[contact-form-7 id=”14359″ title=”கேளுங்கள்”]
அறிவின் தோற்றம், இருப்பு, வளர்ச்சி என்பது பழைய கருத்துக்கும், அதன் போதாமை காரணமாக பிறக்கத் துடிக்கும் புதிய கருத்துக்கும் இடையே இயங்கிக் கொண்டிருக்கும் மூளையின் போராட்டம். ஆனால் அறிவு என்பது அனைத்தையும் அறிந்து கொண்ட பேரமைதி என்று பலர் கருதுகின்றனர். இப்படித்தான் ஞானிகள், நவீன சாமியார்கள், சூப்பர் ஸ்டார்கள் கொண்டாடப் படுகின்றனர்.
அனைத்தையும் அறிய முயற்சி செய்கிறேன் என்பது வேறு, அனைத்தையும் அறிந்து கொண்டேன் என்பது வேறு. பின்னது மதவாதமாகவும், முன்னது அறிவியலாகவும் இருக்கிறது. எதையும் அறிய முடியாது என்பதன் மறுபக்கமே எல்லாவற்றையும் அறிந்து கொண்டேன் என்று சொல்வது. இந்த உலகை, மனித சமூகத்தை, மனித சிந்தனையை இயக்கும் விதிகளைப் புரிந்து கொண்டு சமூக நலனுக்காக நடைமுறையை நிபந்தனையாகக் கொண்டு வளரும் அறிவு ஒரு போதும் அமைதியாக இருக்காது. அது கொந்தளிப்புடன் கூடிய பேரரறிவுப் பெருங்கடல்.
என்சைக்ளோப்பீடியா போன்றதொரு தகவல் பதிவுகளை மனனம் செய்வதெல்லாம் அறிவாக முடியுமா? குமுதம், விகடன் முதலான பிரபல இதழ்களில் என்சைக்ளோப்பீடியாவின் தகவல்களே கேள்வி பதில்களாக வருகின்றன. அதை விட்டால் கடிகள், ஏட்டிக்குப் போட்டி முதலானவை இருக்கும். முத்தத்தின் வரலாறு, உலகிலேயே இனிப்பான மாம்பழம், உள்ளாடைகள் வளர்ந்த வரலாறு…..இவையெல்லாம் இந்த கேள்வி பதில் நாயகர்கள் அதிகம் அலசும் வழமையான விசயங்கள்.
மதன், சுஜாதா போன்றோர் அதிகரித்து வரும் நுகர்வுக் கலாச்சார வசதிகளையே அறிவியல் என்ற பெயரில் கேள்வி பதில்களாக வெளியிட்டனர். மறுபும் சமூக பயன்பாடு குறித்த விமரிசனம் இல்லாமல் தூய அறிவியலை மட்டும் மர்மம் நிறைந்த பாடு பொருளாக அறிமுகம் செய்வது சுஜாதா பாணி. சமகால அரசியில் நீர்த்துப் போன நியாயங்களையும், கிளுகிளுப்பூட்டும் நடிகைகளின் ஒப்பீடுவது குமுதம் அரசு கேள்வி பதிலின் இலக்கணம்.
சம கால வாழ்வின் இடர்களை புரிந்து கொள்ளவோ, அதை மாற்றியமைக்கவோ வேண்டுமென்றால் யதார்த்தத்தை கேள்வி கேட்பதிலிருந்தே துவங்க முடியும். புத்தர், ஏசுநாதர், நபிகள் நாயகம் போன்றோரெல்லாம் தமது சம கால சமூக அமைப்பை அந்தந்தக்காலம் விதித்திருக்கும் வரம்புகளுக்குட்பட்டு கேள்வி கேட்டவர்கள். மட்டுமல்ல அதற்கான விடையையும் தேடியவர்கள். பின்னர் அவையே கேள்விகளோ, சந்தேகமோ ஏற்படக்கூடாத மத நிறுவனங்களாக நிலை பெற்றன.
வர்க்க சுரண்டலை கேள்வி கேட்க முடியாத அடிமைகள், மறுமையில் காத்திருக்கும் இன்பத்திற்காக, இம்மையின் துன்பத்தை கேள்விகளின்றி ஏற்றுக் கொள்வதற்கு பயிற்றுவிக்கப்பட்டார்கள். அந்த பாத்திரத்தை செம்மையாக நிறைவேற்றிய மதங்கள், ஆண்டைகளுக்கு தேவைப்பட்டன. வர்க்கங்களை சாதிகளாக்கி, ஏற்றத்தாழ்வில் பீடுநடை போட்ட பார்ப்பன இந்து மதம் இதில் ஒரு மைல்கல். இதனால் பல நூறூ ஆண்டுகளாக நம் மக்களுக்கு கேள்வி கேட்பது என்னவென்றே தெரியாத நிலை. எல்லா வகை அடிமைத்தனங்களையும் ஏற்றுக்கொண்டு உலகோடு ஒட்ட ஒழுகல் என்ற நிலையில் உழைக்கும் மக்கள் இங்கே மூழ்கடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அந்த வரலாறு இன்றும் மாறிவிடவில்லை. நவீன கார்ப்பரேட் சாமியார்களோ புரிந்து கொள்ள வேண்டிய சமூக இயக்கத்தின் ஆன்மாவை மறைத்து விட்டு, நல்லது – கெட்டது, ஒழுக்கம் – சீர்கேடு என்று அகநிலையை, கற்பனையில் மேம்படுத்தும் இருமை முரண்களாக முன்வைக்கின்றனர். ஆனால் சமூக உலைக்களத்தில் புடம் போடப்படாமல் எந்த மனிதனும் தனது வாழ்க்கைப் பிரச்சினையையும், அதன் தாக்கத்தால் நோயுற்றிருக்கும் சிந்தனையையும் மாற்றிவிட முடியாது.
ஒபாமா, சோனியா காந்தி, மன்மோகன் சிங், அத்வானி, வாஜ்பேயி, கருணாநிதி, ஜெயலலிதா போன்ற நவீன ஆண்டைகள் குழுமியிருக்கும் போது ஊடக அறிவாளிகள் பவ்யமாக, பணிவுடன், பிரச்சினைகளற்ற முறையில் கேள்விகள் – கேள்விகளா அவை?- கேட்பதைப் பார்த்திருப்பீர்கள். உண்மையான கேள்விகளை தணிக்கை செய்து கேட்பதற்குத்தான் நிருபர்கள் பழக்கப்பட்டிருக்கின்றனர். மீறி உண்மையையோ, சொல்லையோ, செருப்பையோ வீசினால் தண்டனை நிச்சயம்.
ஆம். கேள்விகளே இல்லாத, சந்தேகங்களே தோன்றாத, அறிவின் தேடலோ, சமூக அக்கறையின் வெளிப்பாடோ அற்ற ஒரு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த வகையில் இந்த உலகின் அநீதிகளை எதிர்த்துப் போராடுவோர் முதலில் மக்களை கேள்விகள் கேட்க வைப்பதற்கு வற்புறுத்த வேண்டும்.
வினவில் கேள்வி பதில் பகுதியை ஆரம்பித்திருக்கிறோம். கேளுங்கள்.
அரசியல், சமூகம், பண்பாடு, நடப்பு நிகழ்வுகள், தத்துவம், சித்தாந்தம், மதம், சாதி, காதல், என்று எது தொடர்பாகவும் அவை இருக்கலாம். எங்களால் முடிந்த அளவு, எவை முக்கியமென்று கருதுகின்ற அளவு பதில் அளிக்கிறோம். அதே நேரம் எல்லாக் கேள்விகளுக்குமான பதில்கள் எங்களிடமில்லை. ஆனால் ஒரு கேள்வியை வெறும் கேள்வி என்ற நிலையிலிருந்து மாற்றிவிட்டு, அந்த கேள்வியின் வரலாற்றுக்காலத்தை புரிந்து கொள்ளும்போது நமக்கு தெரியமால் இருக்கும் விடையை கண்டுபிடிக்கும் வழியை அறிந்து கொள்வோம். அதாவது கேள்விக்கான முதல் அடியே கேள்வியை முற்று முழுதாக புரிந்து கொள்வதுதான். அந்த வகையில் கேள்விகளை புரிந்து கொள்வதே முக்கியமானது.
கேள்விகளை இந்தப்பக்கத்தில் மட்டும் அளியுங்கள், பின்னூட்டங்களில் தெரிவிக்க வேண்டாம். கேள்விகள் மிக மிகப் பொதுவாக இல்லாமல் மிக மிகக் குறிப்பானதாக இருந்தால் கேள்விகளைப் புரிந்து கொள்வதற்கு உதவும்.
ஒரு விசயம் குறித்து புரியவில்லை என்றால் அதை புரிந்து கொள்வதற்கு சொந்த முறையில் களைப்பூட்டும் வரை முயன்று பார்த்து விட்டு அதன் பிறகும் தெரியவில்லை எனும் போது கேள்விகள் கேட்டால் அப்போது கேள்விகளே ஒரு புதிய வாசலைத் திறந்து விடும் சூட்சுமத்தைக் கொண்டிருக்கும். ஒரு கேள்விக்கான பதிலை கண்டுபிடிக்கச் செலவழிக்கப்படும் நேரம் அந்த கேள்வியைத் தயாரிப்பதிலும் இருத்தல் நலம்.
வாரந்தோறும் வெள்ளியன்று கேள்வி பதில் இடம்பெறும். சில நேரம் தனிச் சிறப்பான கேள்வி பதில் கட்டுரைகள் தேவையைப் பொறுத்து எப்போது வேண்டுமானலும் வெளியிடப்படும்.
கேளுங்கள், காத்திருக்கிறோம்!