privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விசென்னையில் ஜூலை 17 (செவ்வாய்) கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு!

சென்னையில் ஜூலை 17 (செவ்வாய்) கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு!

-

கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு

2012 ஜூலை 17 காலை 10 மணி முதல், S.V. மஹால், மதுரவாயல், சென்னை (M.G.R. இன்ஜினியரிங் காலேஜ் எதிரில்)

நிகழ்ச்சி நிரல்:

தலைமை: தோழர். த. கணேசன், மாநில அமைப்பாளர், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, தமிழ்நாடு

மாநாட்டு உரை:

“கட்டண நிர்ணயம், 25% இட ஒதுக்கீடு என்பதெல்லாம் தனியார்மயத்தை ஊக்குவிக்கவே!”

– பேராசிரியர். திரு. அ. கருணானந்தன்
(சமச்சீர் பாடபுத்தகத் தயாரிப்புக்குழு உறுப்பினர்) வரலாற்றுத்துறை முன்னாள் தலைவர் விவேகனந்தா கல்லூரி, சென்னை

“தனியார்மயக் கல்வியை ஒழித்துக்கட்டு!”

– மூத்தக்கல்வியாளர் திரு. ச. ராஜகோபாலன், சமச்சீர் பாடத்திட்டக் கமிட்டி உறுப்பினர்.

“பொதுப்பள்ளி – அருகமைப்பள்ளி முறை ஏன் தேவை?”

– பேராசிரியர். திரு. ஹரகோபால்,
மத்தியப் பல்கலைக் கழகம், ஹைதராபாத், ஆந்திரப்பிரதேசம்.
Presidium, All lndia For Right To Educatin (ALFRTE)

“உழைக்கும் மக்களின் கல்வி கற்கும் அடிப்படை உரிமையை நிலை நாட்டுவோம்!”

– தோழர். துரை. சண்முகம், மக்கள் கலை இலக்கியக் கழகம்

______________________________________________________________________________

மாணவர்கள், பெற்றோர்கள், இளைஞர்கள், பதிவர்கள், வாசகர்கள் அனைவரும் வருக!
______________________________________________________________________________

கல்வியில்-தனியார்மயம்-ஒழிப்பு-மாநாடு

தனியார்மயக் கல்விக் கொள்ளைக்கு முடிவு கட்டுவோம்!

உழைக்கும் மக்களின் கல்வி கற்கும் அடிப்படை உரிமையை நிலை நாட்டுவோம்!

2012 ஜூலை மாதம், கல்வி தனியார்மய எதிர்ப்பு மாநாட்டை சென்னை, திருச்சி, கரூர்,விழுப்புரம், கடலூர் ஆகிய 5 இடங்களில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நடத்த உள்ளது. மாநாட்டிற்கு உழைக்கும் மக்களையும் , ஆசிரியப் பெருமக்களையும், பெற்றோர்களையும், மாணவர்களையும், கல்வியாளர்களையும், ஜனநாயகப் பற்றாளார்களையும் அறைகூவி அழைக்கின்றது. 

 அன்பார்ந்த மாணவர்களே உழைக்கும் மக்களே!

மனித சமுதாயம் உயிர் வாழ்வதை உத்தரவாதப்படுத்துவதற்கு அடிப்படை ” மருத்துவம் ”. உயிர் வாழ்வதை அர்த்தமுள்ளதாக்குவது ” கல்வி ”. இந்த இரண்டையும் சமுதாயத்தின் மக்களுக்கு இலவசமாகக் கொடுப்பது அரசின் கடமையாகும். ஆனால் இவை இரண்டையும் தனியார் முதலாளிகளின் இலாப வேட்டைக்கு திறந்து விட்டுள்ளன மத்திய, மாநில அரசுகள்.

பல தனியார் பள்ளி/கல்லூரி முதலாளிகள் உருப்படியான ஒரு கட்டிடம் கூட இல்லாமல் தனி சாம்ராஜ்ஜியமே நடத்தி வருகிறார்கள். அரசு அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் தமிழகத்தில் மலிந்து கிடக்கின்றன. இத்தனியார் பள்ளி / கல்லூரிகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் தங்கள் கட்டணக் கொள்ளையை பகிரங்கமாகவே நடத்தி வருகின்றன. இப்பகற்கொள்ளையை சட்டப்பூர்வமாக்க ‘இந்த வகுப்புக்கு இவ்வளவு வாங்க வேண்டும் என்று ஒரு பெயருக்கு கட்டணம் நிர்ணயித்தது’ தமிழக அரசு. இதைக்கூட பொறுத்துக் கொள்ள முடியாமல் இப்படியெல்லாம் எங்களை நிர்ப்பந்தித்தால் ”பள்ளிகளை திறக்கமாட்டோம், உச்ச நீதிமன்றம் செல்வோம்” என்று அரசையே மிரட்டுகிறார்கள்.விதிமுறைகள் எல்லாம் அரசுக்குத்தான் இவைகளை தனியார் பள்ளி முதலாளிகள் மலம் துடைக்கும் காகிதங்களைப் போல் சுருட்டி எறிகின்றனர்.

கட்டணக் கொள்ளையை எதிர்த்துக் கேட்கும் பெற்றோர்களை கல்வி ‘வள்ளல்கள்’மிரட்டுகிறார்கள், மாணவர்களை பழிவாங்குகிறார்கள்.அதுமட்டுமல்ல பள்ளிக் கல்வி அதிகாரிகளையும் பிளாக் மெயில் செய்கிறார்கள்.போலீசோ அதற்கேயுரிய புத்தியோடு இவர்களின் ஏவல் நாயாக செயல்படுகிறது. பாதிக்கப்படுபவர்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று புகார் கொடுக்கலாம், ஆனால் தண்டிக்க முடியாது. இவர்கள் கட்டணத்தை உயர்த்தச் சொன்னால் மட்டும் உடனே தீர்ப்பு வரும். காரணம் கட்டண நிர்ணயக் கமிட்டியினர், அதிகாரிகள், அமைச்சர்கள், ‘சர்வ வல்லமை படைத்த நீதிபதிகள்’அனைவரும் இந்த கல்வி வள்ளல்களின் கரிசனப் பார்வைக்காகவும், கொடுக்கும் பெட்டிக்காகவும் கைகட்டி காத்திருப்பதுதான்.

‘தரமானக் கல்வி, ஆங்கிலவழிக் கல்வி, சிறந்த பயிற்சி , மூன்று வயது குழந்தைக்கும் கணினி வழியில் கல்வி(?)’என்று மூலை முடுக்கெல்லாம் தனியார்கல்வி நிலையங்களின் விளம்பரப் பலகைகள்,பத்திரிக்கைகளின் கல்விக்கான சிறப்பு மலர்கள்,தொலைக்காட்சி விளம்பரங்கள்,கல்விக் கண்காட்சிகள் என வியாபார வலை விரித்து பெற்றோர்களை சிக்கவைக்கிறார்கள். இவையெல்லாம் கண்கட்டுவித்தை.

வாங்கிய பணத்திற்கு தேர்ச்சி காட்ட வேண்டும் என்பதற்காக பொதுத்தேர்வு எழுதும் தனியார்பள்ளி மாணவர்களுக்கு நிர்வாகமே ‘பிட்’ கொடுப்பது, மாநில அளவில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்கும் பள்ளி என்று பெயர் எடுத்து மாணவர்களிடம் பல லட்சங்களை சுருட்டுவதற்காக, ஒரு மாணவனை மட்டும் சம்பத்தப்பட்ட பாட ஆசிரியர்களின் துணையோடு புத்தகத்தை வைத்து தனியாக தேர்வு எழுத வைப்பது ஆகியவற்றை இவ்வாண்டு பொதுத்தேர்வு சம்பவங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கின்றன. சென்னையில் ஆங்கிலோஇந்தியன் பள்ளியின் டார்ச்சரை தாங்க முடியாத ஒரு மாணவன் எதிர்ப்புக்காட்டி ஒரு ஆசிரியரை கொலை செய்திருக்கிறான். ஆங்கில வழியில் தேர்ச்சிபெற முடியாமலும், எதிர்ப்பைக் காட்ட முடியாமலும் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். உயிரோடு இருக்கும் பல மாணவர்கள் மனநோயாளிகளாகவே இருக்கிறார்கள். இதுதான் தனியார் பள்ளி/கல்லூரிகளின் தரம்,பயிற்சியின் யோக்கியதை. இவை கல்வி நிறுவனங்களல்ல கோடிகளும், கேடிகளும் கொழுக்கும் கிரிமினல் கூடாரங்கள்.

ஆம்,முதலே போடாமல் பாதுகாப்பாக லாபம் சம்பாதிக்கும் தொழிலில் முதலில் இருப்பது கல்வி என்றாகிவிட்டது. அதனால்தான் சாராய ரவுடிகள், ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள்அமைச்சர்கள்,போன்றவர்கள் கல்வி வள்ளல்களாக வலம் வருகிறார்கள். தடுக்கவேண்டிய அரசு இவர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கிறது.காரணம்,அரசு நடைமுறைப்படுத்தி வரும் தனியார்மயதாராளமய உலகமயக் கொள்கைகள் தான்.

அடிமை சாசனமான காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை அடுத்து வந்த காட்ஸ் ஒப்பந்தப்படிதான் சேவைத்துறைகள் அனைத்தும் வியாபாரத்திற்கு திறந்துவிடப்படுகின்றன. மருத்துவம், சுகாதாரம், தண்ணீர், கல்வி என அனைத்தும் வியாபார சரக்காக்கப்பட்டுள்ளது. சரக்கு வியாபாரத்தை சந்தை விதிகள்தான் தீர்மானிக்கும் என்கிறது முதலாளித்துவ கொள்கை. உலகச் சந்தைக் கேற்ப கல்விக் கொள்கையை தீர்மானிக்கச் சொல்கிறது காட்ஸ் ஒப்பந்தம். இதன்படிதான் 1986 ஆம் ஆண்டு தேசியக் கல்விக் கொள்கையும் தனியார்மயம்தாராளமயம்உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கைகளுக்கேற்ப மாற்றியமைக்கப்பட்டது. அரசுக் கல்வி சீர்குலைக்கப்பட்டது.

இந்நாட்டின் கல்விக் கொள்கையை தீர்மானிப்பவர்கள் கல்வியாளர்கள் அல்ல, பிர்லா அம்பானிகளும், பன்னாட்டு முதலாளிகள் சங்கமும், அவர்களின் கைக்கூலிகளான ‘அறிவார்ந்த’ குழுவினரும் தான். 2000 ஆம் ஆண்டு உலகவங்கி, உலகவர்த்தகக் கழகம், பன்னாட்டு நிதியம் இணைந்து தாய்லாந்தில் உள்ள ஜோம்தியன் நகரில் நடத்திய கல்வியை தனியார்மயமாக்குவது தொடர்பான கருத்தரங்கு முடிவுகளை மனமுவந்து ஏற்றுக்கொண்டது இந்த அரசு. அதன்படி கல்வி கொடுப்பது அரசின் கடமையல்ல, அது சமூகப் பொறுப்பு என்று முடிவு செய்தது. அதாவது, பெற்றவர்கள்தான் பிள்ளையை படிக்க வைக்கவேண்டுமே தவிர அதை அரசு செய்ய முடியாது என்பதுதான் இதன் அர்த்தம்.

கல்வி என்பது சமூக வளர்ச்சிக்கான அடைப்படையல்ல, அது உலகச் சந்தையை வளர்த்தெடுக்கும் மூலதனம் என்றானதன் விளைவுதான் பல நூறு மில்லியன் டாலர்கள் புழங்கும் கல்விச் சந்தையை முழுமையாக விழுங்வதற்காக கார்ப்பரேட் வல்லூறுகளும் வட்டமிட்டு வருகின்றன. இதுதான் மிகப்பெரிய அபாயம். இந்த அபாயத்தின் அறிகுறிதான் கல்லுளி மங்கன் மன்மோகன் அரசு கடந்த 2010 ஆம் ஆண்டில் உயர்கல்வி தொடர்பாக சுமார் 13 மசோதாக்களை அறிமுகம் செய்திருப்பது. அதில் ஒன்றுதான் வெளி நாட்டுப் பல்கலைகழகங்களை இந்தியாவில் கடை விரிக்க அனுமதிப்பதாகும்.

கார்ப்பரேட் நிறுவனங்களின் தேவைக்கேற்ப புதுப் புது பாட திட்டங்களை வகுப்பதும், புதுப் புது ஆய்வுகளை செய்வதையும், முதலாளிகளை எவ்வித கேள்வியும் கேட்காமல், சுயமாக சிந்திக்காமல் சுருக்கமாக, முதலாளிகளின் தேவையை அவர்கள் விரும்புகிறபடி மட்டுமே செய்து கொடுக்கிற கொத்தடிமைகளாக,மனித உணர்ச்சிகளே இல்லாத ரோபாட்டுகளாக மாணவர்களை உருவாக்குவது என்ற நோக்கத்தின்படி தனியார்மயக் கல்விக் கொள்கை படுதீவிரமாக அரங்கேற்றப்படுகின்றன.

இப்படி கல்வியை சந்தைப்படுத்தி கொள்ளையடிப்பது, கார்ப்பரேட் முதலாளிகளின் தேவைக்கேற்ப கல்வி முறையை மாற்றியமைப்பது என்பதையெல்லாம் செய்துவிட்டு இலவச கட்டாயக் கல்விச் உரிமைச் சட்டம்2009, தனியார் பள்ளிகளில் 25% ஏழை மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு , தனியார் பள்ளி மற்றும் பொறியியல், மருத்துவக் கல்லூரிகளின் கட்டணத்தை ஒழுங்குபடுத்த அரசே கட்டணத்தை நிர்ணயம் செய்வது போன்ற நடவடிக்கைகளின் மூலம், இந்த அரசு மக்களின்பால் கரிசனத்தோடும், அவர்கள் கல்வி கற்பதில் அக்கறையோடும் இருப்பதுபோல காட்டிக்கொள்ள முயல்கிறது. தனியார்மயக் கல்விக் கொள்கையை அமல்படுத்திக் கொண்டே அதற்கு நேர் எதிராக ஒரு அரசால் எப்படி செயல்பட முடியும்?

இவை ஏதோ தனியார்கல்விக்கு எதிரான,பெரும்பான்மை ஏழை மாணவர்கள் நலன் கொண்டவைகளைப் போல காட்டப்படுகின்றன. இது ஒரு மாயை. உண்மையில் இவையெல்லாம் தனியார்மயக் கல்விக் கொள்கையை இம்மியளவும் பிசகாமல், எதிர்ப்பே இல்லாமல் அனைவரையும் ஏற்றுக்கொள்ள வைக்க நடைமுறைப்படுத்தும் தந்திரம், பெரும்பான்மை மக்களை நம்ப வைத்து கழுத்தறுக்கும் நயவஞ்சகம்.

அரசுக் கல்வியை ஒழித்துக் கட்டி தனியார்மயக் கல்வியை முழுமையாக்குவதற்காக அரசு எடுத்து வரும் இந்த நடவடிக்கைகளைத்தான் ஆட்சியாளர்களும், ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகளும், முதலாளித்துவ அறிவு ஜீவிகளும், பத்திரிகைத் தொலைக்காட்சி ஊடகங்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் ‘வராது வந்த மாமனியைப் போல ‘ வரவேற்று ஆ..கா… ஓ…கோ…. என்று ஊதிப் பெருக்குகிறார்கள்.

இதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல், தங்கள் பிள்ளைகள் மருத்துவர்களாக, பொறியாளர்களாக வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற தனியார்பள்ளிகள் தான் ஏற்றவை என்று பெற்றோர்கள் கருதுகின்றார்கள். இன்னொரு பக்கம் அரசுப் பள்ளி, கல்லூரிகளை அரசே திட்டமிட்டு சீர்குலைத்து பெற்றோர்களை தனியார் கல்வி நிறுவனங்களை நோக்கித் தள்ளி விடுகின்றது.

சட்டத்தின் முன் அனைவரும் சமம்,எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்றால், எல்லாக் குழந்தைகளும் கல்வியை தரமாக பெறுவதற்கு சம உரிமையையும், சம வாய்ப்பையும் அரசு தான் செய்து கொடுக்க வேண்டும். மேலும் குழந்தைகளுக்கிடையில் வேறுபாடில்லாமல் ஒரே பாடத்திட்டம்,ஒரே பயிற்று முறை, ஒரே தேர்வு முறை , ஒரே வசதிகள் கொண்ட பள்ளிகளை அரசே தனது செலவில் கட்டி கல்வியை இலவசமாக வழங்க வேண்டும்.

தனியார் முதலாளிகள் கையில் கல்வி நிறுவனங்கள், ஏற்றத்தாழ்வான கல்வி என்பதெல்லாம் அடிப்படை ஜனநாயகத்திற்கே எதிரானது. எங்கெங்கும் அரசுப் பள்ளிகள் ,ரேசன் கடைகள் போல ஒரு பகுதியிலுள்ள எல்லாக் குழந்தைகளும் அந்தப் பள்ளியில்தான் படிக்க வேண்டும் என்பதுதான் சம உரிமையாகும். இந்த வகை பொதுப் பள்ளி அருகமைப் பள்ளிகளைத் தான் நாட்டுப் பற்றும் ஜனநாயகப் பற்றும் கொண்ட கல்வியாளர்கள் நாடெங்கும் அமல்படுத்தச் சொல்கிறார்கள். பல அய்ரோப்பிய நாடுகளில் இந்த முறை தான் நடைமுறையில் இருக்கின்றது.

நம் நாட்டிலும் இதை அமல்படுத்தப் போராட புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி உழைக்கும் மக்களையும் , ஆசிரியப் பெருமக்களையும், பெற்றோர்களையும், மாணவர்களையும், கல்வியாளர்களையும், ஜனநாயகப் பற்றாளார்களையும் அறைகூவி அழைக்கின்றது.

உழைக்கும் மக்களே!

  •  கட்டண நிர்ணயம், தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு என்பதெல்லாம் தனியார்மயத்தை ஊக்குவிக்கவே!
  •  உழைக்கும் மக்களின் கல்வி கற்கும் அடிப்படை உரிமையை நிலை நாட்டுவோம்!

மத்திய , மாநில அரசுகளே!

  •  அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களையும் ஒழித்துக் கட்டு !
  •  அனைத்து தனியார் பள்ளி/ கல்லூரிகளையும் அரசுடைமையாக்கி
  • அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி வழங்கு!
  •  ஒரே பாடத்திட்டம், ஒரே பயிற்றுமுறை, ஒரே தேர்வுமுறை,ஒரே வசதி கொண்ட பொதுப்பள்ளிஅருகமைப்பள்ளி முறையை அமல்படுத்து!

__________________________________________________________________________

– புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு

தொடர்புக்கு: (91)9445112675

__________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_____________________________

_____________________________

_____________________________

_____________________________