Monday, February 17, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கல்விகொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகள் தடவிக் கொடுக்கும் உயர் நீதிமன்றம்

கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகள் தடவிக் கொடுக்கும் உயர் நீதிமன்றம்

-

கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகள் தடவிக் கொடுக்கும் உயர் நீதிமன்றம்

நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்குப் பரிந்துரை செய்திருந்த கல்விக் கட்டணத்தின் மீது உயர் நீதிமன்றத்தின் ஒரு நபர் நீதிபதி விதித்திருந்த தடையை நீக்கி உயர் நீதிமன்ற ஆயம் தீர்ப்பளித்திருக்கிறது. இதன்படி பார்த்தால், தமிழகத்திலுள்ள 10,000- க்கும் மேற்பட்ட தனியார் மெட்ரிக் பள்ளிகள் தற்போதைக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்திற்கு மேல் ஒரு பைசாகூடக் கூடுதலாக வசூலிக்கக் கூடாது என அவ்வாயம் நேர்மறையான தீர்ப்பை அளித்திருக்க வேண்டும். ஆனால், உயர் நீதிமன்றமோ பாம்பும் சாகக் கூடாது; தடியும் நோகக்கூடாது என்ற உத்திப்படித் தனது தீர்ப்பை அளித்திருக்கிறது.

6,400 தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளன. இம்மேல்முறையீடுகளின் மீதான முடிவை நவம்பருக்குள் எடுக்கும்படி கோவிந்தராஜன் கமிட்டிக்கு உத்தரவிட்டிருக்கும் உயர் நீதிமன்றம், அதுவரை கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் பொறுத்துக் கொள்ளுங்கள் என இந்த 6,400 பள்ளிகளுக்கு அறிவுரை வழங்கவில்லை.

இதற்கு மாறாக, அந்த 6,400 தனியார் பள்ளிகளும் கடந்த கல்வியாண்டில் வசூலித்த கட்டணத்தையே நடப்புக் கல்வியாண்டிலும் வசூலித்துக் கொள்ளலாம் என அப்பள்ளிகளுக்குச் சலுகை அளிக்கப்பட்டிருக்கிறது. இப்படி வசூலிக்கப்படும் கட்டணம் கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயம் செய்த கட்டணத்தைவிட அதிகமாக இருந்தால் – குறைவாக எப்படியிருக்கும்? – அக்கூடுதல் தொகையைத் தனியாக வங்கிகளில் போட்டு வைக்க வேண்டும் என உத்திரவிட்டுள்ளது, உயர் நீதிமன்றம்.

கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யாத 4,000 பள்ளிகளும்கூட அக்கமிட்டி நிர்ணயம் செய்திருக்கும் கட்டணத்தைத்தான் வசூலிக்க வேண்டும் என இத்தீர்ப்புக் கட்டாயப்படுத்தவில்லை. மாறாக, அப்பள்ளிகளும் கூடுதலாக வசூலித்த கட்டணத்தைத் தனியாக வங்கிகளில் போட்டு வைக்க வேண்டும் என இத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

கோவிந்தராஜன் கமிட்டி ஒரு சிவில் நீதிமன்றத்திற்குரிய அதிகாரம் கொண்டதெனக் கூறப்படுகிறது. இக்கமிட்டியின் விதிகளின்படி தான் நிர்ணயித்த கட்டணத்திற்கு மேல் வசூல் வேட்டை நடத்தும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம்; அப்பள்ளிகளின் முதலாளிகளுக்கு ஏழாண்டு வரை சிறை தண்டனை அளிக்கலாம்.

வெளிப்படையாகவே கட்டணக் கொள்ளை நடத்தி வரும் கல்வி வியாபாரிகளுக்கு இத்தண்டனையை அளிக்க உயர் நீதிமன்றத்திற்கு மனது வரவில்லை. அதே சமயம் வசூலித்த கூடுதல் கட்டணத்தைப் பெற்றோர்களிடம் திருப்பிக் கொடுக்கச் சொல்லி உத்தரவிடவும் நீதிமன்றம் விரும்பவில்லை. நீதிமன்றத்தின் இந்தக் கருணை முடிந்த அளவிற்குக் கட்டணக் கொள்ளையை நடத்திக் கொள்ளும் துணிச்சலைப் பல பள்ளிகளுக்கு வழங்கிவிட்டது.

இவ்வழக்கில் உயர் நீதிமன்றம் நவம்பரில் இறுதித் தீர்ப்பு வழங்கிய பிறகு, பள்ளிகள் வசூலித்த கட்டணம் கூடுதலாக இருந்தால், அதனைப் பள்ளிகள் பெற்றோரிடம் திருப்பி வழங்கிவிடும் என நீதிபதிகள் நம்மை நம்பச் சொல்கிறார்கள். யானை வாயில் போன கரும்பு திரும்பி வருவது சாத்தியமென்றால், இதனையும் நாம் நம்பலாம்.

கூடுதலாக வசூலித்த கட்டணத்தைத் தனியாக வங்கிகளில் போட்டுவைக்க வேண்டும் என்ற பெயரில், கல்வி வியாபாரிகள் இக்கொள்ளையைப் புறக்கடை வழியாக அனுபவிக்கும் உரிமையை அளித்திருக்கிறது, உயர் நீதிமன்ற ஆயம். உயர் நீதிமன்றத்தின் இந்தக் கபடத்தனத்தையும் கூட்டுக் களவாணித்தனத்தையும் எதிர்த்துப் போராட வேண்டிய வேளையில் பெற்றோர்களோ உயர் நீதிமன்றம் தங்களின் வயிற்றில் பாலை வார்த்திருப்பதாகப் பிதற்றிக் கொண்டுள்ளனர்.

கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகள் தடவிக் கொடுக்கும் உயர் நீதிமன்றம்

கல்வி வியாபாரிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுப்பதற்காகத் தமிழ்நாடு பள்ளிக் கட்டண ஒழுங்குமுறைச் சட்டத்தைக் கொண்டுவந்து, அதன் அடிப்படையில் கோவிந்தராஜன் கமிட்டியை நிறுவியிருந்தாலும், தமிழக அரசின் நடைமுறை இப்பிரச்சினையில், “நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன், நீ அழுகிற மாதிரி அழு” என்பதாகத்தான் அமைந்துள்ளது.

டாஸ்மாக் ஊழியர்களுக்கு வார விடுமுறை அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உடனடியாக மேல்முறையீடு செய்த தமிழக அரசு, கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயம் செய்த கட்டண விகிதத்திற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மிகவும் தாமதமாகத்தான் மேல்முறையீடு செய்தது.

கோவிந்தராஜன் கமிட்டி நிரணயம் செய்த கட்டணங்களை உடனடியாக வெளியிடாமல் அமுக்கி வைத்திருந்ததன் மூலம், தனியார் பள்ளிகள் தமது விருப்பம்போல கட்டணக் கொள்ளையை நடத்தத் துணை நின்றது, தமிழக அரசு.

கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயம் செய்த கட்டண விகிதத்தை மூன்றாண்டுகளுக்கு மாற்ற முடியாது என அதனின் விதி கூறுகிறது. ஆனால், இக்கட்டண விகிதத்தை எதிர்த்துக் கூச்சல் போட்ட கல்வி வியாபாரிகள் முதலமைச்சரைச் சந்திக்கிறார்கள்; அங்கு என்ன பேரம் நடந்ததோ, உடனடியாக அவர்களை மேல்முறையீடு செய்ய அனுமதிக்கிறது, தமிழக அரசு; அம்மேல்முறையீட்டின் மீதான முடிவை நவம்பருக்குள் எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இப்படியாக அவ்விதி செல்லாக்காசாக்கப்பட்டது.

நடப்புக் கல்வியாண்டு தொடங்கும் முன்பே தனியார் பள்ளிகள் கட்டணக் கொள்ளையைத் தொடங்கி விட்டன என்பதும், கூடுதலாக வசூலிக்கும் பணத்திற்கு பள்ளிகள் எந்த ரசீதும் தருவதில்லை என்பதும், கூடுதல் கட்டணத்தைச் செலுத்த முடியாத மாணவர்களைத் தனியார் பள்ளிகள் மாற்றுச் சான்றிதழ் கொடுத்துச் சட்டவிரோதமாகப் பள்ளியிலிருந்து நீக்கி விடுகின்றன என்பதும் தமிழக அரசின் கண் முன்னேதான் நடந்து வருகின்றன. ஆனால், தமிழக அரசோ பள்ளிகள் மீது பெற்றோர் எந்தப் புகாரையும் தெரிவிக்கவில்லை என்ற காரணத்தைக் கூறியே, தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்து வருகிறது.

தமிழக அரசின் இந்த அனுசரணையான போக்கு ஒருபுறமிருக்க, தமிழகத்திலுள்ள பெரும்பாலான மெட்ரிக் பள்ளிகள் சிறுபான்மையினரின் பெயராலும், டிரஸ்டுகளின் பெயராலும்தான் நடத்தப்படுகின்றன. இப்படிச் செயல்படும் பள்ளிகள் தங்களின் பணத்தேவைக்குப் புரவலர்களைத்தான் அணுக வேண்டுமேயொழிய, கட்டணம் என்ற பெயரில் பெற்றோர்களைக் கொள்ளையடிக்க அனுமதிக்கக் கூடாது. ஆனால், தமிழக அரசு அமைத்த கோவிந்தராஜன் கமிட்டியோ டிரஸ்டுகளின் பெயரால் நடத்தப்படும் பள்ளிகளும் ஆண்டொன்றுக்குக் குறைந்தபட்சம் 15 சதவீதம் இலாபத்தைப் பெறும்படிதான் கட்டண விகிதங்களை நிர்ணயம் செய்திருக்கிறது. மேலும், பேருந்துக் கட்டணம் போன்ற பிற வழிகளிலும் பெற்றோர்களைக் கொள்ளையடிப்பதற்கும் அப்பள்ளிகளுக்கு அனுமதி அளித்திருக் கிறது.

விபச்சாரத்தை ஒழிக்க முடியாது; அதனைச் சட்டபூர்வமாக்குவதுதான் மாற்று வழி என்பது போல, தனியார் பள்ளிகள் நடத்திவந்த கட்டணக் கொள்ளை யைச் சட்டபூர்வமாக்கியதுதான் தமிழக அரசும் கோவிந் தராஜன் கமிட்டியும் செய்திருக்கும் ‘சாதனை’.

கல்வி தனியார்மயமாக்கப்படுவதை எதிர்த்துப் போராடுவதன் மூலம்தான் இக்கட்டணக் கொள்ளையை ஒழித்துக்கட்ட முடியும்.

ஆனால், ஆங்கிலக் கல்வி மோகத்தால் தனியார் மெட்ரிக் பள்ளிகளைப் புறக்கணிக்க விரும்பாத பெற்றோர்கள், அக்கல்வி வியாபாரிகள் தர்மகர்த்தாக்களைப் போல நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். அப்படி அவர்கள் நடக்காதபட்சத்தில் அரசும் நீதிமன்றமும் தலையிட்டு அவர்களுக்குக் கடிவாளம் போட வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். இது, ஆடு ஓநாயிடம் நீதியைக் கேட்கும் புத்திசாலித்தனம் போன்றது.

________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர், 2010
________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகள் தடவிக் கொடுக்கும் உயர் நீதிமன்றம்…

    விபச்சாரத்தை ஒழிக்க முடியாது; அதனைச் சட்டபூர்வமாக்குவதுதான் மாற்று வழி என்பது போல, தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைச் சட்டபூர்வமாக்கியதுதான் தமிழக அரசின் சாதனை…

  2. ஆங்கிலக் கல்வி மோகத்தால் தனியார் மெட்ரிக் பள்ளிகளைப் புறக்கணிக்க விரும்பாத பெற்றோர்கள், அக்கல்வி வியாபாரிகள் தர்மகர்த்தாக்களைப் போல நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்

    மக்களே பின்னீட்டீங்க………….

  3. ஆங்கிலக் கல்வி மோகத்தால் தனியார் மெட்ரிக் பள்ளிகளைப் புறக்கணிக்க விரும்பாத பெற்றோர்கள், அக்கல்வி வியாபாரிகள் தர்மகர்த்தாக்களைப் போல நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்//

    என்னங்க வினவு மக்கள்மீதே பழியைப்போட்டுவிட்டீர்கள்.ஆங்கில படிப்பு அதை சுற்றியே வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இருக்கிற நிலையில் ஆங்கில கல்வி எப்படி தவறு.தமிழ் மொழியில்பேசவேண்டும்.தமிழ் கட்டாயம் பட்டமேற்படிப்பு வரை படிக்கவேண்டும் என்று வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளட்டுமே.ஆனால் ஆங்கில கல்வியை தவறு என்று சொல்வது சரியாக தோன்றவில்லை. தரமான கல்வியை அரசாங்கம் தந்தால் ஏன் மக்கள் தனியார் கல்வியை நாடப்போறார்கள்.முதலாளித்துவம் திட்டம் போட்டு அரசை ஊழல் படுத்தி தனது அதிகாரத்துக்குள் வைத்துக்கொண்டு செயல்படும்பொழுது,கம்யுனிஸ்ட்டுகள் முதலாளித்துவத்தின் திருட்டு,கொள்ளைதனங்களை அம்பலப்படுத்துவதைவிட்டு,மக்களின் மீது பழிப்போடுவது தவறுதானே.

    • நந்தன், கட்டுரையின் தலைப்பிலிருந்து உள்ளடக்கம் வரை அரசையும், உயர்நீதிமன்றத்தையும் கூர்மையாக சாடியிருப்பது உங்களுக்கு தென்படவில்லையா? தனியார் மெட்ரிக் பள்ளியை புறக்கணிக்க விரும்பாத பெற்றோர்கள் அக்கல்வி வியாபாரிகள் தர்மகர்த்தாக்களைப் போல நடந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறார்களா, இல்ல இக்கொள்ளைக்கு எதிராக போராட வேண்டும் என விரும்புகிறார்களா? எது உண்மை?

      • மணிகண்டன்//

        அரசையும்,உயர்நீதி மன்றத்தையும் சாடி இருக்கிறார்கள்.அதைப்படிக்கும்போதே தெரியாதங்க.நான் சொல்வது மக்களை குறைக்கூறுவது.அதாவது தனியார் பள்ளிமுதல்வர்களை தர்மக்கர்தாக்கள் போல நடக்கவேண்டும் என்று சொல்வதுதான்.நம் இந்தியா அரை நிலப்பிரபுத்துவம்,முதலாளித்துவம்,காலனி இப்படி இருக்கிற சூழலில் மக்களுக்கு சிந்தனை எப்படி இருக்கும்?என்ன கலாச்சாரம்,என்ன பண்பாடு இருக்கும்? எல்லாம் ஆளும்வர்க்க சிந்தனைதான் எல்லாவற்றிலும் இருக்கும்போது,மக்களை குறைக்கூறுவது ஏற்க்கக்கூடியதாக இல்லை.புராதான பொதுயுடைமை சமுகத்திலிருந்து முதலாளித்துவம் வரை மக்கள் அந்த அந்த காலக்கட்டதிற்கு தகுந்தார்போல தான் எந்த ஆளும் நிலை இருந்ததோ அதற்கான சிந்தனைகளும்,அடிமைத்தனமும் சமுதாயத்தில் இருந்தது.அதற்குள்ளேதான் போராட்டமும் இருந்தது.ஆனால் சமுகமாற்றத்திலும்,ஆட்சிகள்மாற்றத்திலும்,போராட்டத்திலும், யாரும் மக்களை குறை சொல்லவில்லை.மக்கள் அப்படிதான் இருப்பார்கள்.இருந்தார்கள்,இருக்கிறார்கள்.ஒன்றுக்கு எதிரான போராட்டத்தில் ஆளும்வர்க்கங்களின் அதிகார,கொள்ளை,திருட்டுதனத்தை அம்பலப்படுதி மக்களை ஐக்கியப்படுத்தியும்தான் போரடவேண்டும்.அதை விடுத்துமக்களின்மீது குறைசொல்வது ஏற்கக்கூடியதாக இல்லை.இதற்கு முன் நடந்த சமுகமாற்றங்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்டவர்களுக்காகதான் நடந்தது.ஆனால் கம்யுனிஸ்டுகளின் போராட்டம் அனைத்து மக்களின் விடுதலையை குறிப்பது.இங்கு மக்கள்தான் கதாநயகர்கள்.மக்கள்தான் எல்லாம்.மக்களுக்காகதான் கம்யுனிஸ்ட்டுகள்.
        ஆதலால் மக்களின்மீது குறை சொல்வது தவறு என்று எனக்கு தோன்றுகிறது.

    • //முதலாளித்துவம் திட்டம் போட்டு அரசை ஊழல் படுத்தி தனது அதிகாரத்துக்குள் வைத்துக்கொண்டு செயல்படும்பொழுது,//

      Is it so ? then how is govt schooling in US and Europe maintained in very high standards and the majority of the students study in govt schools in those ‘capitalisitic’ nations ? and why is corruption levels lowest in Scandinavian nations like Finland, Sweden which are basically ‘capitalisitic’ in nature ?

  4. முதலாளித்துவம் திட்டம் போட்டு அரசை ஊழல் படுத்தி தனது அதிகாரத்துக்குள் வைத்துக்கொண்டு செயல்படும்பொழுது,கம்யுனிஸ்ட்டுகள் முதலாளித்துவத்தின் திருட்டு,கொள்ளைதனங்களை அம்பலப்படுத்துவதைவிட்டு,மக்களின் மீது பழிப்போடுவது தவறுதானே

  5. நந்தன், ஒரு சமூகத்தில் ஆளுகின்ற கருத்துக்கள் ஆளும் வர்க்கத்தின் கருத்துக்கள்தான். இந்த ஆளும் வர்க்க சிந்தனைகள் மக்கள் நலனுக்கு எதிரானதே. ஆனாலும் மக்களின் சிந்தனைகள் ஆளும் வர்க்க சிந்தனைகளாகவே இருக்கின்றன. அப்படியிருக்கும்போது அம்மக்கள் ஆளும் வர்க்கத்திற்கு எதிராக எப்படி போராட முடியும்? மக்கள்தான் கதாநாயகர்கள். மொத்த சமூக இயக்கத்தின் உந்து சகதியும் அவர்களே. ஆனால் ஆளும் வர்க்க சூழ்ச்சியால் மக்கள் இந்த உண்மையை உணராமல் இருக்கிறார்கள. அதாவது தனியார் கல்வி வியாபாரிகள் பெற்றோர்களின் நலனை மனதிற்கொண்டு ‘சேவை’ புரிகிறார்களா? அல்லது தனது லாப வெறியை மையமாகக்கொண்டு தொழில் நடத்துகிறார்களா? அவர்களிடம் போய் கருணையை எதிர்பார்க்க முடியுமா? அப்படி எதிர்பார்ப்பது ஆளும் வர்க்க சிந்தனையா? பாட்டாளி வர்க்க சிந்தனையா ? அப்படி எதிர்பார்த்தால் எபாபடி போராட முடியும்? இந்த சமூகத்தை மக்கள்தான் மாற்றப்போகிறார்கள். கம்யூனிஸ்ட்டுகளும் அவர்களைத்தான் நம்பியிருக்கிறார்கள். கம்யூனிஸ்ட்டுகள் விதை மாதிரி. மக்கள் நிலம் மாதிரி. இரண்டும் சேர்ந்தால்தால் பயிரை உருவாக்க முடியும். அந்த வகையில்தான் அப்பெற்றோர்களின் ஆளும் வர்க்க கருத்தை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது, போராடத் தூண்டியிருக்கிறது கட்டுரை.

    • மணிகண்டன்//
      நீங்கள் கூறுவதை ஒத்துக்கொள்கிறேன்.ஆனால் கட்டுரையின் கடைசி பத்தி இல்லாமல் முடித்திருந்தால் நன்றாக இருக்கும்.அந்த கடைசி பத்தி,மேலே சொன்ன எல்லா வார்த்தைகளையும் மறைத்து மக்களை பிச்சைகாரர்கள் போல மாற்றி எதிர்ப்பு கருத்து ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க