privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விகல்வி தனியார்மய ஒழிப்பு மாநாட்டுத் தீர்மானங்கள்!

கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாட்டுத் தீர்மானங்கள்!

-

கல்வி-தனியார்மயம்-ஒழிப்பு-மாநாடு-சென்னை

கடந்த ஜூலை 17-ம் தேதி சென்னை மதுரவாயலில் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியால் நடத்தப்பட்ட ‘கல்வி தனியார் மய ஒழிப்பு’ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1. பார்ப்பனீய சாதித் தீண்டாமை காரணமாக, நமது நாட்டின் ஆகப் பெரும்பான்மையான மக்களுக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கல்வி பெறும் உரிமை மறுக்கப்பட்டு வந்துள்ளது. இதையும் மீறி கல்வி கற்றவர்களை ஒடுக்கியும் வந்துள்ளது. இன்றளவும் சாதித் தீண்டாமை கொடுமைகள் தொடரத்தான் செய்கின்றன. கல்வி வாசனை அறியாத பல கோடி பழங்குடி மக்களைக் கொண்ட நம் நாடு, பின் தங்கிய பிராந்தியங்களையும் பொருளாதார – சமூக ஏற்றத் தாழ்வுகளையும், ஏழை உழைக்கும் மக்களை பெரும்பான்மையாக கொண்ட கிராமப் புற அடித்தளத்தையும், பிற்போக்கு பழக்கவழக்கங்கள்-கலாச்சாரங்கள் நிறைந்ததாகவும் உள்ளது. எனவே, உண்மையான ஜனநாயகமும்  நாகரீக வளர்ச்சியடைந்த சிறந்த குடிமகன்களை கொண்டதாகவும் உலக அரங்கில் கௌரவமான நாடாகவும் திகழ வேண்டுமானால், அனைவரும் கல்வியறிவு பெற்றிருக்க வேண்டியது அவசியம். எனவே, முன்பருவக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை விருப்பப் பூர்வமான கல்வித் தகுதியை அனைவரும் இலவசமாகப் பெற அரசே தக்க ஏற்பாடுகளை செய்து தர வேண்டும். கல்வி கற்பிப்படை கட்டாய அவசியமாக்க வேண்டும். இப்படி செய்வதுதான் இயற்கை நியதியாகும், உண்மையான ஜனநாயகமாகும் என இம்மாநாடு பிரகடனப்படுத்துகிறது.

2. தேர்ந்த வல்லுநர்களையும் சிறந்த அறிவாளிகளையும் உருவாக்குவது, பொது அறிவை ஊட்டுவது மட்டும் கல்வியின் நோக்கமல்ல, இவற்றுடன் சமநோக்கு சிந்தனையும், உன்னத கலாச்சாரத்தையும், நயத்தக்க நாகரீகத்தையும், சமூகப் பற்றும் நாட்டுப் பற்றும் கொண்ட சிறந்த சமூக மனிதர்களை உருவாக்குவதே கல்வியின் தலையாய நோக்கமாகும். பணியாகும், பாத்திரமும் ஆகும்.எனவே கல்வி என்பது ஒரு உன்னதமான பொதுச் சேவையாகும். வணிகப் பொருளாகவோ பிச்சைப் பொருளாகவோ கருதுவது கல்வியை கொச்சைப்படுத்துவதாகும். எனவே, இந்த பொதுச்சேவையை மக்கள் அனைவருக்கும் இலவசமாக கட்டாயமாக வழங்க வேண்டியது அனைத்து மக்களின் அரசு என்று சொல்லிக் கொள்ளும் ஒரு அரசின் கடமை மற்றும் கடப்பாடு ஆகும்.

3. கல்வி நிறுவனங்களை தனியார் முதலாளிகள் தொடங்குவது அவர்களின் அடிப்படை உரிமை என்று அரசியல் சட்டத்தின் 19-1(g) பிரிவு கூறுகிறது. மேலும் வர்த்தகம், வியாபாரம் என்ற பிரிவுகளுக்குள் கல்வி நிறுவனங்களும் அடங்கும் என்று பி.ஏ.பய் பவுண்டேசன் வழக்கில் உச்சநீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் மூலம் கல்வியை கடைச்சரக்காக்கி தனியார் முதலாளிகள்  லாபமீட்டலாம் என்று நமது அரசியல் அமைப்புச் சட்டமே அனுமதியளித்துள்ளது என தெளிவாகத் தெரிகிறது. மேலும் கல்வி நிறுவனங்களை தொடங்குபவர்களுக்கு குறிப்பிட்ட இந்த தகுதி தேவை என்று இந்தச் சட்டப்பிரிவு வரையறை செய்யவில்லை. இதனால் கிரிமினல்கள், ஊழல் பெருச்சாளிகள், கொள்ளை லாபம் அடிப்பதையே நோக்கமாகக் கொண்ட பெரும் முதலாளிகள், நமது நாட்டை சுரண்டிக் கொழுக்கும் ஏகாதிபத்திய பன்னாட்டு முதலாளிகள் என எவர் வேண்டுமானாலும் கல்வி நிறுவனம் தொடங்கி லாபம் ஈட்டி கொள்ளையடிக்கலாம் என்று அனுமதி வழங்கும் இந்தத் தீர்ப்பு தேசத் துரோகமானது, மக்கள் விரோதமானது. எனவே இது தூக்கியெறியப்பட வேண்டும் என்று இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.

4. அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி, அனைவருக்கும் வேலை – இவற்றை வழங்குவது அரசின் கடமை மற்றும் கடப்பாடு என்ற அடிப்படையில், இருக்கின்ற எல்லா தனியார் கல்வி நிறுவனங்களையும் அரசுடைமையாக்கி முன்பருவக் கல்வி முதல் ஆராய்ச்சி படிப்பு வரை எல்லாவற்றையும் அரசுக் கல்வி நிறுவனங்கள் மூலம் மட்டுமே கல்வியை இலவசமாக வழங்க வேண்டும். இந்த அரசுக் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் ஒரே பாடத்திட்டம், ஒரே பயிற்று முறை, ஒரே தேர்வு முறை, ஒரே தரமான கட்டுமான வசதிகளுடைய பொதுப்பள்ளி-அருகாமைப் பள்ளி முறைமையைக் கொண்டதாக கட்டமைக்கப்பட வேண்டும். பயிற்று மொழி தாய்மொழியாக இருக்க வேண்டும். விஞ்ஞானப் பூர்வமான மனித மாண்புகளை வளர்க்கின்றதாக கல்வி இருக்க வேண்டுமென்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

5. தனியார் கல்வி நிறுவனங்களில் ‘நியாயமான’ கட்டண நிர்ணயம், இலவசக் கல்வி உரிமைச் சட்டம், தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு, தனியார் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் ஒடுக்கப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு அரசே கட்டணம் செலுத்துவது என்கின்ற பெயரில்  தனியார் கல்விக் கொள்ளையர்களுக்கு லாப உத்தரவாதமளிப்பது, தனியார் துறை-பொதுத்துறை கூட்டு போன்றவையெல்லாம் கல்வியை தனியார் மயமாக்குவதை நோக்கமாகக் கொண்ட நயவஞ்சக நடவடிக்கைகளே. இவைகள் பெரும்பான்மையான மக்களின் கல்வி உரிமை மேலும் மேலும் பறிக்கப்பட்டு வருவதை மூடிமறைக்கும் தந்திரமே என இம்மாநாடு பகிரங்கமாக அறிவிக்கிறது.

6. தனியார் மயம் – தாராள மயம் – உலக மயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கையின் ஒரு பகுதியாக, கல்விச் சேவையை வழங்கும் பொறுப்பிலிருந்து அரசாங்கம் தன்னை விடுவித்துக் கொண்டு வருகிறது. இந்த நோக்கத்திற்காக இருக்கின்ற அரசு பள்ளி, கல்லூரிகளை திட்டமிட்டு சீரழிய விட்டு பெற்றோர்களை தனியார் கல்விக் கொள்ளையர்களை நோக்கி நெட்டித் தள்ளுகிறது என இந்த மாநாடு குற்றம் சாட்டுகிறது.

7. குறுகிய காலத்தில் கொள்ளை லாபம் ஈட்டுவதையே தமது ஒரே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் தனியார் கல்வி நிறுவனங்கள் எல்லாம் ‘தரமான கல்வி’ கொடுக்கும் என்று நம்புவது தவறு. பல புகழ் பெற்ற தனியார் கல்வி நிறுவனங்கள் செய்த மோசடிகள், ஊழல் முறைகேடுகள் அன்றாடம் வெளிவந்து நாறுகின்றன. எனவே தனியார் கல்வியின் மீதான மோகத்தை விட்டொழிக்குமாறு பெற்றோர்களையும் மாணவர்களையும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

8. இந்தியா கையெழுத்திட்ட அடிமை சாசனமான காட் (GATT) ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அமலுக்கு வந்த, சேவைத் துறைகளுக்கான பொது வர்த்தக ஒப்பந்தப்படிதான் (GATS) கல்வித் துறை வியாபாரத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதன் பின்பு இந்நாட்டின் கல்விக் கொள்கையை தீர்மானிப்பவர்கள், கல்வியாளர்கள் அல்ல, பிர்லா-அம்பானிகளும், பன்னாட்டு முதலாளிகள் சங்கமும், அவர்களின் கைக்கூலி அறிவாளிகளான அறிவார்ந்த குழுவினரும், ஏகாதிபத்திய தொண்டூழிய தன்னார்வக் குழுக்களும்தான். இவர்களின் நலனுக்காக நாட்டின் மொத்த கல்வித் துறையையுமே கபளீகரம் செய்வதற்கு வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் மசோதா, உயர்கல்வி மற்றும் ஆய்வுத் துறை மசோதா, கல்வித் தீர்ப்பாயங்கள் மசோதா உள்ளிட்டு 16 வகையான சட்டமசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.கார்ப்பரேட் நிறுவனங்களின் சுரண்டலுக்கேற்ப புதுப்புது பாடத் திட்டங்களை வகுப்பது, புதுப்புது ஆய்வுகளை செய்வது, கல்வியின் உள்ளடக்கத்தையே மாற்றியமைப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவையெல்லாம், எல்லாத் துறைகளிலும் புகுத்தப்பட்டு வரும் தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கையின் ஒருங்கிணைந்த பகுதியாக, மத்திய-மாநில அரசுகளின் கொள்கை முடிவுகளின்படி சட்டபூர்வமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே ஒரு ஆக்டோபஸ் போல நம்மை வளைத்துப் பிடித்திருக்கும் தனியார் கல்வி நிறுவனங்களை ஒழிக்காமல் அனைவருக்கும் கல்வி எனும் உரிமை பெற முடியாது. மறுகாலனியாக்கக் கொள்கைகளை தூக்கியெறியாமல் சட்டப் பூர்வமாகவே நம்மைக் கொள்ளையடிக்கும் தனியார் கல்வி நிறுவனங்களை ஒழிக்க முடியாது. மறுகாலனியாக்கக் கொள்கையை ஒழிக்க நக்சல்பாரி வழியில் ஒரு புதிய ஜனநாயக அரசு அமைக்கும் போதுதான் அரசுக் கல்வி நிறுவனங்கள் மூலம் இலவசக் கட்டாயக் கல்விச் சேவையை அனைவரும் பெற முடியும். இதற்கான போராட்டத்திற்கு அணிதிரளுமாறு பெற்றோர்களையும் மாணவர்களையும் இம்மாநாடு அறைகூவி அழைக்கின்றது.

__________________________________________________

– வினவு செய்தியாளர்.

__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_____________________________

_____________________________

_____________________________

_____________________________