இந்தியாவில் இருக்கும் உயர்கல்வி நிறுவனங்களை செம்மைப்படுத்த வேண்டும், அது பன்னாட்டு கல்வி நிறுவனங்களினால் மட்டுமே சாத்தியம் என்ற முழக்கத்தோடு எஞ்சியிருக்கும் அரசு கல்வி நிறுவனங்களையும் அடியோடொழிக்க, கல்விக்கான மசோதாக்களை நமக்குத் தெரியாமல் அமல்படுத்தப் போவதை அம்பலப்படுத்தவே இக்கட்டுரை.
மைய அரசின் நேரடிக் கண்காணிப்பால் இயக்கப்படும் கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், மாநில அரசால் நடத்தப்படும் அறிவியல், கலை, பொறியியல், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அவற்றின் ஆராய்ச்சி நிறுவனங்கள், சுயநிதிக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி பெற்ற கல்லூரிகள், தனியார் ஆராய்ச்சி மையங்கள், பாலிடெக்னிக்குகள், தொலைதூரக் கல்வி நிறுவனங்கள், திறந்த நிலைப் பல்கலைக் கழகங்கள் போன்ற அனைத்தும் உயர்கல்வி நிறுவனங்கள் என்கிற வரையறைக்குள் அடங்கும்.
47க்குப் பிந்தைய இந்தியாவில் சில நூறு உயர்கல்வி நிறுவனங்களே இருந்த நிலையில் கடந்த பத்து ஆண்டுகளில் கல்வி தனியார்மயமானதன் முலமாக அவற்றின் எண்ணிக்கை புற்றீசல்களைப் போல முளைத்து ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் வளர்ந்துள்ளது. மத்திய மாநில அரசுகளால் நடத்தப்படும் பல்கலைக் கழகங்களே தரங்கெட்டுப் போயுள்ள நிலையில், மக்களைக் கொள்ளையடிப்பதற்காகவே பல தனியார் உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுமதியளித்து, அனைவருக்கும் இலவசக் கல்வியளித்தல் என்ற தன் அடிப்படைக் கடமையிலிருந்து இவ்வரசு விலகியுள்ளதை அதன் நடைமுறையிலிருந்து நாமறிவோம்.
இதற்கெல்லாம் மேலாக உலக வர்த்தகக் கழகம் மற்றும் உலக வங்கியின் ஆணையின் பேரில் கடந்த ஆண்டில் (2011) உயர்கல்விக்கான பல சட்ட முன்வரைவுகளைக் கொண்டுவந்துள்ளது மைய அரசு. அவற்றில் புத்தாக்கத்திற்கான பல்கலைக்கழக சட்டமுன்வரைவு – 2010 (Universities for innovations Bill – 2010), கல்வித்தீர்ப்பாயங்களுக்கான சட்டமுன்வரைவு (Educational tribunals Bill – 2010), பன்னாட்டுக் கல்விநிறுவனங்களுக்கான சட்டமுன்வரைவு (Foreign educational institutions bill – 2010) அகிய மூன்று உட்பட மொத்தம் 16 வகையான உயர்கல்விச் சட்டமுன்வரைவுகளைக் கொண்டுவந்துள்ளது. குறிப்பாக மேற்சொன்ன மூன்று சட்டமுன்வரைவுகள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இங்கு வந்து சந்தை போடவும், அதன் மூலம் அமைக்கப் பெறும் கல்வித் தீர்ப்பாயங்களுக்கு நிகரில்லா அதிகாரம் கொடுக்கவும் ஒட்டுமொத்தமாக உயர்கல்வியில் மாணவர்களை முடமாக்கப் பார்க்கவும் வந்துள்ள திட்டங்களாகும்.
உலக அளவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களின் கிளைகளை இங்கு கொண்டு வந்து நமது உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களைப் புத்துயிரூட்டலாம் மேலும் இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களை உலகத்தரத்திற்கு கொண்டுவரலாம், என்ற நோக்கத்திற்காக, 2010 ஆம் ஆண்டின் மத்தியில் புத்தாக்கத்திற்கான பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட வேண்டும் என்பதை வரைவுத்திட்டத்தின் மூலமாக இச்சட்டமுன்வரைவுகளை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை கொண்டு வந்தது. இவ்வகையான பல்கலைக்கழகங்கள் இந்தியாவை அறிவுத் துறைக்கான மையமாக மாற்ற வழிவகுக்கும் என்றும் மத்திய மாநில பல்கலைக் கழகங்களில் தனித் தன்மையான சிறப்புத்துறைகள் ஆரம்பிக்கப்பட்டு இந்தியாவில் காணப்படும் குறிப்பிட்ட சமூகப் பிரச்சினைகளுக்காக ஆராய்ச்சிகள் மேம்படுத்தப்படும் எனவும் இவ்வறிக்கைகள் கூறுகின்றன.
காட் ஒப்பந்தத்தின் மூலம் வரி மற்றும் வணிகத்துறையில் நாட்டைக் கொள்ளையடித்துக்கொண்டிருக்கும் பன்னாட்டுக் கம்பெனிகள், வணிகம் தொடர்பான சேவைத்துறைகளின் பொது ஒப்பந்தத்தின் மூலம் (GATS – General agreement of trade on services) சேவைத்துறகளான தொலைபேசி, மின்சாரம், வங்கி, காப்பீட்டு நிறுவனம், மருத்துவம், ஆராய்ச்சி, நீதிமன்றங்கள், ஊடகங்கள், கல்வி போன்ற அனைத்திலும் தனது தனியார்மயமெனும் ஆக்டோபஸ் கரங்களை நீட்டி காவு வாங்க ஆரம்பித்துள்ளது. அதன் ஒரு நீட்சியாகவே இந்த சட்ட முன்வரைவுகள் உயர்கல்வி நிறுவனங்களிலும் தனது அமெரிக்க விசுவாசத்தின் மூலம் பல பன்னாட்டு உயர்கல்வி நிறுவனங்களை கல்லா கட்ட கூவி அழைக்கின்றன. கரும்பு தின்னக் கூலியா என்பது போல வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களும் தனது கவர்ச்சி விளம்பரங்கள் மூலம் அனைவரையும் அடிமையாக்க திட்டம் தீட்டிக்கொண்டிருக்கின்றன.
அந்நிய நேரடி முதலீட்டில் ஆரம்பிக்கப்படும் இவை, மாணவர்களைப் பல்கலைக்கழகங்களில் சேர்ப்பதிலிருந்து இப்பல்கலைக்கழகங்களில் சேர அவர்கள் கட்டவேண்டிய கட்டணம், செமஸ்டர் தேர்வுக்கான கட்டணம்,தேவையான துறைகளை ஆரம்பிப்பது, புதிய பாடத்திட்டங்களை அமைப்பது, ஆசிரியர்களை நியமிப்பது, நிர்வாகத்தின் மற்ற வேலைகளுக்கு ஆட்களை நியமிப்பது, அவர்களின் சம்பளம், அவர்களுக்குள் எழும் பிரச்சினைகளைத் தீர்ப்பது போன்ற அனைத்தையும் குறிப்பிட்ட பன்னாட்டுப் பல்கலைக்கழகங்களே கவனித்துக்கொள்வதற்கான முழு அதிகாரத்தையும் இச்சட்ட முன்வரைவு கொடுக்கிறது. மேலும் இக்கல்வி நிறுவனங்களில் செய்யப்படும் ஆய்வுகளும், கண்டுபிடிப்புகளுக்காகப் பெறும் காப்புரிமையும் அந்தந்த நாட்டைச் சேர்ந்த பல்கலைகழகங்களே உரிமை கோரும் என்பது உட்சபட்சம்.
ஏற்கனவே எய்ம்ஸ், ஐ.ஐ.டிக்கள் போன்ற மத்தியக் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை அமுல்படுத்தாமல் தனது ஆதிக்க சாதி மனபான்மையை வெட்ட வெளிச்சமாக்கிக் காட்டிய இவ்வரசு, தனியார் கல்வி நிறுவனங்கள், நிகர்நிலைப்பல்களைக் கழகங்கள், தன்னாட்சி கல்வி நிறுவனங்கள் ஆரம்பிக்க அனுமதியளித்ததன் மூலம் அங்கும் இடஒதுக்கீட்டை இல்லாமல் செய்தது. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் அக்கல்விநிறுவனங்களில் நுழையாத அளவிற்குச் சவக்குழிவெட்டி நவீனத்தீண்டாமையைக் கடைபிடித்து வருகிற நிலையில், அது மேலும் புற்றுநோய் போல இப்புதியப் பல்கலைக் கழகங்களிலும் பரவவிருக்கிறது.
தற்போதைய உயர் கல்வி நிறுவனங்களில் இருப்பது போல மாணவர்களுக்கிடையில் தேர்தலோ, மாணக்க உறுப்பினர்களை முக்கிய முடிவெடுக்கும் சிண்டிகேட் கூட்டங்களில் நுழையவோ இப்பல்கலைக்கழகங்களில் அனுமதியில்லை. இவ்வாறு ஆரம்பிக்கப்படும் புத்தாக்கப் பல்கலைக்கழகங்கள் தங்கள் வரவு செலவு கணக்குகளை யாரிடமும் காட்டவேண்டிய அவசியம் இல்லை, இன்னும் சொல்லப் போனால் இப்பல்கலைக் கழகங்களை நடத்துபவர்கள் மீது ஏதேனும் ஊழல் நடந்திருக்கிறது போன்ற நம்பகத்தகுந்த தகவல்கள் வந்தால் கூட அதை சி.பி.ஐ அல்லது மத்திய கணக்குத் தணிக்கை அலுவலகம் (CAG) தலையிட்டு அதன் நிதி விவகாரங்களில் தலையிடும் அதிகாரம் கிஞ்சித்தும் இல்லை.
கல்விக்கானத்தீர்ப்பாயச் சட்டமுன்வரைவு – 2010, இது மாநிலத் தீர்ப்பாயம், மற்றும் தேசியத் தீர்ப்பாயம் என இரண்டு படிநிலைகளைக் கொண்டுள்ளது, இவை முறையே மூன்று மற்றும் ஆறு பேர் கொண்ட கமிட்டியை உள்ளடக்கியதாகும். பல்கலைக்கழகத்தின் பங்குதாரர்களான மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் போன்றவர்களுக்குள் எழும் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்த்து வைக்கவும், இத்தீர்ப்பாயம் குற்றவாளி என்று கருதுபவர்களுக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனை அல்லது 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து தண்டிக்கவும் வரைமுறையில்லா அதிகாரத்தைக் கொடுக்கிறது இம்மசோதா. தீர்ப்பாயங்களின் முடிவே இறுதியானது, வேண்டுமானால் சிறப்பு அனுமதியுடன் உச்சநீதிமன்றம் அனுகலாம்.
இவ்வாறு பல்வேறு சட்டங்களின் மூலம் அனைவரது உரிமைகளையும் சுதந்திரத்தையும் பறித்துள்ள அரசு, இத்தீர்ப்பாயத்தின் மூலம் குறைந்தபட்சம் எஞ்சியிருக்கும் ஜனநாயகத்தையும் பறித்துக்கொண்டு, நம்மை அம்மணமாக்கும் நிலையும் வரப்போகிறது. இச்சட்டமுன்வரைவைக் கொண்டுவரபோவதாக பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டு பல்வேறு கட்சியினரையும் கூட்டி கருத்துக்கணிப்பு கேட்டுள்ள நிலையில் சி.பி.ஐ, சி.பி.எம் போன்ற போலி கம்யூனிஸ்டுகள் உட்பட எஸ்.யு.சி.ஐ, தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் என அனைத்துக் கட்சிகளும் இப்பகாசுர 16 சட்டமுன்வரைவுகளை எதிர்க்கவோ, அதைப் பற்றி வாய்த்திறக்கவோ, குறைந்தபட்சம் தன்னுடைய கட்சித் தொண்டர்கள் அல்லது கீழ்க்கமிட்டிகுக் கூட தெரிவிக்காதது ஆச்சரியப்படத்தக்கதல்ல.
உயர்கல்வி விஷயத்தில் கொண்டுவரப் போகிற இந்த சட்டமுன்வரைவுகள் மூலம் கடைசியாக மீதமிருக்கும் அரசுக் கல்லூரிகளையும் ஒழித்துவிட்டு பணம் இருப்பவர்கள் மட்டுமே இனி கல்வி கற்கலாம் என்கிற நிலை இன்னும் கூடிய விரைவில் வரப்போகிறது என்பதுடன் இடஒதுகீட்டை முற்றிலுமாக ஒழிப்பது, கோடிகளில் கொள்ளையடிப்பது, தீர்ப்பாயங்களின் ஏகபோக அதிகாரம், மிச்ச சொச்ச சமூக நீதியை ஒழிப்பது போன்ற அபாயங்களும் நிகழவுள்ளன. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்கிற பெயரில் நம்மை கொஞ்சம் கொஞ்சமாக அடிமையாக்கி வரும் நிலையில், உயர்கல்விகான இச்சட்ட முன்வரைவுகள் சேவைத்துறையில் சோரம் போக வழிவகுப்பதுடன், நமது அறிவு வளத்தையும் திருடிக்கொண்டு போகப்போவது, வெகுதொலைவில் இல்லை. மேலைநாட்டு கலாச்சாரங்களையும், பழக்கவழக்கங்களையும் பரப்புவதன் மூலம் இன்று இருக்கும் அந்நிய மோகத்தை மேலும் வெறியாக்கி வளர்க்கவும், மாணவர்களை அதிக விலைபோகக்கூடிய பண்டமாக மாற்றவும் இறுதியில் கிஞ்சித்தும் சமூக அக்கறை இல்லாத, முடமாக்கப்பட்ட சமூகமாக மாற்றும் அபாயமும் உள்ளது.
தீவிர நிதி நெருக்கடியால் பாதிக்கப்படுள்ள அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் தங்கள் கல்விச் சந்தையைத் திறக்கவே இச்சட்டத்தை இங்கு அமுல் படுத்த நெருக்கடியைக் கொடுக்கின்றன என்பதுதான் நிதர்சனம். ஆனால் ஏதோ நமது குழந்தைகளின் எதிர்காலத்தில் பெரிய அக்கறை இருப்பது போலவும் அதற்காகத்தான் இக்கழிசடை மசோதாக்கள் வரவிருப்பதாகவும் ஒரு போலி பிம்பத்தை இவ்வரசு உருவாக்கி வருகிறது. இந்த அபாயச் சங்கைக் குறிப்புணர்ந்து போராடப் போகிறோமா அல்லது மேலும் இருளில் மூழ்கிச் சாகப்போகிறோமா என்பது நமது கையில்தான் உள்ளது.
______________________________________________________________
–குட்டக்கொழப்பி
______________________________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- இன்ட்லியில் வினவை தொடர
- கூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]
தொடர்புடைய பதிவுகள்
எதிர்பார்த்தது தான்.. நாடு முழுவதும் தனியார் மயமாய் ஆகும் வரை ஓய போவதில்லை காங்கிரஸ் அரசு…
//இந்திய உயர்கல்வி நிறுவனங்களை செம்மைப்படுத்த பன்னாட்டு கல்வி நிறுவனங்களினால் மட்டுமே சாத்தியம் என எஞ்சியிருக்கும் அரசு கல்வி நிறுவனங்களையும் அடியோடொழிக்க, கல்விக்கான மசோதாக்களை நமக்குத் தெரியாமல் அமல்படுத்தப் போவதை அம்பலப்படுத்தவே இக்கட்டுரை//
(சமச்)சீரான சீரிய சிந்தனை தரும் சமத்துவ உலகத்தரம்வாய்ந்த கல்விபெறாமல் தமிழ்மதவெறி தமிழ்தேசியவாத “கிணற்றுத் தவளைக்கூட்டம்” உருவாக்க திட்டமிடும் நண்பா உன் பம்மாத்து பலிக்காமல் பலியாயாகக்கடவாய்…,
ethai munvaiththu ithanai inke peesuriingka nu therinjikkalaamaa?.
ஒன்னும் புரியலேயே அப்பாவி. கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க.
பள்ளி, கல்லூரி என அனைத்தும் தனியார் முதலாளிகளிடம் தாரைவார்க்கப்பட்டுவிட்டன.தற்போது பன்னாட்டு முதலாளிகளும் வந்து கொண்டு இருகிறார்கள்.மக்கள் போராட வேண்டிய தருணம் இது.சிறந்த பதிவு.
சிபிஎம் இவற்றை தொடர்ந்து எதிர்த்துள்ளது.கல்லூரி/பல்கலை ஆசிரியர் சங்கங்கள், இடதுசாரி மாணவர் அமைப்புகள் எதிர்த்துள்ளன.இவற்றை எதிர்ப்பவர்கள் உங்களிடம் வந்து முன் அனுமதி பெறாததால் உங்களுக்கு தெரியவில்லை போதும்.பிறர்தான் ஒன்றும் செய்யவில்லை என்று குறை கூறும் நீங்கள் என்ன செய்ய்ப் போகிறீர்கள்.இதுவரை என்ன செய்தீர்கள்.குட்டைகுழப்பி- சரியான பெயர்தான் தாங்கள் ஒன்றும் செய்யாவிட்டாலும் வாய்சவடாலுக்கு குறைச்சல் இல்லாத, குட்டை குழப்புவதே புரட்சி என்று திரியும் அமைப்பினை சேர்ந்தவர் இந்தப் பெயரில் எழுதுவது பொருத்தமாக உள்ளது.
எல்லாமே வந்து கொண்டுகிட்டு இருக்கு. இனி இது
வேறயா?வாங்க வந்து கொல்லுாங்க,
இதை ஒருபொழுதும் அனுமதிக்ககூடாது.
இது என்ன புது கொள்(ளை)கையோ! கல்வியையும் முதலீடாக மாற்றிவிட்டர்களே!!!
//மத்திய மாநில அரசுகளால் நடத்தப்படும் பல்கலைக் கழகங்களே தரங்கெட்டுப் போயுள்ள நிலையில், ////
எப்படி இவை இப்படி சீரழிந்தன ? ஏதாவது ‘முதலாளித்துவ’ சதி தான் காரணமா ? அல்லது நிரந்தர வேலை வாய்பு, சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டு சதியா ? முதலில் இந்த விசியத்தை ஆழமாக அலச முயல்க. இதை சரியாக ‘புரிந்து’ கொள்ளாத வரை உங்களால் சரியான ‘தீர்வை’ சொல்லவே முடியாது. தனியார்மயத்திற்க்கு ஏன் பெரிய எதிர்பில்லை என்பதையும் புரிந்து கொள்ள முடியாது.
///இச்சட்டமுன்வரைவைக் கொண்டுவரபோவதாக பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டு பல்வேறு கட்சியினரையும் கூட்டி கருத்துக்கணிப்பு கேட்டுள்ள நிலையில் சி.பி.ஐ, சி.பி.எம் போன்ற போலி கம்யூனிஸ்டுகள் உட்பட எஸ்.யு.சி.ஐ, தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் என அனைத்துக் கட்சிகளும் இப்பகாசுர 16 சட்டமுன்வரைவுகளை எதிர்க்கவோ, அதைப் பற்றி வாய்த்திறக்கவோ, குறைந்தபட்சம் தன்னுடைய கட்சித் தொண்டர்கள் அல்லது கீழ்க்கமிட்டிகுக் கூட தெரிவிக்காதது ஆச்சரியப்படத்தக்கதல்ல.////
இவர்கள் அனைவரும் உங்களை விட ‘புத்திசாலிகள்’ மற்றும் யதார்த்தம் புரிந்தவர்கள் என்றே தோன்றுகிறது. இவர்கள் அனைவரும் மடையர்கள் அல்லது அயோக்கியர்கள், வினவு மட்டும் தான் சரியான பார்வை உடையது என்பதை ஏற்க்க லாஜிக் தடுக்கிறது !!! :)))
அமெரிக்காவில் பணி புரியும் (தமிழகத்தை சேர்ந்த) பேராசிரியர் ஒருவர் சென்னையில் ஒரு மிக தரமான உயர்கல்வி நிறுவனத்தை துவங்கி நடத்துகிறார். Great Lakes Institute of Management, Chennai. http://greatlakes.edu.in/ இதே போல் வெளிநாட்டு பல்கலைகழக நிறுவனங்களும் வரபோக்கின்றன. மிக பயன் கிடைக்க போகிறது.
உங்க பேச்சை கேட்டு நல்ல ‘சந்தர்ப்பங்களை’ இழக்க எந்த மடையனும் தயாரில்லை. ஆனால் இது ஜனனாயக நாடு தான். உங்க ‘பிரச்சார்த்தை’ தொடர தடையில்லை. சாத்தனை பற்றி கூட சில கிருஷ்துவ பிரச்சார குழுக்குகள் தொடர் பிரச்சாரம் செய்கின்றன. அதை செய்ய தடையில்லை. அதே போல் நீங்களும் தொடர்ந்து ‘முழங்கி’க்கிட்டே இருங்க. best of luck. :))))
//சி.பி.ஐ, சி.பி.எம் போன்ற போலி கம்யூனிஸ்டுகள் உட்பட எஸ்.யு.சி.ஐ, தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் என அனைத்துக் கட்சிகளும் இப்பகாசுர 16 சட்டமுன்வரைவுகளை எதிர்க்கவோ, அதைப் பற்றி வாய்த்திறக்கவோ, குறைந்தபட்சம் தன்னுடைய கட்சித் தொண்டர்கள் அல்லது கீழ்க்கமிட்டிகுக் கூட தெரிவிக்காதது ஆச்சரியப்படத்தக்கதல்ல.//
கட்டுரையின் மையக்கருத்தினை ஆதரிக்கும் அதே வேளையில், எல்லாக்கட்டுரைகளைப்போலவும் வழக்கம்போல சி.பி.எம் மீது சேற்றை வாரி இறைத்திருப்பதை கண்டிக்கவும் செய்கிறேன்.
இடதுசாரிகள் வெளியிலிருந்து ஆதரவளித்துவந்த காலங்களில் எல்லாம், அவர்களின் எதிர்ப்பின் காரணமாக இச்சட்டங்களை காங்கிரசினால் நிறைவேற்றமுடியாமல் போனது என்பதுதான் உண்மை.
http://www.hindu.com/2010/05/04/stories/2010050457011100.htm
http://vijendersharma.wordpress.com/2010/11/21/save-and-strengthen-public-education/
http://www.dnaindia.com/india/report_bill-in-lok-sabha-to-allow-entry-of-foreign-educational-institutions_1378413
http://www.indiavision.com/news/article/national/225692/do-not-have-to-accept-us-observations-on-meetings-with-cpi-m-leaders-karat/
இணைந்து எதிர்க்கவேண்டிய/போராடவேண்டிய இடங்களில்கூட இப்படி முறையற்ற அரசியல் அவதூறுகளை அள்ளிவீசுவது சரியல்ல தோழர்களே.
K.R.அதியமான்: //அமெரிக்காவில் பணி புரியும் (தமிழகத்தை சேர்ந்த) பேராசிரியர் ஒருவர் சென்னையில் ஒரு மிக தரமான உயர்கல்வி நிறுவனத்தை துவங்கி நடத்துகிறார். Great Lakes Institute of Management, Chennai. http://greatlakes.edu.in/ இதே போல் வெளிநாட்டு பல்கலைகழக நிறுவனங்களும் வரபோக்கின்றன. மிக பயன் கிடைக்க போகிறது.//
நீங்கள் சொல்கிற அந்த “great lakes” இல் படிப்பதற்கு வருடத்திற்கு 13 லட்சம் ரூபாய் கட்டணும். குப்புசாமி மகனும் முனியம்மா பொண்ணும் அங்க படிக்க முடியுமா?
கோடிகளில் புரள்வோருக்காக மட்டுமே சட்டம் இயற்றுவதுதான் அரசாங்கத்தின் கடமையா?
அவர்களால் முடியாதுதான். விதிவிலக்காக சிலர் வேலை செய்து பணம் சேர்த்து, அல்லது கடன் வாங்கி படிக்க சாத்தியம் உண்டு. சென்னை மடிப்பாக்கத்தில் அப்படி உயர்ந்த ஒருவர் இருக்கிறார். நான் சொல்ல வந்தது இது அல்ல : இத்தனை செலவு செய்து படிக்க சிலர் தயாரக உள்ளனர். கல்வி நிறுவனம் நடத்த வெளிநாட்டினர் தயாராக இருக்கின்றனர். இதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை என்பதே லிபர்ட்டேனிய கொள்கை. அரசுக்கு நஸ்டம் எதுவும் வராது. மாற்றாக லாபம் தான் உண்டு. வெளிநாடு சென்று படிக்காமல் இங்கேயே படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். அவர்கள் இங்கேயே வேலை பார்க்க வாய்ப்புகளும் உருவாகும். புதிய தொழில் நிறுவனங்கள், ஆராய்ச்சி சாலைகளை உருவாக்கவும் செய்வர். எல்லோருக்கும் நன்மை தான் கிடைக்கும்.
சரி. இந்திய அரசு பல்கலைகழகங்கள் பற்றிய எனது முதல் பின்னூட்டத்திற்க்கு பதில் சொல்லுங்க. அதில் ஏழை மாணவர்கள் படிக்க முடியும். ஏன் அவை இப்படி சீரழிந்துவிட்டன ? அதை எப்படி சீர் செய்வது ? 60 வருடங்களுக்கு முன்பு மிக சிறந்த, உலக தரம் வாய்ந்த பல்கலைகழகமாக சென்னை பல்கலைகழகம் திகழ்ந்தது. நோபல் பரிசு வென்ற சர்.சி.வி.ராமன் இங்கு தான் படித்து ஆய்வு செய்தார். பல இதர சாதனையாளர்களை உருவாக்கிய பல்கலைகழகம். அன்று ஆங்கிலேயா ஏகாதிபத்திய ஆட்சி. ஜனனாயகமே இல்லாத முதலாளித்துவ முறை. அந்த காலகட்டத்திலேயே உலக தரம் வாய்ந்ததாக, ஆக்ஸ்ஃபோர்ட், கேம்ரிட்ஜ் பலகலைகழகங்களுக்கு இணையாக திகழந்த சென்னை பல்கலைகழகம் இன்று ஏன் இப்படி சீரழிந்தது ? இத்தணைக்கும் இன்று பெரும் நிதி ஒதுக்கீடு பெறுகிறது. விவாதிக்கலாமா இதை முதலில் ?
கோவை அண்ணா பல்கலைகழகம் சில ஆண்டுகளுக்கும் முன்பு தமிழக அரசால் உருவாக்கப்பட்டது, பல கோடி செலவில். அதன் துணை வேந்தர பல கோடிகள் லஞ்சம் அளித்து பதவி பெற்ற வழக்கில் சிறையில் அடைக்கபட்ட கேவலம் நடந்தது. ஏழைகள் படிக்க உருவாக்கபபடும் அரசு நிறுவனங்களில் இத்தனை சீரழிவு ? ஏன் ? எப்படி ?
அருமையான பின்னூட்டம் அதியமான்.
ஒரு வேளை இப்பல்கலைக்கழகத்தில் தற்பொழுது அம்பிகளின் ராஜ்ஜியம் இல்லாமல் போனதால் தானோ?
K.R.அதியமான்:
அடிப்படியே இல்லாத விவாதம் உங்களுடையது…..
இங்கிருக்கிற பல்கலைக்கழகங்களில் ஊழல் நடக்கிறதென்று சொல்லி, எல்லாவற்றையும் விற்றுவிட்டு, ‘வாங்கடா உள்ளே’ என்று உலக அளவிலான கல்வி வியாபாரிகளை அழைத்துவருவதுதான் தீர்வா?
இங்கிருக்கிற தனியார் கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களையுமே உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளலாம். தமிழகத்தில் மட்டும் 400 க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. அவற்றின் தரம் குறித்து கொஞ்சம் சொல்லுங்களேன்…
//விதிவிலக்காக சிலர் வேலை செய்து பணம் சேர்த்து, அல்லது கடன் வாங்கி படிக்க சாத்தியம் உண்டு.//
மூன்று வேளை சோற்றுக்கே அல்லல்படும் 70 கோடிக்கும் மேலான மக்கள்தான் இங்கு இருக்கிறார்கள். அவனை ‘உன்னால முடிஞ்சா 13 லட்சம் கடன் வாங்கி படிச்சிக்கோ…” என்று சொல்லும் உங்கள் நியாயம் எனக்கு கொஞ்சம் கூட புலப்படவில்லை. அதிலும் வேலை செய்து இத்தனை லட்சங்களை சேர்த்து படிக்கனுமா? உங்களோட கணக்கு அறிவு அபாரம்….
//இங்கிருக்கிற பல்கலைக்கழகங்களில் ஊழல் நடக்கிறதென்று சொல்லி, எல்லாவற்றையும் விற்றுவிட்டு, ‘வாங்கடா உள்ளே’ என்று உலக அளவிலான கல்வி வியாபாரிகளை அழைத்துவருவதுதான் தீர்வா?///
எல்லாவற்றையும் ‘விற்றக’ சொல்லி யாரும் சொல்லவில்லையே ! கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை துறைகளில் அரசு செய்ய வேண்டியதை ஒழுங்கா செய்தாலே போதுமே. இதுவரை இல்லாத அளவு பல ஆயிரம் (ஏன் லச்சம்) கோடிகள் இந்திய மைய, மாநில அரசுகள் இத்துறைகளுக்கு ஒதுக்கியும். செலவழித்தும், நிகர விளைவுகள் பயன்கள் ஏன் இப்படி மோசமாக உள்ளன என்று தான் கேட்டேன் ? கேட்ட கேள்விக்கு நேரடியான பதில் அளிக்க முயல்க. பிறகு முடிவு செய்யாலாம் யாரின் வாதம் அடிப்படையே இல்லை என்று.
தனியார் மற்றும் அன்னிய கல்வி நிறுவனங்கள் வருவதால் யாருக்கும் நஸ்டமோ அல்லது தீங்கோ விளையப்போவதில்லை. அதில் படிப்பவர்கள் படிக்கட்டும். பெரும்பாலனவர்கள் அரசு நிறுவனங்களில் (முக்கியமாக ஆரம்ப பள்ளிகளில்) தான் படிக்கின்றனர். ஆனால் அவைகளின் தரம் மற்றும் ஒழுங்க சரியாக இல்லை. ஏன் ? அதை எப்படி சீர் செய்வ்தான் ? அந்நிய நிறுவனங்களை, தனியார் கல்வி நிறுவனங்களை முற்றிலும் ‘தடை’ செய்தால் அல்லது அவற்றை அரசுடைமையாக்கினால், பிரச்சனை ‘தீர்ந்துவிடுமா’ என்ன ? பேதமை. முதல்லா நீங்க சார்ந்துள்ள சி.பி.எம் சார் அரசு ஊழியர்கள் சங்கங்கள், குறிப்பாக அரசு ஆசிரியர்கள், அரசு பலகலைகழக ஆசிரியர்கள், ஊழியர்கள் சங்கங்களை சார்ந்த ‘ஊழியர்கள்’ தங்கள் கடமைகளை எத்தனை தூரம் நேர்மையாக செய்கின்றனர் என்று அலசுங்கள். உரிமைகளுக்கு ’மட்டும்’ தான் போராடுவோம் ; கடமை பற்றி பேசவே மாட்டோம் என்போர்கள், தனியார் கல்வி நிறுவனங்களை பற்றி பேச வந்துவிட்டார்கள்.
//இங்கிருக்கிற தனியார் கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களையுமே உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளலாம். தமிழகத்தில் மட்டும் 400 க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. அவற்றின் தரம் குறித்து கொஞ்சம் சொல்லுங்களேன்…///
ஆம. பல நிறுவனங்கள் தரம் குறைந்தவை தான். காலப்போக்கில் அவை அழியும். அதுதான் ‘சந்தை பொருளாதார’ விதி. தரத்தில் உயர்ந்தவை, கட்டிணங்கள் குறைவாக கேட்க்கும் நிறுவனங்களே செழிக்கும். இன்னும் பல வருடங்கள் ஆகும் அதற்க்கு. இது புதிய துறைதானே. சரி, என்ன செய்யாலாம் என்கிறீர்கள் ?
///மூன்று வேளை சோற்றுக்கே அல்லல்படும் 70 கோடிக்கும் மேலான மக்கள்தான் இங்கு இருக்கிறார்கள்.///
இல்லை. இது ஒரு மித். வறுமையில் வாழும் மக்கள் தொகை மற்றும் விகிதம் அத்தனை அதிகம் அல்ல. விகிதம் குறைந்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை.
/// அவனை ‘உன்னால முடிஞ்சா 13 லட்சம் கடன் வாங்கி படிச்சிக்கோ…” என்று சொல்லும் உங்கள் நியாயம் எனக்கு கொஞ்சம் கூட புலப்படவில்லை. அதிலும் வேலை செய்து இத்தனை லட்சங்களை சேர்த்து படிக்கனுமா? உங்களோட கணக்கு அறிவு அபாரம்….///
எம்.பி.ஏ படிக்க தான் நான் சொன்ன நிறுவனம். முதலில் பட்ட படிப்பு படித்த பின், எங்காவாது சில ஆண்டுகள் வேலை செய்து, பொருள் ஈட்டி பிறகு மேற்படிப்பு படிக்கும் சாத்தியத்தை சொன்னேன். அரசு நிறுவனங்களான அய்.அய்.எம் இல் எம்.பி.ஏ இடம் கிடைத்தால், உடனே கல்விக்கு கடனும் கிடைக்கும். நான் மேற்கோள் காட்டிய நிறுவனத்தின் கட்டிணம் எத்தனை என்று சரியாக தெரியவில்லை. 5 லச்சங்களுக்குள் தான் இருக்கும் என்று யூகம். அதை வைத்துதான் சொன்னேன். சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த ஒரு ஏழை மாணவர், அப்படி தான் கடன் வாங்கி எம்.பி.ஏ முடித்து இன்று முன்னேறியிருக்கிறார்.
சரி, சென்னை பல்கலைகழகம், நந்தனம் அரசு கல்லூரி பற்றி பேசலாமே ? அவை தான் அரசின் வரிப்பணத்தில் இயங்குகின்றன. ஏழை மாணவர்கள் அங்கு தான் படிக்கின்றனர். அவை பற்றி நாம் ‘கவலை’ படலாம். தனியார்களை பற்றி கவலை தேவையில்லை. அது பொது பணம் அல்ல.
சிந்தன்.. என்ன சொல்ல வருகிறீர்கள் என புரியவில்லை. யாரும் எந்த பல்கலைகழகத்தையும் விற்கப்போவதில்லை. கூடுதலாக வெளிநாட்டு பல்கலைகழகங்கள் வரப்போகின்றன.
பொறியியல் கல்லூரிகளை எடுத்துக்கொள்வோம். அண்ணா பல்கலை., கோவை அரசு கல்லூரி முதலிய அரசு கல்லூரிகள், பி.எஸ்.ஜி, முதலிய தனியார் கல்லூரிகள் (மொத்தம் 20-30 கல்லூரிகள்)இல் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே கேம்பஸ் மூலம் வேலை கிடைக்கும் நிலை உள்ளது. இது கவுன்சிலிங் செல்லும் மாணவர்களுக்கும் தெரியும். இருப்பினும் ஒரு பி.இ. பட்டம் வேண்டும் என்றே மற்ற கல்லூரிகளில் சேர்கின்றனர். தரமில்லை என தெரிந்தும் ஏன் அந்த கல்லூரிகளில் சேர்கிறார்கள்? மேலும் நீங்கள் கூறியது போல் அந்த 400 ல் பல கல்லூரிகளில் இடங்கள் நிரம்புவது இல்லை.
ஒரு ஊரில் 10 உணவகங்கள் உள்ளன. ஆனால் 1,2 உணவகங்கள் மட்டுமே தரமான உணவைப் பரிமாறுகின்றன. அந்த ஊரில் 20 பேர் மட்டுமே அந்த உணவகத்தில் தரமான சாப்பாடு சாப்பிடுகின்றனர். மீதி உள்ள மக்கள் உணவகத்திற்கு செல்ல வசதி இருந்தும் இடமில்லாததால் மட்டமான உணவகத்திற்குச் செல்கிறார்கள். இப்போது வெளிஊரில் இருந்து ஒருவர் புது உணவகம் துவங்குகிறார். நல்ல தரமான் சாப்பாடு. தங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் நம்மை விட்டு போய் விடுவார்களோ என் பயந்த மட்டமான உணவகம் தரத்தை உயர்த்திகின்றன. ஏற்கனவே தரமான உணவு பரிமாறிய 2 உணவகங்களும் இத்துனை நாட்களாக ஏகாட்கிபத்தியமாய், எப்படியும் நம்மகிட்ட தானே வந்தாகனும் என்று சோம்பலாய் இருந்தவர்கள் சுறுசுறுப்பானார்கள்.
குப்பன் மகனும் முனியம்மா மகனும் மட்டமான கல்லூரிகளில் தான் படிக்கிறார்கள் என யார் சொன்னது. நன்றாக படித்தால் ஸ்காலர்ஷிப் கிடைக்கும். என் உடன் அண்ணா பல்கலைகழகத்தில் படித்த இரு நண்பர்களின் தந்தைகள் முறையே விவசாயம், சமையல் வேலை செய்தவர்கள். சைதையைச் சேர்ந்த சரத் பாபு ஏழை குடும்பத்தில் பிறந்தாலும் ஐ.ஐ.எம். அகமதாபாத்தில் படிக்க முடிந்த்தது.
இந்த வெளிநாட்டு கல்லூரிகள் வருவதால் ஏற்கனவே குறைவான மதிப்பெண் பெற்று ஏதோ ஒரு டிகிரி வாங்கினால் போதும் என் இருப்பவருக்குப் பயனில்லை. ஆனால் நன்றாக படித்தும் நல்ல கல்லூரிகளில் போதுமான இடங்கள் இல்லாததால் வாய்ப்பு கிட்டாமல் தவிக்கும் மாணவர்களுக்கு வரப்பிரசாதம். அந்த மாணவர்களில் குப்பன் மகனும் முனியம்மா மகளும் இருக்கக்கூடும்.
வெளிநாட்டு கல்விநிலையங்கள் இங்கே வருவதால் என்ன கேடு விளையும் என்று நீங்கள் புலம்புகிறீர்கள் என புரியவில்லை..
100 கோடி மாணவர்களும், 5 கோடி ஆசிரியர்களும், பல ஆயிரம் கல்வி நிறுவனங்களும் ஒன்றிணைந்திருக்கிற கல்வித்துறையில் உலகளவில் 48,00,000 கோடி பணப்புழக்கம் இருக்குமென உத்தேசமாகக்கணக்கிடப்பட்டிருக்கிறது. இதன்மூலம் கல்வியில் மிகப்பெரிய வியாபாரம் ஒளிந்துகிடப்பதை கண்டறிந்துவிட்டனர் கார்ப்பரேட் முதலாளிகள்.
http://www.chinthan.com/2011/09/1.html
[…] முதல் பதிவு: வினவு […]
[…] […]
“அடுத்த கல்வியாண்டு முதல் அனைத்துப் பொறியியல் கல்லூரிகளிலும் 5 விழுக்காடு இடம் ஏழை மாணவர்களுக்காக ஒதுக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படுகிறது. அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமத்தின் அங்கீகாரம் பெற்றுள்ள அனைத்துப் பொறியியல் படிப்புகள், பட்டயப் படிப்புகள் அனைத்துக்கும் இந்த விதிமுறை பொருந்தும்.”
–by Govt of India
“ஐந்து நபர்கள் உள்ள ஒரு குடும்பத்தின் மாத வருமானம் ரூ.6500-க்கு குறைவாக இருந்தால் அந்தக் குடும்பத்தை வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் குடும்பமாகக் கணக்கிடலாம் என்கின்றது திட்டக் கமிஷன். ரூ.6500 எங்கே, ரூ.37,500 எங்கே!”-
அதனால் குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் ரூ. 1.8 லட்சமாகக் குறைத்து, அதாவது ரூ. 15,000 மாத வருமானத்துக்கு குறைவாக இருந்தால் –
இந்த 5 சதவிகித ஏழை மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு மறுநிர்ணயம் செய்யப்பட வேண்டும்”-by Dinamani.
இக்கூற்று சரியாக உள்ளதா என்று பார்ப்போம்:
மாத செலவு: ( 5 நபர்கள்)
வீடு வாடகை : ரூ. 3,000
மளிகை,காய்கறி: ரூ. 2,800
பால் : ரூ. 900
கரண்ட் பில் : ரூ. 450
காஸ், கேபிள் டிவி:ரூ 520
மருந்து : ரூ 1500
பஸ் சிலவு : ரூ 1300
விஷேச சிலவு : ரூ 500
பண்டிகை சிலவு : ரூ 1000
தேநீர், நொறுக்கு : ரூ 900
துணி, மணிகள் : ரூ 1000
பள்ளி / கல்லூரி : ரூ 10,000
சேமிப்பு @ 10% : ரூ 2250
குஷன் @ 20% : ரூ 3880
மொத்த சிலவு : ரூ 30,000
தமிழ் நாட்டில் ஊழலற்ற வாழ்வு நடத்த குறைந்த பட்சம் குடும்ப இருவர் வருமானம் மாதம் ரூ 30,000 அவசியம் தேவை. வருட விலை ஏற்றம் 10% கணக்கில் கொள்ளவில்லை.
கிரீமி லேயருக்கு குறைவாக உள்ளவர்களுக்கு ஆண்டு மீண்டும் உயர்த்தப்பட்டது போல மீண்டும் ஏற்படவேண்டாம். ( 27% இடங்களுக்கு 6% மட்டுமே நிரம்பி உள்ளன).
தினமணி தயவு செய்து மறு பரிசீலனை செய்யவும். நல்லதலையங்கம். வாழ்க பத்திரிகை தர்மம்.
—by டாஸ்மாக் செல்லாத தமிழ் குடிமகன்
[…] கல்வி கற்க முடியும் என்பது உள்ளிட்ட பல ஆபத்துக்கள் இந்த வெளிநாட்டு பல்கல… வரப்போகிறது என்பதே […]