் கலாம் அவர்களை கலாய்க்காமல் ஒரு நிகழ்ச்சியோ, மாநாடோ முழுமையடையாது என்ற முடிவோடதான் இருக்கிறீர்கள்.. அவர விட்டுருங்கய்யா.. அவருக்கும் கல்வி தனியார்மயத்துக்கும் என்ன சம்பந்தம்..?!

    மக்கள் அணிதிரள வாழ்த்துக்கள்..!!!

  4. கனவு காணச் சொன்ன அதே அப்துல்கலாம் தான், கார்ப்பரேட்களின் நாடாக இந்தியா மாற வேண்டும் என்று கனவு கண்டிருக்கிறார். அதனை பல தனியார் பள்ளிகளிலும் போய் பினாத்தியிருக்கிறார் என்பதை அவரது பள்ளிக் கூட சந்திப்பு நாடகங்களைப் பேப்பரில் படித்தால் கூட தெரிந்திருக்கலாம் அம்பி!

  5. நம் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைத்து தரமான எந்திரமாக்குவதை விட அரசு பள்ளிகளில் சேர்த்து அறிவு ஆற்றலுள்ள மனிதனாக வார்த்தெடுப்போம். தனியார் பள்ளியில் சேர்ப்பதற்க்கு பலர் கூறும் காரணங்கள் 1.கல்விமுறை 2.சுகாதார அடிப்படை வசதிகள். தரமான அனைவருக்குமான கல்வி கிடைக்க வீதியில் இறங்கி போராடி நம் உரிமையை வாங்கிவிட்டோம். இரண்டாவதாக சுகாதார அடிப்படை வசதிகள் கொண்ட அரசு பள்ளிகளாக மாற மீண்டும் ஒரு முறை களம் இறங்குவோம். பெற்றோர்களே சிந்திப்பீர் உழைத்து உழைத்து தனியார் பள்ளிகளின் ATM இயந்திரமாக மாறப்போகிறோமா? அல்லது போராடி தரமான இலவச கல்வி பெற்று மனிதர்களாக வாழப்போகிறோமா?………….

  6. Your ideology shows you are totally confused

    1. One side you are complaining corruption and inefficiency of govt and govt officials (including teachers) and other side you want everyone to go govt to get everything (including education)

    2. Don’t you think the idea of single source for education is monopoly ?

    3. Do you know what is called “Free Market” ? With out allowing multiple players you cant create competition , without competition you cant create urge for innovation or implementation of good standards

    4. If people believe govt education quality is not adequate and if they find someone provides better education, then why they should not go for it ?

    5. By locking all other sources you are killing the freedom of people to take what they wish

    6. Instead of just doing lip service why cant your screwed up unions create a free education for kids and let see how many willing to take your idea ??

  7. தனியார் பள்ளியிக்கு ஆசிரியராகச் செல்லும் என் தோழி. லோகேஷ்வரி சொன்னது,

    ”பள்ளியில் பிற ஆண்களுடன் பேசக் கூடாது. வீட்டில் டியுசன் எடுக்கக் கூடாது. பெண் பார்க்க வருகிறார்கள் என்றாலும் லீவு கிடையாது. பள்ளி முடிந்ததும் வீடு திரும்ப முடியாது. நேரம், காலம் கிடையாது. ஆசிரியர்களுக்கென்று தனியாக வகுப்பு. யார், யாரை வேவு பார்க்கிறார்கள் என்ற பயம். இப்படி அடிமைகளாக நடத்தப்படும் நாங்கள், எப்படி குழந்தைகளிடம் அன்பான முறையில் நடந்துக் கொள்ள முடியும். நிர்வாகத்திடம் இருக்கும் வெறுப்பை மாணவர்களிடம் தான் காட்ட முடியும்”
    என்பாள்.

    இவ்ளோ கஷ்டத்துல ஏன் இந்த வேலை? என்று கேட்டால், ” M.A.,B,ed, முடித்துவிட்டு கம்பெனி வேலைக்குதான் போகணும், அதுக்கு இது மேல்” என்பாள். ஆசிரியர்களுக்கே இவ்வளவு கண்டிஷன் என்றால், மாணவர்களின் நிலை?

    ”பள்ளியின் அப்ளிகேஷன் பார்மில் 28 கண்டிஷன்கள். அதைப் பார்த்தே பலர் வெறுப்பதுண்டு. இதையும் மீறி தன் குழந்தைகள படிக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் சேர்க்கிறார்கள். பள்ளி வண்டி 50 க்கு 100 குழந்தைகளை அடைத்துச் செல்லும். ஆனால், வழியில் காத்திருக்கும் ஒரு ஆசிரியர்களையும் ஏற்றிச் செல்ல மாட்டார்கள். தனி பஸ் பிடித்துதான் நாங்கள் செல்ல வேண்டும்” இச்செய்தி அவள் சொல்லியதில் ஒரு துளிதான்.

    மாநாட்டில் பேராசிரியர். கருணாநந்தன் கூறியதுப் போல், ”இவனுகளேல்லாம், சேவைக்காகவா கல்விக் கூடம் கட்டி இருக்கிறானுங்க? தங்களின் தேவைக்காகத் தான் கல்வியைப் பயன் படுத்துறானுங்க.”

    மாநாட்டைப் பார்த்த என் குழந்தை ஏக்கத்தோடு , ”இவங்கப் பேசறதே நல்லாயிருக்குதே, இவர்கள் பள்ளிக்கூடம் நடத்தினால்…எப்படி இருக்கும்.” கனவில் ஆழ்ந்தாள்.

    • ”இவங்கப் பேசறதே நல்லாயிருக்குதே, இவர்கள் பள்ளிக்கூடம் நடத்தினால்…எப்படி இருக்கும்.” கனவில் ஆழ்ந்தாள். – Wow if this a fiction story ??

      Your sad story makes no sense – Why the hell still people prefer to send their students their ???

      If you worry so much just shut up and send your kids to govt school don’t expect every to do the same…

      I cam from middle class family, I studied in govt school …I know very well what is the quality of the govt school …

  8. தனியார் மயத்தின் கேடுகளை ஒவ்வொரு துறையிலும் பலர் பலவிதமாகப் பட்டியலிட்டுக் காட்டிய பின்பும் விஜய், மகேஸ் போன்ற பெயர்களில் திட்டமிட்டே ஊடுருவி கெட்ட நோக்கத்துடன் எழுதிவரும் இவர்கள் உண்மையைத் தெரிந்துகொள்ளும் நோக்கம் உடையவர்களாகத் தெரியவில்லை.வாங்கிய கூலிக்கு வேலை செய்கிறவர்களாகத் தெரிகிறார்கள்.கல்வி தனியார் மய ஒழிப்பு மா நாட்டுச் செய்திகள் தொகுக்கப்பட்டுள்ள பகுதியில்,வேறு ஒரு பிரச்சினையைப் பற்றி கேள்வி எழுப்புவது,தனியார் மயக் கொடுமைகளின் தன்மையை எடுத்துரைக்கும் விதத்தில் சிறார்கள் கூட அதைப் புரிந்துகொண்டு தங்கள் உணர்வுகளை வெளீப்படுத்தினால் அதைக் கொச்சைப்படுத்துவது போன்ற கேடுகெட்ட முதலாளித்துவ பண்புகொண்டவர்களை சல்லிக் காசுக்குகூட மதிக்காமல் வெளிப்படைத் தன்மையும் , நேர்மையுள்ளமும் கொண்டவர்கள் அறிவார்ந்த வினவு தளத்தில் அப்படிப்பட்ட அற்பர்களைப் புறக்கணிக்க வேண்டும்.

  9. இந்த முதலாளிகள் மற்றும் முதலாளிகளுக்கு சொம்பு தூக்கி ஆதாயம் அடைபவன் எல்லாம் ஒரே மாதிரித்தான்.

    ஒரு பிரச்சணையை பற்றி பேசும்போது வேண்டுமென்றே திசைத்திருப்ப வேறொரு பிரச்சணையை பற்றி பேசுவது…….

  10. தாம்பரம் அருகில் பள்ளி மாணவி ஷ்ருதி மரணத்திற்குக் காரணமாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரியும் ஷ்ருதியின் மரணத்திற்கு கண்ணீர் மல்க அஞ்சலி – கல்வி வியாபாரமானபின் இது போன்ற கொலைகள் இன்று அன்றாட ஒன்றாகிவிட்டது. கல்வி தனியாரிடம் இருக்கும் வரை எத்தகைய கடுமையான நடவடிக்கை எடுத்தாலும் இத்தகைய சம்பவங்கள் நடப்பதை யாராலும் தடுக்க முடியாது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க