புதுமைப்பித்தன் உயிருடன் இல்லை. இருந்திருந்தால், ‘என்னமோ மத்திய அரசு பல்கலைக்கழகம், மத்திய அரசு பல்கலைக்கழகம் என்று கதைக்கிறீர்களே! இதுதான் ஐயா, மத்திய அரசு பல்கலைக்கழகம்’ என்று என்னை சுட்டிக் காட்டி, மத்திய அரசு பல்கலைக்கழகங்களின் இலட்சணத்தை தோலுரித்துக் காட்டியிருப்பார். இதன் மூலம் பலரது மயக்கத்தை தெளிய வைத்திருப்பார்.
பின்னே… ஏதோ, தனியார் கல்லூரிகள் மட்டுமே உள் கட்டமைப்பு இன்றி இருப்பதாகவும், மாணவர்களிடம் இலட்சம் இலட்சமாக கட்டணம் என்ற பெயரில் கொள்ளையடிப்பதாகவும், மத்திய அரசு பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் தேனாறும், பாலாறும் ஓடுவதாகவும், பிரம்மாண்டமான உள்கட்டமைப்பு வசதி இருப்பதாகவும், குறைந்த கட்டணத்தை மட்டுமே வசூலித்து இயங்குவதாகவும் பெரும்பான்மையான மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்களே…
எங்கே சென்று முட்டிக் கொள்வது என்று தெரியவில்லை. அந்த எண்ணமே கடைந்தெடுத்த பொய். அதற்கு நானே சாட்சி. இத்தனைக்கும் நான் அரசு கல்லூரி அல்ல; மத்திய அரசின் கீழ் இயங்கும் அரசு பல்கலைக்கழகம்!!!
சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்துக்கு வந்து விடுகிறேன். என் பெயர், ‘கடல்சார் பல்கலைக்கழகம்‘. இந்திய அரசுதான் என் அப்பா, அம்மா. இந்திய ஜனாதிபதிதான் எனது பாதுகாவலர். அரசு மற்றும் தனியார் கப்பல்களில் பணிபுரியும் தொழிலாளர்களை ஆண்டுதோறும் உற்பத்தி செய்து அனுப்புவதுதான் என் வேலை. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் உத்தண்டிதான், என் இருப்பிடம்.
நான் பிறந்தது 2006ம் ஆண்டில். அதற்கு முன்புவரை கடல்சார் பல்கலைக்கழகம் என்று எதுவும் தோன்றவில்லை. பதிலாக, கொச்சி, கொல்கத்தா, மும்பை உட்பட நாட்டின் பல இடங்களில், பல கல்லூரிகளில், கடல்சார் பட்டப் படிப்புகள் என்னும் மெரைன் கோர்ஸ் அல்லது டிப்ளமோ வகுப்புகள் என்ற பெயரில் உயிரணுக்களாக சிதறிக் கிடந்தேன். என்னை சிசுவாக மாற்றியதில் தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்ற பெயரில் நாட்டை சூறையாடும் மறுகாலனியாதிக்கச் சூழலுக்கு பெரும் பங்குண்டு.
காரணம், கடல்சார் பட்டப்படிப்புகளுக்கு ஏக கிராக்கி ஏற்பட்டது அதன்பிறகுதான். கப்பல்களில் பணிபுரிபவர்களுக்கு வழங்கப்பட்ட – வழங்கப்படும் – மாதச் சம்பளத்தின் தொகை, உயர் நடுத்தர மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை வாய் பிளக்கச் செய்தது. எனவே புற்றீசல் போல் தோன்ற ஆரம்பித்த ‘கீத்துக் கொட்டாய்’ தனியார் கல்லூரிகளில், கடல்சார் படிப்புகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டால் போதும்… உடனே தங்கள் வாழ்நாள் சேமிப்பை தாரை வார்த்து அந்தப் படிப்பில் தங்கள் வாரிசுகளை சேர்க்க முண்டியடித்தார்கள்.
உண்மையிலேயே கப்பல்களில் பயிற்சி அளிக்கிறார்களா… லேப் வசதி இருக்கிறதா… கற்றுத் தரும் பேராசிரியர்களின் தகுதி என்ன… என்று எதைக் குறித்தும் ஆராய நடுத்தர வர்க்கம் தயாராக இல்லை. சான்றிதழ் கிடைத்தால் போதும் என திருப்தி அடைந்தார்கள்.
ஆனால், அந்தச் சான்றிதழ்களை ஏற்க கப்பல் நிறுவனங்கள் தயாராக இல்லை. அரசுக்கு சொந்தமான கப்பல் நிறுவனங்கள் குறைவு. எனவே தனியாருக்கு சொந்தமான – குறிப்பாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு சொந்தமான – கப்பல்களில்தான் பணிக்கு சேர வேண்டும். அந்த நிறுவனங்கள், இந்தச் சான்றிதழ்களை தங்கள் மலத்தை துடைக்கக் கூட பயன்படுத்த மறுத்தன. இதனால் கடல்சார் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. புதிதாக இப்படிப்புக்கு சேர வந்தவர்களும் பின்வாங்கத் தொடங்கினார்கள்.
இப்படியே போனால், பொன் முட்டையிடும் வாத்தாக இருக்கும் கடல்சார் படிப்புத் துறையை தங்கள் கல்லூரிகளில் இருந்தே நீக்க வேண்டிய நிலை வந்துவிடும் என்பதை உணர்ந்த தனியார் கல்லூரிகள், இந்தப் படிப்புக்கு என்று ஒர் அரசு பல்கலைக்கழகத்தை தொடங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார்கள். அப்படியொரு பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டால், அந்தப் பல்கலைக்கழகம் வழங்கும் சான்றிதழை ஏற்பதாக தனியார் கப்பல் நிறுவனங்களும் அறிவித்தன.
இதனை தொடர்ந்துதான் 2006ம் ஆண்டு நான் குறை பிரசவத்தில் பிறந்தேன். நியாயமாகப் பார்த்தால் என்னை இன்குபேட்டரில் வைத்து பராமரித்திருக்க வேண்டும். உரிய மாதங்கள் முடியும் வரை என்னை கண்ணும் கருத்துமாக பாதுகாத்திருக்க வேண்டும். அப்படியெல்லாம் மத்திய கடல்வழி போக்குவரத்துத் துறை செய்யவேயில்லை. பதிலாக, குறை மாதங்களில் அறுத்து எடுத்த என்னை, சென்னை கடலோரம் வீசி எறிந்துவிட்டார்கள். இதற்கு காரணம், அப்போது மத்திய கடல்வழி போக்குவரத்துத் துறையின் அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு. வட மாநிலங்களில் என் பிறப்பு நிகழாமல், தென் மாநிலத்தில் – குறிப்பாக தமிழகத்தில் – நான் பிறந்தது அவரது சாதனைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. திமுகவும் தேர்தல் அறிக்கைகளில் இதனை மாபெரும் வரலாற்று நிகழ்வாக குறிப்பிடுகிறது.
உண்மையிலேயே என் பிறப்பு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியா? என் பிறப்பு மூலம் தமிழகம் ஜொலிக்கிறதா? சத்தியமாக இல்லை. கேழ்வரகில் எப்படி ஒருபோதும் நெய் வடிவதில்லையோ அப்படி கடல்சார் பல்கலைக்கழகமாகிய என்னை தமிழக மக்களின் நலன் கருதி டி.ஆர்.பாலு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிறக்கச் செய்யவில்லை.
டி.ஆர்.பாலுவின் சம்பந்தி நடத்தும் ‘சாய்ராம் பொறியியல் கல்லூரி’யில் என் தொடர்பான கோர்ஸ் இருக்கிறது. அதுமட்டுமா… ரவுடித்தனம் செய்யும் ஐசரி கணேஷுக்கு சொந்தமான ‘வேல்ஸ்’ கல்லூரியில், நடிகர் விவேக் உரிமையாளராக இருக்கும் காலேஜில்… என திமுகவுக்கும், டி.ஆர்.பாலுவுக்கும் வேண்டப்பட்டவர்கள் நடத்தும் அனைத்துக் கல்லூரிகளிலும் ஏதோவொரு வகையில் என் சம்பந்தப்பட்ட படிப்பு இருக்கிறது. இவற்றுக்கெல்லாம் ‘அங்கீகாரம்’ வழங்கத்தான் என்னை வலுக்கட்டாயமாக சென்னையில் பிறக்க வைத்திருக்கிறார்களே தவிர வேறு எந்த பொடலங்காய் சாதனைகளும் காரணமில்லை. அதாவது, ஜெயலலிதாவின் ஆட்சியில் பால்வாடி எல்லாம் எப்படி அரசு சுகாதார நிலையங்களாக ஒரே இரவில் உருமாறியதோ அப்படித்தான் சூல் கொண்ட மறு விநாடியே என் பிறப்பு நிகழ்ந்தது.
”இது நல்ல கதையாக இருக்கிறதே… வேண்டுமென்றே டி.ஆர்.பாலுவின் மீது அபாண்டமாக குற்றம் சாட்டுகிறாய். திமுகவின் மீது இப்படி அவதூறு கிளப்ப ஜெயலலிதாவிடமிருந்து எவ்வளவு பணம் வாங்கினாய்…” என சில சில்லுண்டிகள் கேட்கக் கூடும். அவர்களுக்காகவே விஜயனை அறிமுகப்படுத்தும் கடமை எனக்கு இருக்கிறது.
இந்த விஜயன் வேறுயாருமல்ல, எனது உப பாதுகாவலர்தான். வைஸ் சான்சிலர் என்று அழைக்கப்படும் இவர், உண்மையில் விசி ஆக இருக்கவே தகுதி இல்லாதவர். பொதுவாக மத்திய அரசின் கீழ் இயங்கும் ஒரு பல்கலைக்கழகத்துக்கு வைஸ் சான்சிலராக நியமிக்கப்படுபவர், சம்பந்தப்பட்ட துறையில் 10 ஆண்டுகள் பேராசிரியராக இருந்திருக்க வேண்டும். அதிலும் என்னைப் போன்று குறிப்பிட்ட படிப்பை சார்ந்த பல்கலைக்கழகமாக இருந்தால், அது குறித்த கல்வியறிவும் அனுபவமும் அவசியம்.
ஆனால், விஜயனிடம் இந்தத் தகுதிகள் எதுவும் இல்லை. ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்யும் இவர், ஏதோ மெரைன் கோர்ஸில், தான் பழம் தின்று கொட்டை போட்டதாக தனது விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அதுவும் இவர் ஆசிரியராக பணிபுரிந்து கற்றுத் தந்த நிறுவனம் எது தெரியுமா? ‘மன்னார் அண்ட் மன்னார்’ கம்பெனி! ஐடிஐ என்று கூட சொல்ல முடியாத ஒரு நிறுவனத்தில், அதுவும் அங்கீகரிக்கப்படாத இன்ஸ்டிடியூட்டில், பேராசிரியராக இருந்தாராம்.
உடனே, ‘மத்திய அரசின் கடல்சார் பல்கலைக்கழகமே இப்போதுதானே வந்திருக்கிறது? எனவே அனுபவம் வாய்ந்த விசி கிடைப்பது கடினம்… இருப்பவரை வைத்து தொடங்கியதை தவறு என்று சொல்ல முடியாது…’ என சப்பைக்கட்டு கட்டாதீர்கள். இராமச்சந்திரன் என்னும் பேராசிரியர் ஒருவர் இருக்கிறார். அவர், வைஸ் சான்சிலருக்கு என்று யூஜிசி குறிப்பிட்டுள்ள அனைத்து தகுதிகளும் பெற்றவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதேபோல், விசி ஆக நியமிக்கப்படுபவரை 3 பேர் கொண்ட குழு, ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்திருக்க வேண்டும். விஜயன் விஷயத்தில் இதுவும் மேற்கொள்ளப்படவில்லை. ஆமாம், ஒருவர் கூட இவரை பரிந்துரை செய்யவில்லை. அப்படியிருந்தும் சட்டத்துக்கு புறம்பாக, கொல்லைப்புறம் வழியாக, விஜயனை விசி ஆக அமர வைத்து அழகு பார்த்தவர் – பார்க்கிறவர் – யார் தெரியுமா?
சாட்சாத் டி.ஆர்.பாலுவேதான். காரணம், விஜயன், நம்பர் ஒன் அல்லக்கை. டி.ஆர்.பாலுவின் பினாமி. தவறாமல் கப்பம் கட்டும் நேர்மையாளர். இந்தத் தகுதிகள் இராமச்சந்திரனிடம் இல்லை. அதனால் அவருக்கு எனது உப பாதுகாவலர் பதவி வழங்கப்படவில்லை.
சொந்தமாக வீடு இருக்கும் வைஸ் சான்சிலர், வீட்டு வாடகை என அரசிடமிருந்து எந்தத் தொகையையும் வாங்கக் கூடாது என்பது விதி. ஆனால், விஜயன், சொந்த வீட்டில் வசித்தபடி அதற்காக மாதா மாதம் அரசிடமிருந்து வாடகை வசூலித்து வருகிறார். ஒரு கார் மட்டுமே வைத்துக் கொள்ளலாம் என்பது இன்னொரு விதி. இதையும் 3 கார்கள் வைத்தபடி மீறுகிறார் விஜயன். இந்த 3 கார்களுக்கும் 3 ஓட்டுநர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு சம்பளம் வழங்க எனது உப பாதுகாவலர் என்ன பைத்தியக்காரரா? அதுதான் வருடந்தோறும் தவறாமல் வரி கட்டும் மக்கள் இருக்கிறார்களே… எனவே அரசு அந்த 3 ஓட்டுநர்களுக்கும் மாத ஊதியம் வழங்குகிறது. ஜேப்பியாருக்கு சொந்தமான செயிண்ட் ஜான்ஸ் பள்ளியில் படிக்கும் எனது உப பாதுகாவலரின் பிள்ளைகளை தினமும் பள்ளிக்கு அழைத்துச் செல்வதும், மாலையில் அழைத்து வருவதும் இந்த ஓட்டுநர்களில் ஒருவரது பணி.
எதிர்த்து யாரும் கேட்க முடியாது. அப்படி கேட்கக் கூடியவர்கள் யாரும் பணியிலும் இல்லை. ஊழியர்கள் அனைவருமே ஒன்று விஜயனின் உறவினர்கள் அல்லது நண்பர்கள் அல்லது தெரிந்தவர்கள் அல்லது ஊர்க்காரர்கள்.
எனவே விஜயன் கொட்டமடிக்கிறார். அது எந்த அளவுக்கு என்றால், மாணவர்களின் எதிர்காலத்தையே கால்பந்தாக விளையாடும் அளவுக்கு…
குறை பிரசவமாக இருந்தாலும் நானும் அரசு பல்கலைக்கழகம் தானே? எனவே என்னிடம் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகபட்சம் 180 ஆக இருக்கலாம் என எனது பெற்றோரான இந்திய அரசாங்கம், நிர்ணயம் செய்திருக்கிறார்கள்.
ஆனால், இப்போது என்னிடம் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 350! ஆமாம், கிட்டத்தட்ட நிர்ணயிக்கப்பட்ட அளவை விட இரு மடங்கு மாணவர்களை விஜயன் சேர்த்திருக்கிறார்.
அப்படியானால் அதிகப்படியான மாணவர்களுக்கு எப்படி சான்றிதழ் வழங்க முடியும்..? என சிறுபிள்ளைத்தனமாக கேள்வி கேட்காதீர்கள். 1991 – 96ல் பாசிச ஜெயலலிதாவின் காட்டாட்சியில் காளான் போல் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் முளைத்ததே நினைவிருக்கிறதா? அவை எப்படி செயல்பட்டனவோ, அப்படித்தான் நான் இப்போது இயங்குகிறேன்.
அதாவது முதலில் 180 மாணவர்களுக்குத்தான் அவர்களது படிப்பு முடிந்ததும் சான்றிதழ் கிடைக்கும். மீதமுள்ள மாணவர்களுக்கு அடுத்த பேட்ச்சில் வழங்கப்படும். இப்படி ரிலே ரேஸில்தான் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறன. எனவே படிப்பு முடிந்தாலும் சான்றிதழ் கிடைக்கும் வரை மாணவர்கள் அமைதியாக இருக்க வேண்டும், வாய் திறக்கக் கூடாது. தங்கள் பெற்றோர்களிடம் கூட இது குறித்து பகிர்ந்துக் கொள்ளக் கூடாது…
இந்த இடத்தில், ”அஸ்கு புஸ்கு… பட்டப்படிப்பு என்றால், குறைந்தது 3 ஆண்டுகளாவது இருக்கும் என்று எங்களுக்கு தெரியாதா? அப்படியிருக்க, நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக மத்திய அரசின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகத்தில் மாணவர்களை எப்படி சேர்க்க முடியும்? விட்டால் எங்கள் காதைச் சுற்றி ஒரு பூந்தோட்டத்தையே அமைத்து விடுவாய் போலிருக்கிறதே…”
என்ற கேள்வி எழுந்தால் –
கேட்பவரை கட்டிப் பிடித்து முத்தம் தர தயாராக இருக்கிறேன். சரியான வினாவை எழுப்பியவரை வேறு எப்படி பாராட்ட?
ஆனால் –
எப்படிச் சொல்வது… என்னவென்று புரிய வைப்பது? பட்டப் படிப்பு என்று எதுவும் என்னிடம் இல்லையே… 2 ஆண்டுகள் அல்லது ஒரு வருட சான்றிதழ் கோர்ஸ்தானே நடத்தப்படுகின்றன..?
ஆமாம் ஐயா ஆமாம்… மத்திய அரசு கடல்சார் பல்கலைக்கழகமாகிய நான், ஒரு ஏசி மெக்கானிக், டிவி மெக்கானிக் இன்ஸ்டிடியூட் போலத்தான் இயங்குகிறேன். அப்படி நடக்கும்படிதான் அரசாங்கம் உத்தரவிட்டிருக்கிறது. அப்படியானால் பட்டப்படிப்பு? அதற்குத்தான் சாய்ராம், வேல்ஸ்… முதலிய கல்லூரிகள் இருக்கின்றதே… அவர்களுக்கு போட்டியாக பட்டப்படிப்பை நானும் நடத்தினால், அந்தக் கல்லூரிகளுக்கு எப்படி வருமானம் கிடைக்கும்? அந்தக் கல்லூரி தாளாளர்களால் எப்படி பிழைக்க முடியும்?
இந்த விஷயம் பெற்றோர்களுக்கும் தெரியும். படிக்கும் மாணவர்களும் அறிவார்கள். ஆனாலும் மத்திய அரசு பல்கலைக்கழகத்தில் நேரடியாக படிப்பதென்றால் – அது 2 ஆண்டுகளோ அல்லது ஓராண்டோ – ஒரு ‘இது’தானே? அதுவும் மற்ற மாணவர்களுடன் தொடர்பற்ற, சமூகத்துடன் துண்டித்த அபூர்வமான படிப்பு என்னும்போது இதுமாதிரியான ‘சில்லரை’ விஷயங்களை கவனத்தில் கொள்ள முடியுமா?
இந்த மனநிலையைத்தான் எனது உப பாதுகாவலரான விஜயன் நன்றாக பயன்படுத்திக் கொள்கிறார். நான் வழங்கும் கோர்சுக்காக வசூலிக்கப்படும் கட்டணம் எவ்வளவு தெரியுமா? ரூபாய் 3 இலட்சம். இதில், ஒரு இலட்சம் விடுதிக் கட்டணத்துக்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ், உடனடியாக கப்பலில் வேலை, கைநிறைய சம்பளம்… என நடுத்தர வர்க்கத்தினர் கனவில் மிதப்பதால், சாதாரண டிப்ளமோ கோர்சுக்கு இவ்வளவு பெரிய தொகையா… அதுவும் அரசு பல்கலைக்கழகத்திலா என்று யோசித்து மூளைக்கு வேலை தராமல் இருக்கின்றனர். இந்த மயக்கம்தான் எனது உப பாதுகாவலர், அரசுக்கு செலுத்தும் மாணவர் கட்டணம் வேறு… மாணவர்களிடமிருந்து வசூலிக்கும் கட்டணம் வேறு… என்பதை அறிந்துக் கொள்ளாமலேயே இருக்கச் செய்கிறது.
உண்மை தெரிந்ததும் வயிறு எரிகிறதல்லவா..? இன்னும் விஷயங்கள் இருக்கின்றன. தலா 2 இலட்சம் ரூபாயை பயிற்சி வகுப்புக்காக எனது உப பாதுகாவலர் வசூலிக்கிறார் என்று முன்பே சொன்னேன். ஆனால், அதற்குறிய உள்கட்டமைப்பு வளாகத்தில் இல்லவே இல்லை. சுனாமிக்கு பிறகு, சில விதிமுறைகளை அரசாகிய எனது பெற்றோர் வகுத்திருக்கிறார்கள். ஆனால், அந்த விதிமுறைகள் அனைத்தும் எனது விஷயத்தில் மீறப்பட்டுள்ளன.
விடுதிக் கட்டணமாக ரூபாய் ஒரு இலட்சம் வசூலிக்கப்படுவதும் இதில் சேர்த்தி. அந்தப் பணம், எங்கு செல்கிறது என்பது அந்த பாலுவுக்கே வெளிச்சம். சினிமாவுக்காக செட்டிங்ஸ் போடுவார்கள் இல்லையா? அதுபோல்தான் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. வெறும் மரத் தடுப்புகள்தான். ஆஸ்பெஸ்டாஸ் தகடுகள்தான் கூரைகள். முன்பு லைலா புயல் வீசியபோது, கூரைகள் எங்கோ பறந்துவிட்டன. அலட்டிக் கொள்ளாமல் பறந்த கூரையை பொறிக்கி வந்து மீண்டும் பொருத்தினார்கள். முகாம்களில் அகதிகள் எப்படி அடைபட்டுக் கிடப்பார்கள் என்று தெரிந்துக் கொள்ள விரும்பினால், என்னைப் பார்க்க வாருங்கள். மாணவர்களை, விடுதிகளில் அப்படித்தான் எனது உப பாதுகாவலர் அடைத்து வைத்திருக்கிறார்.
நான்கு பேர் தங்கக் கூடிய அறையில் 10 பேரும், 2 பேர் தங்கக் கூடிய அறையில் 5 பேரும் தங்குகிறார்கள். உணவை வாயில் வைக்க முடியாது. தண்ணீரை ஒரு சொட்டுக் கூட குடிக்க முடியாது. தாகம் எடுத்தால், கோக்/பெப்சி எடு… கொண்டாடு…
இதையெல்லாம் சகித்துக் கொண்டுதான் அங்கு மாணவர்கள் வசிக்கிறார்கள்; படிக்கிறார்கள். காரணம், கப்பல் வேலை… கை நிறைய சம்பளம் என்ற கனவு.
இதையெல்லாம் மீறி, யாரோ எனது உப பாதுகாவலர் குறித்து புகார் அளித்துவிட்டார். கடமையை சரிவர செய்யும் சிபிஐ அதிகாரிகளும் டக் டக் என பூட்ஸ் ஒலிக்க, டையை தளர்த்தியபடி வந்து சேர்ந்தார்கள். இண்டு, இடுக்கு விடாமல் விஜயனின் இருப்பிடத்தை ஆராய்ந்தார்கள். இரண்டு கோடி ரூபாய் அளவுக்கு கணக்கு காட்டாத சொத்துக்களை கண்டுபிடித்தார்கள்.
அப்புறம்?
விழுப்புரம்தான். வேறென்ன? இந்த வழக்கு, அதுபாட்டுக்கு ‘பெண்டிங்கில்’ இருக்கிறது. நியாயமாகப் பார்த்தால், இந்தக் குற்றச்சாட்டுக்கு எனது உப பாதுகாவலரை சஸ்பென்ஷனில் வைத்திருக்க வேண்டும். ஆனால், மனிதர் இன்னும் வைஸ் சான்சிலர் ஆக நீடிக்கிறார். சட்டமும் தன் கடமையை செய்துக் கொண்டிருக்கிறது.
இதையெல்லாம் மோப்பம் பிடித்த புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில அமைப்பாளர் தோழர் கணேசன், விஜயனை எதிர்த்து வழக்கு தொடுத்திருக்கிறார். வைஸ் சான்சிலராக இருக்கவே தகுதியில்லாத ஒரு நபர், அதுவும் சிபிஐ குற்றம்சாட்டியிருக்கும் ஆள், எப்படி விசி ஆக நீடிக்கலாம் என்று கேட்டிருக்கிறார்.
இதற்குள் எனது உப பாதுகாவலரின் பதவிக் காலம் முடிந்துவிட்டது. அதை நீட்டிக்கச் சொல்லி விஜயன் வைத்த கோரிக்கையை நிராகரித்த இந்திய அரசாகிய எனது பெற்றோர், வேறொருவரை எனது உப பாதுகாவலராக நியமித்திருக்கிறார்கள். அதற்காக ஏதோ ’நீதி’ கிடைத்து விட்டதாக தப்புக் கணக்கு போட்டு விடாதீர்கள். எனது மாஜி உப பாதுகாவலரான விஜயனை, சென்னை கேம்பசின் இயக்குநராக புதிய பொறுப்பில் அமர வைத்திருக்கிறார்கள்! இதுதான் ’நீதி’யின் இலட்சணம்!!
சிம்கார்ட் ஒன்று போட்டால் சிக்னல் வேறொன்றா கிடைக்கும்? அதுபோல் இந்த சமூக அமைப்பில், என்னைப் போன்ற மத்திய அரசு பல்கலைக்கழகங்களும் இப்படித்தான் பல்லிளிக்கும். தனியார் நிறுவனங்கள் கொழிக்க அரசுத்துறை நிறுவனங்கள் சவலப் பிள்ளைகளாகத்தான் மாற்றப்படுவார்கள்.
‘என்னைப் பார்; யோகம் வரும்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட கழுதையின் படத்தை மாட்டினால் இலாபம் கிடைக்குமோ இல்லையோ, எனது படத்தை மாட்டி ‘என்னைப் பார்; யோகம் வரும்’ என்று எழுதி வைத்தால்,
இலாபம் கிடைக்கிறதோ இல்லையோ மக்களாகிய நீங்கள் மத்திய அரசாலும், தனியார் கல்வி முதலாளிகளாலும் மொட்டையடிக்கப்படுவது புரியும்.
-வினவு செய்தியாளர்
தகவல் உதவி:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி (RSYF), சென்னை.
எனது நன்பன் ஒருவன் 10 லட்சம் லோன் வாங்கி இந்த கோர்சை திருனெல்வேலியில் படித்தான். அவன் கதி அதோ கதி தான், லோன் கட்ட என்ன செய்ய? தெரியவில்லை. அந்த கல்லூரியில் இருந்து அவனுக்கு அழைப்பு வந்து ஒரு நாள் போனான். எதற்க்கு தெரியுமா? கேரளாவில் நடந்த கல்வி கன்காட்சியில் இக்கல்லூரி சார்பாக ரெப்ரெசென்ட் பன்ன வேன்டுமாம், அங்கு வரும் நடுத்தர பெற்றோரிடமும், +2 மானவர்களிடமும் அக்கல்லூரி பற்றியும், அங்கு படித்த இவர்கள் கப்பல்களில் வேலை செய்வதாகவும் புழுக வேன்டுமாம். சரி இவன் என்ன மயிருக்கு போகனும்னு கேக்கறீங்களா? போனால் தங்குமிடம், உனவு, சரக்கு மற்றும் ஆயிரம் ரூபாய் பனம். சரி எனக்கு இதெல்லாம் வேன்டாம் என்று சொன்னால்? இவன் படித்த சான்றிதழ்கள் கிடைக்காது என்று மிரட்டல்.
தெரிந்தே இன்னொரு மானவனை படுகுழியில் தள்ள வைக்கும் வேலைய செய்ய மனசாட்சி ஒப்புக்கொள்ளுமா நன்பர்களே? இதுதான் பெரும்பாலான கல்லூரிகளின் அயோக்கியத்தனம். இவங்கெல்லாம் சோறு தான் தின்பார்களா இல்லை பனக்கத்தைகளை தின்பார்களா?
தாய், தந்தை என்னவோ மத்திய அரசாக இருந்தாலும். உன்னை தனியார்மயம், தாராளமயம், என்ற கொள்ளைக்காக இஷ்டப்பட்டு. உன்னை வேண்டா, வெறுப்பாக பெற்றதால் உன்மேல் அக்கரையில்லை. சவலப்பிள்ளையாக வைத்துள்ளனர். பாலு, அவர் உறவினர்கள் கொள்ளையிடவும், சான்றிதழுக்காகவும் பெற்றமையால். உன் ஆரோக்கியம் போதும் என்று எண்ணுவார்கள் என்பதுதான் உண்மை.
கோழி முதல்ல வந்துச்சா முட்டை முதலில் வந்துச்சா என்ற பிரச்சனையை இன்னும் முடிக்கலையா பாஸ்
//சிம்கார்ட் ஒன்று போட்டால் சிக்னல் வேறொன்றா கிடைக்கும்? அதுபோல் இந்த சமூக அமைப்பில், என்னைப் போன்ற மத்திய அரசு பல்கலைக்கழகங்களும் இப்படித்தான் பல்லிளிக்கும். தனியார் நிறுவனங்கள் கொழிக்க அரசுத்துறை நிறுவனங்கள் சவலப் பிள்ளைகளாகத்தான் மாற்றப்படுவார்கள்.//
[…] https://www.vinavu.com/2012/01/09/indian-maritime-university-sucks/ […]
[…] முதல் பதிவு: வினவு […]
Not just the marine courses, the other courses also suck, equally, if not more. M.B.A and LL.M (M.L) are priced at 4 lakhs (one lakh per semester) with literally no facilities or faculties. Nobody in the university has an idea as to how to go about the course. Administration sucks. As you had mentioned the food and water supplied to the students are highly unhygienic. Students just don’t speak against the administration, for every time they approach the management they get a response worthy of a politician – “Yes, it will be addressed soon.” And as far as placements go, it is another sorry affair. After investing 4 lakhs, one is to be happy with a 10k per month salary. God save the hapless students.
பாராட்டுக்கள். சான்றிதழ் கூட கொடுக்க இயலாத நிலையில் தான் இருக்கிறது. இதுவரை ஒரு கான்வகேஷன் கூட நிகழ்த்தாத ஒரே மத்திய பல்கலை இதுவாகத்தான் இருகும். சமீபத்தில் பதிவாளர், தேர்வு கண்காணிப்பாளர் போன்ற பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்றிருந்தார்கள். அதிலும் குழறுபடி!